Tag Archives: நாவல்

மத்தகம் (ஜெயமோகனின் நாவல் அல்ல) – டிவி சீரிஸ்

ஹாலிவுட்டில் சமீபத்தில் எழுத்தாளர்கள் போராட்டம் நடைபெற்று சமாதானம் ஆகி முடிவுக்கு வந்தது. அதற்கு பல மூல காரணங்கள் இருந்தாலும், என் கவனத்தை ஈர்த்த காரணம்:

புஷ்கர் – காய்த்ரி” போன்று சுழல், வதந்தி போன்ற குறுந்தொடர்களைத் துவக்குபவர்கள், அந்தத் தொடரின் கடைசி பாகம் வரை, உறுதுணையாக கவனம் செலுத்தி, திரைக்கதைக்கு பக்கபலமாக நின்று; இறுதியாக வெளியிடப்படும் பிரதியிலும் — தங்களின் முத்திரை பங்களிப்பை நல்குவார்கள்.

இந்திய தொலைக்காட்சி தொடர்களுக்கு இந்த சிக்கல் இல்லை. எனினும் பல்வேறு குழப்பங்கள் இருக்கிறது.

துவக்கம் அமர்க்களமாக இருக்கும். அதன் பிறகு, அடுத்தடுத்து சில பளிச். பின்… எப்படி தொடர்வது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “பாதாள் லோக்” (Paatal Lok – அமேசான் ப்ரைம்)
எப்படி முடிப்பது என்று குழம்பி நிற்போர் உண்டு. – இது “ஹ்யுமன்” (Human – டிஸ்னி+ / ஹாட்ஸ்டார்)

எனினும், பெரும்பாலானவை முதல் பகுதியை ஒட்டியே செல்லும். சடாரென்று திசை திரும்பாது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு இயக்குநரால் கொணரப்பட்டாலும் அந்தத் தொடரிழை அறாது தொடரும்.

இதற்கு சிறந்த உதாரணம் – பஞ்சாயத் (Panchayat – அமேசான் ப்ரைம்)

உங்கள் மனதில் ”சேக்ரெட் கேம்ஸ்” (Sacred Games – நெட்ஃப்ளிக்ஸ்) நிழலாடுவதை உணர்கிறேன். அது எல்லாத் தொடருக்கும் பாட்டி. அதைக் கணக்கில் சேர்க்க வேண்டாம். அந்தத் தொடர் ஒரு தனித்துவமான முயற்சி. அது இந்திய மக்களை, பெருங்கூட்டத்தை, பார்வையாளர்களைச் சென்றடடைந்ததா என்பதில் எனக்கு பெரும் சந்தேகம் உண்டு. அந்தத் தொடருக்குப் பிறகு செட்ஃப்ளிக்ஸும் விழித்துக் கொண்டுவிட்டது.

இப்பொழுது நெட்ஃப்ளிக்ஸ் டிவியில் வரும் நெடுந்தொடர் எல்லாமே ஒரே வார்ப்புரு — பழைய சோற்றில் ஒரே மாதிரியான சோடையான வடகறி சம்பவங்களைக் கொண்டு காய்கறியாக நடிகர்களை மட்டும் மாற்றி மாற்றி எவ்விதச் சுவையும் ரசனையும் இல்லாமல் உவ்வேக் என ஓட வைக்கிறார்கள்.

ஆனால், அமேசான் ப்ரைம் ஒவ்வொரு சீரியலிலும் “அட… பேஷ்!” போட வைக்கிறார்கள். காதல், இந்துஸ்தானி, நிஜ நாடக ரியாலிடி டிவி என அரைத்த மாவாகும் அபாயம் இருந்தாலும் ”பேண்டிஷ் பண்டிட்ஸ்” (Bandish Bandits) எட்டிப் பார்த்த போதெல்லாம் புன்முறுவலையும் துருபத் ஆலாபனையையும் கவனிக்க வைத்தது.

இவ்வளவு பீடிகை எதற்கு?

பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, ‘குட்நைட்’ மணிகண்டன் நிகிலா விமல் நடித்து டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில், “மத்தகம்” – நெட்ஃப்ளிக்ஸ் தொடர் போன்று பல்லிளிக்கும் பித்தளையாகாமல், பிரைம் டிவி தொடர் போல் ஜொலிக்கிறது.

இதில் வரும் கதாபாத்திரங்களை ரொம்ப நாளாக பார்த்து வருகிறோம். கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் வில்லன்களாக. பா. ரஞ்சித் படங்களில் கதாபாத்திரங்களாக. மேலும் வடசென்னை மண்ணின் மணம் கமழும் படங்களில் நாயகர்களாக. மத்தகம் தொடரில் இவ்வளவு அதிகமாக தேய்வழக்காகி விட்டவர்களை புத்தம்புதிய முலாம் பூசி ஒவ்வொருவருக்கும் முன் கதை சுருக்கம் கொடுத்து, பொருத்தமான முகவெட்டும் உடல்மொழியும் ஆடை அணிகலனும் போட்டு நம்ப வைக்கும் திருப்பங்களில் உபயோகிக்கிறார்கள்.

இளவரசு, வடிவுக்கரசி, டிடி திவ்யதர்ஷினி, நந்தினி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் என பல தெரிந்த முகங்கள். பொருந்தி நடிக்கிறார்கள். இனி இவர்களில் சிலரை, ‘மத்தக’த்தில் நடித்தாரே என்று சொல்லும் அளவு இயல்பாக வந்து போகிறார்கள்.

வெப் சீரீஸுக்கேயுரிய இழுவைகள் உண்டு. தமிழ் சினிமாவுக்கேயுரிய மாறா குணச்சித்திரங்கள் உண்டு. இருந்தாலும், இவர்களின் இருளுலுக்கிற்குள் எழுத்தின் வழியாக சென்றவர்கள் குறைவு. பா. ராகவனின் ஓரிரண்டு நாவல்களில் சற்றே உள்நுழையலாம். அதன் பிறகு இந்தத் தொடர்.

சரி… ‘விக்ரம் – வேதா’வை எதற்கு இதில் இழித்தேன்?
அந்தப் படத்தின் பாணியில் இரண்டு முக்கிய நபர்கள். இருரையும் நேர் எதிராக நிறுத்தி அவர்களுக்கிடையிலான திருடன் – போலீஸ் கதை அமைத்து, இருவருக்கும் சரியான போட்டியாக அமைத்தது இந்த ‘மத்தக’த்தை ரசிக்க வைக்கிறது.

நாயகர் காவல்துறை அதிகாரிக்கு மனைவி மேல் பெரிதாக பாசம் இல்லை. அல்லது, மனைவியாகி விட்டார் என்பதால் குடும்பத்தில் ஏற்படும் அசுவாரசியம் எனலாம்.
இன்னொரு பக்கம் வில்லனுக்கு காதலி மட்டுமே இலட்சியம். அவளுடன் அமைதியாக வாழ்வதிலே நாட்டம். உருகோ உருகு என்று பாசமழையைக் கொட்டுகிறார்.

இந்த மாதிரி முரண்கள் நிறைந்த நிழலுலகத் தொடர். பாரதிராஜா முடிவிற்குள் அகப்படாமல் இருப்பாராக என எல்லாம்வல்ல பாடிகாட் முனியை வேண்டுகிறேன்.

Tamil Podcasts: Novels, Classics and Literature for Listening

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.

இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்:
1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)

2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்

3. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல்: காலச்சுவடு கிளாசிக்

4. இரா. முருகனின் ‘தினை’ – புத்தம் புதிய புதினம்: திண்ணை (வாரந்தோறும்)

5. அதிரியன் நினைவுகள் – #solvanam Series (மாதத்திற்கு இரு முறை)


6. ராக் தர்பாரி – சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் : வெள்ளிதோறும்

இது தவிர சமகாலச் சிறுகதைகள், அஞ்சலிகள், சுவாரசியமான கட்டுரைகள், சொல்வனம் இதழில் வெளியாகும் இடுகைகள் எல்லாமும் சொல்வனம் ஒலி/ஒளிவனத்தில் கிடைக்கிறது.

https://www.youtube.com/@thamils/playlists

அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.

தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம்
காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

மாயப் பெரு நதி – ஹரன்பிரசன்னா

நான் ஹரன்பிரசன்னாவின் கட்டுரைகளின் ரசிகன். அவரின் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்து இருக்கிறேன். ஆதிகாலத்து யாஹூ குழுமங்களில் இருந்து அறிமுகமானவராக இருந்தாலும் இன்றளவும் ஃபேஸ்புக்கில் நண்பர் ஆகத் தொடர்பவர். அவரின் பதிவுகளும் விமர்சனங்களும் ரசனைகளும் பரிந்துரைகளும் என்னை கவனம் கொள்ள வைக்கும். அவரின் முதல் நாவல் வெளிவந்திருக்கிறது. அமேசான் கிண்டில் நூலாக வாங்கி கடகடவென்று வாசித்து விட்டேன்.

நீங்கள் முதன் முதலாக பிரவேசித்தது எங்கே? பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மேடையேறி இருக்கலாம். பிடித்த துணையை வசப்படுத்துவதற்காக காதலரைக் கவர நிஜ வாழ்க்கையில் அசல் நாடகம் போட்டிருக்கலாம். நேர்காணலில் பயத்துடன் உளறாமல் இருக்க ஒத்திகை பார்த்த சொற்றொடர்களை ஒப்பித்து இருக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பை திட்டமிட்டு, பயத்தை வெளிக்காட்டாமல், சந்தேகங்களை மனதுக்குள் போட்டு புழுங்காமல் போட்டுடைத்து, ஆபத்துகளை நிவர்த்தி செய்து, சமர்த்தராக முடித்து வெற்றிக் கொடி நாட்டி இருக்கலாம். இங்கே ஹரன்பிரசன்னா, தன் நாவலை அவ்வாறு தன் தோற்றத்தை இலக்கியப் பதிவேட்டில் ஆஜர் ஆக்குகிறார்.

முதல் நாவல் ஒரு அகக் கொந்தளிப்பு இல்லையா? எல்லா நாவலுமே அகக் கொந்தளிப்புத்தான். ஒவ்வொரு நாளும் மனைவியுடன் கூடும்போதும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு வெறி வரத்தான் செய்கிறது. ஆனாலும் முதல் நாள் தொடுகையுடன் அதை ஒப்பிடமுடியுமா? முதல் நாவல் அப்படி இல்லையா? முதல் நாவலிலேயே ஒட்டுமொத்தத்தையும் யோசிக்கமுடியுமா? யோசிக்கத்தான் வேண்டுமா? நாவலுக்கு அழகு அகத்தில் இருந்து வரும் சொற்கள் இல்லையா? இங்கே எல்லாமே வெறும் சொற்களா? லே அவுட்டுக்குள் சிக்கி நிற்கும் சொற்களா நாவல்? ராகவனுக்குத் தலை சுற்றியது.

Haran prasanna, ஹரன் பிரசன்னா. மாயப் பெரு நதி (நாவல்) (Tamil Edition) . தடம் பதிப்பகம் | Thadam pathippagam. Kindle Edition.

நாவலின் களம், கதை, அதன் கருத்து என்று எண்ணிப் பார்ப்பதற்கு முன் சில சுருக்கமான எண்ணங்கள்:

  • தேவையற்ற இடையூறு: ராகவன் என்று நாயகனின் பெயரை இனிஷியல் போடாமல் சூட்டியதற்கு தனி தைரியம் வேண்டும். அதை விட அவர் வேலை பார்க்கும் பதிப்பகத்தையும் மூன்றெழுத்தில் அமைத்ததற்கு கொஞ்சம் உதாசீனம் கலந்த தெனாவட்டு இருக்கிறது. எனினும், வடம் பெயரையும் கற்பனையற்ற எழுத்தாளர் பெயரையும் தவித்திருக்க வேண்டும்.
  • மருட்புனைவு: அந்த அலட்சியமும் நம்பிக்கையும் உற்சாகமும் எழுத்தாளர்களின் அரசியலை வெளிப்படையாக சொல்ல வைக்காமல், வெறுமனே கதை 1, 2… என 10 பட்டியலிட்டது தெனாவட்டின் எல்லைகளை பல்லிளித்து சுட்டுகிறது. அவற்றை நேர்மையாக புனைவின் சாத்தியங்களுடன் உருவாக்கி இருந்தால் இன்னொரு “ஜே.ஜே.” என்றிருக்கலாம்.
  • கனா வினா: கட்டுரைக்கு கேள்விகள் பயனளிக்கும். கதைக்கு வாசகர் தான் கேள்வியைத் தொடுக்க வேண்டும். அகப் பயணங்களை வினாக்களாகப் பட்டியலிட்டுத் தொடுப்பது நாவலா அல்லது நாவலுக்கான குறிப்புகளா என கதாசிரியரின் புத்திசாலித்தனத்தின் மீது அயர்ச்சியைக் கொடுத்து கதையை அன்னியமாக்குகிறது.
  • இச்சா அதிகாரம்: கிட்டத்தட்ட சரோஜா தேவி எழுதிய பலான புத்தகமோ என பயம் வருமளவு ஏடாகூட வருணணைகள். விலாவாரியான செக்ஸ் விவரிப்புகள். புணர்தலை எழுதுவது என்பது பல உலக இலக்கியவாதிகளால் இயலாத காரியம். ஹாருகி முரகாமி முதல் சுஜாதா வரை சறுக்கிய தருணங்களை உதாரணங்களுடன் பட்டியலிடலாம். ஆனால், ஹரன்பிரசன்னா கில்லி அடித்திருக்கிறார். காமத்திற்கும் போகத்திற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம் என்பது போல் பிசகாமல் தரமாக எழுத்து வடிவாக்கி இருக்கிறார்.
  • உள்ளுடையும் உறையும்: பிரசன்னாவின் நாயகன் ஆன ராகவனுக்கு அட்டை குறித்த கவலை இருக்கிறது. இருந்தும் இப்படி ஒரு அட்டையைப் படம் போட்டு இருப்பது கவர்ச்சியாக இல்லை. கனவு, மாயை, இரட்டை எனச் சுழலும் நாவலுக்கு கொஞ்சம் எதார்த்தம் இல்லாத தன்மை கொண்ட முகப்புப் படம் சுவாரசியம் தந்திருக்கும்.
  • பாஷா முரண்கள்: விக்கிரஹத்தை ஒத்தி எடுங்கள் என்று வருகிறது; துடையுங்கள் என்றும் வருகிறது. சென்னையில் வசிப்பவர்களின் மொழி, கன்னடம் கலந்த தமிழின் மொழி போன்ற சுவைகளை கொடுத்திருக்கலாம். அதிபூதா துக்கம், தாரதம்யம் என்றெல்லாம் மொழி நடனமாடுபவர் இன்ன பிற இடங்களிலும் அசல்தன்மையை நடமாட விட்டிருக்க வேண்டும்.
  • சொப்பன தரிசனம்: சில விஷயங்களை “சொல்லவியலாது” என்று எழுதுபவரே கையை விரித்து விடுவது ஏமாற்றம் தந்தது. கனவு என்று சொல்லாமல் அந்த மாய உலகை உலவவிட்டு அதனுள்ளே நம்மை இழுத்து சென்றிருக்கலாம்.
  • தூங்கலோசை: நாவலில் திகைப்புகளே இல்லை. க்ளைமேக்ஸ் எனப்படும் தருணத்தில் அசாதரணமான விஷயங்களோ, அத்தியாயத்திற்கு அத்தியாயம் அவிழாத முடிச்சுகளோ, அதிர்ச்சியூட்டும் திருப்பங்களோ, பரபரப்பான விஷயங்களோ இல்லாமல் இராமாயணம் தெரிந்தவர் கம்பராமாயணம் வாசிப்பது போல் அமைதியாக சொல்லிச் செல்கிறது.

அவளைக் கூர்ந்து பார்த்தான். மூக்கு குத்தி இருக்கிறாள். அதனால்தான் முகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. தாவணி அணிந்திருக்கிறாள். பெரியவளானதால் உடலில் செழுமை வந்திருக்கிறதா அல்லது தாவணி உடுத்தி இருப்பதால் அப்படித் தெரிகிறதா? மார்புகள் லேசாக மேடாகி இருக்கின்றன. அவற்றின் மேல் இரட்டை ஜடை படுத்திருக்கிறது. தாவணியில் அவளது இடுப்பு கொஞ்சம் தெரிந்தது. அந்த வெண்ணிறம் அவனைப் பித்துக்கொள்ளச் செய்தது. பூப் போட்ட பாவாடை அணிந்திருந்தாள். கால் பாதங்கள் பளிச்சென இருந்தன. மஞ்சள் பூசிக் குளித்திருப்பாள் போல. அவன் இன்னும் கொஞ்சம் நெருங்கி அவளருகில் வந்தாள்.

நாவலில் நேரடித்தன்மை எளிதாகப் புரிகிறது. ராகவன் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். பதிப்பகத் துறையில் பல்லாண்டு காலமாக பணியாற்றுபவன். நாவல் எழுதுகிறான். அதை சொந்தமாக வெளியிடுகிறான். தான் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் வெளியிட கூச்சமோ தன்னடக்கமோ தடுக்கிறது. அதன் கூட புத்தகக் கண்காட்சியில் நடக்கும் குளறுபடிகளும் வருகிறது. சற்றே ஊறுகாய் ஆக புத்தக எழுத்தாளர்களின் உள்ளடி வேலைகளும் தூவப்படுகிறது. அவனின் குழந்தையும் மனைவியும் ரஜினி படத்தில் த்ரிஷா போல் எட்டிப் பார்க்கிறார்கள்.

இதன் முற்பிறவி அசல் நாவலுக்கான சகல சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டிருக்கிறது. அதில் கதாபாத்திரங்களுக்கு அஸ்திவாரம் இருக்கிறது. அவர்களின் காரியங்களுக்கு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. தானே பதிப்பித்த நூல் போல் சுயம்பு உருவாகும் தருணங்கள் கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி இன்னும் விரிவாக தத்துவ சிக்கல்களுடன் வந்திருக்க வேண்டும். பாரத தேசம் முழுக்க பயணம் செய்திருக்க வேண்டும். பட்டியல்களைப் படையலாக ஆக்காமல் அந்தப் புத்தகங்களின் உள்ளார்ந்த கிரகிப்புகளைப் பகிர்தலாக ஆக்கியிருக்க வேண்டும்.

முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் சடாரென்று முடிவுக்கு வருவது மட்டுமே குறை.

மீதம் இருக்கும் குழம்பையும் சாதத்தையும் எண்ணெய்யும் உப்பும் போட்டுப் பிசைந்து உருட்டிக் கொடுக்கச் சொல்லி உண்டால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது.

புத்தகக் கண்காட்சியில் சாப்பிடச் செல்கிறான் நாயகன் ராகவன். ஆத்துச் சாப்பாட்டில் திளைக்கிறவன் ராகவன். வெறும் பொரியலிலும் வத்தக் குழம்பிலும் ஜமாய்க்கிற மனைவின் கைப்பக்குவத்தை நினைத்துப் பார்க்கிறான். அதே சமயம் கூடை சோற்றைப் போட்டு அதை அவக்கு அவக்கென்று விழுங்கும் கூட்டத்தை சமபந்தியில் பார்க்கிறான். இது நாலே பக்கக் கதையில் கூட நளபாகத்தைப் போடும் இலக்கியகர்த்தாவையும், நாலு ஃபாரம் கொடுத்தாலும் கூறியதையேக் கூறும் அ-புனைவு விற்பனை எழுத்தாளனையும் ஒப்பிட்டது போல் அமைந்துள்ளது.

இதுவே பின் பகுதியான இரண்டாம் பாக நாவலில் ஆனந்தனையும் மாதவனையும் உணர்த்த இன்னொரு வழியில் சொல்லப்படுகிறது. ஆனந்தனுக்கு லௌகீக உணவே கொண்டாட்டம். வாசனையை வைத்தே என்ன சமையல் என்பதைக் கண்டுபிடிக்கிறான். அதில் லயிக்கிறான். தத்துவமும் துறவும் எண்ணமாகக் கொண்ட மாதவனுக்கு உணவு என்பது அத்தியாவசியம். ஏதோ கொஞ்சமாய் உண்ண வேண்டும். ருசிக்கும் பசிக்கும் அல்ல. கவளம் கிடைத்த சிந்தைக்காக சற்றே உட்கொள்கிறான்.

He gazed sadly at the threatening sky, at the burned-out remnants of a locust-plagued summer, and suddenly saw on the twig of an acacia, as in a vision, the progress of spring, summer, fall and winter, as if the whole of time were a frivolous interlude in the much greater spaces of eternity, a brilliant conjuring trick to produce something apparently orderly out of chaos, to establish a vantage point from which chance might begin to look like necessity …and he saw himself nailed to the cross of his own cradle and coffin, painfully trying to tear his body away, only, eventually, to deliver himself—utterly naked, without identifying mark, stripped down to essentials—into the care of the people whose duty it was to wash the corpses, people obeying an order snapped out in the dry air against a background loud with torturers and flayers of skin, where he was obliged to regard the human condition without a trace of pity, without a single possibility of anyway back to life, because by then he would know for certain that all his life he had been playing with cheaters who had marked the cards and who would, in the end, strip him even of his last means of defense, of that hope of someday finding his way back home.

An excerpt from the beginning (and end) of László Krasznahorkai’s novel Satantango. English translation by George Szirtes.

Title(Eng)Maaya Peru Nadhi
Authorஹரன்பிரசன்னா
FormatPaperback
Year Published2020
Pages360
Imprintதடம் பதிப்பகம்

இந்நாவலைப் பற்றி:

இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி.

ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது.

தமிழில் கருத்துருவக (allegory) நாவல்கள் உண்டா?

வாசகர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் படித்ததில் எந்த ஆக்கத்தை நவீன உருவகக் கதையாக கருதுகிறீர்கள்? எவை படிமத்தை தன்னுள்ளே கொண்டே நாவலின் தன்மையையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது?

வெ.சா.

ஆர்தர் கெஸ்லர் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விரக்தியும் ஏமாற்றமும் அடைந்து விலகினார். அது பற்றி ஒரு குறியீட்டு (allegorical) நாவlலும் எழுதினார். Darkness at Noon என்று அதற்குப் பெயர். அது உடனே உலகம் முழுதும் புகழப்பட்ட, கெஸ்லருக்கு உலகப் புகழ் அளித்த நாவலும் ஆயிற்று. நாவல் முழுதும் நிகழ்வது ஒரு சிறைச்சாலையில். அரசியல் கைதியின் சிறைவாசம் பற்றியது. ஒரு கைதிக்கும் இன்னொரு கைதிக்கும் (அவனும் அரசியல் சதிச்செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவன்} இடையே பழக்கம் ஏற்படுவது கதவைத் தட்டித்தான். கதவையா, சுவரையா? என்பது மறந்து விட்டது. அந்தத் தட்டலிலும் ரகசியக் குறிப்புகள் உண்டு. எல்லாமே அன்றைய ரஷ்யாவில் நடந்த அரசியல் சதிகள், வழக்குகள், கொலைகளைப் பிரதிபலிப்பதாகத் தான் சிறைச்சாலை நடப்புகளை நாம் புரிந்து கொள்வோம். இதே போல இன்னொரு குறியீட்டு நாவலும் அப்போது பெரும் சலசலப்பை உண்டாக்கியது. ஜியார்ஜ் ஆர்வெல் என்னும் ஆங்கில நாவலாசிரியரின் மிருகங்களின் பண்ணை ( Animal Farm) என்னும் ஒரு நாவல். பன்றிகள் அந்தப் பண்ணையைக் கைப்பற்றி விடுகின்றன. முன்னால் இரண்டு கரடிகள் ஓன்றையொன்று அழிக்கத் திட்டமிட்டு இரண்டுமே அழிகின்றன. பன்றிகளின் ராஜ்யத்தில் ஒரு கோஷம் “எல்லாரும் சமம் இங்கு. ஆனால் கொஞ்சம் கூட சமம் கொண்ட பன்றி தான் அதிகாரம் செய்கிறது. (All are equal. But some are more equal) நமக்குப் பரிச்சயமான பஞ்ச தந்திரக் கதைகள் பாணியில் ரஷ்யாவில் நடைமுறையிலிருந்த கோஷங்களையும் அதன் நடைமுறை அர்த்தங்களையும் கிண்டல் செய்தது மிருகங்களின் பண்ணை.

– வெங்கட் சாமிநாதன் (நினைவுகளின் சுவட்டில் …)

கருத்துருவகம் (அலிகரி) ஒரு திட்டவட்டமான பொருளைச் சுட்டும் பொருட்டு உருவாக்கப்பட்ட இன்னொரு பொருள் அல்லது அமைப்பு அல்லது கூற்று.

பராசக்தி ஒரு உருவகக்கதையாக (allegory) அமைக்கப் பட்டிருந்தது 1952 வெளிவந்த இந்தப்படக்கதை பிரிட்டீஷ் இந்தியாவில் அதாவது 1952 நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. அதிலும் அந்த புகழ்பெற்ற நீதிமன்றக் காட்சி, நீதிபதியின் இருக்கைக்கு மேலிருக்கும் பிரிட்டீஷ் அரசின் சின்னத்தின் வெகுஅண்மைக்காட்சியுடன் தொடங்குகின்றது. தணிக்கை முறையிலிருந்து தப்ப பலநாடுகளில் இத்தகைய உத்தி அமைக்கப் பட்டிருந்தாலும் பராசக்தி தணிக்கை வாரியத்தில் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது

– சு. தியடோர் பாஸ்கரன் (மீதி வெள்ளித்திரையில்)

என் பார்வையில் கீழ்க்கண்ட தமிழ்ப் படைப்புகளைச் சொல்வேன்:

  1. காடு – ஜெயமோகன்
  2. வெயிலைக் கொண்டு வாருங்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
  3. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி (சூரியனுக்கு அருகே சென்று கருக விரும்பும் பறவையாக ஜோசப் ஜேம்ஸை கற்பிதம் செய்வது)
  4. பூனைக் கதை – பா. ராகவன்
  5. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் – எம்.ஜி. சுரேஷ்
  6. ஜி.கே. எழுதிய மர்ம நாவல் – தமிழவன்
  7. சொல் என்றொரு சொல் – ரமேஷ் – பிரேம்
  8. ராஸ லீலா – சாரு நிவேதிதா
  9. அரசூர் வம்சம் – இரா முருகன்
  10. புயலிலே ஒரு தோணி – ப. சிங்காரம்

உங்களின் எண்ணங்களைப் பகிருங்கள்.

ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

வில்லியம் ஜார்ஜ் செபால்ட் என்பவர், எவ்வாறு மற்ற எழுத்தாளர்களில் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்கிறார்? அலைபாயும் பயணக் குறிப்புகள் போன்ற நாவல்களை பிறர் எழுதியிருக்கிறார்கள். குந்தர் கிராஸுக்குப் பிறகு ஜெர்மனியில் இருந்து வேறு எந்தக் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும் தோன்றவில்லை என்பதால் புகழடைந்தாரா? செபால்டைப் போல் நினைவில் தங்கத்தக்க குறிப்புகளையும் ஆழமாக மனதில் பதிக்கத்தக்க தொடர்புகளையும் மற்றவர்களும் அவர்களின் புனைவுகளில் கொண்டு வருகிறார்கள். அப்படி இருந்தும் செபால்டை ஏன் இந்தப் பதிவில் எடுத்துக் கொண்டேன்?

செபால்ட் கவிதைகளில் தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டார். கவிதைகள் மட்டுமே எழுதிவந்தார். உதாரணமாக, இங்கே ஒன்று:

எவ்வளவு சிரமமாக இருக்கிறது
நிலப்பரப்பை புரிந்து கொள்ள
ரயிலில் அதை கடக்கும்போது
இங்கிருந்து அங்கிருந்து
பேசா மடந்தையாக அது
நீங்கள் மறைவதை பார்க்கும்

(1964)

நிறைய கவிதைகள் குறிப்பிடத்தக்கனவாக இருந்தாலும், அவரின் நாவல்களினாலேயே செபால்ட் புகழடைந்தார். அவரின் கதைகள் வசீகரசக்தியால் மனத்தைக்கவர்ந்தன. அவரின் இறுதி நாவல் 2001ல் அவரின் மறைவிற்குப் பிறகு வெளியானது. அதில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்குமான பேதம்; கனவிற்கும் நினைவிற்குமான இடைவெளி; கலைக்கும் வாழ்க்கைக்கும் நடுவே உள்ள வித்தியாசம்; உண்மையின் வரையறையைக் கடந்து புனைவு உள்ளே புகுந்து நம்மை எல்லையில்லாமல் உள்ளிழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் மற்றவர்களும் இதை சாத்தியப்படுத்தியவர்கள்தானே? வாசகர்களும் விமர்சகளும் செபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன்? அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது?

2001ல் ஜெர்மனியில் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் வெளியாகிறது. அடையாளமிழப்பையும் தாய்நாட்டை விட்டு அகல்வதையும் அதுவரை அவ்வளவு தீவிரமாகவும் முழுமையாகவும் செபால்ட் எடுத்ததில்லை. தனி மனிதனின் மனசாட்சியை அந்தக் கதை தேடுகிறது. ஒருவன் எவ்வாறு இழப்பை எதிர் கொள்கிறான் – தன் குடும்பத்தினை இழப்பது; தன் கடந்த காலத்தை இழப்பது; மிக முக்கியமாக தாய்மொழியை இழந்து விடுவது. ஆஸ்டர்லிட்ஸ் என்று இப்போது அழைக்கப்பட்டாலும், அந்தக் கதையின் நாயகனின் பெயர் டேஃபிட் எலியஸ். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் பகுதியில் வளர்ந்தவன். வயதிற்கு வந்தபிறகே அவன் வேல்ஸில் பிறக்கவில்லை என்பதும், செக்கோஸ்லவேகியாவில் பிறந்தவன் என்பதையும் அறிந்து கொள்கிறான். அவனுடைய பெற்றோரை அவனுக்கு நினைவேயில்லை.

அவனுடைய நாலரை வயது வரை ப்ரேக் நகரத்தில் இருந்திருக்கிறான். இந்தப் பகுதி அகழ்வாராய்ச்சி போல் தோண்டி எடுக்கப்படுகிறது. சரித்திர கல்வெட்டைப் படிப்பது போல் எலியஸின் பூர்விகம் பற்றி மெல்லத் தெரிந்து கொள்கிறோம். எலியஸிடமிருந்து பறிக்கப்பட்டதைக் குறித்து, அவன் ஆராய, ஆராய, நமக்கும் அந்தப் பனி விலகி தெரியவருகிறது.

கதைசொல்லியின் பெயர் என்னவென்று ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் சொல்லவில்லை. கதைசொல்லியோடு தற்செயலாக எலியஸுக்கு பரிச்சயம் ஏற்படுகிறது. அப்போது தன் கதையைச் சொல்கிறான். அவனுடைய தற்போதைய பெயர் ழாக் ஆஸ்டர்லிட்ஸ். அவனுடைய யூத அம்மவினால் இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்டு, வளர்ப்புக் குடும்பத்தினால் தத்தெடுக்கப்பட்டவன். ஹிட்லரின் ஜெர்மனியில் யூதனாய் பிறந்திருந்தாலும் தப்பித்தவன். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு சற்றே முன், நாஜிக்களிடம் இருந்து சின்னஞ்சிறார்கள் தப்பிப்பதற்காக ‘அன்பு பரிமாற்றம்’ என்றழைக்கப்பட்ட திட்டத்தில் இப்போதிருக்கும் அயல்தேசத்திற்கு அனுப்பப்பட்டவன். அதனால் உயிர்பிச்சை கிடைத்தாலும், அவன் அன்னையிடமிருந்தும் சொந்தங்களிடமிருந்தும் நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டவன்.

வாழ்வில் தற்செயலாக எதுவும் நிகழாத நாளே அபூர்வமான நாள். எலியஸ் எனப்படும் ஆஸ்டலிட்ஸுக்கு தற்செயலாக சில விஷயங்கள் தெரியவருகின்றன. நாவல் முழுக்க சில சமயம் கதைசொல்லி சம்பவங்களை விவரிக்கிறார்; பல்வேறு சமயங்களில் ஆஸ்டர்லிட்ஸே தன் கதையை நமக்கு விவரிக்கிறார். தான் உண்மையில் யாரென்பதை கண்டுபிடிக்கும் பயணத்தின் கதையை ஆஸ்டர்லிட்ஸ் நமக்குச் சொல்கிறார். அதற்காக ஆவணக்கோப்புகளைப் பார்வையிட்டு சேகரிக்கிறார்; பல்வேறு தேசங்களில் பலரை நேர்காணல் எடுக்கிறார்.

1960ல் பெல்ஜியம் நாட்டில் பயணிக்கும்போது முதன் முறையாக ஆஸ்டர்லிட்ஸை கதைசொல்லி சந்திக்கிறார். கதைசொல்லிக்கு சரித்திரத்திலும் கட்டிடக் கலையிலும் பெரும் ஈடுபாடு; அதே போல் ஆஸ்டர்லிட்ஸுக்கும் அவற்றில் ஈடுபாடு; கட்டடங்களின் வரலாற்றைச் சுற்றி அவர்களின் சம்பாஷணை வளர்கிறது. தனிப்பட்ட சொந்த விஷயங்களைக் குறித்து பல்லாண்டுகள் கழித்தே பேசிக் கொள்கின்றனர். தசாப்தங்கள் கழிந்து அவர்கள் தற்செயலாக லண்டனில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது, ஆஸ்டர்லிட்ஸ் தன் ரிஷிமூலத்தையும் சுய அடையாளத்தை கண்டடையும் சுவடுகளையும் விவரிக்கிறார்.

எச்சில் தொட்டு அழிப்பது மாதிரி, வரலாற்றை அழிப்பதை இங்கே செபால்ட் லாவகமாக முன்வைக்கிறார். தனி மனிதனின் குழந்தைப் பருவம் வரலாற்றில் இருந்து துடைத்தழிக்கப்படுகிறது. அதே சமயம் இங்கே ஒருவரேயொருவர்க்கு மட்டும் இவ்வாறான சரித்திரச் சிதைவு நிகழவில்லை. சரித்திரத்தை மனசாட்சிப்படி உள்ளது உள்ளபடி வைக்காமல், அதை நகர்த்தியும் மறைத்தும் வேறொரு நிலைக்குக் கொணர்ந்து மத்திம சமரசத்தில், ‘சரி… சரி…’யென்று தேய்த்தொதுக்கி கலைத்துப் போடும் கலையை செபால்ட் விவரிக்கிறார். குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின் அவஸ்தையை அர்த்தமற்றதாக்குவதை ஆஸ்டர்லிட்ஸ் நாவல் சொல்கிறது.

“நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் கூட
நேரத்தைத் திருடுகின்றன
களவாண்டு போய்விட்டன
ஒன்றும் திரும்ப வரப்போவதில்லை”
ஹொரேஸ் சிறுபாட்டுகள்

நான் சும்மா இருந்தாலும் நேரம் சும்மா இருப்பதில்லை. நான் பேசாமல் இருக்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை. நான் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. நேரம் கழிவதை கேட்கிறேன். மீன் எப்படி நீரில் வாழ்கிறதோ, நாம் அதுபோல் நேரத்தில் வாழ்கிறோம். நம் இருப்பு என்பது நேரத்தில் வாசம் செய்வது. இதை ஹிந்து புராணங்களில் கேட்டிருப்பீர்கள்:

“பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம். அதுவே தான் நடராஜரின் நடனம்” என்கிறார் ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பௌதிக விஞ்ஞானி ‘The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics’ (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு)

“கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே”
திருமூலர்

எல்லாவற்றிலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன். கண்ணுக்கு தெரியாதவன்; பரந்த கொடிக்காற்பயிர் அழிபட்டு வரும் நிலத்தின் நதி போல் பீரிட்டு பொழியும் சடையுடையவன்; பசும் பொன்னிறத்தில் இருப்பவன் நினைபவர்க்கெல்லாம் கிடைக்காதவன்; அனைவரையும் மயக்கும் வெண்ணிலவானவானே: இதை அவர் அணுவின் / சிவனின் உருவமாக சொல்கிறார். நேரம் ஓடிக்கொண்டேயிருப்பது போல் சிவனும் ஆடிக் கொண்டேயிருக்கிறார்.

நேரம், துகள் என்று சற்றே செபால்டிற்கு சம்பந்தமில்லாமல் சென்றது போல் இருக்கலாம். செபால்டைப் பொருத்தவரை, நேற்று – இன்று – நாளை எல்லாம் ஒரே சமயத்தில் இருக்கலாம். புனைவில் ஒரு நேர்க்கோட்டை எதிர்பார்க்கிறேன். குறைந்த பட்சம் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரேயொரு காலகட்டத்தை மட்டும் குறிப்பிடுவதை வழமையாக பார்த்திருக்கிறேன். முன்னும் பின்னும் பயணிக்கும் நாவலில் கூட வரிகளுக்குள்ளே அந்தத் தாவல் நிகழாது. மேட்ரிக்ஸ் என்போம்; மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் போன்ற அட்டவணைச்செயலி (ஸ்ப்ரெட் ஷீட்) என்போம்; அது போல் புவிசார்ந்தும் மாபெரும் மனைகள் சார்ந்தும் அதனை சென்றடையும் சாலைவழிகள் சார்ந்தும் கட்டமைக்கப்பட்ட நாவலில், கால நேர பிரமாணங்களை விட குறியீட்டு ஓவியம் போன்ற முப்பரிமாண நாடக அரங்கை ஒப்பிடலாம்.

ஆஸ்டர்லிட்ஸ் நாவலின் துவக்கத்திலேயே இந்த ஒப்புகை வருகிறது. இரயில் நிலையத்திற்கு அருகே அந்த மிருகக்காட்சி சாலை இருக்கிறது. இரவு நேரத்தில் உலாவும் இராக்கால மிருகங்கள் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி ஓரிடத்தை இருட்டாக்கி, அந்த விலங்கியல் பூங்காவில் வைத்திருக்கிறார்கள். கும்மிருட்டிற்குள் சென்றவுடன் எதுவும் மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை. சற்றே பழகிய பின் இருட்டில் மினுக்கும் கண்களும் உலவும் ஆந்தைகளும் தென்படத் துவங்குகின்றன. மேலேயுள்ள படத்தில் குரங்கின் கண்களையும் ஆந்தையின் கண்களையும் நாவலின் நடுவில் செபால்டு நுழைக்கிறார். அந்த மிருகங்களுக்குக் கீழே இரண்டு மனிதர்கள் வாசகராகிய நம்மைப் பார்க்கிறார்கள். ஓவியர்களைப் போலவும் தத்துவவாதிகளின் ஊடுருவும் பார்வையை ஒத்தும் அந்த இரவுயிரிகளின் கவனம் வெளிப்படுகிறது. செபால்டின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்: “…களங்கமில்லாத சிந்தையினாலும் எதையும் தவறவிடாத உண்மையான கவனிப்பினாலும், நம்மைச் சுற்றி இருக்கும் இருளைத் துளைக்கிறது.” நிஜமான நினைவுகூரல் சாத்தியமா என்பதை கதை நெடுக சிந்திக்க வைக்கிறார். அதன் கூடவே இருளான அடிநில ரயில் வளைகள் வழியே பயணிக்கிறார்கள். எதேச்சையாக சூரிய அஸ்தமனம் நிகழும்போது புகைவண்டி நிலையத்திற்குள் கதைசொல்லி நுழைகிறார். அப்போது அந்தி நேரத்தில் காத்திருக்கும் ட்ரெயின் பயணிகளை மறையும் ஞாயிறு, கவிந்து, அவர்களின் நிழல்களை கபளீகரம் செய்வது, பாதாள லோகத்தை நினைவுக்குக் கொணர்வதாகச் சொல்கிறார்.

அவகாசத்தில் நடந்தைதை நினைவில் வைத்திருக்கிறோம்; ஆனால், எதிர்காலத்தை நினைவுகூர்கிவோமா? நாம் நேரத்தில் இருக்கிறோமா அல்லது நம்முள்ளே நேரம் இருக்கிறதா? காலம் கழிந்துவிட்டது என்பதைச் சொல்லும்போது என்ன உணர்த்துகிறோம்? நாம் மனிதராக ஆயுள்காலத்தில் இருப்பதற்கும் சமயத்திற்கும் என்ன சம்பந்தம்? அது எவ்வாறு நம்முடைய நல்ல வேளை என்பதிலும் நெருக்கடி நேரம் என்பதிலும் கொண்டு சேர்க்கிறது?

காலப்போக்கில் எல்லா நாகரிகங்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகின்றன. ஆனால், செபால்ட் அதை மட்டும் உணர்த்தவில்லை. நேரங்கடந்துவிட்டதைச் சொல்லும்போது, தற்கால கலாச்சாரத்தில் சற்றுமுன்பு நடந்த அசிரமமான செயல்பாடுகளின் மூலம் அத்தாட்சிகளை அழிப்பதையும் உணர்த்துகிறார். புதிய ஒழுக்கம் மனதைக் குத்துவதால் பழைய ஒழுங்குமுறைகளின் ஆதாரங்களை, திட்டமிட்டு, பெரிய அளவில் நீக்கி மறைப்பதை நாவலில் கொணர்கிறார். இருபதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்தது போல் அக்கிரமங்கள் வேறெங்கும் தலைவிரித்து, நீக்கமற பாயவில்லை. எனினும், சற்றுமுன்பு நடந்த சரித்திர உண்மைகளை எவ்வாறு அசத்தியமாக்கும் வேலைகள் மூலம் வரலாற்றைக் குழப்பி குலைக்கின்றன என்பதை விவரிக்கிறார்.

ஆஸ்டர்லிஸுக்கு முன்னாளில் பரிச்சயமானவர் ஹென்றி லெமாயின். நாவலின் இறுதி அத்தியாயங்களில், ஹென்றி லெமாயின் இவ்வாறு சொல்கிறார். “நாகரிக வாழ்க்கை என்பது பழங்காலத்தோடு தொடர்புடைய ஒவ்வொறு முக்கிய இழையையும் அறுத்துவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.” ஹென்றி நூலகத்தைப் பார்த்த பிறகு இந்தக் கருத்தை முன் வைக்கிறார்.

பாரிஸ் மாநகரின் “தேசிய நூலகம்” (பிப்ளியோதெக் நேஷனல்) கட்டிடம் எப்படி காலப்போக்கில் உருமாறுகிறது என்பது குறித்த விரிவான விவரணை நாவலின் இறுதியில் வருகிறது. மாபெரும் கட்டிடம்; இருந்தாலும் நூல்களை எடுக்க வயதானோரால் முடியாத மாதிரி மிரட்டும் புத்தக அடுக்குமுறை; நூலகம் என்றால் எல்லோரையும் வரவேற்குமாறும் அமர்ந்து நேரங்கழிக்குமாறும் சுலபமாக பயன்படுத்துமாறும் இருக்க வேண்டும். செபால்டின் துப்பறியும் பாணியையே இந்த ஃப்ரான்சுவா மித்தராண்ட் கட்டிய நூலகத்திற்கும் பயனடுத்தி பார்ப்போம். ஃபிரான்ஸ் நாட்டின் தேசிய நூலகம் எழுப்பிய இடத்தில் முன்பு என்ன இருந்தது என்பதைப் பார்த்தால், இந்த துவேஷத்தின் வீரியம் புரியும்.

நாஜிக்கள் பிரான்ஸை ஆக்கிரமித்த காலத்தில் இந்த இடம்தான் பட்டுவாடா தலைமையகமாக இருந்தது. பிரான்ஸின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் யூதர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் கொள்ளையடித்து இங்கே பத்திரப்படுத்தினார்கள். நூலகத்திற்கு முன்பு அங்கிருந்த சேமிப்புக் கிடங்கில் நாஜித் தலைவர்கள் ஒன்றுகூடி அதை பங்கு போட்டு, தங்களின் சொந்தங்களுக்கும் தாய்நாட்டிற்கும் பிரித்துக் கொடுத்து, ஜெரிமனிக்கு அனுப்பி வைத்தார்கள். எண்ணற்ற நகைகள், விலைமதிப்பற்ற ஓவியங்கள், பாத்திரம், பண்டம், வீட்டு உரிமை, பங்கு மற்றும் நிலப் பத்திரங்கள், மேஜை, நாற்காலி, தட்டுமுட்டு சாமான் என்று எதையும் விடாமல் கொள்ளையடித்து, ஒவ்வொன்றுக்கும் கணக்கு எழுதி, எடுத்துக் கொண்டு போனார்கள். இன்றளவும் இந்த சொத்துக்கள் எங்கே இருக்கின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இருந்தாலும், அதை கண்டும் காணாமல் கமுக்கமாக போய் விடுகிறோம்.

பணம் போனால் மீண்டும் சம்பாதிக்கலாம். ஆனால், தான் என்னும் தனி மனிதரின் அடையாளம் திருடப்பட்டுவிட்டால் எங்கிருந்து மீட்பது? எத்தனை பேரின் வாழ்க்கை மழுங்கடிக்கப்பட்டு மாற்றப்பட்டு வேறு மாதிரி கற்பிக்கப்படுகிறது? அவர்களின் சுயத்தை எவ்வாறு கண்டெடுத்து, அவர்களிடம் ஒப்படைப்பது? ஆஸ்டர்லிட்ஸ் நாவல் தேடுகிறது.

மயிலாப்பூரில் அடைஞ்சான் முதலி தெரு என்று ஒரு சாலை இருக்கிறது. அப்படி ஒன்றும் அடைத்து வைத்திருக்கமாட்டார்கள். காற்றோட்டமாகவே இருக்கும். இந்த ஆஸ்டலிட்ஸ் நாவல் பட்டியல் மயம்; அதில் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது. நீள வாக்கியங்களும், முன்பின்னாக பயணிக்கும் காலக் குறிப்புகளும் படித்த வாக்கியத்தை, பத்தியை, பக்கத்தை மீண்டும் வாசிக்க வேண்டுமோ என்னும் மறதியும் குழப்பமும் கலந்த சந்தேகத்தை எழுப்பியது. கதை என்னும் சுவாரசியம் சற்றே பின்னுக்கு தள்ளப்பட்டதால், சாதாரணமாக படிக்கும் சுவாரசிய புனைவு என்பது இல்லாமல் போகிறது. பட்டியல்களும் விவரிப்புகளும் ஆங்காங்கே மொழிபெயர்க்காத ஜெர்மன் மொழி சொற்றொடர்களும் செல்லாத நகரங்களும் போகாத ஊர்களும் மேலும் அன்னியத்தை ஊட்டி சலிப்பை உண்டாக்கின. படித்து முடித்த பிறகு, இன்னொரு தடவை ஊன்றி படித்தால் இன்னும் கிரகிக்க முடியும் என்றும் தோன்றுகிறது. அப்படியே அவரின் பிற ஆக்கங்களையும் இன்னும் கொஞ்சம் நிதானமாக வாசித்துவிட்டு ஆஸ்டலிட்ஸுக்கு கொஞ்ச வருடம் கழித்து திரும்ப வேண்டும்.

எல்லாவற்றையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு முழுமையாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை. செபால்டு அந்த வகை அல்ல. அவர் நிறைய துளிகளையும் துண்டுகளையும் உங்கள் முன் போடுகிறார். நம்முடைய அறிவின் பரப்பளவைப் பொருத்தும், வாசிப்பனுவத்தின் விசாலத்தை வைத்தும் அதில் சில பொறிகள் கிளம்புகின்றன; சில துப்புகள் துலங்குகின்றன. அந்தக் கிளையில் சிந்தையை செலுத்தினால் நாவலை மூடி வைத்துவிட்டு, வேறெங்கோ சென்று விடுகிறோம். கிட்டத்தட்ட இணையத்தில் ஒரு கட்டுரையை படிக்கச் சென்று, அதில் இருந்து இன்னொரு உரல், அங்கிருந்து மற்றொரு உரல் என்று தாவுவது போல் தொலைந்துவிடும் அபாயம், ஆஸ்டர்லிட்ஸ் நாவலில் நிறையவே உண்டு. ப்ரௌஸ்ட், பெர்ன்ஹார்ட் என்று முயல்குழிக்குள் வீழ்ந்து காணமல் போய்க் கொண்டே இருக்க வேண்டுமானால் மட்டுமே செபால்டுக்குள் நுழையுங்கள்.

உதவிய நூல்கள்:
1. Austerlitz by W.G. Sebald and James Wood
2. Across the Land and the Water: Selected Poems, 1964-2001 by W.G. Sebald and Iain Galbraith
3. Understanding W.G. Sebald by Mark Richard McCulloh
4. W.G. Sebald – Image, Archive, Modernity by JJ Long
5. The Emergence of Memory: Conversations with W.G. Sebald: Lynne Sharon Schwartz (Editor)
6. W.G. Sebald: Expatriate Writing by Gerhard Fischer
7. W.G. Sebalds Hybrid Poetics by Lynn L. Wolff

அடிக்கப்பட்ட நோட்டுப்புத்தகம்

இது “Birdman” திரைக்கதை எழுதிய நிக்கொலஸ் Nicolas Giacobone-இன் சமீபத்திய ஆக்கம்.

அதில பட இயக்குநரால் கதாசிரியர் கடத்தப்பட்டு மூலையிடத்தில் அடைக்கப்படுகிறார். படத்தை எழுதி முடித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அதில் இருந்து குட்டி நறுக்கு கீழே:

திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, ‘இது பரவாயில்லையே… சுலபமாகத்தானே இருக்கு’னு நினைத்தாலோ, திரைக்கதை எழுதுவதற்கெல்லாம் எந்த சிதம்பர ரகசியமும் கிடையாதுனு சொன்னாலோ, அந்தக் கதை மயிருக்குத்தான் சமானம். நீங்கள் அல்லாட வேண்டும். சுவற்றில் மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எந்த எழவுக்கும் பிரயோஜனம் இல்லையோ என்று நெருநெருக்க வேண்டும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அந்த முகத்தின் மூடத்தனத்தை உணரவேண்டும்; ஏனென்றால் எல்லோருக்கும் முழுமூட முகங்களே உள்ளன – அவ்வளவு ஏன் மூடத்தனமான கண்களைக் கொண்டுள்ளோம். வாரத்திலொரு முறையாவது பைத்தியம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். நீங்கள் அழவேண்டும். எழுதியதைப் படித்தவுடன் அழவேண்டும் – காட்சிகள் சோகமாக இருப்பதால் அல்ல; அவை படுமோசமாக இருப்பதால். மணிக்கணக்கில், நாள்கணக்கில், மற்ற தொழில்கள் செய்வதை கற்பனை செய்து பார்க்கவேண்டும். மணிக்கணக்காக பெருஞ்சாமங்கள் செலவழித்து தகுதியான சால்ஜாப்புகளை பொய்யாகவேனும் தோற்றுவித்து தோல்விகளை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடன்வந்தி அருநிழல்

தெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.
: பிரேம் – ரமேஷ்
16-03-2006

அமெரிக்கக்காரி சிறுகதையை முன்வைத்து

புழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய?!” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.

இந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.

அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.

அமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.

அந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.

~oOo~

காதலில் கூச்சங்கள் கிடையாது

confidence_confession

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

அமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது!’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.

இந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா?’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.

~oOo~

a-shadow-on-the-cloud-is-the-shadow-of-this-very-same-plane-on-the-picture-taken-on-a-flight-from-4

உடன்வந்தி அருநிழல்

இதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:

கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

விமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்?

நிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.

இதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம்? இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி?

அ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.

டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”

~oOo~

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

டேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன? ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது? அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா?’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’

டேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.

உதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.

முத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.

சுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.

roulette-wheel

சூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்?

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage – Book Reviews

இன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி

ஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு!’

ஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.

ஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.

இந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாது.

கடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.

ஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.

உசாத்துணை: Phyllis Kepler, Brook S. Royse and John Kepler. Windows to the World: Themes for Cross-Cultural Understanding. Glenview, IL: GoodYearBooks, 1996

Haruki_Murakami_Colorless_Tsukuru_Tazaki_Novel_NYT

oOo

ஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.

ஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது! அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்ற முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.

நாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.

சுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.

kuro_pottery

சுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருகிறான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.

உங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என விசாரிப்போம். அவர்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.

துப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன?’ என்று ஆர்வமூட்டுகிறது.

ஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.

tsukuru_overboard

கதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பியானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா? ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.

நியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.

முரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.

டிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம். சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.

tsukuru_train

பிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம்? எதை உருவாக்குகிறோம்? யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம்? காதல் என்றால் என்ன? வெற்றி பெறுவது எப்போது? நிறைய யோசிக்க வைக்கிறது.

“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது

The Unlikely Pilgrimage of Harold Fry by Rachel Joyce

The Unlikely Pilgrimage of Harold Fry_harolds-walk

The Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.

ரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.

திடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.

ஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.

க்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறுகிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.

கணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.

உலகம் ஒரு நாடக மேடை; சினிமா ஒரு வாழ்க்கை பாதை

விஸ்வரூபம் வெளியிடுவதில் பிரச்சினை. இந்தியில் ‘ஓ மை காட்’ வெளியாவதில் பிரச்சினை எதுவுமே இல்லை.

விவகாரமான விஷயங்களை நாடகமாகப் போட்டால் எந்தப் பிரச்சினையும் வராது. கிரேசி மோகனின் ‘சாக்லேட் கிருஷ்ணா’ போல். அதை விட கதையாக எழுதி புத்தகமாகப் போட்டால் எந்த அரசியல்வாதியும் தடா போட மாட்டார்.

கடந்த இருபதாண்டுகளாகத்தான் பரேஷ் ராவல் படங்களுக்கு அறிமுகமாகி இருக்கிறேன். இதிலும் கலக்குகிறார். சிரமமான கருத்துகளை எதார்த்தமாக வாதாடுவதில் ஆகட்டும். புனித தொன்மங்களை இன்றைய நிலைக்கு ஏற்ப கேள்வி கேட்பதில் ஆகட்டும். காலத்திற்கு ஒவ்வாத கண்மூடி நம்பிக்கையை கிண்டல் அடிப்பதில் ஆகட்டும். வசனகர்த்தாவும் பரேஷும் பின்னுகிறார்கள்.

‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் வருவது போல், தெய்வத்துடன் டீல் போடாதீர்கள் என்கிறார்கள். ‘பித்தா புறைசூடி’ சுந்தரர் போல் கடவுளுடன் தோள் மேல் கை போடு என்கிறார்கள். தினகரன் & கோ, நித்தியானந்தா அண்ட் கோ மாதிரி சேல்ஸ் பசங்களை நம்பாமல் இறைவரை ஏழையின் சிரிப்பில் கண்டு கொள்ள அழைக்கிறார்கள்.

ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராகவும் தேவதூதர்களுக்கு போட்டியாகவும் விஸ்வரூபம் எடுக்க படத்தின் ஹீரோவிற்கும் மீடியா தேவைப்பட்டிருக்கிறது என்பதுதான் புதிய கடவுள் தரிசனம்.