Tag Archives: Novel

மாயப் பெரு நதி – ஹரன்பிரசன்னா

நான் ஹரன்பிரசன்னாவின் கட்டுரைகளின் ரசிகன். அவரின் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்து இருக்கிறேன். ஆதிகாலத்து யாஹூ குழுமங்களில் இருந்து அறிமுகமானவராக இருந்தாலும் இன்றளவும் ஃபேஸ்புக்கில் நண்பர் ஆகத் தொடர்பவர். அவரின் பதிவுகளும் விமர்சனங்களும் ரசனைகளும் பரிந்துரைகளும் என்னை கவனம் கொள்ள வைக்கும். அவரின் முதல் நாவல் வெளிவந்திருக்கிறது. அமேசான் கிண்டில் நூலாக வாங்கி கடகடவென்று வாசித்து விட்டேன்.

நீங்கள் முதன் முதலாக பிரவேசித்தது எங்கே? பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மேடையேறி இருக்கலாம். பிடித்த துணையை வசப்படுத்துவதற்காக காதலரைக் கவர நிஜ வாழ்க்கையில் அசல் நாடகம் போட்டிருக்கலாம். நேர்காணலில் பயத்துடன் உளறாமல் இருக்க ஒத்திகை பார்த்த சொற்றொடர்களை ஒப்பித்து இருக்கலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்பை திட்டமிட்டு, பயத்தை வெளிக்காட்டாமல், சந்தேகங்களை மனதுக்குள் போட்டு புழுங்காமல் போட்டுடைத்து, ஆபத்துகளை நிவர்த்தி செய்து, சமர்த்தராக முடித்து வெற்றிக் கொடி நாட்டி இருக்கலாம். இங்கே ஹரன்பிரசன்னா, தன் நாவலை அவ்வாறு தன் தோற்றத்தை இலக்கியப் பதிவேட்டில் ஆஜர் ஆக்குகிறார்.

முதல் நாவல் ஒரு அகக் கொந்தளிப்பு இல்லையா? எல்லா நாவலுமே அகக் கொந்தளிப்புத்தான். ஒவ்வொரு நாளும் மனைவியுடன் கூடும்போதும் ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு வெறி வரத்தான் செய்கிறது. ஆனாலும் முதல் நாள் தொடுகையுடன் அதை ஒப்பிடமுடியுமா? முதல் நாவல் அப்படி இல்லையா? முதல் நாவலிலேயே ஒட்டுமொத்தத்தையும் யோசிக்கமுடியுமா? யோசிக்கத்தான் வேண்டுமா? நாவலுக்கு அழகு அகத்தில் இருந்து வரும் சொற்கள் இல்லையா? இங்கே எல்லாமே வெறும் சொற்களா? லே அவுட்டுக்குள் சிக்கி நிற்கும் சொற்களா நாவல்? ராகவனுக்குத் தலை சுற்றியது.

Haran prasanna, ஹரன் பிரசன்னா. மாயப் பெரு நதி (நாவல்) (Tamil Edition) . தடம் பதிப்பகம் | Thadam pathippagam. Kindle Edition.

நாவலின் களம், கதை, அதன் கருத்து என்று எண்ணிப் பார்ப்பதற்கு முன் சில சுருக்கமான எண்ணங்கள்:

  • தேவையற்ற இடையூறு: ராகவன் என்று நாயகனின் பெயரை இனிஷியல் போடாமல் சூட்டியதற்கு தனி தைரியம் வேண்டும். அதை விட அவர் வேலை பார்க்கும் பதிப்பகத்தையும் மூன்றெழுத்தில் அமைத்ததற்கு கொஞ்சம் உதாசீனம் கலந்த தெனாவட்டு இருக்கிறது. எனினும், வடம் பெயரையும் கற்பனையற்ற எழுத்தாளர் பெயரையும் தவித்திருக்க வேண்டும்.
  • மருட்புனைவு: அந்த அலட்சியமும் நம்பிக்கையும் உற்சாகமும் எழுத்தாளர்களின் அரசியலை வெளிப்படையாக சொல்ல வைக்காமல், வெறுமனே கதை 1, 2… என 10 பட்டியலிட்டது தெனாவட்டின் எல்லைகளை பல்லிளித்து சுட்டுகிறது. அவற்றை நேர்மையாக புனைவின் சாத்தியங்களுடன் உருவாக்கி இருந்தால் இன்னொரு “ஜே.ஜே.” என்றிருக்கலாம்.
  • கனா வினா: கட்டுரைக்கு கேள்விகள் பயனளிக்கும். கதைக்கு வாசகர் தான் கேள்வியைத் தொடுக்க வேண்டும். அகப் பயணங்களை வினாக்களாகப் பட்டியலிட்டுத் தொடுப்பது நாவலா அல்லது நாவலுக்கான குறிப்புகளா என கதாசிரியரின் புத்திசாலித்தனத்தின் மீது அயர்ச்சியைக் கொடுத்து கதையை அன்னியமாக்குகிறது.
  • இச்சா அதிகாரம்: கிட்டத்தட்ட சரோஜா தேவி எழுதிய பலான புத்தகமோ என பயம் வருமளவு ஏடாகூட வருணணைகள். விலாவாரியான செக்ஸ் விவரிப்புகள். புணர்தலை எழுதுவது என்பது பல உலக இலக்கியவாதிகளால் இயலாத காரியம். ஹாருகி முரகாமி முதல் சுஜாதா வரை சறுக்கிய தருணங்களை உதாரணங்களுடன் பட்டியலிடலாம். ஆனால், ஹரன்பிரசன்னா கில்லி அடித்திருக்கிறார். காமத்திற்கும் போகத்திற்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம் என்பது போல் பிசகாமல் தரமாக எழுத்து வடிவாக்கி இருக்கிறார்.
  • உள்ளுடையும் உறையும்: பிரசன்னாவின் நாயகன் ஆன ராகவனுக்கு அட்டை குறித்த கவலை இருக்கிறது. இருந்தும் இப்படி ஒரு அட்டையைப் படம் போட்டு இருப்பது கவர்ச்சியாக இல்லை. கனவு, மாயை, இரட்டை எனச் சுழலும் நாவலுக்கு கொஞ்சம் எதார்த்தம் இல்லாத தன்மை கொண்ட முகப்புப் படம் சுவாரசியம் தந்திருக்கும்.
  • பாஷா முரண்கள்: விக்கிரஹத்தை ஒத்தி எடுங்கள் என்று வருகிறது; துடையுங்கள் என்றும் வருகிறது. சென்னையில் வசிப்பவர்களின் மொழி, கன்னடம் கலந்த தமிழின் மொழி போன்ற சுவைகளை கொடுத்திருக்கலாம். அதிபூதா துக்கம், தாரதம்யம் என்றெல்லாம் மொழி நடனமாடுபவர் இன்ன பிற இடங்களிலும் அசல்தன்மையை நடமாட விட்டிருக்க வேண்டும்.
  • சொப்பன தரிசனம்: சில விஷயங்களை “சொல்லவியலாது” என்று எழுதுபவரே கையை விரித்து விடுவது ஏமாற்றம் தந்தது. கனவு என்று சொல்லாமல் அந்த மாய உலகை உலவவிட்டு அதனுள்ளே நம்மை இழுத்து சென்றிருக்கலாம்.
  • தூங்கலோசை: நாவலில் திகைப்புகளே இல்லை. க்ளைமேக்ஸ் எனப்படும் தருணத்தில் அசாதரணமான விஷயங்களோ, அத்தியாயத்திற்கு அத்தியாயம் அவிழாத முடிச்சுகளோ, அதிர்ச்சியூட்டும் திருப்பங்களோ, பரபரப்பான விஷயங்களோ இல்லாமல் இராமாயணம் தெரிந்தவர் கம்பராமாயணம் வாசிப்பது போல் அமைதியாக சொல்லிச் செல்கிறது.

அவளைக் கூர்ந்து பார்த்தான். மூக்கு குத்தி இருக்கிறாள். அதனால்தான் முகத்தில் மாற்றம் வந்திருக்கிறது. தாவணி அணிந்திருக்கிறாள். பெரியவளானதால் உடலில் செழுமை வந்திருக்கிறதா அல்லது தாவணி உடுத்தி இருப்பதால் அப்படித் தெரிகிறதா? மார்புகள் லேசாக மேடாகி இருக்கின்றன. அவற்றின் மேல் இரட்டை ஜடை படுத்திருக்கிறது. தாவணியில் அவளது இடுப்பு கொஞ்சம் தெரிந்தது. அந்த வெண்ணிறம் அவனைப் பித்துக்கொள்ளச் செய்தது. பூப் போட்ட பாவாடை அணிந்திருந்தாள். கால் பாதங்கள் பளிச்சென இருந்தன. மஞ்சள் பூசிக் குளித்திருப்பாள் போல. அவன் இன்னும் கொஞ்சம் நெருங்கி அவளருகில் வந்தாள்.

நாவலில் நேரடித்தன்மை எளிதாகப் புரிகிறது. ராகவன் கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். பதிப்பகத் துறையில் பல்லாண்டு காலமாக பணியாற்றுபவன். நாவல் எழுதுகிறான். அதை சொந்தமாக வெளியிடுகிறான். தான் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் வெளியிட கூச்சமோ தன்னடக்கமோ தடுக்கிறது. அதன் கூட புத்தகக் கண்காட்சியில் நடக்கும் குளறுபடிகளும் வருகிறது. சற்றே ஊறுகாய் ஆக புத்தக எழுத்தாளர்களின் உள்ளடி வேலைகளும் தூவப்படுகிறது. அவனின் குழந்தையும் மனைவியும் ரஜினி படத்தில் த்ரிஷா போல் எட்டிப் பார்க்கிறார்கள்.

இதன் முற்பிறவி அசல் நாவலுக்கான சகல சாமுத்ரிகா லட்சணங்களையும் கொண்டிருக்கிறது. அதில் கதாபாத்திரங்களுக்கு அஸ்திவாரம் இருக்கிறது. அவர்களின் காரியங்களுக்கு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. தானே பதிப்பித்த நூல் போல் சுயம்பு உருவாகும் தருணங்கள் கோர்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதி இன்னும் விரிவாக தத்துவ சிக்கல்களுடன் வந்திருக்க வேண்டும். பாரத தேசம் முழுக்க பயணம் செய்திருக்க வேண்டும். பட்டியல்களைப் படையலாக ஆக்காமல் அந்தப் புத்தகங்களின் உள்ளார்ந்த கிரகிப்புகளைப் பகிர்தலாக ஆக்கியிருக்க வேண்டும்.

முதல் பாகத்தை மின்சார ரயில் பகுதி எனலாம். தெரிந்த விஷயங்கள். அதே குப்பை நாற்றங்கள். பழகிய முகங்கள். இருப்பிடம் வந்தாலும் நாளையும் இதே பயணம் என்னும் எதிர்பார்ப்பில்லாத திக்கில் முடிவு. அடுத்த பகுதி சென்னை முதல் டெல்லி செல்லும் ராஜதானி வண்டி. அவசரகதியில் எக்ஸ்பிரெஸ் ரயிலாக சேரிடத்தில் முடிந்தாலும், அந்தப் பயணம் சுவாரசியம் மிக்கது. தெரியாத, புதிய விஷயங்களை உணர்த்துவது. தூங்கி எழுந்தவுடன் கடைசி ஸ்டேஷன் வந்து விடுவது போல் சடாரென்று முடிவுக்கு வருவது மட்டுமே குறை.

மீதம் இருக்கும் குழம்பையும் சாதத்தையும் எண்ணெய்யும் உப்பும் போட்டுப் பிசைந்து உருட்டிக் கொடுக்கச் சொல்லி உண்டால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று தோன்றியது.

புத்தகக் கண்காட்சியில் சாப்பிடச் செல்கிறான் நாயகன் ராகவன். ஆத்துச் சாப்பாட்டில் திளைக்கிறவன் ராகவன். வெறும் பொரியலிலும் வத்தக் குழம்பிலும் ஜமாய்க்கிற மனைவின் கைப்பக்குவத்தை நினைத்துப் பார்க்கிறான். அதே சமயம் கூடை சோற்றைப் போட்டு அதை அவக்கு அவக்கென்று விழுங்கும் கூட்டத்தை சமபந்தியில் பார்க்கிறான். இது நாலே பக்கக் கதையில் கூட நளபாகத்தைப் போடும் இலக்கியகர்த்தாவையும், நாலு ஃபாரம் கொடுத்தாலும் கூறியதையேக் கூறும் அ-புனைவு விற்பனை எழுத்தாளனையும் ஒப்பிட்டது போல் அமைந்துள்ளது.

இதுவே பின் பகுதியான இரண்டாம் பாக நாவலில் ஆனந்தனையும் மாதவனையும் உணர்த்த இன்னொரு வழியில் சொல்லப்படுகிறது. ஆனந்தனுக்கு லௌகீக உணவே கொண்டாட்டம். வாசனையை வைத்தே என்ன சமையல் என்பதைக் கண்டுபிடிக்கிறான். அதில் லயிக்கிறான். தத்துவமும் துறவும் எண்ணமாகக் கொண்ட மாதவனுக்கு உணவு என்பது அத்தியாவசியம். ஏதோ கொஞ்சமாய் உண்ண வேண்டும். ருசிக்கும் பசிக்கும் அல்ல. கவளம் கிடைத்த சிந்தைக்காக சற்றே உட்கொள்கிறான்.

He gazed sadly at the threatening sky, at the burned-out remnants of a locust-plagued summer, and suddenly saw on the twig of an acacia, as in a vision, the progress of spring, summer, fall and winter, as if the whole of time were a frivolous interlude in the much greater spaces of eternity, a brilliant conjuring trick to produce something apparently orderly out of chaos, to establish a vantage point from which chance might begin to look like necessity …and he saw himself nailed to the cross of his own cradle and coffin, painfully trying to tear his body away, only, eventually, to deliver himself—utterly naked, without identifying mark, stripped down to essentials—into the care of the people whose duty it was to wash the corpses, people obeying an order snapped out in the dry air against a background loud with torturers and flayers of skin, where he was obliged to regard the human condition without a trace of pity, without a single possibility of anyway back to life, because by then he would know for certain that all his life he had been playing with cheaters who had marked the cards and who would, in the end, strip him even of his last means of defense, of that hope of someday finding his way back home.

An excerpt from the beginning (and end) of László Krasznahorkai’s novel Satantango. English translation by George Szirtes.

Title(Eng)Maaya Peru Nadhi
Authorஹரன்பிரசன்னா
FormatPaperback
Year Published2020
Pages360
Imprintதடம் பதிப்பகம்

இந்நாவலைப் பற்றி:

இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி.

ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது.

முதல் நாவல்

ஒவ்வொரு மொழியிலும் “தலைச்சன் குழந்தை” என்று பெயர் பெறும் முதல் நாவல்களின் பட்டியல் கீழே:

  • தமிழ்: வேதநாயகம் பிள்ளையின், “பிரதாப முதலியார் சரித்திரம்” (Prathapa Mudaliar Charitram by Samuel Vedanayagam Pillai. Written in 1857, it was published only in 1879)
  • அசாம்: ஹேம் சந்திர பாருவாவின், “பாகிரே ராங்-சாங்-வித் தாரே கோவபத்தூரி” (Padmanath Gohain Baruah’s Bhanumoti, published in 1890)
  • வங்காளம்: பாங்கிம் சந்திரரின், “ஆனந்த மடம்” (Bankim Chandra Chatterjee, Bengali novel, Durgeshnandini in 1865)
  • குஜராத்தி: கோவர்த்தன் ராமின், “சரஸ்வதி சந்திரர்” (அல்லது Nandshankar Mehta’s Karan Ghelo (1866))
  • இந்தி: பிரேம் சந்தின், “சேவாசதன்” (or Pariksha Guru by Srinivas Das, published in 1882 or popular novel in Hindi was Chandrakantha by Devaki Nandan Khatri, published in 1888)
  • கன்னடம்: கெம்பு நாராயணாவின், “முத்ரா மஞ்சூசா.” (or Kannada, Indira Bai by Gulvadi Venkata Rao, was published in 1899)
  • மலையாளம்: அப்பு நெடுங்காடியின், “குண்டலதா” (Kundalatha (1887) by Appu Nedungadi.)
  • மராத்தி: யமுனா, “பர்யாதன்” (Yamuna Paryatan (1857) written in Marathi by Baba Padamji)
  • ஓரியா: பிரஜநாத் பாட்ஜேனாவின் “சதுர்பினோத்” (or Saudamani, written by Ramashankar Ray in 1878 or Chaa Mana Atha Gunta written by Fakir Mohan Senapati and published in 1897)
  • சிந்தி: மீர்சாகலிச் பெக்கின் “திலாராம்”
  • தெலுங்கு: கண்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் “ராஜசேகர சரித்திரா” (Sri Rangaraju Charitra, written by civil servant Narahari Gopalakrishnama Setty and written in 1867)
  • பஞ்சாபி: பாய் வீர் சிங் எழுதிய “சுந்தரி” (Sundari (1898) by Bhai Vir Singh has the distinction of being Punjabi)
  • மணிப்புரி: லமம்பம் கமல் சிங் எழுதிய “மாதவி” (Lamabam Kamal Singh’s Madhavi (1930))
  • காஷ்மீரி: அக்தர் மொயுதீன் எழுதிய “டாட் டாக்” (நோயும் வலியும்) (Kashmiri, Dod Dag (Sickness and Pain) written by Akhtar Mohi-ud-din, was published in 1957)
  • உருது: நசீர் அகமது எழுதிய “மிரட்-அல்-உருஸ்” (Mirat-al-Urus (The Bride’s Mirror, 1868-69) by Deputy Nazeer Ahmed)
  • ஆங்கிலம்: பங்கிம் சந்திர சாடர்ஜி எழுதிய “ராஜ்மோஹனின் மனைவி” (1864, English Rajmohan’s Wife was written Bankim Chandra Chatterjee)

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage – Book Reviews

இன்னொருத்தருடன் உங்களுடைய இதயம் இணக்கமாக இருக்க ஒத்திசைவு மட்டும் காரணம் அல்ல. இரண்டு பேருக்கும் இடையே பொதுவாக நடந்த ரணங்களால்தான் இதயங்கள் இணைகின்றன. – சுகுரு டசாகி

ஜப்பானிய பழமொழியில் சொல்கிறார்கள்: ‘தலையைத் துருத்திக் கொண்டு தெரியும் ஆணியை, அடித்து உள்ளே தள்ளு!’

ஜப்பானில் சுற்றம் என்பது குடும்பத்தையும் தாண்டியது. வாழ்க்கையின் ஒவ்வொரு பாதையிலும் அந்த ஐக்கியமாகும் எண்ணம் பாய்கிறது. நீங்கள் தனித்துத் தெரிந்தால், பத்தோடு பதினொன்றாக ஆக்கப்படுவீர்கள். ஆமே (甘え) என்னும் சித்தாந்தம் இந்தக் குழுமப் பண்பாட்டை புரிந்து கொள்ள உதவும். ஆமே (甘え) என்பதன் அர்த்தம் ’அடுத்தவரிடம் அன்பைத் தேடு’. குழந்தைப்பருவத்திலேயே இது மூளையில் ஏற்றப்படுகிறது. இன்னொருவரிடம் பரிபூரண விசுவாசம் கொண்டிருப்பதற்கும் சமூகக் கூட்டமைப்பாக வாழ்வதற்கும் இந்த உணர்வு முக்கியம் என்று கற்றுத் தருகிறார்கள். சொல்லப் போனால், ஜப்பானிய மொழியில் சுய ஆளுமையைச் சொல்லும் கொஜின் ஷுகி (こじん-しゅぎ) என்றால் அது சுயநலம்/பேராசை போன்ற மோசமான அர்த்தத்திலேயே பயன்பாட்டில் இருக்கிறது.

ஆமே (甘え) என்பது குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள உறவு போன்றது. அது எழுதப்படாத சமூக விதி. உங்களின் சக தொழிலாளரை, உங்களுடன் கூடப் படிக்கும் மாணவரை, உங்களுடன் கூட்டத்தில் வரும் பயணியை – ஒவ்வொருவருக்கும் நீங்கள் வாக்கு கொடுக்கிறீர்கள். நின்ஜோ (にんじょ) என்றால் உள்ளார்ந்து எழும் அனிச்சையான செயல்பாடு. அதாவது, ’நான் என்னுடைய கடமையாக, உங்களுக்கு பரிபூரண அன்பையும் எதிர்பார்ப்பற்ற அர்ப்பணிப்பையும் நல்குவேன்.’ அனைவரும் அனைவருடன் கைகோர்த்து வாழ்வோம் என்பதை பாலபாடமாக பதித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான சமூகக் குழுமங்களை கிரி (ぎり) என்கிறார்கள்.

இந்த மாதிரி உள்வட்டத்தில் இல்லாதவர்களை டனின் (たにん) என அழைக்கின்றனர். நின்ஜோ (にんじょ) உள்வட்டத்திலோ, கிரி (ぎり) குழுமத்திலோ இல்லாதவர்களை டனின் (たにん) எனக் கருதுகின்றனர். அதாவது, குடும்பமோ, பள்ளித் தோழமையோ, அலுவல் சகாக்களோ, அல்லாதவர்கள். டனின் (たにん)களுடன் எந்தப் பற்றுதலும் கிடையாது.

கடைசியாக வா (わ) என்னும் பதம். வா (わ) என்றால் ஒத்திசைவு; இணக்கம். இதுதான் ஜப்பானிய அறம். பழங்காலத்தில், நெல் விளைவிக்க தேவைப்படும் நதிநீரைப் பகிர வேண்டும். நெல்விளைச்சலைப் பாதுகாக்க வேண்டும். இந்த சமயத்தில்தான் குடியானவ சமூகத்தில் அமைதி நிலவ, வா (わ) சட்டத்தை அரசர் ஷொடொகு டைஷி முன்வைக்கிறார். விளையாட்டில், வர்த்தகத்தில் என்று எந்தத் துறையிலும் வா (わ) சித்தாந்தத்தைக் காணலாம். பரஸ்பர நம்பிக்கை, விட்டுக் கொடுத்து வாழ்தல், ஒத்துழைப்பு, மேலதிகாரியிடம் அசைக்கவியலா பற்றுறுதி, ஆகியவையே வா (わ)கருத்தியல். தனிமனித விளையாட்டான டென்னிஸ் போன்றவற்றில் ஜப்பானியர்கள் ஓரளவிற்கு மேல் எழும்ப முடியாததற்கும் இந்த அடிப்படைக்கும் பெரும் தொடர்பு உண்டு.

ஜப்பானில் தனித்துவம் தழைத்தோங்க, ஒரு சில துறைகளே இருக்கிறது: மலர் அலங்காரங்களைச் செய்யும் பணி, கவிதை புனைதல், கலை வெளிப்பாடு மற்றும் இசை.

உசாத்துணை: Phyllis Kepler, Brook S. Royse and John Kepler. Windows to the World: Themes for Cross-Cultural Understanding. Glenview, IL: GoodYearBooks, 1996

Haruki_Murakami_Colorless_Tsukuru_Tazaki_Novel_NYT

oOo

ஹருகி முரகமி எழுதிய ”நிறமற்ற சுகுரு டஸாகியும் அவன் யாத்திரை மேற்கொண்ட வருடங்களும் (Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage) படித்து முடித்தேன். ’மனிதரில் இத்தனை நிறங்களா’ என படம் வந்திருந்தது. இந்தக் கதையில் ஐந்து இளைஞர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம். ஒருத்திக்கு கருப்பு, இன்னொருத்திக்கு வெள்ளை; ஒருவனுக்கு சிவப்பு; இன்னொருவனுக்கு நீலம். கடைசியாக இருக்கும் ஐந்தாமவன் கதாநாயகன் – நிறமற்றவன்.

ஹருகி முரகமி எல்லா இடங்களிலும் ரசிகர்களை வைத்திருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பரபரவென்று விற்றுத் தள்ளுகின்றன. மகாரஷ்டிரா அளவில் இருக்கும் ஜப்பானில் மட்டுமே ஒரு மில்லியன் புத்தகங்கள் விற்கிறது! அதன் பிறகு, அதே புத்தகம் ஐம்பது மொழிகளில் மொழியாக்கம் காணப்பட்டு மேலும் ரசிகர்களைக் கவர்கிறது. இத்தனைக்கும் சிட்னி ஷெல்டன் போல், கென் ஃபாலெட் போல் பரபரப்பான துப்பறியும் மசாலா நாவல்களை முரகமி படைக்கவில்லை. நோபல் பரிசுக்கான ஓட்டத்தில் நெடுங்காலமாக இருக்கிறார். ஜேகே ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டார் போல் ஹருகி முரகமியின் நூல் நாயகர்களும் தங்களுக்கென்று உலகை சிருஷ்டித்துக் கொள்கிறார்கள். அவருடைய நூல்களின் கதாபாத்திரங்களின் அக மனது அபிலாஷைகள், யாரும் எதிர்பார்க்காத திசைகளில் பயணித்து, நமக்கு அறிமுகமான எண்ணங்களை பரிச்சயம் செய்வித்து, திக்கற்ற முக்குகளுக்கு இட்டுச் சென்று நம்முடைய சிந்தனையில் நீண்ட நாள் நிலைக்கும் பாதைகளை உருவாக்கவல்லது.

நாகர்கோவில் போன்ற குறுநகரத்தில் இருந்து டோக்கியோ நகரத்துக்கு வருகிறான் சுகுரு டஸாகி. அவனுக்கு கலைகளில் நாட்டம் கிடையாது. எந்தவிதமான பொழுதுபோக்கும் கிடையாது. எந்த கைவினைத் தொழிலும் தெரியாது. எளிதாக புன்னகைப்பான். சட்டென்று யாரோடும் பழக மாட்டான். புதியதாக எவராவது அறிமுகமானால், அவருடன் நட்பு பயில சிரமப்படுவான். வெளிப்படையாக பட்டெனப் பேசுவதில் சிரமம். தனியாகவே உலா வருகிறான். எவருடைய துணையும் இன்றி வாழ்க்கையை நடத்துகிறான். பேச்சுத் துணை கிடையாது. செல்பேசி அரட்டை கிடையாது. அலுவலில் நண்பர் கிடையாது. உண்ணும்போது சம்பவங்களைப் பகிர எவரும் கிடையாது. டிவி மாந்தர்களைக் கூட தொலைக்காட்சியில் பார்ப்பது கிடையாது.

சுகுரு என்பது அவனுடைய அப்பா, அவனுக்கு இட்ட பெயர். அந்தப் பெயருக்கு அர்த்தம் ‘பொருள்களைச் செய்பவன்’. இதனால், அவனுக்கு ஸ்திரமான விஷயங்கள் பிடித்துப் போகிறது. சின்ன வயதில் இருந்து தொடர்வண்டிகள் மேல் காதல். நாள் முழுக்க ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான். பயணிகளின் அவசரத்தைப் பார்க்கிறான். விற்கப்படும் பொருள்களை கவனிக்கிறான். தண்டவாளங்களில் தாண்டவமாடும் சுருதியை ரசிக்கிறான். இம்மி பிசகாமால், மாறி மாறிப் போகும் புகைவண்டிகளைப் பார்ப்பதோடு நில்லாமல், அந்தத் துறையிலேயே வேலை தேடவும் நாட்டம் கொள்கிறான்.

kuro_pottery

சுகுரு டஸாகியினுடைய குறுநகரத்தில் அவனுக்கு நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் ஒன்றாகவே வளைய வருகிறார்கள். சுகுரு டஸாகி மட்டும் டோக்கியோவிற்கு கல்லூரியில் சேருகிறான். அதன் பிறகு நண்பர்களை இழக்கிறான். நண்பியைக் காமத்துடன் பார்க்கிறான். மூக்கு அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வது போல், தன்னியல்பாக தினசரி பல மைல் தூரம் நீந்துகிறான். தற்பால் விருப்பமோ என கனவுறுகிறான்.

உங்களின் அத்யந்த சிநேகிதர்கள், சடாரென்று ஒரு நாள் – உங்களை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நிராகரிப்பை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? காதல் தோல்வி என்பது போல் தோழர்களின் தோல்வி என்று இந்த நிலையைச் சொல்லலாம். அவர்களிடம் சென்று ‘ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?’ என விசாரிப்போம். அவர்கள், நம்மை புறந்தள்ளும் காரணத்தை அறிய முயற்சிப்போம். நட்பை மீண்டும் உயிர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று முயல்வோம். சுகுரு டஸாகி அவ்வாறெல்லாம் எதுவும் செய்வதில்லை. டஸாகிக்கு அந்த மாதிரி ஆராய இயலாத உள்ளுக்குள்ளேயே மருகும் மனம். தானாகவேப் புழுங்கி தனக்குள்ளேயே குற்றங்களை உருவாக்கி அதற்கான தண்டனைகளை ஏற்றுக் கொண்டு நிர்க்கதியாக அலையும் சிந்தையைக் கொண்டிருக்கிறான் டஸாகி.

துப்பறியும் கதை போல் வேகமாக விரைகிறது இந்த நாவல். ஏன் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள் என்பது முதல் முடிச்சு. அப்படி வெறுத்து ஒதுக்கிய, பதின்ம வயது தோழமை எல்லோரையும் எதிர் கொள்வானா என்பது இரண்டாம் முடிச்சு. ஒவ்வொருவரையும் சந்திக்கும் போது, அவர்கள் சொல்லும் மனப்பதிவுகளும் அதன் தொடர்ச்சியான தகவல்களும் ‘அடுத்து என்ன… அடுத்து என்ன?’ என்று ஆர்வமூட்டுகிறது.

ஒவ்வொரு நண்பரும், பிறரை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை வெளிக்கொணர்ந்தது நன்றாக இருந்தது. பியானோ இசைக் குறிப்புகளும் அதன் தொடர்ச்சியான ஆபரா, சிம்பொனி விமர்சனங்களும் வாழ்க்கையைச் சொல்கிறாரா, இசையைச் சொல்கிறாரா என எண்ண வைத்தது. ஃபிரான்ஸ் லிஸ்ட் என்பவரின் பியானோ இசைத்தட்டு ஆன Années de pèlerinage நாவல் நெடுக இடம்பெறுகிறது. கதையின் தலைப்பான ’யாத்திரை மேற்கொண்ட வருடங்களும்’ என்பதற்கும் பொருந்துகிறது.

tsukuru_overboard

கதைக்குள்ளேயே பல உபகதைகளும், கிளைக்கதைகளும், சிறுகதைகளும் உண்டு. நாவலின் நடுவே பியானோ வாசிப்பவர் குறித்த அத்தியாயம் வருகிறது. இது இந்த நாவலின் மிக சுவாரசியமான இடம். பியானோ கலைஞருக்கு சிறப்பு சக்தி வந்து இருக்கிறது. அவர் சாத்தானை சந்தித்து இருக்கிறார். அதனிடம் இருந்து, ஒருவரைப் பார்த்தவுடன் அவருடைய நிறம் என்ன என்பது அவருக்குத் தெரிந்து விடும் சக்தியைப் பெறுகிறார். தன்னுடைய நிறம் போலவே இருப்போருடன் அவருக்கு ஒத்துப் போகும், என்பதையும் அறிகிறார். இந்த ஞானமும், பிறரைப் பார்த்தவுடன் உணர்ந்து கொள்ளும் உள்ளுணர்வும் வந்ததால், அவரது நெடுநாள் ஆயுள், மாதங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த சிறப்புப் பார்வை கிடைக்கும் சூட்சுமத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் தாரை வார்க்கலாம். ஆனால், யாருக்குக் கொடுக்கிறாரோ, அவருடைய ஆயுள்காலமும் எண்ணப்படும் நாள்களாகிக் குறைந்து விடும். அவர் எப்பொழுது பியானோ வாசித்தாலும், தன்னுடைய ஜாடியை, பியானோ மேல் வைத்து விட்டு வாசித்தால்தான், பியானோ வாசிப்பு களை கட்டும். அவருக்கு ஆறாம் விரல் இருந்திருக்கிறது. ஆனால், ஆறாம் விரலோ, பியானோ வாசிப்பிற்கு இடையூறாக இருந்திருக்கும். அதை வெட்டி எடுக்கச் சொல்லி இருப்பார்கள். அந்த ஆறாம் விரல்தான் ஜாடியில் இருந்ததா? ரொம்ப நாளைக்கு, இந்த இடம் மனதிலே சிந்தையைக் கிளறிக் கொண்டே இருக்கும்.

நியு யார்க் டைம்ஸில் சொல்லி இருந்தார்கள். கனவை சிலர் நன்றாக எழுதுவார்கள். அற்புதமாக விவரிப்பார்கள். நிஜம் போலவே இருக்கிறமாதிரி கதையில் உருவாக்கி விடுவார்கள். ஆனால், முரகாமியோ, எது கனவு, எங்கே நிஜம் என சிந்தை திகைக்கும் அளவு கொண்டு செல்கிறார். இதை மீ எதார்த்தம் (surrealism) எனலாம். குழந்தைகளுக்கான கற்பனை உலகம் என்றும் எளிமையாக்கலாம்.

முரகாமியிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவை எல்லாமும் இந்தப் புத்தகத்திலும் கிடைத்தது: கொஞ்சம் போல் பாலுறவு வர்ணனை; இசையும் அதன் தாளங்களையும் வாழ்க்கையோடு சங்கமிக்கும் லயம்; அமானுஷ்யமான உணர்வுகளை காற்றோடு உலவவிடுதல்; அர்த்தமற்ற வாழ்க்கையை தேடல் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளும் முட்டாள்தனம்; பிறரோடு ஒட்டாமல், குழுவாகத் திரிய விரும்பும் விசித்திரம்; ஓட்டப்பந்தயம் போல் முடிவைத் தொடும் பயணமாக இல்லாமல், 4×100 தொடர் பந்தயமாக மாரத்தான் ஓடும் உயிர் வித்தை – எல்லாம் போதிய அளவில் கலந்திருக்கிறது.

டிரெயின் ஸ்டேஷன் போல் வாழ்க்கை. போக நினைக்கும் ஊரை மனதில் வைத்து அவசரமும் ஆர்வமும் பதற்றமும் கொண்டு தொடர்வண்டியில் ஏறுகிறோம்; இறங்குகிறோம். பயணங்களில் நிறைய பேரை சந்திக்கிறோம். சிலருடன் அதே இடங்களில் வசிக்கிறோம். சில சமயம் வழியனுப்ப மட்டும் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் செல்கிறோம். மேலிருந்து ஒருத்தன், இந்த கால அட்டவணையை உருவாக்கி, மின்வண்டியைப் போல் எல்லோரையும் இயந்திர கதியில் செலுத்துகிறான்.

tsukuru_train

பிறரின் இறப்பிற்கு நாம் காரணமாக இருக்கும்போது எப்படி உணர்கிறோம்? எதை உருவாக்குகிறோம்? யாரை திருப்தி செய்ய வாழ்கிறோம்? காதல் என்றால் என்ன? வெற்றி பெறுவது எப்போது? நிறைய யோசிக்க வைக்கிறது.

“நினைவுகளை மறைத்து விடலாம். ஆனால், அந்த நினைவை உருவாக்கிய சம்பவங்களை அழித்துவிட இயலாது.” – சுகுரு டசாகியிடம் சாரா சொல்வது

2012 Anadhan Vikadan Awards for Popular Tamil Cinema, TV and Bestsellers

சென்றவை:
1. விகடன் விருதுகள் – 2010

2. விகடன் அவார்ட்ஸ் 2008

3 Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review

4. Tamil Film Songs – Best of 2007 Movie Music

5. 2007 -Year in Review

6. 2006 Reminiscences

7. Year in Reviews – 2006

8. டாப்டென் – 2005

9. பிடித்த 10 படங்கள்

சிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் – ஆடுகளம்

சினிமா (திரைப்படம்): ஆடுகளம் – ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்

கதாநாயகர் (நடிகர்): விக்ரம் – தெய்வத் திருமகள்

கதாநாயகி (நடிகை): அஞ்சலி – எங்கேயும் எப்போதும்

துணை கதாபாத்திரம் (குணச்சித்திர) நடிகர்: இளவரசு – முத்துக்கு முத்தாக

வில்லி, குணச்சித்திர நடிகை: உமா ரியாஸ் – மௌன குரு

காமெடி, நகைச்சுவை நடிகர்: சந்தானம் – வேலாயுதம், தெய்வத் திருமகள்

ஜோக்ஸ், நகைச்சுவை நடிகை: கோவை சரளா – காஞ்சனா

வில்லன்: ஜாக்கி ஷெராஃப் – ஆரண்ய காண்டம்

முதற்பட புதுமுக நடிகர்: விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று

கன்னி புதுமுக நடிகை: இனியா – வாகை சூட வா

பேபி ஸ்டார் (குழந்தை நட்சத்திரம்): சாரா – தெய்வத் திருமகள்

பாடல், மியூசிக், இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்குமார் – ஆடுகளம், மயக்கம் என்ன

கேமிராமேன் (ஒளிப்பதிவாளர்): வேல்ராஜ் – எங்கேயும் எப்போதும், ஆடுகளம்

எடிட்டிங் (படத்தொகுப்பு): கிஷோர் – ஆடுகளம்

ச்டோரி, மூலக்கதை, கதை: வெற்றிமாறன் – ஆடுகளம்

ஸ்க்ரீன்ப்ளே, திரைக்கதை: தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்

டயலாக், வசனம்: சமுத்திரக்கனி – போராளி

ஃபைட் சீக்வன்ஸ் (சண்டைப் பயிற்சி): அனல் அரசு – ரௌத்திரம்

டான்ஸ், பாடல் ஆட்டம், குத்துப் பாடல், நடன இயக்குநர்: ராஜு சுந்தரம் – ’வள்ளியே சக்கரவள்ளியே’: எங்கேயும் காதல்

கலை (ஆர்ட் டைரக்‌ஷன்): ராஜீவன் – 7ஆம் அறிவு

ஒப்பனை (மேக்கப்): ஆ கோதண்டபாணி – பானு – ஏழாம் அறிவு

ஆடை வடிவமைப்பு, உடை (ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ்): ஸ்வேதா – கோ

பாடலாசிரியர் (சாங் ரைட்டர், கவிஞர்): அறிவுமதி – ’விழியும் விழியும்’: சதுரங்கம்

பின்னணிப் பாடகர்கள் (சிங்கர்): எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி சரண் – ’ஐயையோ நெஞ்சு அலையுதடி’: ஆடு களம்

பாடகி: சைந்தவி – ’பிறை தேடும் இரவிலே’: மயக்கம் என்ன

தயாரிப்பு (ப்ரொடக்‌ஷ்ன்ஸ், டிஸ்ட்ரிப்யூஷன்): ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் – ஏ ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்: எங்கேயும் எப்போதும்

இலக்கியம், கதை, புனைவு, ஆக்கம், எழுத்தாளர்

நாவல் (நெடுங்கதை): ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்

சிறுகதைத் தொகுப்பு (ஷார்ட் ஸ்டோரி): காண்டாமிருகம் – ஜீ முருகன்

புதுக் கவிதை (பொயம், கவிஞர், பா, தளை, பாடல்): சபரிநாதன்: களம் – காலம் – ஆட்டம்

கட்டுரைத் தொகுப்பு (பத்தி, கருத்து, சிந்தனை): அனுபவங்களின் நிழல் பாதை: ரெங்கையா முருகன் – வி ஹரி சரவணன்

மொழிபெயர்ப்பு (ட்ரான்ஸ்லேஷன், மொழியாக்கம்): சிறைபட்ட கற்பனை – க பூர்ணசந்திரன்

புத்தகம், வெளியீடு, ஓவியம், கலை, சிற்பம், புகைப்படம், நிழற்படம், ஒளிப் படம்: வாளோர் ஆடும் அமலை – ட்ராட்ஸ்கி மருது – தடாகம் பதிப்பகம்

சிறு பத்திரிகை (சிற்றிதழ்) : மணல் வீடு – மு. ஹரிகிருஷ்ணன்

இன்ன பிற

விளையாட்டு வீரர் (க்ரிக்கெட், ஸ்போர்ட்ஸ்): ரவிச்சந்திரன் அஷ்வின்

வீராங்கனை: நீச்சல் – ஜெயவீணா

பயிற்சியாளர்: (ட்ரெயினிங்) நீச்சல் – கிரீஷ்

டிவி சேனல்: தொலைக்காட்சி மிடையம்: புதிய தலைமுறை

டிவி நிகழ்ச்சி: (ப்ரொகிராம்): பெரிதினும் பெரிது கேள் – விஜய் டிவி

நெடுந்தொடர் (சீரியல்): திருமதி செல்வம் – சன் டி.வி.

தொகுப்பாளர் (ஹோஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்): சிவகார்த்திகேயன் – ஜோடி நம்பர் #1 சீஸன் 5 (விஜய் டிவி)

தொகுப்பாளினி (பெண்): திவ்யதர்ஷினி: ஹோம் ஸ்வீட் ஹோம் – விசய் தொலைக்காட்சி

பண்பலை: ஹலோ எப்.எம்.

பண்பலைத் தொகுப்பாளர்: மா கா பா ஆனந்த் – ரேடியோ மிர்ச்சி, சென்னை

எப்.எம். தொகுப்பாளினி: ரேடியோ: ஹலோ எப்.எம்., மதுரை

விளம்பரம் – அட்வர்டைஸ்மெண்ட்: ஏர்டெல்: ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்

மோட்டார் பைக் – டூ வீலர்: ஹோண்டா சி பி ஆர் 250 ஆர்

கார்: நாற்சக்கர வாகனம்: மகிழுந்து: மாருதி சூஸூகி – மாருதி ஸ்விஃப்ட் நியூ

குத்திக்கல் தெரு – அறிமுகம்

இதற்கு முன்பு தமிழோவியத்தில் இரு குறுநாவல் வெளியாகியுள்ளது. அவை:
1. கங்கை இல்லாத காசி
2. சுய சாசனம்

இப்பொழுது ‘குத்திக்கல் தெரு‘:

அ) நாவல் – பாகம் 1

ஆ) இரண்டாம் பகுதி

நாவலின் முதல் பகுதிகளுக்கு உங்கள் விமர்சனம் என்ன?

ஒளிப் பாம்புகள் – பா ராகவன்

sex-swamis-book-reviews-tamil-art-allowing-let-goபுத்தக விவரம்:
தலைப்பு: நிலா வேட்டை
முதற் பதிப்பு: அக்டோபர், 1998
வானதி பதிப்பகம்
விலை: ரூ. 32.00

ரா.கி. ரங்கராஜன் முன்னுரையில் இருந்து சில பகுதி:

‘ஒளிப் பாம்புகள்’ யதார்த்தத்தில் இருந்து விலகி, அதே சமயம் சுவாரசியமான பயமுறுத்தலைக் கொண்ட கதை. ஒரு கணம் படமெடுத்து ஆடி மறுகணம் சரசரவென்று வழுக்கிக் கொண்டு ஓடும் நாகப் பாம்பு கதையிலும் இருக்கிறது; நடையிலும் இருக்கிறது!

When you turn the last page and feel a little as if you have lost a friend – அதுவே ஒரு நல்ல கதையைப் படித்தோம் என்பதற்கு அடையாளம்.

-oOo-

பா ராகவன் நன்றியுரையில் இருந்து சில பகுதி:

power-hungry-flickr-cord-wire-snakes-paraஇந்தத் தொகுப்பில் உள்ள இரண்டு குறுநாவல்களுமே மிகவும் நெருடலான விஷயங்களை விவரிப்பவை. கொஞ்சம் பிசகினால் ஒரு விரச உற்சவமே நடந்துவிடும் என்பது போல. ஆனால், எழுத்தில் ஆடையவிழ்ப்புச் செய்யாத ஆணமையை கல்கி எனக்குக் கொடுத்தது.

முற்றிலும் குறியீட்டு வகை சார்ந்த, சம்பிரதாய வடிவமற்ற ‘ஒளிப்பாம்புகளை’யும் கல்கியில்தான் எழுதினேன் என்பது பெரும்பாலானோருக்கு வியப்புத் தரலாம்.

-oOo-

கதையில் கவர்ந்த சில இடம்:

  • “விலக்கி வைக்க சரியான வழி, கடந்து போவதுதான்!” என்றார் சாமி. “சொந்தக்காரனா இல்லாமெ, பார்வையாளனா மட்டுமே இருக்கணும்னா, அதுக்கான உபாயம். தந்த்ரம் படிக்கிறவன் ஒரு பாம்பாட்டி. அவன் மனசு ஒரு மகுடி.”
  • “கெடைச்சது போதும்னு உட்கார்ந்துடறவன் சித்தன். இன்னும் வேணும்னு போறவன் யோகி. அப்படியே தேடிட்டுப் போக கடேசியிலே மெய்யா ஒண்ணைப் பார்த்துட்டு மிச்சமெல்லாம் ஒண்ணுமில்லேன்னு சும்மா நிக்கறவன் ஞானி!”

-oOo-

இரண்டு வரி விமர்சனம்:

snake-fountain-king-throne-control-oli-paambugalசெப்டம்பர் 3, 2004 சங்கர்ராமன் கொலை செய்யப்பட்டார். நல்லவேலை ‘தவத்திரு பிரம்மானந்த சாமி டிரஸ்ட்பள்ளியின் தலைமை ஆசிரியர் தப்பித்து விட்டார்.

பாம்பு என்பது அஃறிணை; சாமியார் என்பது உயர்திணை. பாராவின் நடையில் சாமி திடீரென்று உயர்திணை விகுதியில் உலா வருகிறது; அதே ஆளுக்கு அன்னியோன்யமான அஃறிணையும் இட்டு கௌரவிக்கிறார்.

நாச்சியார் திருமொழியில் அஃறிணைப் பொருளான வெண்சங்கைப் பார்த்து ஆண்டாள் ‘சங்கனாயா’ என்பார். சங்குஅனாயா என்றால் சங்கர்+ஐயா என்றும் பிரிக்கலாம். அஃறிணைச் சங்கு உயர்திணை மரியாதை பெற்றதே நாச்சியார் அனுபவம். தெய்வாம்சம் தருபவர் மனித மாச்சர்யம் பெறுபவது பாரானுபவம்.

வாய்திறந்து பேசுகிற உயிர்கள் உயர்திணை; வாய் பேச இயலாதவை அஃறிணை. மனதிற்குள் ஆசையை வைத்து குமைவது அஃறிணை; வெளிப்படையாக லஜ்ஜையில்லாமால் போட்டுடைத்து ஆசைக்கு அடிமை என ஒப்புதல் வாக்குமூலம் சொல்வதால் உயர்திணை ஆகிவிடுவோமா?

மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். ஆறறிவு படைத்த உயர்திணை மாந்தர் ஆறாவது அறிவு கொண்டு அஃறிணை பாம்புகளை ஒளி என்னும் உயிரற்றவைகளாக ஆக்கினால் உயர்திணை.

அஃறிணை பாம்புகளுக்கு ஒளி கிடைத்தால் மோட்சம்!

பா.ரா.வின் முந்தைய சிறுகதை: உண்ணி – பா. ராகவன்

Amitav Ghosh – Maitreyan

எழுத்து: மைத்ரேயன்

அமிதவ கோஷ் பற்றி இதற்குள் நீங்களெல்லாம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

வங்க தேசத்தில் பிறந்து பிறகு இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் படித்து ஆய்வுப் பட்டம் வாங்கி அமெரிக்கப் பல்கலைகளில் போதித்து நிறைய கவனிக்கப்பட்டவர். இடது. ஆனால் முதலிலிருந்து படிக்கும்படியான நாவல்கள் எழுதியதுடன் சில வரலாற்று நவீனங்களை எழுதி இருக்கிறார்.

ஓரிரண்டு சுய சோதனை அல்லது தனிநபர் அவசங்களை மையம் கொண்ட நாவல்கள், ஒரு அறிவியல் நவீனம் எல்லாம் எழுதி இருக்கிறார். மிகவும் கவனிக்கப்பட்ட நவீனங்கள் வரலாற்று நவீனங்கள். அவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒவ்வொன்றும் சில முக்கியமான, கடந்த கால, நன்கு பதிவான சம்பவங்களில் வேர் கொண்டு, நிறைய ஆய்வுத் தகவல்களால் சூழப்பட களனையும் பாத்திரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டவை.

சம்பவங்கள், மன உளைச்சல்கள், பாத்திரங்களிடையே நடக்கும் உணர்வுப் பரிமாற்றங்கள், சுழல், உடைகள், தட்ப வெப்ப நிலை ஆகியன எல்லாம் எதார்த்த பாணி என்றாலும் கற்பனைதான்.

ஆனால் துவக்கத்தில் இவருடைய நாவல்களில் இருந்த ஒரு முழுமை சமீபத்திய தலைகாணி சைஸ் நாவல்களில் இல்லை. ஒரு புது உலகுக்குப் போய் வந்த உணர்வை நிச்சயம் எழுப்புகிறார்.

Sea of Poppies | Amitav Ghosh | Review by The Spectator – A passage from India :: இந்த விமர்சனக் கட்டுரை அவருடைய சமீபத்திய நாவல் ஒன்றைப் பற்றியது.

The Sea of Poppies என்ற இந்த நாவல் பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்த கஞ்சா உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி வருடத்துக்கு 1200 டன் போலச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்து தம் பொக்கிஷத்தை நிரப்பிக் கொண்டிருந்த காலத்தைப்பற்றியது. இந்த ஏற்றுமதி 1920 வரை கூட நீடித்திருந்தது. இன்றும் சீனருக்கு இந்தியா மீது ஆத்திரமும், எப்படியாவது இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும் என்றவன்மமும் இருப்பதாக அவ்வப்போது தோன்றினால் அதற்கு இந்த வரலாறு ஒரு காரணமாக இருக்கலாம்.

பிரிட்டிஷாரின் கைப்பாவையாகப் பயன்பட்ட எவருக்கும் இந்த நிலைதான். இந்த விதமான எதிர்வினை பிரிட்டிஷாரைத் தவிர வேறு அனைவரையும் தாக்குவதுதான் வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று.

இந்த மதிப்புரையைப் படித்து விட்டும் அமிதவ கோஷின் பையை நிரப்புவதா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள். உள்ளூர் பொது நூலகத்தில் ஒலிப்பதிவு வடிவில் இந்த புத்தகம் கிட்டினால் அதைப் பயன்படுத்துங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.