எழுத்து: மைத்ரேயன்
அமிதவ கோஷ் பற்றி இதற்குள் நீங்களெல்லாம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.
வங்க தேசத்தில் பிறந்து பிறகு இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் படித்து ஆய்வுப் பட்டம் வாங்கி அமெரிக்கப் பல்கலைகளில் போதித்து நிறைய கவனிக்கப்பட்டவர். இடது. ஆனால் முதலிலிருந்து படிக்கும்படியான நாவல்கள் எழுதியதுடன் சில வரலாற்று நவீனங்களை எழுதி இருக்கிறார்.
ஓரிரண்டு சுய சோதனை அல்லது தனிநபர் அவசங்களை மையம் கொண்ட நாவல்கள், ஒரு அறிவியல் நவீனம் எல்லாம் எழுதி இருக்கிறார். மிகவும் கவனிக்கப்பட்ட நவீனங்கள் வரலாற்று நவீனங்கள். அவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒவ்வொன்றும் சில முக்கியமான, கடந்த கால, நன்கு பதிவான சம்பவங்களில் வேர் கொண்டு, நிறைய ஆய்வுத் தகவல்களால் சூழப்பட களனையும் பாத்திரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டவை.
சம்பவங்கள், மன உளைச்சல்கள், பாத்திரங்களிடையே நடக்கும் உணர்வுப் பரிமாற்றங்கள், சுழல், உடைகள், தட்ப வெப்ப நிலை ஆகியன எல்லாம் எதார்த்த பாணி என்றாலும் கற்பனைதான்.
ஆனால் துவக்கத்தில் இவருடைய நாவல்களில் இருந்த ஒரு முழுமை சமீபத்திய தலைகாணி சைஸ் நாவல்களில் இல்லை. ஒரு புது உலகுக்குப் போய் வந்த உணர்வை நிச்சயம் எழுப்புகிறார்.
Sea of Poppies | Amitav Ghosh | Review by The Spectator – A passage from India :: இந்த விமர்சனக் கட்டுரை அவருடைய சமீபத்திய நாவல் ஒன்றைப் பற்றியது.
The Sea of Poppies என்ற இந்த நாவல் பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்த கஞ்சா உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி வருடத்துக்கு 1200 டன் போலச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்து தம் பொக்கிஷத்தை நிரப்பிக் கொண்டிருந்த காலத்தைப்பற்றியது. இந்த ஏற்றுமதி 1920 வரை கூட நீடித்திருந்தது. இன்றும் சீனருக்கு இந்தியா மீது ஆத்திரமும், எப்படியாவது இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும் என்றவன்மமும் இருப்பதாக அவ்வப்போது தோன்றினால் அதற்கு இந்த வரலாறு ஒரு காரணமாக இருக்கலாம்.
பிரிட்டிஷாரின் கைப்பாவையாகப் பயன்பட்ட எவருக்கும் இந்த நிலைதான். இந்த விதமான எதிர்வினை பிரிட்டிஷாரைத் தவிர வேறு அனைவரையும் தாக்குவதுதான் வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று.
இந்த மதிப்புரையைப் படித்து விட்டும் அமிதவ கோஷின் பையை நிரப்புவதா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள். உள்ளூர் பொது நூலகத்தில் ஒலிப்பதிவு வடிவில் இந்த புத்தகம் கிட்டினால் அதைப் பயன்படுத்துங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.