Merry Christmas: Movie Review


‘மெரி கிறிஸ்துமஸ்’ ரசிக்க வேண்டிய படம்.

வசந்தபாலனின் ‘வெயில்’ மாதிரி மறந்துவிடக் கூடிய அபாயம் இருந்தாலும்…
ஆதவனின் சிறுகதைகள் மாதிரி இந்தக் கால இளைஞரைக் கவராமல் போனாலும்…
எம்.எஸ்.வி.யின் குரல் ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் குரல் கொடுத்து ‘காதலா… காதலா’விலும் நடித்தது போல் விஜய் சேதுபதி தமிழிலும் ஹிந்தியிலும் பின்னி இருந்தாலும் திராவிட நிறம் என்பதாலும்…

எவளாவது மொத முத நாளன்று ஊரு பேரு தெரியாதவன வீட்டுக்குக் கூப்பிடுவாளா?
இந்தக் கால Badoo, Bumble, eHarmony, Grindr, HER, Hinge, Match, OkCupid, Plenty of Fish, Tinder, Zoosk காலகட்டத்தில் இது சகஜம்.
இது முதல் முடிச்சு.

’96’ மாதிரி பள்ளிலிக்கும் பள்ளி பிராய அபிலாஷை எல்லாம் தாடி நரைத்த காலகட்டத்தில் நடக்கிற காரியமா?
காதல் என்பது காமத்தில் துவங்கி சற்றே ஒற்றை மோற்று விஸ்கி கலந்து வருங்காலத்தை யோசித்து வருவது என்பது நிஜம்.
இது இரண்டாம் முடிச்சு

கிறிஸ்துமல் படங்களுக்கு என்று ஹாலிவுட்டில் ஒரு சூத்திரம் இருக்கிறது. அது மீறுகிற விஷயமா?
விடுமுறைக் காலம். எல்லோரும் ஜோடி ஜோடியாக உலாவுகிறார்கள். குடும்பத்திற்கு பாரம்பரியமும் LGBTQIA2S+ அல்லாததும் முக்கியம். இந்த நிர்ப்பந்தத்தை கேலி செய்வது ஸ்ரீராம் ராகவனுக்கு அவசியம்.
இது மூன்றாம் முடிச்சு,

நான்காம் முடிச்சு முக்கியமான முடிச்சு. அதை நெட்ஃப்ளிக்ஸ் திரையில் பாருங்கள்.

இந்தப் படம் கொண்டாட்ட மனநிலையில் உணர்ச்சிகரமாக ருசிக்க வேண்டியது. Domaine de la Romanee-Conti சரக்கு ஏன் அதிக விலை என்றெல்லாம் கேட்காமல் விரும்பப்படுவது போல் சுவைக்க வேண்டியது.
நீங்கள் மும்பை நகரத்தை பம்பாய் என்று அழைக்கப் பட்ட காலத்தில் இருந்து உழன்றவரா?
கத்தோலிக்கர்கள் மட்டும் நத்தார் தினத்தைக் கொண்டாடுவார்கள் என்று நம்பாமல் அஞ்சலையையும் மேரியையும் டாவு அடித்தவரா?
ஐயங்கார் பேக்கரியில் கேக்கும்; திருப்பலியில் ரொட்டிக்காவும் வைனுக்காகவும் பங்கெடுக்காமல் குட்டைக் கால் பாவாடைகளுக்காவும் ஜெஸ்ஸிக்காவும் யேசுவை ஸ்தோத்திரம் செய்தவரா?

அதெல்லாம் நினைவேக்கம். கழிவேற்ற சிந்தனை. பழைய நெனப்புடா பேராண்டி!
ஆனால், படம் என்பது பின்னணி இசை; துள்ளல் திரைக்கதை; நினைவில் நிற்கும் நற்செய்தி!!
வெள்ளித்திரையில் பார்க்கவில்லையே என வருத்தப்பட வைக்கும் ஆக்கிரமிப்பும் இப்படியெல்லாம் கத்ரினா கைஃபை இதுவரைக்கும் சாகடித்திருக்கிறீரகளே என்னும் கடுப்பும் கொண்டிருப்பவர்களுக்கு சாலச் சிறந்த ஆக்கம்!!

2 responses to “Merry Christmas: Movie Review

  1. கடந்த வாரம்தான் பார்த்தேன். உரையாடலால் நகர்த்தப்படும் படங்கள் அவ்வப்போது தமிழில் வெளிவரத்தான் செய்கின்றன.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.