பேச்சுரிமை
அது சடாரென்றுதான் எனக்கு நிகழ்ந்தது. ஒரு வார காலம் அவகாசம் கொடுத்திருப்பார்கள். சொல்வனம் இயங்கும் வோர்ட்பிரெஸ் தளத்தில் என் வலைப்பதிவை வைத்திருந்தேன். அந்த வலைப்பதிவில், ஆங்கிலத்தில் பல இடங்களில் வரும் விஷயங்களை சுட்டு, மறுபதிப்பாக என் தனி வலையாக சேமிப்பது வழக்கம். ஹார்வார்டு பிஸினெஸ் ரிவ்யூ போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகள், மெக்கின்ஸி போன்ற செல்வாக்கான மேலாண்மை நிறுவன ஆராய்ச்சிகள், நியூ யார்க்கர் போன்ற வெகுஜன பத்திரிகைகளில் வந்த முக்கிய கட்டுரைகள், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற தினசரிகளின் தலையங்கங்கள் – இது போன்று காசு கொடுத்து படிக்க வேண்டிய விஷயங்களை, இலவசமாக விநியோகித்தேன். சும்மா கொடுப்பது போதும்; இனிமேல் எல்லாமே காசு கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்று காப்புரிமை குறித்து அப்போது கெடிபிடி அதிகமான காலம். ஆலன் ஷ்வார்ஸ் தற்கொலைக்கு ஓரிரு வருடங்கள் முன்பான நேரம். ஒரே வாரம் கெடு தந்தார்கள். அதன் முடிவில் என் வலையகத்தை முடக்கி, நொடியில் வலையில் இருந்து காணாமல் போக்கிவிட்டார்கள். சிலிக்கான் வேலி நிறுவனங்கள் எல்லாம் எதுவும் செய்யத் துணிந்தவை என்பதை நேரடியாக பாதிப்பின் அடிப்படையில் உணர்ந்தேன். என்னுடன் வாருங்கள் என்று 8சான் (8chan) மாதிரி க்யூஅனான் (QAnon) மாதிரி தனது பைநாகப்பையை சுருட்டிக் கொண்டு கிளம்பும் திருமழிசைப் பெருமாள் போன்ற டொனால்டு டிரம்ப்பும் கிடையாது. நானும் ஆழ்வார் கிடையாது.
கணிகண்ணன் போகின்றான் காமருபூ கச்சி மணிவண்ணா
நீ கிடக்க வேண்டாம் துணிவுடைய செந்நாப்புலவனும்
போகின்றேன் நீயும் உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்
கணிகண்ணன் போக்கொழிந்தான்
காமருபூகச்சி மணிவண்ணா நீ
நிற்க வேண்டாம் துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தான்
நீயும் உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்
பார்லர் நிறுவனத்தை முடக்கிய கதை
ஜன.6. – பெரும்பாலோரின் முதல் எதிர்வினை நிம்மதி பெருமூச்சாக இருந்தது. ஜனவரி மாதத்தின் ஆறாம் நாள் அந்த அதிரடிகள் துவங்கின. தன்னுடைய பதவிக்காலத்தில் பதினான்கே பதினான்கு நாள்கள் மட்டுமே டொனால்ட் டிரம்ப் பாக்கி வைத்திருந்தார், ஜனவரி 6 – ஜனாதிபதியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. எண்ணற்ற துஷ்பிரயோகங்கள், பொய்கள் மற்றும் முட்டாள்தனங்களை இனிமேல் அவரால் டிவிட்ட முடியாது. அதன் தொடர்ச்சியாக அவருடைய அடிவருடிகள் கணக்கும் நிறுத்தி நீக்கப்பட்டது. ட்ரம்ப்பின் பல நண்பர்களும் ஆதரவாளர் கணக்குகளும் மூடப்பட்டது. அவர்களின் அவச்சத்தத்தின் முடிவு ஆனந்தமாக இருந்தது. சமாதானத்திற்கான விலை என்பது சுதந்திரப் பேச்சைக் கட்டுப்படுத்துவது என்பது – ஜனநாயக நாடுகளுக்கு தலைகுனிவு.
பேச்சுரிமையின் காவலராக தொழில்நுட்ப நிறுவனங்கள்
ஜனவரி ஏழாம் தேதி ஃபேஸ்புக் நிறுவனம் டொனால்ட் டிரம்ப்பின் கணக்கை காலவரையற்ற நிலுவையில் வைப்பதாக அறிவிக்கிறது. அதற்கு மறுநாள் டிவிட்டர் அவரின் கணக்கை நிரந்தரமாக மூடுகிறது. ஸ்னாப்சாட் சமூக ஊடகமும் வீடியோக்கள் போடும் கூகுள் நிறுவனத்தின் யூடியுப் தளமும் இதே போன்ற தடைகளை ஜனாதிபதி டிரம்ப் மேல் போடுகிறது. டிரம்ப்பை போன்றே செல்வாக்குடன் திகழ்ந்த பல தீவிர வலதுசாரி சார்பாளர்களுக்கும் இதே கதி. அவர்களின் கணக்குகளும் முடக்கப்படுகின்றன.
கூகுள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர் கடையும் ஆப்பிள் நிறுவனத்தில் ஐஃபோன் கடையிலும் இருந்து “பார்லர்” (Parler) நீக்கப்படுகிறது. பார்லர் – வலதுசாரிகளிடம் புகழ்பெற்றது. டிவிட்டர் மாதிரி பார்லரும் ஒரு சமூக ஊடகம். ஆனால், ட்விட்டரை விட அளவில் மிகச் சிறியது. டிவிட்டர் பயனர்கள் மொத்தம் 32 கோடி; பார்லர் மூடியபோது, அதன் பயனர்கள் எண்ணிக்கை மொத்தம் 23 லட்சம். ட்விட்டரை விட்டு நீக்கப்பட்டவர்கள் பார்லருக்கு சென்று கடையைத் துவங்கினர். வலதுசாரிகளுக்கு தங்களின் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் ஆக்ரோஷமாக முன்வைக்க பார்லர் உதவியது. கூகிள் கடையும் ஆப்பிள் செல்பேசி கடையும் நீக்குவதனால் – இனிமேல் எந்தப் புதிய நபராலும் பார்லர் நிரலியை தரவிறக்க முடியாது. எனினும், இதற்கு சந்து பொந்து ஓட்டைகள் இருந்தன.
இந்த நிலையில் அமேசான் நிறுவனம் பார்லருக்கு மரண அடி கொடுத்தது. பார்லர் செயலி இயங்குவதற்கு ஆதாரமாக இருப்பது அமேசான் வெப் செர்வீசஸ் எனப்படும் ஏ.டபிள்யு.எஸ் (AWS). அந்த வசதிகள் நிறுத்தப்படும் என்று அமெசான் ஒரு நாள் கெடு கொடுத்து, அடுத்த நாளே பார்லரை செயலிழக்க வைக்கிறது.
வெறியாட்டத்தைத் தூண்டிய மந்தை கும்பல் இவர்கள், என்று பார்த்தால் நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளத்தக்கது. அமேசானும் கூகுளும் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் தனியார் நிறுவனங்கள்; எனவே, தங்களின் வசதிக்கேற்ப, தங்களின் சுயவிருப்பத்திற்கேற்ப – என்ன வேண்டுமோ அதைச் செய்யும். நாம் எல்லோரும், ஒரு நிரலியையோ செயலியையோ தரவிறக்கும்போதும், உபயோகிக்கும் போதும், “உரிமைதுறப்பு” என்பதை ஒப்புகொண்டு, அந்தந்த பெருநிறுவனங்களின் விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுவோம் என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதிபர் டிரம்ப் கொஞ்சம் எசகுபிசகாக டிவிட்டுகிறார். அவரின் நிலைத்தகவலைக் கேட்டோர் கொதித்தெழுகின்றனர். கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, பார்லர் நிரலியை நாங்கள் வழங்கமாட்டோம் என முடிவெடுத்ததாக அமேசான் கடிதம் போடுகிறது.
ஆனால், இன்றைய அளவிலும் அயொத்தொல்லா அலி கொமேனி டிவிட்டரில் இயங்குகிறார். டொனால்டு டிரம்ப்பை போல் அறச்சீற்றம் எல்லாம் கொள்ள தன் ஆதரவாளர்களை அவர் தூண்டவில்லை. 8,815,000த்துக்கும் மேற்பட்ட தன் சீடர்களுக்கு, ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி நேரடியாக “இன்னாரை தீர்த்துக் கட்டு” என்று ஃபாத்வா கொலை உத்தரவை இன்றளவும் விடுத்துக் கொண்டே இருக்கிறார். அவர் ட்விட்டரில் தான் இன்னும் இருக்கிறார். அந்த மாதிரி வெளிப்படையான வெறித்தாக்குதல் அழைப்புக்கும் மறைமுகமாகத் தூண்டி விடுவதற்கும் உள்ள வேறுபாடு கூட சமூக மிடையக் காவலர்களுக்குத் தெரியவில்லையா?

இணையம் எவ்வாறு இயங்குகிறது?
இதற்கு வலை எவ்வாறு, எவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
உங்களின் வலை செயல்பாட்டிற்கும், வலையகம் இயக்குவதற்கும் “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” (acceptable use policy) என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். சேவை விதிமுறைகள் (terms of service) என்பது கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் கொண்டவை. அவை தேசங்களுக்கேற்ப மாறும். ஆனால், “ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கை” என்பது நிறுவனங்களுக்கு நடுவே நிலவும் பரஸ்பர புரிதல்.
இது எப்பொழுது, எப்படி நடைமுறைக்கு வந்தது?
தொண்ணூறுகளில் எரிதம் (spam) அஞ்சல்கள் தலைவிரித்தாடியது. சாதரண மக்களால் அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், மொத்த வலையையும் ஸ்தம்பிக்க வைத்தது. வணிக நிறுவனங்களால் தங்களின் குறைந்த பட்ச சேவையைக் கூட வழங்க இயலாதவாறு எரிதங்கள் ஆக்கிரமித்தன. அப்பொழுது இந்த அடாவடியை அடக்க அடாவடியான அணுகுமுறை, பல்வேறு சேவை வழங்குநர்களால் (ISPs) ஒப்புக்கொள்ளப்பட்டன.
இதற்கெல்லாம் கண்ணாமூச்சி காட்டி மாற்றுப் பாதையில் பயணிக்க பிறிதொரு மார்க்கம் இல்லையா?
இருக்கிறது. அது ருஷிய வழி. டி-டாஸ் காவலர் (DDoS-Guard) என்னும் பேரில் தீவிரவாத ஹமாஸ் முதற்கொண்டு எல்லா பாதகர்களுக்கும் வலைச்சேவை வழங்குகிறார்கள். மற்ற நாடுகளின் சட்டங்களையும் சாதாரண தயவு தாட்சண்யங்களும் பாராமல் வெறுப்பையும் வன்மத்தையும் பஞ்சமா பாதகத்தையும் பரப்புவதற்கு பாதை அமைத்துக் கொடுக்கிறார்கள்.
அதிருக்கட்டும். இந்தியாவில் ஒரு இணையம். சீனாவில் இன்னொரு இணையம். இதெல்லாம் எப்படி சாத்தியம்?
இணையம் என்பது கூட்டாட்சி. இந்தியாவில் அது ஜியோ, பி.எஸ்.என்.எல்., ஏர்டெல். அமெரிக்காவில் அது ஏடி அண்ட் டி, வெரைசான், ஸ்ப்ரிண்ட், டி – மொபைல். ஜெர்மனியில் டாயிச் டெலிகாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முதலாளிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டு இயங்குகிறார்களா?
கிளவுட்-கம்ப்யூட்டிங் சேவைகள் உட்பட இணையத்தின் உள்கட்டமைப்பு நடுநிலையாக இருக்க வேண்டும். பிளவுபடுத்தும் பாகுபாடான போர்களில் இழுக்கப்பட்டாலும் நாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரே மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த முடிவுகளை எவர் எடுக்கிறார்கள்? தொழில்நுட்ப நிறுவனங்களின் கையில் இந்த சாவி இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் கணக்கிட முடியாத சில நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இவை இருக்கின்றன.
தங்களை மேய்க்கப்போகும் எல்லா செயற்குழுக்களையும் டெமோகிராட் கட்சி கையில் எடுத்து விட்டது என்பதை FAAMG எனப்படும் ஃபேஸ்புக், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கூகிள் உணர்கிறது. ஜியார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகளும் வந்துவிட்டன. இனிமேல் தங்களின் குடுமி ரிபப்ளிகன் கட்சியிடம் இல்லை. டொனால்ட் டிரம்ப்பும் அவரின் ரிபப்ளிகன் கட்சியும் எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.
டெமோகிரட் பெரும்பான்மை. ஜனாதிபதி ஜோ பைடன்; செனேட் பெரும்பான்மைக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்; ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் எனப்படும் காங்கிரசிலும் ஜனநாயகக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை செய்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த சிலிகான் வாலி பெருநிறுவனங்களில் வேலை பார்ப்போரின் 95% தேர்தல் காணிக்கைகள் ஜோ பைடனுக்கு சென்றுள்ளது. (பார்க்க: Silicon Valley Opens Its Wallet for Joe Biden | WIRED). பார்லர் பெரு முதலையாக இருந்தால், இந்த மாதிரி, “எடுத்தோமா… கவிழ்த்தோமா” என்னும் மூடுவேலை சாத்தியமேயில்லை.
கீழேக் காணும் ட்விட்டை போட்டவர் ஜெனிஃபர் பால்மியெரி (Jennifer Palmieri). இவர் க்ளிண்டன் ஆதரவாளர்.
இதனால் கூகிள் நிறுவனம், சில பல சில்லறையாக சிதற வேண்டாம். ஆப்பிள் எத்தனை காசுக்கு வேண்டுமானாலும் ஐஃபோனை விற்றுக் கொள்ளலாம். அமேசான் வருமான வரியை அதிக அளவில் கட்ட வேண்டாம்.
இன்று ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் சிலிகான் வேலி நிறுவனங்கள், நாளைக்கே குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றால், அவர்களின் துதி பாடி, இன்னொரு ஆட்சி சொல்வதை சிரமேற்கொண்டு இரும்புக்கரத்தினால் இன்னொருவரை அடக்கும் என்பதில் எவருக்கும் துளிக் கூட ஐயமிருக்கக் கூடாது. ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், “தனியார் நிறுவனங்கள் பேச்சு விதிகளை தீர்மானிக்கக்கூடாது.” என்றார். ருஷியாவைல் வெளியேறிய அதிருப்தியாளரான அலெக்ஸீ நவல்னி (Alexei Navalny), “இந்தத் தணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத செயல்” என்று தன் கண்டனத்தைப் பதிவு செய்தார். இவ்வளவு ஏன்!? ட்விட்டர் நிறுவனத் தலைவரான, ஜாக் டார்சி கூட “ஆபத்தான முன்மாதிரி” என வருந்தியிருக்கிறார்.
வருங்காலத்திற்கான சில தீர்வுகள்
- ஒரு சில நிறுவனங்களே இப்போது எவர் பேசலாம், எதைப் பேசலாம், எவ்வளவு பேசலாம், எப்படி பேசலாம் என்பதை முடிவு செய்கின்றன. இந்த நிலை மாற விதவிதமான விளம்பரம் சார்ந்த, விளம்பரங்கள் சாராத வணிக அமைப்புகள் வரவேண்டும்.
- வைரல் ஆவது என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் முக்கியமாக அமைந்திருக்கிறது. விற்கிறதோ இல்லையோ – எல்லாவிதமான நூல்களும் அச்சிடப்பட்டது ஒரு காலம். அது போல், பரவலாக பல்லாயிரம் பேரைச் சென்றடையாவிட்டாலும் முக்கியமான விஷயங்களை முன்னிறுத்துவது எப்படி என்று யோசிக்க வேண்டும்.
- எதை தணிக்கை செய்வது என்பது குறித்து பல்வேறு சிந்தனையாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறவேண்டும்.
- சில ஸ்டேட்டஸ் தகவலுக்கு அடியில் “இது உண்மை அல்ல.” என்பது போன்ற எச்சரிகைகள், கொட்டை எழுத்தில் போட வேண்டும்.
- எந்த விதமான நடவடிக்கை எடுக்கப் படுகிறதோ, அது வெளிப்படையாகவும் கணிக்கக்கூடியதாகவும் அமையவேண்டும்.
- கடினமான தீர்ப்புகளை பாதிக்கப்பட்ட மக்கள், மறு முறையீடு செய்வதற்கான உரிமையை வழங்கும் சுயாதீனமான சட்டரீதியான வாரியங்கள் அமைய வேண்டும்.
- உகாண்டாவில் தன் நிரலி கிடைக்காது என்பதற்காக, நாட்டிற்கேற்ப வளைந்து கொடுக்காத சுதந்திர செயலிகள் இயங்க வேண்டும்.
- இன்றைக்கு சரியெனப் படுவது நாளைக்கு தவறாக இருக்கும். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் பனிரெண்டு வயதில் மணமுடித்து, 13ல் குழந்தை பெறுவது சகஜமாக இருந்தது. அது போல், காலத்திற்கேற்பவும் வளர்ச்சிக்கேற்பவும் மாறும் சட்டதிட்டங்களை சமூகங்களும் பிரஜைகளும் உருவாக்க வேண்டும். விற்பனையைக் குறிக்கோள் வைக்கும் நிறுவனங்கள் கையில் இந்த முடிவுகள் இருக்கக் கூடாது.
- ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டதிட்டங்கள் இருக்கின்றன. இழிமொழியை கதையில் வரும் கதாபாத்திரம், அந்தச் சூழலுக்கேற்ப பயன்படுத்தலாம். அது ஒப்புக்கொள்ளக் கூடியதே. அதே வெறுப்பு மொழியை டிவிட்டரில் பயன்படுத்த முடியாது. இது சுதந்திர நாட்டிற்கும் கொடுங்கோல் ஆட்சி நடக்கும் பிரதேசத்திற்கும் இடையே வேறுபடும். சீனர்களுக்கு ஒரு சட்டம், அமெரிக்கர்களுக்கு ஒரு சட்டம் என்று பிரிவுபடுத்தாத உலகளாவிய ஒரு நோக்கு வரவேண்டும்.
அமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்
எதிர்பார்க்காமல் அது நிகழ்ந்தது. மாலன் சார் பாரிந்துரைத்ததாக சிங்கை மீடியாகார்ப் அணுகினார்கள்.
ஒரு சவுண்ட் பைட் வேண்டும் என்றார்கள். முன்பின்னே கொடுத்ததில்லை. அனுபவம் கிடையாது என்றேன்.
சரி… அழைத்துப் பேசுகிறோம். அதன் பின் வெட்டி எடுத்துக் கொள்கிறோம் என்று சம்மதித்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினோம்.
– சமூக ஊடகங்களில் எவ்வாறு இளைஞர்கள் வீழ்ந்து, அமிழ்ந்து, கலந்திருக்கிறார்கள் என்றும்
– அமெரிக்கத் தேர்தலில் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் யூடியூபும் ஆக்கிரமித்திருக்கிறது என்றும்
– தேர்தலுக்கு முன் நடந்த ஆர்ப்பாட்ட ஒத்திகைகள் எவ்வாறு அரங்கேறின என்றும்
அது கொஞ்சம் தன்னம்பிக்கையை அதிகரித்து, பாட்காஸ்டிங் துவங்கலாமா, நாமும் பொக்கிஷம் டிவி விக்கி ஆகிவிடலாமா என்று ஆசை கொடுத்தது.
அதன்பின் வழக்கம் போல் காலை எழுந்ததும் கட்டஞ்சாயா, அதன் பின் நாள் முழுதும் அலுவல் சந்திப்பில் கேமிராவைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே பேசுவது என்று பழைய வழக்கமான வாழ்க்கைத் தொடர்ந்தது.
தேர்தல் நாளில் திடீரென்று வாட்ஸப் அழைப்புகள் பறக்க ஆரம்பித்தன. எல்லாமே சடாரென்று நடந்தது. நியூஸ் 18 நேரலையில் டொனால்டு டிரம்ப் குறித்தும், வாக்களிப்பு குறித்தும், ஜோ பைடன் குறித்தும், கமலா ஹாரிஸ் குறித்தும், அமெரிக்காவின் இந்தியக் கொள்கை குறித்தும் நிறையப் பேசினேன். ஆசைதீருமளவு வாய் வலிக்குமளவு கருத்துகளை அள்ளிக் கொட்டினேன்.
பின் இரவு ஒரு மணி அளவில் உத்தரவு வாங்கிக் கொண்டேன். தீபாவளிக்கு முந்தின இரவு வெடி வெடிப்போம். எல்லாரும் தூங்கிய பிறகு… அனைத்து வெடிச்சத்தமும் அடங்கிய பிறகு… கடைசி வெடியைப் போடுவோம். சொல்லப் போனால் தூங்காமலேயே, முன்றரை மணிக்கு மீண்டும் வெடியைத் துவங்கி விடுவோம்.
அன்றும் அப்படித்தான். news18 முடிந்ததும் சன் தொலைக்காட்சியில் துவங்கினார்கள். சிவராத்திரியே தான்!
அரைத்த மாவையே அரைத்தேன். காட்டமான எண்ணங்களைச் சொல்வது; அதன் பின் எதிர்த் தரப்பிற்கும் சற்றே வக்காலத்து வாங்குவது. வழவழா கொழகொழா ஆக முத்தாய்ப்பு வைத்து முடிப்பது – இப்படியே த் தொடர்ந்தேன்.
அந்த உலகம் அவசரமும் சுவாரசியமும் பரபரப்பும் நிறைந்த உலகம். எவரோ நுழைகிறார்கள். ஸ்கைப் அழைப்பில் நேரடி ஒலிபரப்பைப் பார்க்கும் போதே, “சற்றுமுன்” என்று மாறிவிடுகிறார்கள். அந்தத் தொலைக்காட்சியில் ஆளுங்கட்சிக்கு ப்ரேக்கிங் நியுஸ்; இந்தத் தொலைக்காட்சியில் கொரோனா நோய் பீடிப்பில் இறந்தவர்களின் கணக்கு – நடுவில் நானும் ஃபாக்ஸ் டிவி (ரிபப்ளிகன் சார்பு), எம் எஸ் என்பிசி (டெமொகிராட்ஸ் ஆதரவு), பி.பி.எஸ். (தூர்தர்ஷன் மாதிரி) எல்லாம் மாற்றி மாற்றி பார்க்கிறேன்.
காபி துளிக் கூட அருந்தாமலே மூளை சுறுசுறுப்பாக இருந்தது. சாந்தோம் பள்ளி மாணவர்கள் எனக்கு செய்திச் சுருக்கங்களை நறுக் நறுக்கெனக் கொடுத்துக் கொண்டிருந்தது வெகு உதவியாக இருந்தது.
நியூஸ் பதினெட்டு கன்னலில் எட்வர்ட் சார் கூடவும் ஜூனியர் விகடன் காலத்தில் இருந்து வாசித்தும் எஸ். ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது நியூ ஜெர்சியில் வைத்து சந்திக்கவும் செய்த பிரகாஷ் எம் ஸ்வாமி கூடவும் நேரலையில் பேசியது அளவொண்ணா மகிழ்ச்சியைத் தந்தது.
அமெரிக்காவில் அடிக்கடி தேர்தலும் வாக்குப் பதிவும் நடந்தால் எனக்கு வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும். மிட்ச் மெக்கானல் உடனோ ஜான் ராபர்ட்ஸ் கூடவோ பேசி நடத்தி விட வேண்டும்.
போதையில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்,
பாபா
பின்னூட்டமொன்றை இடுக
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, சன் செய்திகள், ஜனாதிபதி, டிவிட்டர், தொலைக்காட்சி, நியுஸ், பிடன், பைடன், வாக்கு, வோட்டு, Commentary, Elections, Experience, Live, News, News18, Opinion, Polls, Sun News, TV, USA, Votes