சுகுமாரன் நம்பியார் காலமானார்
சென்னை, ஜன. 8: பாஜக முக்கியத் தலைவர்களில் ஒருவரான எம்.என். சுகுமாரன் நம்பியார் (64) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார்.
பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என். நம்பியாரின் மகனான இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெர்க்லி ஆர்ம்ஸ்ட்ராங் கல்லூரியில் பி.பி.ஏ., எம்.பி.ஏ. பட்டமும், கலிபோர்னியாவில் உள்ள சர்வதேச உறவுகளுக்கான ஜான் ஜோஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டமும் பெற்றவர்.
கராத்தே போன்ற தற்காப்பு கலைகளில் நிபுணரான இவர், இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தற்காப்புப் பயிற்சி அளித்துள்ளார்.
வெற்றிகரமான தொழிலதிபராக செயல்பட்ட அவர் 1980-ல் பாஜகவில் இணைந்தார்.
பரபரப்பான நடிகரின் மகனாக, பெரிய தொழிலதிபராக இருந்தபோதும் சாதாரண தொண்டராக கட்சிப் பணியில் ஈடுபட்டார். தனது உழைப்பால் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் நன்மதிப்பை பெற்றார். பாஜகவில் அறிஞர் அணித் தலைவர், அகில இந்தியப் பொருளாளர் போன்ற பொறுப்புகளை வகித்த அவர், 2010 முதல் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.
மத்திய அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் மரணமடைந்ததைத் தொடர்ந்து 2001-ல் நடைபெற்ற திருச்சி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2004-க்குப் பிறகு கட்சிப் பணியைவிட சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் காட்டினார்.
சுவாமி தயானந்த சரஸ்வதியால் தொடங்கப்பட்ட தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பின் பொறுப்பாளராக ஆன்மிக, சேவைப் பணியில் ஈடுபட்டார்.
உலக கலாசார இணக்க மையம் (ஜி.எப்.சி.எச்.) என்ற அமைப்பின் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக இந்து ஆன்மிக, சேவை கண்காட்சியை சென்னையில் நடத்தினார். சென்னையில் சனிக்கிழமை (ஜன. 7) பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருச்சியில் ஏப்ரல் 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டுக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது திடீர் மரணம் பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரான இவர், 1999, 2004-ல் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட முக்கிய காரணமாக இருந்தார்.
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். பாஜக தலைவர் நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
சுகுமாரன் நம்பியாரின் மறைவை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.