Monthly Archives: பிப்ரவரி 2024

சொல்வனம் #312

புதிய சொல்வனம் இதழில் பல முக்கிய ஆக்கங்கள் இருக்கின்றன. முகப்புக் கட்டுரையை விட்டுவிடலாம். எழுதியவரும் எழுதப்பட்டவரும் சொல்வனம் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து காத்திரமாகப் பங்களிப்பவர்கள். பத்து சிறுகதைகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பின்னொரு ரத சப்தமி அன்று அறிமுகம் செய்யலாம். ஐந்தாறு தொடர்கள்; இரண்டு வாசகர் கடிதங்கள் போன்றவற்றையும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என எங்கேனும் ஏற்கனவே எழுதியிருப்பேன்.

312ஆம் சொ.வ. இதழில் என்னைக் கவர்ந்தவை:
1. செமிகோலன் எழுதிய கவிப்பித்தனின் சாவடி தொகுப்பிற்கான எண்ணங்கள்
2. வெங்கட்ரமணன் எழுதிய கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

முதல் பதிவு நேர்மையாக சக காலப் படைப்பாளியின் ஆக்கங்களை அணுகுகிறது. ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பத்து, பதினைந்து புதிய எழுத்தாளர்களின் புத்தம்புதிய நாவல்களையும் தொகுப்புகளையும் வாங்கினாலும், எவரைக் குறித்தும் பதிவு செய்வதில்லை. அந்தக் குறையை அரைப்புள்ளி நீக்குகிறார். அதற்காக “வாழ்க!” (“தொடர்க”வும் கூடவே சொல்லி வைக்கிறேன்).

கனடா வெங்கட் எழுதிய கட்டுரையை அலுவலில் திறந்து விடாதீர்கள். அக்கம்பக்கம் பார்த்துப் படியுங்கள். (சரோஜாதேவி புத்தகம் என்று ராம்பிரசாத் எழுதியதைப் பொதுவிடங்களில் பலர் பார்க்க புரட்டுவதில் எந்த ஆபத்தும் இல்லை). க.வெ. (இவர் டொரொண்டோ பக்கம் இருப்பதால் என்னைப் போன்றோரால் டொரொண்டொ வெங்கட் என்றும் அழைக்கப்படுகிறார்) தத்துவத்தில் துவங்கி, ஓவியத்திற்கு பாய்ந்து கர்ண பரம்பரைக் கதைகளைச் சொல்லி சிறுவாணியாகப் பாய்ந்தோடுகிறது.

உண்மையாக ஓவியத்தைப் பார்த்தால் இளமையாக இருக்கிறது. இன்றைய டிக்டாக் காலத்தில் போலி முகத்தைப் பொருத்தி உலா வருவது சகஜம். அந்தக் காலத்தில் செயற்கை நுண்ணறிவு இல்லாமலே சொந்தமாக வேஷம் போட்ட பொய்யை எல்லோரும் தீட்டிக் கொண்டிருக்க, உண்மையை படம் வரைந்தவரின் கதையைப் படியுங்கள்.

அனேக அகமுடையார்: யானம் சிறுகதை விமர்சனம்

ஜெயமோகன் அவ்வப்போது சிறுகதைகளை வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் வயதில் அல்லது அவரைப் போன்ற ஆளுமையை அடைந்த பிறகு அவரின் சமகாலத்தவரோ, அவருக்கு முந்தைய இலக்கிய ஜாம்பவான்களோ அத்திப் பூத்தது போலத்தான் சிறுகதைகள் எழுதினார்கள். அவர்கள் நாவல் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். அல்லது பேசாமல் இருப்பதே கௌரவத்தைக் காப்பாற்றும் என்று அமைதி காத்தார்கள்.

நான் நினைத்தது – ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோர். சுஜாதா மட்டும் விதிவிலக்கோ!?

இந்த எண்ணம் தவறுதலாக இருக்கலாம். இருபதுகளில் துவங்கி அறுபது வயது தாண்டியும் எந்த எழுத்தாளராவது தொடர்ச்சியாக சிறுகதைகளை தொண்ணூறுகளில், 2000களில் வெளியிட்டார்களா?
தீபாவளி சிறப்பிதழ்கள் தவிர்த்து அதற்கான பத்திரிகைகள் இருந்ததா என்பதைக் குறித்த என் எண்ணத்தையும் திருத்தவும்.

நிற்க.

யானம் (சிறுகதை) | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

இந்தப் பதிவு இலக்கியகர்த்தாக்களின் பிற்கால படைப்பூக்கம் பற்றியது அல்ல. அமெரிக்காவில் வசிக்காத ஒருவர் அமெரிக்காவைப் பற்றி புனைவு எழுதலாமா என்பதைப் பற்றியும் அல்ல. எனினும், அதையும் நோக்குவோம்.

ஒரே ஒரு மேற்கோள்: “என்ஜாய் பண்றாங்களோ இல்லியோ, இது ஸ்கூலிலே பிரெஸ்டிஜ் இஷ்யூவா இருக்கு”

பொத்தாம்பொதுவாக ஜல்லியடிப்பது வாத்தியாரின் வித்தை. ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒற்றை வரி தீர்ப்பு கொடுத்து மொத்த சமுதாயத்தை சுருக்குவதும் அவ்வப்போது செய்வதுதான். இதிலும் சாமர்த்தியமாக கதாபாத்திரத்தின் வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல் கதை நெடுக மனைவியும் கணவனும் கனமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள்.

கார் என்பது எல்லைகளில்லா சுதந்திரம். நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கும் வீட்டில் இருந்தும், உடன் இருக்கும் நபர்களிடமிருந்தும் கட்டற்ற விடுதலை. பிடித்த பாடல். நினைத்த வேகம். இலக்கற்ற பாதை. அமெரிக்காவில் ஆண்டி முதல் அரசர் வரை எவரும் எளிதில் வாங்கி, உடனடியாக ஊர்ச்சுற்ற, இல்லமாக குடியிருக்க என்று நினைத்த மாதிரிக்கு பயன்படுத்தும் மூலமுதலாதாரப்பொருள்.

யானம் சிறுகதையில் நான்கைந்து நல்ல பொறிகள், துவக்க கண்ணிகள் இருக்கின்றன:
1. அந்தத் தற்கொலை எண்ணம்
2. பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது(ம்) பக்கத்து வண்டிகளை எட்டிப் பார்ப்பது
3. விடுமுறை விட்டால் காரை எடுத்துக் கொண்டு எங்காவது கிளம்புவது

அதை விட அந்த இடங்களை உளவியல் ரீதியாக தீர்க்கமாகவோ சம்பவங்களின் கோர்வையில் ஆழமாகவோ உள்ளே செல்லாமல் ஹெலிகாப்டரில் பறக்கும் அவசரத்துடன் தாண்டி விடுகிறார். அதை விட ஆபத்தான பிரதேசம் – இந்திய சாலைகளையும் போக்குவரத்தையும் அமெரிக்க மக்களோடும் இயந்திரங்களோடும் ஒப்பிடும் பிரதேசங்கள். அவை இன்னும் தேய்வழக்காக அலுமினிய பிரகாசத்துடன் மின்னிடுகின்றன.

காரில் இருக்கும் விடலைகளும் பாந்தன்களும் இன்றைய காலத்தில் செல்பேசியில் மூழ்குவார்களேத் தவிர இந்த மாதிரி தத்துவபூர்வமான விவாதங்களுக்குள் செல்லமாட்டார்கள். கதைதானே? ஜெயமோகன் கற்பனைதானே? அரட்டை அடிக்கக் கூடாதா என்ன!?

எனினும், கதையின் அடிநாதம் முக்கியமான ஒன்றைச் சுட்டுகிறது.

இந்தக் காலத் தம்பதியினருக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. இல்லறமும் போரடிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பத்தாம்பசலி கொள்கைகளிலும் கிஞ்சித்தும் நம்பிக்கை இல்லை.

அவர்கள் திறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள். அன்றாடம் ஒரேயொருவடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதினால் வரும் அலுப்புகளை உணர்ந்தவர்கள்.

”நியு யார்க்கர்” கட்டுரையில் இருந்து நறுக்:

So many rules! “American Poly” reveals Americans to be very American. Good Puritans, we made marriage into work and non-monogamy into even more work—something that requires scheduling software, self-help manuals, even networking events. Presumably, participants could at least skip the icebreakers.

https://www.newyorker.com/magazine/2024/01/01/american-poly-christopher-gleason-book-review-more-a-memoir-of-open-marriage-molly-roden-winter

”அன்புள்ள அல்லி” கேள்வியில் இருந்து இன்னொரு மேற்கோள்:

My nesting partner of a decade and I opened our relationship about four years ago, and for the first three years, we were ethically non-monogamous, but not poly. We’re pretty parallel, but we’re recently trying garden party style for big events… the polycule… metamour…

https://slate.com/human-interest/2024/01/birthday-plan-relationships-sex-advice.html

மணிரத்னம் ஓகே கண்மணி எடுத்தது போல், அனேக அகமுடையார் கொள்கைகளை ஜனரஞ்சகமாக்க இன்றைய கல்கித்தனமான கதை. மணி ரத்தினம் சினிமா போல் இதுவும் ஒட்டிக்கோ/கட்டிக்கோ வேட்டியாக பல்லிளிக்கிறது.

உங்கள் வாசிப்பில் என்ன உணர்ந்தீர்கள்?