Monthly Archives: ஜூன் 2020

தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு

ஓசையற்ற வாக்கியங்களை நினைவுகள் சன்னமாக ஒலிக்கிறது
-பொலான்யோ

மருத்துவர்கள்

ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பார்கள். ஆயிரம் வார்த்தைகளை எழுதி அதில் பாதியை மட்டும் வைத்துக் கொள்பவரை எழுத்தாளர் எனலாமா? பொலான்யோ அப்படித்தான் ஆன்ட்வெர்ப் (Antwerp) நாவலை எழுதியிருக்கிறார். “தெரியாத பல்கலைக்கழகம்” (La Universidad Desconocida) 2007ல் வெளியாகிறது. அந்த ஸ்பானிஷ் புத்தகம் The Unknown University என்னும் பெயரில் 2013இல் ஆங்கில மொழியாக்கம் காண்கிறது. அந்த “அன்க்னோன் யூனிவெர்சிடி” நூலில் இருந்து “விலகிச் செல்லும் மக்கள்” (People Walking Away) என்னும் பகுதி மட்டும் தனித்து உருவப்பட்டு, சில கவிதைகளும் சேர்க்கப்பட்டு 2002ல் அம்பரேஸ் (Amberes) என்று ஸ்பானிஷ் மொழியில் நாவலாக வெளியாகிறது. அந்த “அம்பரேஸ்” நூலின் ஆங்கில மொழியாக்கம் 2010ல் “ஆன்ட்வெர்ப்” நூலாக வெளிவருகிறது.

மருத்துவரிடம் நம்முடைய சிக்கலைச் சொன்னால் ஆயிரம் தொடர் கேள்விகள் கேட்பார். குடும்ப வம்சாவழி, வாழ்வுமுறை, முன்னாள் பிரச்சினைகள், வயதுக்குரிய கோளாறுகள், தற்கால ஆய்வுகள், பொருத்தமான ஆராய்ச்சி முடிவுகள், சுற்றுச்சூழல் என எல்லாவற்றையும் அலச வேண்டும் என உணர்த்துவார். அதன் பின் ஏழெட்டு பரிசோதனைக்கும் அனுப்பி வைப்பார். இவ்வளவுக்குப் பிறகும் உனக்கு என்ன நோய் என்பது புரியவில்லை என்றும் புதிராகவே இருக்கிறது என்றும் யோசிப்பார். அத்தகைய மருத்துவர் எவ்வாறு நோயாளியை அணுகுகிறாரோ அவ்வாறே ஆன்ட்வெர்ப் நாவலை வாசகர் அணுக வேண்டும்.

கலை என்பதில் தவறான புரிதல் என்பது கிடையாது. மருத்துவத்தில் மாறும் புரிதல்கள் உண்டு. இன்று வயிற்று வலி; நாளை வயிற்றில் புற்று நோய் என்று கூட மாறிப் போகலாம். உடல் ஒரு புதிர். தவறான புரிதல்கள் இழப்பை ஏற்படுத்தும். கலையாக்கத்தில் புரிதல்கள் அர்த்தமிழப்பையும் நம் போதாமையை சுட்டினாலும், மீண்டும் மீண்டும் மறுவாசிப்பில் புதிய புரிதல்களை உணர்த்தும்.

இந்த நாவல் ஒரு புதிர். நான் இலக்கியத்திற்கு வந்த புதிதில் பொலான்யோ பெயர் நிறைய அடிபட்டது. அப்பொழுது அவரின் மூன்று புத்தகங்களை வாசித்து முடித்தேன்: The Spirit of Science Fiction, A Little Lumpen Novelita மற்றும் ஆன்ட்வெர்ப். முதல் இரண்டும் ஏதோ கதை மாதிரி இருந்தது. புரியக் கூட செய்தது. முன்றாவது, படிக்க எளிதாக இருந்தாலும், படித்து முடித்தாலும், உள்ளூர் சாராயத்தையும் சீமை விஸ்கியையும் மொந்தைக் கள்ளையும் உடனடியாக குடித்தால் ஏற்படும் அவஸ்தையை உண்டாக்கி சிரமம் கொடுத்தது. அப்போதைக்கு, அந்த ஆன்ட்வெர்ப் ஆக்கத்தை ஒத்தி வைத்தேன்.

இப்பொழுது மீண்டும் பொலான்யோவிற்கு திரும்பும் காலம். 2666 குறித்து எழுதுவதற்கு பெரிய அவகாசம் தேவை. Between Parentheses: Essays, Articles and Speeches, 1998-2003 என்னும் கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து எழுதுவது என்பது பொலான்யோ என்னும் கவிஞருக்கு இழைக்கப்படும் அவமானம். ஆம்யூலெட் குறித்து கிரிதரன் எழுதிவிட்டார். அப்பொழுது, ஆன்ட்வெர்ப் நினைவிற்கு வந்தது. சிறிய புத்தகம். 56 அத்தியாயங்கள் என்றாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஓரு பக்கமோ இரண்டு பக்கமோ மட்டுமே. கவிதைத் தொகுப்போ என சந்தேகப்பட வைக்கும் வடிவமைப்பு. ஏற்கனவே, ஒரு முறை வாசித்த தைரியம். எடுத்துவிட்டேன்.

எழுத்தாளனின் முதல் நாவல் வாசிக்கப்பட வேண்டியது. எஸ் ராமகிருஷ்ணனின் உறுபசி ஆகட்டும்; ஜெயமோகனின் ரப்பர் ஆகட்டும்; அவரவரின் துவக்க கால படைப்பூக்கத்தையும் பரிணாம மாற்றத்தையும் விளக்க உதவும். அப்படியே பொலான்யோவின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட இந்த நாவலை மீண்டும் பொறுமையாக வாசிக்க மருத்துவரைப் போல் ஆழமாக சோதிக்க எடுத்துக் கொண்டேன்.

புதிர்

இந்த முறை கடைசிப் பக்கத்தில் துவங்கி முன்பின்னாக வாசிக்க ஆரம்பித்தேன்.

பிற்குறிப்பு: தொலைந்து போனதிலிருந்து, மீட்டெடுக்க முடியாதபடி தொலைந்து போனதிலிருந்து, என்னுடைய பராக்கிரமத்தின் இறுதி இழையில் இருக்கும் தருணத்தில், கூந்தற்கற்றையைப் பிடித்து என்னைத் தூக்கி உயர்த்தவல்ல வரிகளை, அன்றாடம் எழுத வகை செய்யும் கிடைக்குந்தகைமையை மட்டும் மீட்க விழைகிறேன். (குறிப்பிடத்தக்கது, என்கிறார் அயல்நாட்டார்.) மனிதத்திற்கும் தெய்வீகத்திற்கும் வாழ்த்துப்பாக்கள். என் எழுத்துக்கள் என்பவை, நார்டிக் பாலத்தில் மேலிருந்த டேனியல் பிகா, தனக்கு மன உரம் தரும் கவசம் பூண லெப்பர்டியின் கவிதைவரிகளை முழங்கியது போல் இருக்கட்டும் ”

இந்த அத்தியாயத்தில் சொல்லப்படும் எண்ணங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். ஆண்டனின் கில்பர்ட் ஸெர்டிலாஞ்சஸ் (Antonin-Gilbert Sertillanges) எழுதிய நூலான அறிவுசார் வாழ்க்கை (The Intellectual Life)யில் இவ்வாறு சொல்கிறார்:

“மறந்ததைத் தவிர புதிதாக எதுவும் இல்லை” (“There is nothing new but what is forgotten.”)

ஸெர்டிலாஞ்சஸ் என்னும் பெயரை இங்கேக் கொணர என்ன காரணம்? அவர் 2666ல் வருகிறார். கீழேக் காணும் நறுக்கைப் பாருங்கள்.

இந்த அறுகோண கட்டத்தில் வரும் நீட்சேவை நாம் அறிந்திருப்போம். சிலர் வாசித்துக் கூட இருப்போம். ஆனால், மற்றவர்களை ஆழமாகப் புரிந்து கொண்டு நினைவில் தேக்கி இருக்கிறோமா? இன்றைக்கு சுய முன்னேற்ற நூல்கள் ஆயிரக்கணக்கில் வெளியாகின்றன. அவற்றுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய நூல் “அறிவுசார் வாழ்க்கை”. ஸெர்டிலாஞ்சஸ் என்ன சொன்னார் என்பதை ட்விட்டர்தனமாக சுருக்கினால், “வேளாவேலைக்கு உடற்பயிற்சி செய்; வெளியே சென்று தூய காற்றை சுவாசி; மற்ற உயிரினங்களோடும் மனிதர்களோடும் இயற்கையோடும் ஒன்றுகூடி தோழமை கொண்டாடு. தனிமையில் நேரம் செலவழித்து சுய பரிசோதனையில் அமைதியாக யோசி.” இதெல்லாம் இன்றைய சமூக ஊடகக் கொந்தளிப்புகளிலும் இராப்பகலாக வேலையே கதி என்றிருக்கும் சுழலிலும் அர்த்தமற்ற தொலைக்காட்சி, கைபேசி நேரங்கழிப்புகளிலும் அமுங்கி மறக்கப்படுகிறது. இதைத்தான், “தொலைந்து போனதிலிருந்து, மீட்டெடுக்க முடியாதபடி தொலைந்து போனதிலிருந்து, என்னுடைய பராக்கிரமத்தின் இறுதி இழையில் இருக்கும் தருணத்தில், கூந்தற்கற்றையைப் பிடித்து என்னைத் தூக்கி உயர்த்தவல்ல வரிகளை, அன்றாடம் எழுத வகை செய்யும் கிடைக்குந்தகைமையை மட்டும் மீட்க விழைகிறேன்.” என்கிறாரா பொலான்யோ?

கடைசி அத்தியாயத்தின் அடுத்த வரிக்குச் செல்லலாம்.

கியகொமோ லெபர்டி (Giacomo Leopardi) கூனன். அவனுடைய வளைந்த முதுகைத் தொட்டால் அதிர்ஷ்டம் பிறக்கும் என்னும் நம்பிக்கையை வளர்த்தவன். சோகமான கவிதைகளையும் தத்துவப் பிதற்றல்களையும் எழுதியவன். அவன் நாட்குறிப்பான “La Pava Roadside Bar of Castelldefels”இன் அத்தியாயம் 48-இல், இது காணக் கிடைக்கிறது:

“அந்த இத்தாலியப் பெண், மிலன் நகரத்திற்கு திரும்புவது நோயுற வைத்தாலும் கூட, தன் வேலைக்குப் போவதாகச் சொன்னாள். அவள் பவீசி என்னும் பாவலனை மேற்கோளாகச் சென்னாளா அல்லது நிஜமாகவே திரும்பப் போக மனமில்லாதவளா என்பதை நான் அறியேன்.”

சேசரி பவீசி (Cesare Pavese) எனபவன் போர்க்காலத்தில் சிக்குண்ட சோகமே உருவான இத்தாலியக் கவிஞன். இவ்வளவு முன்கதை எதற்கு? பவீசி என்னும் இந்த துக்கமும் விசனமும் சொட்ட சொட்ட பாட்டெழுதுபவன் தான் நூறாண்டு காலம் கழித்து எல்லோராலும் மறந்தழிக்கப்பட்ட லெபர்டியை உயிர்த்தெழுப்புகிறான்.

பவீசி என்ன எழுதியிருக்கிறான், எதைப் பற்றியெல்லாம் கவியாக்கி வைத்திருக்கிறான்? காதலைக் குறித்து, பயணங்களைக் குறித்து, வீடு திரும்புதல் குறித்து. இவையெல்லாம் பொலான்யோவின் கதைக்களம். பொலான்யோவின் ஆன்ட்வெர்ப் நாவலும், பவீசி எழுதிய பாணியை பின்பற்றுகிறது. இணைப்பு சொற்களற்ற வாசகங்களைக் கொண்டு அமைக்கும் அத்தியாயக் கட்டமைப்பை parataxis என்கிறார்கள். வந்தேன், பார்த்தேன்; வென்றேன் என்பது இணைப்புச் சொற்களற்ற வாசகம். தொடர்பு இருக்கும்; இல்லாதது போலவும் இருக்கும். இதே போல் 56 அத்தியாயங்கள்.

நாவலின் கடைசி அத்தியாத்தில் இருந்து அப்படியே முதல் பக்கத்தில் இருக்கும் மேற்கோளுக்குத் தாவிவிடுவோம். அதற்கு பாஸ்கல் (Pascal) சொந்தக்காரர்:

என் வாழ்க்கையின் சுருக்கமான காலத்தை நான் கருத்தில் கொள்ளும்போது, அதற்கு முன்னும் பின்னும் வரும் முடிவின்மையில் உறிஞ்சப்படுகிறது — நான் ஆக்கிரமித்துள்ள சிறிய இடத்தையும் எனக்கு ஒன்றும் தெரியாத, என்னைப் பற்றி எதுவும் தெரியாத இடைவெளிகளின் எல்லையற்ற அளவிற்கு நான் விழுங்கப்படுவதை நான் காண்கிறேன்; அதனில் அஞ்சுகிறேன்; அங்கே இருப்பதை விட இங்கே என்னைக் கண்டு வியப்படைகிறேன்: அதை விட அப்போதைக்கு இப்பொழுது நான் அங்கு இருப்பதை விட இங்கே இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. என்னை இங்கே வைத்தது யார்? யாருடைய கட்டளையாலும் செயலாலும் இந்த இடமும் நேரமும் எனக்கு ஒதுக்கப்பட்டன? (When I consider the brief span of my life absorbed into the eternity which comes before and after—memoria hospitis unius diei praetereuntis—the small space I occupy and which I see swallowed up in the infinite immensity of spaces of which I know nothing and which know nothing of me, I take fright and am amazed to see myself here rather than there: there is no reason for me to be here rather than there, now rather than then. Who put me here? By whose command and act were this place and time allotted to me?)

பிகா எப்படி லெபர்டியை உச்சாடனம் செய்கின்றானா அவ்வாறு நாம் ஆன்ட்வெர்ப்பை உச்சரிக்க வேண்டும் என்கிறார் பொலான்யோ (நார்டிக் பாலத்தில் மேலிருந்த டேனியல் பிகா, தனக்கு மன உரம் தரும் கவசம் பூண லெப்பர்டியின் கவிதைவரிகளை முழங்கியது போல் இருக்கட்டும்). பவீசி எவ்வாறு லெப்பர்டியைப் படித்தானோ அப்படி வாசிக்க வேண்டும். “எல்லா இடங்களிலும் மையமாக இருக்கும் எல்லையற்ற கோளத்திற்கு சுற்றளவு எங்கும் இல்லை” என்று பாஸ்கல் எண்ணுவது போல் அணுக வேண்டும். பவீசி என்பது ஆன்ட்வெர்ப்பினை அணுக ஒரு மையம்; பிகா என்பது ஆன்ட்வெர்ப்பினை அணுக இன்னொரு மையம்; ஸ்பெயின் நாட்டின் அனாதரவான காட்டுப் பகுதிகளில் இருக்கும் பெயரற்ற கூனனை விவரிப்பது ஆகட்டும்; அவனை கொலைக் குற்றவாளியாக சந்தேகிப்பது ஆகட்டும்; சில சமயம் இந்த இரண்டு கோடுகள் கொண்டு பித்தகோரியன் தேற்றம் கொண்டு முக்கோணத்தை உணரலாம்; சில சமயம் பாஸ்கல் சொல்வது போல் எல்லையற்ற கோளத்தைக் கண்டு கொள்ளலாம்.

ஆன்ட்வெர்ப் என்னை இவ்வாறு சுழற்றியடிக்கிறது. இந்த மரம் விட்டு மரம் தாவும் குரங்குப் பயணம் எனக்கு உவப்பானது. இணையத்தில் இலக்கற்று மேய்ந்து நேரங்கழிப்பது பொழுதுபோக்கு. ஆன்ட்வெர்ப் புதிரை விடுவிக்க ஆராய்வது துப்புதுலக்கி முடிச்சினை அவிழ்க்கும் அலகில்லா விளையாட்டு.

குத்தெதிர் கோணங்கள்

இது புத்தகம் வெளியான போது வந்த அறிமுக விமர்சனம்:

“பொலான்யோவின் எல்லாவிதமான கிறுக்கல்களும் அச்சாகிறது. எனவே, ஜிகினா தோரணம் போன்ற இந்த 56 ஒட்டுகளை, ஒன்றாகக் கோர்த்து “வெளிறிய நீலம்” என்னும் தலைப்பில் பிரதியாக்கி இருக்கிறார்கள். 1980களின் பார்சிலோனாவில் வசித்த பதற்றமான கதைசொல்லியான ரொபெர்டொ பொலான்யோ பகிர்வதாக இது அமைந்திருக்கிறது. கதைசொல்லி, மாயைக்கும் உண்மைக்கும் இடையே சிக்குண்டிருப்பதையும், வெளியாளாக அங்கொன்று இங்கொன்றாய் கண்டதையும் நோக்கின்றி பகிர்கிறார். தகரக் குவளையில் இருந்து பதப்படுத்திய மீன்களை காட்டின் நடுவே தின்னும் கூனன் வருகிறான். நடுவே துப்பறிவாளர்களுக்கான களம் அமைக்கப்பட்டு, காவலாளிகள் எவரையோத் தேடுகிறார்கள் (கூனனாக இருக்கலாம்). இந்த வழக்கிற்கு சாட்சியாக சிவப்பு நிற முடி கொண்ட, போதைப் பழக்கத்திற்கு அடிமையான, பெயரற்ற யுவதி உதயமாகிறாள். அவளை போலீசோ கதைசொல்லியோ குதவழி புணர்கிறான். இந்த நூலில் மரபான கதை கிண்டலடிக்கப்படுகிறது — “கதைக்கரு பற்றிய விதிகள் பிற நாவல்களின் நகல்களாக இருக்கும் நாவல்களுக்கு மட்டுமே பொருந்தும்.” என்கிறார் கதைசொல்லி. உணர்வேயற்ற பதிவுகளும், அரைப் பேச்சைப் பதிவு செய்தது போன்ற உரையாடல்களும் பிழையான பார்வைகளும் தவறான உணர்வுகளும் கொண்டு நாவல் வடிக்கப் பட்டிருக்கிறது. இதை மொத்தமாகப் பார்த்தால் சித்தபிரமை பிடித்து, பித்துகுளியாக பிதற்றியதை எழுதி, சங்கதிக்கு அலையும் எழுத்தாளனின் தொகுப்பு எனலாம்.” (மூலம்: Fiction Book Review: Antwerp by Roberto Bolano, Author, Natasha Wimmer, Translator , trans. from the Spanish by Natasha Wimmer. New Directions $15.95 (78p) ISBN 978-0-8112-1717-0)

பொலான்யோவின் கருத்து இதற்கு நேர் மாறானது. ப்ளேபாய் மெக்சிகோ பதிப்பில் ஜூலை 2003 இதழில் மோனிகா மரிஸ்டெயின் ”கடைசி நேர்காணல்” என்னும் தலைப்பில் நீண்ட உரையாடலை நிகழ்த்தி பதிந்திருக்கிறார். அதில் சம்பந்தப்பட்ட பகுதியைப் பார்ப்போம்: (Bolaño: A BIOGRAPHY IN CONVERSATIONS by Mónica Maristain)

கேள்வி: “உங்களின் ஆக்கங்களை விமர்சகர்களும் வாசகர்களும் பார்ப்பது போல் நீங்கள் பார்க்கிறீர்களா? குறிப்பாக சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலைப் பற்றித்தான் நான் கேட்டாலும், மற்ற எல்லா நாவல்களையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

ரொபெர்டொ பொலான்யோ பதில்: “நான் எழுதிய புனைவுகளிலேயே என்னை சங்கடப்படுத்தாத ஆக்கம் எதுவென்றால் “அம்பரெஸ்” மட்டும்தான். ஒருவேளை அது இன்னும் கூட புத்திசாலிகளால் கூட புரிந்து கொள்ள முடியாதபடி இருப்பதால் இருக்கலாம். அதற்கு வந்த கடுமையான விமர்சனங்கள்தான் அந்த நாவலுக்கான பரிசு பட்டயம். போரில் சண்டை போடும் வீரனுக்கு மார்பில் ஏற்படும் தழும்புகள் அவனுடைய வீரத்திற்கு இலட்சணம். சும்மா நெருப்பில் குளிர் காயும்போது கங்கு பறந்து வந்து விரல்நுனியைச் சுட்டு பதம் பார்த்து ஏற்படும் காயங்கள் போல் அல்லாமல் போர்வீரனின் அந்த அவலட்சணங்கள் போன்றவை – குப்பை என்பவர்களின் கடுமையான மதிப்பாய்வுரைகள். என்னுடைய மற்ற “ஆக்கங்கள்” எல்லாம் மோசம் இல்லை. அவை கேளிக்கைக்குரிய நாவல்கள். வாசிப்பிற்கான சுகத்தை விட அவை மேலானதா என்பதை காலம்தான் சொல்லவேண்டும். இப்போதைக்கு அவற்றிலிருந்து நிறைய பணம் வருகிறது. எல்லா மொழிகளிலும் வெளியாகிறது. அதனால் என்னை பெருந்தன்மையானவனாக ஆக்குகிறது. அன்புள்ள நண்பர்களைப் பெற்றுத் தருகிறது. இலக்கியத்தினால் சௌகரியமாக வாழவும், வாழ்வைக் கொண்டாடவும் வைக்கிறது. எனவே, அந்த நாவல்களைக் குறித்து புலம்புவது நன்றிகெட்டதனமாகவும் ஆதாரமற்றதாகவும் இருக்கும். உண்மையைச் சொன்னால் என்னுடைய புத்தகங்களுக்கு, வெகுக் குறைவான முக்கியத்துவத்தையே நான் தருகிறேன். பிறரின் புத்தகங்களில்தான் என்னுடைய நாட்டம் எல்லாம்.”

சிலி நாட்டு பத்திரிகையான “எல் மெர்கூரியோ”வில் வெளிவந்த ஃபெலிப்பே ஓஸாண்டோன் (Felipe Ossandón) eன்பவருக்கு அளித்த இன்னொரு பேட்டியில்

“எனக்கு அம்பரெஸ் ரொம்பவேப் பிடிக்கும், ஏனென்றால் அந்த நாவலை நான் எழுதியபோது நான் வேறொரு நபராக இருந்தேன். இன்றைய நாளை விட தைரியமும் இளைய வயதிற்கேயுரிய நெஞ்சுரமும் இருந்தது. இலக்கியத்தின் பயிற்சி இன்றையதை விட மிகவும் தீவிரமானது, ஏனென்றால் இப்போது நான் சில வரம்புகளுக்குள் முயற்சிக்கிறேன். எல்லோர்க்கும் புரியும்படி உருவாக்குகிறேன். அந்தக் காலத்தில் எவனுக்குப் புரிந்தால் என்ன… அல்லது புரியாவிட்டால் தான் என்ன என்று ஒரு துளிக் கூட யோசிக்காமல் எழுதுவேன்.”

விலகிச் செல்லும் மக்கள் (People Walking Away) அல்லது ஆன்ட்வெர்ப் (அம்பரேஸ்) எதைப் பற்றியது?

திரைப்படத்தில் கதையை வேகமாக நகர்த்தவோ அல்லது ஒரு கருத்தை வெளிக்கொணரவோ வசனங்கள் மிகக் குறைவாக (அல்லது அறவே இல்லாமல்) தொடராக வரும் காட்சிகளின் தொகுப்பைப் பார்த்திருப்பீர்கள். தொகுப்பில் வரும் காட்சிகள் அசையா புகைப்படங்களாகவோ அல்லது சில நொடிகள் நீளம் கொண்டவையாகவோ இருக்கும். அந்த சினிமாக் காட்சியில் அடுத்தடுத்து வைக்கும் பக்க அணிமை நிலையை அண்ட்வெர்ப் பின்பற்றுகிறது. சில காட்சிகள் கனவுலகில் இருந்து வந்தவை போல் இருக்கும்; சில காட்சிகள் நிஜத்தில் நடந்ததைச் சொல்லும்; சில காட்சிகள் படக்காட்சியின் பின்னணிக் குறிப்பு போல் கிறுக்கலாக இருக்கும். கலைடோஸ்கோப்புக் கருவியில் பல்வண்ணக் காட்சிகளும் பன்னிற உருவங்களும் சடாரென்று பளீரிட்டு மறையுமே… துணுக்குகளாக இருக்கும்; நறுக்குகளாக மின்னி மறையும்; அது போல் உருவாக்கப்பட்ட, வெகு நெருக்கமான ஒன்றொடு ஒன்றிணைந்த அவரின் மூன்று ஆக்கங்கள்

 1. விலகிச் செல்லும் மக்கள் (People Walking Away)
 2. ஆன்ட்வெர்ப் (அம்பரேஸ்)
 3. ஜெரோனாவின் இலையுதிர்காலத்தில் இருந்து உரைநடை (Prose from Autumn in Gerona)

கவிதை நூல்

இதுவரை எதுவும் அச்சில் வெளியாகாத ஒரு எழுத்தாளர் எப்படி உருவாகிறார்? புதிர் போல் மூளையில் இருக்கும் ஆக்கத்தை, அப்படியே நூலாக்கினால் எப்படி இருக்கும்? வெறும் ஓரிரு வார்த்தைகளை குழறிவிட்டு, “நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?” என்று கேட்போம். அது போல் சட்டென்று குறிப்பால் உணர முடிகிறதா என்று சவால் விடும் ஆக்கம் அம்பரேஸ். இப்பொழுது இளிப்பான்களை உபயோகிக்கிறோம். முகவடிவைக் குறிக்கும் குறுஞ்செய்திகளில் முதலில் பயன்படுத்தப்பட்டு, பிறகு அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் தகுதரமான கருத்தெழுத்துகளின் படவுருக்களை எல்லாவிடங்களிலும் உபயோகிக்கிறோம். அந்த மாதிரி சுருக்கெழுத்து படைப்பை 1980களில் உருவாக்குகிறது அம்பரேஸ்.

1980இலேயே எழுதிவிட்டாலும் இந்த மாதிரி வினோத படைப்பை எந்தப் பதிப்பகமும் சீண்டாது என்பதை அறிந்திருந்தேன் என்கிறார் பொலான்யோ. எனவே, இந்த “விலகிச் செல்லும் மக்கள்” படைப்பை நூலக்க, வெளியில் அச்சகத்தாரிடம் காண்பிக்கவேயில்லை. குறுக்கெழுத்துப் புதிரின் தலைப்பைப் பார்ப்போம்; அதன் பின் மேலிருந்து கீழ் ஆங்காங்கே என்ன துப்புகள் புலப்படுகின்றன என்று மேய்வோம். இடமிருந்து வலம் கொடுக்கப்பட்டிருக்கும் தடயங்களையும் துலக்குவோம். சொற்களைக் கலைப்போம்; வார்த்தைகளுக்கு நடுவே புதிய அர்த்தங்களைத் தேடுவோம். அப்படி அணுகவேண்டிய நாவல் அம்பரேஸ்.

இந்தப் பகுதியின் தலைப்பிற்கு வருவோம்.

அம்பரேஸ் என்பது பெல்ஜியத்தில் உள்ள அன்ட்வெர்ப் நகரத்தை குறிக்கும்; அதனால் சோஃபி பொடல்ஸ்கி (Sophie Podolski) உடன் தொடர்பு கொண்டு உள்ளே செல்லலாம். அது மட்டுமல்ல; மேற்கண்ட 49வது அத்தியாயத்தின் தலைப்பு அண்ட்வெர்ப். மெக்சிகோ நகரத்தின் “இளஞ்சிவப்பு மண்டலம்” (Zona Rosa) பகுதியில் உள்ள ஒரு தெருவின் பெயர் ஆன்ட்வெர்ப். 1980கள் வரை இந்த மெக்சிகோ நகர ஆன்ட்வெர்ப் தெரு களைகட்டி இருந்தது; அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பிழந்தது.

அம்பரேஸ் நாவாலை எழுதும்போது இரவு நேர காவல்காரராக பொலான்யோ வேலை பார்த்தார். பார்சிலோனா நகரத்தில் இருந்து ரயிலைப் பிடித்தால் அரை மணி நேரத்திற்குள் வந்தடையக் கூடிய கடற்கரையை ஒட்டிய புறநகர்ப் பகுதியில் ராத்திரி முழுக்க ரோந்து பார்க்கும் பணி. ஸ்பியென் நாட்டு குடிமகனாக ஆகாத நிலையில் குடியுரிமை ஆதாரமற்று வாழ்ந்த நாள்களில் உருவான அம்பரேஸ் நாவலுக்கான முன்னுரையை “முழுமையான அராஜகம்” (Total Anarchy) எனத் தலைப்பிட்டிருக்கிறார் பொலான்யோ. தனக்காகவும் தன்னுடைய பேய்களுக்காகவும் எழுதினேன் என்கிறார்.

என் நோய், அப்போது, ​​பெருமை, ஆத்திரம் மற்றும் வன்முறை. அந்த விஷயங்கள் (ஆத்திரம், வன்முறை) சோர்வடையச் செய்தன, நான் என் நாட்களை பயனற்ற சோர்வில் கழித்தேன். நான் இரவில் வேலை செய்தேன். பகலில் நான் எழுதவும் படிக்கவும் செய்தேன். நான் ஒருபோதும் தூங்கவில்லை. விழித்திருக்க, நான் காபி குடித்து சிகரெட் புகைத்தேன். . . . உத்தியோகபூர்வ இலக்கியம் என்று அழைக்கப்படுபவர்களுக்கு நான் உணர்ந்த அவமதிப்பு மிகச் சிறந்தது, அதைவிட விளிம்பு இலக்கியத்திற்கான அவமதிப்பு சற்று பெரியது. ஆனால் நான் இலக்கியத்தை நம்பினேன்: அல்லது மாறாக, எழுந்தருளுதலையோ சந்தர்ப்பவாதத்தையோ முதஸ்துதிகளின் கிசுகிசு வில்லுப்பாட்டையோ நான் நம்பவில்லை. நான் வீண் பாவனை சேஷ்டைகளை நம்பினேன், விதியை நம்பினேன். (My sickness, back then, was pride, rage, and violence. Those things (rage, violence) are exhausting and I spent my days uselessly tired. I worked at night. During the day I wrote and read. I never slept. To keep awake, I drank coffee and smoked. . . . The scorn I felt for so-called official literature was great, though only a little greater than my scorn for marginal literature. But I believed in literature: or rather, I didn’t believe in arrivisme or opportunism or the whispering of sycophants. I did believe in vain gestures, I did believe in fate.)

முன்னுரையில் இருந்து

தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்போம். இந்த நாவலில் பொலான்யோவின் முன்னுரை நாவறண்டவனுக்கு ஒரு சொட்டு தண்ணீரை கொடுத்து தாகசாந்தி செய்து கொள்ளச் சொல்கிறது. தமிழ் நாவல்களில் முன்னுரையோ அணிந்துரையோ அறிமுக விமர்சனவுரையோ வாசிக்காமல் நாவலுக்குள் செல்வது சாலச் சிறந்தது. உதாரணத்திற்கு “காடு” நாவலை வாசித்து விடுவது அருமையான அனுபவம். அதன் முன்னுரையை நீங்கள் வாசிக்க நேர்ந்தால், நாவலைத் தவறவிட்டு விடுவீர்கள். அதை விடுங்கள். பிசாசுகளுக்கான நாவலை ஏன் எழுதியிருக்கிறார்? அவர்கள் நேர கெடுபிடிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்கிறார். ஆவிகளிடம்தான் நிறைய நேரம் இருக்கிறது என்பதால் இந்த நூல் ஆவிகளுக்கானது என்கிறார்.

நாவலில் “நான்” வருகிறது; அதுவே “நீ” என்றாகிறது; பிறகு “அவன்” ஆகவும் உருமாறுகிறது. அவனுக்கு சில சமயம் “பொலான்யோ” என நாமகரணம் கூட கிடைக்கிறது. வயது கூட 27 என ஒத்துப் போகிறது.

சினிமா செட் பார்த்திருப்பீர்கள். மேடை நாடகம் போல் ஒவ்வொரு காட்சிக்கும் அரங்கு மாறுவது போல் ஒவ்வொரு பகுதிக்கும் பின்னணி பொருள்கள் மாறிக் கொண்டே போகின்றன. நான் என்பதும், நீ என்பதும், அவன் என்பதும் பொலான்யோ என்பதும் எல்லாம் ஒன்றுதான். இந்த செட் மேடையமைப்பு, காட்சிக்கேற்ப தோற்றம் கொடுப்பது போல் கையில் இருக்கும் புத்தகத்தை புரட்டிப் போட்டு பார்க்க வேண்டும். ஒரு காட்சி முடிந்தவுடன், அந்த அரங்கில் இருந்த வீடு காணாமல் போய், காவல் நிலையம் தோன்றியிருக்கும். அது போல், ஒரு அத்தியாயம் முடிந்தவுடன், சென்ற காட்சியின் பொருட்களை தூரக் கடாசிவிட்டு, புதிய அரங்கில் நுழைந்து கொள்ள, அம்பரேஸ் நூல் கோருகிறது.

இலக்கியப் படைப்பு என்பது செம்மையாக இருக்க வேண்டுமா? அந்த காதையில் வரும் கதாபாத்திரங்கள் முழுமையாக செதுக்கப் பட்டிருக்க வேண்டாமா? செவ்வியல் தன்மைக்கு அர்த்தம் பொதிந்து அதில் அறம் கொப்பளிக்க வேண்டாமா? “அவர் அஞ்சலட்டைகளை எழுதுகிறார், ஏனெனில் சுவாசம் அவர் எழுத விரும்பும் கவிதைகளை எழுதுவதைத் தடுக்கிறது”, என்கிறான் பொலான்யோ என்னும் கதாபாத்திரம். சுவாசிக்க மறந்தால்… தற்கொலை ஆகி விடுமே!

சோஃபி பொடல்ஸ்கி (Sophie Podolski) உடன் தொடர்பு கொண்டு உள்ளே செல்லலாம். இவர் 1953 முதல் 1974 வரை இருபத்தியோரு வயதே வாழ்ந்த பெல்ஜிய எழுத்தாளர். மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர். தற்கொலை செய்து கொண்ட பத்தாம் நாளில் இளம்வயதில் மரணமடைந்தவர். இவர் எழுதிய ஒரு நூல் அச்சேறியிருக்கிறது. இதே சோஃபி பெயர் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலிலும் தொலைதூர நட்சத்திரம் (Distant Star) நாவலிலும் தோன்றுகிறது. ரெஹ்மான் பாடல்களில் குறுந்தொகையும் ராஜா பாடல்களில் சௌந்தர்யலஹிரியும் வருவது போல், எங்கிருந்தோ இவரை ஏன் அண்ட்வெர்ப் நாவலின் ஏழாவது அத்தியாயத்தில், பொலான்யோ நுழைக்க வேண்டும்?

வரவிருக்கும் நரகம்… சோஃபி போடோல்ஸ்கி பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னைக் கொன்றாள்… அவள் இப்போது என்னைப் போலவே இருபத்தேழு வயதாக இருப்பாள். நான் தனியாக இருக்கிறேன், எல்லா இலக்கியக் கருமாந்திரங்களும் படிப்படியாக வழியிலேயே விழுகின்றன – கவிதை பத்திரிகைகள், வரையறுக்கப்பட்ட பதிப்புகள், இப்போது எனக்குப் பின்னால் முழு மந்தமான உப்பு சப்பில்லாத நகைச்சுவை … ஒரு நட்சத்திரத்தைப் போல எழுதிய ஒரு பெல்ஜிய பெண் … (“The hell to come … Sophie Podolski killed herself years ago … She would’ve been twenty-seven now, like me. I’ m alone, all the literary shit gradually falling by the wayside — poetry journals, limited editions, the whole dreary joke behind me now … A Belgian girl who wrote like a star …”)

சோஃபி பொடல்ஸ்கி மட்டுமல்ல. கூடவே லிஸா, கோலன் யர் (Colan Yar). இது பெயர்கள். பெயரற்ற “சிறுமி”, “பெண்”, “எழுத்தாள்ர், “குள்ளன்”, “கூனன்”, “காவல்காரன்”, “ஆங்கிலேயன்”, “தூக்குப்படுக்கை (ஸ்டிரச்சர்) தாங்குபவர்”, “துப்பறிவாளர்” என பலர் ஆறு சிசுக்களைக் கொலை செய்த காரியத்திற்கான சதித் திட்டத்தில் பங்கு வகிப்பது எங்ஙனம் என்று துப்பு துலக்க அழைக்கும் புதினம் அம்பரெஸ்.

செதுகறா மனத்தார் புறம் கூறினும்
கொதுகறாக் கண்ணி நோன்பிகள் கூறினும்
பொதுவின் நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
அதிபன் சேவடிக் கீழ் நாம் இருப்பதே

– அப்பர்

திருநாவுக்கரசரை காலாத்திற்கேற்ப, கட்டுரைக்கு வசதியாக இவ்வாறு பொருள் கொண்டுகொள்கிறேன்:

குற்றங்கள் நீங்காத மனதினை உடைய விமர்சகர்கள் புறம் கூறினும், கண்களில் உள்ள புளிச்சையினை சார்ந்து இருக்கும் கொசுக்களையும் அகற்றாமல் நோன்பு நோற்கும் பழக்கம் உடைய சான்றோர்கள் புறம் கூறினும், அத்தகைய சொற்களை நாம் பொருட்படுத்தாமல், நடன அரங்கின் நாயகனும் பார்சிலோனா நகரின் தலைவனும் ஆகிய பொலான்யோவின் பச்சையான எழுத்துக்களினுள் உள்ளே இருக்கும் வாய்ப்பினை அடியேன் பெற்றேன்.

கொசுவலைக்கும் கண்ணாடி ஜன்னலுக்கும் நடுவே பூச்சி பறப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த சுள்ளானால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்து இங்கே சற்றே பிட்டு வைத்திருக்கிறேன். அதனுடைய இரைக்காக வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் உலங்காக ஒரே ஒரு கட்டுரையில் அம்பரேஸ் நாவலை அடக்க முடியாது. ஆனால், அதற்கான குருதியைக் குடிக்க மனிதரை நாடி உள்ளே நுழைந்து, வெளியே பாயும் கொதுகு போல் நீங்களும் வாசித்து உங்களுக்கான தீனியை, புதிரை விடுவித்துக் கொள்ளுங்கள்.

பிற்குறிப்பு

1980ல் எழுதப்பட்ட நாவல். இறக்கப்போகிறோம் எனத் தெரிந்த பொலான்யோவின் கடைசிக் காலத்தில் பதிப்பகத்தாரிடம் கொடுக்கிறார். இருபத்திரண்டு ஆண்டுகள் ஆக தூங்கிய எழுத்து அவர் இறப்பிற்கு ஓராண்டுக்கு முன்பு அச்சாகிறது. மறுவாசிப்பிலும் எழுதியதை மீண்டும் எழுதுவதாலும் தன் முந்தைய படைப்புகளை புதிய முறையில் சிருஷ்டிக்க நினைத்தார் பொலான்யோ. ஆக்கபூர்வமான புரிதலின் அடிப்படையில் தனது படைப்புகளின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்புகளை வெளியிடுவதற்கு பொலான்யோ எடுத்த கலை முடிவின் உச்சகட்டம் அம்பரேஸ்.

தமிழகத்தில் புகழ்பெற்ற சொலவடை, “இப்ப என்ன சொல்ல வர்றேப்பா?”. அதாவது எதற்காக இந்த அறிமுகம் எழுதுகிறோம் என்பதும் அந்த நூலை வாசிக்க/வாசித்த பின் அறிமுகத்தையும் படிக்கிறோம் என்னும் வினாவும் எழுகிறது. இந்தக் கட்டுரை ஒரு குவிமையத்தில் இல்லை. குவி மையம் என்பது பங்கிம் சந்திரரின் கிருஷ்ண காந்தன் உயில் போன்ற நாவல்களுக்குக் கிடைக்கலாம். அண்ட்வெர்ப்பிற்கு அது பொருந்தாது. இந்த நாவலை ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் (Jorge Luis Borges) எழுதிய “Pierre Menard, Author of the Quixote“க்கு அஞ்சலியாக பொலான்யோ சம்ர்ப்பிக்கிறார். அது 20ஆம் நூற்றாண்டில் ‘இப்படித்தான் இருக்கவேண்டும் சிறுகதை’ என்பதற்கு எக்குத்தப்பாக அமைந்த சிறுகதை.

இந்த நாவலைக் கொண்டு பொலான்யோவை வாசிக்க துவங்க வேண்டாம். மேலாண்மையிலும் தொழில்துறையிலும் சில புத்தகத் தொகுதிகள் இருக்கின்றன: “ஒவ்வொரு வல்லுநரும் அறிய வேண்டிய 97 விஷயங்கள்”, “பண்பட்ட வடிவமைப்பாளர் தெரிந்து கொள்ள வேண்டிய 54 ஆலோசனைகள்”. அந்த நூல்களை அப்படியே ஒரே அமர்வில் வாசித்தால் ஒரு மணி நேரத்தில் புரட்டி முடித்துவிடலாம். ஆனால், அந்த 97 துப்புகளையும், 54 பரிந்துரைகளையும் அப்படி கடகடவென வாசிக்கக் கூடாது. ஒரு வாரத்திற்கு ஒன்று; அல்லது அலுவலில் சிக்கலில் குழப்பத்தில் தத்தளிக்கும் தருணத்தில் ஒன்றிரண்டு என நாள்கணக்கில் அசை போடவேண்டும். மந்திர உச்சாடனம் போல் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். வாசித்ததை மேற்கொண்டு ஆராய்ந்து சிந்திக்க வேண்டும். இப்படி அணுக வேண்டிய நாவல் “அம்பரேஸ்”.

 • புத்தகம்: அண்ட்வெர்ப்
 • எழுதியவர்: ரொபர்டோ பொலான்யோ
 • மொழிபெயர்ப்பாளர்: நடாஷா விம்மர் (Natasha Wimmer)
 • கெட்டி அட்டை
 • 78 பக்கங்கள்
 • வெளியான தேதி: ஏப்ரல் 28 2010
 • வெளியீடு: நியு டைரக்‌ஷன்ஸ்
 • அசல் தலைப்பு: அம்பரேஸ்
 • ஐ.எஸ்.பி.என்.: 0811217175 (ஐ.எஸ்.பி.என்.13: 9780811217170)
 • மொழி: ஆங்கிலம்