Monthly Archives: பிப்ரவரி 2005

தமிழோவியம்.காம்

நையாண்டிதிட்டாந்தப்பேச்சு

ராமதாஸும் திருமாவளவனும் தமிழ்ப் படங்களுக்கு தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள். அவர்கள் போராட்டம் வெற்றி பெற்று விட்டால், தொடர்ந்து அறிக்கைப் போராட்டத்திற்கு உபயோகமாக சில எண்ணங்கள்.

* தமிழ்ப் படங்களில் நடிப்பவர்கள் சொந்தக் குரலிலேயே பேச வேண்டும். வேற்று மாநிலத்தில் இருந்து இறக்குமதியானாலும், வெளிநாட்டு குடிமகளாக இருந்தாலும், குரலுக்குப் பிண்ணனி கொடுப்பவர் கூடாது. தாற்காலிகமாக டப்பிங் பேசுபவர்களையே ஹீரோயினாக நடிக்கப் பரிந்துரைக்கும் போராட்டம்.

* தமிழ்ப் படங்களில் தமிழரின் சண்டை முறைகளே முன்னிறுத்த வேண்டும். சிலம்பம், களரி, இந்தியன் தாத்தா அடி போன்ற பழங்கால தமிழரின் போர்க்கலைகளே பயன்படுத்த வேண்டும். ஜூடோ, கங்·பூ, கராத்தே கூடவே கூடாது.

* ஆங்கிலப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்யப்பட்டு வெளிவந்தாலும், சன் டிவியில் சனி மதியம் காண்பிக்கப் படக் கூடாது. அவ்வாறு காண்பித்தாலும், அந்தப் படங்களின் முன்னோட்டங்களை நூற்றிமுப்பத்தெட்டு தடவை திரும்ப திரும்ப போட்டுக் காட்டி பிராணனைப் பிடுங்கக் கூடாது.

* தமிழ்ப் படங்களின் கனவுக் காட்சிகளுக்கு ஸ்விஸ், தெற்கு ஆப்பிரிக்கா எல்லாம் பறக்கக் கூடாது. தமிழ் நாட்டின் வளங்களையும் எழிலையும் காட்டுமாறு பாடல்கள் பதியவேண்டும்.

* தமிழ்ப் படங்களுக்கான கதைகளை செரண்டிப்பிட்டி, வாட் வுமன் வாண்ட் போன்ற ஆங்கிலப் படங்களை வைத்து உல்டா செய்யக் கூடாது. தமிழின் வழமையான இலக்கியங்களைத் தழுவியே எடுக்க வேண்டும்.

* டி ராஜேந்தர், திருநாவுக்கரசு போன்றவர்கள் பெயரை மாற்றிக் கொள்வது போல, இதுவரை வெளிவந்த ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பட பெயர்கள் அனைத்தும் திருத்தப் பட வேண்டும். ‘சென்னையிலிருந்து பாண்டிச்சேரி’, ‘நகரப் பேருந்து’ என்று அவர்களே கால்கோளிட வேண்டும்.

* படத்தின் ஆரம்பத்தில் வரும் நடிக நடிகையர் மற்றும் பங்குபெற்று உதவிய கலைஞர்களின் பெயர்கள் அனைத்தும் தமிழில் மட்டுமே காட்ட வேண்டும். மணிரத்னம் மாதிரி பெரிய இயக்குநர்கள் படமுடிவில் காட்டும் பட்டியல்களும் தமிழில் மட்டும் காண்பிக்க வேண்டும். ‘திஸ் இஸ் எ மூவி பை பாலச்சந்தர்’ போன்றவை கண்டிப்பாக மொழியாக்கம் பெற வேண்டும்.

* ஆங்கிலப் படங்களுக்கு வழங்கும் ஆஸ்கார், சூப்பர் குட் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் மாற்றப் பட வேண்டும். தயாரிப்பவர்கள் திருத்தப் பட வேண்டும்.

* மேற்கண்ட விதிமுறைகளில் இருந்து பிழற்பவர்களின் படங்கள், பெங்களூரில் வெளியிடப்பட்டதில் இருந்து, இரண்டு மாதம் கழித்தே தமிழ்நாட்டின் வெள்ளித்திரைகளில் காட்டப்படும். அதற்குள் இந்தப் படங்களின் விசிடி வெளியீடு போராட்டம் நடத்தப்பெறும்.

பாஸ்டன் பாலாஜி


நியு இங்கிலாந்து தமிழ் சங்கம்அமெரிக்க மேட்டர்ஸ் : பொங்கல் விழா

நியு இங்கிலாந்து தமிழ் சங்கத்தின் ‘பொங்கல் விழா’. ஐநூறு முதல் அறுநூறு பேர் வரை அமரக்கூடிய லிட்டில்டன் பள்ளியின் அரங்கு. பெப்ரவரி 19-ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சுமார் நூற்றைம்பது பேர் வந்திருப்பார்கள்.

உணவை உள்ளே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மூன்றரைக்கு நிகழ்ச்சி ஆரம்பம். வழக்கம் போல் நினைத்துச் சென்றதால் மூன்றே முக்காலுக்கு பாட ஆரம்பித்த ‘நீராடுங்கடலுடுத்த’-வை தவறவிட்டேன். முதலில் தலைவரின் தலைமையுரை. சென்ற வருட நிகழ்வுகளைச் சொன்னார். சங்கத்தின் சாதனைகளைப் பகிர்ந்து கொண்டார். ஸ்க்ரீனில் பெரிதாகக் கட்டப்பட்டிருந்த வெள்ளை பேனரில் கவனம் சிதறியது. New England Tamil Sangam என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள்.

அமர்ந்திருந்த அரங்கத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு 130 டாலர் வாடகை. கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் இட வாடகைக்கு மட்டுமே செலவு. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். பங்குபெறுவோர்களிடம் பண வசூல் கிடையாது. வாசலில் தமிழ் சங்கத்துக்காக ஒரு உண்டியலும், சுனாமி நிதிக்காக மற்றொரு உண்டியலும் வைத்திருந்தார்கள். சிறுவர்களுக்கான பழரசங்கள், பெரியவர்களுக்கான சோடாக்கள் விற்றார்கள். சமோசா, பஜ்ஜி, போண்டா, கைமுறுக்கு இருந்திருக்கலாம்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்மணி தூய தமிழில் பேசினார். வார்த்தைகளைத் தேடவில்லை. மைக் மக்கர் செய்தாலும் கணீர் குரல் நிவர்த்தி வழங்கியது. மைக் வேலைநிறுத்தம் செய்தபோதெல்லாம் கூட்டத்தில் பலர் ‘மைக்… மைக்…’ என்ரு குரல் கொடுத்தனர். கூட்டத்தில் ஒருவர் மட்டும் ‘ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை’ என்று சத்தமாக சிரித்துக் கொண்டே அறிவித்தார். மைக் வேறு, ஒலிபெருக்கியின் பயன் வேறு என்று அவரிடம் நான் விளக்க நினைத்தேன். இருட்டில் அடையாளம் காண இயலவில்லை.

கந்தன் புகழ் பாடும் பாட்டுக்கு ஒன்பது அல்லது பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியர் இருவர் நடமாடினார்கள். இடப்பக்க பெண்மணியிடம் நாட்டியத்துக்குத் தேவையான கம்பீரம். வலப்பக்க நடனமணியும் ஈடு கொடுத்தார்.

தொடர்ந்து பதின்மர் இருவரின் பாம்பு நடனம். தலைக்கு நாகத்தின் கிரீடம் மட்டும் இல்லை. சடை போட்ட நீண்ட கூந்தல் கூட இருந்தது. தலையைக் கால் தொடுவதற்கு ஐந்து இன்ச் இடைவெளி. இன்னொருவருக்கு ஒரு அடி இருக்கும். இருவருக்குமே நடனம் முடியுமட்டும் மாறாப் புன்னகை. இல்லையென்றால் சீறிய சீறல்களுக்குப் பலர் பயந்திருப்போம்.

சிஷ¤-பாரதி சிறுவர்களின் சேர்ந்திசை. பாரதிப் பாடல்களைப் பாப்பாக்கள் பாடினார்கள். ஓரத்தில் பச்சை சூரிதார் போட்ட சிறுமி மனதுக்குள்ளேயே முணுமுணுத்தாள். நாலு வயது குட்டிப் பாப்பா பாதி பாட்டில் மேடையை விட்டு அம்மாவிடம் ஓடிப்போனாள். இவற்றில் எல்லாம் கவனத்தை சிதறவிடாமல் கிட்டத்தட்ட இருபது பெண்களும் நாலைந்து பையன்களும் உணர்ச்சிகரமாக மூன்று பாடல்களைப் பாடினார்கள்.

தொடர்ந்து ஆறேழு வயதே மதிக்கத்தக்க சிறுமியின் அபார நடனம். பாடல் முடியும் தருவாயில் ஒலியில் தகராறு. இருந்தாலும் சமாளித்து வந்தனம் வழங்கிச் சென்றாள்.

அதே சிறுமியே இந்த ஊர் உச்சரிப்பில் ஔவையாகவும் கந்தனாக நாலைந்து வயது குட்டி ஒருத்தனும் சிறிய ஸ்கிட் ஒன்று நடத்தினார்கள்.

இடைவேளைக்குப் பின் அதே சிறுமி ‘அவ்வை ஷண்முகி’ தலைப்புப் பாடலுக்கு இன்னும் இருவருடன் ஆட்டம் கட்டியது.

இடைவேளைக்கு முன் ‘ஜன கன மண’ பாடப் போவதாக சொன்னார்கள். ஏ.ஆர். ரெஹ்மானின் புதியது அல்ல. தேசிய கீதம் பாடவும் இசைக்கவும் ஆரம்பித்து விட யோசித்துக் கொண்டே எழ வைத்தார்கள். ஆங்காங்கே இருக்கையின் மேல் தாவி குதித்தும் ஓடிப்பிடித்தும் விளையாடிய பார்வையாள சிறுவர்களும் அமைதி காத்திருப்பார்கள்.

‘அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்’ பாடலை காரியோகே (Karaoke) போல் பத்து பேர் பாடினார்கள். அர்த்தமுள்ள பாட்டு. தலைவர்கள் உண்டாக்கிய படம். இரண்டு வகையிலும் இளைஞர்களுக்கு சரியான தேர்வு.

இடைவேளை முடிந்தவுடன் வசூல் ராஜாவின் ‘சீனா தானா’. ஆறு பெண்கள் வீணை அபிநயம். பிரபு போன்ற ஆண்பிள்ளைகள் இல்லை. ஒலிநாடாவில் பாடல். ஆடலிலும் ரகஸியாவின் கெட்ட ஆட்டம். பார்வையாளர்கள் விசிலடித்து வரவேற்றார்கள்.

பார்வையாளர்களைப் பங்கு பெற வைக்க சினிமா வினாடி வினா இருந்தது. ‘மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்’ (Mission Accomplished) என்னும் புஷ்ஷின் வாசகம் தமிழக இயக்குநரிடன் ‘இண்டர்-மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்’ ஆகும் என்னும் கடி இருந்தது. தமிழில் நூறு படங்கள் இயக்கியவர் யார்? தொட்டால் பூ மலரும் என்று அந்தக் காலத்தில் ம.கோ.ரா. பாடினார். எந்தப் படத்தில்? நேரமின்மை காரணமாக நாலு கேள்வி கூட கேட்க முடியவில்லை. ஒரு மணி நேரத்துக்கு 130 டாலர் கட்டப்படுகிறது.

அடுத்து மிருதங்க இசை ஆர்பாட்டமில்லாமல் ஒலித்தது. சுனாமிக்காக எம்.ஐ.டி. மாணவிகள் கொடுத்த நடனமும் இசையும் உணர்வுகளையும் பர்ஸ¤களையும் தட்டியெழுப்பியிருக்கும். எம்.ஐ.டி.யை சேர்ந்த நால்வர், மூன்று பாடலுக்கு முத்திரை பதித்தார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சிகரம் வைத்தது போன்ற நடன அமைப்பு. கன்னடப் பாடல்களின் அர்த்தம் மட்டும் புரியவில்லை.

மண் சட்டி மாமியாருக்கு ஐந்து படி அரிசி வடித்துக் கொட்டிய அந்தக்கால கதை நாடகமாக்கப் பட்டிருந்தது. கலந்து கொண்ட எல்லோருக்கும் செர்டி·பிகேட்கள் (சான்றிதழ்) வழங்கப் பட்டது. ‘வாழிய செந்தமிழ்’ என்று பொருத்தமான பாடலுடன் குழந்தைகளாலேயே நிறைவு பெற்றது.

நடுவே நிகழ்ந்த பார்வையாளர் போட்டியை சொல்ல விட்டு விட்டேன். தமிழில் எண்கள் எழுத வேண்டும். ஒன்று முதல் பத்து வரை எழுதத் தெரியுமா? (கூகிள் பார்ப்பதற்கு முன் சிறு துப்பு: ஈ-கலப்பை கொண்டு எழுத முடியாது.)

தேவையில்லாத பிற் சேர்க்கை: மேற்படி போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

பாஸ்டன் பாலாஜி

(விரிவான விவரங்கள் : http://www.lokvani.com)

ஆனந்த விகடன்

மின்னணு இயந்திரத்தின் நம்பகத்தன்மை: ‘மின்னணு இயந்திரத்தின் மூலம் நடந்த வாக்குப் பதிவு நம்பிக்கைக்கு உரியதாக இல்லை. எனவே ஏற்கெனவே இருந்தபடி வாக்குச்சீட்டு முறையையே கடைப் பிடிக்க வேண்டும்’ — ஜெயலலிதா.

“விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் போட்டு விளைச்சலைப் பெருக்குகிறோம். ஆனால், அந்த ரசாயனக் கலவையால் உருவாகிற பொருட்கள் உடலுக்குக் கேடு என்று கண்டுபிடிக்கப்படுகிறது. அதனால் மீண்டும் இயற்கை எரு, தழைகளைப் பயன்படுத்துங்கள்’ என்று விவசாய அமைப்புகளே குரல் கொடுக்கின்றன. — க.சுப்பு (அ.தி.மு.க)

“சில ஆண்டுகளுக்கு முன் இதே குற்றச்சாட்டு கிளம்பியபோது, தேர்தல் கமிஷன் ‘தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு இயந்திரத்தையும் எடுத்து பரிசோதித்து, தவறு நடந்திருப்பதாக நிரூபித்துக் காட்டிவிட்டு குற்றம் சொல்லுங்கள்’ என்று பகிரங்கமாக அறிவிப்பு செய்தது. ஆனால், அதற்குப் பதிலே இல்லை.” — எழுத்தாளர் சுஜாதா

‘இனி நான் கோட்டைக்கு காரில் போகமாட்டேன். ஏனென்றால் நிறைய விபத்து ஏற்படுகிறது. அதனால் இனிமேல் பல்லக்கில்தான் பயணிப்பேன்’ எனச் சொல்வது போல் இருக்கிறது மீண்டும் வாக்குச்சீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது.” — ஞாநி


தயவு செய்து தமிழ்ல சிரிங்க — இரா.நரசிம்மன்: “ரஜினிகாந்த், விஜயகாந்த், தனுஷ், விஜய், அஜீத், கமல்ஹாசன், த்ரிஷா, ஜோதிகானு நிறைய நடிகர்களும் நடிகைகளும் இப்போ ஆடிப்போய் இருக்காங்களாம்…!”

“ஏன்?”

“சினிமா தலைப்பு மட்டும் இல்லாம நடிகர்களும் நடிகைகளும் கூட தங்கள் பெயரை வடமொழிக் கலப்பு இல்லாம தூய தமிழ்ல வெச்சுக்கணும்னு அரசியல் தலைவர்கள் போராடப் போறாங்களாம்!”


வடி வடிவேலு… வெடிவேலு : ஓரஞ்சாரமா ஒதுங்க வந்தவய்ங்களெல் லாம் ‘ச்சு…ச்சு… நல்லாத்தேன் பாடறானப்பா’னு ஏத்தி விட்டுப் போயிருவாங்க. மனுசப் பயலுக்கு அதுல ஒரு ஆனந்தம். ‘நீயெல்லாம் மொறயா பாட்டு கீட்டு கத்துக்கிட்டா எங்கியோ போயிருவே’னு ஆளாளுக்கு உசுப்பேத்திவிட, நானும் நம்பி, மேலவீதியில ஒரு சங்கீதக்காரரு வீட்டுக்கு ஓசித் தாம்பாளம் வாங்கி மல்லிப்பூ, மாம்பழம், வெத்தல, பாக்குனு வெச்சி பதினோரு ரூவா காணிக்கை யோட போயிக் கதவத் தட்டிப்புட்டேன்.

பாட்டுக்கு மட்டும் ஒரு தனிக் கொணம் உண்டுண்ணே. மனசுக்குப் பிடிச்ச எந்தப் பாட்டைக் கேட்டாலும் அதை முதல்ல எப்போ கேட்டோமோ அந்தக் காலத்துக்கே கூட்டிப் போயி கொஞ்ச நேரம் கொஞ்சிட்டுத்தேன் விடும். அதுனாலயே நான் வீட்ல, கார்லனு எங்கியும் என் மனசுக்குப் புடிச்ச பழைய பாட்டுக்களாக் கேட்டுக் கிருப்பேன்.


ஹாய் மதன்: ‘இரு பறவைகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டிப் போடுங்கள். அவற்றால் பறக்க முடியாது. இத்தனைக்கும் இப்போது நான்கு இறக்கைகள்!’ என்கிறார் ஜலாலுதீன் ரூமி. சூஃபி தத்துவம் பற்றிப் பல புத்தகங்கள் (ஆங்கில மொழி பெயர்ப்புடன்) கிடைக்கின்றன. Idries Shah எழுதிய ‘The Way of the Sufi’யிலிருந்து ஆரம்பியுங்கள்.


ஜக்கி வாசுதேவ்: நீங்கள் எதிர்பார்த்தபடி மற்றவர்கள் நடந்துகொள்ளாதபோது, கோபம் வருகிறது. ஆத்திரம் வருகிறது. எங்கே மனிதர்கள் எதிர்த்துக் கேள்வி கேட்காமல், உங்களுக்குப் பணிந்து உங்கள் செய்கைகளைச் சகித்து ஏற்றுக்கொள்கிறார் களோ, அங்கே அமைதியாக உணர்கிறீர்கள். அதாவது, நீங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்றால், உங்கள் அகங்காரத்துக்குத் தீனி போட வேண்டி இருக்கிறது.

வாழ்த்துக்கள் – பதிவுகள்

Pathivukal:

நடுவர்கள்: அ.முத்துலிங்கம், ‘பூரணி’ என்.கே.மகாலிங்கம்.

ஹெமிங்வே சொல்லுவார் சிறுகதையின் முக்கிய அம்சம் அதன் நடுப் பிரச்சினையை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு வாசகர்களுக்கு சொல்லாமல் தள்ளிப்போடுவது என்று. ‘இளம் எழுத்தாளர் நாவலுக்கு முன் எழுதுவது, முதிய எழுத்தாளர் இரண்டு நாவல்களுக்கு இடையில் எழுதுவது’ என்று சிறுகதையை பற்றி சொல்வார்கள். 50 சத வீதத்துக்கு மேலான கதைகள் மிகத் தரமானவையாக இருந்து உற்சாகமூட்டின. எழுத்திலே முதிர்ச்சியும், வடிவத்தில் இறுக்கமும், சொல்லவந்த விடயத்தில் வேகமும் இருந்தது. மொழி, நடை, உருவம், கரு என்று ஏறக்குறைய அனைத்து கதைகளும் தரமாகவே இருந்ததால் சிறந்ததை தேர்ந்தெடுப்பதற்கு நடுவர் குழு சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டது:

1) கருவிலே புதுமை இருக்கவேண்டும்
2) உலகைப் புரிவதில் ஒரு புது வெளிச்சம் தர வேண்டும்
3) ஏதோ விதத்தில் மனசை நெகிழவைக்க வேண்டும்

பரிசு பெற்றவர்கள்
1: ‘எல்லாம் இழந்த பின்னும்..’ — சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)
2: ‘நான், நீங்கள் மற்றும் சதாம்’ — ஆதவன் தீட்சண்யா (தமிழ்நாடு)
3. ‘தீதும் நன்றும்’ — அலர்மேல் மங்கை (அமெரிக்கா)

கிண்டல்

The Wead Tapes

ஜார்ஜ் புஷ் போதைப் பொருட்களை உட்கொண்டது குறித்த ஒப்புதல் வாக்குமூலம் சமீபத்தில் ஒலிபரப்பானது. ‘எடுத்துக் கொண்டேன்’ என்று ஒத்துக் கொள்ளலாமா அல்லது பில் க்ளிண்டன் போல் ‘உள்ளே இழுக்கவில்லை’ என்று உணமை விளம்பலாமா என்று சத்தமாக சிந்தித்ததை ரகசியமாக பதிவு செய்து அமபலப் படுத்தியுள்ளார் வீட் (Wead). கடைசியாக ‘போதை சம்பந்தமாக கேள்வி எவராவது கேள்வி கேட்டால், பதில் சொல்ல மறுத்து விடுவேன்’ என்று முடிவெடுக்கிறார். அதற்கு அவர் சொல்லும் சப்பைக்கட்டு:

“பெற்றோர்களைப் பார்த்து குழந்தைகள் கேட்கும்… ‘நாட்டின் ஜனாதிபதியே டோப்பு அடிக்கறாரு! பெருசா என்ன திருத்த வந்துட்டியே’ என்று நியாயப்படுத்தும்”.

இந்த சம்பவத்தை வைத்து முந்தாநாள், ஜே லீனோவில் (Jay Leno):

“இப்பொழுது குழந்தைகள் பெற்றோரிடம் கேட்கப் போவது… ‘நாட்டின் ஜனாதிபதியே டோப்பு அடிக்கறாரா இல்லையா என்று சொல்லமாட்டாராம்! பெருசா என்ன கேட்க வந்துட்டியே’ !”

சில குறிப்புகள்:

  • இந்த நக்கலைத் தொடர்ந்து சுதந்திரக் கட்சித் தலைவர் யாரையும் ஜே லீனோ கிண்டல் செய்யவில்லை.
  • புஷ்ஷின் குடியரசு கட்சியை சேர்ந்த எவரையும் கூட கைவைக்கவில்லை.
  • பெண்கள் சம்பந்தமான சில காமெண்ட்கள் இருந்தாலும் ஹில்லாரி க்ளிண்டன் போன்ற புகழ்பெற்ற மகளிரணித் தளைவர்களை ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ளவில்லை.

    இது போன்ற நிகழ்வு தமிழக ஊடகங்களில் நடந்திருந்தால்:

  • போதைப் பொருள் உட்கொள்வதை நியாயப் படுத்துகிறாரா ‘ஜே லீனோ’ என்று கேள்வி கேட்டிருப்பார்கள்.
  • அமெரிக்க அரசுக்கு எதிராக ஜே லீனோ செயல்படுவதாக புஷ் அறிவித்திருப்பார்.
  • ‘புஷ் டெக்சாஸை சேர்ந்தவர். அமெரிக்காவுடன் பிற்காலத்தில் இணைந்ததால்தான் — மாஸாசூட்ஸின் ஜே லீனோ புஷ்ஷை கிண்டலடிக்கிறார். அவரை தாக்கியதன் மூலம் டெக்சாஸ் கொதித்துப் போயுள்ளது. மாஸாசூட்சஸின் ஆதிக்க போக்கு தெரிகிறது’ என்று அறிக்கை விடுவார்கள்.
  • க்ளிண்டனின் மறைத்தல்களையும் அன்றைய நிகழ்ச்சியில் எடுத்து வைக்காததன் மூலம் ஜே லீனோ எதிர்க்கட்சி ஆதரவாளராக சித்தரிக்கப் படுவார்.
  • எதிர்கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்கள் ஜே லீனோவை சந்தித்துப் பேசுவார்கள்.
  • ஜே லீனோ அரண்டு போய் தன்னிலையைச் சொன்னால், ‘பணம் கொடுத்து ஆளுங்கட்சி வாங்கி விட்டது’ என்றோ, ‘கலிஃபோர்னியா கிட்டக்கத்தானே டெக்சாஸ் இருந்து என்று பயந்து போயிட்டார்’ என்றோ விளக்கங்கள் தரப்படும்.

    புஷ் ரகசியப்பதிவு : Tapes Suggest Bush Used Drugs as Youth

  • மனசோட வயசு

    Blogthings: உனக்கு 28 வயசுப்பா!

    மனசுக்குள்ள இருபதுன்னு நெனப்பு. வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்று குதி போடுறே கண்ணு…. (மார்க்கம்)

    You Are 28 Years Old
    28
    Under 12: You are a kid at heart. You still have an optimistic life view – and you look at the world with awe.

    13-19: You are a teenager at heart. You question authority and are still trying to find your place in this world.

    20-29: You are a twentysomething at heart. You feel excited about what’s to come… love, work, and new experiences.

    30-39: You are a thirtysomething at heart. You’ve had a taste of success and true love, but you want more!

    40+: You are a mature adult. You’ve been through most of the ups and downs of life already. Now you get to sit back and relax.

    தினமணி.காம்

    சேவை: பணம் மட்டுமே போதாது! – விவேக் ஓபராய்:

    படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா அல்லது இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபடப் போகிறீர்களா?

    “படங்களில் நடிப்பது எனது வேலை. ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை அவசியம். அந்த வகையில் நடிப்புத் தொழிலை விட முடியாது. அதேசமயம் நேரம் கிடைக்கும்போது, சம்பாதித்த பணத்தில் தேவைக்கு அதிகமாக உள்ளதை மக்களுக்கு உதவுவேன். இந்தப் பணி எனது வாழ்நாள் முழுவதும் தொடரும்”

    மற்ற தென்னிந்திய நடிகர்கள் வெறுமனே காசோலைகள் அளித்தபோது, நீங்கள் மட்டும் மக்களுடன் தங்கிச் சேவை செய்வதற்கு உங்களைத் தூண்டியது எது?

    மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. மேலும் அவர்களுக்கு நேரமில்லாமலும் இருக்கலாம். நேரடியான அணுகுமுறை மற்றும் எனது ஆறுதல் பாதிக்கப்பட்டவர்களைப் பாதிப்பிலிருந்து ஓரளவு மீட்க உதவும் என்று நான் கருதினேன். அதனால் அங்கு சென்றேன்.

    இதனால் உங்களது படப்பிடிப்பு பாதிக்கப்படாதா?

    பாதிக்கப்படும். ஆனால் தயாரிப்பாளர்களும் எனது உணர்வைப் புரிந்துகொண்டு, நேரம் கிடைத்தபோது நான் அளித்த கால்ஷீட்டைப் பயன்படுத்திக் கொண்டு பட வேலைகளைத் தொடர்கின்றனர்.


    எங்களை மயக்கிய பாடல்

    உன்னி கிருஷ்ணன்: பி.பி. ஸ்ரீனிவாஸ் குரலில், “ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக்கிளியே அழகிய ராணி…’

    ஸ்ரீலேகா பார்த்தசாரதி: “என்ன தந்திடுவேன்… என்ன தந்திடுவேன்; உள்ளம் தந்திடுவேன்… உயிரைத் தந்திடுவேன்’ என்கிற பா. விஜய் எழுதிய பாடல் எனக்குப் பிடித்தது. மற்றவர்கள் குரலில் “புன்னகை மன்னன்’ படத்தில் சித்ரா பாடிய. “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்… உன் கையில் என்னைக் கொடுத்தேன்’

    சித்ரா சிவராமன்: “கண்களால் கைது செய்’ படத்தில், “அனார்க்கலி… அனார்க்கலி… ஆகாயம் நீ… பூலோகம் நீ…’ இதுதான் இதுவரையில் நான் பாடியதில் எனக்குப் பிடித்தது. பிறர் பாடியதில் என்று கேட்டால் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய, “ஒன்றா… இரண்டா ஆசைகள்’

    ஹரீஷ் ராகவேந்திரா: நான் பாடிய பாடல்களில், “மெல்லினமே… மெல்லினமே…’ எனக்குப் பிடித்த பாடல். பிறர் பாடிய காதல் பாடல்களில் “நளதமயந்தி’ படத்தில் ரமேஷ் விநாயகத்தின் “என்ன இது… என்ன இது…’

    சுனிதா சாரதி: “காக்க காக்க’ படத்தில் நான் பாடிய, “தூது வருமா தூது வருமா… காற்றில் வருமா கரைந்துவிடுமா…’ பாடல் எனக்குப் பிடித்தது. காலம் தாண்டியும் காதல் சொட்டச் சொட்ட எஸ்.பி.பி. பாடிய, “சர்க்கரை இனிக்கிற சர்க்கரை… எறும்புக்கு என்ன அக்கறை’

    மாதங்கி: நான் பாடியதில் பிடித்த பாடல் “இவன்’ படத்தில் வரும், “இப்படிப் பார்க்கறதுனா வேணாம்’. எஸ். ஜானகியின் குரலில் “ஜானி’ படத்தில் இடம்பெற்ற, “என் வானிலே ஒரு வெண்ணிலா…’


    “அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர்’ — அ.கி. வேங்கட சுப்ரமணியன்

    “வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
    துஞ்சாக் கண்ணர்; அஞ்சாக் கொள்கையர்;
    அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர்; செறிந்த
    நூல்வழிப் பிழையா நுணங்குநுண் தேர்ச்சி
    ஊர்காப்பாளர்; ஊக்கருங் கணையினர்”

    பாண்டியன் நெடுஞ்செழியனின் ஊர்க்காவலர்களின் கடமை உணர்ச்சியையும், அஞ்சா நெஞ்சத்தையும், அறிவுத் தேர்ச்சியையும், செயல் திறனையும் அதன் காரணமாக இரவில் மதுரை மக்கள் இனிதாக கண்ணுறங்க முடிந்ததையும் மதுரைக் காஞ்சி அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.


    தமிழகம் வழிகாட்டுகிறது — சுகதேவ்

    சுகாதாரத் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகத் தமிழகத்திலுள்ள 12 கிராம ஊராட்சிகளும் ஒரு ஊராட்சி ஒன்றியமும் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 12,619 கிராம ஊராட்சிகளும் 385 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன.

    கிராம ஊராட்சிகள் அனைத்திலும் “ஒருங்கிணைந்த துப்புரவு வளாகம்” என்ற பெயரில் ஒரே வளாகத்தில் மின்சாரம், தண்ணீர் வசதியோடு கூடிய கழிப்பறைகள், குளியல் அறைகள் மற்றும் துணிகள் துவைப்பதற்கு உரிய வசதிகளை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதன் விளைவாக 10,000-த்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை இப் பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

    இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய 15 கிராம ஊராட்சிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசைச் சுதந்திர தினத்தன்று முதல்வர் வழங்கியிருக்கிறார். இவ் விருதுக்காகத் தற்போது தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 39 கிராம ஊராட்சிகளில் மிக அதிகமாக 12 விருதுகளைத் தமிழகம் கைப்பற்றியிருக்கிறது.

    ஒன்றுக்கு மேற்பட்ட இவ்விருதுகளைப் பெற்ற பிற மாநிலங்கள் மேற்குவங்கமும் மகாராஷ்டிரமும். கேரளம், குஜராத், திரிபுரா ஆகியவை தலா ஒரு விருதைப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்களில் எதுவும் இந்த விருதையே பெறவில்லை.

    கோவை (கணக்கம்பாளையம், பொட்டையாண்டிபுரம்), ஈரோடு (கதிரம்பட்டி, முத்துக்கவுண்டன்பாளையம்), ராமநாதபுரம் (அரும்பூர், பாண்டிக்கண்மாய், தாமரைக்குளம்), தூத்துக்குடி (பிச்சிவிளை), சேலம் (சின்னனூர்), வேலூர் (காட்டுபுதூர்) மாவட்டங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சிகள் தமிழகத்திற்குக் கிடைத்த விருதுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. ஊராட்சி ஒன்றியத்துக்குக் கிடைத்த ஒரே விருதைக் கன்னியாகுமரி மாவட்டம் மேல்புரம் பெற்றிருக்கிறது. மேல்புரம் மற்றும் இந்தக் கெüரவத்தைப் பெற்ற ஊராட்சிகளின் தலைவர்களில் நால்வர் பெண்கள் என்பது உற்சாகம் தரும் கூடுதல் செய்தி.

    வாழ்த்துவோம். வளம் பெறுவோம்.

    நன்றி: Dinamani & Kathir

    அறியாமை

    நாள்குறிப்பை புரட்டியபோது அகப்பட்ட உவமைக் கதை. எந்தப் பாடலில், சங்க இலக்கியத்தில் படித்தேன் என்று குறிக்க மறந்திருக்கிறேன். எவராவது அறிந்திருந்தால் சொல்லலாம்.

    அவன் கண்பார்வையற்றவன். அன்பான மனைவி. தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் உண்டு. பசியால் குழந்தை அழுகிறது. அம்மா பால் கொடுக்க ஆரம்பிக்கிறாள். குழந்தை எவ்வாறு அலறலை நிறுத்தியது என்று தகப்பன் வினவுகிறான். பால் கொடுத்து பசியைப் போக்குவதாகச் சொல்கிறாள்.

    ‘பால் எவ்வாறு இருக்கும்?’

    ‘வெள்ளையாக இருக்கும்.’

    ‘வெள்ளை எப்படி இருக்கும்?’

    ‘வாத்தைப் போல் இருக்கும்.’

    ‘வாத்து எப்படி இருக்கும்?’

    வீட்டு வாசலில் இருக்கும் வாத்து பொம்மையை எடுத்துக் காட்டுகிறாள்.

    மண் பொம்மையைத் தடவி பார்த்தவனுக்குக் கோபம் வருகிறது.

    ‘அடிப் பாவீ…. மண்ணையா என் குழந்தைக்குக் கொடுக்கிறாய்!’ என்று அவளை அடிக்க ஆரம்பிக்கிறானாம். குழந்தை மீண்டும் அழ ஆரம்பிக்கிறது.


    இன்று என்னுடைய நாள்குறிப்பில் குறித்து வைத்துக் கொண்டது:

    ஜெயஸ்ரீ: “கண்ணால் காண்பவர்களிடமே அன்புசெலுத்த முடியாத நீ காணாத கடவுளிடம் எவ்வாறு அன்பு செலுத்துவாய்?” என்று என் பள்ளியில் எங்கு பார்த்தாலும் எழுதி வைத்திருப்பார்கள்.

    கண்ணால் காண்பவர்களையே வெறுக்க முடியாத நான் காணாதவர்களை எப்படி வெறுக்கமுடியும் என்பது இணையத்தில் என் கொள்கை. எனவே இங்கு எல்லோரிடமும் அன்புடனேயே எழுதுகிறேன்.


    சுரேஷ் கண்ணன்: தலைமை உரை ஆற்றிய எழுத்தாளர் பிரபஞ்சன், அயல்நாடுகளில் எழுத்தாளர்கள் மக்களாலும், அமைப்புகளாலும் கொண்டாடப்படுவதாகவும் தமிழ்நாட்டில் அது குறைந்த அளவிலேயே இருப்பதாகவும் ஆதங்கப்பட்டார்.

    தமிழகத்துக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள அபூர்வ ஒற்றுமை இது. புத்திசாலிகளாக இருப்பதால் இரண்டு இடங்களிலும் இகழப்படுதலுக்கும் பைத்தியக்காரனாவதற்கும் சாத்தியங்கள் அதிகம். ஃப்ரான்ஸிலோ லத்தீன் அமெரிக்காவிலோ கிடைக்கும் மதிப்புக்கும் செவிமடுப்புக்கும் வெகுஜன ஊடகங்களில் கிடைக்கும் பக்கங்களுக்கும் ஒப்பிடும்பொழுது பிரபஞ்சனின் ஆதங்கத்தின் நியாயம் விளங்குகிறது. அரசியல்/ஜாதித் தலைவர்களின் பரபரப்பு அறிக்கை, நடிகர்கள் படிக்கும் புத்தகங்கள், ஆகியவைகளுக்குத்தான் இங்கு கொண்டாட்டாம். இவ்வாறு வரன்முறைகளில் கைவைக்கப்படுவதும் இவரின் வருத்தத்துக்கு இன்னொரு காரணமாக இருக்கலாம்.

    EAR — JAR — WAR

    இரண்டு நாட்களாக தொழில் நுட்ப உலகில் முங்கிக் குளிக்கும் வாய்ப்பு. முந்தாநாள் பாஸ்டனில் நடந்த லீனக்ஸ்வோர்ல்டை எட்டிப் பார்க்க முடிந்தது. தொடர்ந்து நேற்றைக்கும் ஆரக்கிளின் தயவில் (ஜாவா) சேவைகளின் மூலம் கட்டமைப்பு (SOA) மற்றும் ஜாக்ஸன் (JAX) துரைகளின் வழித்தோன்றல்களை அறிய முடிந்தது.சில குறிப்புகள்:

    * வெறுமனே சொற்பொழிவாற்றாமல், கணினியில் நிரலிகள் நிறைய செய்ய வைக்கிறார்கள். பலவித ஜாவா, ஆரக்கிள் நிரலிகளை பத்து மாதத்துக்கு இலவசமாக, ஆராய்ந்து அனுபவித்து மென்பொருள் எழுதலாம். பின் பிடித்திருந்தால் கம்பெனியை வாங்க வைக்கலாம். இல்லையென்றால், புத்தம்புதிதாக வந்திருக்கும் அடுத்த பதிப்பை வலையில் இருந்து இறக்கிக் கொண்டு மீண்டும் நிரலி குளிக்கலாம்.

    * மென்பொருள் எழுத்தர்களுக்கு இலவசம் என்றால் கொள்ளைப் பிரியம். யாராவது டி-ஷர்ட், தொப்பி, பேனா, மென்வட்டு என்று எது கொடுத்தாலும் வாஞ்சையாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். காரைத் துடைக்க புதிய துணி தேவையாம்.

    * மைரோசாஃப்ட் முதல் ஆரக்கிள் தொட்டு பரி நிரலி வரை எல்லாம் ஒரே நுட்பத்தைத்தான் கொடுப்பது போல் இருக்கிறது. மென்பொருள் வாசிகளும் படைப்பாளிகள் போலத்தான். சிலர் அக்மார்க் கறபனையோட்டத்தைக் கொண்டு புதுசு புதுசாக படைக்கிறார்கள். வேறு சிலர் மற்றவர்களின் நடையை ஈயடிச்சான் காப்பி போல் கூகிள் இன்னபிற வலையில் தேடி Ctrl+C, Ctrl+V போட்டு விடுகிறார்கள். பல பத்திரிகைகள் வெளிவருவது போல் பல்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள். உலகத்தைப் புரட்டிப் போட தனித்துவம் முக்கியம்.

    * ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சதவீதம் — ஒன்றோ இரண்டோ
    பங்குபெற்ற இந்தியர்கள்/தெற்காசியர்கள் — 33%
    பெண்கள் வீதம் — 25%
    (எல்லாமே தோராயம்தான்; ஆனால் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.)

    * கேட்கும் கும்பலில் பலர் என்னைப் போல் வாய்மூடி இண்ட்ரோவர்ட்கள்தான். கணினித் தகராறின் போது, மதிய உணவின் போது, மாலை பட்-லைட்டின் போது என்று எண்ணி எண்ணிதான் பேசுகிறார்கள். காட்டமாக தொழில் நுட்பத்தையும் புதிய போக்குகளையும் விவாதிப்பவர்களில் பெரும்பாலோர் லெக்சர் கொடுத்தவர்கள்.

    * முதுகுக்குப் பின்னே யாராவது எட்டிப் பார்த்தால், ஸ்விட்ச் போட்டது போல் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் வேலை செய்யத் தெரியாதவர்களில் பலர் — மென்பொருள் எழுத வந்து விடுகிறார்கள். ஜாவா எழுதினாலும் ஸ்டோர்ட் ப்ரோசீஜர் எழுதினாலும் யாரும் கண்காணிக்காதபோது வடிவமைப்பார்கள். அசட்டுத் தவறுகளை யாராவது பார்த்து விட்டால் கேலி செய்வார்களோ என்னும் எண்ணமாக இருக்கலாம். சுதந்திரமாக சிந்திக்கத் தனிமையை நாடுபவர்களாக இருக்கலாம். ஆனால், போதகர் பின்னே வந்தால், ஸ்தம்பித்துப் போயும், அக்கம்பக்கம் நகர்ந்தவுடன் சுறுசுறுப்பும் ஆனார்கள்.

    இவ்வளவும் பார்த்தாயே… ஏதாவது கற்றுக் கொண்டாயா என்கிறீர்களா!? அதற்கு சில புத்தகங்களை குலுக்கலில் வென்று அதிர்ஷ்டசாலியானேன் ;-))

    (அ.கு.:
    WAR — Web Application Archive
    JAR — Java Archive (file format)

    படியெடுத்தல்

    ஆதிமூலம்: தெருவாசகம் — யுகபாரதி — உதவி இயக்குநர்

    வலைப்பதிக்கத் துடிக்காதவர்
    வஞ்சத்திலும் சிரிக்கிறவர்
    படம் காட்ட விரும்புவதால்
    பந்தாவை ருசிக்கிறவர்

    வாரமுறையில் நட்சத்திரத்தோடு
    வாழ நேர்ந்தாலும்
    தமிழ்மணத்தின் வெளிச்சத்தில்
    தேதியைக் கடத்துபவர்

    இலவம் பஞ்சைப் போல்
    ரேட்டிங் கற்பனைகள்
    பின்னூட்டங்களின் எதிரொலி போல்
    கீழிழுக்கும் சங்கடங்கள்

    அச்சிடப் பத்திரிகையின்றி
    அக்குணிக்குள் உருளுகிறார்
    கொறிக்கப் பழைய படம்
    கணித்திரையில் பருகுகிறார்

    எழுதும் குறிப்புகளில்
    எத்தனையோ சொதப்பல்கள்
    சந்திப் பாம்பு கொத்தும்
    பரமபத சறுக்கல்கள்

    டைலனால் போடாத
    தலைவலி போல
    தட்ஸ்தமிழ் செய்தியோடை
    கிடைக்குமிவர் நாடியில்

    இயங்காத எழுத்துரு
    இரியல்போக்குக்கு அடையாளம்
    மறுக்கும் கூகிளுடன்
    மல்லுக்கு நிற்கின்றார் தினந்தோறும்

    பாடாவதி இணைப்பில்
    படுத்திருக்கும் இணையத்தளம்
    டயல்-அப் புன்னகையில்
    டான்ஸ் ஆடுவார் தவக்கோலம்

    அளந்த கதையெல்லாம்
    அழகாக பதிவு ஆகும்
    இழந்த ப்ளாக் போஸ்ட் மட்டும்
    மீண்டும் மீண்டும் பதிவாகும்.

    வலையாசகம்

    ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மாதம்

    டாலர் தேசம் – பா ராகவன்

    அடிமைகளின் சுதந்தரத்தைத் தென்மாநிலங்களைச் சேர்ந்த ஒருத்தராலும் ஜீரணிக்கவே முடியவில்லை அப்போது. சொல்லப் போனால் ஆன்ரூ ஜான்ஸன் வரைந்த ‘புனரமைப்பு’த் திட்டத்தின்படி தென் மாநிலங்களுக்கு நிறைய லாபங்கள் இருந்தன. தொழில் வாய்ப்புகள் தொடங்கி எம்.எல்.ஏ.சீட்டுகள் வரை ஏராளமான விதங்களில் மக்கள் விரும்பக்கூடிய நடைமுறைகளையே ஜான்ஸன் கடைபிடித்தார். காரணம், பிரிந்துபோன தென் மாநிலங்கள் மறுபடியும் ஐக்கிய அமெரிக்காவுடன் சண்டை சச்சரவுகளில்லாமல் இணைந்து செயலாற்றவேண்டும் என்பது தான்.

    மத்திய அரசின் தலையீடுகள் அதிகமில்லாமல் பெரும்பான்மையான விஷயங்களில் அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக்கொள்ளும் உரிமைகளையும் அதிகப்படுத்தினார் ஜான்ஸன்.

    பிரச்னை பூதாகாரமானது இங்கே தான்.

    அடடே, உரிமை கிடைத்துவிட்டதே என்ன பண்ணலாம் என்று யோசித்த தென் மாகாண ஆட்சியாளர்கள், அவற்றைக்கொண்டு ‘முன்னாள்’ அடிமைகளை எந்தெந்த வகையில் துன்புறுத்தலாம் என்று தீவிரமாக ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    அவர்கள் செய்த முதல் மங்களகரமான காரியம், கருப்பர்களுக்கான தனிச்சட்டம் இயற்றத் தொடங்கியது தான்! Black Codes என்று அழைக்கப்பட்ட அச்சட்டங்கள் அருவருப்பின் உச்சம் என்றால் மிகையில்லை. அமெரிக்காவில் பஞ்சம் பிழைக்க வந்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் கோவணம்வரை உருவியெடுக்கக்கூடிய சட்டங்கள் அவை. அடிமைகளாக இருந்த காலமே தேவலை என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு அராஜகம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது அப்போது.

    இத்தனைக்கும் புனருத்தாரணம் செய்யப்பட்ட அமெரிக்காவில் கருப்பர்களுக்கும் ஆட்சியில் ஆங்காங்கே சில இடங்கள் கிடைத்திருந்தன. ஆனால் வெள்ளையர்கள் பார்வையில் எப்போதும் அவர்கள் “பன்றிகள்” தாம்!

    ஒரே ஒரு உதாரணம் பார்க்கலாம். எலெக்ஷனில் யார் யாரெல்லாம் ஓட்டுப் போடலாம் என்று தீர்மானிப்பதற்காகச் சில தென் மாநிலங்கள் சேர்ந்து ஒரு மாநாடு போட்டன. கருப்பர்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று ஏற்கெனவே தீர்மானமாகியிருந்த நிலையில் எப்படி அவர்களை ஓரம் கட்டலாம் என்று முடிவு செய்வது தான் அவர்களது ஆலோசனையின் நோக்கம்.

    கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அமெரிக்க மண்ணின் மைந்தர்கள் எல்லோருக்கும் ஓட்டுரிமை உண்டு. மண்ணின் மைந்தர்கள் என்றால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்தவகையில் அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்து, அடிமை வாழ்வு வாழ்ந்த கருப்பர்களுக்கும் ஓட்டுரிமை உண்டு என்று ஆகிவிடுகிறதல்லவா? அங்கே தான் ஒரு ‘செக்’ வைத்தார்கள்.

    பிறந்து வளர்ந்த எல்லாருக்கும் ஓட்டுரிமை உண்டுதான்; ஆனால் குறைந்த பட்சம் ஓட்டுப் போடுகிறவரின் தாத்தா 1867க்கு முன் நடந்த தேர்தல்களில் ஒரு முறையாவது ஓட்டுப் போட்டிருக்கவேண்டும்! ‘Grandfather clause’ என்று அழைக்கப்பட்ட இந்த வினோத, விபரீதச் சட்டம் யாருக்காக, எதற்காக உருவாக்கப்பட்டது என்று விவரிக்கவே வேண்டாம்.

    அத்தனை கருப்பர்களையும் வளைத்து ஓரம்கட்டி, தலையில் தட்டி உட்காரவைக்கிற இந்தச் சட்டத்தைக் கண்டு தென்மாநிலப் பண்ணையார்கள் அத்தனைபேரும் புளகாங்கிதமடைந்தார்கள்.

    இச்சட்டத்தின் விளைவாக, தேச மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கிய காலத்தில் கருப்பர்கள் அடைந்த பல நன்மைகள் காற்றோடு போய்விட்டன. அடிமைகளாக இருந்து, சுதந்தரத்துக்கு ஏங்கிய காலம் போக, சுதந்தரமாக அடிமைத்தளை அனுபவிக்க வேண்டியதானது அவர்களுக்கு.

    ஓட்டுப் போடக்கூடாது. அரசு அலுவலகங்களில் வேலை கிடைக்காது. தனியார் நிறுவனங்களிலும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்புதான். ஓட்டல்களில் சமமாக உட்கார முடியாது. ரயிலில் போனால் பிரச்னை. பஸ்ஸில் போனால் பிரச்னை. பார்க்கில் உலாவினால் பிரச்னை. கூட்டம் போட்டால் பிரச்னை. பாட்டுப் பாடினால் பிரச்னை.

    “அப்புறம் என்ன இழவுக்கு இவர்களுக்கு சுதந்தரம் பெற்றுத்தரப் போராடினோம்?” என்று வெகுண்டு எழுந்தார்கள் அமெரிக்க காங்கிரஸ்காரர்கள்.

    அதிபர் ஜான்சனின்மீது அவர்களுக்கு இருந்த கடுப்புக்கு இதுதான் காரணம். தென் மாநிலங்களை ஐக்கிய அமெரிக்காவுடன் பலமாக இணைக்கிறேன் பேர்வழி என்று அடிமைகளை இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கத்தான் அவர் வழிசெய்கிறார் என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

    ஆனால் தென் மாநிலங்கள் விஷயத்தில் அதிபர் தொடர்ந்து மௌனமே சாதித்து வந்ததால் அவரைப் பதவியிலிருந்து நீக்க ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப் பார்த்தார்கள். பாராளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் ஒரே ஒரு ஓட்டில் ஜான்சன் பதவிதப்பினார்.

    1869ல் மக்களின் வாக்குரிமையை மறுப்பது சட்டவிரோதம் என்று இன்னொரு கலாட்டாவைத் தொடங்கிவைத்தார்கள். (புகழ்பெற்ற 15th Amendment இதுதான்!)