Daily Archives: பிப்ரவரி 17, 2005

ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மாதம்

டாலர் தேசம் – பா ராகவன்

அடிமைகளின் சுதந்தரத்தைத் தென்மாநிலங்களைச் சேர்ந்த ஒருத்தராலும் ஜீரணிக்கவே முடியவில்லை அப்போது. சொல்லப் போனால் ஆன்ரூ ஜான்ஸன் வரைந்த ‘புனரமைப்பு’த் திட்டத்தின்படி தென் மாநிலங்களுக்கு நிறைய லாபங்கள் இருந்தன. தொழில் வாய்ப்புகள் தொடங்கி எம்.எல்.ஏ.சீட்டுகள் வரை ஏராளமான விதங்களில் மக்கள் விரும்பக்கூடிய நடைமுறைகளையே ஜான்ஸன் கடைபிடித்தார். காரணம், பிரிந்துபோன தென் மாநிலங்கள் மறுபடியும் ஐக்கிய அமெரிக்காவுடன் சண்டை சச்சரவுகளில்லாமல் இணைந்து செயலாற்றவேண்டும் என்பது தான்.

மத்திய அரசின் தலையீடுகள் அதிகமில்லாமல் பெரும்பான்மையான விஷயங்களில் அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக்கொள்ளும் உரிமைகளையும் அதிகப்படுத்தினார் ஜான்ஸன்.

பிரச்னை பூதாகாரமானது இங்கே தான்.

அடடே, உரிமை கிடைத்துவிட்டதே என்ன பண்ணலாம் என்று யோசித்த தென் மாகாண ஆட்சியாளர்கள், அவற்றைக்கொண்டு ‘முன்னாள்’ அடிமைகளை எந்தெந்த வகையில் துன்புறுத்தலாம் என்று தீவிரமாக ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர்கள் செய்த முதல் மங்களகரமான காரியம், கருப்பர்களுக்கான தனிச்சட்டம் இயற்றத் தொடங்கியது தான்! Black Codes என்று அழைக்கப்பட்ட அச்சட்டங்கள் அருவருப்பின் உச்சம் என்றால் மிகையில்லை. அமெரிக்காவில் பஞ்சம் பிழைக்க வந்த ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் கோவணம்வரை உருவியெடுக்கக்கூடிய சட்டங்கள் அவை. அடிமைகளாக இருந்த காலமே தேவலை என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு அராஜகம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது அப்போது.

இத்தனைக்கும் புனருத்தாரணம் செய்யப்பட்ட அமெரிக்காவில் கருப்பர்களுக்கும் ஆட்சியில் ஆங்காங்கே சில இடங்கள் கிடைத்திருந்தன. ஆனால் வெள்ளையர்கள் பார்வையில் எப்போதும் அவர்கள் “பன்றிகள்” தாம்!

ஒரே ஒரு உதாரணம் பார்க்கலாம். எலெக்ஷனில் யார் யாரெல்லாம் ஓட்டுப் போடலாம் என்று தீர்மானிப்பதற்காகச் சில தென் மாநிலங்கள் சேர்ந்து ஒரு மாநாடு போட்டன. கருப்பர்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று ஏற்கெனவே தீர்மானமாகியிருந்த நிலையில் எப்படி அவர்களை ஓரம் கட்டலாம் என்று முடிவு செய்வது தான் அவர்களது ஆலோசனையின் நோக்கம்.

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அமெரிக்க மண்ணின் மைந்தர்கள் எல்லோருக்கும் ஓட்டுரிமை உண்டு. மண்ணின் மைந்தர்கள் என்றால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்தவகையில் அமெரிக்காவிலேயே பிறந்து, வளர்ந்து, அடிமை வாழ்வு வாழ்ந்த கருப்பர்களுக்கும் ஓட்டுரிமை உண்டு என்று ஆகிவிடுகிறதல்லவா? அங்கே தான் ஒரு ‘செக்’ வைத்தார்கள்.

பிறந்து வளர்ந்த எல்லாருக்கும் ஓட்டுரிமை உண்டுதான்; ஆனால் குறைந்த பட்சம் ஓட்டுப் போடுகிறவரின் தாத்தா 1867க்கு முன் நடந்த தேர்தல்களில் ஒரு முறையாவது ஓட்டுப் போட்டிருக்கவேண்டும்! ‘Grandfather clause’ என்று அழைக்கப்பட்ட இந்த வினோத, விபரீதச் சட்டம் யாருக்காக, எதற்காக உருவாக்கப்பட்டது என்று விவரிக்கவே வேண்டாம்.

அத்தனை கருப்பர்களையும் வளைத்து ஓரம்கட்டி, தலையில் தட்டி உட்காரவைக்கிற இந்தச் சட்டத்தைக் கண்டு தென்மாநிலப் பண்ணையார்கள் அத்தனைபேரும் புளகாங்கிதமடைந்தார்கள்.

இச்சட்டத்தின் விளைவாக, தேச மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கிய காலத்தில் கருப்பர்கள் அடைந்த பல நன்மைகள் காற்றோடு போய்விட்டன. அடிமைகளாக இருந்து, சுதந்தரத்துக்கு ஏங்கிய காலம் போக, சுதந்தரமாக அடிமைத்தளை அனுபவிக்க வேண்டியதானது அவர்களுக்கு.

ஓட்டுப் போடக்கூடாது. அரசு அலுவலகங்களில் வேலை கிடைக்காது. தனியார் நிறுவனங்களிலும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்புதான். ஓட்டல்களில் சமமாக உட்கார முடியாது. ரயிலில் போனால் பிரச்னை. பஸ்ஸில் போனால் பிரச்னை. பார்க்கில் உலாவினால் பிரச்னை. கூட்டம் போட்டால் பிரச்னை. பாட்டுப் பாடினால் பிரச்னை.

“அப்புறம் என்ன இழவுக்கு இவர்களுக்கு சுதந்தரம் பெற்றுத்தரப் போராடினோம்?” என்று வெகுண்டு எழுந்தார்கள் அமெரிக்க காங்கிரஸ்காரர்கள்.

அதிபர் ஜான்சனின்மீது அவர்களுக்கு இருந்த கடுப்புக்கு இதுதான் காரணம். தென் மாநிலங்களை ஐக்கிய அமெரிக்காவுடன் பலமாக இணைக்கிறேன் பேர்வழி என்று அடிமைகளை இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கத்தான் அவர் வழிசெய்கிறார் என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

ஆனால் தென் மாநிலங்கள் விஷயத்தில் அதிபர் தொடர்ந்து மௌனமே சாதித்து வந்ததால் அவரைப் பதவியிலிருந்து நீக்க ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப் பார்த்தார்கள். பாராளுமன்றத்தில் நடந்த ஓட்டெடுப்பில் ஒரே ஒரு ஓட்டில் ஜான்சன் பதவிதப்பினார்.

1869ல் மக்களின் வாக்குரிமையை மறுப்பது சட்டவிரோதம் என்று இன்னொரு கலாட்டாவைத் தொடங்கிவைத்தார்கள். (புகழ்பெற்ற 15th Amendment இதுதான்!)

தமிழ் தேசிய இயக்கம்

கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
‘பாபி’ பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)

அருமையாய் நடித்தனர்…

(என டயரியில் எழுதுகிறாராம்)

ந. ஜெயபாஸ்கரன்

(அ.கு.: தலைப்பு இவர் கொடுத்தது அல்ல.)

கேள்வி #1

உங்களின் குழந்தை மூளை வளர்ச்சி குன்றியதாகவும், ஐந்து வயதில் தவறிப் போய்விடும் என்று முன்னமேயே அறிந்திருந்தால், கருவைக் கலைத்து விடுவீர்களா? அப்படி கண்டிபிடிக்க இயலாமல், குழந்தை பிறந்துவிட்டால் வீட்டிலேயே கவனிப்பீர்களா அல்லது அவர்களுக்குரிய அரண் கிடைக்கும் இல்லத்தில் சேர்த்து விடுவீர்களா?

தோன்றிய ஊற்று: வினாத் தொகுப்பு – க்ரெகரி ஸ்டாக் – ஐ.எஸ்.பி.என் 0-89480-320-4

தீராநதி — ஜன. 2004

தபசி

எல்லாம் பார்த்துவிட்டேன்
என்று சொல்வதில்
எந்த அர்த்தமில்லை
எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பதில்தான்
எல்லா அர்த்தமும்

புரிதலின் வழிமுறை – மனுஷ்யபுத்திரன்

அதை
அவ்வளவுதான்
புரிந்து கொள்ள முடிந்தது
நண்பர்களுக்கு
எதிரியே
உன் கைகளை முத்தமிட அனுமதி
என் நண்பர்களை விடவும்
நீ அதைப் புரிந்து கொண்டதற்கு

அசோகமித்திரன்

‘தி குருசிபிள்’ என்ற நாடகத்தில் தனுஷ்கோடிதான் முக்கிய ஆண் பாத்திரம். நாற்பது ஆண்டுகள் முன்பு அமெரிக்க நாடகாசிரியர் ஆர்தர் மில்லர் எழுதிய இந்த நாடகம் இன்று உலகின் பல நாடுகளின் நிலவரத்துக்குப் பொருந்தும். பொய்க்கருத்துகளை உலவ விட்டே வேண்டாதவரைச் சித்திரவதை செய்து அழிக்கவும் செய்வதுதான் நாடகத்தின் மையப் பொருள்.

ராஜேந்திரகுமார் இளைஞனாக இருந்தபோது அப்போது பிரசுரமாயிருந்த என் நான்கைந்து கதைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். அவற்றைப் படித்தாரா என்று தெரியாது. அவர் படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். அந்தக் கதைகள் தொலைந்து போய்விட்டன. இது அவருடைய விமரிசனம் என்று கூட நினைத்துக் கொள்ளலாம்.