’00s Tamil Movies with 50’s Cliches – Sannasi


உலகத் திரைப்படம் பார்ப்பவனெல்லாம் ஏதோ தோஷிரோ மிஃபுனேவும் லிவ் உல்மனும் திரையில் வந்ததும் பேப்பர் கிழித்து பறக்கவிடும் கான்ஃபெட்டி கந்தசாமிகள் மாதிரியான உங்களது இதுபோன்ற கருத்துக்களை இதற்கு முன்பும் பார்த்த நினைவு. உலகத் திரைப்படங்களிலும் குப்பைகளைத் தாண்டித்தான் நல்ல படங்கள் என்று முடிவெடுக்கவேண்டியிருக்கிறது.

ஜோல்னா ஜிப்பா, -5 லென்ஸ் வைத்த சோடாபாட்டில் கண்ணாடி, பரட்டைத் தலை என்று மேம்போக்கான புளித்துப்போன சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் ரேஞ்சிலான வாதங்களை வைப்பது மாதிரி, கல்லூரிகளிலும் இதே மாதிரி ஒரு ஹெல்மெட் கோஷ்டி இருக்கும் – ஏ, இங்லீஸ் படம் மட்டுந்தான் பாப்பாருய்யா இவுரு, நம்ம படம் எல்லாம் புடிக்காது இவுருக்கு ஏ, ஏ – இதே ட்யூனை கொஞ்ச நாள் போடுவார்கள், பிறகு மெதுவாக அருணாக்கயிறு சுச்சுமேக்கர், சிலுவைஸ்டார் சுல்டான், ஜூம்பலீனா ஏலி படமெல்லாம் பாக்க ஆரம்பித்து விஜயகாந்த்தின் ஸ்பின்னிங் வீல் கிக்கில் குறைகண்டுபிடிக்க ஆரம்பித்து அப்படியே மெல்ல மெல்ல வரும், அதெல்லாம் அப்படியே காலப்போக்கில வர்றதுதான் இல்ல?

என்ன, டப்பிங் படமெல்லாம் பார்த்து ராமிரெட்டி தொந்தி என்ன சைஸுக்கு இருக்குன்னு படம் படமா அளக்குறதும் ஒரு ஜாலி தான? இதுதாண்டா போலீஸ் படத்துல ராமிரெட்டி தொந்தியும்தான் பெரும் மிரட்டு மிரட்டும் (சண்டி, வண்டிய எட்றா அப்படிங்கிறப்ப கிலுக் அப்படின்னு சின்னதா ஒரு குலுங்கு குலுங்கும் பாருங்க தொந்தி, என்னாமா யோசிச்சு யோசிச்சு அந்த காட்சிய வைச்சுருப்பாரு நம்ம கோடி ராமகிருஷ்ணா) – தொந்திக்காக சிறந்த வில்லன் அவார்டு அவருக்குக் குடுக்கணும்னு நானுங்கூடத்தான் எழுதலாம். ஹெரான் ராமசாமி என்னமா டப்பிங் குடுத்திருக்கான் பாருய்யான்னு நான்தாண்டா எம்.எல்.ஏ படத்தையும் போட்டு தேச்சிட்டு உக்காந்திருக்கலாம்.

உக்காந்து இருக்கத்தான செஞ்சம்?

உலகத் திரைப்படம்னா ஜகஜகஸ்தான் படம்தானான்னு உங்களை மாதிரி ஆட்கள் கேட்கிறதுக்கு முன்னாடி எம்.எஸ்.சத்யு, அடூர், குருதத், ஷ்யாம் பெனகல்னு பார்க்கவேண்டியதுதானே? இவுங்க எல்லாருங்கூட லோக்கல் லவங்கமாத்தான எடுத்து வச்சிருக்காங்க? இல்ல குருதத் ஹம்ப்ரி போகார்ட்டைப் போட்டுத்தான் ப்யாசா எடுத்தாரா? அதுவும் நம்ம படம் இல்லையோ ஒருவேளை?

பதெர் பாஞ்சாலி பார்த்தா என்னய்யா ரே கூனிக் கிழவி நடக்கிறதை அரை மணி நேரம் காட்டுறாரு, இதுதான் ஆர்ட் பிலிமாக்கும்னு ஒரு விமர்சனம் வைக்கிறதும், உரைநடையை உரல்ல போட்டு உலக்கையால இடிச்சு எடுத்து அடுக்கினா புதுக்கவிதைன்னு இன்ஸ்டண்ட் அப்பம் சுடுறதும் அரதப்பழசான ஸ்டைல்.

உலகத் திரைப்படங்களைக் குறித்து எத்தனையோ வலைப்பதிவர்கள் வலைப்பதிவுகளில் எழுதியுள்ளார்கள் – இவர்கள் யாரும் இலக்கிய வட்டம் உள்வட்டம் வெங்காயத்தில் பதப்படுத்தப்பட்ட தலைவீங்கிகள் இல்லை என்றே நினைக்கிறேன் – சாமானியனின் ரசனைக்கு எந்த விதத்திலும் மேலானதல்ல உலகத் திரைப்படங்கள் என்பதற்கு, ஒரு முழு விமர்சனம் தேவையில்லை – எழுதப்பட்ட சில பத்திகளிலோ வரிகளிலோ இருக்கும் அடிப்படையான நேர்மை போதுமானது, இப்படி எழுதப்பட்ட எத்தனையோ பதிவுகளை இதே தமிழ் வலைப்பதிவுகளில் நானும் படித்ததுண்டு.

இந்தியாவில் உலகத் திரைப்படங்களைப் பார்க்கவேண்டுமெனில், திருவனந்தபுரம் திரைப்பட விழா போன்றவற்றில் இருபது இருபத்தைந்து படங்களை கண் எரிய எரியப் பார்க்கவேண்டும், இல்லை ரஷ்யக் கலாச்சார மையம் போன்றவற்றிலோ ஃபிலிம் சொசைட்டியிலோ உறுப்பினராகி காத்திருந்து பார்க்கவேண்டும், இல்லை எவனாவது ஒரு இலக்கிய விரும்பி தன் மாதச் சம்பளத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாயைப் போட்டு சின்ன ப்ரொஜக்டரில் தார்க்கோவ்ஸ்கி ரெட்ராஸ்பெக்டிவ் காட்டினால் பஸ் பிடித்து நூற்றுக்கணக்கில் கிலோமீட்டர்கள் பிரயாணித்துப் பார்த்து வரவேண்டும், இல்லை சென்னை போன்ற பெருநகரங்களில் குப்பை கொட்டவேண்டும்.

நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்களென்று நினைக்கிறேன் – அங்கே இந்த லோலாயெல்லாம் கிடையாது – மாதத்துக்கு பத்து டாலருக்கு நெட்ஃப்ளிக்ஸ் உறுப்பினராகி, பெரிதாக வேண்டாம், ஒரு ஐம்பது டாலருக்கு ஒரு டிவிடி ப்ளேயர் வாங்கி சந்தர்ப்பம் இருக்கும்போது உலகப் படங்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள் – இல்லை, த்ரூஃபோவிலிருந்து கொதாரிலிருந்து கேஸ்பர் நோவிலிருந்து மியாசாக்கி வரை தலைகீழ் பாடம் என்றால் மன்னிக்க (நாலு நேம் ட்ராப்பிங் பண்ணி நமச்சிவாயம் அப்படின்னு காலே அரைக்கால் பிட்டையாவது போடாட்டி எப்பிடி? நமக்கும் பொழுது போகணுமுல்ல?)!

இதெல்லாம் சரிப்படலைன்னா இருக்கவே இருக்கு, ஜில்லாங்கோ ஜுல்லாலங்கடி ஜிம்தலக்கா ஜும்ஸ் சொன்ன குய்யாங்கோ கும்தலக்கா ட்ரிங்யுங்குரோஷி ஜம்புருட்டபுரோஸ்ட்ரொம்ங்கிற தத்துவத்தை மிங்ஹோல்ஸ்ட்டொர்டோட்டிர் அப்படிங்கிற ஐஸ்லாந்து நாட்டு ஃபெமினிஸ்டு ஷப்ராஷமோஜில்க்ஸ் அப்படிங்கிற மாகஜின்ல விளக்கியிருக்கார்ங்கிற ரேஞ்சிலதான் இங்க எல்லாரும் அள்ளி விடறாங்க அப்படிங்கற ரேஞ்சுல செமி-விர்ச்சுவல்-கல்ச்சுரல்-மாயா-மனோரஞ்சித-மெலட்ராமா-Noeffortneedednoholdsbarred அங்கத பீரங்கி சல்யூட். கபீர் கபீர்னு வச்சுரலாம் ஒன் டு ட்வெண்டிஒன் சலூட்.

ஏதோ செவன் சாமுராயையும் வெட்டியோரியோ புசிக்காவையும் ரெபரன்சு போட்டாச்சு, அடுத்து அப்படியே வந்து பெர்க்மன் ஒரு பொர்க்கிமேன், ஐசன்ஸ்டைன் ஒரு ஐஸ்வண்டிக்காரன், மைக்கேல் விண்டர்பாட்டம் ஒரு அண்டர்லெஸ்பாட்டம், டேவிட் லிஞ்ச் ஒரு கோழிக்குஞ்ச், கோவிந்து நிகலானி யாரோட நகலோ நீ அப்படின்னு போட்டுட்டா இன்னும் காரம் மணம் குணமெல்லாம் சேர்ந்து ஒரே தூக்கா தூக்கிருமே தூக்கி?
————————————————————————————————————–

இந்தக் குட்டிக்கதையும், இருப்பதும் இல்லாததும் ரஷ்யாவின் எந்தப் பின்னணியில் நடந்திருக்கும் என்றும், கூடவே குட்டிக்கதைகளின் அபாரமான வீச்சையும் சற்று விரிவாகச் சொல்லியிருக்கலாமே?.

நீங்கள் குறிப்பிட்டுள்ள காலம், தனக்கென்று தத்துவ மரபு எதையும் பெற்றிராத ரஷ்யக் கலாச்சாரம், அதி தீவிரமான Germanizationக்கு ஆளாகிக்கொண்டிருந்த காலம். சாரி சாரியாக ரஷ்யக் கல்விக்கூடங்களில் போதிக்க வந்தவர்கள், அறிவு’சீவி’களில் பெரும்பாலானோர் ஜெர்மானியர். அக் காலகட்ட ரஷ்யா கிட்டத்தட்ட ஹெகலிய இஞ்சின் பொருத்தப்பட்ட ஒரு கலாச்சாரமாகத்தான் இயங்கியது. இப்படி இருக்கும் காலகட்டத்திலே செருமனி குறித்தும் செருமாத மணி குறித்தும் சோக்குகளும், Jar மன்னர்கள் சொன்னதான a-neck-doteகளும் இருக்கத்தான் செய்யும்.

இந்தியாவுக்குள்ளிருக்கும் முட்டாள் சர்தார்ஜி சோக்குகள் ஐரோப்பாவுக்குப் போனா முட்டாப் போலக்குகள் குறித்த சோக்காகும், அமெரிக்க யாங்க்கிகளுக்கு ‘inbred southerners’ குறித்த சோக்காகும். பொப் கல்ச்சர் வித்துவான்கள் இதைப்பற்றியெல்லாம் தெளிவாக சொல்லி வைத்திருப்பார்களே?

அமெரிக்க எட்கர் ஆலன் போ காலத்தில், தற்போதைய ‘உலக மொழி’யான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படைப்புக்களுக்குள் அவர் அப்போதைய மேட்டிமை மொழியான ஃப்ரெஞ்சைத் தெளித்ததும், அக்காலகட்டத்திய போதலேர் போன்ற ஃப்ரெஞ்சுப் படைப்பாளிகள் அதே எட்கர் ஆலன் போவை ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சு வாசகர்களுக்கு அறிமுகம் செய்து, அமெரிக்காவில் பிரபலமடையுமுன் ஃபிரான்சில் அவர் பிரபலமடைந்தது என்று கல்ச்சுரல் இன்டராக்ஸன்ஸ் பற்றி சீரியஸ் குட்டிக்கதைகள் பல சொல்லி, அதே மாதிரி, கிணற்றுத் தவளையாக இல்லாமல் ஏன் உலகத் திரைப்படங்களும் பார்க்கவேண்டுமென்று முழ நீளத்துக்கு போதனை போடலாம்.

ஷோப்பன்ஹார் வளர்த்த நாயின் பெயர் ஆத்மா என்பதை வைத்துக்கொண்டு ஒரு குட்டிக்கதை பின்னலாம் – The world as Will and Idea எழுதக் காரணம், தூங்கிக்கொண்டிருக்கும்போது ஆத்மா அவரது கெண்டைக்கால் சதையில் கடித்தது என்பதால்தான் என்று ஒரு நீட்டு நீட்டலாம். ஆத்மா கடிக்குமா என்று ஒரு ஜோக்கையும் சொருகி வைக்கலாம். ஆத்மா ஸ்பாண்டெக்ஸ் பேண்ட் போட்டுக்கொண்டு கோத்திக் ராக் குழு ஒன்றில் இணைந்துகொண்டது என்று இன்னொரு தத்துவ-Piksan-‘A-neck-dote’ போட்டு, ஆத்மாவுக்கு ஆவி இருக்கிறதா என்று ஒரு அஹத்தோண்டிக் கேள்வி எழுப்பலாம்.

இல்லை, விளாதிமிர் விளாதிமிரேவிச் விளக்குமாறேவ் இப்படித்தான் தன் அவையில கூடியிருந்த மந்திரிகள் ராஜகுருக்கள் போன்றவர்களுக்கு என்ன சொன்னாருன்னா என்று ஆரம்பித்து ஒரு லைட்ஹார்ட்டட் எஸ்கப்பேடு ஜெனரேட் பண்ணலாம். Factorrhea by demand; notify in times of necessity.

குட்டிக்கதைகளை விட்டுவிட்டு, வெகுஜனத் திரைப்படக் கலாச்சாரம் என்பது, தரம் என்பதை ஒரு கறாரான அளவீடாக வைக்காமல், ‘குத்துமதிப்பா உனக்கு இவ்வளவு குடுத்தா போதும்’ என்ற ரீதியில் இயங்குவதை (ரஜினி வேலை எறிந்தால் வேல் சர்ரென்று ஒரு லட்சுமண ரேகை போட்டு மாஜிக்கல் ரியாலிச எஃபெக்டு காட்டுமே, இல்லை மர்து பட ரீமேக்குல ஜீப் சர்ருன்னு போயிட்டே இருக்கும், டபார்னு நின்னுரும் பாத்தா பம்பர்ல கயிறு, மறு நுனி ரஜினிகாந்து கால்ல, இல்ல, இய்யா ஆஆ அப்படின்னு ஒரு ஜெர்க் மட்டும் ஃப்ரேம் மூலையில வரும், தலைவர் மார்ஸில இருந்து மன்னார்குடி வரைக்கும் தொண்ணூற்றேழு குட்டிக்கரணம் அடிச்சு வந்து நிப்பாரே, இது மாதிரி) சுட்டிக் காட்டுவது தவறாமா?

வெகுஜனப் பத்திரிகைகளின் நேர்க்கோட்டுச் சித்திரிப்புக்களை மாற்றிய மருது நாசரின் தேவதை படத்தில் ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றியிருக்கிறார். ஜீன்ஸ் படத்தில் கடைசியில் டைனசார் வருமே (படத்தை முடிக்கப் போறோம்யா, ஸ்பீல்பெர்கு மாதிரி இந்தா இந்த கிராபிக்சு எபெக்டையும் எங்களால காட்டமுடியும்னு காம்பிச்சுக்குறோம், ஒரு டபிள்சு கதை, அதுல ஒரு டைனசார் – படம்னா லாஜிக்லாம் பார்க்கக் கூடாது, அமெரிக்காவில டபிள்ஸ் மெடிக்கல் காலேஜில படிக்கிறாங்க, ஐஸ்வர்யா ராயை லவ் பண்றாங்க, படம் முடியறப்ப டைனசார் வந்து வாழ்த்துது. கப்பிரியேல் கரியப்பா மரியமுட்டைக்கோசு சொல்ற மாயா யதார்த்தவாதம் மரக்குடுக்கை தந்திரவாதம்ங்கிறதெல்லாம் இதுதான் கேட்டுட்டேங்களா சரியா?

இதுக்கு மேல கிராபிக்சு அடுத்த படத்துல மிச்சம் சொச்சம் வச்சதையெல்லாம் வழிச்சு வாழை இலையில சுருட்டித் தந்துர்ரோம் – சும்மா நொய் நொய்ங்கப்படாது, புதுசா வந்ததையெல்லாம் அள்ளி வச்சு செஞ்ச கிராபிக்ஸெல்லாம் வேஸ்டாப் போவுதுல்ல? எங்கயாவது பொருத்திரலாம்னு பார்த்தோம், முடியலியே?)

அந்த மாதிரியெல்லாம் இல்லாம கலை நிர்மாணம் வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்ட படங்களுள் தேவதை யும் ஒன்று. அரசவை என்பது சுல்தான்கள் மாதிரி பாவாடை, நுனியில பட்டு ஜரிகை, கூர்மையான கிரீடம் (ஜகஜக கோல்டு தாள் வேற அதுல) என்று சக்கா சக் டெம்ப்ளேட் போடாமல் ஒரு அசல் தமிழ்க் குறுநில மன்னனின் சுற்றுப்புறம் எப்படி இருக்கும் என்று அந்தக் காலகட்டத்தில் போடப்பட்ட செட்டுகளில் இருந்து, கே.ஏ.குணசேகரன் போன்றவர்களை சினிமாவுக்குள் அறிமுகப்படுத்தவாவது செய்ததில் இருந்து, ஞான.ராஜசேகரனின் முகம் படத்திலிருந்து, மலையாள தகராவின் ரீமேக்கான ஆவாரம்பூ வில் நேர்த்தியான பாத்திரப்படைப்பிலிருந்து (கடற்கரையில சர்ஃப் நுரை அப்பிக்கிட்டு நடிகை வைதேகியக்காவோட தங்கச்சி நந்தினி புரள்றதையும், மாட்டுக்கு தீவனம் கலக்கறப்ப வினித்தோட தொட்டியில அண்டர்வாட்டர் ஹாண்டு எலக்ட்ரிக் சாக் அட்டாக் குடுக்கிறதையும் கவனிக்கிறது தவிர நாசரையும் கவனிக்கலாமுல்ல), தேவர் மகனில் மாயத்தேவரிலிருந்து தலைவாசலின் பீடா சேட்டிலிருந்து என்று லோக்கல் ஃபிளேவரை சீன விஸிறி மாதிரி விஸிறிட்டே இருந்தாத்தான் தமிழ் ஸினிமா பத்தி சொல்ல அருகதை இருக்குமோ?

நாசர் பாப்கார்ன் எடுத்ததுக்கும் பாண்டியன் பட கிளைமாக்சுல ரஜினிகாந்தோட மோட்டார் சைக்கிள் எக்ஸாஸ்ட் பைப்புலருந்து தீ வர்றதுக்கும் (எரியுதுல்ல ;-)) சரியாப் போச்சுன்னு வச்சுக்கலாமா. எக்ஸாஸ்ட் பைப்புல தீ வர்றதுக்கு அது என்ன Ghost Rider படமா இல்லை பேய்ப்படமா?

ஓ, மாயா குதர்க்கவாதமில்ல அது, சரி சரி.

ஏன், ஹாலிவுட் படங்களில இது இல்லியா? Slasher படங்களிலயும் Khaa:lej chicks go on fun trip – car breaks down – chicks check out a haunted house – there lives a slasher dude with a mouth full of half-eaten babies ங்கிற மாதிரி ஸ்டோரிபோர்டுகளில வரும். வில்லன் நடிகர் பேச்சு வில்லன் நடிகர் மாதிரி இருக்குங்கிற மாதிரி பொதுவா ஒரு டயலாகைப் போடுறப்ப, சரி தமிழ்ப் படமாவது பாத்திருக்கீங்களான்னுதான கேக்கவேண்டியிருக்கு?

என்ன ஆவாரம் பூ படத்துல வினித்தை தராசுத் தட்டால வெளுத்து எடுக்கிற மாதிரியா நாசர் வெளுத்து எடுத்துட்டெர்? மகேந்திரனோட பூட்டாத பூட்டுக்கள் பார்த்ததுண்டா? ஜெயபாரதியோட குடிசை பார்த்ததுண்டா? அதெல்லாம் பொட்டிக்குள்ள சுருண்டுகிச்சு அதனால அது டப்பா படமாத்தான் இருக்கும், விடுங்க.

ஏன், ரஸினியோட றாணுவ வீறன் படத்தில வில்லனா ஆக்டு குடுத்த சிறஞ்ஸீவி (Chow Yun Fatடுக்கு நீலக் கண்ணு வைக்கிறது மாதிரி சிரஞ்சீவிக்கு அப்பவே வச்சிருப்பாங்க, கலக்கல் இல்ல?) கூடத்தான் இன்னிக்கு ஆந்திராவுல ஒரு படம் றெட்டி (Reddy Freddy ன்னு அடுத்து ஒரு படம் தான் பாக்கி ;-)), ஒரு படம் நாயுடு ஒரு படம் பலிஜாங்கிற ரேஞ்சுக்கு வால் அட்டாச்டு ரோல்ஸ் பண்ணி வரிசையா ஹிட் குடுத்துகினு இருக்காரு. தேவைன்னா மாப்பிள்ளை படத்தில ஒரு ஸ்டைல் ஸண்டை போட்டு சிக்கா சிக் அப்படின்னு முட்டியில இருக்கிற தூஸைத் தட்டிக்கிட்டே படியில இறங்கி வருவாரு பாருங்க (ஸிறஞ்சீவி)? சேச்சே, அப்படியே அமலாவைப் பாலத்து மேல சாச்சு தொண்ணுத்தேழு மொழியில ஐலவ்யூ சொல்லுவாரு பாருங்க, அதுல்ல மொரான்ஸு, அடச்சே ரொமான்ஸு.

கல்ச்சுரல் கொரிச்சான்ச (அதான், horizons) ப்ராடண் பண்ணணும்னா என்ன பண்ணலாம்?

முதல்ல, பொழுதுபோக்குக்கு சினிமா பார்க்குறதிலர்ந்து தொடங்கலாம். போட்ட காசை எடுக்கமுடியிறதுதான் சினிமான்னா அதே லாஜிக்கை எல்லாருக்கும் வைக்கலாம். வின்செண்ட் வாங்கோவும் அவர் சகோதரர் புண்செண்ட் போங்கோவும் வரைஞ்ச ஓவியங்களில ஒண்ணு கூட விக்க முடியலையாம். கித்தானுக்கும் ப்ரைமருக்கும் சட்டத்துக்கும் ஆணிக்கும் தூரிகைக்கும் போட்ட துட்டைக்கூட திருப்ப முடியாத இவனெல்லாம் என்ன மனுசன், என்னத்தை வரைஞ்சிருக்கான் பொழப்பத்த பய. கோழி விட்டையப் போட்டு பொறவு நட்டு கழண்டு அதுல வுழுந்து பொரண்டது மாதிரி. மார்க் ஷகால் த ஃப்ளையிங் கேரேஜ் வரைஞ்சதுக்கும் அவனோட யூத டுபுக்குக்கும் என்னத்தை சம்பந்தம் இருக்க முடியும்.

தாஸ்தாவிஸ்கிக்கும் போட்ட துட்டைப் புரட்ட முடியலை. அவனோட அப்பனை அடிச்சே கொலைசெஞ்சாங்களாம். தானா.விஸ்கி கடைசி வரைக்கும் துட்டு இல்லாமத்தான் இருந்தாரு, செத்தாரு, இவனெல்லாம் என்னத்தைப் புத்தகம் எழுதி என்னத்தைக் கிழிச்சான், எழுதினா அப்படியே வைக்கப்போர் மாதிரி துட்டு சேர்ந்துரணுமில்ல Buplisserக்கு.

நிற்க.

பிபிசி ரஜினியைக் குறித்து எழுதியிருக்கும் cult hero என்று விளித்துத் தொடங்கும் இந்தக் கட்டுரையை வாசித்துப் பார்க்கவும். பிபிசி அவ்வப்போது ப்ராட்காஸ்டிங்குடன் புல்ஷிட்டிங்கும் செய்வதால், ப்ரீத்தி ஜிந்தாவைப் பத்தி எழுத்தாளினியாக வைத்துக்கொண்டு ரஜினிகாந்தை cult hero என்று குறிப்பிடுவதிலுள்ள அரைவேக்காட்டுத்தனம் என்ன என்று புரியவில்லை என்று ரஜினிகாந்தை விட்டுவிட்டு, ரஜினிகாந்தை ரசிப்பவர்களின் ரசனையில் ஊசி ஏற்றுவதிலுள்ள அரசியலைக் கவனிக்கவேண்டிய அதே நேரத்தில், வெகுஜனக் கலாச்சாரம் எந்தெந்தக் காரணங்களால் கட்டமைக்கப்படுகிறதென்பதன் வெகு அடிப்படையான புரிதலும் இன்றி, வெகுஜனக் கலாச்சாரத்தை விமர்சிக்கும் அது தவிர்த்த (..தாக நாம் கருதும்) கலாச்சாரம் எதைக் குறிவைத்து இயங்குகிறது என்பதைக் குறித்த புரிதலும் இன்றி, இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று உலக சினிமாவை விமர்சிக்கிறேன், அதைப் பார்ப்பவனெல்லாம் ஏதோ pseudo சீவிகள் என்ற ரேஞ்சில் முன்வைப்பது வெகுஜனப் பத்திரிகைகளும் அந்துமணி போன்ற வாரமலர் அரைவேக்காட்டு அறிவுசீவிகளும் உருவாக்கி வைத்த பிம்பங்கள்.

அசலில் பார்த்தால் உலகத் திரைப்படங்கள் என்ற ரீதியில் முன்மொழியப்படுபவை அனைத்தும், வெகுஜனப் பார்வைக்கு தன் கலாச்சாரத்துக்கு வெளியிலுள்ள பார்வைகளை அறிமுகப்படுத்தும் முயற்சியே தவிர, பீற்றலோ பிரஸ்தாபங்களோ அல்ல. படம் பார்க்க வருபவர்களை யாரும் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதில்லை.

இப்படிப் பீற்றித் திரியும் Snobகள் யாரென்று அசலில் பார்த்தால், B-rated ஹாலிவுட் தகரடப்பாக்களையும் லோக்கல் பெரிய பட்ஜெட் டப்பாக்களையும் பார்த்துவிட்டு பீட்டர் விடும் அரைகுறைகள் – இவர்களுக்கு, தங்களது உடனடி எல்லைக்கு வெளியிலிருக்கும், எளிதில் மேற்கோள் காட்டக்கூடிய (டபடபடபன்னு க்ளைமாக்ஸுல சுடுவானே, அந்தப் படம்தான என்பான் என் ஒரு பள்ளித் தோழன். அப்போது, சரி பெரிய ஹாலிவுட் பட மேதாவி என்று நினைத்துக்கொள்வோம். நாலைந்து முறை இதையே கேட்டபிறகு மடக்கியபோது தெரிந்தது ஒரு இழவையும் பார்த்திருக்கவில்லை என்று. எப்படிரா பிறகு என்றால், அதான் எல்லாப் படத்திலயும் கிளைமாக்ஸுல டபடபன்னு மெஷின்கன்னுல சுடுறான் தான என்றான் கூலாக.

உண்மைதான், அப்போது பார்த்துக்கொண்டிருந்த படங்கள் அனைத்திலும் கிளைமாக்ஸில் மெஷின்கன் சண்டைகள் இருக்கத்தான் செய்தன) எதுவுமே எளிதில் அப்பீல் ஆகும். புதுப் பணக்காரனை குற்றால அருவியில் எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிவதுபோல, இவர்களை அடையாளங்காண்பதும் கடினமான விஷயமல்ல ;-).

B rated ஐடியாக்களை அற்புதமான படமாக்கும் டாரண்டினோ போன்றவர்களும் ஹாலிவுட்டில் உண்டு, படத்தில் சம்பாதித்து துட்டு பார்த்துவிட்ட ராபர்ட் ரெட்ஃபோர்ட் போன்றவர்கள் Sundance திரைப்பட விழா நடத்துகிறார்கள். தனது கலாச்சாரத்தை மையமாக வைத்து இயங்காத எந்த ஒரு துறையும் உருப்பட வாய்ப்புக்கள் குறைவு – இல்லையென்றால் மலிவான ஈயடிச்சான் காப்பிகளாகத்தான் போய் முடியும்.

உலகின்மீதான அமெரிக்காவின் பெரும் தாக்கத்திற்கு அதன் வெகுஜனக் கலாச்சாரத்துக்கு பெரும் பங்கு உண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது – Cars என்று ஒரு படம் வருவதும், Spongebob Squarepants என்று படம் வருவதும் அதன் அபரிமிதமான கலாச்சார யந்திரம் நகரும் பாதையில் அமெரிக்கக் கலாச்சாரத்தின் தும்பு தூசியும்கூட தடங்களை விட்டுப்போகமுடியும் சாத்தியமே.

மோட்டார்சைக்கிள்ஸ் என்றும் அரிவாள்மணை என்றும் நாம் ஏன் படம் எடுக்காமல், ரஜினிக்கு பொன்னிற டோப்பா வைத்து முகத்தில் சுண்ணாம்பு அடிப்பது ஏன் என்று கேட்கலாமா? ரஜினிக்கு ‘cool pigment challenged dude’ கெட்டப்பில் blonde டோப்பாவும் வெள்ளைத் தோலும் வைக்கலாம், ஆனால் அங்கே இருந்து வரும் ஜகஜகஸ்தான் கிர்கிஸ்தான் குர்திஸ்தான் ஃபிலிம் சரக்கு மட்டும் சரிப்பட்டு வராது.

புதிதாக எதையும் அறிமுகப்படுத்த முயலும்போதெல்லாம் வந்து குதிக்கும் இந்த ஓட்டல் அதிபர்கள் ஓட்டும் ஓட்டில் நொண்டியாவது வெகுஜனக் கலாச்சாரத்தின் சாத்தியப்பாடுகளுமே. இந்த ஓட்டலைத் தாண்டி கடைசியாகச் செய்யமுடிவது ஈயடிச்சான் காப்பி மட்டுமே (அவஞ் செஞ்சிருக்கான்யா, நாங் கிடையாது முதல்ல பண்ணது) – அது ஜெகஜோதியாக நடந்துகொண்டிருக்கிறது. இங்கே சீவுவது என்னத்தையோ அறிவு’சீவி’யின் தலை என்று பார்த்தாலும், மற்றவன் வேலையை முடித்தபின் மிச்சம் மீதி இருப்பதைக் கூட்டிப் பொறுக்குவதுதான் நடைமுறை லட்சணம்.

சினிமாவுக்கே இந்தக் கதி, இதிலே மிச்சம் மீதி இருப்பதெல்லாம் இன்னும் பெருங் காமெடிதான். சுயசிந்தனை என்று ஒன்று கூட வேண்டாம், அதற்கான முயற்சியாவது இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது கூட பெரும் குற்றம்தான் போல!! வெகுஜனக் கலாச்சாரத்துக்கும் ஒரிஜினாலிட்டி உண்டு என்பதை விளக்கவேண்டுமென்ற நிலைமை இருப்பதே பெரும் அபத்தம்.

———————————————————————————————-

//What is art cinema? There is nothing called art, commerce or science cinema. //
//Apart from Haazaron Khwahishey Aisi, all my films were so-called commercial films.//
//Someone first has to explain to me the meaning of an art film.//

நாளைக்கு மீரா நாயரின் படத்தில் வாய்ப்புக் கிடைத்தால் இதே கேகே ‘He has a complex personality’ என்ற ரீதியில் தனது கதாபாத்திரம் குறித்த நாசூக்கான detachmentடுடன் படர்க்கையில் பேசுவதைப் பார்க்கமுடியும் 🙂 இதெல்லாம் புதிதா என்ன? ‘காமர்ஸ் பட’ 😉 ப்ரமோஷன் பேட்டிகளில் எந்த நடிகர்/நடிகையாவது தனது பாத்திரத்தைப் பற்றி படர்க்கையில் பேசிப் பார்த்திருக்கிறீர்களா?
———————————————————————————————–

ராமராஜனுக்கு அடுத்தபடியாக (அவராவது கிராமத்துக் கதைகளில் என்ன புள்ள இப்படியெல்லாம் பேசலாமா நீ என்று லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு சிவப்பு சிலுக்கு சொக்காயில் வெள்ளந்தியாக என்னத்தையாவது கேட்பார் – அதையாவது ஓரளவு ஒத்துக்கொள்ளலாம்) பக்கா காஸ்ட்யூம் ரசனை உள்ளது ரஜினிகாந்த் என்று சொல்லலாம் 😉 (தளபதி ஒரு விதிவிலக்கு).

இது தவிர, படையப்பா, பாபா என்று சமீபத்தில் வந்த படங்களில் கூட, மேக்கப்பிலிருந்து காஸ்ட்யூமிலிருந்து ஒளிப்பதிவிலிருந்து, ஏன் – இசை தவிர்த்த பிற எந்த ஒரு தொழில்நுட்ப விவகாரமும் இப்படி மகா சொதப்பலாக இருக்கிறது என்று உங்களைப்போன்ற ரஜினி ரசிகர்கள்தான் சொல்லவேண்டும்.

சந்திரமுகியில் அமெரிக்கன் ரிட்டர்னாகி பிரபுவைக் காப்பாற்றி அடியாள்களை உதை விட்டுவிட்டு மேட்ரிக்ஸ் புகழ் ஃப்ரீஸ் ஃப்ரேமில் மோஷன் கேப்சர் கேமரா சுத்தி சுத்தி பிடிக்கும் போஸில் அசலில் ஒரு மனிதன் நின்றால் கப்பை டர்ரென்று இரண்டாகக் கிழிந்துவிடும் என்னும் யதார்த்தம் ஒருபுறம் இருக்க, அதே காட்சியை கப்பை கிழியாமலும் அடிக்க முடியும் என்ற மாதிரிக் குறைந்தபட்ச நேர்த்தியுடனாவது எடுக்க முடியாதா?

மேட்ரிக்ஸ் எல்லாம் தேவையில்லை, என் ராசாவின் மனசிலே படத்தின் சண்டைக் காட்சிகளையும், அதற்கு இளையராஜாவின் இசை எங்கே தொடங்கி எங்கே crescendoவுக்குப் போகிறது என்றும் பார்த்திருக்கிறீர்களா? பிஷ்க்கா பிஷ்க்கா என்று ரஜினியின் alpha male கோமாளிச் சண்டைகளைப் பார்க்கும்போது ஒரு அளவுக்கு மேல் அப்படியே கூசுகிறது என்பதுதான் நிஜம்.

சண்டைக்காட்சிகளில் விடப்படும் குத்துக்களில் கூடவா ஐயா யதார்த்தம் இல்லாமல் இருக்கவேண்டும்? ரஜினிகாந்த்தின் சில குத்துக்களை அசலில் அதே கோணத்தில் விட்டால், அரைக் குத்திலேயே மணிக்கட்டு இரண்டாக முறிந்துவிடும். இந்த மாதிரி சொத்தை விஷயங்களே நூறு சொல்லலாம்.

மெதுவாகத்தான் முன்னேறி வரும் என்கிறீர்கள். வெகுஜனக் கலாச்சாரத்தில் யாரும் தன் இஷ்டப்படி படம் எடுக்கலாம், ரஜினி உட்பட. அரசியல் என்று வந்தால் காமராஜ், கக்கன் மாதிரி இருக்கணும் என்று உதாரணப் பட்டியல் கொடுப்பது தவறு என்றால், திரைப்படம் என்று வந்தால் பாடாவதியாக இல்லாமல் இது இது போல இருக்கவேண்டும் என்று திரைத்துறைக்கு உள்ளிருப்பவர்களும் வெளியிலிருப்பவர்களும் சொல்வது தவறுதான் என்று ஒத்துக்கொள்ளலாம்.

எல்லா விஷயத்திலும் தீவிரமாக இருக்கத் தேவையில்லை எனினும், இந்த மாதிரி சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று கிடைப்பதற்கெல்லாம் சப்பைக்கட்டு கட்டி குப்பை மேல் செண்ட் தெளித்து முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தால், நாளைக்கு ஒரு சமூகத்தின் அசல் ரசனைகள் எந்தச் சாக்கடையோடு அப்படியே அடித்துக்கொண்டு போயிற்று என்று ஆச்சரியப்படுபவர்களுடன் சேர்ந்து நாமும் ஆச்சரியப்பட்டுக்கொள்வதுதான் நடக்கும், சுய ரசனை என்று ஒரு சல்லியும் இருக்காது.

இந்த ‘செத்த பயல்’ மனோபாவம் எங்கிருந்து வருகிறது என்று நினைக்கிறீர்கள்? புது விஷயங்களுக்குத் தங்கள் புலன்களைத் திறந்து வைக்காமல் சும்மா பேச்சுக்கு மட்டும் எட்டுத் திசையும் போய் லட்டு பாக்கெட் வாங்கி வரணும் என்று கூவிக்கொண்டே புது விஷயங்களுக்கு வெட்டுக்கால் கொடுக்கும் ஹிப்போகிரட்டுகளிடமிருந்துதான் வழிந்து வழிந்து உங்கள், என் காலடியிலென்று நாற்றம்பிடித்த குட்டையாகத் தேங்கியிருக்கிறது.

————————————————————————————————————–

பம்பாய் செட்டியும் பாப்புக் குட்டியும் ஒண்ணுதான் என்ற அத்வைத நிலையை அடையலாம், ஆம், இந்த கேடுகெட்ட நார்மன்கள் ஆங்கிலோ சாக்ஸன்களின் மொழியைக் குழப்பி த்வொ என்று இருக்கவேண்டிய Twoவை டூ என்று bastardized Anglicize செய்தார்கள் என குற்றஞ்சாட்டி வருந்தலாம் – அடடே த்வொத்வொத்வொங்கிறது தோவுக்கு இன்னும் நெருக்கமாய் இருந்திருக்குமே என்று குழையலாம். இல்லை நாசரும் ரஜினியும் ஒன்று என்று இன்னும் உங்கள் ஸ்டைல் அத்வைதத்தை நீட்டலாம் – அப்போது இருதலைப் பாம்பு ஒற்றை உடல் மாதிரி நாசரின் தலை ரஜினியின் தலையைத் திட்டுவது தலைக்கா வாலுக்கா என்று ஒரு கப்புளாஃப் அனுமான உபமான அஸ்திரங்களை விடலாம்.

அசலில், ரீடர்ஸ் டைஜஸ்டைவிட ஹூமுதம் ரொம்ப ஸ்வாரஸ்யமான பத்ரிகைதான். ஸுதேஸிக் கள்ளைக் குடித்துத்தான் ளோக்கள் ஃப்ளேவர் காட்டவேண்டுமென்றால், காலங்கார்த்தாலே ஆறு மணிக்கு இறக்கும் நேரத்துக்கு போய்க் குடிக்கவேண்டும், ஷுண்ணாம்பு வெய்த்துக்கு நழ்ழது இழ்ழை பாருங்க. கள்ளே கதின்னும் இல்லாம சீமைசரக்கு (எங்கே போசு ச்?) ம் எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாமுல்ல? கள் என்ன தீர்த்தமா இல்லை சிங்கிள் மால்ட் விஷமா? குடிக்கிறது சாலிக்குன்னு ஆயிருச்சி, சும்மா கள்ளை மட்டும் குடிச்சு புளிச்ச ஏப்பம் விடாம, சீமைச்சரக்கை மட்டும் குடிச்சு மணப்பிரி பிரியாம ரெண்டையும் ருசி பார்க்கலாமுல்ல? சீமைஸ்சரக்கெல்லாம் வேஸ்ட்டு, நம்ம சுதேசிக் கள்ளுதான் டாப்புன்னா ஏன் சீமைஸ்சரக்கெல்லாம் வேஸ்ட்டுன்னு முதல்ல சொல்லணும். சீமைஸ்சரக்குதான் உஸத்திங்கிறவன் லோக்கல் சரக்கை அடிக்காம நேரா ரசிய வோட்கா (வாத்கான்னு போட்டுக்கலாமா ஒரு னாஸூக்குக்கு?) குடிச்சு பீருன்னாக்கூட snob’s choice galore, baby அப்படின்னு, ஒன்லி கைநக்கன் (அல்லது) போத்தல் பீர் குடியேன்னு கழனித்தண்ணி மாதிரி இருந்தாலும் லோக்கல் ப்ரூ கொழாய்லர்ந்துன்னு குடிச்சு, Sidewaysல சொல்லிப்புட்டாங்கங்கிறதுக்காக மெர்லோ குடிக்காம இருந்துன்னு குறிப்பான குடற்பயிற்சி குடுத்து வளர்ந்த குடிதா(த்)தாக்க (குகுகுகு – போலமிக்குப் பொரிவண்டி கல்லுல தடுக்கிப் பொரிமூட்டை கவுந்து பொரியெல்லாம் சிதறினாக்கூட இப்பிடித்தான் லைனா சிதறும் ;-)) ரேஞ்சுலயா ஃபில்லும் காட்டுறான்?

ரஸினி படத்தையோ வேறேதோ படத்தையோ பார்த்துட்டுத்தான ஸொல்றான்? இதே ரேஞ்சுல கள்ளுன்னு நீங்களும் ஸீமைஸ்ஸரஹ்ஹூன்னு ஓணமிட்டாப்பொயிக்குப்படவுல (oணமட்டோpoeic) வார்த்தைக் கடல்ல ஸறுக்கி போயுட்டே நானும் பொப்யூலர் குல்த்தூர் விவாதத்தைத் தொடக்கிரலாமா? நீங்க கள்-கருவாடு-குமுதம்-கபடி-குட்டி (கககுகக – ஓரளவுக்கு ஓக்கே) ங்கிற சைடுலர்ந்து பேசுங்க, நான் சீமைஸ்சரக்கு-போர்_பொக்கை_யூ-க்ரீப்பர்ஸ்_நோஜெஸ்ட்-ஃபுட்பால்ங்கிற மாரி பேசுறேன். (இங்கேயே கவுந்துட்டனே, சீபோக்ஃபு ங்கிறது ஒத்து வரலையே – ஒரு சாடைக்கு ஹப்போ குய்ஜலாய்னன் ங்கிற பின்னிஷ் பிலாசபர் (நோட் த போயிண்ட், ஃபின்னிஷ் இல்ல, பின்னிஷ், ஃபிலாஸஃபர் இல்ல, பிலாசபர் – Pilaa_sapar அப்படின்னு படிக்கணும். Pila_ZSafar அப்படின்னு என்னத்தையும் சொல்லிராதீங்க, வெஸ்ட் பேங்க் காஜா ஜ்ட்ரிப்பு நேம் மாதிரி இருக்குன்னு ப்ளாக்லிஸ்டுல டைவடிச்சுரப்போவுது பேரு) எழுதின பொஸ்தவம் பேரு மாதிரியில்ல இருக்கு.

லாய்னன் அப்படின்னு அன் விகுதியோட முடியறதால அவரு னம்மளை விட, உங்களை மாதிரி, கந்தன் கடம்பன் கதிர்வேலன் கார்த்திகேயன் அப்படின்னு இருக்கிற அசல் தமிழ் மனங்களோட Fulse ஃபிடிச்சுப் பார்த்திருக்கிற, அழகியல் ஈடுபாடுகளுக்கு இன்னும் னெறுக்கமா இறுப்பாறுன்னு னினைக்கிறேன் – ஸோதிச்சுப் பாருங்க). மேலும் விரிவா இந்த மாதிரி hint development குல்த்தூர் பேப்பர் II க்வெஸ்சன்ஸ் குடுங்க – நம்ம பொப் ரஸனையையெல்லாம் கவுத்தி வைக்க ஸரியான இடம். NPK கூட்டுத் தொழுஉரம் போட்டு வளர்த்த பொப் குல்த்துர் அறிவுக் கிடங்கு இல்ல (விவசாயிகளுக்கு விளக்கவேண்டிய நேரத்துல NPKன்னா நெனப்புதான் பொழப்பக் கெடுக்குது உரம் அப்படின்னு கப்புன்னு விலாவாரியா விளக்கிடுவீங்க தான? ;-)) – அப்பிடியே பாஞ்சிராது வயலுக்குள்ள?

இப்பிடி மேட்டரை சொல்லாம முழ நீளத்துக்கு circumambulatory (பிரதோஷமாயிருந்தா ஆப்போசிட் டைரக்ஸன்ல சுத்திருங்க மீற்றர) மீட்டரைப் போட்டப்புறம், நிசத்துல என்னன்னு இப்ப பார்ப்பமா?

செவன் சாமுராய் பைசைக்கிள் தீவ்ஸுன்னீங்க – இந்த இரண்டு படத்துக்கும் நான் பி.ஆர்.ஓ ஏதும் கிடையாது. ரஜினி படங்களை திட்டிக் கிழிக்கிறாங்க அப்படிங்கிறீங்க. தப்புன்னே வச்சுக்கலாம்; ரஜினி படத்தை பார்த்துட்டு, என்ன இப்படி கந்தரகோளமா இருக்குன்னு கிழிச்சுத் தொங்கவிடுறாங்க. இந்த அறிவுசீவிகள் தூக்கிவைக்கிற படத்தைப் போட்டு நாறடிக்கணும்னா அந்தப் படத்தைப் பார்த்துட்டு உங்க விமர்சனத்தை எழுதலாமே?

ரஜினி படத்தைத் தாக்கி யார் எழுதினதுன்னு பாருங்க, அவன் என்ன படத்தை நல்லாயிருக்குன்னு எழுதியிருக்கான்னு பாருங்க, அந்தப் படத்தைப் பாருங்க, பிடிக்கலேன்னா டார் டாராக் கிழிச்சு தொங்க விடுங்க. அது நேர்மையான அணுகுமுறை. மேலே சொன்ன இரண்டு படமும் உங்களுக்குப் பிடிக்கலைன்னா, ஏன் பிடிக்கலைன்னு எழுதுங்க.

அவை நம் படங்கள் இல்லையே அப்படின்னு கவைக்குதவாத கல்ச்சுரல் சுதேசி ஸ்டேட்மெண்ட் விட்டீங்கன்னா, அவை நம் டூத்பேஸ்ட் இல்லையே, காலையில் உக்காரும் ஃப்ளஷ் டாய்லெட் இங்கிலாந்து மகாராணிக்காக வடிவமைக்கப்பட்டது, அது நமது இல்லையே, காரும் பஸ்ஸும் நமது இல்லையே, தார் ரோடு நமது இல்லையே, பேண்ட் சட்டை நமது இல்லையே, பால்பாயிண்ட் பேனா நமது இல்லையே, பச்சை எழுதுபலகை நமது இல்லையே, சட்டையில் இருக்கும் காலர் நமது இல்லையே, காலர் விறைப்பாக இருப்பதற்கு சொருகி வைத்திருக்கும் பிளாஸ்டிக் பட்டை நமது இல்லையே, ஹம்ப்யூட்டர் நமது இல்லையே, கீபோர்டு நமது இல்லையே, ரோமனைஸ்டு ஆங்கிலத்தில் தாய்மொழியை அடிப்பதுகூட நமது இல்லையே, சுருக்குப்பை போல இல்லாமல் இருக்கும் பையின், பேண்ட்டின் ஜிப் நமது இல்லையே, திரைப்படத்தில் புரொஜக்டர், அகேலா கிரேனிலிருந்து அவிட் எடிட்டிங் வரை எதுவும் நமது இல்லையே (blonde டோப்பா வேண்டுமானால் நமதாக இருக்கும் ;-)), ஏ.ஆர்.ரகுமானின் சின்தஸைஸர் நமது இல்லையே, அயல்நாட்டுக்கு சினிமாக் குழு போக உபயோகித்த விமானம் நமது இல்லையே, திரையரங்கில் டிக்கெட் கவுண்டர் என்று ஒன்று நமது இல்லையே, இடைவேளையில் போக உபயோகப்படுத்தும் மூத்திரப்பிறையின் வடிவம் நமது இல்லையே, இடைவேளையில் நம்மூருல குடிக்கும் நெஸ்கஃபே மெஷினோ ஐஸ்க்ரீம் மெஷினோ நமது இல்லையே, மெஷினில் இருக்கும் வனில்லா பிஸ்தா ஸ்ட்ராபெரி ஃப்ளேவர் நமது இல்லையே, பாப்கார்ன் நமது இல்லையெ (ஹொலிவூட் பொப்கார்னை சொல்லவில்லை, இந்த லிஸ்ட் எல்லாம் நமது லோக்கல் தியேட்டர்களில்தான்) – கடலைமிட்டாயும் வறுத்த கடலையும் இருந்தாலும், பஃப்ஸ் நமது இல்லையே, பஃப்ஸ் மிஷின் நமது இல்லையே, மைக்ரோவேவ் நமது இல்லையே, வீட்டுக்கு வந்து தண்ணீர் குடிக்கும் ஃப்ரிட்ஜ் நமது இல்லையே, மின்சாரம் நமது இல்லையே, ட்ரான்ஸ்ஃபார்மர் நமது இல்லையே என்று நீட்டலாமா?

ஒரிஜினாலிட்டி தேவை இல்லை, படம்னா சும்மா குத்து மதிப்பா இவ்வளவு இருந்தாப் போதும் என்ற ரீதியில் போன பதிலில் நீங்கள் சொன்னது மாதிரிப் பொதுப்புத்தியில் அசிரத்தை, நேர்த்தியின்மை இருந்தால் கடைசி வரை இப்படித்தான் பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டிருக்கவேண்டும். இந்தியாவைத் தூக்கி லோகத்தின் தலைமேல் வைக்கவேண்டும் என்று சவடால் விட்டுக்கொண்டு சின்ன விஷயங்களில் போனாப் போகுது பொடவை பறக்குது புடிச்சுக்க என்று பாடிக்கொண்டிருந்தால் எதுவும் உருப்படியாக நடப்பது சாத்தியமில்லாத ஒன்று.

இங்கே இவ்வளவு தோண்டு தோண்டுவது எவர் ரசனையையும் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல – ரஜினி படங்களுக்கு இடமே அளிக்கக்கூடாது என்பதல்ல விஷயம். எந்தவொரு புள்ளியிலும் தேங்கி நின்றுவிடக்கூடாது என்ற பொதுவான கருத்தாக்கத்தின் அடிப்படையில் எழும் விமர்சனங்களே அவை. ஹைஸ்கூலில் படித்த புத்தகத்தையா இப்போதும் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்? மேலும் மேலும் கற்றுக்கொண்டுதானே இருக்கிறோம்?

ரசனை முதிர்ச்சி என்பதை ஊட்டி வளர்க்கவேண்டியதில்லை, புலன்களைத் திறந்து வைக்க யத்தனிப்பவர்களை நோண்டாமல் இருந்தாலே போதுமானது. தமிழ்நாட்டு ஜனம் மொத்தமும் ஐரோப்பிய, ஆஃப்ரிக்க, தென்னமெரிக்க, சீன, ரஷ்ய, அண்டார்டிக்க ஆர்க்கிடுக்க படங்களைப் பார்த்து கொலைகொலையா முந்திரிக்கா போடவேண்டும் என்று யாராவது சொன்னார்களா என்ன?

கிஸ்கர் புஸ்கி டுஸ்கர் விஸ்கி படங்களெல்லாம் பார்த்து சீவுறவனெல்லாம் ரஸினிங்கிற மாமேதை பத்தி ஸொல்லலாமா என்று கேட்பதைத்தானே இங்கே கேட்பது? கிஸ்கர் புஸ்கி, டுஸ்கர் விஸ்கி போன்ற யூஸ்லெஸ்ராயர்களின் படங்களின்மேல் விமர்சனம் வைத்து நோண்டி நொங்கு எடுப்பதுதானே. மே-ஷ்டர் என்று குனிந்து கும்பிடு போடும் ஜாக்கிசான் படங்களில் இருக்கும் ஓட்டைகளையும் ஜப்பானிய Yakuza அடிதடி, கொலைப் படங்களைப்பற்றி கிழித்துத் தொங்கவிடலாமே.

நிச்சயம் அங்கேயும் இதேமாதிரி ஒத்த சிந்தனையுள்ள ஆட்கள் இருப்பார்கள் – என்ன இருந்தாலும் சாக்கிஜான் மாதிரி வருமா என்று – அதில் தவறு ஏதும் இல்லை. லாஜிக் எல்லாம் பார்க்காமல், அடிதடிப் படத்தில் நூறு பிணம் விழுந்தால் கொடுத்த காசுக்கு திருப்தியாக இருந்தது என்ற மாதிரி. அது தவறு இல்லை; அதைச் செய்துவிட்டு பிறரை நொட்டை நொள்ளையும் சொல்லலாம். அதுவும் தவறு இல்லை. ஆனால் நொட்டை நொள்ளையை படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லவேண்டும். எனவே, பைசைக்கிள் தீவ்ஸ் மற்றும் செவன் சாமுராய் இரண்டையும் பார்த்திருப்பார் என்ற நம்பிக்கையில், அவை குறித்த கிழித்துத் தொங்கவிடும் விமர்சனங்களை வைக்கவேண்டுமென்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குறைந்த முதலீடு, நிறைந்த பணம் என்பதுதான் ஃபில்லும் குறித்த உங்கள் கண்ணோட்டம் எனில், அமெரிக்க ஃபில்லும் உலகத்தின் (திரையில் ஓடுவதெல்லாம் ஃபில்லும் தானே? டிவி திரையாக இருந்தாலும் சினிமா திரையாக இருந்தாலும்?) முதலீடு-லாவம் கணக்குப் போட்டுப்பார்த்தால் இருப்பதிலேயே மிகப்’பெரிய’ ஹீரோ ரான் ஜெரிமியாகத்தான் இருக்கும். இனி ஜெரிமிராயரின் ரஸிகர்களுக்கும் Sweet Sweetback’s Baadasssss Song ரஸிகர்களுக்கும் எங்கேயாவது விவாதம் வந்திருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கிறேன்.

இந்தமாதிரி ஸ்வீட் அண்டு இண்டரஸ்டிங் காண்ட்ராஸ்ட்டாக நாலு பிட்டுப் போட்டு Ambreekan குல்த்துரை நாழியில் அளந்து ஊற்றிவிட்டதாக, நானும் ஒரு Ambreekan குல்த்துர் எக்ஸ்பர்ட் என்ற ரேஞ்சில் அடுத்து ஒரு நாலரையடி நீளத்துக்கு நளினபயாஸ்கோப்புல செல்ஃப்-ஃபில்லும் காட்டிக்கலாம் பாருங்கள் ;-), பொர்க்கிமேன் ஐயா Magic Lantern எளுதின மேரி ரஸினியும் எளுதுவாரில்ல, அப்ப படிச்சு என் கருத்துக்களை ‘மறுபரிஸீலனை’ பண்ணிக்கறேன்.

ஏ மம்முட்டி எகிறிக் குதிச்சிண்டே வேட்டியை மடிச்சுக் கட்டிட்டாண்டா, பொறவு போய் மிதிப்பாம் பாரு மிதி என்று தள்பத்தி படங்களிலிருந்து ரஸிக்கணுங்கிறீங்க அப்ப. அந்த மாதிரி ஷிவாஜி படத்து ஃபைட் சீன்களை Shaolin Soccer மற்றும் Kung Fu Hustle போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களுக்கு நிகரா எடுத்திருக்காங்க அப்படிங்கிறீங்க.

அவர் கண்ணப் பாருயா, கலரப் பாருய்யா ஸ்ரைலப் பாருயான்னு சொம்படிக்கும் கூல் குப்புராயர் ரஸினிகாந்தை, அவுக் அவுக்கென்று மிளகாய்வத்தல் தின்றுவிட்டு அவாவ்வவ்வாவ்வாவ்வாஆவஹ்ஹாஹ்ஹான்னூன்னு சில்லி சூனியம் வைத்துக்கொள்ளும் ரஜினிகாந்தைப் பார்க்கையில் செங்கல் என்ன, அதுக்குள் ஒளிந்திருக்கும் தேரை கூட கெக்கேக்கே என்று இளித்தது னான் பாற்த்த தியேற்றரில்.

ஆமா, ஷ்ரேயா நைனாவுக்கு என்னதான் பிரச்னை, எப்பப் பார்த்தாலும் ரெண்டு லிட்டர் பர்கோலாக்ஸ் குடிச்ச மாதிரி அதெல்லாம் முடியாது அதெல்லாம் முடியாதுன்னு குதிச்சிட்டே இருக்காரு? அவரு மீசை மட்டும் ஒரு சைசா பார்க்கிறதுக்கு சுவாரஸ்யமா இருக்கு. அய்யா, றகுவறன் CPR பத்தி சொல்லி பின்னாடி defibrillator டயலாகை தட்டு, தட்டுக்குள்ள தண்ணி, பல்லுக்கிடையில குச்சின்னு தோமா குருசு மிசன் கும்பிசிபிள் 3ல டிஃபிகல்ட்டு டு சர்வைவ் சீனாவுல வச்சதை வள்ளு வதக்குன்னு அள்ளித் தின்னுட்டாய்ங்களாய்யா அப்படின்னா ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைக்கிறேன்.

Khoooool. Check this out check this out ன்னு வர்ற Khooooool மூஜிக்குல யூரித்மிக்ஸ்/ஆனி லென்னாக்ஸோட Sweet dreams are made of these பீட்டை லைட்டா சொருவி ராவுறது ஏன்? யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்கோன்னா? ஒரு பீட்டுதான, மூணு மணி நேரப் படத்துல ஒரு பிட்டு லென்னாக்ஸில உருவுனா என்ன, மரிலின் மான்ஸன் ரீமிக்ஸுல உருவுனா என்ன, இந்தியன்ல டெலிஃபோன் மணிபோல்னு கிணிகிணின்னு Ace of Base பீட்டை உருவுனா என்ன, தேவா Dr.Albanஐயும் பாப் மார்லியையும் Khoooooooolaaaaa உருவுறப்ப ஏ.ஆர்.ரகுமான் அங்கங்க பல இடத்திலிருந்தும் உருவக்கூடாதுன்னா?

ஒரிஜினாலிட்டி தான் தேவை இல்லியே, எங்கே இருந்து வருதுன்னு சொல்றதும் வேஸ்ட் ஒஃப் டைம் தானோ? சும்மா சொல்லக்கூடாது, Doors வால் கில்மர் மாதிரி இருக்காரு நம்ம blondie தல. (எதுக்கு ஆங்க்ஹிலப் படத்தை ஒப்பிடணும்னு கேட்டா, ஏனுங்க இந்தியாவின் ஒரு பில்லியன் தலைகளில blonde தல எங்க இருக்கு? வெள்ளைக்காரன் tanning செய்யிறான்னா நம்ம தல melanin knockout கில்மா பண்றாரே – சபாஷ், சரியான போட்டி.

அட படம், ஸ்ரேயா சும்மா காமெடிக்கு சொல்லிட்டாங்க, இதெல்லாம் காமெடின்னா, காஸு குடுத்தா வாங்கிக்கோங்க, ஆனா ஓட்ட அங்கே போட்ருங்க அப்படின்னு லைவ் டெலிவிசன்ல சொன்னாரே ஐயா! ரியாலிட்டியை இப்பிடி மிக்ஸிக்குள்ள போட்டு அறைச்சா எது சீரியஸ் எது காமெடின்னே விளங்காமப் போயிருதே.) மீசை மட்டும்தான் எகஜ்ட்ரா. அது மறைக்குது இது மறைக்குதுங்கிறார், ஐஃபிள் டவரை இதயத்தில் நட்டாய் ங்கிறார்.

ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ ஸ்றாரோ ஸ்றாரோ ஸ்றாராதி ஸ்றாரோ அப்படின்னு டிகசிக் டிகசிக் எப்போதும் பச்சைத்தமில் லன்ன்ன் இப்போனான் வெல்லைத்தமில் லன்ன்ன்ன்ன்ன் அப்படின்னு டிகுஜிக் டிகுஜிக் வெஸ்றன் ஸ்றைல்ல பாடிட்டு தமிழ்நாட்டு கலாஸ்ஸாரப்படி பொண்ணு வேணுங்கிறார் (சொன்னேனே காண்ட்றாஸ்டு, இந்த ஐடியா பக்காவா ஒர்க்கவுட் ஆகும் பாருங்க இங்க – வெளிநாட்டிலர்ந்து திறும்பி வற்ற ஹீரோ, நம்ம கலாச்சாரப்படி பொண்ணு – கிக் விக்குன்னு டூயட் பாட்ற நேரம் தவிர அழுதா போதும்).

விவேக் ஸ்றைல்ல ஸொன்னா, கின்பச்சக் கில்மாஸ்ல யாரை வேணுமானாலும் கல்யாணம் பண்ணிரலாம். இண்டியா ரொம்ப முன்னேர்ரிச்சுரா.

பாபா, உங்கள் கேள்விகளுக்கும் பதிலளிக்க முயல்கிறேன். சிவாஜி பார்த்தாச்சா இல்லையா என்ற உங்கள் கேள்விக்கு பதில் இதிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன் 🙂

Ohr Ruba Kaayin இருந்தால், இன்னும் போரடிக்காமலிருப்பவர்கள், நம்ம கை ராஸியான கை ஸ்ர்ர்ரிங்க் ஸ்ர்ர்ர்ர்ர்ரிங் ஸ்ர்ர்ர்ர்ர்ரிங்க் ஸ்ரிங் என்று நாலு திசைகளில் சுண்டிச்சுற்றிக் கொண்டிருக்க 🙂

————————————————————————————————————–

சன்னாசி…

ஃபுல் ஃபார்மில் இருப்பதால் என்னுடைய ஐயங்களையும் தெளிவுற வைத்தால் மகிழ்வேன் 🙂

1. முதலில் நாசர் குறித்து… நீங்க கேகே பற்றி சொன்னது நாசருக்கும் பொருந்தும் அல்லவா? ‘தி மேகிங் ஆஃப் சந்திரமுகி’யில் ஆஹா… ஓஹோ என்று புகழ்ந்து விட்டு, இப்பொழுது இடம், பொருளறிந்து ஏவுவது ‘மனித(பச்சோந்தி)த்தன்மை’ என்று விட்டுவிட வேண்டியதுதானா?

2. உலக சினிமாவிலும் வாரிசு அரசியல் (சோஃபிய கொப்பொலா), பில்ட் – அப் (ஓசியன்ஸ் 12), திறனாய்வாளர்களின் துணையுடன் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய படம் (eyes wide shut), மறு-மறு-பதிப்புகள் எல்லாம் வந்து கொண்டுதானிருக்கிறது. சென்னை 600028 போல் புதிய முயற்சிகளும் (கொஞ்சம் நிறைய எண்ணிக்கையில்) வருகிறது. ஆனால், ஹாலிவுட்டுடன் proportionate-ஆக பார்த்தால், மசாலாப்படம், நாயக வணங்கல், காதல் தெய்வீகம், போன்றவையின் விகிதாச்சாரங்கள் கிட்டத்தட்ட சமனாக இருக்கும். சரியா?

3. சிவாஜி படம் பார்த்தாச்சா? உங்களின் விமர்சனத்துக்கு அருகதை இல்லாவிட்டாலும், எல்லாவித உயர்தர தொழில்நுட்பத்தில் பயன்படுத்திக் காட்டும் டெமோ திரைப்படமாக அதைக் கருதலாமா? பிக்ஸார் படங்களுக்கு முன் வரும் இரண்டு நிமிடத் துண்டுப் படம், ‘ராட்டடூயி’யை விட நன்றாக இருக்கிறதாக, நண்பனின் மகள் சொன்னாள். அதைப் போல் ‘சிவாஜி’யை ரசிக்கலாமா 😉

July 9, 2007 10:13 PM

————————————————————————————————————–

1. நாசர் வெறும் மனிதன் தான் – ரஜினியைப் புகழ்ந்தால் என்ன இகழ்ந்தால் என்ன? படம் குப்பையாக இருந்தால் நாசரையும் உரலில் போட்டு யாரும் இடிக்கலாம். மனிதனாக இருக்கும் யாரும் பச்சோந்தியாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை நான் வேறு சொல்லவேண்டுமா? முகம் மாதிரிப் படங்களிலெல்லாம் ஏன் நடிக்கவேண்டும் அவர்? ஓடாது என்று தெரிந்தே தானே அதையெல்லாம் எடுக்கிறார்கள்? இப்படி இப்படி எடுத்தால் ஓடும் என்று எடுக்கப்படும் படங்கள் இருக்கையில், நினைப்பதை எடுப்போம், ஓடவும் ஓடாது என்று எடுக்கும் ஆட்களே இல்லையா என்ன? அப்படி எடுப்பவர்கள் அனைவரும் ஏமாற்றிப் படம் எடுப்பவர்களா என்ன அப்போது? முயற்சி செய்ததற்காக அதையும் தூக்கி வைத்துக் கொண்டாடவேண்டியதில்லை, சரியென்றால் தூக்கி வைத்து உதைக்கலாம் என்றிருக்கும்போது, ஓடவேண்டும் என்ற பிரதான (ஒரே அல்ல) நோக்கத்துடன் எடுக்கப்படும் படங்களுக்கு அதே அளவுகோலை (அதிகமாகக் கூட இல்லை) பொருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?

2. சோஃபியா கப்போலாவை ஒரு நடிகையாக Godfather 3யில் போட்டதற்கு பப்பா கப்போலாவை விமர்சகர்கள் கிழிக்காத கிழியா. இயக்குனராக சோஃபியா கப்போலா எடுத்த Virgin Suicides பிடித்திருந்தது, Lost in translation ஓக்கே, Marie Antoinette பரவாயில்லை. வாரிசு அரசியல், நம் ஊர் போலவே, சரக்கு சரியில்லை என்றால் சாவடிக்கு வெளியே போவதாகத்தானே நடக்கிறது? ஸ்டான்லி குப்ரிக்கின் படங்கள் பொதுவாக சற்றுக் காலம் கழித்தே அங்கீகாரம் பெற்றவை; Non-linear narrative இருக்கும் எதுவும், குறிப்பாய் அயல் மொழியில் புரிந்துகொள்ளச் சிரமமாகத்தான் இருக்கும். அது அவர்கள் தவறல்லவே – இந்தியாவில் இருந்து வந்தேகியுள்ள (ஏகி, ஏறி அல்ல :-)) demographicக்கு ஏற்றமாதிரி அவர்கள் எடுக்கமுடியாதல்லவா? அப்படிப் பார்த்தால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் சராசரி அமெரிக்கனுக்குப் பல படிகள் கல்வியில் மேலேறி உள்ளவர்கள் – கல்விக்கும் கலாச்சாரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், புது விஷயங்கள் குறித்தான ஆர்வம் (சினிமா என்று மட்டும் இல்லை) என்பது சற்று அதிகமாக இருக்க வாய்ப்புப் பெற்றவர்கள் நம்மைப் போன்றவர்கள் என்று எனக்குத் தோன்றுவதுகூட தவறோ?

உங்கள் கேள்வியிலுள்ள விகிதாச்சாரம் குறித்து: மசாலாப்படம், நாயக வழிபாடு, chick flicks, sorority duds எல்லாம் கிட்டத்தட்ட அதேதான். கலைப்படங்கள் என்றில்லை, சிரத்தையாகச் செய்யப்பட்ட காமெடி, ஆக்-ஷன், திகில் படங்கள் அனைத்தையும் பார்க்கமுடியத்தான் செய்கிறது. போலீஸ் ஆக்சன் படங்களில் fat cop accompanies the detective, who is sipping steaming coffee from a plastic cup என்று காஃபி-டிடெக்டிவ்-மழை என்று டிடெக்டிவ்களின் trenchcoat conventionல் தொடங்கி, டென்சல் வாஷிங்டன் ஏன் எப்போதும் பட்வைஸர் குடிக்கவேண்டும், ச்ப் ஹ என்று ஒரு பருகலுக்குப் பிறகு சப்தம் கொடுக்கவேண்டும் என்றும் கேட்கலாம், இங்கே ஹாலிவுட் படங்களிலும் குடையலாம். நம்மூரிலும் fat cops ஐ ராம்கோபால் வர்மாவின் சில படங்களில், அவர் பட்டறையில் வந்த சிலர் படங்களில் (Ab tak chhappan மாதிரி) மட்டும் பார்த்ததுண்டு. க்ளோசப் எங்கே பாபா போச்சு? க்ளோசப்பில் முகத்தோடு சேர்த்து சுண்டுவிரலோ வேறேதோ சாமானோ வராத டமிள் க்ளோசப்பைப் பார்க்கமுடிவது அபூர்வமா இல்லை போய்விட்டது? திரைப்பட ஃப்ரேம்கள் பட்டேல் புகைப்படங்கள் மாதிரி இருப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லை?

3. சிவாஜி விமர்சனத்துக்கு அருகதையில்லாதது என்று சொல்லி சீ தூ என்று ஒற்றை வரியில் விமர்சனம் போட நாமென்ன ஆவி கீவி மாதிரி அவ்வளவு கரைச்சுக் குடிச்ச மேதாவிகளா? நீங்கள் சொல்வதுமாதிரி demo திரைப்படம் என்றால், அப்படி ஒரு புது திரைப்பிரிவை உருவாக்கிய சிவாஜி குழுவினருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும். படத்துக்கு pilot shoot எடுப்பார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன் – படமே டெமோ என்றால் திகிலாக இல்லை இருக்கிறது? டோட்டல் ரீகால் படத்தில் ஆள் வயித்துக்குள்ளிருந்து குட்டி ஆள் cum மூளை வருமே, அது மாதிரி இந்த டெமோவுக்கு அடுத்து ரியல் வாஜி வரப்போகிறதா? ராட்டடூயி பார்க்கவில்லை – ஆனால், எந்த துண்டுப் படத்தைச் சொல்கிறீர்கள்? கடவுச்சொல் கேட்கும் அனிமேஷனா? அப்படியெனில், ஜீன்ஸின் டைனோசார் மாதிரித்தான் இதுவும் (சிவாஜியை ஆக்ஷன் காமெடி என்ற வரையறைக்குள் அடைப்பீர்களா பாபா? ரஜினி படம் இதுக்குள்ளல்லாம் அடங்காது என்ற உலக நிதர்சனத்தைத் தவிர்த்துவிட்டால்). ஆனால் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு ரஜினி படத்தில் ஏதாவது வேண்டுமே ;-). குழந்தைகளுக்காக அனிமேஷன் எடுத்தெல்லாம் செலவு செய்யாமல் (அதற்கு சிவாஜிக்கு ஆனதை விட அதிகம் செலவாகும் ;-)) பல்சுவையையும் கலந்து கட்டித் தருவது என்று புரிகிறது!!

அவரவர் ரசனை அவரவர்க்கு – எதுவும் மேலானதும் அல்ல கீழானதும் அல்ல. இருந்தும், வெகுஜன ரசனை மட்டும்தான் rule of the road, பிறதெல்லாம் நேரவிரயம் என்று இங்கே ரஜினி ரசிகர்கள் குதிப்பதுபோல ‘மக்கள் இந்த சட்னிதான் கேக்கிறாங்க’ என்று பாலச்சந்தர் நினைத்திருந்தால் சுருட்டை முடி வெள்ளைத் தோல் என்று ரஜினிக்கு அன்றைக்கே பெயிண்ட் அடிக்கவேண்டியிருந்திருக்கும். அன்றைய பொதுப்புத்திக்கு ரஜினியே ஒரு வெளியாள் தான் என்று புரியாமல்(லா?) ரசிகக்குஞ்சுகள் இன்றைக்கு ரஜினிக்கு வெளியிலிருக்கும் சினிமாவைப் பற்றிச் சொல்லும்போது அறிவுசீவியைப் பிடித்து அவன் தாடியைச் சீவணும் என்று குதிக்கிறார்கள்.

————————————————————————————————————–

————————————————————————————————————–

7 responses to “’00s Tamil Movies with 50’s Cliches – Sannasi

  1. நீங்களே முழுக்கப் படிந்தால், உங்களுக்கு விளங்கும். எனக்குப் புரிந்தவை..

    சிவாஜி மாதிரி உலகத்தரத்தில் படம் எடுத்தால் விவாதங்கள், வினாக்கள், விமர்சனங்கள் எழும்.
    உன்னாலே உன்னாலே மாதிரி வசனத்திலேயே கொன்றால், யாரும் கண்டுக்க மாட்டார்கள்.
    ‘தாமிரபரணி’ மாதிரி படத்துக்கெல்லாம் கருத்து சொல்லாத நாசர், பேசும் இரண்டு வார்த்தையும் ரஜினிக்கு எதிராக பேசும்போது அச்சில் ஏறும் சுகம்தான் பேசவைக்கிறது.
    சென்னை-600 028 -ல் கலர் க்ரேடிங் எல்லாம் உபயோகம் செஞ்சிருக்காங்களாம். அது நல்ல் அப்டமா என்று நாசர் சர்டிபிகேட் தரமாட்டார்.

  2. உங்களுக்கென்ன நேரு மாதிரி கோபம் வருகிறது…

  3. இருங்க…
    நேருவோட கோபம் என்று கூகுளிட்டு விட்டு வருகிறேன்

  4. interesting!

    From:
    Nehru: A Political Biography by Michael Brecher; Beacon Press, 1962.
    (Questia – The Online Library of Books and Journals)

    His initial response to politics was emotional, not intellectual. He is quick to anger, but his outbursts are usually short-lived. They are the reaction of an over-sensitive man to anything which violates his high standards of integrity. Nehru is a perfectionist, which compounds the sources of irritation with people and things about him.

    நான் அப்படியெல்லாம் என்று சொல்ல வரவில்லை 🙂

  5. நான் இஸ்டாரிக்கலாகப் போகவில்லை. நீங்கள் தில்லுமுல்லு படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன். அதில் நல்ல ரஜினியைப் பார்த்துப் புளகாங்கிதப்பட்டு தேங்காய் சீனிவாசன் இந்த வசனத்தைப் பேசுவார். விளக்கம் தர வேண்டியிருக்கிறது! ;-(

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.