Monthly Archives: ஜனவரி 2017

பிடிப்பிடம்

கொஞ்சம் கம்மி எதிர்பார்ப்புடன் இந்தக் கதையைப் படிக்கத் துவங்கினேன். ஹரன்பிரசன்னாவின் ’வியாழன் இரவு’ மற்றும் ’சீடன்’ இந்த ஏமாற்றம் கலந்த தயார் உணர்வைத் தந்திருந்தது.

ஆனால், இதுதான் இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பிற்கான தலைப்பு ஆக்கம் – ‘புகைப்படங்களின் கதைகள்’. புனைவின் முகப்பிற்கு ஏற்ற பன்முகம் காட்டும் தலைப்பு என்பதால் இதை வைத்திருப்பார்கள். அது பொருந்தும்.

சிறுகதையை இங்கு சுருக்கித் தரப் போவதில்லை. பதினைந்து நிமிடங்களுக்குள் நீங்கள் வாசித்து விடலாம். வாசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். எனவே, வாசித்து விட்டு வாருங்கள். அதுவரை பொறுமையாகக் காத்திருக்கிறேன்.

haranprasanna : புகைப்படங்களின் கதைகள் – சொல்வனம்

ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, அந்த விஷயத்தில் முழுமையாக மூழ்கி எழுவதற்கு நல்ல உதாரணக் கட்டுரையாக இதைச் சொல்லலாம்: Pyre | Amitava Kumar | Granta Magazine. இந்தக் கதை ஒருவரை எடுத்துக் கொண்டு, அவரின் வாழ்க்கையில் மூழ்கி எழுவதற்கு நல்ல உதாரணம்.

ஜான் பெர்கர் கதை வாசிப்பைப் பற்றி கூறும்போது ‘ஒரு கதையை வாசிக்கும்போது நாம் அதனுள் குடிகொள்கிறோம், அதனுள் ஜீவிக்கிறோம். அடுத்து நடப்பவை எல்லாம் அந்தக் கதையின் நான்கு சுவர்களுள் மாத்திரமே நடக்கும். ஒரு கதையின் குரல் அனைத்தையும் தன் சொந்தமாக மாற்றுவதால் மட்டுமே இது சாத்தியமாகிறது’ என்கிறார். இந்தக் கதையில் அது நடக்கிறது. எதோவொரு வரியில் என் வேட்டி விலகியிருப்பதையும், அதை ஒழுங்கு செய்வதையும் உணர்ந்தேன். இன்னுமொரு இரண்டு பத்தி கழித்து, என் குடும்பத்தின் அங்கத்தினர்களை மரமாக வரைந்து, ஒவ்வொருவரின் மலரும் நினைவுகளையும் ஆவணமாக்கிப் பதிந்தேன்.

இந்த ஆக்கம் நாவலுக்கான விதை. ராம் என்னும் பேரனிடம் தாத்தாவின் அனுபவங்கள் எவ்வாறு அவன் வாழ்வின் முடிவுகளை எடுக்க வைக்கிறது என்று சொல்வது, தாத்தாவிற்கும் அவரின் மகனுக்கும் நடுவில் இருக்கும் கடமையில் ஊறிய பாச நிர்ப்பந்தங்களும் கோடிட்டு மட்டுமே காட்டப் பட்டிருக்கிறது. இதன் அடுத்த அத்தியாயங்களை முழுமையாக்கி முழுநீள புனைவாக்க வேண்டும் என்பது நாராயண் ராவின் ஆசையாக இருந்திருக்கும்.

prasanna