Monthly Archives: ஒக்ரோபர் 2010

எந்திரனும் நானும்

ரொம்ப நாள் கழித்து ‘மச்சீ’ என்றழைக்கும் உரிமையை கல்லூரி செஷன்ஸ் நீதிமன்ற அனுமதி பெற்றிருந்த தோழர் அழைத்திருந்தார்.

“எந்திரன் பார்த்தாச்சாடா?”

“இனிமேல் ‘பாபா’ குறித்த பயம் போயாச்சு. அப்படியே ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’னு பல்லவி பாடும் ஷாஜி பிள்ளையாண்டர்களுக்கும் புதுசா ஒண்ணு சேர்ந்துகிடுச்சு.”

எந்திரன் பிரச்சாரங்களை பட்டியல் போட்டால்:

  1. சன் டிவி அராஜகம்: மாறன் சகோதரர்களின் அசுர பலம்
  2. ஐஸ்வர்யா ராஜ் சிலாகிப்பு: எப்பொழுது, எங்கே முத்தம்
  3. சூப்பர் ஸ்டார் பன்ச்: ரோபோ நடிக்கும் அற்புதம்
  4. ஷங்கர் அரசியல்: பெண்ணியம் முதல் காறியுமிழும் புணர்ச்சி
  5. சுஜாதா சுட்டார்: அறிபுனை கதை அணிவகுப்பு ஜெராக்ஸ்
  6. ரெஹ்மான் நாதம்: டமார மொழி
  7. பெரும் பொருட்செலவு: சிறுவியாபாரிகளை நசுக்கும் பட்ஜெட்
  8. ரசிகரடிப்பொடி மனநிலை: பா.ம.க., பாஜக + தமிழக அரசியல்

இப்படியாக தமிழிலிருந்தே தமிழுக்கு காப்பியடிக்கும் விமர்சகச் சூழலில் எந்திரமயமான பயம் தொற்றிக் கொண்டது.

  1. சன் டிவி ரோபாட்: சீரியலுக்கு வசனம் முதல் சீரிய சிந்தனை வரை
  2. ஐஸ்வர்யா ராஜ் எந்திரம்: நாட்டுக் கட்டை
  3. சூப்பர் ஸ்டார் சக்கரம்: தன்னைத் தானே எறித்துக் கொள்ளும் சூரியன்
  4. ஷங்கர் பொறி: பணம் செய்யும் மெஷின்
  5. சுஜாதா சூத்திரம்: ஏற்கனவே தமிழ் எழுத்துலகத்தை ஆக்கிரமிக்கும் எழுத்து சுனாமி
  6. ரெஹ்மான் கருவி: இயந்திரமே இயந்திரத்தை இயற்றும் மீட்டும்
  7. பொருட்செலவு விறிசு: என் இனிய இயந்திராவிற்கு அடுத்து ஜீனோ
  8. ரசிகரடிப்பொடி உபகரணம்: இது மட்டும் ரோபோ அல்ல

எந்திரம் பத்திரம். கூடிய சீக்கிரமே எந்திரக் குழந்தையும் ‘இந்தப் பாடலைப் பாடுபவர் உங்கள் எந்திரனின் வாரிசு’ என்று வெள்ளித்திரையில் வலம் வரும்.

சற்றே தொடர்பிருந்திருக்கக் கூடிய குரல் பதிவு: Conquering A Fear Of Robots : NPR

பாஸ்டனும் ஞாநியும்

நன்றி: ஆப்பிள் தேசம் – 9: நாடகத்துக்குக் கூட்டம் அதிகம்! – ஞாநி

பாஸ்டனுக்கு என்னை அழைத்த பாலா கணினித் துறையில் உயர்பதவியில் இருப்பவர். தீவிரமான வாசகர். சென்னை மந்தைவெளிக்காரர். சாந்தோமிலும் பிலானியிலும் படித்தவர். அப்பா சமையற்கலைஞர். அம்மா பக்திக்கட்டுரைகளும் கதைகளும் எழுதுபவர். பாலா தனக்கென்று மூன்று நான்கு வலைப்பூக்கள் வைத்திருப்பது தவிர, அம்மாவின் படைப்புகளை வெளியிடவும் வலைப்பூ வைத்திருக்கிறார்.

பாஸ்டனில் நான் என்ன பார்க்க விரும்புகிறேன் என்று அவர் போனில் கேட்டிருந்தபோது சொன்ன பல விஷயங்களில் ஒன்று நாடகம். எனவே என்னை விமான நிலையத்தில் வரவேற்று அங்கிருந்து நேராக ஒரு நாடக அரங்கிற்கு அழைத்துப் போய்விட்டார்.

அமெரிக்காவில் பள்ளியிலும் கல்லூரியிலும் பல்கலைக்கழகங்களிலும் நாடகம், இசை நாடகம் முதலிய நிகழ் கலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பாஸ்டனில் நான் பார்த்த நாடகம், வால்தாம் பப்ளிக் ஸ்கூல்ஸ் எனப்படும் பள்ளிக்கூட அமைப்பும் ரீகிள் மியூசிக் தியேட்டர் எனும் குழுவும் இணைந்து நடத்தியவை. வால்தாம் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 41 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கிய குழுதான் ரீகிள். இப்போது அதில் முழு நேரத் தொழில்முறை நடிகர்களுடன் பள்ளி மாணவர்களும் இணைந்து நாடகங்களைத் தயாரிக்கிறார்கள்.

நான் பார்த்த, சிண்ட்ரெல்லா கதையை அடிப்படையாகக் கொண்ட இண்ட்டு தி உட்ஸ் (காட்டுக்குள்ளே) ஓர் இசை நாடகம். நடித்தவர்களில் யார் முழு நேர நடிகர், யார் மாணவர் என்று பிரித்துச் சொல்லமுடியாத ஒரே தரத்தில் உயர்ந்த நடிப்பு. அபாரமான இசை. காட்சி மாற்றங்களும் ஒளி, ஒலி அமைப்புகளும், நம்ம ஊர் ஆர்.எஸ்.மனோகரைப் போல அங்கே ஊருக்கு நாலு பேராவது இருக்கிறார்கள் என்று தோன்றவைத்தன.

நாடக டிக்கட்டுகள் 57 டாலர்கள் முதல் மாணவர்களுக்கு 25 டாலர்கள் என்று வெவ்வேறு விகிதங்களில் இருந்தன. நாடகத்தில் பங்கேற்கும் எல்லாருக்கும்சம்பளம் தரப்படுகிறது. இதை புரவலர்களிடமிருந்து நன்கொடையாகக் கேட்கிறார்கள். பின்மேடைக் கலைஞர்களுக்கு 24 டாலர். பிரதான நடிகருக்கு 500 டாலர். பிரபலமான நடிகரென்றால் 1000 டாலர். இயக்குநருக்கு 5000 டாலர். துணை நடிகர்களுக்கு 100 டாலர். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் மாற்று நடிகரை தயாராக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஊதியம் 50 டாலர்.

காட்டுக்குள்ளே நாடகம் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடத்தப்பட்டது. அடுத்த எட்டு நாள் இன்னொரு நாடகம். பிறகு அதே போல இன்னொன்று என்று கோடைக்காலத்தில் தொடர்ந்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. நான் சென்ற அன்று அரங்கு நிறைந்து வழிந்தது. எந்திரனுக்கு வருகிற கூட்டம் மாதிரி அங்கே நாடகம் பார்க்க வருகிறார்கள். அந்த அளவுக்கு சினிமாவுக்குக் கூட வருவதில்லை.

அமெரிக்காவில் என் சுற்றுலாவின்போது வேறு நகரங்களிலும் சில நாடகங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி அந்தந்த நகரங்களுக்குச் செல்லும்போது விரிவாகப் பார்ப்போம்.

நாடகம் பார்த்துவிட்டு பாலா வீட்டுக்கு வெஸ்ட்ஃபோர்டுக்கு சென்று அவருடன் தங்கினேன். இரவு நேரம் பின்பக்கம் தோட்டத்தைப் போய் பார்க்க வேண்டாம். கரடி வந்தாலும் வரும் என்றார். காட்டுக்குள்ளே வீடுகளைக் கட்டியமாதிரி இருந்தது.

பாலா வீடு அருள் வீட்டுக்கு நேர்மாறு. அருள் வீட்டில் பொருட்கள் எல்லாமே கச்சிதமாக ஏறத்தாழ ஒழுங்காக சீராக வைக்கப்பட்ட சூழல் இருந்தது. பாலா வீட்டின் உட்புறம் ஒரு மந்தவெளி ஃபீலிங்கைக் கொடுத்தது. எந்த அறையிலும் எதுவும் இருக்கலாம் என்ற போக்கில் வாழ்வது நமக்கு சகஜமானது. இப்போது கூட என் கட்டில் மீது புத்தகங்கள், நோட்டுகள், சார்ஜர், மருந்துப் பெட்டி, வாட்டர் பாட்டில், டவல், ஜட்டி எல்லாம் இருக்க, அதன்மீது என் லேப்டாப் மினி கணினியை வைத்துக் கொண்டு கட்டிலை மேசையாக்கி நான் தரையில் உட்கார்ந்து எழுதுகிறேன். பாலாவின் வீடு இதே போல இருந்தது.

அவர் மனைவியும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தார்கள். அதனால் இப்படி இல்லை எப்போதுமே இப்படித்தான் என்றார் பாலா. அவருடைய நூலகம் என்னை பிரமிக்க வைத்தது. தமிழில் கடந்த பல பத்தாண்டுகளில் வந்திருக்கக்கூடிய எந்த முக்கியமான புத்தகமானாலும் அங்கே இருந்தது. எல்லாமே தீவிரமான வாசிப்புக்குரியவை. அதற்கு நிகரான ஓர் ஆங்கில நூலகம்.

வெளிநாட்டில் வாழ்ந்தாலும் வீட்டுக்குள் நம்ம ஊர் மாதிரியே சூழலை ஏற்படுத்திக் கொண்டு இரு உலகங்களிலும் சஞ்சரிக்கும் கலையை நம்மவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.

Benny Dayal – A Performer

பென்னி தயால் பாடி நீங்கள் கேட்டிருப்பீர்கள். ரவியைப் போல் மெச்சியிருப்பீர்கள். அவர் பாடி நீங்கள் பார்த்ததுண்டா?

மெகா டிவி புண்ணியத்தில் ‘சங்கர்ஷ் 2010’ நிகழ்ச்சியில் பார்த்தேன். கொண்டாட்டமாக ஆடினார்; உற்சாகமாக ‘ஊலலா’ ரீங்காரித்தார்; இளமைத் துள்ளலுக்கு definition கேட்டால் உத்தரவாதமாக பென்னியை சொல்லலாம்.

Infectious enthusiasm என்பார்கள். ‘வேதம் புதிது’ அமலாவின் ஜாக்கெட்டுக்குள் நுழைந்த மீன் என்பேன். அமலாவின் நளினம்; மீனின் லாவகம் – இரண்டும் குழையும் குரலுடன்,மேடையில் நடனமாடியது.

கர்னாடக சங்கீதம் பதினைந்து வருடம்; தாம்பரம் கிறிஸ்டியன் கல்லூரி வாசம்; அபு தாபி வளர்ப்பு; இவையெல்லாம் போதாதென்று பரதநாட்டியமும் பயின்றுவிட்டார்.

ஹிந்தியிலும் கொஞ்சுகிறார். சின்னச் சின்ன ஆசையில் துவங்கி, ‘ஒமானப் பெண்’ண்ணிற்கு சிரமமில்லாமல் பாய்கிறார். சகாக்களை சுவாரசியமாக அறிமுகம் செய்கிறார்.

ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன் எல்லாம் ஸோ நைன்ட்டீஸ்… பென்னி இஸ் இன்!

Chicago Ramar Temple: Ram = Problems

ராமர்  கோவில் என்பதற்கு பிரச்சினை என்று அர்த்தம். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்னும் பழமொழிக்கேற்ப, அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் ஹிந்து மந்திர் இருக்கிறது. அங்கே நடக்கும் சண்டையில், பிரிந்து போய் இரண்டாவது கோவிலும் நிச்சயமாக இருக்கும்.

கத்ரு, வினதை கதை ஆகட்டும்; காந்தாரி x குந்தி ஆகட்டும். புராண காலத்தில் இருந்து போட்டிக்கு பிள்ளை பெறுவது இந்தியர் வழக்கம். வாஷிங்டன் டிசி நகரத்தில் ஒரே தெருவில் இரு ஆலயங்கள். சிகாகோவில் பத்து மைல் வட்டத்துக்குள் இரு ஆலயங்கள்.

அரோரா ஆலயம் திருப்பதி போல் என்றால் பக்கத்து ஊரான லெமாண்ட் ஆலயம் கொஞ்சம் வடக்கிந்திய பாணியில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா கலந்த பத்ராசலம் இராமர்.

மூலஸ்தானத்தில் பளிங்கு கற்களும் இருக்கும்; கூடவே கருங்கற் சிலையும் இருக்கும்; பஞ்சலோக உற்சவரும் காணக்கிடைப்பார்.

இந்த நிலையில் திடீரென்று வடக்கு வழக்கத்திற்கு நாக் அவுட் கிடைத்திருக்கிறது.

போட்டி கோவிலிலேயே போட்டி. பலிபீடத்திற்கு யார் பலி என்றெல்லாம் தமிழ்ப் பேப்பர் தலைப்பு கொடுத்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் ஆங்கில நாளிதழ் மட்டுமே இதை கவனித்திருக்கிறது.

உள்ளூர்காரர்கள்தான் உள்விஷயங்களை சொல்ல வேண்டும்.

துவக்க காலத்தில் கோவிலை அமைத்தவர்களின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டுமா? தென்னிந்திய ஆகமவிதிப்படி மொழுமொழு சிலைகள் மூலஸ்தானத்தை ஆக்கிரமிக்கலாமா? தெலுங்கு வண்ணமான கருப்பு அல்லாத வெள்ளை வெளேர் சிலைகள் நீக்குவது தர்மமா என்றெல்லாம் கோர்ட்டில் வாதாடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கோவில் பொக்கீடு கணக்கு: HTGC – Lemont – Chicago – Temple -IL – Financials – Annual Report 2009_new

விஜய தசமி வாழ்த்துகள் – ஆயுத பூஜை கொண்டாட்டம்

Some people have the mistaken notion that they create reality with their thinking and speaking.
David K. Reynolds
American psychologist and writer (b.1940)

கலைஞர் டிவி வெள்ளைக்காரன் காலத்தில் இருக்கிறான். விடுமுறை விழாக் கொண்டாட்டம் என்கிறான்.

கலைஞர் மாதிரியேதான் வெள்ளைக்காரியும் யோசிக்கிறாள்.

‘மனுசன் கண்டுபிடிச்சத மனுசனே தொழலாமா?’

கொலுவிற்கு வந்தால், நல்ல மதுவருந்தினோமா, சுவைத்து சாப்பிட்டோமா என்று சம்பிரதாயத்திற்குள் அடங்காமல், கேள்வி கேட்டாள்.

‘சோதனைக் குழாய் குழந்தை கண்டுபிடிப்பிற்கு நோபல் வழங்குவது போல் இந்த ஆயுத பூஜையே கொண்டாட்டம் இல்லியா? எவரோ ஒரே ஒருவருக்கு மட்டும், பல்லேடியம்னு பல்லை உடைக்கும் மொழியில் மில்லியன் கொடுப்பதை விட, கோடிக்கணக்கானோர் பாராட்டுகள் எத்தனை மில்லியன் தகும்?

Thanksgiving கும்பிடு சாப்பாடுடன் விடுமுறை வழக்கம். மனிதர்களின் அறிவியல் சாதனைகளை மகிழ்ந்து கும்பிடுவது சரஸ்வதி பூஜை.

ரம்சான் பசியின் வலியை பணம் படைத்தோருக்கு உணர்த்தும். உபகரணங்களின் உபயோகத்தை உணர்த்தும் விழா விஜயதசமி.

“இவ்வே பீலியணிந்து மாலை சூடிக்
கண்திரள் நோன் காழ்திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியனகரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ “

அதியமான் அரசை தொண்டைமான் கைப்பற்ற நினைக்கிறான். சண்டையைத் தடுக்க ஔவையார் விரும்புகிறார். தொண்டைமானின் ஆயுதக் கிடங்கை பார்த்து பிரமிப்புடன் சொல்கிறார்: “உன்னிடம் இருப்பதெல்லாம் புதிதாக பளபளப்புடன் மின்னுகிறது. அந்த அதியமானின் கொல்லறையில் எல்லாம் ரிப்பேர். சண்டைக்குப் போய் போய், எதிரிகளைக் கொன்று கொன்று, எல்லாம் முனை மழுங்கி இருக்கிறது.’

வாளும் அம்பும் கத்தியும் போருக்கு சென்று சக உயிர்களைக் குத்திக் கொல்லாமல் இருப்பதற்காக வணங்கினோம். இராக்கிலும் ஆஃப்கானிஸ்தானிலும் புனிதப் போர் தொடுப்பவர்களுக்கு ஆயுத பூஜையை விளங்கிக் கொள்வது சாத்தியமற்றதுதான்.

சரஸ்வதி பூஜைக்காக ப்ளாக்பெரியை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்து சோஷியல் நெட்வொர்க்கை மறந்து, குடும்பத்தை ஆன் செய்வது மனுசத்தனம். காதில் செல்பேசி, கண்ணில் கலைஞர் டிவி, கருத்தில் கணினி என்றாக மாறிப்போவது மெஷின் தனம். நாங்க எல்க்ட்ரானிக்சை கும்பிடுவோம். ஆனால் இயந்திரமயமாக மாட்டோம்.’

சான்ஸ் கிடைத்த சொற்பொழிவை முடித்துக் கொண்டேன்.

‘திருமலா திருப்பதி டிவி போடுடா… சுப்ரபாதம் காண்பிப்பா! பெருமாளக் கண்ணார பார்க்கலாம்’ டிவியை கும்பிடும் பாட்டியைப் பார்த்துவிட்டு கேள்வி ஏதும் கேட்காமல் நகர்ந்தார் நண்பர்.