ஒரு எழுத்தின் சாயல் உங்கள் மீது பட்டு விடாமல் இருக்க கண்டதையும் படிக்க வேண்டும். வித விதமாக வாசிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரை முதல் ஆன்மிகம் வரை எதையும் விடக் கூடாது.
அதுவும் அறிவியல் புனைவு மாதிரி எழுத நினைக்கும் போது ஃபிலிப் ராத் கதைகளும் ஜெயகாந்தன் புனைவுகளும் கையில் எடுக்க வேண்டும். சம்பந்தமே இல்லாத துறையில் ஆழ்ந்து, அமைதியாக மூழ்கினால் நல்ல எழுத்து வரும்.
அந்த நினைப்பில் மீண்டும் தி.ஜா.வை எடுத்தேன். பயப்பட வேண்டாம். இன்னும் எதுவும் எழுத ஆரம்பிக்கவில்லை. எனினும், அரூ போட்டி முடிவவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளும், அதில் சில கதைகள் ஜெயமோகனின் சாயலில் இருப்பதாக வெளியான கட்டுரைகளும் இந்த முன்குறிப்பை எழுத வைத்தது.
தலைப்புக்கு போய் விடலாம்: ”வெங்கிட்டு சார் ஏன் ஓடினார்” – குறுநாவல் அளவில் ஒரு சிறுகதை. நல்ல வேளையாக இணையத்தில் கிடைக்கவில்லை.
கதையை சொல்லாமல், இந்த ஆக்கம் ஏன் எனக்குப் பிடித்தது என்று பட்டியல் போடலாம்:
- பா. ராகவன் சொல்வார் (அவர்தான் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டாலும் சிக்கலில்லை) – ஒரு நல்லவர் கெட்ட விஷயத்தை செய்ய வேண்டும். கெட்டவராக சித்தரிக்கப்படும் கதாபாத்திரம் ஏதாவதொரு உத்தமமான விஷயத்தை செய்ய வேண்டும். அதெல்லாம் இந்தக் கதையில் நடக்கிறது.
2. என்னுடைய மாமா அன்னதாதா. நிறைய தான தருமங்கள் செய்பவர். தினமும் வீட்டு வாசலில் வரும் மாடு முதல் எங்கோ இருக்கும் குப்பைமேட்டில் பொறுக்குபவர் வரை தேடிச் சென்று உணவுப் பொட்டலங்களும் ஆடைகளும் தருபவர். கோடையில் அவரின் நிலத்தடி நீர் வற்றி விட்டது. கிணற்றை தூர் வார ஆட்களை அழைத்திருந்தார். நூறடி வரை புரட்டிப் போட்டு வெளியகற்றுவது என்று ஒப்புதல். வந்த மூன்று பேரும் காலை ஏழில் இருந்து மாலை நான்கு வரை அடைப்பை நீக்கி தெளிவாக்கின்றனர். வண்டலை இழுத்து வெளியேற்றி விட்டதாகச் சொல்கின்றனர். நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகமாகி நீரேந்தும் அளவும் மேம்பட்டதாக கண்ணுக்கு பட்டது. ஆனால், என் மாமாவோ, “இது நூறடி இல்லை!” என்றார். அவர்கள், “சாமீ… இது சத்தியமா நீங்க சொன்ன கூலிக்கு, ஒப்பந்தப்படி முழுக்க தூர் வாரிட்டோம்.” என இறைஞ்சுகிறார்கள்.
கடகடவென் மாமா கிணற்றில் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அதல பாதாளத்தை நோக்கி இறங்க ஆரம்பித்தார். கையில் நூறடியை அளக்கும் அளவுகோல் வேறு. நான் மிரண்டு விட்டேன். அவர்களும் அரண்டு விட்டார்கள். கடைசியில் அளந்து பார்த்ததில் எண்பத்தி ஏழு அடிதான் ஆகி இருந்தது. தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க மாட்டார்; ஆனால், ஆற்றில் போடும் ஊதியத்தை அளந்து பார்ப்பார்கள் மனிதர்கள்.
- மீண்டும் பாரா: சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வாசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும். – இதெல்லாம் வைத்திருக்கிறார் ஜானகிராமன்.
- இதைத்தான் சிவசங்கரி “சின்ன நூற்கண்டா உங்களை சிறைப்படுத்தும்?” என்று அ-புனைவாக ஆக்கினார்?
- தி.ஜா.ரா.வின் வார்த்தையிலே சொல்வதானால்: “எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். ”
இந்தக் கதையில் என்னத் தெறிப்பு என்பதை வாசித்து விட்டு சொல்லுங்கள்.