Bale Paandiya – Movie Review


பொழுது போகாத வாரயிறுதி மதியம். தொலைக்கட்சியில் ‘பலே பாண்டியா‘. ஓவர் ஆக்சன், மெலோடிராமா, கறுப்பு-வெள்ளை என்று பயமுறுத்தும் குணாதிசயங்களுடன் இருக்குமோ என்னும் முன் முடிவோடுதான் சேனலை மாற்றவில்லை.

நகைச்சுவையான திரைக்கதை; மூன்று வேடங்களில் சிவாஜியின் அசர வைக்கும் பொருத்தம்; பத்தொன்பது வயது தேவதையாக தேவிகா; நவீன விவேக்காக எம்.ஆர். ராதாவின் நையாண்டி; படம் முடியும் வரை அசர வைத்து ரசிக்க வைக்கிறது.

தற்கொலை செய்ய நினைக்கும் பாண்டியனை (சிவாஜி) கபாலி (எம்.ஆர். ராதா) காப்பாற்றி, வீட்டுக்கு அழைத்து வந்து, வயிறு முட்ட உணவு கொடுத்து ரட்சிக்கிறார். சாப்பாடு, இருப்பிடம் எல்லாம் கிடைத்தாலும், தான் முப்பது நாளில் இறந்தே தீருவேன் என்று கொடுஞ்சபதம் எடுக்கிறான் பாண்டியன். எம்.ஆர். ராதாவின் அடியாளாக மருது (சிவாஜி-2) பணியாற்றுகிறார்.

முப்பது நாள்களுக்குள்ளாக ஹீரோயினுடன் லவ் பிறக்கிறது. பர்ஸை அடித்துக் கொண்டுபோன திருடனிடம் இருந்து பணப்பையை மீட்டு, கீதா (தேவிகா)விடம் சேர்க்கும் சந்தடியில், ‘நான் என்ன சொல்லிவிட்டேன்… நீ ஏன் மயங்குகிறாய்‘ என்று காதல் டூயட் பாட ஆரம்பிக்கிறார் பாண்டியர்.

மருதுவுக்கான உயிர் காப்பீட்டை ஆரம்பித்து, பாண்டியனைத் தற்கொலை செய்து கொள்ளுமாறு பணிக்கிறார் கபாலி. காதல் வயப்பட்ட ஹீரோவோ, ‘வாழ நினைத்தால் வாழலாம்… வழியா இல்லை பூமியில்‘ என்று ஜோடியுடன் உல்லாசமாகப் பாடி வருவதால், கபாலியிடமிருந்து தப்பித்து விடுகிறார்.

மனநோய்ப்பட்ட ‘வசந்தி’யைக் காப்பாற்றுகிறார். கைலாசமலை எஸ்டேட் அதிபரின் நன்றியுணர்வால் அவரின் வளர்ப்பு மகனாகத் தத்தெடுக்கப் படுகிறார். கபாலியின் சூழ்ச்சியால் மருதுவின் குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு ‘யாரை எங்கே வைப்பதென்று யாருக்கும் தெரியலை… அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை‘ பாடுகிறார்.

கீதாவின் அப்பாவிடம் பெண் கேட்டு வருமாறு கீதாவின் அத்தை மகன் ரவி (தயாரிப்பாளர் பாலாஜி) அழைக்கிறார். மாமா அமிர்தலிங்கம் பிள்ளை (எம். ஆர். ராதா-2)வின் நேர்காணலில் ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்‘ என்னும் பனிக்கட்டிப் பாடலைப் பாடி சோப் போடுகிறார் பாண்டியர். கபாலியுடன் ஆன உருவ ஒற்றுமையைப் பார்த்து அதிர்கிறார்; குழம்புகிறார்.

அமிர்தலிங்கத்திற்குத் தெரியாமல் பாண்டியன் – கீதா திருமணமும், வசந்தி – இரவியின் கல்யாணமும் கைலாச மலை எஸ்டேட்டில் நடந்தேறுகிறது. கடைசி நிமிடத்தில் அமிர்தலிங்கத்தின் தோற்றத்தில் கபாலி ஆஜராகி அட்சதைப் போட்டு, மாப்பிள்ளை பாண்டியனைக் கடத்தி, சப்ஸ்டிட்யூட்டாக மருதுவை இறக்க திட்டம் தீட்டுகிறார்.

சாந்தி முகூர்த்தப் பாடலாக இரட்டை அர்த்தம் தொனித்தாலும், இரு அர்த்தமும் சைவ அர்த்தமான ‘அத்திக்காய்.. காய்‘ பாடலின் முடிவில் ரியல் அமிர்தலிங்கம் வந்து விடுகிறார். மருது – கபாலி & கோ-வினால் பாண்டியன் கடத்தப்பட்டு கடலில் வீசப்படுகிறார். இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் ‘

கடனில் வாழும் என் அண்ணனிற்கு ஆதரவு கொடுக்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன். அவர் இறப்பிற்கு பின் அனைத்து சொத்துகளும் வசந்தியைச் சேரும்

‘ – வக்கீலை சென்றடைகிறது.

அண்ணனாக மூக்குக் கண்ணாடி, நரைத்த முடி, இயல்பான ஆங்கிலம் ஷங்கர் (சிவாஜி-3). சயிண்டிஸ்ட் ஷங்கருக்கு சதி தீட்டும் சந்தியா (ஜெயலலிதாவின் அம்மா) மனைவி.

சந்தியாவின் எண்ணப்படி ஷங்கரே ‘பாண்டியனாக’ மாறி சொத்தை அபகரிப்பதற்காக நடிக்க செல்கிறார். கபாலியின் எண்ணப்படி மருதுவும் ‘பாண்டியனாக’ மாறி எஸ்டேட்டை அபேஸ் செய்ய வருகிறார்.

நிஜ பாண்டியன் உயிர் பிழைத்தாரா? ‘வாழ நினைத்தோம் வாழுவோம்‘ என்று பாடிய கீதாவுடன் யார் இணைந்தார்கள்? என்பதை நகைச்சுவையாக வெள்ளித்திரையில் கிரேஸி மோகன் டிரேட்மார்க் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

மூன்று வேடங்களிலும் டிரேட்மார்க் மேனரிசங்களுடன் சிவாஜி அசத்தியிருக்கிறார். உருவ அமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், கடைசி நிமிடங்களில் ஒரே ஆடையில் வந்தாலும், பாவனைகளிலேயே ‘மருதுவா’, ‘பாண்டியனா’, ‘ஷங்கரா’ என்று தெரிவிக்கிறார்.

அசின் போன்ற துள்ளலுடன் தேவிகா. அழுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும், அறுபதுகளின் துடுக்கான இளம்பெண்ணாக வளைய வந்திருக்கிறார்.

பி.ஆர். பந்துலுவின் இயக்கத்தில் திரைக்கதை தொய்வில்லாமல் நகர்கிறது. குழப்பக்கூடிய இரட்டை, மூன்று வேடங்களையும் தெளிவாகக் கொண்டு செல்கிறார்.

திருவிளையாடலின் ‘நக்கீரா…’ போல் பலே பாண்டியாவின் ‘மாமா அவர்களே‘ குறிப்பிடத்தக்க சொற்றொடர். கண்ணாடி முன் டூப்ளிகேட்டுடன் ஒத்திசைவோடு வரும் காட்சிகள் பல படங்களில் வந்துவிட்டாலும், எம். ஆர். ராதாவின் அங்க சேஷ்டைகளுடனும் வசனங்களுடனும் பார்க்கும்போது தனி சிறப்பைப் பெறுகிறது.

ஹீரோ மூன்று வேடங்களில் வருவது போல், மூன்று கெட்டப்களில் வந்து – நாயகனை மிஞ்சும் விதத்தில் குணச்சித்திர நடிகர் எம். ஆர். ராதா பின்னியிருக்கிறார்.

நகைச்சுவைப் படத்தில் சீரியஸான விவாதங்களும் இடம்பெறுகிறது. தன் காதலை நியாயப் படுத்தி, அதே சமயம் தங்கை வசந்தியின் காதலை நிராகரிக்கும் முரணை – பாண்டியனிடம் கண்ணியமாக, இரவி சுட்டிக் காட்டும் இடம்; மன்னிப்பு பற்றி அலங்கார வசனங்கள் இல்லாமல், ஆனால் தெளிவாக விளக்கும் வசனங்கள்; தேர்ந்த அரசியல்வாதி போன்ற அந்தக்காலத்திற்குப் பொருத்தமான, ஆனால் இன்றும் பொருந்தும் கருத்துக்களை முன்வைக்கும் கபாலி; அவற்றில் சில:

 • ‘தேர்தல்ல போனாத்தான் ஜெயிக்க முடியலியே… எனக்கும் அரசியலுக்கும் ராசியில்ல. நான் இனிமே அரசியல் பக்கமே எட்டிப் பார்க்கப் போவதில்லை!’ (62-இல் சிவாஜி)

 • ‘நான்கு நாள்களாக எதுவுமே சாப்பிடவில்லை; கொலைப்பட்டினி’ (பாண்டியன் ‘சிவாஜி’)

  பாண்டியனின் உருவத்தை கண்ணால் மதிப்பிட்டுக் கொண்டே ‘பட்டினி கிடக்கிற உடம்பாத் தெரியலியே?’ (கபாலி ‘எம்.ஆர். ராதா’)

 • ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்தான் கணவன்’ (தேவிகா)

  ‘நாளைக்கே என்னன்னு தெரியாது… ஜென்மக் கணக்கில் ப்ளான் போடுறியா?’ (அமிர்தலிங்கம் ‘எம் ஆர் ராதா’)

 • ‘தங்கள் இதயமென்ன கல்லா…
  வாயிலிருந்து உதிர்வதென்ன சொல்லா…
  இந்த மருமகனோடு மல்லா…’
 • ‘குறிக்கோளில்லாமல் கோட்டுவாய் கூட விடமாட்டேன்’

 • ‘நாம் நினைப்பதெல்லாம் நடக்காவிட்டால், நினைக்காததெல்லாம் கூட நடக்கலாம் அல்லவா?’
  (‘பாண்டியன்’ உயிர் பிழைத்திருக்கலாம் என்று தேற்றும்போது)

  அடுத்த முறையோ அலது மீண்டுமோ கே டிவியில் சிரிக்க வாய்ப்புக் கிடைத்தால் தவறவிடவேண்டாம்.


  | |

 • 8 responses to “Bale Paandiya – Movie Review

  1. வெளிகண்ட நாதர்

   நான் என்னுடய பால்ய நினைவுகள் சொன்னமாதிரி, இந்த மாதிரி சிவாஜி படங்களை எல்லாம் முதல் ரவுண்டுல, அதாவது வந்த பதுசுல பாக்கல, ஆனா அடுத்த ரவுண்டுல போட்டப்பல்லாம் நான் போய் பார்த்த படங்கள்ல இந்த பலே பாண்டியாவும் ஒன்னு, குறஞ்சது ஒரு பத்து தடவையாவது போட்டப்பெல்லாம் பார்த்திருப்பேன், அதுவும் எம் ஆர் ராதா காமிடிக்கென்னே! திரும்ப அந்த ஞாபகம் வந்திச்சு, உங்க பதிவை பார்த்தோன!

  2. நானும் இப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு (டிவிடி) பார்த்தேன். சிவாஜியின் நடிப்பு பிரமாதமாக இருந்தாலும் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால், எம்.ஆர். ராதாவின் பன்முக stylized நடிப்பு என்னிடம் ஒரு பிரமிப்பையே உண்டு பண்ணியது. In my mind, he made the movie.

   நினைவுகளை அசை போட வைத்த பதிவுக்கு நன்றி.

  3. //’மாமா அவர்களே’ //

   🙂

   அந்த அத்திக்காய் காய் காய், ஆலங்காய் பாட்ட பத்தி ஒண்ணுமே சொல்லல .

  4. நான் உங்களை Tag செய்துளேன். இங்கே பார்க்கவும்

   [இது கட்டாயம் இல்லை. தொடர்ந்தால் மகிழ்வேன்]

  5. வெளிகண்ட நாதர் & Srikanth __/\__

   Karthik, I will try to post. Thx for the tag 🙂

  6. சிறில் அலெக்ஸ்

   பலே பாலா…

  7. Pingback: அந்தக்கால ரெட்டை அர்த்த பாடல் « Snap Judgment

  8. Pingback: 10 Pandiyans from Tamil Nadu: Names & Famous Folks « 10 Hot

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.