Daily Archives: மார்ச் 29, 2006

Madras Meetings

சென்னை சந்திப்புகள்

நான்கு சந்திப்புகள் கிடைத்தது. திலகபாமா ஏற்பாடு செய்திருந்த ‘பகிர்வு‘ குறித்து சேரியமாய், விரிவாய் பின்பு எழுத உத்தேசம்.

சனிக்கிழமைதான் சந்திக்க முடியும் என்று அடம் பிடித்தாலும் பா. ராகவன் அலுவலகத்துக்கே வருமாறு சொல்லியிருந்தார். சென்ற முறைக்கு இந்த முறை இரட்டித்திருந்தார். ‘கெட்டிமேளம்‘ நன்றாகப் போகும் சந்தோஷமாக இருக்கலாம். மேஜையில் மருத்துவ மலர்கள், அனுமான் பஞ்சரத்னா, முதல் பதிப்பு 18-வது அட்சக்கோடு, எஸ்.வி ராஜதுரையின் ‘நிலமெல்லாம் இரத்தம்‘ விமர்சனம் தாங்கிய இந்தியா டுடே என்று வெரைட்டியான வலைப்பதிவுக்கான காத்திரமான ரெஃபரன்ஸ் போன்ற புத்தகங்கள்.

வழக்கமான ‘வலைப்பதிவை விட்டுட்டு உருப்படற வழியப் பாருடா‘ போன்ற ஆத்மார்த்தமான வேண்டுகோள்களுக்குப் பிறகு கொஞ்சம் இலக்கிய நிகழ்வுகள், அரசியல் வம்புகள், ‘ரெண்டு’ தொடர்கதை, கிழக்கு பதிப்பகத்தின் பு(து)த்தகங்கள் என்று பேச்சு தொடர்ந்தது.

நீண்ட நாளாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்த ரஜினி (ராம்கிதான்) தரிசனமும் கிடைத்தது. கடந்த சில வருடங்களில் பலமுறை கற்பகாம்பாள் நகர் அலுவலகம் சென்றிருந்தாலும் பத்ரியையும் இப்பொழுதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். பிஸிக்கு நடுவில் ஒரு சின்ன ‘Hi’, நலம் விசாரிப்புக்குப் பிறகு பாரா-வையும் அவர் வேலையில் முடுக்கிவிட, ஆதவன், ‘சண்டக்கோழி’ எஸ். ராமகிருஷ்ணன் தொகுப்புகள், சில பல சிறுகதைத் தொகுப்புகள், தமிழோவியம் கணேஷ் சந்திராவுக்காக ‘சந்திரபாபு வாழ்க்கை வரலாறு‘ எல்லாம் வாங்கிக் கொண்டு நடையை ஏறக்கட்டினேன்.


சனி மாலை கடும் வெயில் நேரம் கொடுக்கும் சூரியன் டாடா காட்டியபின் அடையாரின் புனிதத்தலமாக ‘ரைஸ் பௌல்’-ஐ அடையாளம் காட்டி கருப்பு சட்டையுடன் வெளியில் காத்திருந்தார் ரோஸா வசந்த். ஒடிசலான தேகம். நேரில் பார்த்தால் 25 வயதுதான் மதிப்பிட முடிகிறது. குரல் மட்டும் கொஞ்சம் வயசை முப்பதுகளுக்குத் தூக்கி செல்கிறது. பாந்தமாக வரவேற்று அங்கதத்துடன் இயல்புக்குக் கொண்டு வருகிறார்.

ஆங்கிலம் கலக்காமல் தமிழ் சரளமாக புரளுகிறது. எல்லாரும் கேட்கும் ‘நீங்க என்.வி. சாப்பீடுவீங்களா?‘ அல்லது ‘Do you take chicken, beef?‘ போன்றவற்றைத் தவிர்த்து ‘நீங்க புலால் உண்பீர்கள் இல்ல?‘ என்று விழுகிறது.

சனி இரவு என்பதால் மதுவரங்கம் நிரம்பி வழிகிறது. நுனி நாக்கு ஆங்கிலத்தில் எங்களைக் காத்திருக்குமாறு பணிக்கத் தொடங்கும் வரவேற்பாளனை, இணையத்தில் ஒவ்வாத கருத்தை முன்வைப்போனை இடைமறிக்கும் அதே லாவகத்துடன் தடுத்தாட்கொண்டு, ‘ஐயா… எனக்கு ஆங்கிலம் வராது! தங்களுக்குத் தமிழ் தெரியுமானால் உரையாடுங்கள்; அல்லது தமிழ் தெரிந்தவரை எங்களிடம் அனுப்புங்கள்‘ என்று மெல்லிய சிரிப்புடன், மரியாதை குறையாமல், மரியாதை வரவைக்குமாறு சொல்வது சொந்த வாழ்விலும் சமரசங்களை செய்து கொள்ளாததை அடையாளம் காட்டுகிறது.

நிறையப் பேசுகிறோம். தமிழ்மணத்தின் லிஸ்டிங் போல் ஐந்து விநாடிக்கொருமுறை தலைப்பும் வாதங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே போகிறது. Continous partial attention கொடுத்து வலைப்பதிவர்கள், மனுஷ்யபுத்திரன், சொந்த வாழ்க்கை, ராயல் சாலெஞ்ச், ‘உருப்படாதது’ நாராயணுக்கு வழி, நெத்திலி மீன் என்று சுழல்கிறது.

நிழல்கள் ஹரன்பிரசன்னாவும் ஸ்வஸ்திக் பிச்சைபாத்திரம் சுரேஷ் கண்ணனும் வந்து சேர்கிறார்கள். என்னுடைய இலக்கற்ற கருத்தாடலுக்கு லகான் போட்டு, சுரேஷ் கண்ணன் இலக்கியத்துக்கு கலந்துரையாடலை முன் நகர்த்துகிறார். மரவண்டு கணேஷுக்குத்தான் சிறப்பு நன்றிகளை சொல்ல வேண்டும். இருவரையும் தொலைபேசியில் பிடித்து, சந்திப்புக்கு வரவழைத்த பெருமை மரவண்டு கணேஷையே சேரும்.

நீல. பத்மநாபன், திருநெல்வேலி வீதிகள், ஹேவர்ட்ஸ் 5000, கோவில்களில் பெண்களை கவனித்தலின் உளவியல் அலசல்கள், கோபி மன்சூரியன், நாராயணின் மென்சிரிப்புடன் விடை பெறுகிறோம்.


ஞாயிறு மதியம் மூன்றரைக்கு சந்திப்பதாக சொல்லிவிட்டு நான்கரை மணிக்குத் தலையை காண்பிக்கிறேன். பொறுமையாக சென்னை வுட்லண்ட்ஸ் வாசலில் ஐகாரஸ் பிரகாஷ், நேசமுடன் வெங்கடேஷ், சுபாஷிதம் மதுமிதா, ஒலிக்கும் கணங்கள் நிர்மலா காத்திருக்கிறார்கள். மீண்டும் மரவண்டு கணேஷுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைப் பதிகிறேன். மதுமிதா மற்றும் நிர்மலாவுடன் தொலைபேசி வரவழைத்திருந்தார். அவரும் கவிஞர் ப்ரியனும் சிறிது நேரத்தில் சிறிது நேரத்துக்கு இணைந்து கொள்கிறார்கள்.

மதுரபாரதியின் ‘புத்தம் சரணம்‘ குறித்த வாசக அனுபவத்தை பகிர்கிறார் மதுமிதா. ‘நீங்க எப்படி ‘புத்தம் சரணம் கச்சாமி‘ எழுதறீங்க’ என்று என்னைப் பார்த்து நம்ப முடியாமல் மூன்று தடவை வினவுகிறார். அரசு ஸ்டைலில் ‘ஹி… ஹி…’ என்பதைத் தவிர என்னிடம் வேறு பதில் இல்லை. (நண்பர் பிகேயெஸ் சொன்ன பகிடி நினைவுக்கு வருகிறது: ‘மனைவி வீட்டில் இருந்தால் ‘புத்தம் சரணம் கச்சாமி எழுதுவாய்’ ஊருக்குப் போயிட்டால் மரையா ஷரபோவா படம் போடுவாய்‘).

காசி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நிர்மலா லஸ்ஸி சாப்பிட கதையையும் லஸ்ஸி உண்டாகும் விதங்களையும் வர்ணித்தவுடன் வட நாட்டு லஸ்ஸி ருசிக்கும் ஆர்வம் மீண்டும் எழுகிறது.

கொஞ்ச நேரத்தில் ரஜினி ராம்கியும் வந்து சேருகிறார். காரசாரமான அரசியலுக்கு பேச்சு தாவுகிறது. வெங்கடேஷ் தன்னுடைய கணிப்புகளை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறார். எல்லோரும் வாய்பிளந்து கேட்கிறோம். தொகுதி மோதல்கள், கூட்டணி ஆட்சி, ஸ்டாலின் கருணாநிதி முதல்வர் ஆருடங்கள், மூன்றாவது அணி, தேதிமுக, திண்டிவனத்தார் என்று சகலத்தையும் ஐகாரஸும் ராம்கியும் வெங்கடேஷுடன் விவாதிக்கிறோம்.

யார் ஒட்டுக் கேட்டு வெங்கடேஷின் வண்டியை ரிப்பேர் செய்தார்களோ… விடை பெறும் நேரத்தில் வெங்கடேஷின் வண்டி நகர மறுக்கிறது. கில்லியைக் குறித்து ஐகாரஸுடன் சில நிமிடம் பேசி விட்டு, அடுத்த முறை விட்டுப் போனவர்களையும் சந்தித்தவர்களையும் இன்னும் நிறைவாக சந்திக்கும் எண்ணத்துடன் கிளம்பினேன்.


| |

திமுக தேர்தல் அறிக்கை

2 ரூபாய்க்கு அரிசி: திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி
திமுக தேர்தல் அறிக்கையை கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். அதில் விவசாயிகள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29, 2006: சென்னை:

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

 • காலியாக உளள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
 • மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
 • கிலோ 2 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கப்படும்.
 • வீடு தோறும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிடைக்க வகை செய்யப்படும்.
 • ஏழை, எளிய தாய்மார்களுக்கு எரி வாயு அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.
 • சிறு குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
 • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
 • நிலமற்ற ஏழை விவசாயிகளுககு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும்.
 • விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

  courtesy: Thatstamil

  Idlyvadai