Dinamalar Essay – TN Politics 2026: Rural Voters Analysis


*மௌன வாக்காளர்கள்: கிராமப்புறத் தமிழகம் உண்மையில் விரும்புவது என்ன?*

இந்திய அரசியலில் மிக எளிதாகச் செய்யக்கூடிய தவறு என்னவென்றால், கிராமப்புற தமிழ்நாட்டை பீகார், ராஜஸ்தான் அல்லது கர்நாடகாவில் காணப்படும் அதே வகையான கிராமப்புறமாகக் கற்பனை செய்வதுதான். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு ஏற்கனவே 49% நகர்ப்புறம்; எஞ்சிய சுமார் 51% மட்டுமே கிராமப்புறமாக இருந்தது. ஒட்டுமொத்த இந்தியாவில் 31% மட்டுமே நகரம்; கர்நாடகா 38.7%, பீகார் வெறும் 11% நகர்ப்புறமாக இருக்கிறது. அதே நேரத்தில், தமிழகத்தின் ஒவ்வொரு தேர்தல் முடிவையும் தீர்மானிக்கும் மூணே முக்கால் கோடி கிராமத்தினரை அனைத்து அரசியல் கட்சியும் வட்டம், ஊராட்சி ஒன்றியம், குடியிருப்பு, வார்டு என பஞ்சாயத்து கேட்கும். இங்கு கிராமப்புற வாக்காளர் மறையவில்லை; “கிராமப்புறம்” என்பதன் பொருள் தேய்பிறையாக மாறிக்கொண்டேயிருக்கிறது.

தமிழ்நாட்டில் 154 இடங்கள் கிராமப்பகுதிகளைச் சார்ந்தவை. நகரங்களுக்கு 50. பாக்கி 30 இடைநிலைத் தொகுதிகள். கரூரில் 84% வாக்குப் பதிவு என்றால் சென்னையில் வெறும் 59% வாக்காளர்களே வாக்களிக்கிறார்கள். தங்கள் பதிவு தொகுதிக்கு வெளியே வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக நகர்ப்புற வாக்காளர்கள் நடைமுறைச் சிக்கல்களை சந்திக்கின்றனர். கிராம வாக்காளர்களிடம் சமூக திரட்டலும், சாதி அமைப்புகளும், உள்ளூர் என்னும் சொந்த உரிமை கொண்டாடும் பொறுப்புணர்வும் காரணிகளாக வலுவாகச் செயல்படுகின்றன.

2021ல் திமுக கூட்டணியின் வெற்றி விகிதம் நகர்ப்புற தொகுதிகளில் 80% ஆக இருந்தது; கிராமப்புற தொகுதிகளில் 62% மட்டுமே. அதேசமயம், அதிமுக கூட்டணி வென்ற 75 தொகுதிகளில் 58 இடங்கள் கிராமப்புறங்களிலிருந்தே வந்தன.

ஒப்பீட்டைக் கவனியுங்கள். பீகார், அசாம் (85.9%) அல்லது ஒடிசா (83.3%) போன்ற மாநிலங்களில், கிராமப்புற மக்கள்தொகை பெரும்பான்மையாக இருக்கிறது, தேர்தல்கள் கிட்டத்தட்ட முழுக்க முழுக்க கிராமப்புற உரையாடல்களாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட சரி பாதிக்கு சற்றே அதிகமான கிராமப்புற மக்கள் சக்திவாய்ந்த நகர்ப்புற வாக்காளர் தளத்துடன் அரசியல் மேடையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், கிராமப்புற தமிழ்நாடு வெறுமனே இருந்தால் போதாது; கவனத்திற்காகப் போட்டியிட வேண்டும். இந்தப் போட்டிதான் இந்தியாவிலேயே மிகவும் அரசியல் எழுச்சியுள்ள கிராமப்புற மக்களில் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

இந்த வாக்காளர் உண்மையில் என்ன விரும்புகிறார்? “இலவச அரசியல்” என்ற கதையாடல் சொல்வதை விட பதில் மிகவும் நுட்பமானது.

அது தண்ணீர். தமிழ்நாட்டில் உள்ள 385 நிலத்தடி நீர் தொகுதிகளில் 142 அதிகமாக சுரண்டப்பட்டவை. மேலும் 33 கவலைக்கிடமான நிலையிலும் 57 நீர் தொகுதிகள் குற்றுயிராக உள்ளன. இது தார் பாலைவன ராஜஸ்தானை விட இந்தியாவின் மிகவும் நீர் நெருக்கடியுள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகத்தை நிறுத்துகிறது. காவிரி டெல்டா: முன்னுமொரு காலத்தில் மாநிலத்தின் நெல் கிண்ணம் என்று கொண்டாடி பல மில்லியன் டன் நெல் விளைவித்தோம்! இப்போது விவசாயிகள் குளிர்காலப் பயிர்களை இரண்டு மூன்று முறை விதைப்பதைக் காண்கிறோம். வரவே வராத மழையை எதிர்நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கின்றோம். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்கு வெறும் 13% மட்டுமே. ஆனால் கிராமப்புற பகுதியில் முதன்மை வேலையளிப்பாளராக இது தொடர்கிறது. பொருளாதாரப் பங்களிப்புக்கும் மனித சார்புக்கும் இடையிலான இந்த இடைவெளியில்தான் உண்மையான நெருக்கடி வாழ்கிறது.

தமிழ்நாட்டின் நெருக்கடி என்பது கட்டமைப்புரீதியான பற்றாக்குறை. தமிழ்நாட்டின் தனிநபர் நீர் கிடைப்பு வெறும் 750 கன மீட்டர்; தேசிய சராசரியான 1,544 கன மீட்டரில் கிட்டத்தட்ட பாதி. நகரமயமாக்கலினால் விவசாயப் போட்டி கடும் நெருக்கடிக்குள்ளாகிறது. 2010-ல் தமிழ்நாட்டின் நீரில் 90% பாசனத்திற்குப் உபயோகமானது; 2020-க்குள் அது 60%-ஆகக் குறைந்தது! தொழிலகம் 26%-ஐயும், வீட்டு உபயோகம் 14%-ஐயும் எடுத்துக்கொண்டன. சென்னையின் வேகமான வளர்ச்சி விவசாயத்திலிருந்து நீரை இழுக்கிறது.

நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் இப்போது சூழலியல் நிலைத்தன்மையையும் இயற்கை வேளாண்மையையும் பிரச்சாரம் செய்கின்றன. கிராமப்புற வாக்காளர்களின் பெரும் பிரிவினர் வீட்டு உபயோகப் பொருட்கள் விநியோக திராவிட மாடலில் சலிப்படைந்து, நீண்டகால வாழ்வாதாரப் பாதுகாப்பு பற்றிய கடினமான கேள்விகளை எழுப்புகின்றனர்.

கிராம வாழ்க்கை இன்றளவும் ஆழமாக நிலம் சார்ந்த உடல் உழைப்பைச் சார்ந்துள்ளது. கிட்டத்தட்ட 70% தொழிலாளர்கள் விவசாயம் செய்தனர். குறைந்த தினசரி ஊதியங்கள் இன்றும் அவர்களின் அன்றாடம். விவசாய வேலையில் பெண்கள் ஆண்களை விட மிகவும் குறைவாக சம்பாதிப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. செய்தி எளிமையானது: வேலையே பருவகாலத்திற்கேற்ப கிடைத்தும் கிடைக்காமலும்; கிடைக்கும் வேலையும் குறைந்த ஊதியத்துடன் சமத்துவமற்றதாகவும் இருக்கும்போது, “தன்னிறைவு” பற்றிய பேச்சுக்களை மக்கள் விரும்பவில்லை.

கிராமப்புற வாக்காளர் அருகிலுள்ள நகரங்களுக்கான பேருந்துகள், மாவட்டத் தலைமையகங்கள் அருகிலான தொழிற்சாலை வேலைகள், பால் கொள்முதல், மீன்பிடி, சேமிப்புக் கிடங்குகள், சிறு தொழில் கடன் ஆகியவற்றைப் பற்றி விளைபொருள் விலையைப் போலவே அக்கறை கொள்கிறார். தமிழகத்தின் அமைதியான கிராம வாக்காளர் நுட்பமான ஆனால் சக்திவாய்ந்த ஒன்றைச் சொல்கிறார்: எங்களை “காப்பாற்ற” வேண்டிய பின்தங்கிய கிராமங்களாக நடத்தாதீர்கள். அவர்கள் விரும்புவது கடைக்கண் மட்டும் வீசும் அரசு அல்ல, முடிவில்லாத அடையாள அரசியலும் அல்ல; ஆனால் தங்களை சரிசமமாக மதிக்கும் திறமையான அரசு; கிராமச் சாலைகளோடும் வேலைவாய்ப்போடும் தண்ணீர் கொட்டும் குழாய்களோடும் இல்லம் என்றழைக்கத்தக்க வீடுகளோடும் பெண்களைக்கான உரிமைக் கடனோடும், நலத்திட்டங்களை மேல்நோக்கிய சமூக நகர்வோடும் இணைக்கக்கூடிய வித்தியாசமான அரசு.

கிராமப்புற தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 73.5%, தேசிய கிராமப்புற சராசரியை விட அதிகம். இது திறன்பேசி பயன்படுத்தும், சமூக ஊடகங்களில் அரசியலைப் பின்தொடரும், அரசாங்கத்தின் பாதை எங்கும் பயனின்றி முடிவடைவதை அறிந்த அறிவார்ந்த மக்கள்தொகை. மாநிலம் மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் 12,500க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை நிர்வகிக்கிறது! இந்தியாவிலேயே மிகவும் விரிவான கிராமப்புற ஆட்சி கட்டமைப்புகளில் ஒன்று. ஆனாலும், நிறுவனக் கட்டமைப்புக்கும் உண்மையான சேவை வழங்கலுக்கும் இடையிலான இடைவெளியானது, எந்தத் தேர்தல் அறிக்கையும் போதுமான அளவு பேசாத மௌன விரக்தியாக நீடிக்கிறது.

நகரங்களைக் கணக்கில் கொண்டு சராசரி என கணக்குக் காட்டி கடினமான கிராம யதார்த்தங்களை மறைக்கலாம்: படிக்கும் குழந்தை பள்ளியில் தொடர்கிறதா? நோய்வாயுற்ற சேயை தக்க நேரத்தில் தாய் மருத்துவமனையில் சேர்க்கிறாளா? திறமையான இளைஞர் தகுதியான வேலைக்குச் செல்கிறானா என்பதை இறுதிக் கட்டமே தீர்மானிக்கிறது. கிராமப்புற வாக்காளருக்குத் தெரியும்: வளர்ச்சி என்பது கவர்ச்சியான விளம்பரப் பலகை அல்ல; அது நம்பகமான 24×7 பேருந்து நிறுத்தம், சரியாகச் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம், தரமான அங்கன்வாடி, தேர்தல் அரசியலுக்கு முன்பே வரும் குடிநீர்.

தமிழகத்தின் தனித்துவமான கோணம் இதுதான்: எழுத்தறிவு விகிதமும், பன்முகப் பொருளாதார வெளிப்பாடும் கொண்ட நம் தமிழ்நாட்டுக் கிராமம் — ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகியவை எளிய பேருந்துப் பயணத் தொலைவில் இருக்கும் இடம் ; அடிப்படையிலேயே வேறு வகையான வாக்காளரை உருவாக்குகிறது. இந்த வாக்காளர் எந்தக் கட்சி சிறந்த ஃப்ரிட்ஜோ, அதிக கூப்பனோ தருகிறது என்பதை வைத்து கட்சிகளைத் தேர்வு செய்வதில்லை. இந்த வாக்காளர் கணக்குப் போடுகிறார். எந்த அரசாங்கம் பாசனக் கால்வாயைச் சரிசெய்யும், எந்த அரசாங்கம் அருகிலுள்ள சுகாதார மையத்தில் நல்ல மருத்துவர் இருப்பதை உறுதிசெய்யும், எந்த அரசாங்கம் தங்கள் குழந்தைகள் வேலை செய்யும் அருகிலுள்ள நகரத்திற்கான பேருந்து சேவையை இயக்கும் என்று சீர்தூக்கிப் பார்க்கிறார்.

கிராமப்புற தமிழ்நாட்டின் மௌன வாக்காளர், உண்மையில், மிகவும் உரக்கவே பேசுகிறார். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை, வாக்குச்சாவடியில், 1967 முதல் ஒவ்வொரு ஆளும் அரசாங்கத்தையும் கவிழ்த்த நிலைத்தன்மையுடன். உண்மையான கேள்வி அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது அல்ல! அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரேனும் உண்மையாகவே காது கொடுத்துக் கேட்கிறார்களா என்பதுதான்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.