சென்ற வார இலக்கியம் – சென்ற மாத இலக்கியம் போல் ஆகி விட்டது.
ஜூலை நான்கு அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி ஆரம்பித்த பல் வலி பல்கிப் பெருகி ஒடிஸியில் வரும் பிரும்மாண்ட தெய்வங்களாக மிரட்ட ஆரம்பித்தது ஒரு காரணம்.
சொல்வனத்தின் இந்திரா பார்த்தசாரதி சிறப்பிதழ் இன்னொரு காரணம்.
கோடை என்றால் கொண்டாட்டம் என்பது முக்கிய காரணம்.
ஸ்டோரி ஜட்ஜ் நிகழ்விற்காக எழுதிய பேச்சின் சுருக்க வடிவு இங்கே.
சிவா (தமிழோசை ஆன் ஏர்) அவர்களுக்கு நன்றி!
https://www.youtube.com/@tamilosaionair2738/videos
காலச்சுவடு தமிழின் முக்கியமான இதழ்.
நிகழ்வுகளாகட்டும்; விமர்சனங்களாட்டும்; ஆம்லெட்டில் எல்லாவிதமான காய்கறிகளும் போட்டு வண்ணமயமாக வருவது போல் சுட்டுத் தருகிறார்கள்.
எனினும், கதைகளில் மட்டும் நிலைய வித்துவான்களையே ஆதரிக்கிறார்கள்.
அது போகட்டும்.
அச்சிதழ்.
பக்கங்களை தங்கள் பக்கம் ஆதரிப்பவர் பக்கம் கொடுப்பது இயற்கைதானே?
இந்த மாதக் கதைகள்:
1. தீ இனிது : பெருமாள்முருகன்
2. பாடிங்க்டன் கரடி : கோகுலக்கண்ணன்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா, ”247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்” என்னும் பத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். அவசியம் வாசிக்கவும்.
முன்பெல்லாம் அஞ்சலி என்றால் ஆசான் ஜெயமோகன் என்றிருந்தது.
தமிழ் விக்கியும் யுனைட்டெட் முழுமையறிவு விஸ்டமும் வந்த பிறகு அந்தப் பொறுப்பு முழுக்க முழுக்க கா.சு. மட்டுமே ஏற்றுக் கொண்டிருக்கிறது:
– மு. பரமசிவம் (1934 – 2026) : பாட்டாளிப் படைப்பாளி : ஆ.இரா. வேங்கடாசலபதி
– பல்லடம் மாணிக்கம் (1936 – 2026) புத்தக மாணிக்கம் : கண. குறிஞ்சி
– பாரதிராஜா (1941 – 2026) : மேதைமைக்கு அருகில் சென்ற சாதனையாளர் : ஸ்டாலின் ராஜாங்கம்
சுகுமாரனின் கட்டுரைகளை முன்வைத்து, எம். கோபாலகிருஷ்ணன், “கலையை எழுதுதல்” அலசுகிறார். முக்கியமான விமர்சனப் பார்வை.
#நறுக்: ‘ஜி. நாகராஜனும் வி. மாலாவும்’ என்ற தலைப்பில் வெளியான அவரது முதல் கட்டுரையில் (2004, ஆகஸ்ட்) தொடங்கி இன்றுவரை தொடரும் அவரது கட்டுரைகளின் வரிசை செறிவான மொழி அனுபவத்தையும் அரை நூற்றாண்டுத் தமிழ்த் தீவிர இலக்கியத்தின் போக்கையும் ஒருசேர…
2026 ஜூன் 4ஆம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘மருதன்- 50’ நிகழ்வை இஸ்க்ரா விரிவாகப் பகிர்கிறார். “அப்பாதுரையார், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமிநாத சர்மா என்று நீடித்துவரும் அல்புனைவு மரபில் இடம்பெறும் #மருதன் , பொது வாசக எழுத்தின் மூலம் ஜனநாயகத் தன்மையை வளர்த்தவர்” என்கிறார்
ஏன்?
ராமச்சந்திர #குஹா பத்தியை தமிழில் மருதன் மொழியாக்கியிருக்கிறார்: மெய்யுரைப்பேன் மனமே!
மறைமுகக் கூட்டாளிகள் காந்தி குடும்பமும் பாஜகவின் ஆதிக்கமும்
சோழியன் குடுமி சும்மா ஆடுமா!?
நீளிரா திரைப்படம் குறித்து #சொர்ணவேல் திரைப்பார்வை.
ம. சோனியா, “சிறு தொழிற்கூடங்களில் நசுங்குபவர்களின் வாழ்க்கை” என்னும் தலைப்பில் பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய பரிசல் வெளியீடான பட்டறை நாவல் குறித்த அறிமுகப் பார்வை.
நிகழ்வுப்பார்வை: திருவாவடுதுறை ஆதீனம் புதிதாக இந்த ஆண்டு உ.வே.சா.வின் பெயரால் ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ என்ற விருதை ஏற்படுத்தி, முதல் விருதை முனைவர் ப. சரவணனுக்கு வழங்கியிருக்கிறது.
இது காலச்சுவடு மட்டும்.
வாசகசாலை இதழில் – நாற்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள்.
காலச்சுவடு மாதத்திற்கு ஒரு தடவை வருவது நியாயம். அதற்கு செல்வாகும்.
இணைய இதழ்களும் மாதத்திற்கு ஒரு தடவை வெளியாவது நாம் பழச மறக்க மாட்டோம் என்பதற்கான உதாரணம்.
தினசரி வெளியிடுவதை ஒழுங்காகச் செய்பவர்கள் அகழ்.
அவர்களின் இணையக் கூடுகைகள் முக்கியமான செயல்பாடு.
குவிகம் அமைப்பும் வாரந்தோறும் வலை வழியே சந்திக்கிறார்கள்; உரையாடுகிறார்கள்.
பலரையும் விருந்தினர்களாக அழைக்கிறார்கள். அனைவரையும் பேச வருக வருக எனக் ஜூம் கம்பளம் இட்டு வரவேற்கிறார்கள்.
இது போன்ற சந்திப்புகள் ஒவ்வொரு இதழுக்கும் அவசியம்.
அதை நெடுங்காலமாக செய்து வருபவர் ஜெயமோகன் + விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.
ரஜினி x கமல்
ஜானகி x சுசீலா
ரெஹ்மான் x ராஜா
என்பது போல் கா.சு. வந்தால் ஜெ.மோ. வர வேண்டுமே : )
அவரின் பரிவாரங்களில் அகழ் இதழை ஏற்கனவே கவனித்து விட்டோம்.
அடுத்து வல்லினம்; கவிதைகள்.இன்;
‘தமிழ் இலக்கியத்தில் ஆழங்கால் படாமல் கிறித்தவ இலக்கியத்தைப் படைக்க முடியாது!’ என்னும் தலைப்பில் தமிழ்விக்கி -தூரன் விருது பெறும் யோ. ஞானசந்திர ஜாண்சன் உடன் பேட்டி இடம்பெற்றிருக்கிறது.
இப்பொழுதெல்லாம் பேட்டி என்றால் இணையம் வழியாகக் கேள்விகளை அனுப்பி அந்த பதில்களை அப்படியே வெளியிடுவது.
தட்டச்சும் வேலை கிடையாது!
பலுக்கப் பிழை பார்க்கும் உழைப்பு கோராது!!
முக்கியமாக, ஒலிப்பதிவை வரிவடிவமாக மாற்றும் சுமை இல்லவே இல்லை!!!
பருத்தி புடைவையாகவே காய்க்கும் காலம்.
நல்ல பதில்கள்.
இன்னொரு பேட்டி: வல்லினம் இதழில் சாமிநாதன் முனிசாமி உடன் ஆன “மாற்று வரலாற்றுக்கான தேவையென்பது உலகளவில் இருக்கும் ஒன்று!”. சுவாரசியமான ஆய்வு.
இரண்டையும் வாசித்தால் உத்வேகமும் பெறலாம்; வித்தியாசமான ஆளுமைகள் குறிடததும் அறியலாம்.
இறுதியாக மயிர்.இன் மூன்று படைப்புகளை முன்வைக்கிறேன்:
1. போதி எழுதிய சிறுகதை: “மலர் நீட்டம்” – இனி தான் வாசிக்க வேண்டும்.
2. ஆவுடை எழுத்தில் அப்பாவின் நினைவிடம் – இதையும் நீங்கள் படித்து தேறுமா எனச் சொல்லுங்கள்.
3. செல்வி.சுஜாதா ஆனந்த ராவ் அசோகமித்திரனின் “ஆண்கள் பெண்கள் குழந்தைகள்” என அலசியிருக்கிறார்.
அதில் இருந்து நறுக்:
இனி வேண்டியதில்லை என்கிற சிறுகதை தமிழ் சினிமாவின் ஒரு விளிம்பினைக் கதைக்களமாக கொண்டிருக்கிறது. அதில் பகைப்புலமாக சினிமா உலகம் வந்துபோகிறது. ஆனால் கதையின் மையக் கரு பெண்மை. ஆண் பெண் உறவின் புதிர் தன்மையைப் பேசும் கதை.
எழுத்தாளர்கள் தமிழ் சினிமாவில் பங்கேற்பது தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே உள்ளது. புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, ஜெயகாந்தன், பூமணி, வெங்கட்சாமிநாதன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என்று அதற்கு ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
அசோகமித்திரன் ஒருவரே தமிழ் சினிமாவின் அசல் வாழ்க்கையை எழுத்தாக்கியவர்.
விடுபட்டதைச் சொல்லுங்கள்.
வாசிப்போம்.











