நாதி
ஆனானப்பட்ட கறீம் பாய் கண்ணை மூடிவிட்டார். தாலுகா ஆபீஸ் தடிவீரன் சொன்னான்.
ஏட்டையாவுக்கு நெஞ்சில் துப்பாக்கியால் இடித்த வலி. அந்த மைக்கண்ணும் மருதாணிக் கையும் மனசுக்குள் நிழலாடியது. மண்டை கிறுகிறுத்து ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்துவிட்டார்.
போனவாரம் போய்ப் பார்த்தபோது தெளுச்சியாக இருந்தாரே. படுத்த படுக்கையிலும் தெம்பாகப் பேசினார். ரிடையரான நினைப்பே இல்லை. அதே இன்ஸ்பெக்டர் கெத்து, எல்லாப் போலீஸ்காரர்களைப் பற்றியும் கேட்டார். கேடிகளின் நடவடிக்கைகளை விசாரித்தார்.
இடையில் “பாத்துமா” என்று குரல் கொடுத்தார். அவர் சம்சாரம் வந்து கட்டிலுக்கடியில் காத்திருந்த மூத்திரக் குடுவையை எடுத்துப் போனாள். அவர் கண்ணைச் சிமிட்டினார்.
“பாத்தயாவே வீட்டுக்குள்ளயே சாராய வடிப்பு நடக்குது. கேஸ்போட்டு உள்ள தள்ளீறாத.”
நோய் அண்டாத சிரிப்பு. கடைசிவரைக்கும் கிண்டல் போகாது.
பாத்துமா காலிக் குடுவையை வைத்துவிட்டுப் போகும்போது மறக்காமல் கேட்டாள்.
“வீட்ல எல்லாரும் நல்லாருக்காகளாண்ணன்.
அவள் முகத்தில் கரிப்பூச்சாகக் கவலை அப்பியிருந்தது.
“இருக்காகம்மா. புள்ளீகள எங்க.”
“ரெண்டு பேரும் பீடிக் கம்பெனிக்குப் போயிருக்காக. வீட்ல கெடங்கன்னாக் கேட்டாத்தான.”

பெட்டை
கம்மாக் கலிங்கலோரம் குருவன் துணிவெளுக்கும் சத்தம் நாலாபக்கமும் தெளிவாகக் கேட்டது. கல்லடித்தாளத்துக்குத் தக்கபடி அவன் சொகமாகப் பாடினான்.
“காடத்தட்டு
கக்கத்துல
கருத்தப்புள்ள
பக்கத்துல
காடத்தட்டு
காடத்தட்டு
சோ
சோ
சோவீவி
சோவீவி…”துணியைத் துப்புரவாகத் துவைத்து அடித்தொண்டைக்குள் ராகத்தை முனங்கிக்கொண்டே பிழிந்து பக்கத்தில் விரித்திருக்கும் சீலைமேல் விட்டெறிந்தான். அடுத்த உருப்படியை எடுக்கும் போது இன்னொரு பாட்டு துவங்கியது.
புருசனின் பாட்டைக் கேட்டபடி துவைத்துப் போட்ட துணிகளை நீலத்தில் முக்கிப் பிழிந்து காயப்போட்டாள் பொன்னாத்தா. நீலத்தாழிக்குள் கைச்சுழட்டல் மறுபடியும் வேகப்பட்டது.
கம்மாயில் தண்ணீர் மேடேறி கெத்கெத்தென்று கிடந்தது. மேட்டுத்தரையில் சம்பும் நீர்க்கோரையும் நெரிசலாக வளர்ந்த பசுமை. மெட்டான இடங்களில் கொக்குகள் அடம்பிடித்து ஒத்தைக்காலில் நின்றுகொண்டிருந்தன. ஓடைக்கரைப் பனையில் நிற்கும் மீன்கொத்தி அடிக்கொரு தடவை எறிந்த பந்தாக நீர்மட்டத்தில் விழுந்து உயரப்போய் உட்கார்ந்து கொண்டது.











