Tag Archives: Excerpts

பூமணி அஞ்சலி

நாதி

ஆனானப்பட்ட கறீம் பாய் கண்ணை மூடிவிட்டார். தாலுகா ஆபீஸ் தடிவீரன் சொன்னான்.

ஏட்டையாவுக்கு நெஞ்சில் துப்பாக்கியால் இடித்த வலி. அந்த மைக்கண்ணும் மருதாணிக் கையும் மனசுக்குள் நிழலாடியது. மண்டை கிறுகிறுத்து ஸ்டேஷன் வாசலில் உட்கார்ந்துவிட்டார்.

போனவாரம் போய்ப் பார்த்தபோது தெளுச்சியாக இருந்தாரே. படுத்த படுக்கையிலும் தெம்பாகப் பேசினார். ரிடையரான நினைப்பே இல்லை. அதே இன்ஸ்பெக்டர் கெத்து, எல்லாப் போலீஸ்காரர்களைப் பற்றியும் கேட்டார். கேடிகளின் நடவடிக்கைகளை விசாரித்தார்.

இடையில் “பாத்துமா” என்று குரல் கொடுத்தார். அவர் சம்சாரம் வந்து கட்டிலுக்கடியில் காத்திருந்த மூத்திரக் குடுவையை எடுத்துப் போனாள். அவர் கண்ணைச் சிமிட்டினார்.

“பாத்தயாவே வீட்டுக்குள்ளயே சாராய வடிப்பு நடக்குது. கேஸ்போட்டு உள்ள தள்ளீறாத.”

நோய் அண்டாத சிரிப்பு. கடைசிவரைக்கும் கிண்டல் போகாது.

பாத்துமா காலிக் குடுவையை வைத்துவிட்டுப் போகும்போது மறக்காமல் கேட்டாள்.

“வீட்ல எல்லாரும் நல்லாருக்காகளாண்ணன்.

அவள் முகத்தில் கரிப்பூச்சாகக் கவலை அப்பியிருந்தது.

“இருக்காகம்மா. புள்ளீகள எங்க.”

“ரெண்டு பேரும் பீடிக் கம்பெனிக்குப் போயிருக்காக. வீட்ல கெடங்கன்னாக் கேட்டாத்தான.”

பெட்டை

கம்மாக் கலிங்கலோரம் குருவன் துணிவெளுக்கும் சத்தம் நாலாபக்கமும் தெளிவாகக் கேட்டது. கல்லடித்தாளத்துக்குத் தக்கபடி அவன் சொகமாகப் பாடினான்.

“காடத்தட்டு 
கக்கத்துல 
கருத்தப்புள்ள 
பக்கத்துல 
காடத்தட்டு 
காடத்தட்டு 
சோ 
சோ 
சோவீவி
சோவீவி…”

துணியைத் துப்புரவாகத் துவைத்து அடித்தொண்டைக்குள் ராகத்தை முனங்கிக்கொண்டே பிழிந்து பக்கத்தில் விரித்திருக்கும் சீலைமேல் விட்டெறிந்தான். அடுத்த உருப்படியை எடுக்கும் போது இன்னொரு பாட்டு துவங்கியது.

புருசனின் பாட்டைக் கேட்டபடி துவைத்துப் போட்ட துணிகளை நீலத்தில் முக்கிப் பிழிந்து காயப்போட்டாள் பொன்னாத்தா. நீலத்தாழிக்குள் கைச்சுழட்டல் மறுபடியும் வேகப்பட்டது.

கம்மாயில் தண்ணீர் மேடேறி கெத்கெத்தென்று கிடந்தது. மேட்டுத்தரையில் சம்பும் நீர்க்கோரையும் நெரிசலாக வளர்ந்த பசுமை. மெட்டான இடங்களில் கொக்குகள் அடம்பிடித்து ஒத்தைக்காலில் நின்றுகொண்டிருந்தன. ஓடைக்கரைப் பனையில் நிற்கும் மீன்கொத்தி அடிக்கொரு தடவை எறிந்த பந்தாக நீர்மட்டத்தில் விழுந்து உயரப்போய் உட்கார்ந்து கொண்டது.

சாருநிவேதிதா – ராஸலீலா

அங்கே வரும் பெண்களைப் பார்க்கவே வாரத்தில் இரண்டு முறை அங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் பெருமாள். நிச்சயமாக அந்தப் பெண்கள் யாரும் தமிழ்ப் பெண்கள் அல்ல. தமிழர்களுக்கு பழம் சாப்பிடும் வழக்கம் இல்லையோ என்னவோ.

பெருமாளுக்கு அதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. அவன் கவலை அவன் மூலம்.

அப்பர் மிடில் க்ளாஸ் மற்றும் அப்பர் க்ளாஸைச் சேர்ந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வட இந்திய முகங்களையே அங்கு காண முடிந்தது. தமிழ் இரண்டு சதவிகிதம் இருக்கலாம். இப்படி இது ஒரு பூர்ஷ்வா கடையாக இருந்தாலும் விலை என்னவோ மற்ற இடங்களை விட மலிவுதான்.

மேலும் இந்தக் கடையில் பெருமாள் அவதானித்த ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இங்குள்ள பணிப்பெண்கள் யாவருக்கும் முலைகளே இல்லை என்பது. தய்வுசெய்து இதைப் பாலியல் பிரச்சினை ஆக்காதீர்கள். இது முழுக்க முழுக்க வர்க்க முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

அந்தப் பணிப்பெண்கள் ஏன் இப்படி நறுங்கிப் போய் கிடக்கிறார்கள் என்பதை Communist Manifestoவையும் மக்ஸீம் கார்க்கியின் தாயையும் படித்துவிட்டு யோசியுங்கள்.

அந்தக் கடையின் அண்ணா நகர் பிராஞ்ச்சில் மட்டும் அப்படியில்லை. மைலாப்பூர் பிராஞ்ச்சிலும் இதே நிலைமைதான். ஆனால் இந்தக் கடையில் பழங்களும் காய்கறிகளும் வாங்க வரும்பெண்களுக்கோ முலைகள் கறவை மாட்டு மடிகளைப் போல் இருக்க காரணம் என்ன?

அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் பெருமாளுக்கு ரோஜா படத்தில் மனீஷா கொய்ராலா அர்விந்த் சாமியைப் பார்க்க ஓடி வருவாளே அந்த ஸீன்தான் ஞாபகம் வந்து தொலைக்கிறது. பெர்க்மெனையும் ஃபெலினியையும் கோதாரையும் பார்த்து என்ன ரோஜாவில் அந்த ஸீனில் மனீஷா கொய்ராலா ஓடி வரும்போது தியேட்டரில் விசில் சத்தம் காதைப் பிளக்கிறதே…

அந்த ரசிகர்களுக்கும் தனக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருகணம் நினைத்துப் பார்ப்பான் பெருமாள்.

மறுகணமே கலையைக் காமம்வென்றுவிடும். காமமும் கலைதானே என்கிறீர்களா? அப்படியானால் இப்படி மாற்றிக் கொள்ளலாம். கலையை ஆபாசம் வென்றுவிடும்.

நன்றி: Rasa Leela :: Chaaru Nivedhitha