1. மதுரைக்கு காலை நேர ரயில். மாட்டியவர்கள் எல்லோரிடமும் குலம், கோத்திரம் தவிர பாக்கி குறுக்கு விசாரணை நடந்தேறின. ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தில் விகே ராமசாமியுடன் பேசிக்கொண்டே மோகன் சமாளிப்பது போல் அலுவல் தொலைபேசி, நேர்காணல் தொலைபேசி இரண்டையும் கொடுத்துக் கொண்டே வாய் கொடுத்தவர் ‘BPO’ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாண்டு அனுபவத்தில் புதிய இடத்திற்கான முயற்சியில் மேலாளர் ஆக விண்ணப்பித்திருக்கிறார். வீடு வாங்கியாச்சு. எம்.பி.ஏ.வும் கூடிய சீக்கிரமே சேர்ந்துவிடுவார்.
2. இவர் SAP குந்துரத்தர். சம்பாதிப்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான். மாடர்ன் மேட்ரிமனியல் நடத்துகிறார். முதற்பக்கத்தில் தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தாலே, மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் வலையகம் என்பது உறுதியாகும்.
3. விதவிதமான ஹோட்டல்களைக் கொண்டு வருவது இவரது கனவு. தற்போதைய வேலையில் போதிய அளவு சேமித்ததும், நண்பர்களுடன் பெங்களுருவுக்கு ஓர் உணவகம் (மூன்று நட்சத்திர பாணியில் கையேந்தி பவன் + சாலோயோர செட்டப் கொண்ட உயர்தர அமைப்பு), சென்னைக்கு சாலட் பஃபே (வித விதமான காய்கறி + ஆர்கானிக் + நேச்சுரல் முன்னிறுத்தப்படும் உணவு) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், கணக்கு போட்டு, திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறார்.
4. ‘தோழா… தோழா… தோள்கொடு தோழா’ என்று பாடிய பாண்டவர் பூமி நாயகியை ‘சிவசக்தி‘ ஆக்கிய பாரா மாட்டினார். ஒரு குழாயைத் திறந்தால் எக்ஸ்பிரெசோ காபி, அடுத்த பொத்தானைத் தட்டினால் சாக்லேட் மில்க், இன்னொன்றைத் தொட்டால் கோக் என்பது போல் அடுத்த கரண் படத்திற்கு எப்படி வசன வேலை நடக்கிறது, குமுதத்தில் ஆயில் ரேகை எவ்வாறு விரிவடையப் போகிறது, சிவசக்தி எவ்வாறு சீரியல் விரும்பிகளை ஈர்க்கப் போகிறது என்று ஊற்றாக கிளை மாறினாலும் எல்லாவற்றுக்கும் சூட்சுமமான புத்திசாலித்தனமாகிய மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.
5. அடுத்து மாட்டியவர் ‘கிழக்கு‘ பத்ரி. ‘என்.எச்.எம் ரைட்டர் இலவசமாகக் கொடுப்பது ஏன்?’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது?’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா?’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா?’ போன்ற என் கேள்விகளுக்கு புத்தியில் பச்சை குத்துவது போன்ற விளக்கங்களுடன் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
6. மதுரை தருமி, மலேசியா டிபிசிடி, வலைச்சரம் சீனா, உண்மைத்திராவிடர் ஜாலிஜம்பருடன் மதுரை சந்திப்பு அமர்க்களமாக நடந்தேறியது. ‘எந்த புதிய பதிவுகள் தங்களைக் கவர்கின்றன?’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை?’, போன்ற சங்கடமான நேரடி வினாக்களுடனும் அமெரிக்காவும் இந்தியாவும், தமிழில் பதிவெழுத வந்த கதை என்று நெருக்கமான சந்திப்புக்கு உரிய சுவாரசியங்களுடன் மகிழ்வாகப் பறந்தது.
7. மிக்சர், காராசேவு, முறுக்குடன் ஆஜர் ஆன டுபுக்கு சந்திப்பில் நீண்ட காலமாக சந்திக்க நினைத்த செந்தில், அவ்யுக்தாவுடன், ‘எத்தனை சுண்டல் வாங்குவது?’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது?’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா?’ என்பன மிக தீவிரமாக கொசுக்கடிகளுடன் காந்தி சிலைக்கடியில் எட்டு பேரால் அலசப்பட்டது.
8. வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், அதிஷா, முரளிகண்ணன், மக்கள் சட்டம், ப்ருனோ, கென் என்று பார்க்காத பல முகங்களை பாலபாரதியும் லக்கிலுக்கும் அறிகம் செய்துவைத்தார்கள். ‘டுபுக்கு சந்திப்பு மெகா மொக்கையா, இந்த சந்திப்பு அதனை மிஞ்சுமா?’ என்று விவாதித்தோம். மழைக்குக் கூட காவல் நிலையம் ஒதுங்கியது கிடையாது என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் அனைவரும் ‘உள்ளே’ இருந்தார்கள். ‘மேகம் கொட்டட்டும்; செல்பேசி நனையட்டும்; கூட்டம் உண்டு’ என்று (அசல்) பாபா தம் போட்டு காற்றை அனுப்பி, மேகங்களைக் கலைக்கும் கூட்டம்; இருக்கைகளை கால்சட்டை கொண்டு காயவைக்கும் கூட்டம்; சுகுணா திவாகர்+ஆழியூரான் சிறப்புக் கூட்டம் என்று உள்ளரங்குகளுடன் களைகட்டியது.
9. கிளம்பும் அன்று சென்னைக் கச்சேரி தேவ் & இளா சங்கமித்தனர். பலூன் தவறவிட்ட சிறுமி ஒன்றுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விழுந்ததை, எடுத்துக் கொடுக்க, அவளோ ‘கிம்மி எ ப்ரேக்’ பார்வை ஒன்றை வீசியதை விசாவதாரத்திற்குப் புகைப்படம் எடுத்தது போன்ற பல முக்கியமான தருணங்கள் நிறைந்த சந்திப்பு இது.