Category Archives: ஹில்லரி

அமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்

அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவுள்ள தனது குழுவை அறிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹில்லரி கிளிண்டனை அரசுத்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.

செனட்டர் ஹில்லரி கிளிண்டன் பெரும் ஆளுமை கொண்டவர் என்று ஒபாமா கூறியுள்ளார்.

தற்போது இராணுவ அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அவர்களை தொடர்ந்து பணியில் இருக்குமாறு ஒபாமா வேண்டியுள்ளார்.

நாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி போலவே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் பெருமளவில் இருக்கின்றன என்று ஷிகாகோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்கவுள்ள ஒபாமா அவர்கள், தற்போது அரிசோனா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஜேனட் நேபோலிட்டானோ அவர்களை உள்நாட்டு பாதுகாப்புதுறை செயலராகவும், நேட்டோவின் ஓய்வு பெற்ற தலைமை தளபதியான ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.

அவரது நீண்ட கால ஆலோசகரான சூசன் ரைஸ், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நன்றி: பிபிசி

ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்?

ஆப்பிரிக்க – அமெரிக்க அதிபர் கிடைத்து விட்டார். முதல் பெண் ஜனாதிபதி எவராக இருக்கக் கூடும்?

61 வயதான ஹில்லரி க்ளின்டனுக்கு இனிமேல் அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கஷ்டம்.

இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் எவராவது இருக்கிறாரா? ஏன், இல்லை – என்கிறார் கமலா தேவி ஹாரிஸ்:

kamala-devi-harris-ca-attorney-general-obama-supporter

தொடர்புள்ள பதிவு: Kamala Harris, an early Barack Obama backer, is beginning her ascent | Top of the Ticket | Los Angeles Times

மற்றவர்கள்:

ஹில்லரி/பில் க்ளின்டனின் மகள் செல்ஸீ கிளிண்டன், தற்போதைய அரசின் செயலர் காண்டலீஸா ரைஸ், துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின், ஈபேயின் தலைவர் மெக் விட்மன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

palin-kamala-nyt-women-president-usa-condi-rice

சமீபத்தில் செனேட்டரான கே ஹேகன் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அவரும் பந்தயத்தில் உள்ளதாக எண்ணலாம்.

நன்றி: மே 18 நியு யார்க் டைம்ஸ் கட்டுரை: Step Right Up – Who Will Be Hillary Clinton’s Successor? – NYTimes.com

வாரயிறுதி விஐபி: மணிக்கூண்டு சிவா

1. ஒபாமாவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது கிடைத்த ரசமான அனுபவங்களைப் பகிர முடியுமா? எந்த வீட்டிலாவது விருந்து கிடைத்ததா? ‘நாய்கள் ஜாக்கிரதை’ எச்சரிக்கை இல்லாத இல்லம்; அலாரம் அடித்த வீடு; உங்களைப் பிறிதொருவர் என்று நினைத்து குழம்பியவர்கள் — போன்ற சுவாரசியங்கள் ஏதாவது உண்டா?

எப்படி விருந்து கிடைக்கும்?! அடி கிடைக்காமல் இருந்தால் போதாதா? கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றேன். கிட்டதட்ட 90% சதவீத மக்கள் மெக்கயன் ஆதரவாளர்கள் போல! கதவை சாத்தாத குறை! நொந்து நூலாய் போனதான் மிச்சம்! நல்ல மற்றும் புதிய அனுபவம்!

நிறைய வீடுகளில் நாயும் மற்றும் பூனையும் இருந்தது! என் சட்டையில் ஓபாமா படத்தை பார்த்ததும் மடாரென்று ஓருவர் கதவை சாத்தியது என் மன கண்களை விட்ட அகல மறுக்கிறது!

2. ஒபாமாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்ததா? புகைப்படம் எடுத்துக் கொண்டதுண்டா? அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால், ‘ஒரு கேள்வி கேட்கலாம்’ என்றால் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள என்ன வினா/பிரச்சினை/கேள்வி தங்கள் மனதில் தொக்கி நிற்கிறது?

எனக்கு ஆசைதான்! ஓபாமாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை! எனது நகரத்து அருகே அவருடையப் பிரச்சாரம் இருந்தது! அலுவலக வேலைக் காரணமாக அவருடைய பிரச்சாரத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கவில்லை! அப்படி அவரை பார்க்க கிடைத்தால் அவரிடம் மிகவும் பிரியமாக கேட்க விரும்பும் கேள்வி மூன்று.

கேள்வி ஓன்று : உங்களுக்கு அரசியல் வானில் மிகவும் பிடித்த எழுச்சி பேச்சாளர் யார்? ஏன்?

கேள்வி இரண்டு : நீங்கள் ஏன் ஹில்லாரி கிளிண்டனை துணை அதிபராக தேர்ந்து எடுக்கவில்லை? அப்படி எடுத்து இருந்தால் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தோணவில்லையா?

கேள்வி மூன்று : நீங்கள் அதிபர் ஆனவுடன் (ஆகிவிட்டால்) ஈழ மக்கள் மிகவும் ஏங்கும் நேசிக்கும் “தமிழ் ஈழத்தை” வாங்கி தருவீர்களா?

3. ஒபாமாவின் திட்டங்களினுள் எந்த கொள்கை தங்களை வசீகரிக்கவில்லை? எவ்வாறு அதை மாற்றியமைத்தால் தங்களை மேலும் கவர்ந்திருக்கும்?

அவருடைய எல்லா கருத்தகளிலும் முழு உடன்பாடு உண்டு!

4. சாதாரணமாக மாதத்திற்கொருமுறை சீட்டாட்டம், வருடத்திற்கொருமுறை பேச்சிலர்ஸ் பார்ட்டி என்று ஊர்சுற்ற கிளம்பினாலே வீட்டில் புகம்பம் வெடிக்கும். களப்பணியினால் குடும்பத்தில் குழப்பம் வந்ததா? எவ்வாறு சமாளித்தீர்கள்?

அரசியல் பணி / சமூகப் பணி / தமிழ்ச் சங்க பணி / வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை பணி/ எல்லாம் என் மனதிற்கு மிகவும் பிடித்த விசயம். என் வாழ்க்கை துணை இவை எல்லாவற்றிக்கும் முழு ஆதரவு தருகிறார் என்றும் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது!

5. 2008க்கான ப்ரைமரி தேர்தலில் எவரையாவது ஆதரித்தீர்களா? இதற்கு முந்தைய (2000/2004) அதிபர் தேர்தல்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுண்டா? இந்த ஆண்டு ஓட்டு சேகரிக்க வீடு வீடாக சென்றதில் கைக்காசு செலவு உண்டா? அல்லது பஞ்சப்படியாக ‘ஒபாமா தேர்வுக்குழு’ ஏதாவது தருவதுண்டா?

2008 பிரைமரி தேர்தலில் நான் ஹில்லாரியை ஆதரித்தேன், காரணம் அவர் தந்தைப் பெரியார் சொன்னப் படி பெண்கள் எல்லாப் பொறுப்பிற்கும் வர வேண்டும். மேலும் ஹில்லாரி கடந்த வந்த பாதையில் அவர் அடைந்த துயரங்கள் அதிகம்! அவருடைய கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு!

ஓபாமா தேர்தல் பணிக்கு சென்ற பொழுது பைசா காசு செலவில்லை! மனமும். நேரமும் வேண்டும் அவ்வளவுதான்!

மிக்க நன்றி
மயிலாடுதுறை சிவா

(ஓபாமாவிற்காக ஒருநாள் – பதிவு)

மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

இப்பொழுது எதுவுமில்லை.

2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.

4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

ஹில்லரி கிளிண்டன்.

(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.

மேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.

குடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.

கட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.

ஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.

சாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.

குறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.

ஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

ஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.

அமெரிக்க அதிபர் தேர்தல் சூழலும் வெற்றி பெறும் வித்தைகளும் – மூஸ் ஹன்டர்

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

மெக்கெய்னுடைய ஒரேநிலைப்பாடு எப்பாடுபட்டாவது அதிபர் ஆவது. அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு.

மெக்கெய்னைப் பற்றி அதிகமாக அறியாத காலத்தில், அதாவது 2000 ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, அவர் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு அனுபவமிக்க மிதவாதியைப் புறக்கணித்து கத்துக்குட்டித் தீவிரவாதி புஷ்ஷை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என்று அவர் மீது பரிதாபம் கூட இருந்தது.

மெக்கெய்ன்-ஃபெய்ன்கோல்ட் தேர்தல் நிதி சட்டம், மெக்கெய்ன் – கென்னடி குடியேற்றச் சீர்த்திருத்த மசோதா போன்றவற்றில் அவர் பங்காற்றியபோது அவருடைய ‘மேவரிக்’ பிம்பம் மீது ஒரு கவர்ச்சி இருந்தது.

தேர்தல் மீது ஒரு கண்வைத்து கடந்த சில வருடங்களாக புஷ்ஷின் ஒவ்வொரு சொல்லையும், செயலையும் ஆதரிக்க ஆரம்பித்ததிலிருந்து தற்போது ஒபாமாவின் மீது சேறு வாரி இறைக்கும் தேர்தல் உத்திவரை மெக்கெயினின் நடவடிக்கையைப் பார்த்தால் அவர் மீது இருந்த மரியாதை முற்றிலுமாக மறைந்துவிட்டது.

அவருடைய நிலைப்பாடுகள் எதுவும் இப்போது நிலையானதாக தெரியவில்லை. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் குடியேற்ற சீர்த்திருத்தம்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் டெமாக்ரடிக் செனட்டர் எட்வர்ட் கென்னடியுடன் இணைந்து குடியேற்றச் சீர்த்திருத்தச் மசோதாவை அறிமுகப்படுத்தியவர் முதற்கட்ட வேட்பாளர் தேர்தலின்போது கன்சர்வேடிவ்களின் வாக்குகளை மனதில் வைத்து அதைப் பற்றி பேசவே மறுத்தார்.

பிறகு லத்தினோக்களின் வாக்குகளை மனதில் வைத்து குடியேற்றச் சீர்த்திருத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் மாற்றிக்கொண்டார். எப்படியாவது இந்த தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் பல விஷயங்களில் முன்னுக்குப் பிறகு முரணாக பேசிக்கொண்டிருக்கிறார்.

அவருடைய நிலைப்பாடு மாறாமலிருப்பது ராணுவவிஷயங்களில் மட்டுமே. எனக்கு இவ்விஷயங்களில் ஆர்வமில்லை.

4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

முதல் கேள்வியில் சொன்னமாதிரி ரால்ப் நேடரைச் சுட்டிக்காட்டலாம். பெரிய கட்சிகளில் இருந்து தான் வரவேண்டுமென்றால் ஜனநாயகக் கட்சியில் இருந்து ஹில்லரியும், குடியரசுக் கட்சியில் இருந்து மைக் ஹக்கபியையும் காட்டுவேன்.

முதற்கட்ட வேட்பாளர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஹில்லரியே வெற்றி பெற வேண்டுமென்று விரும்பினேன்.

என்னுடைய எதிர்பார்ப்பு ஹில்லரி அதிபராகவும், அவருடைய துணை அதிபராக நியூ மெக்சிகோ ஆளுநர் பில் ரிச்சர்ட்சனும் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்று இருந்தது. ஹில்லரி வேட்பாளராக தேர்வாகாதது ஏமாற்றமாக கூட இருந்தது.

காரணம் ஹில்லரி, ஒபாமா இருவரது அனுபவம், வயது வித்தியாசம்.

பல பிரச்சினைகளில் இருவரது நிலைப்பாடுகளும் ஒரே மாதிரியிருந்தாலும், இந்த வாய்ப்பை விட்டால் ஹில்லரிக்கு அல்லது அவர் போன்ற முற்போக்கு பெண்ணுக்கு இன்னொரு வாய்ப்பு அடுத்த சில தேர்தல்களில் கிடைப்பது அரிது. அவரது தோல்வியின் எதிரொலி இப்போதே தெரிந்துவிட்டது.

அவருக்கு மாற்றாக ஒரு பிற்போக்குப் பெண்மணி முன்னிருத்தப்படுகிறார். இது என்னைப் பொருத்தமட்டில் ஒரு பெண் அதிபராவதற்கு பின்னடைவைத் தான் ஏற்படுத்தும்.

ஒபாமா இளம்வயதுக்காரர். இன்னும் சில ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று ஹில்லரிக்குப் பிறகு 2016 இல் இப்போதிருப்பதை விட இன்னும் தீவிரமாக, அனுபவ முதிர்ச்சியோடு களமிறங்கினால் நிச்சயமாக வெற்றி பெறுவார். இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது முழுக்க அவரது வெற்றி என்று சொல்ல முடியாது.

ஜார்ஜ் புஷ்ஷின் எட்டாண்டு ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளும் ஒபாமாவுக்கு பெருமளவு உதவியாக இருக்கப்போகிறது.

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

இந்த வார விருந்தினர்: மூஸ் ஹன்ட்டர்

ஆதியில் டைனோபாய் வந்தார். இப்போது மூஸ்ஹன்ட்டர்.

அவரிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்குமுன் அவரைக் குறித்து பின்னணி கேட்டேன். அவர் சொன்னதில் இருந்து.

  • ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹில்லரி க்ளின்டன் வரவேண்டுமென்று விரும்பினேன். 2016 வரை ஒபாமா காத்திருந்திருக்கலாம்!
  • என்னுடைய பீச்சாங்கை பக்கம் ஆப்பிரிக்க-அமெரிக்க குடும்பம் வசிக்கிறார்கள். சோத்தாங்கை பக்கம் இந்தியர்கள். எதிர்த்தாப்பல வெள்ளக்காரங்க. அந்தப்பக்கம் இரானில் இருந்து வந்திருக்கிறவங்க. ஒரே வெரைட்டிதான்!
  • ஜான் மெகயின கீட்டிங் விவாகாரத்துல விசாரிக்கறப்ப இந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

இனி அவர்:

1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?

இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களான இவ்விருவரோடு சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர் என்று மொத்தம் ஐந்து பேர் களத்தில் உள்ளனர்.

ஆகியோரும் களத்தில் உள்ளனர். வெகுஜன ஊடகங்களில் அதிகம் பேசுப்படுவதில்லையாகையால் இவர்களைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. ஆனாலும் இவர்களின் கட்சி சார்ந்து அவர்களுடைய கொள்கைகளை, திட்டங்களை ஓரளவு கணிக்கலாம்.

ரால்ப் நேடரைப் பற்றி ஓரளவு தெரியும். பலமுறை அவருடைய செவ்விகளை பசிபிகா, என். பி. ஆர். வானொலிகளில் கேட்டிருக்கிறேன். பத்திரிகைகளிலும் அவரைப் பற்றிப் படித்திருக்கிறேன்.

பாப் பார் இன் செவ்வியினை என். பி. ஆர். இல் கேட்டிருக்கிறேன். குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினராக இருந்தவர். இப்போது லிபர்டேரியன் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். லிபர்டேரியன் கட்சியின் கொள்கைகள் எனக்கு ஒத்து வராது.

பசுமைக் கட்சியின் இணைய தளத்தை மேலோட்டமாக மேய்ந்ததோடு சரி. ஆகையால் சிந்தியா மெக்கின்னியைப் பற்றி அதிகம் தெரியாது. சமீபத்தில் மூன்றாம் கட்சியினர் தேசிய பத்திரிக்கையாளர் கிளப்புடன் இணைந்து நடத்திய கூட்டத்தை C-SPAN இல் ஒளிபரப்பினார்கள். அதிலும் நேடரும், ரான் பாலும் பேசியதை மட்டும் தான் பார்க்க முடிந்தது. மெக்கின்னி பேசியதை பார்க்கவில்லை.

ஆக களத்தில் இருக்கும் வேட்பாளர்களின்-அவர்களுடைய கட்சிகளின் நிலைப்பாடுகள், அவர்கள் ஆற்றிய பணிகள், அவர்களுடைய நேர்மை ஆகியவற்றை வைத்து முடிவு செய்ய வேண்டுமென்றால் என்னுடைய முதல் தேர்வு ரால்ப் நேடர் தான்.

அடுத்த தேர்வு ஒபாமா.

நான் இருக்கும் மாநிலத்தில் நேடருடைய பெயரைச் சேர்க்க வேண்டுமென்று மனு கொடுக்கப்பட்டதாக செய்தித் தாளில் படித்தேன். சாலையோரத்தில் ஓரிரு நேடர்/கன்சாலஸ் விளம்பரப் பலகைகளும் தென்படுகின்றன. அனேகமாக அவருடைய பெயர் வாக்குச்சீட்டில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அவர் பெயர் இருக்கும் பட்சத்தில் அவருக்கு ஓட்டு போடலாம் அல்லது ஒபாமாவுக்குப் போடலாம்.

நேடருக்கு விழும் வாக்குகள் அனேகமாக அதிருப்தி ஜனநாயக் கட்சியினரின் வாக்குகளாகத் தான் இருக்கும் (நான் எந்த கட்சியிலும் உறுப்பினர் ஆகவில்லை. இந்த நாட்டுக்கு வந்து 17 வருடங்களுக்குப் பின் சமீபத்தில் தான் குடியுரிமை பெற்றேன். முதல் முறையாக இப்போது தான் வாக்களிக்கப்போகிறேன்).

2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் நேடர் போட்டியிட்டிருக்காவிட்டால் (குறிப்பாக ஃப்ளோரிடாவில்) கோர் தோற்றிருக்க மாட்டார் என்று ஜனநாயகக் கட்சியினர் கடும்கோபம் அடைந்தனர். ஆனால் நேடருடைய வாதம் நியாயமாகத் தான் இருக்கிறது:

“நான் பேசிய பிரச்சினைகளை கோர் பேசியிருந்தால் எனக்கு கிடைத்த வாக்குகள் அவருக்கு கிடைத்திருக்கும். ஆகையால் என் தப்பு இல்லை. அது கோர் இன் தவறு தான்” என்கிறார். இம்முறையும் தன்னுடைய இணையதளத்தில் சில பிரச்சினைகளைப் பட்டியலிட்டிருக்கிறார், அவற்றைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசி தனக்குக் கிடைக்கப் போகும் வாக்குகளை தம் பக்கம் திருப்பிக்கொள்ளலாம் என்கிறார்.

“நேடர் எப்படியும் வெற்றிபெறப் போவதில்லை. ஒரு வாக்கை ஏன் வீணாக்க வேண்டும்” என்று கேள்வி எழலாம்.

பிரச்சினை என்னவென்றால் நான் வசிக்கும் தென் மாநிலம் சிகப்பு நிரையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மெக்கெய்ன் – ஒபாமா வாக்கு வீதம் 55-35 என்ற அளவில் உள்ளது. ஆகையால் ஒபாமாவும் இங்கு வெற்றிபெறப் போவதில்லை.

அவருக்கு போட்டாலும் என் வாக்கு வீண் தான் (வாக்கு வீணாகக் கூடாது என்பதற்காக மெக்கெய்னுக்கு போட முடியுமா?).

“ஒபாமா இங்கு வெற்றி பெறுவதற்கான சாத்தியம் எவ்வளவெனில், இங்கு வெற்றிபெறுமுன் அவர் வேறு 45 மாநிலங்களில் வெற்றி பெறவேண்டும். அப்படியொரு அலை இப்போது வீசவில்லை” என்கிறார் ஓர் உள்ளூர் அரசியல் பேராசிரியர் (1984 தேர்தலில் ரீகன் 49 மாநிலங்களில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் தோற்ற/தோற்கப்போகும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் பெண் என்பது மட்டும் தான். ஆனால் ஒபாமாவின் கவர்ச்சி ரீகனின் கவச்சிக்கு இணையானதாக இல்லை என்பதால் 45 ஐ எட்ட முடியாது).

என் அண்டை வீட்டுக்காரர்களில் ஒரு பக்கம் கறுப்பர், அடுத்த பக்கம் இந்தியர். எதிர் வீடுகளில் ஒருவர் வெள்ளையர் இன்னொருவர் ஈரானியர். எல்லோருமே ஒபாமாவுக்குத் தான் வாக்களிக்கப்போவதாக கூறுகிறார்கள். வெள்ளையர் தன் வீட்டின் முன் ஒபாமா/பைடன் விளம்பரத் தட்டி கூட வைத்திருக்கிறார். நானும் ஒபாமா என்றுதான் சொல்லிவைத்திருக்கிறேன் (ஆனால் நான் வசிக்கும் நகரம் கடைந்தெடுத்த கன்சர்வேடிவ் நகரம்).

ஆனால் உண்மையில் ரால்ப் நேடரா அல்லது ஒபாமாவா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த நாட்டில் இரு கட்சி ஆதிக்கத்தை மாற்ற ஏதோ நம்மாலான முயற்சி.

இருந்தாலும் இந்த தேர்தல் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஒன்று, முதல் முறையாக கறுப்பர் அதிபராவார் அல்லது ஒரு பெண் துணை அதிபராவார் என்று சொல்லப்படுகிறது.

பசுமைக் கட்சியின் வேட்பாளர் சிந்தியா மெக்கின்னி/ரோசா க்ளமெண்டி வெற்றி பெற்றால் இரண்டு சிறப்புகளும் ஒரேசேர கைகூடும். 🙂

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

மைத்ரேயன்: பரக் ஒபாமாவா? ஜான் மெகயினா?

மைத்ரேயனின் கருத்துகள்…

பராக்கின் ரசிகன் அல்ல நான்.

ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.

ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 ஆண்டு அரசியல் முதலீட்டில் அவர்கள் சேமித்து வைத்த பெரும் நிதிக் குவியல் அது கொணரும் ஏராளமான ஊடக பலம் எல்லாவற்றையும் தன் பேச்சு வன்மையாலும், மக்களை அது சென்று சேரும் தன்மையைப் புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்ததாலும் வென்று வந்தவர்.

மகெய்னுக்கு இதே செயலைச் செய்ய கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆயிருக்கின்றன.

பராக் கிட்டத்தட்ட தாம் எந்தக் கொள்கைகளை முதலில் முன்வைத்தாரோ அவற்றில் இருந்து பெரிதும் பின் வாங்காமல் இந்த உள்கட்சித் தேர்தலை வென்றிருக்கிறார்.

மகெய்ன் கடந்த 30 வருடங்களில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் நிறைய நிறைய. பெரும் பண முதலைகளின் பின்னணியும், கிருஸ்தவ சர்ச்சுகளின் பலமும், அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வையும் அவருக்கு ஒரு வலு உள்ளதான பிம்பத்தைக் கொணர்கின்றன.

உண்மையில் மகெய்னுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஏதும் உருப்படியாகத் தெரிந்திருக்காது என்பது என் கணிப்பு. பராக்கிடம் நிறைய சிறந்த நடுவயது executive talent அதுவும் குறிப்பாக financial sector இல் இருந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.

ஒரு ஜனாதிபதி அமெரிக்காவில் அவரே எல்லாவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்பதை புஷ் 8 ஆண்டுகளில் திறம்பட நிரூபித்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல பிலியன் டாலர்கள் வாண வேடிக்கை விட்டுக் கொண்டு 8 வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கிறது.

இது ஒன்றே போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கதிகலங்க அடிக்க.

பல ட்ரிலியன் டாலர் போர ஒன்றை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அதன் பொருளாதாரம் க்ஷீணித்துப் போவதில் அதிசயம் இல்லை.

போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடம் இருந்து பெறும் லாபம் எல்லாம் அமெரிக்காவில் தானே முதலீடு செய்யப்படும் என்று யாராவது கோணலாக ஒரு வாதம் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இன்னும் 8 ஆண்டுகள் ரிபப்ளிகன் கட்சி பதவியில் இருந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் காலாவதி ஆகி விடும். அதற்காக டெமக்ராடிக் கட்சி ஏதோ உன்னத புருடர்களால் ஆனது என்று நான் வாதிடவில்லை.

இருக்கும் பிசாசுகளில் எது நல்ல குழந்தை என்று கேட்டதற்கு, அப்பன் சொன்னானாம், அதோ கூரை மேல் ஏறி நின்று தீப்பந்ததால் வீட்டுக்கு நெருப்பு வைக்க முயல்கிறதே அவன் தான் இருப்பதற்குள் நல்லவன் என்று.

அந்த நிலைதான் அமெரிக்கப் பிரஜைகளுக்கு. ஆனால் வினையை எத்தனை நாடுகளில் விதைத்தார்கள். அதெல்லாம் திரும்பி வருகிறது.

என்ன பிரச்சினை என்றால் தனி மனித அமெரிக்கர்கள் நிறைய நன்மை செய்ய முயன்றிருக்கிறார்கள் அதெல்லாம் எப்படித் திரும்பி வந்து உதவும் என்று எனக்குப் புரியவில்லை.

ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்று நீங்களே சொல்லி மெக்கென் இடம் இருக்கும் மைனஸ்களை நீங்களே இல்லாமல் செய்துவிட்டீர்கள்.

புஷ் பொருளாதாரத்தில் ஈராக் யுத்தத்தினால் அமெரிக்காவுக்கு பொருளாதார லாபம் ஏதுமில்லாதது போல் நீங்கள் போட்ட கணக்கு ஒப்புக்கொள்ள முடியாதது. புஷ் ஏதோ வெறி பிடித்து சண்டை ஆரம்பித்து நடத்தியது போன்ற பிம்பம் சரியானதில்லை. யுத்தம் ஒன்றும் நஷ்டகணக்கு அல்ல.

உங்கள் இரண்டு வாதங்களையும் நான் முன்னமே எதிர்பார்த்து அந்த இரு வரிகளையும் எழுதினேன்.

அமெரிக்க அதிபர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டாம் என்பது ரானால்ட் ரேகன் காலத்தில் உறுதிப்பட்டுப் போயிற்று.

எல்லாம் தெரிந்த கிளிண்டனால் வலது சாரி செனட், காங்கிரஸ் ஆதிக்கத்தில் ஏதும் உருப்படியாக மக்களுக்குச் செய்ய முடியாமல் பொருளாதாரத்தை ஓரளவு பெரும் பண முதலைகளின் கைப்பிடியில் இருந்து மீட்டு மத்திய தர மக்களுக்கு ஓரளவு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து விட்டுப் போனதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இவற்றை நான் அவ்வளவு நம்புவதில்லை.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகையும், ஆடிகளும் அதிகம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பால்பட்ட சானல் தீவுகள் போன்ற இடங்களில் அமெரிக்கப் பண முதலைகள் சேர்த்து வைத்திருக்கும் நிதியின் அளவு ஒரு வேளை அமெரிக்காவின் வருட மொத்த வருமானம் அளவு கூட இருக்கும் என்று ஊகம் .

இதைப் பற்றி மதர் ஜோன்ஸ் என்ற ஒரு சிறப்பான அரை இடது, தொழிலாளர் சார்பு ஆனால் நல்ல ஆய்வு சார்ந்த பத்திரிகை மரபைக் கடைப்பிடிக்கும் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு வருடம் முன்பு பிரசுரித்தது என்று நினைவு. அதை அந்தப் பத்திரிகையின் வலைப் பக்கத்தில் போய் ஆவணங்களில் தேடினால் கிடைக்க வாய்ப்பு அதிகம். நான் இந்தப் பத்திரிகையின் நாணயத்தையும், நா நயத்தையும் நம்புபவன்.

இப்படித் தனிநபர் ஜனாதிபதி ஒன்றும் பொருளாதாரத்தில் பிரமாதமாகக் கிழித்து விட முடியாது என்ற கருத்தை கருத்தியலில் (ideology) அமைப்பியல் பார்வை என்று சொல்வார்கள். நான் அமைப்பியலுக்கும், தனிநபர் வாதத்துக்கும் இடையில் இருப்பவன்.

தனிநபர் ஏதோ உலகத்தையே புரட்டி விட முடியும் என்ற கருத்து ஓரளவு இளம்பிள்ளைக் கருத்து. அந்த வயதில் தாம் அசாதாரண சக்தி உள்ளவர்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடில் என்ன பிரயோசனம்? இளைஞர் வளர அந்த நம்பிக்கை அவசியம்.

நடுவயது வரும்போது அமைப்புகளின் இயல்பு புரிந்து தனிநபர் சாகச விழைவுக்கும், அமைப்பின் எளிதில் நகராத் தன்மைக்கும் இடையில் எப்படி ஊடாடி காரியங்களைச் சாதிப்பது என்பது ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

இதில் ஓரளவு ஹிலரி வெற்றி பெற்றிருந்தார் சமீபத்து ஏழு எட்டு ஆண்டுகளில். அவரது இந்த அனுபவ முதிர்ச்சி இப்போது வீணாகப் போகிறது என்பதில் எனக்கு வருத்தமே.

ஆனால் மகெய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. அவர் தன் வியத்நாம் போர்க்கைதி பிம்பத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாள் காலம் ஓட்டி இருக்கிறார். ரிபப்ளிகன் நிர்வாகங்கள் அவருடைய காலத்தில் கிட்டத்தட்ட 2/3 பகுதி இருந்ததால் அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி இருக்கவும்
வாய்ப்புண்டு.

ஆனால் நிர்வாகத் திறமை என்று பார்த்தால் ஓபாமாவுக்கும் இவருக்கும் எந்த பெருத்த வேறுபாடும் இல்லை. இருவரும் அமெரிக்க அரசியலில் மிகவும் பெருமையாகக் கருதப்படும் executive experience அதாவது மேலாட்சியாளராக இருந்து நிர்வாகம் செய்து வெற்றி பெறுவது என்ற அம்சத்தில் முழு சூனியம். இருவருக்கும் அது கிடையாது.

[ இந்த அனுபவம் என்பதே ஒரு விதமான மாயை என்பதை நாம் இப்போது கருத வேண்டாம். அதற்குள் நுழைந்தால் நான் மிகவும் cynical ஆக இதை அணுகுகிறேன் என்று எல்லாரும் திட்டுவார்கள் என்று ஊகம் உண்டு.]

ஒபாமாவுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம், ஏனெனில் புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை. டெக்சாசில் தான் ஏதோ பெருத்த முன்னேற்றங்கள் கொண்டு வந்ததாக அவர் தம்பட்டமடித்தது எல்லாம் ஊடகங்களின் ஒத்துழைப்போடு அவர் நடத்திய மாயை என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து பின்னால் நிரூபித்த கட்டுரைகள் பல பார்த்திருக்கிறேன்.

அவருக்குப் பின்னே ஊடகங்களும், கிருஸ்தவப் பேரியக்கங்களும், க்ளிண்டனின் உருப்படா பாலுறவுக் கேளிக்கைகளால் அன்னியப்பட்ட ஒரு பெரும் நடு அமெரிக்க மக்கள் திரளும் இருந்தன. அப்போதும் கூட தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

இப்படிக் கத்தி முனையில் இருந்த ஒரு நாட்டை அனேகமாக ரிபப்ளிகன் கட்சியின் மீது வெறுப்பே வருமளவுக்குத் தள்ளி இருக்கும் பெருமை புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம்.

ஊழல் மக்களுக்கு உதவாது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு infrastructural investment இல் ஏராளமாகப் பின் தங்கி இருக்கிறது என்பது எத்தனை ஆயிரம் பாலங்கள் இடியும் அபாயத்தில் இருக்கின்றன, அவற்றைப் பற்றிப் புஷ் அரசு கவலையே படவில்லை என்று மத்திய அரசின் ஹைவேஸ் டிபார்ட்மெண்டின் உள்ளாய்வு அறிக்கையே சமீபத்தில் குறை சொன்னதாக ஒரு அறிக்கை படித்தேன்.

மேலும் புஷ் அண்ட் கோ கொள்ளை அடித்தது மக்களுக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களானால் அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

  • சாதாரண தொழிலுற்பத்தியால் ஏராளமான தொழிலாளருக்கு வேலை கிட்டும்,
  • உள்நாட்டில் நுகர்பொருட்கள் நிறைய மக்களுக்குக் கிட்டும்,
  • சுழற்சியில் பணமும், லாபமும், முதலீடும் நாட்டுக்குள்ளேயே தங்கும்.
  • மக்களிடம் வேலைத் திறன்,
  • தொழில் நுட்ப அறிவு,
  • ஊக்கம், வாழ்வில் பிடிப்பு,
  • பண்பாட்டில் நம்பிக்கை, மேலெழுந்து வர உழைக்கும் ஆர்வம், தவிர
  • நல்ல வாழ்க்கை வாழ்வதில் கிட்டும் ஒருவித விகாசம் எல்லாம் இருக்கும்.

ராணுவத் தளவாடத் துறையின் பொருட்கள் மக்களால் நுகரப்பட முடியாதவை. அவை சுழற்சி இல்லாதவை. வெறுமே பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு துருவேறிக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டுப் பயிற்சியும் பெறும் மனிதர்கள் சாதாரண வாழ்வுக்கு அந்தத் திறமைகளை மாற்றித் தர சில பத்தாண்டுகள் பிடிக்கும். ராணுவ வீரர்கள் பெருமளவு பாசறைகளில் வாழ்வதால் இந்தத் திறன் எளிதில் மக்களிடம் கை மாற்றித் தரப்படுவதில்லை.

தவிர ராணுவத் தளவாடங்கள் சாதாரண நுகர் பொருட்களைப்போல மலிவு விலைக்குக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப் படுவதில்லை. அவை நுகர்வாரிடம் விற்கப் படுவது உயர் விலைகளுக்கு, அந்த உயர் விலையை அரசிடம் பெறுவதற்காக நிறைய லஞ்சமும் ஊழல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது அரசை மேலும் மேலும் உளுத்துப் போகச் செய்கிறது, மக்களின் வரிப்பணம் நல்ல ஆக்க பூர்வமான வேலைகளுக்குப் பயன்படாமல் கோடவுனில் தூங்கப்போகும் பொருட்களுக்குச் செலவிடப்பட்டு மக்களின் தேவைகள் பின்னே ஒத்திப் போடப்ப்டுகின்றன.

இதுவும் சுழற்சியில் மக்களின் முதலீட்டு வளர்ச்சியை முடக்குவதே.

இதைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தீர்களானால் ஏன் ராணுவச் செலவு அதிகமாக உள்ள நாடுகள் உருப்படாமல் போகின்றன என்பது புரிய வரும்.

ஆக ஒபாமா இளைஞர் ஆனாலும் அறிவு தீர்க்கம் உள்ளவர் என்பதை மனதில் வைத்து, எப்படி ஹிலரியைப் போன்ற் ஒரு வலுவான் எதிராளியை அவர் தோற்கடித்தார் என்பதையும் கருதுங்கள்.

அந்தத் தேர்தல் ஏதோ வெறும் பிரச்சாரத்தால் வெல்லப் படக் கூடியதல்ல. சில ஆயிரம் குழுக்களை நாடு முழுதும் அமைத்து அவற்றை நடத்தி கோணல் ஏதும் இல்லாமல் சமாளித்து இரண்டு வருடம் போல இந்தப் போட்டி நடக்கிறது. கடுமையான உழைப்பு தேவை இதற்கு. அதுவும் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து வர இந்த உழைப்பு ஏராளமாகத் தேவை.

ஹிலரிக்கு எல்லாம் அனேகமாக ஏற்கனவே வேண்டுகிற இடத்தில் இருந்தன.

மகெய்னுக்கும் பல வருடங்களாக அதிபர் தேர்தலில் போட்டி இட்டுத் தோற்றுத் தோற்று கற்ற பாடங்கள் நிறைய, அமைப்பும் இடத்தில் இருந்தது. எதிர்க்க வலுவான ஆட்கள் யாரும் இல்லாததாலும் அவர் ஓரளவு சுலபமாகவே இந்தப் போட்டியில் வென்றிருக்கிறார். அவரும் பல பத்து வருட நிதி சேமிப்பில் மேலே மிதந்து வந்து வென்றிருக்கிறார்.

மகெய்னுடைய தத்துவமோ, பொருளாதாரக் கொள்கைகளோ புஷ்ஷின் கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றில் இருந்து அதிகம் மாறக் கூடியவை அல்ல, ஏனெனில் அவருக்குப் பின் நிற்கும் பண பலம் அப்படி ஒரு பெரும் விலகலை அனுமதிக்காது.

ஒபாமாவுக்கு இந்த வகை கட்டுப்பாடுகள் குறைவு. அதுவும் 8 வருடமாக அதிகாரத்தில் இல்லாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளி வருவதால் பணமுதலைகளின் influence அவர் மேல் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. குறைவு என்றுதான் சொல்கிறேன்.

மேலும் அவருடைய rhetoric, policy declaration எல்லாம்

  • நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் பொருளாதாரம்,
  • தொழில் உற்பத்தியை நாட்டில் வளர்க்க முயற்சி செய்தல்,
  • ராணுவச் செலவை மட்டுமல்ல, அன்னிய மண்ணில் போய் அட்டகாசம் செய்யும் கருத்தையே ஓரம் கட்டுதல்

என்று பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன.

இவை ஏதும் பொருளாதாரத்தில் தற்குறியாக இருந்தால் புரியாமல் செய்யவோ அல்லது பேசவோ முடிந்திருக்காது.

என் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பத்துபக்கம் எழுத விருப்பம் இல்லாமல் கோடி மட்டும் காட்டி விட்டேன். அதை நீங்கள் உள் நுழைந்து உள் தர்க்கம் எப்படி ஓடும் என்று பார்த்துப் புரிந்து கொண்டால் நல்லது.

Democratic National Convention – 3rd & 4th Days

  • முதல் இரண்டு நாள் பார்க்கவில்லை.
    • துவக்க நாளன்று மிஷேல் ஒபாமா. அவர் அருமையாகப் பேசுவார்.
    • அடுத்த நாள் ஹில்லரி. கொள்கை நன்றாக இருந்தாலும் பேச்சிலும் சமர்த்தர் அல்ல.
    • ஹில்லரி சொற்பொழிவாற்றிய அடுத்த நாள், தினசரியைப் பார்த்தவுடன் ‘Erect Obama’ என்று பேசியதாக பார்த்தவுடன், விழித்துக் கொண்டேன்.
  • தங்கத் தலைவர் பில் க்ளின்டனுக்காக மூன்றாவது நாள் விழித்திருந்தேன். ஏமாற்றவில்லை. டெலி-ப்ராம்டர் முன்னாடி இருப்பதை துளிக்கூட உணர்த்தாத நேரடியான, பார்வையாளரைத் தொடும் பேச்சு. இவர் மீண்டும் தேர்தலில் நின்றால், கள்ள வாக்கு போட்டாவது ஜெயிக்க வைக்க வேண்டும்.
    • ஜனநாயகக் கட்சியின் ப்ரைமரியில் தன் மனைவி ஹில்லரிக்கும் ஒபாமாவும் நிகழ்ந்த சூடான வாக்குவாதத்தில், உலக வெம்மை அதிகரித்திருப்பதாக நகைச்சுவையுடன் துவங்கினார்.
    • ‘அதிகாரத்திற்கு உதாரணமாக அல்லாமல், அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தணும் என்பதற்கு உதாரணமாக அமெரிக்கா இருக்கணும்’.
  • துணை ஜனாதிபதிக்கு ஒபாமா கட்சி சார்பில் நிற்கும் ஜோ பைடன் பில் க்ளின்டன் அளவிற்கு பட்டை கிளப்பாவிட்டாலும் கச்சிதமாகப் பேசினார்.
  • ஜோ பைடன் பேசுவதற்கு முன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காட்டினார்கள்.
    • அனுதாப ஓட்டு வாங்குவது போல், பைடனுடைய (முதல்) மனைவியும் மகளும் கார் விபத்தில் இறந்ததை மிக உருக்கமாக சித்தரித்தார்கள். பைடனை அறிமுகம் செய்த அவருடைய மகனும், அதை தன் உரையில் அழுத்தந்திருத்தமாக எடுத்துவைத்தார்.
    • ‘போடுங்கம்மா ஓட்டு’/கரீபி ஹடாவோ’ போல் அமெரிக்காவிலும் நிறைய பிரச்சார வாசகம் கேட்க முடிகிறது. பைடன் சொன்னது: ‘இதற்குப் பெயர் மாற்றம் அல்ல. பழைய மொந்தையில் பழைய கள்’ (That’s not change; that’s more of the same).
    • ‘இன்னும் நான்காண்டுகள் ஜார்ஜ்…. மன்னிக்க! வாய் தவறிவிட்டது 😉 ஜான் மெகெயினின் ஆட்சி வேண்டுமா?’
  • கட்சி கூட்டங்களில் தமிழ்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை
    • அங்கே அழகிரி பேரன் மாநாட்டு மேடையில் கையசைக்கிறார். இங்கே ஜோ பைடனின் பேரன், பேத்திகள், மாமா, ஒன்று விட்ட அத்தை மகனின் சித்தப்பா மகள்.
    • வாரிசு அரசியல். ஜோ பைடனின் மகன் அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றுகிறார்.
    • விஜய்காந்த்தின் மனைவி பிரேமலதா முக்கியத்துவம் அடைவது போல் மிஷேல் ஒபாமாவின் ஒவ்வொரு அசைவுகளும் கவனிக்கப்படுகின்றன.
  • கடைசி நாள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஆல் கோர் வந்தார். சுற்றுச்சூழல் மாசு குறித்தும் தொட்டுச் சென்றார். எட்டாண்டுகள் முன்பு பெரும்பான்மை பெற்று, முழுமையான வெற்றியடைந்திருந்தும், உச்சநீதிமன்றத்தால் தோற்கடிக்கப்பட்டதையெல்லாம் கழிவிறக்கமாக புலம்பாத பேச்சு.
  • இறுதியாக பராக் ஒபாமா.
    • ஹில்லாரி கிளின்டனுக்கு பெரிய நன்றியுடன் துவங்கினார். ஏனோ, ஹில்லரி, பில், அவர்களின் மகள் செல்ஸி கிளின்டனை அரங்கத்தில் (தொலைக்காட்சியில்) காணோம்!
    • ‘தற்போதைய ஜனாதிபதியோடு முழுமையாக ஒத்துப் போய், 90 சதவிகிதம் அவர் போட்ட சட்டங்களுக்கு ஜான் மெக்கெயின் வாக்களித்திருக்கிறார். ஜார்ஜ் புஷ்ஷை 90% வால்பிடித்துவிட்டு, ‘நானும் மாற்றப் போகிறேன்’ என்று ஜான் மெகெயின் சொல்வது பிசாத்து பத்து சதவீத மாற்றம்’.
    • ‘நானும் வரிவிலக்களிப்பதற்கு ஆதரவாளன். மில்லியன் டாலர் ஈட்டாதவர்களுக்கு வருமான வரிக்குறைப்பு செய்யப்போகிறேன். குடியரசு வேட்பாளர் ஜான் மெகயினோ இந்த பெரும்பணக்காரர்களுக்கு மேலும் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடுகிறார்’.
    • ‘எனக்கு வசதி வாய்ப்புகள் கிடையாது. நான் இவ்வளவு தூரம் வரக்கூடியவன் (வெள்ளை இனத்தை சேர்ந்தவன் & செல்வந்தன்) இல்லை.’ – எளிமையான நெஞ்சிலறையும் சுயமதிப்பீடு.
    • ‘தேசப்பற்றில் போய் ‘எனக்கு ஜாஸ்தி; உனக்கு கம்மி!‘ என்று கட்சிவாரியாக பிரிச்சுப் பேசலாமா? என்னுடைய நாட்டுப்பற்றை எவரும் கேள்விகேட்க முடியாது!’
    • “‘அமெரிக்கர்கள் எப்போ பார்த்தாலும் புலம்பித் தள்ளுறாங்க என்கிறார் மெகயின். கரடுமுரடான பாதையில் காலணி கூட இல்லாமல் நடக்க சொல்லிட்டு, ‘சிணுங்கறாங்க பார்‘ என்பது போல் இது இருக்கிறது”.
    • காதல் முறியும்போது சொல்லப்படும் புகழ்பெற்ற வாசகம்: ‘பிரச்சினைக்கு நீ காரணமல்ல; நான்தான் காரணம்!’. அதை உல்டா செய்து, ‘இந்த வெற்றி என்னுடையது இல்லை; உன்னுடையது’ என்றார்.
    • 45 நிமிடங்கள் மூச்சு விடாமல், தண்ணீர் அருந்தாமல், திறந்த வெளி அரங்கின் உபாதைகளூடன் மிகச் சிறப்பாக பேசினார். பேச்சில் கருத்து அதிகம் இருந்ததால், என் கண்கள் சொருகியது உண்மை. அதற்கு பதில் உவமேயங்களும் கவர்ச்சி சொற்றொடர்களும் கிண்டல் முத்தாய்ப்புகளும் உள்குத்து வெற்றுவார்த்தைகளும் நிறைந்திருந்தால் இன்னும் ஜனரஞ்சகமாக இருந்திருக்கும்.
  • இறுதியாக சில அவதானிப்பு
    • மிஷேல் ஒபாமா உணர்ச்சிப் பிழம்பாகவே காணப்பட்டார். ஹில்லரியின் மேல் இருந்த கோபம், ஒபாமா சுதந்திரக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரான பூரிப்பு, ஆப்பிரிக்க – அமெரிக்கர் முதல்முறையாக தடைகளைக் கடந்தது என்று நவரசங்களும் காட்டினார். ஹில்லரி போல் அரசியல் சமரச புறப்பூச்சிட மிஷேலுக்கு தெரியாதது வெளிப்படையாகவே தெரிந்தது.
    • ஜோ பைடனைப் பார்த்தால் இன்னொரு ஜான் எட்வர்ட்ஸ் போலவே தென்படுகிறார். தனக்கு சேதமில்லாமல் எதிராளியைத் தாக்குவது; அடுத்த வேட்பாளர் ஹில்லரியுடன் இதமாக நடந்து கொள்வது; 2012– இல் வாய்ப்பு கிடைக்க இப்பொழுதே போதுமான அஸ்திவாரம் ஏற்படுத்திக் கொள்வது; இவை எதுவும் வாய்க்காவிட்டால் மீண்டும் செனேட்டில் குடியரசுக்காரர்களுடன் ‘கட்சி பேதமில்லா’ குடித்தனம்செய்வது; என்று வழவழா கொழகொழாவாகத்தான் ஜான் மெக்கெயினை பட்டும் படாமலும் விமர்சிக்கிறார்.
    • ‘துணை ஜனாதிபதி வேட்பாளர் தாக்காவிட்டால் என்ன? நானே கோதாவில் குதிக்கிறேன்’ என்று பராக் ஒபாமா ஒண்டிக்கு ஒண்டி சவால் விடாத குறையாக தனியாவர்த்தனத்தில் இறங்கியிருக்கிறார்.
    • உங்களில் ஒருவன் நான்’ என்று சொல்லி ஜார்ஜ் புஷ் வாக்கு கேட்டு, படித்த பெருங்குடிமகனாராக ஆல் கோரை கட்டம் கட்டி தோற்கடித்தார். அதையே இன்று திருப்பிப் போட்டு ‘எண்ணிக்கையிலடங்கா வீடு! அந்த மாதிரி பெரும்பணக்காரர்களுக்கான மெகயின் அரசு!! அது தொடர வேண்டுமா? அல்லது பாட்டாளி பராக் வேண்டுமா?’ என்று சித்தரிக்கும் திருவிழா முடிந்திருக்கிறது.
  • ஒபாமாப் பேச்சு என்ன சொல்லியது?
    • ‘மாற்றம் என்றால் என்ன? எது மாறும்? எவ்வாறு மாறும்? எப்படி மாற்றப்படும்? எங்கே மாறும்?’ – பொருளாதாரம், சமூகம், இராக், தற்பாலினத்தவர், துப்பாக்கி வேண்டுவோர், இன்ன பிற
    • ‘நீங்க கென்யாவா? உங்களுக்கு அமெரிக்க மதிப்பீடுகள் இருக்கிறதா? ஒசாமாவுக்கும் ஒபாமாவுக்கும் ஓரெழுத்துதானே வித்தியாசம்?’ – தெளிவான, பளிச் பதில்
    • ‘மெகெயினை விட நீங்க எப்படி உசத்தி? அவருடைய கட்சியிம் அவரும் வித்தியாசமவர்னு சொல்றாங்களே? ஏன் உங்களுக்கு வாக்களிக்கணும்?’
  • ட்விட்டரில் பண்டிட்கள் என்ன சொல்கிறார்கள்?
    • 1. Bill Clinton, 2. Hillary, 3. Joe Biden, 4. Michelle Obama and 5. Barack Obama were the best speakers of the DNC in the order mentioned – pksivakumar
    • திருப்பதி உண்டியல் கலெக்ஷனை denverக்கு உடனே அனுப்பவும்.சில்லறை தட்டுப்பாடு இங்க ஏகப்பட்ட பேர் Change Change அட்டை வைச்சுகினு நினுக்குனு … – msathia
    • #dnc08 <Bill> Relates himself with Obama. Republicans plan to win didn’t work against him in 1992 nd it will not work against Obama! – dynobuoy
    • One thing missing from O’s speech so far – a touch of levity, a bit of humor. Unfortunately, that is important in the US political circus – srikan2
    • Low point: addressed only democrats (us, we…) not americans in general and independents whom he has to rely upon. – donion
    • so do we need 21st century bureaucracies? namma kalaignar pesara maathiri irukke – elavasam

முதல் தடவையாக ஓபாமா & ஹில்லாரி ஒரே குரலில்

ஓபாமா ஹிலாரி ஒன்றாகமுதல் தடவையாக ஒபாமாவிற்கு திருமதி. கிளின்டன் தன் ஆதரவை பொதுவில் தெரிவித்துள்ளார். இதன் போது ஒபாமாவை மிகவும் பாராட்டிப் பேசினார் உதாரணத்திற்கு சில வரிகள்.

“If you think we need a new course, a new agenda, then vote for Barack Obama and you will get the change you need,” she told the cheering crowd.

“He will work for you, he will fight for you and he will stand up for you every day in the White House.”

இதேவேளை ஒபாமா, கிளின்டனின் முன்னய தேர்தல் பிரச்சார கடன்களையும் அடைத்துள்ளார்.

இதன் மூலம் ப்ரைமரியில் பிரிந்திருந்த டெமொகிரட்டிக் ஆதரவாளர்கள் ஒரு குடையின் கீழ் வரும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

ஒபாமாவின் iPodல் என்ன இருக்கிறது?

அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணிந்து விட்டது. ஒபாமா, ஹில்லரி நாடகம் எதிர்பார்த்த இறுதிக் கட்ட காட்சிகளுடன் முடிந்து ஹில்லரி மீண்டும் தன் முழு நேர செனெட்டர் பணிக்குத் திரும்பி விட்டிருக்கிறார். என்னதான் சூடு தணிந்தாலும் தேர்தல் களங்களில் எப்போதும் ஏதேனும் சுவாரஸ்யம் இருந்துகொண்டே இருக்கும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களின் தேர்தல், பிரச்சார செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் திட்டம் 1976ல் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ‘வாட்டர்கேட்’ சதித்திட்டங்கள் அம்பலமான பின்பு வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் கட்டுக்குள் கொண்டுவரவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு அரசு பண உதவி செய்யும். அப்படி அரசு நிதி உதவியைப் பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே செலவிட முடியும். தாங்கள் தனியே திரட்டிய நிதியை திருப்பித் தந்துவிடவும் வேண்டும்.

ஒபாமா உட்கட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களுக்கிடையேயான விவாதமொன்றில் ‘யாரெல்லாம் அரசின் பிரச்சார பண உதவியைப் பெறப் போகிறீர்கள்?’ எனும் கேள்விக்கு கையைத் தூக்கினார். அண்மையில் அரசின் உதவியை நாடப் போவதில்லை என அறிவித்து தன் முந்தைய நிலையிலிருந்து மாறிவிட்டார்.

ஒபாமாவின் இந்த மனமாற்றத்திற்கு காரணமாக அவர் கூறியிருப்பது மெக் கெயினுக்கு இருக்கும் 527 குழுக்களின் ஆதரவுகள். 527 குழுக்கள் ஒரு வேட்பாளரின் பிரச்சார அமைப்புடன் நேரடித் தொடர்பில்லாதவை ஆனால் அந்த வேட்பாளருக்கு ஆதரவாகத் தன்முனைப்பில் பிரச்சாரம் செய்பவை. அமெரிக்க வரி விதிப்பு சட்டத்தின் 527ஆம் பகுதியில் இத்தகைய குழுக்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பரவலாக இவை ‘லாபியிஸ்ட்’களால் நடத்தப்படுகின்றன. லாபியிஸ்ட்டுகள் தங்களுக்கு சாதகமான அரசியல் முடிவுகளைப் பெற அரசியல் வட்டங்களில் முயற்சி செய்பவர்கள். ஒபாமாவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக வாஷிங்டன்னில் லாபியிஸ்ட்டுகளின் தாக்கத்தை குறைப்பதும் உள்ளது. ஒபாமா பரிந்துரைக்கும் புதிய அரசியலின் முக்கிய பாகம் இது.

குடியரசுக் கட்சிக்கு லாபியிஸ்ட்களின் ஆதரவு அதிகம் உள்ளது. குறிப்பாக மெக் கெய்னின் பிரச்சாரக் குழுவில் முக்கிய பங்குவகிப்பவர்கள் சிலர் முன்னாள் லாபியிஸ்ட்டுகள். ஒபாமா இத்தகைய லாபியிஸ்ட்டுகளின் தலையீட்டல் 527 குழுக்கள் தனக்கெதிராக பிரச்சாரங்களை – ஊடக விளம்பரங்கள் மூலம்- கிளப்பிவிடும் எனப் பயப்படுவதால் பொதுத் தேர்தல் நிதியிலிருந்து பணம் பெறப் போவதில்லை என அறிவித்துள்ளார். அதாவது 527 குழுக்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தனக்கு அரசு நிதி தரும் $85மில்லியன்கள் போதாது என்கிறார்.

மிகச்சாதாரண அரசியல் முடிவாகத் தோன்றும் இந்த முடிவு ஒபாமாவுக்கு பாதகமான முடிவாக அமைந்துள்ளது.

முதலில் முன்பு பொதுத் தேர்தல் நிதியை பயன்படுத்தப் போவதாக அறிவித்துவிட்டு தற்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது அவரின் நேர்மையை சந்தேகிக்கச் செய்துள்ளது.

இரண்டாவதாக ஒபாமாவின் பணம் காய்க்கும் மரம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. 2007 ஜனவரி துவங்கி இன்று வரை ஒபாமாவின் பிரச்சாரத்திற்கு $272 மில்லியன்கள் நன்கொடை கிடைத்துள்ளது.- இதில் கணிசமான தொகை இணையத் தளம் வழியே பெறப்பட்டது. – எனவே ஒபாமா தன் பிரச்சாரத்தின் உறுதியற்ற துவக்க நிலையில் பொது நிதியை பெற சம்மதித்தும் தன் நிலை உறுதிப்பட்டதும் நிலையை மாற்றிக்கொண்டும் ஒரு ‘சாதாரண அரசியல்வாதியாகவே’ காணப்படுகிறார் என்றும் அவரிடம் இருப்பதாகக் கூறப்படும் ‘புதிய அரசியல்’ என்பது பொய்யானது என்றும் பார்க்கப்படுகிறது. ஜான் மெக்கெய்ன் இதுவரை மொத்தம் $100 மில்லியன்தான் நன்கொடை பெற்றுள்ளார்.
மூன்றாவதாக 527 குழுக்கள் எதுவுமே இதுவரை ஒபாமாவுக்கு எதிராக பிரச்சாரம் ஆரம்பித்துவிடவில்லை. ஆனால் Moveon.org போன்ற இடதுசாரி குழுக்கள் மெக் கெய்னுக்கு எதிராக விளம்ப்பரங்களை வெளியிட்டுள்ளன. – ஒபாமா இத்தகைய விளம்பரங்களை மறுதலிக்க வேண்டும் எனும் கோரிக்கையும் எழுந்துள்ளது.- ஆக எதிர்காலத்தில் நடைபெறலாம் எனும் யூகத்தின் பேரில் ஒபாமாவின் முடிவு இருப்பதால் நம்பகத்தன்மை குறைகிறது.

1976ல் தேர்தல் பொது நிதி உருவாக்கப்பட்டபின்பு அதை வேண்டாம் எனத் தள்ளும் முதல் முக்கிய வேட்பாளர் ஒபாமா மட்டுமே.

மெக்கெய்னுக்கு இந்த வாரத் தலைவலி அவரது பிரச்சாரக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் பேட்டி ஒன்றில் பொதுத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்கா தீவிரவாத தாக்குதலுக்குள்ளானால் மெக் கெய்ன் வெல்வது உறுதி எனக் கூறியது. மக்களை பயமுறுத்தி அரசியல் செய்யப் பார்க்கிறார்கள் என எதிரணி அறிக்கை விட மெக் கெய்ன் ‘அவர் அப்படி சொல்லியிருந்தாரானால் நான் அதை முற்றிலும் மறுக்கிறேன்’ என்று மறுதலித்துவிட்டார். ஜான் கெரிக்கும் ஜார்ஜ் புஷ்ஷுக்குமிடையேயான போட்டியின்போது பின் லாடனின் வீடியோ செய்தி ஒன்று வெளியானது புஷ்ஷுக்கு ஆதரவாக அமைந்ததை நினைவுகூறும் ஊடகங்கள் இந்த வருடமும் அது போன்ற அக்டோபர் அதிர்ச்சி (Ocrober Surprize) வரலாம் என எதிர்பார்க்கின்றன.

அடுத்த கட்ட சுவாரஸ்யம் துணை அதிபர் வேட்பாளர்களை அறிவிக்கையில் வரலாம். ஒபாமா ஹில்லரியை நிராகரித்துவிட்டார் என்பதை ஊடகங்கள் கணித்துள்ளன. ஒபாமா தன் துணை அதிபர் வேட்பாளரின் பிரச்சார நடவடிக்கைகளை கவனிக்க ஹில்லரி முன்பு வெளியேற்றிய நபரை நியமித்துள்ளது இதற்கான முகாந்திரத்தை அமைத்துள்ளது.
இப்படி சில சுவாரஸ்யங்கள் இருந்தாலும் தேர்தல் களம் சூடில்லாமல் இருப்பதை ஒபாமாவின் ஐபாடில் என்ன பாடல்கள் இருக்கின்றன என்பதுபோன்ற செய்திகளும் மிச்செல் ஒபாமாவிற்கும் சிண்டி மெக்கெய்னுக்கும் முக்கியத்துவம் தரும் செய்திகளும் ஊடகங்களின் ‘அரசியல்’ பக்கங்களை நிரப்புவதே சொல்லிச் செல்கின்றன.

பின் குறிப்பு: ஒபாமாவின் ஐபாடில் பாப் டிலன், யோ-யோ மா, ஷெரில் க்ரோ, ஜே-ஜ்சீ, ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டீன், எல்டன் ஜான், ஸ்டீவி வொண்டர்ஸ் ஆகியோரின் பாடல்கள் உள்ளன.

=====
நன்றி: தமிழோவியம்