
மைத்ரேயனின் கருத்துகள்…
பராக்கின் ரசிகன் அல்ல நான்.
ஹார்வர்டில் ஒரு சட்டம் பயின்று அதில் உயர் ராங்கில் தேறிய ஒரு வலுவான சிந்தனையாளர். அவர் தான் போதித்த கல்லூரியில் (பல்கலையில்) இதர சட்டப் பேராசிரியர்களிடம் இருந்து தனித்து நின்று மாணவர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பேராசிரியர்.
ஜனநாயக் கட்சி பெரும் திமிங்கிலங்கள் உலவும் ஒரு கட்சி. எந்தப் பெரும் நிதியாளரும், பணமுதலையும் தனக்கு உதவாதபோது, பல இளைஞர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஹிலரியின் + பில் கிளிண்டனின் 20 ஆண்டு அரசியல் முதலீட்டில் அவர்கள் சேமித்து வைத்த பெரும் நிதிக் குவியல் அது கொணரும் ஏராளமான ஊடக பலம் எல்லாவற்றையும் தன் பேச்சு வன்மையாலும், மக்களை அது சென்று சேரும் தன்மையைப் புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்ததாலும் வென்று வந்தவர்.
மகெய்னுக்கு இதே செயலைச் செய்ய கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் ஆயிருக்கின்றன.
பராக் கிட்டத்தட்ட தாம் எந்தக் கொள்கைகளை முதலில் முன்வைத்தாரோ அவற்றில் இருந்து பெரிதும் பின் வாங்காமல் இந்த உள்கட்சித் தேர்தலை வென்றிருக்கிறார்.
மகெய்ன் கடந்த 30 வருடங்களில் அடித்துள்ள அந்தர்பல்டிகள் நிறைய நிறைய. பெரும் பண முதலைகளின் பின்னணியும், கிருஸ்தவ சர்ச்சுகளின் பலமும், அமெரிக்க ஊடகங்களின் இயல்பான வலது சாரிச் சாயப் பார்வையும் அவருக்கு ஒரு வலு உள்ளதான பிம்பத்தைக் கொணர்கின்றன.
உண்மையில் மகெய்னுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் பற்றி ஏதும் உருப்படியாகத் தெரிந்திருக்காது என்பது என் கணிப்பு. பராக்கிடம் நிறைய சிறந்த நடுவயது executive talent அதுவும் குறிப்பாக financial sector இல் இருந்து சேர்ந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
ஒரு ஜனாதிபதி அமெரிக்காவில் அவரே எல்லாவற்றையும் சிந்தித்துத் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை என்பதை புஷ் 8 ஆண்டுகளில் திறம்பட நிரூபித்திருக்கிறார். ஒரு நாளைக்கு பல பிலியன் டாலர்கள் வாண வேடிக்கை விட்டுக் கொண்டு 8 வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் ரத்தம் கக்கிக் கொண்டு இருக்கிறது.
இது ஒன்றே போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கதிகலங்க அடிக்க.
பல ட்ரிலியன் டாலர் போர ஒன்றை அமெரிக்கா தொடர்ந்து நடத்தினால் அதன் பொருளாதாரம் க்ஷீணித்துப் போவதில் அதிசயம் இல்லை.
போர்த்தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடம் இருந்து பெறும் லாபம் எல்லாம் அமெரிக்காவில் தானே முதலீடு செய்யப்படும் என்று யாராவது கோணலாக ஒரு வாதம் செய்யாமல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
இன்னும் 8 ஆண்டுகள் ரிபப்ளிகன் கட்சி பதவியில் இருந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் காலாவதி ஆகி விடும். அதற்காக டெமக்ராடிக் கட்சி ஏதோ உன்னத புருடர்களால் ஆனது என்று நான் வாதிடவில்லை.
இருக்கும் பிசாசுகளில் எது நல்ல குழந்தை என்று கேட்டதற்கு, அப்பன் சொன்னானாம், அதோ கூரை மேல் ஏறி நின்று தீப்பந்ததால் வீட்டுக்கு நெருப்பு வைக்க முயல்கிறதே அவன் தான் இருப்பதற்குள் நல்லவன் என்று.
அந்த நிலைதான் அமெரிக்கப் பிரஜைகளுக்கு. ஆனால் வினையை எத்தனை நாடுகளில் விதைத்தார்கள். அதெல்லாம் திரும்பி வருகிறது.
என்ன பிரச்சினை என்றால் தனி மனித அமெரிக்கர்கள் நிறைய நன்மை செய்ய முயன்றிருக்கிறார்கள் அதெல்லாம் எப்படித் திரும்பி வந்து உதவும் என்று எனக்குப் புரியவில்லை.
ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை என்று நீங்களே சொல்லி மெக்கென் இடம் இருக்கும் மைனஸ்களை நீங்களே இல்லாமல் செய்துவிட்டீர்கள்.
புஷ் பொருளாதாரத்தில் ஈராக் யுத்தத்தினால் அமெரிக்காவுக்கு பொருளாதார லாபம் ஏதுமில்லாதது போல் நீங்கள் போட்ட கணக்கு ஒப்புக்கொள்ள முடியாதது. புஷ் ஏதோ வெறி பிடித்து சண்டை ஆரம்பித்து நடத்தியது போன்ற பிம்பம் சரியானதில்லை. யுத்தம் ஒன்றும் நஷ்டகணக்கு அல்ல.
உங்கள் இரண்டு வாதங்களையும் நான் முன்னமே எதிர்பார்த்து அந்த இரு வரிகளையும் எழுதினேன்.
அமெரிக்க அதிபர்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டாம் என்பது ரானால்ட் ரேகன் காலத்தில் உறுதிப்பட்டுப் போயிற்று.
எல்லாம் தெரிந்த கிளிண்டனால் வலது சாரி செனட், காங்கிரஸ் ஆதிக்கத்தில் ஏதும் உருப்படியாக மக்களுக்குச் செய்ய முடியாமல் பொருளாதாரத்தை ஓரளவு பெரும் பண முதலைகளின் கைப்பிடியில் இருந்து மீட்டு மத்திய தர மக்களுக்கு ஓரளவு நன்மை தரும் நடவடிக்கைகளை எடுத்து விட்டுப் போனதாகப் பல பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இவற்றை நான் அவ்வளவு நம்புவதில்லை.
அமெரிக்கப் பொருளாதாரத்தில் புகையும், ஆடிகளும் அதிகம். அமெரிக்கச் சட்டங்களுக்கு அப்பால்பட்ட சானல் தீவுகள் போன்ற இடங்களில் அமெரிக்கப் பண முதலைகள் சேர்த்து வைத்திருக்கும் நிதியின் அளவு ஒரு வேளை அமெரிக்காவின் வருட மொத்த வருமானம் அளவு கூட இருக்கும் என்று ஊகம் .
இதைப் பற்றி மதர் ஜோன்ஸ் என்ற ஒரு சிறப்பான அரை இடது, தொழிலாளர் சார்பு ஆனால் நல்ல ஆய்வு சார்ந்த பத்திரிகை
மரபைக் கடைப்பிடிக்கும் பத்திரிகை ஒரு நீண்ட கட்டுரையை இரண்டு வருடம் முன்பு பிரசுரித்தது என்று நினைவு. அதை அந்தப் பத்திரிகையின் வலைப் பக்கத்தில் போய் ஆவணங்களில் தேடினால் கிடைக்க வாய்ப்பு அதிகம். நான் இந்தப் பத்திரிகையின் நாணயத்தையும், நா நயத்தையும் நம்புபவன்.
இப்படித் தனிநபர் ஜனாதிபதி ஒன்றும் பொருளாதாரத்தில் பிரமாதமாகக் கிழித்து விட முடியாது என்ற கருத்தை கருத்தியலில் (ideology) அமைப்பியல் பார்வை என்று சொல்வார்கள். நான் அமைப்பியலுக்கும், தனிநபர் வாதத்துக்கும் இடையில் இருப்பவன்.
தனிநபர் ஏதோ உலகத்தையே புரட்டி விட முடியும் என்ற கருத்து ஓரளவு இளம்பிள்ளைக் கருத்து. அந்த வயதில் தாம் அசாதாரண சக்தி உள்ளவர்கள் என்ற நம்பிக்கை இல்லாவிடில் என்ன பிரயோசனம்? இளைஞர் வளர அந்த நம்பிக்கை அவசியம்.
நடுவயது வரும்போது அமைப்புகளின் இயல்பு புரிந்து தனிநபர் சாகச விழைவுக்கும், அமைப்பின் எளிதில் நகராத் தன்மைக்கும் இடையில் எப்படி ஊடாடி காரியங்களைச் சாதிப்பது என்பது ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.
இதில் ஓரளவு ஹிலரி வெற்றி பெற்றிருந்தார் சமீபத்து ஏழு எட்டு ஆண்டுகளில். அவரது இந்த அனுபவ முதிர்ச்சி இப்போது வீணாகப் போகிறது என்பதில் எனக்கு வருத்தமே.
ஆனால் மகெய்ன் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக செனட்டில் இருந்து சாதித்தவை மிகக் குறைவு. அவர் தன் வியத்நாம் போர்க்கைதி பிம்பத்தை வைத்துக் கொண்டு இத்தனை நாள் காலம் ஓட்டி இருக்கிறார். ரிபப்ளிகன் நிர்வாகங்கள் அவருடைய காலத்தில் கிட்டத்தட்ட 2/3 பகுதி இருந்ததால் அவருடைய தொகுதிக்கு செலவழிக்க நிறைய பணம் நிர்வாகத்திடம் இருந்து வாங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்தப் பகுதி பெரும்தனக்காரர்களிடம் இருந்து அவருக்கு நிதி வசதி கிட்டி இருக்கவும்
வாய்ப்புண்டு.
ஆனால் நிர்வாகத் திறமை என்று பார்த்தால் ஓபாமாவுக்கும் இவருக்கும் எந்த பெருத்த வேறுபாடும் இல்லை. இருவரும் அமெரிக்க அரசியலில் மிகவும் பெருமையாகக் கருதப்படும் executive experience அதாவது மேலாட்சியாளராக இருந்து நிர்வாகம் செய்து வெற்றி பெறுவது என்ற அம்சத்தில் முழு சூனியம். இருவருக்கும் அது கிடையாது.
[ இந்த அனுபவம் என்பதே ஒரு விதமான மாயை என்பதை நாம் இப்போது கருத வேண்டாம். அதற்குள் நுழைந்தால் நான் மிகவும் cynical ஆக இதை அணுகுகிறேன் என்று எல்லாரும் திட்டுவார்கள் என்று ஊகம் உண்டு.]
ஒபாமாவுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டாம், ஏனெனில் புஷ்ஷே – அவர் நிர்வாகியாக இருந்து எதையும் பிரமாதமாகச் சாதித்ததில்லை. டெக்சாசில் தான் ஏதோ பெருத்த முன்னேற்றங்கள் கொண்டு வந்ததாக அவர் தம்பட்டமடித்தது எல்லாம் ஊடகங்களின் ஒத்துழைப்போடு அவர் நடத்திய மாயை என்று விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து பின்னால் நிரூபித்த கட்டுரைகள் பல பார்த்திருக்கிறேன்.
அவருக்குப் பின்னே ஊடகங்களும், கிருஸ்தவப் பேரியக்கங்களும், க்ளிண்டனின் உருப்படா பாலுறவுக் கேளிக்கைகளால் அன்னியப்பட்ட ஒரு பெரும் நடு அமெரிக்க மக்கள் திரளும் இருந்தன. அப்போதும் கூட தில்லு முல்லு செய்யாமல் அவரால் ஜெயிக்க முடியவில்லை.
இப்படிக் கத்தி முனையில் இருந்த ஒரு நாட்டை அனேகமாக ரிபப்ளிகன் கட்சியின் மீது வெறுப்பே வருமளவுக்குத் தள்ளி இருக்கும் பெருமை புஷ் அண்ட் மூத்த ‘தலைவர்களின்’ ஊழல் ராஜ்யம்.
ஊழல் மக்களுக்கு உதவாது என்பதை நான் உங்களுக்கு எடுத்துச் சொல்லத் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கடந்த
பத்தாண்டுகளில் அமெரிக்க அரசு infrastructural investment இல் ஏராளமாகப் பின் தங்கி இருக்கிறது என்பது எத்தனை ஆயிரம் பாலங்கள் இடியும் அபாயத்தில் இருக்கின்றன, அவற்றைப் பற்றிப் புஷ் அரசு கவலையே படவில்லை என்று மத்திய அரசின் ஹைவேஸ் டிபார்ட்மெண்டின் உள்ளாய்வு அறிக்கையே சமீபத்தில் குறை சொன்னதாக ஒரு அறிக்கை படித்தேன்.
மேலும் புஷ் அண்ட் கோ கொள்ளை அடித்தது மக்களுக்கு எப்படியாவது வந்து சேர்ந்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களானால் அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
- சாதாரண தொழிலுற்பத்தியால் ஏராளமான தொழிலாளருக்கு வேலை கிட்டும்,
- உள்நாட்டில் நுகர்பொருட்கள் நிறைய மக்களுக்குக் கிட்டும்,
- சுழற்சியில் பணமும், லாபமும், முதலீடும் நாட்டுக்குள்ளேயே தங்கும்.
- மக்களிடம் வேலைத் திறன்,
- தொழில் நுட்ப அறிவு,
- ஊக்கம், வாழ்வில் பிடிப்பு,
- பண்பாட்டில் நம்பிக்கை, மேலெழுந்து வர உழைக்கும் ஆர்வம், தவிர
- நல்ல வாழ்க்கை வாழ்வதில் கிட்டும் ஒருவித விகாசம் எல்லாம் இருக்கும்.
ராணுவத் தளவாடத் துறையின் பொருட்கள் மக்களால் நுகரப்பட முடியாதவை. அவை சுழற்சி இல்லாதவை. வெறுமே பல இடங்களில் சேமித்து வைக்கப்பட்டு துருவேறிக் கொண்டிருக்கும். இவற்றில் பயன்பாட்டுப் பயிற்சியும் பெறும் மனிதர்கள் சாதாரண வாழ்வுக்கு அந்தத் திறமைகளை மாற்றித் தர சில பத்தாண்டுகள் பிடிக்கும். ராணுவ வீரர்கள் பெருமளவு பாசறைகளில் வாழ்வதால் இந்தத் திறன் எளிதில் மக்களிடம் கை மாற்றித் தரப்படுவதில்லை.
தவிர ராணுவத் தளவாடங்கள் சாதாரண நுகர் பொருட்களைப்போல மலிவு விலைக்குக் கொடுப்பதற்காகத் தயாரிக்கப் படுவதில்லை. அவை நுகர்வாரிடம் விற்கப் படுவது உயர் விலைகளுக்கு, அந்த உயர் விலையை அரசிடம் பெறுவதற்காக நிறைய லஞ்சமும் ஊழல் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அது அரசை மேலும் மேலும் உளுத்துப் போகச் செய்கிறது, மக்களின் வரிப்பணம் நல்ல ஆக்க பூர்வமான வேலைகளுக்குப் பயன்படாமல் கோடவுனில் தூங்கப்போகும் பொருட்களுக்குச் செலவிடப்பட்டு மக்களின் தேவைகள் பின்னே ஒத்திப் போடப்ப்டுகின்றன.
இதுவும் சுழற்சியில் மக்களின் முதலீட்டு வளர்ச்சியை முடக்குவதே.
இதைக் கொஞ்சம் தீவிரமாக யோசித்தீர்களானால் ஏன் ராணுவச் செலவு அதிகமாக உள்ள நாடுகள் உருப்படாமல் போகின்றன என்பது புரிய வரும்.
ஆக ஒபாமா இளைஞர் ஆனாலும் அறிவு தீர்க்கம் உள்ளவர் என்பதை மனதில் வைத்து, எப்படி ஹிலரியைப் போன்ற் ஒரு வலுவான் எதிராளியை அவர் தோற்கடித்தார் என்பதையும் கருதுங்கள்.
அந்தத் தேர்தல் ஏதோ வெறும் பிரச்சாரத்தால் வெல்லப் படக் கூடியதல்ல. சில ஆயிரம் குழுக்களை நாடு முழுதும் அமைத்து
அவற்றை நடத்தி கோணல் ஏதும் இல்லாமல் சமாளித்து இரண்டு வருடம் போல இந்தப் போட்டி நடக்கிறது. கடுமையான உழைப்பு தேவை இதற்கு. அதுவும் அடிமட்டத்தில் இருந்து ஒருவர் எழுந்து வர இந்த உழைப்பு ஏராளமாகத் தேவை.
ஹிலரிக்கு எல்லாம் அனேகமாக ஏற்கனவே வேண்டுகிற இடத்தில் இருந்தன.
மகெய்னுக்கும் பல வருடங்களாக அதிபர் தேர்தலில் போட்டி இட்டுத் தோற்றுத் தோற்று கற்ற பாடங்கள் நிறைய, அமைப்பும் இடத்தில் இருந்தது. எதிர்க்க வலுவான ஆட்கள் யாரும் இல்லாததாலும் அவர் ஓரளவு சுலபமாகவே இந்தப் போட்டியில் வென்றிருக்கிறார். அவரும் பல பத்து வருட நிதி சேமிப்பில் மேலே மிதந்து வந்து வென்றிருக்கிறார்.
மகெய்னுடைய தத்துவமோ, பொருளாதாரக் கொள்கைகளோ புஷ்ஷின் கொள்கைகள், தத்துவம் ஆகியவற்றில் இருந்து அதிகம் மாறக் கூடியவை அல்ல, ஏனெனில் அவருக்குப் பின் நிற்கும் பண பலம் அப்படி ஒரு பெரும் விலகலை அனுமதிக்காது.
ஒபாமாவுக்கு இந்த வகை கட்டுப்பாடுகள் குறைவு. அதுவும் 8 வருடமாக அதிகாரத்தில் இல்லாத ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளி வருவதால் பணமுதலைகளின் influence அவர் மேல் குறைவு. இல்லை என்று சொல்லவில்லை. குறைவு என்றுதான் சொல்கிறேன்.
மேலும் அவருடைய rhetoric, policy declaration எல்லாம்
- நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யும் பொருளாதாரம்,
- தொழில் உற்பத்தியை நாட்டில் வளர்க்க முயற்சி செய்தல்,
- ராணுவச் செலவை மட்டுமல்ல, அன்னிய மண்ணில் போய் அட்டகாசம் செய்யும் கருத்தையே ஓரம் கட்டுதல்
என்று பெரிதும் வியர்த்தமான அரசுச் செலவுகளைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளோடு ஆக்க பூர்வமான செலவுகளை முயலப் போவதாகவும் சுட்டுகின்றன.
இவை ஏதும் பொருளாதாரத்தில் தற்குறியாக இருந்தால் புரியாமல் செய்யவோ அல்லது பேசவோ முடிந்திருக்காது.
என் வாதம் உள்ளீட்டு வலுவோடுதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. ஒரு பத்துபக்கம் எழுத விருப்பம் இல்லாமல் கோடி மட்டும் காட்டி விட்டேன். அதை நீங்கள் உள் நுழைந்து உள் தர்க்கம் எப்படி ஓடும் என்று பார்த்துப் புரிந்து கொண்டால் நல்லது.