Monthly Archives: செப்ரெம்பர் 2004

முக்கிய மாகாணம் – ப்ளோரிடா

‘அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்’ என்று கேள்விபட்டிருக்கிறேன். சில வருடம் முன்பு மின்சாரக் கனவுகள் பார்த்தபோது இறுதிக் காட்சி ரொம்பப் பிடித்துப் போனது. காதலனின் உடல்நலனுக்காக கன்னிகாஸ்திரியாகியதாகி விடுவதாக இறைவனிடம் வேண்டிக்கொள்வார் கஜோல். அரவிந்த்ஸ்வாமி அதில் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை சொல்வார். கடவுள் தண்டிப்பாரே என்று நாம் நினைத்தால் அப்புறம் கடவுளே கிடையாது. தெய்வம் என்பது அர்த்தமே இழந்துவிடும் என்னும் அர்த்தத்தில் அவர் பேசும் வசனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அமெரிக்காவின் புயலோரத்தில்… சாரி… கிழக்குக் கடற்கரையோரத்தில் இருக்கும் ஃப்ளோரிடா பெரிதாக தவறு எதுவும் இழைக்கவில்லை. இருந்தாலும் நான்கு பெரிய புயல்கள் இவ்வருடம் கரையைக் கடந்து இருக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் போன வருடம் அவர்கள் ஜார்ஜ் புஷ்ஷுக்கு வாக்களித்ததுதான் என விளையாட்டாகப் பேசிக் கொள்கிறார்கள்.

ஃப்ளோரிடாவாசிகள் யாருக்கு வாக்களித்தனர் என்பது வோட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இந்தியாவில் நடக்கும் கள்ள ஓட்டு, வாக்குச்சாவடி கைப்பற்றல், எதிர்க்கட்சி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் போன்ற தகிடுதத்தங்கள் அமெரிக்காவிலும் காலம் காலமாக அமைதியாக செயலாக்கப்பட்டு வருகிறது. குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெல்லும் தொகுதிகள் நிறைந்த ஃளோரிடாவில் இந்த மாதிரி விஷயங்கள் 2000-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் ஊடகங்களின் பரந்த கவனிப்பைப் பெற்று வருகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் வாக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. நியு யார்க், சிகாகோ போன்ற இடங்களில் நிச்சயம் சுதந்திரக்கட்சிதான் ஜெயித்திருக்கும் என்பதால் குடியரசு நாயகர் புஷ்ஷும் இதைப் பெரிது படுத்தவில்லை. இடித்துக் கொண்டு அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள், வாக்குசாவடியை நிர்வகிப்பவரின் குழப்பங்கள் போன்றவை மட்டுமே குறைந்தது ஐந்து மில்லியன் வாக்குகளை மதிப்பிழக்க வைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்களில் ஃப்ளோரிடாவுக்கு எப்பொழுதுமே முக்கியமான இடம் உண்டு. பல வருடங்களாக சுதந்திரக் கட்சியின் கோட்டையாக விளங்கிய ஃப்ளோரிடா, கடந்த ஆண்டுகளில் வயதானவர்களின் சொர்க்கபுரி, க்யூபாவில் இருந்து தப்பி வருபவர்களின் வரவேற்பு மையம், ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களின் பெருக்கம் போன்றவற்றால் குடியரசுக் கட்சியும் சமபலத்துடன் வலம் வரும் மாகாணமாக மாறியிருக்கிறது. இருபத்தைந்து எலெக்டோரல் வோட்டுகளுடன் ஜனாதிபதித் தேர்தலின் துருப்புச் சீட்டாக இருக்கிறது.

போன தேர்தல் போல் இல்லாமல் இந்த முறை, தொட்டால் ஓட்டு போடும் பெட்டிகளை உபயோக்கிக்கப் போகிறார்கள். வெள்ளோட்டமாக நடந்த நகராட்சித் தேர்தலில்தான், இந்த முறையும் பிரச்சினை ஆகலாம் என்பது தெரியவந்துள்ளது. பனிரெண்டே வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெறுகிறார். ஆனால், 137 வோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்படுகிறது. தொட்டவுடன் வாக்கை எடுத்துக் கொள்ளும் கணினியில், சொந்த வேலைகளை ஒதுக்கிவிட்டு வந்து வாக்களிப்பவர்கள், செல்லாத வோட்டுப் போடவா, வந்திருக்கப் போகிறார்கள்?

இந்தியாவில் தேர்தல் ஆணையம் இருப்பது போல் அமெரிக்காவில் தேர்தல்களுக்கு என்று தனியாக எதுவும் கிடையாது. ஒவ்வொரு மாகாணத்திலும் மந்திரியாக இருப்பவர்களே, தேர்தல் வேலைகளுக்கும் தலைமை தாங்குவார்கள். பல சமயங்களில் இவர்களே வேட்பாளர்களின் பிரச்சாரக் குழுவிலும் முக்கிய அங்கம் வகிப்பார்கள். சன் டிவி நடத்தும் கலாநிதி மாறனும் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் போல, ஃப்ளோரிடா கவர்னர் ஜெப் புஷ்ஷும் ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் புஷ்ஷும் சகோதரர்கள்.

அண்ணன் ஜார்ஜ் புஷ் ஜெயிப்பதற்கான ஃப்ளோரிடா குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தவர் காதலீன் ஹாரிஸ். இவரேதான் ஃப்ளோரிடா தேர்தல் ஆணையத்தின் தலைவரும் ஆவார். பல்லாயிரக்கணக்கான கறுப்பர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, குற்றமற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை வாக்களிக்க முடியாமலும், குற்றம் புரிந்த குடியரசு கட்சி ஆதரவாளர்களை நிரபராதிகள் என்றும், பட்டயம் கொடுத்தது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள். தமிழ்நாட்டில் ஒரு கட்சியின் கொ.ப.செ.வே, தேர்தல் கமிஷனராக வேலை பார்த்தால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைக் களைவது எவ்வளவு எளிது!

இது நடந்தது கடந்த 2000-ஆம் ஆண்டு தேர்தலில். ஆனால், இந்த வருடத்து வாக்காளர் பட்டியலிலும் இதே போன்ற செலக்டிவ் விடுபடுதல்கள் முளைத்துள்ளது. அதே ஜெப் புஷ். மீண்டும் அண்ணன் புஷ் வேட்பாளரக இருக்கிறார். லியான் மாவட்டத்திற்கு தம்பியால் நியமிக்கப்பட்ட நிறுவனம் தயாரித்த எழுநூறு பேர் அடங்கிய குற்றவாளி பட்டியலில் வெறும் முப்பத்துமூன்று பேர் மட்டுமே குற்றம் புரிந்தவர்கள். நிறுவனத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பதால், தவறு என்று யாராவது அனற்றினால், பழியைத் தூக்கி அவர்கள் மேல் போட்டு விடலாம்.

ஃப்ளோரிடா முழுக்க 47,000 பேர் குற்றவாளிகளாக பட்டியலிட்டுள்ளனர். இவர்களில் 61 பேர் மட்டுமே ஹிஸ்பானிக்ஸ் எனப்படும் ஸ்பானிஷ் மொழிப் பேசும் தெற்கு அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள். ஃப்ளோரிடாவின் மக்கட்தொகையில் பதினொரு சதவிகிதம் உள்ள ஹிஸ்பானிக்ஸில் இருந்து .1 சதவீதத்துக்கும் குறைந்தவர்களே பட்டியலில் இடம் பெற்றிருப்பது அசாத்தியம். விசாரணை நடத்தியதில் டேட்டாபேஸ் பிரச்சினை, தொடு உணர்வை நிரலி கண்டுபிடிப்பதில் தவறு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இவ்வளவு நுணுக்கமாக ஆய்வதால், ஃப்ளோரிடாவில் இந்தத் தேர்தலில் பிரச்சினை வராது என்றே நினைக்கிறேன். போதாக்குறைக்கு மைக்கேல் மூரும் கேமிராவைத் தூக்கிக் கொண்டு ஃப்ளோரிடாவில் டிஸ்னிவர்ல்டிலோ, எம்.ஜி.எம்மிலே டேரா போடப்போகிறார்.

பள்ளியில் கிரிக்கெட் ஆடும்போது தனியாக அம்பையர் என்று ஒருவரை வைத்துக் கொள்ள மாட்டோம். பேட்டிங் செய்யும் அணியில் இருந்தே ஒருவரை அம்பையராக வைத்துக் கொள்வோம். அவரும் அவ்வப்போது, நோபால், பந்து எல்லைக்கோட்டில் பிடிபட்டாலும் ஆட்டக்காரரின் மட்டையைத் தொடவில்லை என்று ‘உதவி’ செய்து காப்பாற்றி வருவார். இரு அணிகளுக்கும், சொந்த அணிக்காரர்களே அம்பையரிங் செய்து ஸ்கோரை ஏற்றிக் கொள்வதால் பெரிதாக சண்டையும் வராது.

அமெரிக்காவிலும் இதே நிலைதான். தேர்தல் ஆணையர்களும், கொ.ப.செ.வும் ஒருவராகவே இருக்கும் மிச்சிகன், மிஸ்ஸௌரி போன்ற மாநிலங்கள் புஷ்ஷின் குடியரசு கட்சிக்கு சார்பாக அறிவிக்கப்படலாம். வெஸ்ட் வர்ஜினியா மாநிலத்தில் சுதந்திர கட்சியும் இதே தந்திரத்தைப் பின்பற்றுகிறது. அங்கு தேர்தல் ஆணையரே, கவர்னர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

கடவுளே வேட்பாளராக தோன்றி புயல்சின்னத்தில் போட்டியிட்டாலும், அமெரிக்காவின் ஆளுங்கட்சிகளை மீறி ஜெயிப்பது கஷ்டம்.

-பாஸ்டன் பாலாஜி

பரி

திருமலை

Federal Election Commission

பராக்கு பார்த்தது

  • குஷ்பூ பிறந்தநாள் வாழ்த்து
  • தமிழில் சந்தி இலக்கணம் – டாக்டர் இரா விஜயராகவன்
  • மதம் மாறாதே என்று உபதேசித்தால் மட்டும் போதுமா? – சின்னகுத்தூசி பக்கம் : “புதுவை சொம்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த செல்வி தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாள்.

    பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் அழைத்து எல்லோரும் வருவாய்த்துறையிலிருந்து ஜாதிச் சான்றிதழ் வாங்கி வரவேண்டும்; இல்லாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்று கண்டிப்பாக கூறி இருக்கிறார்கள். “உனக்கு ஜாதிச் சான்றிதழ் தர எங்களுக்கு தர அதிகாரமில்லை. புதுவை அரசு பழங்குடி இன மக்களை அங்கீகரிக்கவில்லை; ஆகவே எங்களால் உனக்கு ஜாதிச் சான்றிதழ் தர இயலாது” என்று வருவாய்த்துறையினர் சட்டத்தினைக்காட்டி கையை அகல விரித்துவிட்டார்கள்.”

  • நான்காவது குரங்கு – ரவிக்குமார் : “பிரமாண்டமான மரத்தினாலான செருப்பு, சமயத்தில் இரண்டு முகங்களைக் காட்டும் மனிதர்களைப் பிரதிபலிக்கும் மரத்தினாலான சிற்பம், நசுக்கி எறியப்பட்ட பெப்ஸி டின்னைக் கல்லிலேயே செதுக்கியிருக்கிறார்கள். எல்லாப் புலன்களையும் “மூடியபடி காட்சியளிக்கும் நான்காவது குரங்கு’ என்னும் மரச்சிற்பம், கடந்த காலத்தை அசைபோட்டபடி அசையாமல் அமர்ந்திருக்கும் முதியவரின் சிற்பம், கண்ணாடிகளின் பரப்பில் வரையப்பட்ட இனம்புரியாத இதமளிக்கும் “அக்ரலிக்’ தெளிப்புகள்…. என, கண்காட்சியில் ஒருமுகமானவர்களின் பல முகங்கள் வெளிப்பட்டிருந்தன.”
  • முதல் நூறு நாள்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கியச் சாதனைகளாக நீங்கள் கருதுவது? : “பல்லாண்டு கோரிக்கையான தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் தர முடிவு செய்தது; சென்னைக் குடிநீர்த் திட்டத்துக்கு 1000 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது; சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியிருப்பது ஆகிவற்றை முக்கியமான சாதனைகளாகக் கருதுகிறேன். தவிர, மணிப்பூர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் முதலில் வேறுமாதிரித் தோன்றினாலும் இறுதியில் சுமூகமாக முடித்திருக்கிறது. அங்கு காங்கிரஸ் அரசு இருந்தும், விட்டுக்கொடுக்காமல் தேசத்தின் பாதுகாப்பையே முக்கியமாகக் கருதி மத்திய அரசு செயல்பட்டிருப்பதும் கவனத்திற்குரியது. பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தவும் பெருமுயற்சி எடுத்து வருகிறது. இவற்றுடன் ஈராக்கிலிருந்து இந்தியப் பிணைக் கைதிகளை மீட்டதை சமீபத்திய சாதனையாகக் கருதுகிறேன்.”
  • நூல் அரங்கம்: டி.கே.சி. ராமாயணம் : “கம்பனின் காவியத்தில் மூழ்கி முக்குளித்தவர் ரசிகமணி. கம்பன் பாடல்களில் பெரும்பகுதியை இடைச்செருகல் என்று நிர்தாட்சண்யமாக நிராகரித்தவர். அவர் செருகுகவிகள் என்று நிராகரித்ததும், திருத்தங்கள் செய்ததும் தமிழறிஞர்கள் பலருக்கும் உடன்பாடில்லாத போதிலும், கம்பன் எழுதிய உண்மையான பாடல்கள் என்று டி.கே.சி. எடுத்துச் சொன்னவை கம்பனின் மிக மேலான பாடல்கள் என்பதை ஒப்புக்கொள்வர். இந்த முரண்பாடுகளை மறந்துவிட்டு, கம்பனின் பத்தாயிரம் பாடல்களையும் படிக்க அவகாசமில்லாதவர்கள், அவனது சிறந்த பாடல்களைப் படிப்பதற்கு இந்நூல் பெரும் துணையாக அமையும்.”
  • புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன் : “தமிழகப் புதுக்கவிதை வரலாற்றோடு நின்றுவிடாமல், ஈழத்துப் புதிய கவிதைகளின் வரலாற்றுத் தகவல்களும் தரப்பட்டுள்ளன.”
  • புதிய கோணங்கள் – ஆர்.வெங்கடேஷ் : “இந்தப் பலன்களில் தான் என்ன தேடுகிறோம் என்றும் ஒருமுறை யோசித்திருக்கிறான் கல்யாண். ஒன்றுமில்லை. அன்று நாள் நன்றாக இருக்கும் என்று உற்சாகம் தந்துவிட்டால் போதும். அதைவிட, பார்ப்பதற்கு முன் உள்மனத்தில் வேறொரு பயம் அலைக்கழிக்கும். அன்று நாள் நல்லபடியாக இருக்கவேண்டுமே.”
  • கல்கி வளர்த்த சிரிப்பலைகள் – சுஜாதா: “ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு முரண்பட வைத்து (Conflict), அதன் மூலம் எதிர்பாராத ஒரு சந்தோஷத்தை – பரவசத்தைக் கொடுப்பது. (அப்பரவசம் திடீரென்று ஒரு Explosion போல் வரவேண்டும்) முடிந்தால், நம் சிந்தனைத் திறனையும் உயர்த்துவது. மிக உயர்ந்த நகைச்சுவை, நம் சிந்தனையை – சமூகத்தை உயர்த்தும் நோக்கிலே அமைய வேண்டும். இன்னொரு விஷயம் – இருவேறு கருத்துக்களையும் தனித்தனியா பார்த்தால் நகைச்சுவை இருக்காது, இருக்கக்கூடாது என்றே சொல்லாம்.”
  • மரபின் தாக்கமும் நவீன ஆக்கமும் – ஞானக்கூத்தன் கவிதைகள்: ஒரு விரிவான பார்வை : சிபிச்செல்வன்

சிகாகோ விஜயம்

  1. சியர்ஸ் டவர் அடிவாரம்
  2. ஷமில் பஸயேவ் 2010-இல் குறி வைப்பார்
  3. அங்கும் இங்கும் பாதையுண்டு
  4. வாராவதி இறக்கம்
  5. மிச்சிகன் ஏரியும் பாலத்தூண்களும்
  6. ஹான்காக் கோபுரம்
  7. சிகாகோவின் பட்டினப்பாக்கம்
  8. அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி…
  9. விவேகானந்தர்
  10. நிஜ கொரில்லா போஸ் கொடுக்குமா
  11. பபூன்
  12. Bug-fixing
  13. ப்ரூக்ஃபீல்ட் விலங்ககம்
  14. டால்ஃபின் சாப்பிடப் போகிறது
  15. அலாஸ்கா போகாமலேயே செவ்விந்தியச் சின்னம்
  16. மாலை முழுதும் தூக்கம்
  17. மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
  18. தனியே… தன்னந்தனியே
  19. ஒரு மார்ட்டினி கிடைக்குமா சார்?
  20. தேன் வேண்டுமானால் கொண்டு வருகிறோம் என்கிறார்
  21. பூந்தோட்ட காவல்காரர்
  22. எல்லாருமே திருடங்கதான்…
  23. Black Currant
  24. குடும்பப் புகைப்படம்
  25. சிங்கம் ஒன்று புறப்பட்டதே
  26. முத்தமிட்டால் ராஜாவாக மாறி விடுவாரா?
  27. Talk to her (அ) விருமாண்டி
  28. கண்ணாடியிலே கலை வண்ணம் கண்டார் (1)
  29. கிரிக்கெட் பந்து விழுந்து உடையாமல் இருக்க வேண்டும்
  30. செங்குத்தான கோலங்கள்
  31. Stained Glass Mirrors
  32. குறுந்தொகை நாயகி போல் காத்திருத்தல்
  33. டாவின்சி கேஸ் போடுவாரா?
  34. கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவர்?
  35. Inside Navy Pier
  36. தனிமைப்பட்டுப்போன ஒரு கறுப்புப் புறா?
  37. ரங்கராட்டினத்தில் இருந்து
  38. உனக்கும் அவனுக்கும் ஐஸ்க்ரீம் பிடிக்க… எனக்கு?
  39. நாணமோ… இன்னும் நாணுமோ
  40. நங்கூரத்தை நிறுத்தி விடு
  41. பனியுமில்லை… மேகமில்லை… மூட்டமாயிருக்கிறது
  42. சண்டைக் கோழி
  43. இரவுக்கு விளக்கம் கலங்கரை
  44. டைடானிக் அல்ல… அல் க்வெய்தாவும் அல்ல
  45. வட்டத்துக்குள் சிக்கிய பறவைகள்
  46. கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…

Father’s Dream; God’s Nightmare 

Father’s Dream; God’s Nightmare Posted by Hello

தலை தப்பிய ஓவியன் – இரா. முருகன்

RayarKaapiKlub Message #8963:

மகா உக்கிரமான ஒரு போர் நடக்கப் போகிறது.

மிடுக்கான தலைக் கவசமும், கையில் ஏந்திப் பிடித்த வாளும், கேடயமும் கழுத்தில் லட்சியமாகச் சுற்றிய சால்வையும் மட்டும் அணிந்த வீரர்கள். சிலர் குதிரையேறி விரைந்து வருகிறார்கள். பின்னணியில் கோட்டை கொத்தளம் புழுதியில் மங்கலாகத் தெரிகிறது.

அடுத்த நிமிடம் இந்த இரண்டு படைகளில் ஒன்று வெல்லும். வென்றவர்களின் ஆரவாரம் காற்றில் கலந்து மேலேறி வெளியெங்கும் கலக்க, தோற்றவர்களின் ரத்தத்தால் ஈரமான நிலம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும். உயிர் மூச்சு மெல்ல அடங்க அவர்களின் உடல்கள் சரிந்து அந்த மண்ணோடு மண்ணாகும்.

எல்லாப் போர்க்களங்களும் இதே விதத்தில் தான் வரலாற்றின் பக்கங்களில் உறைந்து வெறும் வார்த்தையாகி எஞ்சுகின்றன.

ஆனால் இந்தப் போர்க்களம் வித்தியாசமானது.

பெருங்கூட்டமாகப் பெண்கள், குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள். போரிட வந்தவர்கள் இல்லை. போரைத் தடுக்க வந்தவர்கள்.

சீறிச் சினந்து நிற்கும் ஒரு போர் வீரனின் காலைப் பிடித்துக் கொண்டு, போரிட வேண்டாம் என்று கதறுகிறாள் ஒருத்தி. அவள் இடுப்பில் குந்தியிருக்கும் குழந்தையும் தாயோடு சேர்ந்து குனிந்தபடி வெறிக்கிறது. இன்னொரு பெண் தன் பச்சிளம் சிசுவைத் தலைக்கு மேல் உயரத் தூக்கி, யுத்தம் வேண்டாம் வேண்டாம் என்று கதறுகிறாள். மோத விரையும் கால்களுக்கு இடையே இன்னொருத்தி தரையில் மண்டியிட்டு அமர்ந்து யாரையோ, எல்லோரையுமோ கெஞ்சுகிறாள். அவள் பக்கத்தில் தவழும் குழந்தைகள்.

எல்லோருக்கும் நடுவே வெள்ளுடையில் ஓர் இளம்பெண் தேவதை போல் இரு கையையும் அகல விரித்தபடி, போதும், போதும் என்ற பாவம் முகத்தில் தெறிக்க நிற்கிறாள்.

பார்த்த மாத்திரத்தில் மனதில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் இந்தக் காட்சி இடம் பெறுவது ழாக் லூயி டேவிட் (Jacques-Louis David) என்ற பிரஞ்சு ஓவியர் வரைந்தது.

ஓவியக் கலைத்துறையில் புத்தலைப் போக்குகள் மலரத் தொடங்கிய ஆயிரத்து எழுநூறுகளின் இறுதியில் ஏற்பட்ட முதல் அலையான புதுக்கிய மரபியல் (Neoclassicism) பாணியில் அமைந்த இந்த ஓவியத்தின் பெயர் ‘சபைன் மகளிரின் குறுக்கீடு’ (Intervention of the Sabine Women).

நியோகிளாசிசம் பற்றிப் பேசுவதற்கு முன், ஓவியத்தில் இடம் பெற்ற சபைன் மகளிர் பற்றிக் குறிப்பிட வேண்டும். ரோமாபுரி பற்றிய தொன்மப் புனைவு அது.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் ரோமாபுரி மாநகரம் எழுந்தபோது, வேறு யாரும் குடி வரத் தயங்கியதாலோ என்னவோ (பழகிய இடத்தை விட்டுக் குடிபெயர யாருக்குத்தான் விருப்பம்?) நகரத்தின் மக்கள் தொகையை அதிகரிக்கச் சிறைப்பிடிக்கப் பட்ட குற்றவாளிகளை நிறையக் கொண்டு வந்து குடி அமர்த்தினார்களாம்.

ஆக அன்றைய ரோமாபுரி கிட்டத்தட்ட ஆண்களின் உலகம். பெண்கள் இல்லாத சமூகமாக அது அந்த, மிஞ்சிப் போனால் தலைமுறையோடு அழியும் அபாயம்.

ரோமாபுரிப் பேரரசுக்கு அடுத்து மலைவாழ் மக்களின் சிறு நாடான சபைன் இருந்தது. ரோமானியர்கள் அந்த அரசிடம் தூது போய், சபைனியப் பெண்களை நாங்கள் மணந்து கொள்ள அனுமதி தாருங்கள். நாம் ஒன்று பட்டு வாழ்வோம் என்று கேட்டார்கள். சபைனியர்கள் ரோமானியர்களின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.

திரும்பிப் போன ரோமானியர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். அது –

RayarKaapiKlub Message #8964:

தங்களுக்குப் பெண் கொடுக்க மறுத்த சபைனியர்களை ரோமானியர்கள் எதுவும் நடக்காததுபோல் சகஜமாக ஒரு விருந்துக்கு அழைத்தார்கள். நெப்த்யூன் தெய்வத்துக்கு விழா எடுக்க நடத்திய விருந்து அது.

அப்பாவி சபைனியர்கள் ஒட்டு மொத்தமாக ரோமாபுரிக்குள் திரண்டு வந்து விருந்துக் கேளிக்கைகளில் மூழ்கி இருக்கும்போது, ரோமானிய இளைஞர்கள் விருந்துக்கு வந்த சபைனியக் கன்னியரை வலுக்கட்டாயமாகத் தூக்கிப் போய் விருந்தாக்கிக் கொண்டார்கள்.

போதை தெளிந்த சபைனியர்கள் கையாலாகாதவர்களாகத் திரும்பிப் போனபோது சிறைப்பிடிக்கப் பட்ட அவர்களின் பெண்களைப் பற்றிய துயரமும், நம்ப வைத்து ஏமாற்றிய ரோமானியர்கள் மேல் ஆத்திரமுமாகத் தளர்ந்து வலுவிழந்து நடந்தார்கள்.

அந்தத் தளர்ச்சி மாற, வலு திரும்ப எழ, இழந்ததை மீட்கப் படை நடத்திப் போக அவர்களுக்கு ஒரு வருடம் பிடித்தது.

ஆனால் அந்தக் கால இடைவெளியில் அவர்களின் மகளிர் ரோமானியர்களின் மனைவிகளாக, அவர்களின் அன்புக் குழந்தைகளின் அன்னையராக ஆகி இருந்தார்கள்.

ஒரு பக்கம் கொண்ட கணவர்கள். மற்றப் பக்கம் தந்தையரும், உடன் பிறந்தோரும். இருவரும் மோதிக் கொள்ள வருகிறார்கள். யார் தோற்றாலும் யார் வென்றாலும், இறுதி இழப்பு இந்தப் பெண்களுக்குத் தான்.

போரைத் தடுக்க அந்த சபைனியப் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளோடு போர்க் களத்தில் புகுந்து இரு தரப்பையும் வேண்டி வணங்கி நிற்க, அப்புறமென்ன சுபம் தான்.

கி.மு. 238-ல் ரோமானியர்களுக்கும் அவர்களின் அண்டை நாட்டாரான சபைனியர்களுக்கும் முதலில் சண்டையும் பிறகு சமாதானமுமாகிப் பின் இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து ரோம சாம்ராஜ்யமானது என்ற வரலாற்றின் அடித்தளத்தில் எழுப்பப் பட்ட தொன்மப் புனைவு சபைனிய மகளிர் பற்றிய இந்தக் கதை.

கிறிஸ்துவுக்கு முந்திய மூன்றாம் நூற்றாண்டு சார்ந்த புனைவை, கிறிஸ்துவுக்குப் பிந்திய பதினெட்டாம் நூற்றாண்டுக்கு எடுத்துப் போய், பிரஞ்சு ஓவியர் ழாக் லூயி டேவிட் ஓவியமாக அதை வரைந்தது ஏன்?

நியோகிளாசிசிசத்தின் ஆணிவேர்கள் அங்கு தான் தென்படுகின்றன.

நியோகிளாசிசிச அலை எழுந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு மனித குல வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டம்.

பாரம்பரிய வழி வந்த அரசுரிமையும், மத நிறுவனங்களின் ஆதிக்கமும் குறையத் தொடங்கிய நேரம் அது. பிரஞ்சுப் புரட்சி வெடிக்க வித்துக்கள் தூவப்பட்டு அவை முளைத்தெழுந்து விருட்சமாகிக் கிளை பரப்ப ஆரம்பித்த காலம் அது.

மறுமலர்ச்சிக் காலத்தில் (கி.பி 1400 – 1600) அரசு சார்ந்தும், அதன் பின்னால் பார்க்-ரொகோகோ காலம் என்று குறிக்கப்படும் அடுத்த இருநூறு ஆண்டுகளில் ஆதிக்கம் செலுத்திய மத நிறுவனங்களைச் சார்ந்தும் செயல்பட்ட ஓவியக்கலை, அந்தப் பாதிப்புகளிலிருந்தும் அவை தந்த பாதுகாப்பிலிருந்தும் நீங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்.

சார்பு இல்லாததால் சுயமாகச் சிந்தித்துச் செயல்படச் சுதந்திரமும், அதே நேரத்தில் சொந்தக் காலில் நின்று வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் படைப்பாளிகளுக்கு ஏற்பட்டது.

அந்த சிந்தனை நுண்கலையான ஓவியத்தில் ஏற்படுத்திய பல வகைப் போக்குகளில் ஒன்றுதான் புதுக்கிய மரபியல்.

நிகழ் காலம் அர்த்தமில்லாத வாழ்க்கையின், நிகழ்வுகளின் தொகுதி. கலாரூபமான பதிவுகளாக்க நிகழில் ஏதுமில்லை. எனவே புராதன காலத்துக்குத் திரும்புவோம். வரலாற்றை, தொன்மத்தைத் திரும்ப ஓவியமாகவும், சிற்பமாகவும் வடிப்போம். தியாக மனப்பான்மை, வீரம், செய்யும் கடமையில் ஒருமித்த மன இயக்கம், எளிமை என்று நாம் இழந்த விழுமியங்களை அதன் மூலம் தேடுவோம்.

புதுக்கிய மரபியல் என்ற நியோகிளாசிசிசத்தை மூன்றரை வரிகளுக்கு மிகாமல் விளக்கச் சொன்னால் மேலே கண்டபடி சொல்லலாம்.

இந்தப் பாணி ஓவியம், சிற்பத்தை முதன்மைப்படுத்தியது. சிற்பம் போல் நுட்பமாக, வடிவத்திலும் வரைவிலும் செய்நேர்த்தி துலங்க ஓவியம் அமைய வேண்டும் என்றார்கள் நியோகிளாசிசிஸ்டுகள். மறுமலர்ச்சி ஓவியங்களின் பிரதான அம்சமான பிரகாசமும், ஒளிரும் வண்ணங்களும் முக்கியப்படுத்தப்படாமல், வடிவ ஒருமையே பிரதானமாக்கப்பட்டது.

சுய சிந்தனை அடிப்படையில் எழுந்த நியோகிளாசிசிசம், ஓவியத்தில் அதை வரைந்தவனின் வெளிப்பாட்டை (செல்ஃப் எக்ஸ்ப்ரஷன்) வேண்டாமென்று ஒதுக்கியது விசித்திரமானது. படைப்பில் இடம்பெற்ற கருப்பொருளே அந்த வெளிப்பாட்டை வெளிக் கொண்டு வந்து விடும் என்று வாதிட்டனர் புதுக்கிய மரபியலார்.

‘சபைன் மகளிரின் குறுக்கீடு’ ஓவியத்தை வரைந்த நியோகிளாசிசிஸ்ட் ஓவியர் ழாக் லூயி டேவிட் அதை வரைந்து முடிக்க எடுத்துக் கொண்ட ஐந்து ஆண்டுகளில் வரலாறு துரிதமாக உருண்டு அவரைப் புரட்சியாளனிலிருந்து ராஜ விசுவாசியாக்கியது இதை விட விசித்திரமானது.

RayarKaapiKlub Message #8965:

1748-ல் பிறந்த ழாக் லூயி டேவிட் இத்தாலியில் ஓவியம் பயின்று, நியோகிளாசிசிசத்தின் மூலக் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு பிரான்சு நாட்டுக்குத் திரும்பிய 1780-ல் நாடாண்ட பதினாறாம் லூயி மன்னர் மேலும், அவருடைய மனைவி மேரி அந்த்வானெத் மேலும் பிரஞ்சு மக்கள் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்திருந்தார்கள். அரச குடும்பமும், பிரபுக்களும் எல்லா சலுகைகளும் வளங்களும் பெற்றுச் சுகபோகமாக வாழ்ந்திருக்க, சாமானியர்கள் பசியோடும் பட்டினியோடும் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருந்தார்கள்.

தியாகம், வீரம், எளிமை என்ற நியோகிளாசிசிச சிந்தனைகளோடு பிரான்சு திரும்பிய ழாக் லூயி டேவிட்டை, பிரஞ்சுப் புரட்சியின் தாரக மந்திரமான ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ என்ற எழுச்சி மிகு அறைகூவல் பாதித்ததில் வியப்பெதுவும் இல்லை.

வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான ரொபஸ்பியர் (Maximilien Robespierre) வழிநடத்திய பிரஞ்சுப் புரட்சி 1789-ல் வெடித்தபோது அதில் முக்கியமான பங்கெடுத்துப் பணியாற்றினார் ஓவியரான டேவிட்.

பதினாறாம் லூயி மன்னனையும் அவன் பட்டத்து ராணியையும் தலைவெட்டும் இயந்திரமான கிலட்டினில் தலை துண்டித்துக் கொல்ல வேண்டும் என்று ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்த பிரபல படைப்பாளிகளில் டேவிட்டும் ஒருவர்.

கிலட்டின் பதினாறாம் லூயியையும் மேரி அந்த்வானெத்தையும் மட்டும் தலை துண்டித்து விட்டு ஓயவில்லை. அடுத்த ஐந்தாண்டுகளில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் தலைகளை வாங்கிய அபூர்வ சிந்தாமணியானது அது. அறுபட்ட கடைசித் தலை பிரஞ்சு புரட்சியை முன்நின்று நடத்திய ரொபஸ்பியருடையது.

மற்றவர்களை எல்லாம் முகத்தை நிலம் பார்க்க வைத்துத் தான் கிலட்டின் தகடு பின் கழுத்தில் விழுந்து தலையைக் கொய்யும். ஆனால் ரொபஸ்பியருக்கு விசேஷ மரியாதையாக அவரை வானம் பார்க்க வைத்துச் சிரமறுத்தார்கள்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளாக இந்த தலைவெட்டிக் காலம் நீடித்தது. அப்போது அங்கங்கே செல்வாக்கு பெருகிய அரசியல் தலைவர்கள் நாட்டை ஆள சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கலகம் விளைவித்துக் கொடிருந்தார்கள்.

பிரஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து நடந்த இந்த உள்நாட்டுக் கலக காலத்தில், ழாக் லூயி டேவிட் தலை எந்தத் தம்பிரான் புண்ணியத்தாலோ தப்பிக்க, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பால் பரஸ், ருழே துகாஸ் என்ற இரண்டு போட்டி அரசியல் தலைவர்களோடு கூட்டணி ஏற்படுத்தி ஆட்சியைப் பிடித்த நெப்போலியன் பொனபர்த், அவர்களை ஓரம் கட்டிவிட்டுப் பிரஞ்சு சக்கரவர்த்தியாக முடி சூடிக்கொண்டான் 1799-ல். வீரபாண்டிய கட்டபொம்முவைக் கும்பினியார் கயத்தாறில் தூக்கிட்டுக் கொன்ற வருடம் அது.

நெப்போலியன் பதவி ஏற்ற பிறகு ழாக் லூயி டேவிட் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். அதற்கு முன்கை எடுத்துச் செயல்பட்டவர் அவருடைய மாஜி மனைவி. ராஜ விசுவாசியான அந்தப் பெண்மணி டேவிட்டை விவாகரத்து செய்து விட்டுப் பிரியக் காரணமே டேவிட் புரட்சியாளனாக இருந்ததுதான்.

பிரஞ்சுப் புரட்சிக்கு முன்னும், அது நிகழும் போதும் டேவிட் பல நியோகிளாசிசிச ஓவியங்களை வரைந்து புகழின் உச்சிக்குப் போனார். ‘சாக்ரட்டீஸின் மரணம்’, ‘லெபல்தியரின் மரணம்’, ‘மாரெட்டின் மரணம்’ என்று வரைந்து, மரணப் புனைவு ஓவியரான அவர் ‘சபைன் மகளிர் குறுக்கீடு’ என்ற மரண எதிர்ப்பு ஓவியத்தை வரையத் தொடங்கியது சிறையில் இருந்தபோது. அதாவது மாஜி மனைவியின் பாதிப்பு தொடங்கியபோது. (மனைவியாக இருந்தபோது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் பிரிந்தவள், தோழியாக ஏற்படுத்திய பாதிப்பு அது)

சிறையில் இருந்து வெளியே வந்து ஓவியத்தை முடித்தபோது ஐந்து ஆண்டு கடந்திருந்தது. மாஜி மனைவி மறுபடி மனைவியானாள். ‘சபைன் மகளிரின் குறுக்கீடு’ ஓவியத்தை அவளுக்கு அன்புக் காணிக்கையாக்கிய ழாக் லூயி டேவிட் அவள் சொல் கேட்டுத் தானும் ராஜ விசுவாசியானார்.

அடுத்த ஐந்து வருடங்கள் அவர் நெப்போலியனின் ஆஸ்தான ஓவியராக வரைந்த ஓவியங்கள் – நெப்போலியன், நெப்போலியன், நெப்போலியன் ..

ழாக் லூயி டேவிட்டின் நியோகிளாசிசிசம் நெப்போலியனில் முடிந்த கதை இதுதான்.

என்றாலும், நெப்போலியனைக் கால வெள்ளம் அடித்துப் போனது போல், டேவிட் வரைந்த ‘சபைன் மகளிரின் குறுக்கீடு’ ஓவியத்தை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாரீஸ் நகரத்தில் லொவர் அருங்காட்சியகத்தில் (Musee du Louvre, Paris) காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த அற்புத ஓவியத்தின் பிரதியை கண்டு மகிழ்ந்து கருத்துத் தெரிவிக்க வேண்டும்.

8980 – அனிருத்:

1. ஒரு நிமிடம் மட்டுமே செல்வழிப்பேன் என்பவர்கள்

2. க.நா.சு.வுக்கும், பள்ளியில் உரு போடபட்ட சாமுவேல் ஜான்சனும், புதுக்கிய மரபியலுக்கும் முடிச்சு போட:

3. பள்ளிக் கூடத்தில் நீங்கள் படித்திருந்தால், இவ்வாறுதான் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்:

4. குந்துரத்தர்கள் செல்ல:

5. மெத்த தெரியாதவர்கள், தங்களின் மூளை பரப்பளவை சோதிக்க: (பக்க முடிவில் கொடுத்திருக்கும், விடைகளை பார்க்காமல் ‘சிந்திக்க ஒரு நொடி’க்கு பதில் அளிக்கவும்).

6. மேலும்… மேலும்…

ஆறு வித்தியாசம்

ஒலி-ஓளி ஆறு வித்தியாசம்: உன்னிப்பாக கவனிக்கவும். இடது பக்கத்தில் உள்ள புகைப்டத்துக்கும், வலப்பக்கம் உள்ள படத்துக்கும் மூன்று வித்தியாசங்கள் இருக்கிறது. பிண்ணனியில் வரும் இசையில் கூட மூன்று சிம்பொனிகளைக் காணலாம் என்கிறார்கள்.

எத்தனை நிமிடத்தில் கண்டுபிடித்தீர்கள்? என்ன வித்தியாசங்கள்?

குமுதம் மாதிரி இந்த மல்டிமீடியா புதிரை சொன்னவர்: Muse Log: Not for the weak hearted (I warn u)

மனிதனின் தலையைக் கண்டுபிடியுங்கள்



மருத்துவ ஆராய்ச்சிகளின் படி:

மூன்று விநாடிக்குள் கண்டுபிடித்தால்: உங்களுக்கு வலப்பக்க மூளை சாதாரண மனிதர்களை விட அபாரமாக வளர்ந்திருக்கிறது!

ஒரு நிமிஷத்துக்குள் கண்டுபிடித்தால்: உங்களின் வலப்பக்க மூளை (என்னைப் போல்) சாதாரண மனிதர்களை ஒத்திருக்கிறது.

முன்று நிமிஷம் வரை எடுத்துக் கொண்டால்: வலப்பக்க மூளை ஆமை வேகத்தில் யோசிக்கிறது. புரதம் உட்கொள்ளவும்.

முன்று நிமிஷம் ஆகியும் முடியாவிட்டால்: உங்களின் வலப்பக்க மூளையை டாக்டரிடம் காட்டவும். மூளை இல்லாவிட்டால் என்ன முடிக்கு சிங்கம் போல ஷாம்பூ போட்டுக் குளித்து படியவைக்கலாம் 🙂

மெய்யாலுமே தலை இருக்குங்கோ….



Effects of Shampoo 

Effects of Shampoo Posted by Hello

Find the man’s Head? 

Find the man’s Head? Posted by Hello

Mouse affected by a Virus 

Mouse affected by a Virus Posted by Hello