Monthly Archives: செப்ரெம்பர் 2008

தொலைக்காட்சி நேரம்: அமெரிக்க தேர்தல் விளம்பரங்கள்

ஜான் மெகயினின் புத்தம்புதிய விளம்பரம்: முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் தோன்றுகிறார்:

ஒபாமா ஒரு ட்ரில்லியன் டாலார் செலவழிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார் என்று குற்றஞ்சாட்டும் குடியரசுக் கட்சி விளம்பரம்:

ஜனநாயகக் கட்சியின் விளம்பரம் – ஜான் மகயினுக்கும் சூதாட்ட மையங்களுக்கும் இடையே உள்ள சம்பந்தம்:

(ஆதாரம்: For McCain and Team, a Host of Ties to Gambling – NYTimes.com)

மதிய உணவு – காமிக்ஸ்

நன்றி: Rose Is Rose

இலவசக்கொத்தனாரின் US Election Cookies

தமிழகத்தில் அன்னமிட்டு வாக்கு கேட்பார்கள்; அமெரிக்காவில் இனிப்பு விற்று பணம் பண்ணுகிறார்கள்.

நியு யார்க் நகரத்தின் இருவுள் நிலையத்தில் அமெரிக்க அதிபர்களின் பிஸ்கட்களை விற்பதை புகைப்படம் எடுத்து அனுப்புகிறார் இலவசக்கொத்தனார்.

எடுத்த இடம்: கிராண்ட் சென்ட்ரல் ட்ரெயின் ஸ்டேசன்

ஃப்ளிக்கரிலும் குக்கி கடை பரப்பியிருக்கிறது.

நாய்களும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களும்: Nature இதழின் அரசியல்?

முதலில் இந்தப் புகைப்படத்தைப் பாருங்கள்:

Rat race என்பார்கள். குதிரை பேரம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆமையும் முயலும் போட்டி போடும்.

அதன் தொடர்ச்சியாக இந்த மாத நேச்சர் இதழின் அட்டைப்படம் இது.

முதல் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் பராக் ஒபாமாவும் ஜான் மகயினும். அதே இதழின் பின்புற அட்டை விளம்பரத்தில் கறுப்பு நாயும் தங்க நிறத்திலான நாயும் அலங்கரிக்கின்றன.

அகஸ்மாத்தாக நடந்த ஒற்றுமை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார்கள்.

செய்தி: Going to the dogs: How Nature magazine featured Obama and McCain … with an unfortunate ad on the back | Mail Online

பதிவு: Alterdestiny: Science, Obama and McCain

நேச்சர் இதழின் கவர் ஸ்டோரிக்காக அதிபர் வேட்பாளர்களிடம் அறிவியல் தொடர்பான 18 கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். ஒபாமா கர்மசிரத்தையாக பதில் அனுப்ப, ஜான் மகயின் விடையளிக்க மறுத்துவிட்டார்.

இந்த வார விருந்தினர்: பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த்திடம் ஐந்து கேள்விகள்: (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு)

1. ஒபாமா & மக்கயின் ஆகிய இருவரின் உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) திட்டங்களை ஒப்பிட முடியுமா? அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு தருவதில் எவர் தொலைநோக்கு உடையவர்? ஏன்?

உடல் நலம் என்பது பல கூறுகளை கொண்டது.

  • காப்பீடு மட்டும் அல்லாமல்,
  • மருத்துவர்களின் ஆரம்பகால அறிவுரைகள் (early intervention),
  • மருத்துவரை சென்று பார்க்க வாகன வசதி (transportation),
  • புரிகிற மொழியில் மருத்துவர்கள் சொல்வதை, மருந்துகளை எடுத்துக்கொள்வதை கிரகிக்க கூடிய எளிமை (health literacy)
  • மருத்துவர்கள் அறையில் காத்திருக்க கூடிய நேர அளவும்(waiting time),
  • மருத்துவரை சந்திக்க கிடைக்கும் முறை (appointment)

இவையாவுமே இன்றைய அமெரிக்காவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரங்களை கொண்ட மக்களிடம் அவர்களுக்கு தோதான முறையில் (comfort zone) மருத்துவர்கள் பழகக்கூடிய முறை (cultural competency) ஆகியவற்றில் இன்னமும் கவனம் தேவை. இவையாவும் சேர்ந்த access to care பற்றிய பற்றாக்குறையை இரு தலைவர்களின் திட்டமும் நேர்த்தியாக அணுகவில்லை.

குழந்தைகளுக்காக காப்பீடில் பிரச்சினை அதிகம் இல்லை. பெற்றோர்களின் காப்பிடு அல்லது அப்படி பெற்றோர்கள் ஏழ்மையில் இருந்தால் மெடிகெய்ட் என்று பரவாயில்லாத உடல்நலக்காப்பீடு இருக்கிறது. அதுவும் சென்ற ஆண்டு நிதிக்குறைப்புக்காளானது.

எத்தனை பேர் ஒருவரின் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வறுமைக்கோட்டின் கீழ் வருவோருக்கு அரசு பல இலவச மருத்துவ உதவிகள், FQHC போன்றவை நடத்துகிறது. அதிகம் பாதிக்கபடுபவர்கள், காப்பீடு இல்லத மக்களின் குறிப்பிடக்கூடிய சதவிகிதம் தொழில்துறையில் consultants, சிறிய வியாபாரிகள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே.

18 வயதான பிறகு கல்லூரி செல்லும் வயதில் உள்ளவர்கள் 19 முதல் 24 வரை இருப்பவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரியில் படித்தால் அதுவும் முழுநேர மாணவர்களாக இருந்தால் மட்டுமே குறைந்த கூடுதல் கட்டணத்தில் (additional amount) பெற்றோரின் காப்பீடில் இருக்க முடியும். கல்லூரிக்கு செல்லமாட்டாமல் வேலைக்கு செல்பவர்கள் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் எப்படி காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்?

இந்த இளைஞர்கள் திடீரென அரசு ஆவணங்களில் இருந்து காணாமல் போய், மீண்டும் தங்களுக்கான குடும்பம் அமைத்துக்கொள்ளும் போது வருகிறார்கள். இப்போது நிறைய மாணவர்கள் நிறைய உடல்நலக் கோளாறுகள், மன அழுத்தம் ஆகியவற்றால் துன்புறுகிறார்கள். குழந்தைப்பருவம் முதல் மருத்துவமனைக்கு செல்லும் விவரங்கள் Medical information Bureau வில் சேர்க்கப்படுகின்றன.

ஆயுள் காப்பீட்டுக்கு ஒருவர் விண்னப்பிக்கும் போது இங்கே இருந்து அவரது உடல் நலம் பற்றிய அறிக்கை பெறப்படுகிறது. அதேபோல காப்பீடும் விவரங்களை பார்த்தே காப்பீட்டு விலையை (கட்டணத்தை) நிர்ணயிக்கும. இந்த விலையை காப்பீடு நிறுவனங்கள் கட்டுருத்துமே தவிர அரசாங்கம் நிர்ணயிக்க முடியாது. அப்படி செய்தால் ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு போன்ற எல்லாவற்றையும் அரசு கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் வரும்.

இவர்களுக்கு மெக்கெயின் சொல்லும் திட்டததாலோ ஓபாமா சொல்லும் திட்டத்தாலோ குறைந்த co-payயுடன் கூடிய காப்பீடு கிடைக்காது என்பதே நடைமுறை.அதிலும் இப்போது நியுஜெர்சி போன்ற மாநிலங்களில் பல மருத்துவ மனைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் மிஷல் திட்டம் என்ற ஒன்றை சட்டமாக்க முயற்சி நடந்தது. மிஷல் என்பவர் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டவர். முழுநேர மாணவியாக தொடரமுடியாமல் காப்பீட்டை இழந்ததால், சரியான சிக்கிசைக்கு வழியில்லாமல் இறந்து போனார். அதற்காக புற்றுநோய் அல்லது தீவிரமான நோய் உள்ளவர்கள் முழுநேர மாணவர்களாக இல்லாமலே மெகெயின் சொல்வது போல மக்கள் தங்களுக்கு தேவையான காப்பீடு தாங்களே வாங்கிக்கொள்லலாம் அரசு வரி சலுகை அளிக்கும் என்கிறார். சலுகை தேவையில்லை, நாங்களே வாங்கிக்கொள்கொறோம் என்றாலும் சில புற்றுநோயாளிகளுக்கு காப்பீடுதர இப்போதைக்கு யாரும் இல்லை.

தீவிரமான நோய் உள்ளவர்கள் தங்கள் செலவிலேயே காப்பீடு வைத்திருந்தால் பணிபோனாலும் அது தொடரக்கூடிய வாய்ப்பு ஊண்டு. ஆனால் சலுகைவிட அதிகமாக இருக்கும் கட்டணத்தை எப்படிக்கட்ட முடியும்? இது பற்றியும் ஓபாமோவோ மெக்கெயினோ strategy வைத்திருக்கவில்லை.

நான் ஒரு காப்பீடு வைத்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், எனக்கு புற்று நோய் வருகிறது, பணியைவிட்டு போதிய performance இல்லாமல் நீக்கப்படுகிறேன்.பணியில் இருந்து நோயைத்தான் காரணம் காட்டி நீக்க முடியாதே தவிர, பணிக்கு அதிகம் வராதது, என் பங்களிப்பை காரணம் காட்டி நீக்க முடியும். என்னுடைய காப்பீடுக்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாது, நிறுவனம் காப்பீடு தந்தாலும் அதுவும் நின்று போகும், என் சிகிச்சையை எப்படி தொடர முடியும்?

இது ஒரு hypothetical situation இல்லை. காரனுக்கு நடந்தது, வரிஜீனியாவில். இது போன்ற பிரச்சினைகளை நாங்கள் நாள் தோறும் பார்க்கிறோம். இரண்டு தலைவைர்களும் பொதுப்படையாக சில கோரிக்கைகளை வைத்திருக்கிரார்களே தவிர இது போன்ற மசோதாக்கள் தோல்வியைடய் செய்பவர்களும் இவர்கள்தான்.

இலவச மருத்துவ சிகிச்சை என்றாலும் கூட அதற்கு எப்படி வருவார்கள்? பதவி ஏற்ற ஆரம்பத்தில் கிளிண்டன் public transportation திட்டம் ஒன்ரை கொண்டுவர முயன்றபோது பல கார் நிறுவனங்கள் அவற்றை எதிர்க்க, அதுவும் கிடப்பில் போனது. உடல்நல காப்பீடு தருவது இருக்கட்டும், உடல் நலம் இல்லாதவர்கள் கார் ஓட்ட முடியாதவர்கள் எப்படி மருத்துவ சிக்கிச்சைக்கு வருவார்கள் என்பது பற்றி ஏதேனும் ஒரு கருத்து? நான் படித்ததாக நினைவில் இல்லை.

நிறைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த சில வருடங்களில் குறைக்கப்பட்டது (cancer early detection, Prevention oriented child health program, victim assistance program, stop violence to women,early intervention for special child, sexual assault prevention program). அதனால் பாதிக்கப்பட்ட காப்பீடு இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சரியான விசா இல்லாமல் இங்கே வேலைக்கு அமர்த்தப்படும் மக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மெடிக்கெய்ட் தரும் அரசு, பெற்றோருக்காக எந்த உதவியும் செய்வதில்லை. அவர்களுக்கு ஒரு பரவக்கூடிய நோய் வந்தால், அது ஒரு சமுதாயத்தை பாதிக்கும் என்கிறபோது அதற்கான நடவடிக்கைகள், தீவிர சிகிச்சை செலவு எல்லாம் யார் கட்டுவது என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் இல்லை.

Community health பற்றிய திட்டமும் சிறப்பாக அல்லது தெளிவாக இல்லை.மனநல சிகிச்சைக்கும் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் இப்போது செனட்டுக்கு போகும் மசோதாக்கள் (mental health for substance abuse, sexual assault and to decrese health disparity) தோல்வியைத்தழுவி இருக்கின்றன.

மருத்துவரை சந்திக்க சென்றால் கிட்டதட்ட குறைந்தது ஒருமணியாவது காத்திருக்க நேரிடுகிரது, அதிலும் சிறப்பு பயிற்சியாளர்களை காணச்சென்றால் இன்னமும் அதிக காலம் ஆகிறது. இதனால் மருத்துவர்களும் interventionஇல் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை.

அறிகுறிகள் அவ்வப்போதே கவனிக்கப்படாமல் நோய் முற்றியநிலையில் கவனிக்கப்படுவதும் ஒரு குறையாக இருக்கிறது. இதற்கும் காப்பீடு ஒருவகையில் காரணம். நிறைய காப்பீடுகள் இதை ஆதரிப்பதில்லை என்பது பரவலாக மருத்துவர்கள் சொல்லும் காரணம்.

இது குறித்தும் இருதலைவர்களும் கருத்து ஏதும் சொன்னதாக தெரியவில்லை.இருவருமே பொதுவாக கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்களே தவிர விளக்கமாக ஏதும் சொல்லவில்லை.

Any insurance become affordable if you increase co pay, hospital charge etc. so details are more important even to address issues like prevention. But the truth is one insurance covered costs for a surgery but did not approve anesthetists bill as it required a separate precertification!!

2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி

தொடரும்…

FAQ: முதல் விவாதம்: அமெரிக்க அதிபர் தேர்தல் – ஒபாமா x மெகயின்

1. யார் ஜெயித்தார்கள்?

குடியரசுக் கட்சியின் ஜான் மகயின்; ஆனால், பராக் ஒபாமாவும் நன்றாகவே சமாளித்தார்.

2. யார் ஜெயித்திருக்க வேண்டும்?

கால் நூற்றாண்டு காலமாக தலைநகரில் சீட்டைத் தேய்க்கும் பழுத்த அரசியல்வாதி ஜான் மகயின் இந்த விவாதத்தில் கலக்கிப் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

3. யார் சரியாக செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆப்பாகி இருக்கும்?

கட்டிக்காக்கப்படும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின்; ‘நாட்டுக்கு முதலிடம்’ என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்திற்கு முதலிடம் கொடுத்த தடாலடி ஸ்டண்ட் — பணால் ஆன மெகயின் எங்காவது பிசகி இருந்தால் ‘பட்ட காலே படும்’ பழமொழியாகி இருக்கும்.

4. யாருக்காவது வாய்தவறி பிசகியதா?

ஒபாமா. ஜான் என்றழைப்பதற்கு பதில் டாம் என்று விளித்தார்.

5. ஏன் பிசகியது?

ஒபாமாவிற்கு எருமைமாட்டுத் தோல் கிடையாது.‘உனக்கு அறிவு போதாது; வயசு பத்தாது; அயல்நாட்டு அனுபவம் கிடையாது!’ என்று வெறுமனே வெறுப்பேற்றிக் கொண்டேயிருந்தால்…

ஜான் மகயினுக்கும் சுருக்கென்று கோபம் வருவதுதான் என்றாலும் அது ஓராண்டுக்கு முந்தைய ஜான் மகயின். தற்போதைய மெகயின் புத்தரின் மறு அவதாரமாக சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார். அதாவது தன்னைக் குறித்து ‘நீங்க இரான் மீது போர்; வட கொரியாவுடன் சண்டை’ போன்ற நேர்மையான குற்றச்சாட்டு வைக்கும்போது கவனிக்காமல் புறந்தள்ளுவதில் புத்தமதத்தைத் தழுவிய அசோகராக இருந்தார்.

6. அமெரிக்கப் பொருளாதாரம் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் விவாதத்திற்கு ஏது நேரம்?

பராக் ஒபாமா இதற்கான பதிலைக் கொடுத்தார்: “நம் நாட்டின் வருங்காலத்தை தீர்மானிக்க இப்போது பேசாமல் வேறு எப்போது பேசுவோம்!”

7. குடியரசுக் கட்சியின் ஜான் மெகெயின் நடுநிலையானவர் என்பதை நிலைநிறுத்தினாரா?

சில பல தடவை வெளிப்படையாக தம்பட்டம் அடித்தார். விவாதத்தின் துவக்கத்திலேயே ஜனநாயகக் கட்சியின் டெட் கென்னடிக்கு உடம்பு சரியில்லை என்னும் துயரமான நிலையில்தான் இந்த நிகழ்ச்சியைத் துவக்குகிறோம்’ என்று ‘எல்லாருக்கும் நண்ப’ராக நிலைநாட்டினார்.

8. புல்லட்பாயிண்ட் போட்டு பேசியது யாரு?

பராக் ஒபாமா. நிதிநிலையை முன்னேற்ற நாலு வழி இருக்கு என்றார்; அதே மாதிரி ஆப்கானிஸ்தானில் அடுத்த கட்டத்திற்கு நான்கு புள்ளித்திட்டம் கோடிட்டார்

  • மேலும் படை விஸ்தரிப்பு
  • ஆப்கானிஸ்தான் அதிபரை கொஞ்சம் நமக்காகவும் உழைக்க சொல்வது
  • போதை மருந்து விளைச்சலைக் கட்டுப்படுத்தி நீக்குவது
  • பாகிஸ்தான் உறவு

9. வாய்ப்பந்தல் போடாமல் அதே சமயம் நடக்கக் கூடியதை நம்பற மாதிரி வாதாடியவர் யார்?

பராக் ஒபாமா: 9/11 மாதிரி மீண்டும் ஒரு தாக்குதல் நடக்காமல் இருக்க இரு வழிகளை முன்வைத்தார்

  • அணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல்
  • அமெரிக்கா இராக்கை மட்டும் எண்ணெய்க்காக முற்றுகையிட்டிருக்கும் ஆறாண்டுகளில் அறுபது நாடுகளில் விரிந்திருக்கும் அல்-க்வெய்தா மீது கண் வைத்தல்

10. கேள்வியை தனக்கேற்ற மாதிரி திருகுவதில் ஒபாமா வல்லவராயிற்றே! இன்றும் செய்தாரா?

சில இடங்களில் முடிந்தது. ‘700 பில்லியன் அள்ளி விடறாங்களே… ஒத்துக்கறியா/இல்லியா?’ என்பதற்கு அப்படியே திசை மாற்றி அனுப்பினார்.

11. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவுவதில் எவருக்கு முதலிடம்?

ஒபாமா 932 மில்லியன் ‘சிறப்பு செலவு’ (earmarks) செய்ததற்கான ஒப்புதல் வழங்கியதில் நழுவினார் என்றால், மெகயினோ பெருஞ்செல்வந்தர்களுக்கு 300 பில்லியன் (கவனிக்க மில்லியன் அல்ல… ஆயிரம் மில்லியன் = பில்லியன்) வரிச்சலுகை தரும் திட்டத்தில் ஆரம்பித்து இராக்கில் அணுகுண்டு இருக்காம் என்று பறைசாற்றியது வரை வழுக்கி முதலிடத்தைத் தட்டிச் செல்கிறார்.

12. எனக்கு வருசத்திற்கு அமெரிக்க வெள்ளி 700,000 (மாசத்திற்கு ஐம்பத்தியெட்டாயிரத்து டாலர் சில்லறைதான்) கிடைக்கிறது. எவர் அதிக வருமான வரி விலக்கு தருவார்?

நீங்க ஆதரிக்க வேண்டியது ஜான் மகயின்.

13. பார்வையாளருக்கு புரிகிற மாதிரி, சாமானியனின் வாக்கைப் பெறுகிற மாதிரி உதாரணம் சொல்லி, குட்டிக் கதை விவரித்து அசத்தியது யாரு?

ஜான் மெகெயின்: “ஒரு வருஷம் முன்னாடி நான் நியூ ஹாம்ஷைர் போனேனா… அங்கே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்களோட பையனுக்கு என்னாச்சு தெரியுமா? அவநுக்கு 22 வயசு. அவன் இராக் போனானா… அப்ப நம்ம எதிரிங்க அவனைக் கொன்னுட்டாங்க. அவனுக்கு நீதி கேட்டு அவனோட அம்மா என்னோட கூட்டத்துக்கு வந்தாங்க. அப்ப என்னப் பார்த்து கேட்டாங்க. எனக்கு நா தழுதழுதடுச்சு. இன்னும் அந்த சின்னப்பயல் நெனப்பா கையில முடிச்சுப் பொட்டு வச்சிருக்கேன் தெரியுமா!”

ஒபாமாவும் இதைக் கேட்டு பயந்து போய் தன்னுடைய கையில் இருக்கும் கயிறைத் தூக்கி காட்டாத குறைதான்.

14. அதிரடியாக உத்தரவு போடும் வீரதீரமானவர் என்று நிரூபித்தவர் யார்?

மீண்டும் மகயின்: “இதே மாதிரி அமெரிக்கா சீரழிஞ்சு போய், பொருளாதாரம் நாசமாகப் போனால். எந்த செலவுக்கும் நயாபைசா தரமாட்டேனாக்கும்” என்று 700 பில்லியன் நிதியுதவி எங்கே போய் நிற்கும் என்பதற்கு பதில் போட்டார்.

15. ஹில்லரி க்ளின்டனை யாருக்காவது நினைவிருந்ததா?

சாரா பேலினைத் துணைக்கழைத்து மகளிரணியை உசுப்பி விட்டிருக்கும் மகயின், ‘நான் ஹில்லரியுடன் ஒத்துழைத்து அந்த சட்டத்தை இயற்றினேனாக்கும்’ என்று ஒபாமாவை உசுப்பேற்றினார்.

16. ஏதாவது ப்ராண்டிங் செய்யப்பட்டதா?

தாம்தூம்னு கண்டபடி கண்ணு மண்ணு தெரியாமல் செலவு செய்பவர் என்னும் பிம்பம் ஒபாமாவுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

17. விவாதத்திற்குள்ளாகவே முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது வாய் விட்டார்களா?

ஜான் மெகயின்: இராணுவச் செலவுகள்தான் அமெரிக்க பொக்கீட்டீன் மிகப்பெரிய செலவு என்பதால் அதைக் குறைப்பேன் என்று சொன்ன கையோடு, இராணுவ வீரர்களின் நலத்திட்டங்களை அதிகரிப்பேன் என்றும் இராக் போரை இன்னும் ஓராயிரம் காலம் தொடர்வேன் என்றும் சொல்லி குழப்பினார்.

18. பன்ச் டயலாக் ப்ளீஸ்!

‘நீ போட்டது தப்புக்கணக்கு’ என்று பராக் பட்டியலிட்டார்.

  • 2003இல் இராக்கை நொடியில் தூசாக்கிடலாம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
  • இராக்கில் அணுகுண்டு இருக்கு என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
  • சதாமின் இரும்புப்பிடியில் இருந்து சுதந்திரதேவியாகக் காட்சியளிப்போம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
  • ஷியாக்களுக்கும் சன்னிக்களுக்கும் எந்தக் காலத்திலும் சண்டை கிடையாது என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!

19. மாமியார் இடித்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம். உதாரணம் கொடுங்க:

மகயின்: நான் இரான் மீது போர்முழக்கம் கொட்டினால் அதற்கு பெயர் தீயசக்திகளைக் கட்டுப்படுத்தல்… இஸ்ரேலுக்கு நேசக்கரம் நீட்டல். அதுவே ஒபாமாவிடம் இருந்து தேவைப்பட்டால் பாகிஸ்தானைத் தாக்குவோம் என்று மிரட்ட வேண்டும் என்று அச்சுறுத்த விரும்பினாலும் முணுக்கென்று கோபம் பொத்துக் கொண்டு வருபவர்.

20. மறுமொழி மூடிய வலைப்பதிவர்களை அறிவோம்; மறுமொழிக்கு மறுமொழியாதவர்களையும் அறிவோம்; மறுமொழியை மட்டுறுத்தி மறைப்பவர்களையும் அறிவோம்; பதிவே இட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையும் அறிவோம். அந்த மாதிரி அமெரிக்க அதிபர் தேர்தலில் எவராவது?

ஜான் மகயின் இருக்கிறாரே…

21. கஜேந்திராவைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்வது நம்ம ஊரு பேஷன். அமெரிக்காவில்?

ஜான் மெகெயின்: ‘நான் ருசிய அதிபர் ப்யூடின் கண்ணைப் பார்த்திருக்கேன். அப்ப அதில் மூணு எழுத்து எனக்குத் தெரிஞ்சுது. அது என்ன தெரியுமா? கே ஜி. பி’

22. நாயடி, பேயடி உண்டா?

அதிசயமாக இல்லை. ஓரளவு கண்ணியமாக, வித்தியாசங்களை வாய்ஜாலங்களாக ஆக்காமல் இருவரும் சொற்சிலம்பம் ஆடினார்கள்.

23. என்னோட பார்வையில் நெஞ்சைக் கவர்ந்தவர் யார்?

நிச்சயமாய் பராக் ஒபாமா.

இன்றைய விவாதம் பழந்தின்று கொட்டை போட்டு அது கூட முளைத்த அனுபவம் நிறைந்தவருக்கும் x குறைந்த தகவல்களை வைத்து நிறைவான நேர்த்தியான முடிவுகளை எடுக்கும் சாமர்த்தியசாலிக்கும் இடையேயானது.

அனுபவசாலி இராக் போனால் கணநேரத்தில் பொடிப்பொடியாக்கலாம் என்பது முதல் பல்வேறு முடிவுகளில் மகயின் சறுக்கியுள்ளார். திறந்த மனதுடன் ‘எதிராளியுடன் ஒத்துப் போகிறேன்’ என்று வெளிப்படையாக வெகுளியாக ஒத்துக் கொள்ளும் பராக் ஒபாமா எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நம்பிக்கை அளிக்கிறார்.

(பிற்சேர்க்கை)
24. நீ சொல்வது இருக்கட்டும். மற்ற தமிழ்ப்பதிவுகளில் என்ன சொல்கிறார்கள்?

பனிமலர்: “அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை”

சன்னாசி: கரிசல் » Lockjaw

திருமணத்திற்கப்பால் உறவும் தனிமனித ஒழுக்கமும்

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?

ஆம்.

பொதுவில் தனிநபர் வாழ்க்கையையும் அரசியலையும் இணைப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் தனிநபர் நேர்மையையும் நம்பத்தன்மையையும் மாத்திரமே முன்னிருத்தி அரசியல் நடத்திய ஒருவர் நடைமுறையில் அதற்கு எதிராக நடந்து கொண்டால் அவரது நம்பகத் தன்மை முற்றாக இழந்துபோகிறது.

அந்த வகையில் ஜான் எட்வர்ட் மீதான என் மதிப்பு பெருமளவிற்குச் சரிந்திருக்கிறது. ஆனால் இதற்காக அவரை முற்றாக குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நான் கூச்சலிடமாட்டேன்.

அந்தத் தவறில் சிக்கியிருக்காவிட்டால் அமெரிக்காவின் உன்னதமான அதிபர்களில் ஒருவராக கிளிண்டன் நிச்சயமாக கோபுரமேறியிருப்பார். தவறுக்கு வெளியேயாக அவருடைய சாதனைகள் அபாரமானவை. எனவேதான் ஜனநாயகக் கட்சியினர் அவருக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். தவறிலிருந்து மீண்டெழும் உரிமையை கிளிண்டன் வேண்டிப் பெற்றார்; அதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவேதான் அது அவருடைய ஒட்டு மொத்த பிம்பத்தில் விழுந்த ஒரு புள்ளியாக மாத்திரமே நின்று போயிருக்கிறது.

மீண்டெழும் வாய்ப்பைத் தேடிப்பெறுவதிலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்த்தெழுந்து வருவதிலும் ஜான் எட்வர்ட்ஸ் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். தவறை நேராக எதிர்கொண்டு அதற்கான சுமையைச் சுமந்துகொண்டு மேலெழுந்து வருவது முற்றாக அவர் கையில்தான் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவில் எப்படியோ, நான் அவருக்கு அந்த உரிமையைக் கட்டாயம் மறுக்க மாட்டேன்.

வெங்கட் மற்றும் மற்றவர்களின் பார்வைகள், கேள்வி-பதில்கள்

பாகிஸ்தான் பிரதம மந்திரியின் ஜொள்ளு – சாரா பேலின்

ஜர்தாரி: “உங்களை நேரில் பார்க்கும்போது … பார்ப்பதைவிட அமர்க்களமாக இருக்கிறீர்கள்”

பேலின்: “உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி!”

ஜர்தாரி: “ஏன் ஒட்டுமொத்த அமெரிக்காவும் உங்க பின்னாடி மயங்கிக் கெடக்குதுன்னு இப்பத்தான் எனக்கு புரியுது”

[புகைப்படம் எடுப்பதற்காக பேலினையும் ஜர்தாரியையும் கைகுலுக்க பணிக்கிறார் பாகிஸ்தான் பிரதம மந்திரியின் உதவியாளர்]

பேலின்: “நான் மீண்டும் படத்திற்காக நிற்கணும்”

ஜர்தாரி: “அவர்கள் கேட்டுக்கொண்டால், உங்களைக் கட்டிக் கொள்வேன்”

நன்றி: Pakistan’s president gushes over Sarah Palin | Top of the Ticket | Los Angeles Times

மேலும் விவரங்களுக்கு: CNN Political Ticker: All politics, all the time Blog Archive – Pakistan’s president tells Palin she is ‘gorgeous’ « – Blogs from CNN.com: “On entering a room filled with several Pakistani officials this afternoon, Palin was immediately greeted by Sherry Rehman, the country’s Information Minister.

‘And how does one keep looking that good when one is that busy?,’

Rehman asked, drawing friendly laughter from the room when she complimented Palin.”

மெகயின்: பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு

பொருளாதாரத்தை பெரிதும் பொருட்படுத்துவதால் தன்னுடைய அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடைக்கால ஓய்வு அளிக்க விரும்புவதாக ஜான் மெக்கெயின் தெரிவித்திருக்கிறார்.

இதனால் இந்த வெள்ளி (செப். 26) அன்று நடக்கவிருந்த ஒபாமாவுடன் ஆன வாக்குவாதத்தையும் ஒத்தி வைக்க பராக்கின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளார்.

தொடர்புள்ள செய்திகள்:

1. BBC NEWS | Americas | US candidates wary over bail-out

2. McCain Seeks to Delay Debate – NYTimes.com

3. McCain suspends campaign for ‘historic’ crisis – CNN.com

அமெரிக்கா எங்கு பின்தங்கி இருக்கிறது? – வெங்கட்

4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?

அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.

அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.

யுத்தங்கள்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும் ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).

போர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை. எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும். ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.

புவி சூடேற்றம்

எண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது. அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

மாசுகட்டுப்பாடுகளுக்குத் தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும். தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.

வளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.

பொருளாதாரம்

வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம். ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற ‘மொதலாளிகள்’ நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது. சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.

இடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும். உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.

அப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம். குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.

நெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.

அறிவியல்

ஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி), கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம். தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை. வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அயல்நாட்டுக் கொள்கை

இராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.

சீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.

வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.

பாரம்பரியம் (பழமைவாதம்)

சிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான். தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது. கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).

மதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.

நானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).

அறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?

நாளையுடன் முடியும்