Monthly Archives: நவம்பர் 2006

Tamil Blogs – Comaprison with the English World

தமிழ் வலைப்பூத் திரட்டிகளின் அடுத்த நிலை குறித்த மா சிவகுமாரின் கட்டுரைகள் (வலைப்பூத் திரட்டிகள் | 2 | 3 | 4 | 5 ) வாசிக்கக் கிடைத்தது. தமிழ்மணம் விவாதக்களம் (படிக்க: தமிழ்மணம் அறிவிப்புகள்) வரப்போவதும் அறிய முடிகிறது. சில எண்ணங்கள்…

 1. பத்திரிகையாளர்களையும் பதிவாளர்களையும் ஒன்று கோர்த்து, லாபமும் ஈட்டும் முயற்சிகளில் ஈடுபட்டால், வலைப்பதிவுகளை வெகுஜன வாசிப்பாளர்கள் பக்கம் நோக்க வைக்கலாம். (ஆங்கில உலகில் இருந்து எடுத்துக்காட்டு: NewAssignment.Net | an experiment in open-source reporting)

 2. வலை மேய்வதில் ஆய பலனாக, தன்னுடைய பிரச்சினைக்கு விடையாக, கேள்விக்கு பதிலாக – இணையமும் பதிவும் அமையும் என்பது, கூகிள் பயனாளர்களின் கருத்து. இதற்குத் தீனியாக விக்கி பசங்க போன்றோர் இருந்தாலும் Answers.com அல்லது Yahoo! Answers அளவுக்கு தமிழில் மேட்டர் காட்ட வேண்டும். (காட்டாக: VideoJug – Life Explained. On Film. | eHow.com – How To Do (Just About) Everything!)

 3. தீவிர வலதுசாரி கருத்தாக்கம் உடையவர் ஏதாவது எழுதினால், அந்தப் பதிவுடன் மாறுபடுபவர், சாய்ஸில் படிக்காமல், மேற்சென்று விடலாம். அல்லது, எதிர் கருத்தை காட்டமாக எழுதலாம். இந்த விவாதத்தினால், எதிரெதிர் பதிவுகளில் ஆதரவாளர்கள் அப்படியே நிலையாக நிற்பது அல்லது கொண்ட கொள்கை நம்பிக்கையில் இருந்து இன்ச் கூட நகராமல் மல்லுக்கட்டுவது போன்றவை நிகழ்கிறது.

  ஆங்கிலப் பதிவுலகத்திலும் கருத்துப் பற்றாளர்களை மாற்ற முடியாத நிலை நீடிப்பதாக சமீபத்திய வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரை தீட்டியது. இதற்குத் தீர்வாக எதையும் அந்த அலசல் முன்வைக்கவில்லை.

 4. சன் டிவி நெடுந்தொடருக்கு அடிமையானவர் உண்டு. வலைப்பதிவு வலையில் மாட்டிக் கொண்டவர் உண்டு. சீரியலை ரசிக்காதவர்கள் போல் வலைப்பதிவை விரும்பாதவரை (அல்லது பொருட்படுத்தாதவரை) தூண்டில் போட்டு இழுக்க வேண்டும் (அதாவது இன்றியமையாததாக கருதவைக்க வேண்டும்). (விக்கி-க்கு அடிமையாயிட்டிங்களா? Wikipedia:Are You a Wikipediholic Test)

 5. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமல், தமிழ் சினிமாவும், சிஃபியில் அன்றாட கிசுகிசுவும் படிப்பவர்கள் எக்கச்சக்கம். இவர்களுக்கு தமிழ் பாட்காஸ்ட் பயனுள்ளது. பதிவர்கள், வலையொலிபரப்பில் ஈடுபட வேண்டும். ஒலிபரப்பில் இடம்பெறும் தமிழ் மற்றும் ஆங்கிலச் சொற்களை – கூடிய சீக்கிரமே, கூகிள் மூலம் தேடும் வசதியைக் கொடுக்க வேண்டும்.

 6. சிடிசன் ஜர்னலிசம் என்பது வலைப்பதிவின் தாத்பர்யம். கோவைப் பக்கமாக வீட்டை வைத்திருக்கும் பதிவர் மாலைமலரில் ‘மேட்டுப்பாளையம் நகரசபையில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரித்த கவுன்சிலர்‘ என்னும் செய்தியைப் பார்க்கிறார்.

  நேரமும், வாரயிறுதியும் கிடைக்கும்போது, அந்தக் குப்பையை படம் பிடித்து, தி ஹிந்து, தினமலர், டெக்கான் க்ரானிகிள் தாளிகைகளுக்கு அனுப்பலாம். வலைப்பதிவில் இடலாம். குறிப்பிட்ட ஆணையருக்கு தபால் மற்றும் மின்னஞ்சல் இடலாம். தொடர்ச்சியாக சேலம் என்றால் இந்த அணி, கிருஷ்ணகிரி என்றால் இன்னொரு க்ரூப் என்று MSM-ஐ மிரட்டி, மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லலாம்.

 7. நீண்ட நெடுங்காலம் முன்பு நான் வலையில் வயதுக்கு வருவதற்கு முன்பே திண்ணை விவாதக் களம் மூடுவிழா கண்டிருந்தாலும், அப்பொழுது நிகழ்ந்த பிரச்சினைகள் இன்றும் பல்கிப் பெருகியே வருகிறது. (படிக்க: நான்காவது கொலை முயற்சி :: திண்ணைக்குழு | விவாதங்களை முறைப்படுத்தல் குறித்து | திண்ணை என்ன சொல்கிறது?)

  இத்தகைய ஆழ் காரண காரியங்கள் கற்பிக்கும் சூழலில் கருத்து பரிமாற்றத் தளம் பரிமளிக்குமா, பரிகசிப்புக்குள்ளாகுமா என்பதை ஆராய்ந்து, அறிதல்களைப் பகிரலாம். (சில வலையகங்கள்: TamilnaduTalk.com | The Forum Hub | Tamil Movies Chat | sulekha groups | முத்தமிழ்மன்றம் | தமிழ்மன்றம்.காம்)

 8. வலைப்பதிவின் பார்வையாளர்கள் மூலம் பொதுசேவைக்கான நிதி திரட்டலையும் தொண்டு அமைப்புகளுக்குப் பணியாற்றுவதையும் கடமையாக மாற்றலாம். தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள், நிதி திரட்டலை match செய்யும் கொள்கை வைத்திருந்தால், நண்பர்கள் மூலம் பெறும் கொடையை இரட்டிப்பாக்கலாம்.

  அறிவொளி, கண் பார்வையற்றவர்களுக்கு படிப்போர்கள் (Scribe for the Visibility impaired – Srivatsan Aravamudhan) போன்ற இயக்கங்களில் இருப்போர்கள், வாசகர்களையும் உள்ளிழுக்கலாம்.


| |

Govt Holidays – ADMK Heart Attack – Brahmaputra Dam by China

பேசும் செய்தி – 7 (நன்றி: திண்ணை)

குறிப்பு: இந்தப் பதிவில் இடம்பெறும் படங்களுக்கும், பதிவுக்கும் சம்பந்தமில்லை. படம் நன்றாக இருந்தது. தனியாக படத்தை ஓட்ட மனம் இஷ்டப்படாததால், சொருகி விட்டிருக்கிறேன் : )
மாயா… மாயா… எல்லாம் மாயா!

1. தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: கடந்த ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் அரசு அலுவலர்களுக்கான விடுமுறை நாட்களை ஆண்டு ஒன்றுக்கு 22 நாட்களில் இருந்து 17 நாட்களாகக் குறைக்கப்பட்டது. பல்வேறு சங்கங்களின் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையேற்று, கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்தவை மீண்டும் விடுமுறை நாளாக கருதப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.

‘சந்தோசமான சேதிதானே’ என்று துள்ளலுடன் தலைமைச் செயலக கேன்டீனில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஜமாவிடம் கொக்கி போட்டேன்.

“என்னய்யா சந்தோஷம்? வீட்டில் இருந்தா சாலமன் பாப்பையாவைக் கூட பார்க்க விட மாட்டேங்கிறாங்க. விஜிபி கோல்டன் பீச், ஸ்பென்சர் ஷாப்பிங் என்று செலவு வேறு எகிறுது. நிம்மதியா வேலைக்கு வந்து ரெண்டு ரவுண்டு ரம்மி, ஏஸி போட்ட ரூமில் Grand Theft Auto ஆட்டம் என்றிருந்தது… ‘யார் கண்ணு பட்டுச்சோ’, பர்சில் கை வச்சிட்டாங்க…”

விட்ட இடத்தில் ஆரம்பித்தார் இன்னொருவர். “ஒரு நாளைக்குக் எட்டு மணி நேரம் அலுவலில் இருக்கிறோம். ஒரு மணி நேரத்தில் பதினொன்று கோப்புகளில் கையெழுத்திடுவோம். ஒரு கோப்புக்கு குறைந்தது ஐநூறு ரூபாய் கிடைக்கும். சிலசமயம் ஐயாயிரம் கூட லஞ்சம் வரலாம். ஏறக்குறைய ஒரு மணி நேர கிம்பளமாக இரண்டாயிரம் சம்பாதிக்கலாம். எனவே, ஒரு நாளில் குறைந்தது பதினைந்தாயிரம். இங்கே வேலை பார்ப்போர் நூற்றி இருபத்தி மூன்று பேர். எல்லாம் கூட்டிக் கழித்து பார்த்தால் ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஆகிறது. எனவே, இந்த முறை போனஸாக ஆளுக்கு எழுபத்தைந்தாயிரத்தை இந்த அரசு கொடுக்க வேண்டும். இல்லையேல், வேலை நிறுத்தம்!” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

2. போலீஸ் விசாரணைக்கு பயந்து அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகி சாவு: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த வடிவேலு, 39-வது டிவிஷன் அதிமுக வட்டப் பிரதிநிதியாக இருந்தார். உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, மாநகர பஸ் மீது கல்வீசி தாக்கியதாக வடிவேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகும்படி அவரது குடும்பத்தாரிடம் போலீஸார் தெரிவித்திருந்தனர். இதுதெரியவந்த வடிவேலுவுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது.

அஇஅதிமுகவின் விசுவாசி மரணமடைந்ததால் கலக்கத்தில் இருப்பாரோ என்னும் வருத்தத்துடன் செல்வியை போயஸ் கார்டனில் சந்திக்க சென்றேன். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கொந்தளிப்பில் இருப்பதாக அவருடைய இணைபிரியாத் தோழியின் அந்தரங்க காரியதரிசி தெரிவித்தார். காரணத்தை விசாரித்தோம்.

“அதிமுகவுக்கே களங்கமாக இருப்பவர் இந்த வடிவேலு. இப்படி விசாரணைக்கு அழைத்ததற்கே மனம் புழுங்கினால் என் செய்வது? புரட்சித் தலைவி காணாத கோர்ட்டா? ஏறாதா நீதிமன்றமா? இறங்காத சாட்சிக்கூண்டா? கேட்காத விசாரணையா? படிக்காத சம்மனா? புரட்டாத கேஸ் ஃபைல்களா?”

காய்ச்சி எடுத்த நோவுடன் அப்படியே அண்ணா அறிவாலயம் பக்கம் சென்று அவர்களாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றறிய நோட்டமிட்டேன். கே என் நேரு கிடைத்தார். “என்னைப் பாருங்க. சென்ற ஆட்சியில் வழக்குப் போட்டார்கள். கலைஞர் ஆட்சியைப் பிடித்தவுடன் நீதிமன்றம் என் மேல் உள்ள எல்லா வழக்கையும் ரத்து செய்துவிட்டது. இப்போதும் அளவுக்கு மீறி, தெரிந்த வருவாய்களைத் தாண்டி கன்னாபின்னா சொத்து சேர்ப்பேன். கோட்டையில் பதவி போனால் அமைதி காக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு வந்தால் பதறக்கூடாது. ‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’ என்பது பழமொழி. ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்பது புதுமொழி” என்றபடி சாந்தமாகக் காணப்பட்டார்.

3. ‘சீனாவில் அணை கட்டினால் இந்தியாவின் வடகிழக்கை பாதிக்கும்’: பிரம்மபுத்திரா நதியின் மேல் அணைக்கட்ட சைனா முடிவெடுத்திருக்கிறது. அஸ்ஸாமின் முதலமைச்சர் தருண் கொகய், இந்தத் திட்டத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு நீர்த்தேவையை, பிரம்மபுத்திரா-பாரக்-மேக்னா நதிகள் நிறைவேறுகிறது.

நான் இந்த செய்தியை குறிப்பிடப்போகிறேன் என்பதை சீனாவின் தணிக்கை கணினிகள் முன்பே அறிந்து, என்னை தானியங்கியாக மிரட்ட ஆரம்பித்தன. Auto-advance-response மின்னஞ்சலின் மொழியாக்கம். “சீனா உங்களுக்கு நல்லதையே விரும்புகிறது. இந்தியாவுக்கு அஸ்ஸாமில் உல்ஃபா பிரச்சினை இருக்கிறது. வட கிழக்கு முழுக்க பிரிவினை சக்திகள் என்று உங்களால் விளிக்கப்படும் போராளிக் குழுக்கள் நிறைய உண்டு. தாங்கள் ‘உயிரே’ அல்லது ‘தில்ஸே’ பார்த்தால் விளங்கலாம்.

வடகிழக்கில் இருக்கும் தீவிரவாதிகளை அழிக்கவும், அவர்களினால் மக்களின் உயிருக்கு ஆபத்து நேர்வதைத் தவிர்க்கவுமே அணைக் கட்டுகிறோம். அனேகமாகத் தண்ணீருக்கு அலைந்தே பொதுஜனம் மரித்துப் போகும். அப்படி சாகாதவர்களை, மழைக்காலத்தில் அணையைத் திறந்துவிட்டு வெள்ளத்தில் மூழ்கடித்து விடுவோம். இந்த திசை மாறிய நதியின் போக்கில், காடுகள் அழியும். அடர்த்தியான மரங்களின் பாதுகாப்பில் வாழும் பூர்வகுடியினரும் அவர்களின் உரிமைப் போராட்டமும் நசுங்கும்”

அப்படியே அதை மன்மோகன் சிங்குக்கு ஃபார்வர்ட் செய்ய, அவரிடம் இருந்தும் பதில் வந்து விழுந்தது. “உங்கள் கவலை எங்கள் கவலை. நாட்டு மக்களின் நலனே, நாடாளுமன்றத்தின் நாட்டம். இந்தக் குறையை ஆராய பதினெட்டாவது திட்டக் கமிஷன் போட உள்ளோம். அப்போது, ஐஐடி, ஐஐஎஸ்சி, ஜேஎன்யூ, ஐநா, டபிள்யூ.டீ.ஓ., உலக வங்கி கொண்ட வல்லுநர் குழு அமைப்போம். தீவிர விசாரணை, ஐந்தாண்டு திட்ட வழிகாட்டி, சீனாவுடன் உலக அரங்கில் பேச்சுவார்த்தை ஆகியவை முடிய பதினைந்தாண்டுகள் எடுக்கும். அதற்குள், அனேகமாக சீனா, அணையைக் கட்டி முடித்திருக்கும். அதனால், இவை எதுவுமே இப்போதே மண்டை காய்வதற்கு அவசியமே இல்லை” என்று பொறுப்பாக உடனடி செயலாக மின்மடல் இட்டிருந்தார்.


| |

Thanksgiving wishes

நன்றி washingtonpost.com: “Curtis by Ray Billingsley”

அமெரிக்க ஜனாதிபதியின் நன்றி நவில்தலைப் படிக்க இங்கு செல்லவும்: The Borowitz Report .com

சாம்பிளுக்கு ஒன்று – ‘நான் நன்றி சொல்வேன். வியட்நாம் போருக்கு செல்லாமல் டபாய்க்க வைத்ததற்கு. இறுதியாக, வியட்நாம் செல்ல நேரிட்டாலும், என்னுடைய சொகுசுக் காரை விட்டு இறங்க வைக்காததற்கு.’


| |

Irony and Hypocrisy – The staples of Satire

நகைச்சுவை எழுதுவது எப்படி?

நகைச்சுவையில் பல வகை உண்டு.

இன்று படித்த கட்டுரையில் இருந்து (OpinionJournal – Leisure & Arts: It’s Enough to Make You Laugh :: Politics is a funny business) மொழியாக்க உதாரணம்.

ஜெயேந்திரர் கைதான சமயம். கூடவே ரவி சுப்பிரமணியமும் மாட்டிக் கொண்டுவிடுகிறார்.

பொதிந்த அர்த்தத்துடன் கிண்டலடிக்க விரும்பினால்: “ரவியின் சொந்த ஊரான காஞ்சீபுரம் ஜெயிலில் வைப்பது, காவல்துறைக்கு சிரமதசையைத் தந்திருக்கிறது. ரவி பாட்டுக்கு, ஒவ்வொரு அரசியல்வாதியின் வண்டவாளங்களை விளக்குவதால், புதுசு புதுசாக விஷயம் சிக்கிக் கொண்டேயிருக்கிறது; காஞ்சிக்கும் சென்னைக்கும் பாயிண்ட் டு பாயிண்ட் விட போலீஸ் விரும்பவில்லை.”

வெளிப்படையாக நக்கலடித்தால்: “ரவி சுப்பிரமணியம் இன்று பிடிபட்டார். சிறைக்குள் நுழைந்தவுடன் மடத்தில் இருக்கும் சாமியார்களை விட, அதிக அளவில் அருள்வாக்கு ஆனந்தாக்களைப் பார்த்தவுடன், தோழமையைக் கொண்ட பரிச்சயமான இடமாக ஆக்கிக் கொண்டார்.”

படிப்பவர் ஜெயேந்திரராக இருக்காத பட்சத்தில், இரண்டுமே சிரிப்பை வரவைக்கும். முதலாம் வகை நிஜ செய்தியாகவே வாய்ப்பு உண்டு. பூந்தமல்லி, காஞ்சி, சென்னை என்று அலைக்கழிக்காமல் நீதிபதி முன் ஆஜராக, விசாரிக்க, இப்படி நடந்திருக்கலாம் என்பதை நுட்பமாக உள்ளடக்கத்தில் வைத்திருக்கிறது.

இரண்டாவது வகை, எந்த வித கிரிமினலுக்கும் பொருந்தும். செரினா, சரவண பவன் என்று யாரை உள்ளே தள்ளினாலும், எள்ளலை பெயர் மாற்றி சொருகி விடலாம்.

இன்னொரு உதாரணமாக, முரண்களை வெளிக்கொணரவும் நகைச்சுவை கை கொடுக்கும்.

முதல் வகை: ‘கணவன் இழந்தவர்கள் மீண்டும் மணமுடிக்கக் கூடாது என்று ஜெயேந்திரர் அறிவுறுத்தினாரே… ஏன் தெரியுமா? அவர்கள் தன்னிடம் வருவார்கள் என்னும் ஆசையில்தான்!’

இரண்டாவது: ‘ஜெயேந்திரருக்கு கட்டாங்கடைசியாக நிம்மதி பிறந்திருக்கிறது. சிக்குன் குனியாவினால் அவருடைய பெயர் முதல் பக்கத்தை விட்டு அகன்றிருக்கிறது. அவருடைய ‘ஜெயேந்திரர்’ பட்டம் ஏற்கனவே அகன்றிருந்தது.’

முதலாவதில் எள்ளல் இருக்கும். வெளியே ஒரு வேஷம், உள்ளே இன்னொன்று வைத்திருப்பதை உரித்துக் காட்டும். இரண்டாவது எளிமையானது. செய்திகளின் மேற்சென்று அலசாமல், கரையிலே நின்று மீன் பிடிக்கும்.

முந்தைய வகையில் பெரியமனுசத்தனம் வெளிப்படும். கொஞ்சம் ஆலோசனை வழங்குவது போல் தோன்றும். பிந்தையது வெ.சீதாராமன் மாதிரி யாருக்கும் மனம் நோகாது. சிரித்து விட்டு செல்லச் சொல்லும்.

நடுவே தேவையில்லாமல் இருள்நீக்கி சுப்பிரமணியன் என்று விளித்தால் அது தனிமனிதத் தாக்குதல் என்று வகைப் பிரிக்கலாம்.

இதற்கெல்லாம் இடையில் சிலர் இருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு பில் க்ளிண்டன். இந்தியாவில் சுப்பிரமணிய சுவாமி. இவர்களுக்கு சுட்டுப் போட்டாலும் கோபமே வராது. எள்ளி நகையாடினாலும் சிரித்து புறந்தள்ளி விடும் குணம் வாய்ந்தவர்கள்.

இப்போது சில சமீபத்திய பதிவுகள்:

 1. joke party: சென்னை வலைபதிவர் சந்திப்பு
 2. simulation padaippugal: 2007 இடைத்தேர்தலில் சென்னை வலைப்பதிவர்கள் சங்கம்
 3. ஜொள்ளுப்பேட்டை: சென்னை வலைப்பதிவர் ( ரகசிய ) சந்திப்பு !!
 4. அம்மான்னா சும்மாவா?: இலைக்காரன் – well done கலாநிதி

எந்த எந்த பதிவு, பதிவில் வரும் எண்ணங்கள் – எப்படிப்பட்டவை என்று நீங்களே வீட்டுவேலையாக செய்து பார்த்து, எனக்கு பின்னூட்டமிடவும் :-D)

ஜோக் சொன்னால் அனுபவிக்கிற மாதிரி இருக்க வேண்டுமா? ஆராயுமாறு அமைய வேண்டுமா?


| |

Court Says Web Publisher Isn’t Liable for Defamation

காப்புரிமை சட்டங்களுக்கும் மானநஷ்ட வழக்குகளுக்கும் அமெரிக்காவை முன்னோடியாகக் கருதலாம். ஃப்ரான்சு நாட்டில் இப்போதுதான் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக sue செய்ய சட்டம் இயற்றுகிறார்கள். இன்ன பிற மேற்கத்திய நாடுகளிலும், இசைத் திருட்டு, எம்பி3 பகிர்தல், விசிடி விற்றல், பிட் டாரண்ட் மூலம் வலையிறக்குதல் என்று எல்லா கிரிமினல் வேலைகளையும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இயற்ற, வகை செய்திருக்கிறார்கள்.

இந்த வரிசையில் கலிஃபோர்னியா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

வழக்கு என்ன?

ஒரு ஊரில் ஒரு டாக்டர் இருந்தார். அவரிடம் ஒருவர் வைத்தியம் (breast implants) செய்யப் போனார். சிகிச்சை திருப்தியாக இராததால், ‘அந்த மருத்துவரிடம் போகாதீங்க… ஏமாற்றுப் பேர்வழி! உங்களுக்குப் பலன் கிடைக்காது.‘ என்று மின்னஞ்சல் எழுதி நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இத்தகைய வாடிக்கையாளரின் வேதனைகளைத் தொகுக்கும் தொகுப்பாளரிடம் இந்த மின்மடல் சிக்கியது. எந்த மருத்துவர் எவ்வாறு ஏமாற்றுகிறார் என்பதை ஊர், தொகுதி, வட்டார வாரியாகத் தொகுப்பவர், இந்தப் பதிவையும் சேர்த்துக் கொண்டார்.

பொங்கியெழுந்த மருத்துவர், ‘இந்த வலையகத்தில் இருப்பது பிழையான தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு. தயவு செய்து நீக்கிவிடவும். நிஜத்தை சரிபார்க்கவும்‘ என்று முறையிட்டும் எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.

வழக்குப் போட்டு பார்த்தார். உள்ளூர் நீதிமன்றத்தில் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், மேல் முறையீட்டில் மண்ணைக் கவ்வியுள்ளார்.

இதனால் நான் அறிவது யாதென்றால்…

 • இவர்தான் அவர்! அந்தப் பெயரில் எழுதுபவரின் நிஜமுகம் இதுதான்!!‘ என்று ப்ளாக்ஸ்பாட்.காமில் எழுதுபவரின் மேல் மட்டுமே வழக்குப் போட முடியும். குற்றப்பத்திரிகையைத் தாங்கிக் கொண்டிருக்கும் ப்ளாகர்.காம் அல்லது உங்கள் பெயரை இணையத்தில் தேடினால், அவதூறுப் பதிவை முன்னிறுத்தும் கூகிள்.காம் போன்ற பெரியவர்களை அசைக்க முடியாது.
 • இந்தியாவையோ இன்ன பிற தலைவர்களையோ இழிவாகத் திட்டினால், அந்தப் பதிவைத் தாங்கி வரும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள் போன்றோருக்கு எவ்வித இன்னலும் கொடுக்க இயலாது.
 • தீர விசாரித்து தனி மனிதனின் உண்மை நிலையை எடுத்துரைப்பதை விட கருத்துச் சுதந்திரமே பெரிதினும் பெரிது.
 • பிறர் மீது சேற்றை வாரியிறைப்பதை தொடர்ச்சியாக செய்பவர்கள் அனைவருக்கும், நற்சான்றிதழ் வழங்கும் அபாயத்தை இந்தத் தீர்ப்பு அளித்தாலும், சுய-தணிக்கையை ஊக்குவிக்கவும் அச்சமற்ற எழுத்தை தொடர்ந்து உருவாக்கவும் வாய்ப்பிருக்கிறது.
 • பத்திரிகை விற்பவர் குற்றவாளி அல்ல. பத்திரிகையை அச்சடிப்பவரும் ‘ஐயோ… பாவம்’. பத்திரிகையில் பத்தி எழுதுபவர் மட்டுமே நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவர்.
 • தன்மானம்

  செய்தி: Ruling limits Internet liability – Los Angeles Times: “Granting immunity to all but the initial sources of defamatory statements protects freedom of expression, state high court says.”


  | |

 • Non Sequitur & Keyboard Marriage

  நான் அடிக்கடி ரசிக்கும் கார்ட்டூன் non sequitur என்பதன் அர்த்தமாக
  1. ஆதாரமோ, அடிப்படையோ இல்லாமல் முடிவுக்கு வருவது
  2. தர்க்க ரீதியாக நிறுவ முடியாதது
  என்று சொல்கிறார்கள். (non sequitur: Answers.com)


  நன்றி: Non Sequitur by Wiley Miller – வாஷிங்டன் போஸ்ட்


  நெடுநாள் முன்பில் இருந்தே மின்னஞ்சலில் வந்து கொண்டிருந்தாலும், மீண்டும் விசைப்பலகையை தட்டச்ச வைக்கும் புத்தமைப்பு.


  | |

  State nine things (weird or otherwise) about yourself

  ரொம்ப நாள் முன்னாடி ப்ரேமலதா, அழைப்பு விடுத்திருந்தார்கள். (Tagging me :: The normal self)

  என்னைக் குறித்த ஒன்பது விநோதமான குணாதிசயங்களை சொல்லச் சொன்னார்கள். வலைப்பதிவில் சொந்த வாழ்க்கைக்கும் தாராளமாக இடம் கொடுப்பதாலும், ஒவ்வொரு கருத்துக்கு ஒவ்வொரு அவதாரம் போடாததாலும், இந்தப் பதிவில் புதிதாக புதிர் எதையும் பறைசாற்றப் போவதில்லை.

  என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, கூவியதற்காக, நவரசங்கள்:

  1. ப்ரியம்: இனிப்புகளின் மேல் எனக்கு பெருங்காதல் உண்டு. வயிறு முட்ட சாப்பிட்ட பின் டிராமிஸு, ரச மலாய், பக்லாவா, காசி அல்வா, சம்-சம், குட் டே, ஓரியோ, ஹாகன் டாஸ், ஃபெரோ ராஷர் என்று ஏதாவது மெல்லுவது எங்கள் குடும்பத்துப் பழக்கம். சர்க்கரை வியாதி வா வா, கொழுப்பு போ போ என்று மிரட்டினாலும் அஸ்கா பதார்த்தங்களைக் கண்டால் ஜொள்ளுக்குக் குறைவொன்றுமில்லை.

  2. நகைச்சுவை: என்னுடைய மறதிதான் பல சமயங்களில் பலரை சிரிக்க வைத்து, என்னை நகைப்புள்ளாக்கி இருக்கிறது. பெயர் நினைவில் இருக்காது. முகம் நன்கு பதிந்திருக்கும். ‘எங்கேயோ பார்த்திருக்கேன்!‘ என்று அழகான பெண்களிடம் வழிய ஆரம்பிப்பது போல், அறிமுகமானவரிடம் கஜினியாக தலை சொறிவேன்.

  3. வருத்தம்: உருப்படியாய் உழைத்துக் கொட்டி, நாளொரு .NETடும் பொழுதொரு Perl-மாய் மதி வளர்த்து சம்பளம் வாங்குமிடத்தில் மதிப்பை வளர்க்காமல், நேரத்தை மதியாது, அவ்வப்போது இணையத்தில் வீழ்ந்து மயக்கமுற்று கிடப்பது.

  4. கோபம்: காரணமில்லாமல் பொய் சொல்வது, செல்லிடத்து சினம் காவாமல் இருத்தல் என்று எழுத நினைக்கிறேன். ஆனால், கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் கூட அடங்கிப் போவதுதான் எனக்கு கோபத்தை வரவழைக்கிறது.

  5. வீரம்: முகந்தெரியாத விற்பனாவாதிகளிடம் என்னுடைய சாகசம் பலித்திருக்கிறது. குழைந்து குழைந்து தங்கள் பொருள்களை சந்தைப்படுத்துபவர்களிடம் என்னுடைய வீரதீரம் வெளிப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘பாலாஜி இருக்கிறாரா?‘ என்று வினவுபவனிடம் தெனாவட்டாக ‘இல்லை!’ என்று தூய தமிழில் செல்பேசியிருக்கிறேன். ‘சாப்ட்டுண்டு இருக்கோமில்ல… வேற எப்பவாது கூப்பிடு.’ என்று கறாராக கண்டித்திருக்கிறேன்.

  6. அச்சம்: தொலைபேசியில் அளவளாவலை எவ்வாறு முடிப்பது என்பதுதான் என்னுடைய நீண்டகால பயம். ‘வேறென்ன விஷயம்?’ என்று கேட்டால், தொய்ந்து போன ‘ஒன்றுமில்லை‘ வருத்தமாக வருவது போல் இருக்கும். நானாகவே ரொம்ப நேரம் கதையளந்தால், ‘எனக்கு இன்னொரு ஃபோன் வருது‘, அல்லது ‘பாஸ் / மனைவி / குழந்தை / நாய் / கடுவன் / பக்கத்து வீட்டுக்காரி / டிவி / கடவுள் கூப்பிடறார்… கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடட்டுமா?’ என்னும் முடிவுரை விழுந்து, ரம்பம் போட்டதை நினைவுறுத்துமோ என்றும் எச்சரிக்கை உணர்வு வந்து தொலைக்கும்.

  7. வெறுப்பு: ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமாக (தொடர்புள்ள சுட்டி: Stockholm Syndromeஉம் தமிழ்க்கலாச்சாரமும்) சன் டிவியிடமுள்ள மையல். நெடுந்தொடர் எதுவுமே காலரைக்கால் விநாடி கூட நோடுவதில்லை. சனி, ஞாயிறு இரவுப் படங்களையும் தவிர்க்கிறேன். அதிகாலை ஆறரை மணிக்கு வேலைக்குப் புறப்படுவதால் ‘வணக்கம் தமிழகம்’ வசதிப்படாது. ‘காமெடி டைம்’மாக வரும் சன் நியூஸ் மட்டும் நையாண்டி தர்பாராக சிரிக்க வைக்கிறது.

  8. அமைதி: துளி சத்தம் கூட எழாமல் பல மணி நேரம் வலையை மேய்வதுதான் மௌனமான வேளை. நண்பர்களின் பதிவுகள், செய்தித்தளங்கள், வலையகங்கள், தாளிகைக் கட்டுரைகள், நுட்ப சங்கதிகள் நடுநடுவே ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ, அரட்டை அஞ்சல்கள் என்று நேரம் போவது தெரியாமல் இணையத்தில் சறுக்காட்டம்.

  9. வியப்பு: ‘எங்காவது பெட்டியைப் பார்த்தால் ஏன்ப்பா டைப் அடிக்கறே?’ என்று என் மகள் வினவிய போதுதான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எங்காவது டெக்ஸ்ட் பாக்ஸ், மறுமொழிப் பெட்டி, எடிட் பாக்ஸ், அஞ்சல் டப்பா என்று கொடுத்தால் போதுமானது. படிப்பவர் மூர்ச்சையாகுமளவு மெகாபைட் எழுதித் தள்ளுவது.

  இப்போது சிலரை அழைக்கும் நேரம். அவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்காமல், ஏற்கனவே நான் விரும்பிப் படித்த சில நல்ல பகிர்வுகள். (இவர்களே மீண்டும் இன்னொரு சிறப்பான பதிவைப் இட்டால் மகிழ்வேன் : )


  | |

  Netha Pensions – Internal Affairs – VHP – Chikun Kunya

  பேசும் செய்தி – 6 (நன்றி: திண்ணை)

  Orphan1. ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் ஓய்வுபெற ஊக்கத்தொகை: ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், அவர்களது பதவிக் காலம் முடிவடைந்த உடன் பதவியில் இருந்து விலகும் அதிபர்களுக்கு, பத்தாண்டு காலத்தில் சுமார் ஐந்து மில்லியன் டாலர் கொடுக்கப்படும். பரிசு பெறுவதற்கு ஆப்பிரிக்க அதிபர்கள் தங்களுடைய பதவிக் காலத்தில் நல்லது செய்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

  செய்தியைக் கேட்டவுடன் தலைவர்கள் சிலருக்கு குறுந்தகவல் தட்டினோம். அவர்களின் எஸ்.எம்.எஸ் பதில்கள் இணைக்கப்பட்டுள்ளது:

 • மேற்கு வங்கத்தின் ஜோதி பாசு: ‘இப்பொழுதுதான் ஆப்பிரிக்காவிலேயே ஆரம்பித்திருக்கிறார்கள். முன்பே, இந்த மாதிரி வரும் என்று தெரிந்திருந்தால் புத்ததேவிடம் கொடுத்தே இருக்க மாட்டேனே!’
 • அடல் பிஹாரி வாஜ்பாய்: ‘என்னுடைய பதவிக் காலம் என்னிக்கு முடிஞ்சிருக்கு? பா.ஜ.க.விற்கு நான் மட்டுமே நிரந்தர பிரதம மந்திரி.’
 • பெர்வேஸ் முஷாரஃப்: ‘என்னது… நல்லது செஞ்சிருக்கணுமா? காமெடி கீமடி பண்ணலியே!’

  Dreamy siesta2. தில்லியில் உள்துறை அமைச்சகத்தின் 2 கார்கள் திருட்டு: மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சொந்தமான 2 கார்கள் தில்லியில் காணாமல் போயுள்ளன. இந்த 2 கார்களிலும் உள்துறை அமைச்சகத்தின் எம்எச்ஏ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதால், அவற்றைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதற்காக பயங்கரவாதிகள் திருடியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

  உள்நாட்டு விவகார அமைச்சர் ஷிவ்ராஜ் பட்டீலைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவரே காணாமல் பதுங்கியிருக்கிறார் என்னும் தகவல் கிடைத்தது. ஆந்திராவில் வெள்ளைத்தை வானூர்தியில் பார்க்கக் கிளம்பியதாக கடைசியாகப் பார்த்தவர்கள் சொன்னார்கள். பிறகு, விமானமே திருடப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தால், வீட்டிலேயே ஓய்வு எடுக்கப் போய் விட்டதாக மற்றொரு தரப்பினர் சொன்னார்கள்.

  கார் விவகாரம் குறித்து மன்மோகன் சிங்கை பிடித்தோம். “ஷிவ்ராஜ் பட்டீல் மாயமானதற்கோ அமைச்சர்கள் களவு போவதற்கோ நாடே கொள்ளையடிக்கப்பட்டாலோ கூட நான் கவலைப்படுவதில்லை. எங்கள் தானைத் தலைவி சோனியா காந்தி இருக்கிறார். தங்க மகன் சிங்க ராஜா ராகுல் காந்தியை கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார். மக்கள் மத்தியில் அவர்கள் தொலையாத வரைக்கும் பிரச்சினை ஒன்றும் இல்லை” என்றார்.

  are you talking to me?3. பாஜகவுக்கு மோடியை தலைவராக்கி இருக்க வேண்டும்: விஎச்பி கருத்து: பாரதீய ஜனதா கட்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தலைவராக்கி இருக்க வேண்டும்; கட்சித் தலைவராக இருக்கும் ராஜ்நாத் சிங்கை விட அவரே சிறந்த தலைவர் என்று விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் விஷ்ணு ஹரி டால்மியா கருத்து தெரிவித்துள்ளார்.

  பாதி பேட்டிதான் வெளியாகியுள்ளது என்று வருத்தப்பட்ட வி.எச்.பி. தலைவர், மீதியையும் எனக்கு மின்னஞ்சல் செய்துள்ளார். அதில் இருந்து அவரின் மற்ற பரிந்துரைகள்.

  1. திமுக தலைவர் – திருநாவுக்கரசர்
  2. அதிமுக – ஜெயேந்திர சரஸ்வதி
  3. பகுஜன் சமாஜ் கட்சி – கல்யாண் சிங்
  4. சமாஜ்வாதி கட்சி – முரளி மனோஹர் ஜோஷி
  5. இந்திரா காங்கிரஸ் (தமிழ்நாடு) – முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன்

  Same snake, different view4. சிக்குன் குனியா-டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்கள் மழை- குளிரால் அழியும்: இந்த இரு நோய்களையும் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மழை மற்றும் குளிருக்கு தாக்கு பிடிக்காது. லேசான மழை பெய்தால் கூட இந்த கொசுக்கள் இறந்துவிடும்.

  முதலில் அகப்பட்டவர் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன். “சிக்குன் குனியா நோயை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசு இதற்காக ரூ.22 கோடியை ஒதுக்கி இருக்கிறது. இந்த சமயத்தில் கொசுக்கள் தானே மரித்து உயிர் நீக்குவது சொல்லொண்ணா வருத்தத்தை தருகிறது. மழை நீர் சேமிப்புத் திட்டத்தின் மூலம் இந்த சதியை அரங்கேற்றியவர் செல்வி ஜெயலலிதாதான். அவர் நிறுவிய அந்த சட்டத்தின் மூலம்தான் இப்பொழுது தமிழகமே வெள்ளக்காடாக மாறி சிக்குன் குனியா கொசுக்களும், லாரி இடித்த கண்ணகியாக மறைந்து போயிருக்கிறது! கூடிய சீக்கிரமே ‘கிணறுகளை வெட்டி வீழ்த்துவோம்’ திட்டம் மூலம் புதுப் பொலிவுடன் மீண்டும் வலம் வரும் கொசுக்களுக்கு, திறப்பு விழா நடத்தப்படும்”

  அடுத்து வந்தவர் அமெரிக்காவில் இருந்து அவுட்சோர்ஸிங் ப்ராஜெக்ட் ஒழுங்காக செல்கிறதா என்று அறியவந்த அமெரிக்கர். “நான் கொஞ்ச நாளிலேயே தமிழ் பேசக் கற்றுக் கொண்டு விட்டேன். ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்பது மூதுரை எழுதிய ஔவையாரின் வாக்கு. மேற்கத்திய நாடுகளில் இருந்த பல இந்தியர்களும் சென்னைக்கு மேலாளர்களாக திரும்புவதாலும், என்னைப் போன்றோரின் வருகையாலும், எங்களின் சுற்றுலா பழக்கத்தினாலும் தமிழ் நாடே செழித்திருக்கிறது. இலக்கியம் கற்ற நாங்கள் அமெரிக்காவிலும் தமிழ் வேள்வி வளர்த்து, வான்சிறப்பாக

  துப்பாகிக்குத் தோட்டாய சிப்பாயிக்குத் தந்தாருக்குத்
  வேட்டாய போடுஉம் தேர்தல்.

  என்று புதுக்குறள் படைக்கப் போகிறோம்” என்று செந்தமிழ் வித்தகர் ஆனார்.


  | |

 • Aishwarya Rai gets attacked by Anonymous Mail

  ஹாலந்தில் இருந்து ஐஷ்வர்யா ராய்க்கு 23,000 யூரோக்கள் தாங்கிய தபால் வந்திருக்கிறது.

  Aishwarya quizzed over cash in parcel

  நான் இந்தியாவில் இருந்து ஒவ்வொரு முறை அமெரிக்கா வரும்போதும், ‘லக்கேஜில் என்ன இருக்கிறது‘ என்று சுங்க அதிகாரிகள் வினவினால், பதவிசாக, ‘துணிமணி இருக்குங்க சாமீயோவ்! அப்பால கொஞ்சம் பொஸ்தவம் கூட இருக்குங்க!’ என்று உட்டாலக்கடி விடுவது போல் ‘மின் சாதனங்கள் மட்டுமே இருக்கிறது’ என்று அனுப்பியவர் டபாய்த்திருக்கிறார்.

  இந்த மாதிரி புதையல்கள் அஞ்சலில் வந்தால் என்ன செய்வது? தப்பித்தால் தப்பில்லை.

  முகம் தெரியாத ஒருவர், எனக்கு இவ்வாறு பொன்முடிப்பு கொடுத்தால் ‘கடவுளாப் பார்த்து பிச்சை போட்டது‘ என்று வைத்துக் கொள்ளவே தோன்றும். Reserve Bank of Indiaவோ எஃப்.பி.ஐ.யோ கதவைத் தட்டி ‘5,000 ரூபாய்க்கு மேல் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டினால், மாட்டிக் கொள்வாய்’ என்று விசாரிக்காதவரை லாபமே!

  DNA – Mumbai – Aishwarya quizzed over cash in parcel – Daily News & Analysis: “Bollywood actress Aishwarya Rai is being quizzed by customs officers after a parcel from a man in the Netherlands sent to her former address was found to contain 23,000 euros ($29,500).”


  | |

  Madhumitha Blog & Borat vs Martha Stewart

  குரங்கு கையில் பூமாலை

  பிரேசிலில் பத்திரிகையாளனாக எழுத வேண்டுமானால், இரண்டு தகுதிகள் வைத்திருக்க வேண்டும்:

  1. தாளிகைத்துறையில் பட்டம்
  2. நிருபராக பணியாற்ற உரிமம்

  நல்ல வேளை…

  வலைப்பதிவில் அந்த மாதிரி எதுவும் குறைந்தபட்ச அளவுகோல் எதுவும் இல்லை. அந்த தைரியத்தில் மதுமிதா வினவியவுடன், காற்றுவெளியைக் குறித்த வலை வாசிப்புரையை அவரின் பதிவில் இட்டிருக்கிறேன்.

  காற்றுவெளி: Madhumitha’s Kaatru Veli – Boston Balaji : Reader Views

  • இளவஞ்சியைக் குறித்து மதுமிதா என்ன சொல்கிறார்?
  • தமிழ்மணத்தின் ‘அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்’ வர இவர் என்ன செய்தார்?
  • த்ரிஷா வீடியோ

  என்று என்னுடைய மசாலாவுக்கு ஏற்ற பொடி நிறைந்த பதிவு என்று வாக்குறுதி கொடுக்கிறேன்.


  இந்த சமயத்தில் சம்பந்தமில்லாத இன்னொரு குரங்கு கையில் பூமாலை.

  அமெரிக்காவை போராட் (படிக்க: Borat – Wikipedia & Borat: Cultural Learnings of America for Make Benefit Glorious Nation of Kazakhstan) கலக்குவது அறிந்த விஷயம். சமீபத்தில், போராட்டும் மார்த்தா ஸ்டூவர்ட்டும் ஒரு சேர ஜே லீனோவில் வந்திருந்தார்கள்.

  போராட் இந்த துருவம். கரணம் தப்பினால் விரசமாகி விடக்கூடிய நவரசம் செய்பவர்.

  மார்த்தா ஸ்டூவர்ட் இந்த துருவம். அமெரிக்கர் ஒருவரின் ஆதர்ச சின்னம். கஷ்டப்பட்டு முன்னேறியவர்.

  அவர்கள் இருவரும் சந்தித்ததை இங்கு காணலாம்: Best Week Ever » Blog Archive » ICYMI: Borat On Martha Stewart On Leno

  மார்த்தா ஸ்டூவர்ட் குறித்த பழைய பதிவு: அம்மா மாட்டிகிட்டாங்க! – Jury finds Martha Stewart guilty


  | |