Govt Holidays – ADMK Heart Attack – Brahmaputra Dam by China


பேசும் செய்தி – 7 (நன்றி: திண்ணை)

குறிப்பு: இந்தப் பதிவில் இடம்பெறும் படங்களுக்கும், பதிவுக்கும் சம்பந்தமில்லை. படம் நன்றாக இருந்தது. தனியாக படத்தை ஓட்ட மனம் இஷ்டப்படாததால், சொருகி விட்டிருக்கிறேன் : )
மாயா… மாயா… எல்லாம் மாயா!

1. தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: கடந்த ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் அரசு அலுவலர்களுக்கான விடுமுறை நாட்களை ஆண்டு ஒன்றுக்கு 22 நாட்களில் இருந்து 17 நாட்களாகக் குறைக்கப்பட்டது. பல்வேறு சங்கங்களின் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையேற்று, கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டிருந்தவை மீண்டும் விடுமுறை நாளாக கருதப்படும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.

‘சந்தோசமான சேதிதானே’ என்று துள்ளலுடன் தலைமைச் செயலக கேன்டீனில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஜமாவிடம் கொக்கி போட்டேன்.

“என்னய்யா சந்தோஷம்? வீட்டில் இருந்தா சாலமன் பாப்பையாவைக் கூட பார்க்க விட மாட்டேங்கிறாங்க. விஜிபி கோல்டன் பீச், ஸ்பென்சர் ஷாப்பிங் என்று செலவு வேறு எகிறுது. நிம்மதியா வேலைக்கு வந்து ரெண்டு ரவுண்டு ரம்மி, ஏஸி போட்ட ரூமில் Grand Theft Auto ஆட்டம் என்றிருந்தது… ‘யார் கண்ணு பட்டுச்சோ’, பர்சில் கை வச்சிட்டாங்க…”

விட்ட இடத்தில் ஆரம்பித்தார் இன்னொருவர். “ஒரு நாளைக்குக் எட்டு மணி நேரம் அலுவலில் இருக்கிறோம். ஒரு மணி நேரத்தில் பதினொன்று கோப்புகளில் கையெழுத்திடுவோம். ஒரு கோப்புக்கு குறைந்தது ஐநூறு ரூபாய் கிடைக்கும். சிலசமயம் ஐயாயிரம் கூட லஞ்சம் வரலாம். ஏறக்குறைய ஒரு மணி நேர கிம்பளமாக இரண்டாயிரம் சம்பாதிக்கலாம். எனவே, ஒரு நாளில் குறைந்தது பதினைந்தாயிரம். இங்கே வேலை பார்ப்போர் நூற்றி இருபத்தி மூன்று பேர். எல்லாம் கூட்டிக் கழித்து பார்த்தால் ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஆகிறது. எனவே, இந்த முறை போனஸாக ஆளுக்கு எழுபத்தைந்தாயிரத்தை இந்த அரசு கொடுக்க வேண்டும். இல்லையேல், வேலை நிறுத்தம்!” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

2. போலீஸ் விசாரணைக்கு பயந்து அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகி சாவு: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த வடிவேலு, 39-வது டிவிஷன் அதிமுக வட்டப் பிரதிநிதியாக இருந்தார். உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது, மாநகர பஸ் மீது கல்வீசி தாக்கியதாக வடிவேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகும்படி அவரது குடும்பத்தாரிடம் போலீஸார் தெரிவித்திருந்தனர். இதுதெரியவந்த வடிவேலுவுக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது.

அஇஅதிமுகவின் விசுவாசி மரணமடைந்ததால் கலக்கத்தில் இருப்பாரோ என்னும் வருத்தத்துடன் செல்வியை போயஸ் கார்டனில் சந்திக்க சென்றேன். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கொந்தளிப்பில் இருப்பதாக அவருடைய இணைபிரியாத் தோழியின் அந்தரங்க காரியதரிசி தெரிவித்தார். காரணத்தை விசாரித்தோம்.

“அதிமுகவுக்கே களங்கமாக இருப்பவர் இந்த வடிவேலு. இப்படி விசாரணைக்கு அழைத்ததற்கே மனம் புழுங்கினால் என் செய்வது? புரட்சித் தலைவி காணாத கோர்ட்டா? ஏறாதா நீதிமன்றமா? இறங்காத சாட்சிக்கூண்டா? கேட்காத விசாரணையா? படிக்காத சம்மனா? புரட்டாத கேஸ் ஃபைல்களா?”

காய்ச்சி எடுத்த நோவுடன் அப்படியே அண்ணா அறிவாலயம் பக்கம் சென்று அவர்களாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றறிய நோட்டமிட்டேன். கே என் நேரு கிடைத்தார். “என்னைப் பாருங்க. சென்ற ஆட்சியில் வழக்குப் போட்டார்கள். கலைஞர் ஆட்சியைப் பிடித்தவுடன் நீதிமன்றம் என் மேல் உள்ள எல்லா வழக்கையும் ரத்து செய்துவிட்டது. இப்போதும் அளவுக்கு மீறி, தெரிந்த வருவாய்களைத் தாண்டி கன்னாபின்னா சொத்து சேர்ப்பேன். கோட்டையில் பதவி போனால் அமைதி காக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு வந்தால் பதறக்கூடாது. ‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’ என்பது பழமொழி. ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்பது புதுமொழி” என்றபடி சாந்தமாகக் காணப்பட்டார்.

3. ‘சீனாவில் அணை கட்டினால் இந்தியாவின் வடகிழக்கை பாதிக்கும்’: பிரம்மபுத்திரா நதியின் மேல் அணைக்கட்ட சைனா முடிவெடுத்திருக்கிறது. அஸ்ஸாமின் முதலமைச்சர் தருண் கொகய், இந்தத் திட்டத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு நீர்த்தேவையை, பிரம்மபுத்திரா-பாரக்-மேக்னா நதிகள் நிறைவேறுகிறது.

நான் இந்த செய்தியை குறிப்பிடப்போகிறேன் என்பதை சீனாவின் தணிக்கை கணினிகள் முன்பே அறிந்து, என்னை தானியங்கியாக மிரட்ட ஆரம்பித்தன. Auto-advance-response மின்னஞ்சலின் மொழியாக்கம். “சீனா உங்களுக்கு நல்லதையே விரும்புகிறது. இந்தியாவுக்கு அஸ்ஸாமில் உல்ஃபா பிரச்சினை இருக்கிறது. வட கிழக்கு முழுக்க பிரிவினை சக்திகள் என்று உங்களால் விளிக்கப்படும் போராளிக் குழுக்கள் நிறைய உண்டு. தாங்கள் ‘உயிரே’ அல்லது ‘தில்ஸே’ பார்த்தால் விளங்கலாம்.

வடகிழக்கில் இருக்கும் தீவிரவாதிகளை அழிக்கவும், அவர்களினால் மக்களின் உயிருக்கு ஆபத்து நேர்வதைத் தவிர்க்கவுமே அணைக் கட்டுகிறோம். அனேகமாகத் தண்ணீருக்கு அலைந்தே பொதுஜனம் மரித்துப் போகும். அப்படி சாகாதவர்களை, மழைக்காலத்தில் அணையைத் திறந்துவிட்டு வெள்ளத்தில் மூழ்கடித்து விடுவோம். இந்த திசை மாறிய நதியின் போக்கில், காடுகள் அழியும். அடர்த்தியான மரங்களின் பாதுகாப்பில் வாழும் பூர்வகுடியினரும் அவர்களின் உரிமைப் போராட்டமும் நசுங்கும்”

அப்படியே அதை மன்மோகன் சிங்குக்கு ஃபார்வர்ட் செய்ய, அவரிடம் இருந்தும் பதில் வந்து விழுந்தது. “உங்கள் கவலை எங்கள் கவலை. நாட்டு மக்களின் நலனே, நாடாளுமன்றத்தின் நாட்டம். இந்தக் குறையை ஆராய பதினெட்டாவது திட்டக் கமிஷன் போட உள்ளோம். அப்போது, ஐஐடி, ஐஐஎஸ்சி, ஜேஎன்யூ, ஐநா, டபிள்யூ.டீ.ஓ., உலக வங்கி கொண்ட வல்லுநர் குழு அமைப்போம். தீவிர விசாரணை, ஐந்தாண்டு திட்ட வழிகாட்டி, சீனாவுடன் உலக அரங்கில் பேச்சுவார்த்தை ஆகியவை முடிய பதினைந்தாண்டுகள் எடுக்கும். அதற்குள், அனேகமாக சீனா, அணையைக் கட்டி முடித்திருக்கும். அதனால், இவை எதுவுமே இப்போதே மண்டை காய்வதற்கு அவசியமே இல்லை” என்று பொறுப்பாக உடனடி செயலாக மின்மடல் இட்டிருந்தார்.


| |

2 responses to “Govt Holidays – ADMK Heart Attack – Brahmaputra Dam by China

  1. சிறில் அலெக்ஸ்

    வழக்கமான பின்னூட்டமான ‘ஹா.. ஹா..ஹா’வுடன் ‘படங்களும் பிரம்மாதம்’ இலவசம்.

    🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.