Tag Archives: Story

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

Cultural identity, family relationships & the complexities of Intergenerational Communication

கதைசொல்லி சீனத்து பாட்டி. அவளுக்கு பிழையற்ற ஆங்கிலம் வாராது. எனவே, அவளின் கொச்சை மொழியிலேயே சம்பவங்களைச் சொல்கிறாள். அவளின் அமெரிக்க மகளின் பார்வையில், அந்தப் பாட்டி மோசமான குழந்தை காப்பகர். பாட்டிக்கு மாப்பிள்ளை புருஷ லட்சணமாக வேலைக்குப் போகவில்லையே என்னும் அங்கலாய்ப்பு. பொண்ணாக பொட்டி பாம்பாக பேத்தியை வளர்க்க எண்ணும் இறுமாப்பு.

முழுக்கதையும் சொல்லப் போவதில்லை. #சொல்வனம் இதழில் வாசியுங்கள்.

அன்னிய தேசத்திற்கு ஆயா வேலை பார்க்க போகும் எந்த இந்திய தாத்தா, பாட்டிக்கும் நடக்கக் கூடிய விஷயம் இது.

இதைப் போல் பல கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன:

  1. “Everyday Use” by Alice Walker: ஆப்பிரிக்க அமெரிக்க சூழல்
  2. “The Third and Final Continent” by Jhumpa Lahiri: இந்தியச் சூழல்
  3. “The Joy Luck Club” by Amy Tan: சீன குடியேறிகளும், இரண்டாம் தலைமுறை அமெரிக்க மகள்களும்

எனினும் Gish Jen எழுதிய Who’s Irish? அதன் தமிழ் மொழிபெயர்ப்பால் மிளிர்கிறது. திறமையான மொழியாக்கம். எளிமையான, அணுகலான, சிக்கலற்ற நடை.

#Solvanam தளத்தில் படிக்கலாம்

Culture is the values, beliefs, thinking patterns and behavior that are learned and shared and that is characteristic of a group of people.Identities are constructed by an integral connection of language, social structures, gender orientation and cultural patterns.

எண்ணுதற்கு யாவர் வல்லார்? – கிரயம்

சொல்வனம் தளத்தின் சிறப்பு இந்த மாதிரி விநோதமான கதைகளைத் தமிழில் அறிமுகம் செய்வது; வெறுமனே ஆங்கிலத்தில் இருக்கிறது என்று மட்டும் சுட்டாமல், வாசிக்கக் கூடிய தமிழில் உருவாக்கம் செய்வது!

தந்திரக் கை – கசந்த இனிப்பைச் சொல்லும் கதை. குறுவிசனம்.

ஒன்றை இழந்தால் மட்டுமே இன்னொன்றைப் பெற முடியுமா? இதை மேற்குலகில் Faustian offer என்கிறார்கள்.

இளம் பெண் சமீபத்தில் தனது கணவனையும் மகளையும் திடீரென்று சோகமான விபத்தில் இழக்கிறார். துக்கமும், வாழ்க்கையும் இறப்பும் அவை குறித்த நினைவுகளுமாய் கதை எழுகிறது. என்ன பேரம் போட்டார்கள்? எவற்றை விலை பேசினார்கள்? நினைத்தது நின்றதா?

கதையை எழுதியவர் சொல்லியது:

“பால்ய கால நினைவுகளில் இருந்து இந்தக் கதை உருவானது. அப்பொழுதுதான், அந்தத் தாறுமாறான விளம்பரத்தை அதைவிட தாறுமாறான இடத்தில் தற்செயலாக பார்த்தேன். மூளையில் ஏற்பட்ட வீக்கத்திற்காக என் ஒன்றுவிட்ட அக்கா, அறுவை சிகிச்சைக்குள்ளாக இருந்த சமயம் அது. அந்த சமயத்தில் கடுமையான, நிலையான கலக்கத்தில் இருந்தேன். அப்பொழுது பயத்தால் முடங்கி, செய்வதறியாது அவளின் கணவனை, தினசரி இரண்டு தடவை அழைத்து அவளின் நிலையைப் பற்றி கேட்பேன். அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி அவள் சகஜநிலையான பிறகு, இதை எழுதத் துவங்கினேன். ”

solvanam வாருங்கள். வாசியுங்கள். உங்கள் கருத்தைப் பகிருங்கள்.

பெட்டிகளும் பூட்டுகளும் திறப்புகளும்

ரொம்ப நாள் கழித்து நல்ல கதை ஒன்றைப் படித்த திருப்தி பிரஜேஷ்வர் மதன் எழுதிய “தபால் பெட்டி”யில் கிடைக்கிறது.

ஆங்கிலம் வழி தமிழாக்கம் என்பது அமெரிக்க உணவகங்களில் இந்தியச் சாப்பாடு உண்பது போல், “உங்களுக்கு காரம் எவ்வளவு வேண்டும்? மைல்ட்? மீடியம்?? ஹாட் அண்ட் ஸ்பைசி???” என்பது போல் தூவப்பட்ட மசாலாவோடு இருக்கும்.

தலைப்பாகட்டிக்கோ அஞ்சப்பருக்கோ போனால் அதெல்லாம் கேட்கமாட்டார்கள். அவர்களாக இஷ்டத்துக்குப் போட்டுத் தருவார்கள். ஹிந்தி வழி தமிழாக்கம் செய்யும் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி அந்த வகை லோக்கல். எல்லாம் சரியாக இருக்கும்.

இந்தக் கதை ஏன் கவர்கிறது?

  • சும்மா அங்குமிங்கும் பாய்கிறார்: தபால் பெட்டியை வைத்து என்னைக் குறி வைக்கிறார் பிரஜெஷ்வர் மதான்.
  • சிந்து பைரவியில் ஜனகராஜ் கதாபாத்திரம் போன்று இதுவும் செம்மையாக செதுக்கப்பட்டிருக்கிறது.
  • சம்பிரதாயமான சம்பவங்கள்; முடிவை நோக்கி பயணிக்கும் பாணி இல்லை. அதுபாட்டுக்கு இழுத்துச் செல்கிறது.
  • அதற்காக கோணங்கித் தனமாக புரியாமல், நான்கைந்து வாட்டி வாசித்தாலும் குழப்பாமல் சீராகச் சொல்லப்பட்டிருக்கிறது.
  • எல்லாம் இரட்டை அர்த்தம்; ஆனால், வலிந்து எல்லாம் திணிக்கவில்லை. எல்லாம் குறியீடு; எனவே, உங்கள் அனுபவத்திற்கேற்ப சொடேர் சொடேரென்று அடிக்கும்.

முன்னுமொரு காலத்தில் மாந்திரீக யதார்த்தம் எல்லாம் உலா வந்து கொண்டிருந்த காலத்தில் இப்படியாகப் பட்ட புனைவுகளை தமிழிலும் சந்தித்து இருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் எவர் இப்படி கொடுக்கிறார்கள்?

தபால் பெட்டிக்குள் உங்களால் புக முடிந்ததா?

சொல்லுங்களேன்…

Climbers by Helen DeWitt

”உங்களுக்கு பொருட்டில்லாததை விற்கிறீர்கள். தேவடியாத்தனம் செய்யும்போது அது உடம்பு. பதிப்பிக்கும்போது, அது மூளை. மூளையை வைத்துதானே புத்தகம் எழுதுகிறோம்…”

ஆஃபீஸ் ஸ்பேஸ் (Office Space) படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தை இன்னும் கொஞ்சம் இலக்கியத்தரமாக எழுதினால், வாசகனை கொஞ்சம் யோசிக்க வைக்குமாறு புத்தகமாக உருவாக்கினால் எப்படி இருக்கும்? ஹெலன் டூயிவிட் எழுதிய மின்னல் தடிகள் (Lightning Rods) போல் இருக்கும். அந்தப் புத்தகம் குறித்த அறிமுக விமர்சனங்கள்தான் எனக்கு ஹெலன் என்னும் எழுத்தாளரை அறிமுகம் செய்தது.

அந்தப் புத்தகத்தின் கதை என்ன?

சந்தையிலே செல்லுபடியாகாத விற்பனையாளர் அறிமுகம் ஆகிறான். எதையும் சாமர்த்தியமாகப் பேசி ஒழுங்காக விற்கத் தெரியாதவன். வெட்டிப் பேச்சும் அழையா ஆலோசனைகளுமாக காலத்தைப் போக்குபவன். அனைத்து நிறுவனங்களிலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக மனிதவள மேலாளர்கள் கெடுபிடியான நடைமுறைகளை வைத்திருக்கிறார்கள். அதற்கு மாற்றாக புத்தம்புதிய சாதனத்தை அறிமுகம் செய்கிறான். அலுவலில், பாலியல் தொல்லைகளை அதிகரிக்கும் சாதனம் – அனைத்து கழிப்பறைகளிலும் பொருத்தி விட வேண்டும். இந்தப் பொருளை நிறுவி விட்டால் உடன் பணிபுரியும் பெண்களைப் புணரலாம். யார் புணர்கிறார்கள் என்று தெரியாது. அலுவல் அழுத்தங்களும் அடக்கி வைத்த ஆசைகளும் இந்த மாதிரி சாதனத்தை நிறுவுவதால் நீங்கும் என்று அந்த விற்பனையாளன் அமோகமாக சந்தையில் சொல்லி, ஜாம்ஜாமென்று பணம் புரட்டுகிறான்.

இந்தக் கதையின் நாயகன் குறித்த பேட்டியில் ஹெலன் இவ்வாறு சொல்கிறார்:

“நான் பெண்ணாக இருந்தாலும், ஆண் பார்வையில் இந்தக் கதையை எழுதினேன். சொல்லப் போனால் பெண்களை முக்கிய பாத்திரமாக வைத்து எழுதுவதை விட ஆண்களை கதாநாயகனாகப் போடுவது எளிதாகவே இருக்கிறது.

என்னுடைய சின்ன வயதில் கை பாட்டுக்கு தானாக எதையாவது வரையும். ஆனால், பெண்களைத்தான் வரைய முடியும். என்னால் பசங்களை வரையவே முடியவில்லை. அந்த உருமாற்றம் எப்பொழுது நடந்தது என்று தெரியவில்லை. ஆண்களுடன் பழகும்போது கவனித்தேன்; அவர்களால் தங்களைப் பற்றியே பேச முடிந்தது. ஒரு ஆண் கதாபத்திரத்திற்குள் சென்று, அந்த பாத்திரம் மாதிரி யோசிக்க வேண்டுமானால், ரொம்ப சிரமப் பட வேண்டாம். அந்த ’ஆணுக்கு’ ஒருவிதமான மனப்பிடிப்பைக் கொடுக்க வேண்டும். அந்தப் பிடிப்பின் மேற்சென்று மிகைவிருப்பமாக்க வேண்டும். அது எப்படி அவனை ஆட்டிப்படைக்கிறது என்று எழுதினால் போதுமானது.

பெண்களை கதாபாத்திரங்களாக்குவது அவ்வளவு நேர்ப்படையானதல்ல. அவர்கள், அவ்வளவு சீக்கிரம் உணர்வு வசம் சிக்கி மாற்ற இயலா எண்ணத்திற்குள் சுழல்வதில்லை.

மின்னல் தடிகள் (Lightning Rods) நாவல் செக்ஸைப் பற்றியது. சாப்பிடும்போது கூட செக்ஸை குறித்து சகஜமாகப் பேச ஆடவர்களால் முடிகிறது. எந்த ஆணுடன் பேசினாலும் சரி… அவர்கள் இந்த மாதிரி ஏதாவது ஒன்றை உதிர்க்கிறார்கள்: ‘பருத்த மார்புகள் எல்லாருக்கும் பிடிக்கும்!’ உடனே எனக்கு நூறு கேள்விகள் தோன்றும். உனக்கு எப்படி இது தெரியும்? உனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று எப்படி உன்னால் சொல்ல முடிகிறது? கருத்துக்கணிப்பு எடுத்தாயா? இதே ரீதியில்தான் என்னுடைய நாயகனும் இருக்கிறான். நம்பிக்கையாகப் பேசுவான். அவனுடைய இச்சையை வைத்து அனைவரைக் குறித்தும் அடித்துப் பேசுகிறான்.

இதே மாதிரி மக்களை பதிப்புத்துறையிலும் தொடர்ச்சியாக சந்தித்தேன். புத்தக வெளியீட்டிற்காக அவர்களுடன் உரையாடும்போது… மன்னிக்கவும்… பின்னாலிருந்து முகந்தெரியாத எவனோ ஒருத்தன் புணருவது போல் உணர்ந்தேன். தேவையில்லாத அறிவுரைகளைக் கேட்டு காது புளித்துப் போனபோது, இந்த நாவல் உருவானது.”

சரி… இப்பொழுது நவம்பர் ஹார்ப்பர்ஸ் இதழில் வெளியான ஏறுபவர்கள் (Climbers) கதைக்கே வந்து விடுவோம்.

ஹார்பர்ஸ் பத்திரிகையில் ஹெலன் (Helen DeWitt) எழுதிய ஏறுபவர்கள் (Climbers) கதை இங்கே கிடைக்கிறது: http://harpers.org/archive/2014/11/climbers/ (சந்தாதாரர்களுக்கு மட்டும் படிக்க இயலும்)

கதையில் நான்கு கதாபாத்திரங்கள். முதலாவதாக நமக்கு கில் அறிமுகமாகிறான். துடிப்பானவன். சுவாரசியமாகப் பேசுகிறான். நியு யார்க்கில் வசிக்கிறான். நிறைய படம் பார்த்து, புத்தகம் படித்து, இசை கேட்டு, கணினி மேய்ந்து, விளையாட்டுகள் களித்து வாழ்பவன். அவனுடைய உபசரிப்பு விழாவில் நமக்கு சக எழுத்தாளினியான ரேச்சல் அறிமுகமாகிறாள். பரபரப்பான கல்யாண ரிசப்ஷனில் தனியே போய் பஃபே சாப்பாடு எடுத்துக் கொள்வது போல், கில் வசிக்கும் வீட்டில் நடக்கும் இலக்கிய கூட்டத்தின் நடுவே விடப்பட்டிருக்கிறாள்.

இரண்டாவதாக சிஸ்ஸி தோன்றுகிறாள். (நீங்கள் என்னை முறைப்பது தெரிகிறது. ரேச்சல் என்பவள் இரண்டாம் எண்ணுக்குரியவள் அல்லவா என்று மறுமொழியில் கேட்காதீர்கள். பெயரில் என்ன இருக்கிறது? சிஸ்ஸியாக இருந்தால் என்ன… ரேச்சல் ஆக இருந்தால் என்ன போச்சு… அல்லது இருவருமே ஒருவர்தான் என்றாலும் உங்களுக்கு என்ன? நீங்கள் தொடருங்கள்) அவள் ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரத்தில் பீட்டர் டிஜிக்ஸ்டிரா என்னும் எழுத்தாளரை அகஸ்மாத்தாக சந்திக்கிறார். இந்த எழுத்தாளர்தான் கதையின் மையக் கரு. இவரைச் சுற்றித்தான் எல்லாம் நகர்கிறது.

எழுத்தாளர் என்று ஒருவர் இருந்தால் நாவல் என்று ஒன்று உருவாகும். நாவல் என்று ஒன்று உருவானால், அதைப் பதிப்பிக்க பதிப்பாளர் என்று ஒருவர் வேண்டும். பதிப்பாளரிடம் பத்திரமாக எழுத்தாளரையும், அவ்வளவு பத்திரமில்லாமல் அவருடைய நாவலையும் கொண்டு சேர்க்க ஏஜெண்ட் என்று ஒருவர் வேண்டும். அவர் ரால்ஃப்.

கால்ஃப் ஆடுவது போல் நல்ல பெயர் ரால்ஃப். பெயருக்கேற்ப நல்ல ஆடைகளையும், கவின்மிகு பழரசங்களையும், திடகாத்திரமான கண்கவர் வழக்கங்களையும், கொண்டவன். கொஞ்சம் போல் படாடோபம். நேர்த்தியான விற்பனையாளனைப் போல் எழுத்துக்களை அற்புதமாக பிரபலமாக்குபவன். சன்னமான எழுத்துக்களையும் கோட்டையில் கோலோச்ச வைப்பவன். அவனுடைய கைபட்டு நூல் வெளியானால், ஆப்பிரிக்காவில் இருந்து எபோலா பரவுவது போல் உலகெங்கும் அந்தப் புத்தகம் நோபல் பரிசுக்காக பேசப்படும்.

இந்த நாலு பேருக்கு நடுவில் ராபர்ட்டோ பொலானோ (Roberto Bolaño) எழுதிய 2666 உருளுகிறது. எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவைப் அசப்பில் பார்த்தால் ராபர்ட்டோ பொலானோ கூட நினைவிற்கு வரலாம். எழுத்தாளர் பீட்டருக்கு சீக்கிரம் பணம் புரட்ட வேண்டும். சிகரெட் பிடிக்க பணம் வேண்டும். நாலு சுவற்றுக்குள் அடைந்து கிடக்க வாடகைப் பணம் கட்ட வேண்டும். காலாற நடக்க பணம் வேண்டும். அதற்காகவாது எழுத வேண்டும். பணத்திற்காக எழுத வேண்டும்.

ராபர்ட்டோ பொலானோவின் 2666 குறித்து இரண்டு விதமான விமர்சனங்களை ரேச்சலும் சிஸ்ஸியும் சொல்கிறார்கள். ஒருவரால் இரண்டு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை. ’இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு புத்தகம் மட்டும் படித்தால் போதும் என்றால் அது ரொபார்ட்டோ போலானோ எழுதிய 2666 மட்டும்தான்’ என்னும் வகையில், இன்னொருவரால் 2666ன் சில பகுதிகளைப் படித்தாலே ஜென்ம சாபல்யம் கிட்டுகிறது.

பொலானோ எழுதிய பிரும்மராட்சஸ துப்பாறிவாளர்கள் (The Savage Detectives) நாவலை நீங்கள் படித்ததுண்டா? அதில் நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பார்வையில் கதை விரியும். புலவர்களுடன் உரையாடல், புலமைக் காய்ச்சல்கள், கவிஞர்களின் வாழ்விலே ஒரு நாள் என்று கலவையாகச் சொல்லப்பட்டிருக்கும். இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையும் இவ்வாறே நாலு எழுத்தாளர்களின் வாழ்வியல் சித்திரங்களுடன், பேச்சுக்களுடனும், விமர்சனங்களுடனும், எழுதவியலா தருணங்களின் தவிப்புகளுமாக விரிகிறது.

ஏறுபவர்கள் (Climbers) கதையில் – நிஜ எழுத்தாளர் ராபர்ட்டோ பொலானோ போல் உடனடியாக பணம் தேவைப்படும் கதாநாயகனாக பீட்டர் டிஜிக்ஸ்டிரா; ஆனால் ஏறுபவர்கள் (Climbers) கதையோ பொலானோவின் தி சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலைப் போல் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது சிக்கலானது. இவரைப் போல் இருக்கிறது, அவரைத்தான் குறிப்பிடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழாமல் பொதுப்படையாக, அதே சமயம் சம்பவங்களும் + விஷயங்களும் கலந்து எழுத வேண்டும். குறியீடுகள் சொல்லப் போய், கதையே புரியாமலும் போக விடாமல், நேரடியாகவும் பூடகமாகவும் புரிய வைக்க வேண்டும். எழுத்தாளர் என்றாலே இப்படித்தான் இருப்பார் என்னும் அரைத்த + புளித்த மாவான வார்ப்புருவிற்குள் சிக்காமல் கதை வளர வேண்டும். அவற்றை இந்த ஏறுபவர்கள் (Climbers) கதையில் ஹெலன் இயல்பாகக் கொண்டு வருகிறார்.

அந்த நாலு ஏறுபவர்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

பீட்டர் டிஜிக்ஸ்டிரா மனநல மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டவர். சிறிது சரிந்தாலும், மீண்டும் மனநல காப்பகத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். அவருக்கு ஆங்கிலம் இரண்டாம் மொழி. தாய்மொழியில் எழுதி பணம் சம்பாதிக்க முடியவில்லை. ஷிவாஸ் ரீகல் வேண்டாம். நல்ல பியர் கூட வாய்க்கப் பெறுவதில்லை. எனவே, ஆங்கிலத்தில் எழுத முயல்கிறார். முதலில் வார்த்தைகள்; தேர்ந்தெடுத்த வார்த்தைகளாகப் பொறுக்க வேண்டும். வார்த்தைகள் கிடைத்த பின் வாக்கியங்கள். வாக்கியங்களை எப்பொழுது நேரம் கிடைக்குமோ, அப்பொழுது மனிதர்களிடம் ஏற்றிவிடப் பார்க்கும் எழுத்தாளர்.

கில் ஒரளவு புகழடைந்துவிட்ட எழுத்தாளன். விளக்கு வைப்பதற்குள் வோட்கா ஏற்றிக் கொள்பவன். இலக்கியவாதி பீட்டர் டிஜிக்ஸ்டிராவிற்கு மாடியறையைக் கொடுப்பதால் சமூக அந்தஸ்திலும் ஏற நினைப்பவன். உண்மையை எழுத்தில் ஏற்ற எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடியலைபவன்.

ரேச்சல் புத்தகம் எழுதி அச்சில் கண்டவள். பீட்டர் டிஜிக்ஸ்டிராவை ஏற்றிவிடத் துடிப்பவள். வான் கோ வரைந்த ஓவியம் பிடிக்கும் என்பதால் வான் கோ வரைந்த ஊருக்கே சென்று, அவருடைய வீட்டினுள்ளே வசித்துப் பார்க்க விழையும் ஜாதி. எழுத்தாளருடன் அளவளாவினால், என்ன சங்கதி கிடைக்கும் என்று அளந்து பார்க்காமல், எழுத்தாளனின் எழுத்தை அடித்தல் திருத்தலோடு, முதல் பிரதியை வாசிக்க விழையும் ஜாதி. எழுத்தாளரின் ஒரு கதை பிடித்துப் போனதால், மொழி புரியாத அயல்நாட்டுப் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வீட்டின் புத்தக அலமாரியில் கொலு வைத்து அழகு பார்க்கும் ஜாதி. ஒரேயொரு புரிதல் கலந்த ஆற்றுப்படுத்தும் சிணுங்கலில் எவரையும் ஆசுவாசப்படுத்தி தரைக்கு இறக்கும் ஜாதி.

இறுதியாக முகவர் ரால்ஃப். பாரிஸ் என்றால் சாக்லேட் காதல்; லத்தீன் அமெரிக்கா என்றால் மாந்திரீகம் தூவிய எதார்த்தம்; ஜப்பான் என்றால் தனிமைத் துயரின் விரக்தி; என்ற பாசறையில் டட்ச்சு மொழிக்கான இலக்கணமாக எழுத்தாளர் பீட்டர் டிஜிக்ஸ்டிராவை கணிப்பவர். அமெரிக்காவின் அமெரிக்கர்களின் எடுத்துக்காட்டாக கதையில் வருகிறார். கண் துஞ்சாமல், கருமமே கண்ணென இலக்கியத்தை செய்து முடிப்பவர். இவர் போன்றோர் ஏவுவதனாலேயே, எழுத்தாளர்கள் தங்கள் காவியங்களுக்கு இறுதி வடிவைத் தருகிறார்கள்; விமர்சகர்கள் பயபக்தியோடு அந்த இலக்கியபீடத்தை அணுகுகிறார்கள்; நூல் வெளியீட்டாளர்களும் லாபம் சம்பாதித்து பங்குச்சந்தையில் ஏறுகிறார்கள்.

கதையின் அமைப்பு மிகவும் சிக்கலான அமைப்பு. சிறுகதையில் இத்தனை கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நாட்டில் உலாவுகிறது. முடிவிற்கு வெகு அருகில் கதை துவங்குகிறது. அந்த முடிவிற்கு சற்றே முன்பாக கதை முடிகிறது. முன்னும் பின்னுமாக கதை உலாவினாலும் குலுக்கிக் குலுக்கிக் கதையை விட்டு தூரப் போடாமல், சுவாரசியமாக முன்னேறுகிறது. அந்த அமைப்பிற்காகவே இன்னொரு முறை படித்தேன். மீண்டும் படிக்கும்போதுதான், வார்த்தைகளின் தேர்வும், கதாபத்திரங்களின் குணாதிசய அறிமுகங்களும், சொல்லாட்சியும் பிடிபட்டது. அந்தச் சுவைக்காக மீண்டும் மூன்றாம் முறை படித்தேன். அப்பொழுதுதான் மற்ற புத்தகங்களின் விமர்சனமும், வேற்று மொழி கற்றுக் கொள்வதை சொல்லும் நேர்த்தியும், சுற்றுலா தலங்களை விவரிக்கும் வர்ணனையும் ஈர்த்தது. அதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/Theodor_W._Adorno

முதல் நாவல்

ஒவ்வொரு மொழியிலும் “தலைச்சன் குழந்தை” என்று பெயர் பெறும் முதல் நாவல்களின் பட்டியல் கீழே:

  • தமிழ்: வேதநாயகம் பிள்ளையின், “பிரதாப முதலியார் சரித்திரம்” (Prathapa Mudaliar Charitram by Samuel Vedanayagam Pillai. Written in 1857, it was published only in 1879)
  • அசாம்: ஹேம் சந்திர பாருவாவின், “பாகிரே ராங்-சாங்-வித் தாரே கோவபத்தூரி” (Padmanath Gohain Baruah’s Bhanumoti, published in 1890)
  • வங்காளம்: பாங்கிம் சந்திரரின், “ஆனந்த மடம்” (Bankim Chandra Chatterjee, Bengali novel, Durgeshnandini in 1865)
  • குஜராத்தி: கோவர்த்தன் ராமின், “சரஸ்வதி சந்திரர்” (அல்லது Nandshankar Mehta’s Karan Ghelo (1866))
  • இந்தி: பிரேம் சந்தின், “சேவாசதன்” (or Pariksha Guru by Srinivas Das, published in 1882 or popular novel in Hindi was Chandrakantha by Devaki Nandan Khatri, published in 1888)
  • கன்னடம்: கெம்பு நாராயணாவின், “முத்ரா மஞ்சூசா.” (or Kannada, Indira Bai by Gulvadi Venkata Rao, was published in 1899)
  • மலையாளம்: அப்பு நெடுங்காடியின், “குண்டலதா” (Kundalatha (1887) by Appu Nedungadi.)
  • மராத்தி: யமுனா, “பர்யாதன்” (Yamuna Paryatan (1857) written in Marathi by Baba Padamji)
  • ஓரியா: பிரஜநாத் பாட்ஜேனாவின் “சதுர்பினோத்” (or Saudamani, written by Ramashankar Ray in 1878 or Chaa Mana Atha Gunta written by Fakir Mohan Senapati and published in 1897)
  • சிந்தி: மீர்சாகலிச் பெக்கின் “திலாராம்”
  • தெலுங்கு: கண்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் “ராஜசேகர சரித்திரா” (Sri Rangaraju Charitra, written by civil servant Narahari Gopalakrishnama Setty and written in 1867)
  • பஞ்சாபி: பாய் வீர் சிங் எழுதிய “சுந்தரி” (Sundari (1898) by Bhai Vir Singh has the distinction of being Punjabi)
  • மணிப்புரி: லமம்பம் கமல் சிங் எழுதிய “மாதவி” (Lamabam Kamal Singh’s Madhavi (1930))
  • காஷ்மீரி: அக்தர் மொயுதீன் எழுதிய “டாட் டாக்” (நோயும் வலியும்) (Kashmiri, Dod Dag (Sickness and Pain) written by Akhtar Mohi-ud-din, was published in 1957)
  • உருது: நசீர் அகமது எழுதிய “மிரட்-அல்-உருஸ்” (Mirat-al-Urus (The Bride’s Mirror, 1868-69) by Deputy Nazeer Ahmed)
  • ஆங்கிலம்: பங்கிம் சந்திர சாடர்ஜி எழுதிய “ராஜ்மோஹனின் மனைவி” (1864, English Rajmohan’s Wife was written Bankim Chandra Chatterjee)

You do not describe the past by writing about old things, but by writing about the haze that exists between yourself and the past

வாழ்க்கை என்பது அபத்தமானதா? இது இந்தக் கதையின் தொடர்பு.

நான் இந்த வாழ்க்கை அபத்தம் என்பேன். ஏன்? இரு காரணங்கள். ஒன்று அண்டவெளி; மற்றொன்று காலம். இந்தத் திரண்ட அகிலத்தில், நாம் வெறும் நகத்துணுக்கு. அதே போல், நம் ஆயுள் காலமும், யுகம் யுகமாக, டிரையாசிக், ஜுராசிக் என நீளும் இடையூழி காலத்தின் மிகச் சிறிய தொடர்ச்சியின் துகளாகும்.

இது போல் அளவில் குறைவால் இருப்பதால் மட்டும் வாழ்க்கை சிறுமையாகிவிடுமா என்பதை இந்தத் துணுக்குகள் மூலம் இக்கதை ஆராய்கிறது.

வால்டேரின் தத்துவ புனைவான “மைக்ரோமேகாஸ்” ஞாபகமிருக்கிறதா? சிரியஸ் நட்சத்திரத்தில் இருந்து இராட்சஸ் உருக் கொண்ட பூதம், பூமிக்கு சுற்றுலா வருகிறது. தன் பூதக் கண்ணாடியினால், நம்முலகைப் பார்க்கிறது. எதுவும் தெரியவில்லை. ஒன்றும் கண்ணுக்கு புலப்படவில்லை. கட்டாங்கடைசியில் மாபெரும் கடலில் ஒரு சிறிய கப்பலில் நிறைய மனிதர்களை கண்டுபிடிக்கிறது.

“அட… பார்வைக்கு புலனாகாத பூச்சிகள்!” என ஆச்சரியப்பட்டு, அந்த ஜந்துக்களுக்குக் கூட இதயம் இருப்பதை கண்டுகொள்கிறது. அதன் பிறகு, மானுடர்களின் அற்ப உடல் அளவு, அவர்களை அற்ப பதர் என்றே அழைக்க வைக்க வேண்டுமோ என எண்ணுகிறது.

“ஏ, புத்திசாலி அணுக்களே! நீங்கள் இவ்வுலகின் சுகங்களை ரசித்து மகிழ்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கையை ஆரோக்கியமான சிந்தையிலும், சந்தோஷமான காதலிலும் திளைத்து உற்சாகத்தில் திளைக்கிறீர்கள்… இல்லையா?”

இதற்கு பதிலாக அந்த மானுடர்கள் அரிஸ்டாடிலின் தத்துவத்தையும் டெஸ்கார்தேயின் மெய்யியல் அனர்த்தங்களையும் படு தீவிரமாக விளக்க ஆரம்பிக்கின்றன. இப்போது, பூதத்தால் தன் நகைப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த சிறிய மனிதனை மாற்று கிரகபூதம் பார்த்தது போல் இந்தச் சிறுகதையை நான் பார்ப்பேன். இதில் நிறைய பகுதிகள் இருக்கின்றன; நிறைய துகள்கள் இருக்கின்றன; நம்முடைய புற+அக உலகம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

மேலும்: Devotions Upon Emergent Occasions, by John Donne

Man consists of more pieces, more parts, than the world. And if those pieces were extended, and stretched out in man as they are in the world, man would be the giant, and the world the dwarf; the world but the map, and the man the world.
சிறுகதை » மீர்ச்சா கர்த்தரெஸ்கோகாலத்துகள்

கொஞ்சம் இடைவெளி: கொரோனா கதைகள்

முதலில் கதையைப் படித்து விடுங்கள்:

https://www.newyorker.com/magazine/2020/03/23/out-there

“Out There,” by Kate Folk | The New Yorker: Fiction by Kate Folk: “The early blots had been easy to identify. They were too handsome, for one thing.”

ப்ளாட் என்பது என்ன? பாட் போல் அதுவும் கணினியில் மட்டும் இயங்குவது.

நம் துணைவர் எப்படி இருக்க வேண்டும்? என்னுடைய விஷயத்தில் அக்கறை எடுப்பார். தும்மினால், இருமினால் என்னாச்சு என்பார். எவனாவது இணையத்தில் தாக்கினால் குரல் கொடுப்பார். நான் செய்யும் அச்சுபிச்சுகளைப் பொறுப்பார். ப்ரூ காபி விளம்பரம் போல் எதிர்பாராததை செய்வார். வெறுமனே காமத்திற்கு மட்டும் என்னை உபயோகிக்க மாட்டார்.

மாடு பிடிப்பது போல் ஆணைத் தேடும் சமூகம். சந்தை போல் குவிந்திருக்கிறார்கள். அதில் பாதி பேர் போலி. கொஞ்ச காலம் துணையாக நடிப்பார்கள். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பவர்கள் சட்டென்று இன்னொரு பெண்ணின் பின் சென்று விடுகிறார்கள். கரிசனத்துடன் விசாரிப்பவர்கள் பின்னொரு நோக்கத்தோடு வேறொரு பாதையில் போய் விடுகிறார்கள்.

இந்த நிலைமையில் எப்படி பொருத்தம் பார்ப்பது? யோனி, ரஜ்ஜு எல்லாம் போதுமா? பழக வேண்டும். ஆணின் உண்மையான குணாதிசயம் தெரிய வேண்டும். அந்தரங்கம் வெளிப்பட வேண்டும். ஆத்மார்த்தமான அன்பு உணரப்பட வேண்டும்.

இதைத் தற்காலத்திற்கேற்ப இந்தக் கதை சொல்கிறது.

கதாநாயகிக்கு நிறைய பிரச்சினைகள். முன்னாள் குடிப்பழக்கம்; தனிமை; அனாதரவாக விட்ட தந்தை; புதிய நகர வாசம்.

இருந்தாலும் நாயகி உயர்வாக உணர்கிறாள். சத்தான பழரசம்; பாவப்பட்ட ஜென்மம்; வஞ்சிக்கப்பட்டவள்.

This piece has some things in common with the recent one in The New Yorker, “Kid Positive” by Adam Levin (interrogation of our backstories, notions of real vs. fake and where the lines blur), as well as Elvia Wilk’s 2019 novel Oval, Ishiguro’s neo-classic Never Let Me Go, Jonathan Lethem’s novel from a few years back A Gambler’s Anatomy, and the stories of Aimee Bender (நன்றி: Kate Folk: “Out There” – The Mookse and the Gripes)

இயந்திரத்தனமாக நடப்பதை விரும்பாதவரின் கதை இது. நாயகியும் எந்திரத்தனமாகும் கதை இது. வேண்டுவதை செய்யும் கணவனை எதிர்பார்க்கிறோம். எப்போதும் ஒரே மாதிரி செயல்படும் புருஷனை எதிர்பார்க்கிறோம். இது சலிப்பூட்டும். எது வேண்டுகிறோமோ, அதுவே கிடைத்துவிட்டால், இடைவெளியை கோருகிறோம்.

மேலும்…

Kate Folk on Discerning Reality on the Internet | The New Yorker: The author discusses “Out There,” her story from this week’s issue of the magazine.

அடிக்கப்பட்ட நோட்டுப்புத்தகம்

இது “Birdman” திரைக்கதை எழுதிய நிக்கொலஸ் Nicolas Giacobone-இன் சமீபத்திய ஆக்கம்.

அதில பட இயக்குநரால் கதாசிரியர் கடத்தப்பட்டு மூலையிடத்தில் அடைக்கப்படுகிறார். படத்தை எழுதி முடித்தால் மட்டுமே விடுதலை கிடைக்கும். அதில் இருந்து குட்டி நறுக்கு கீழே:

திரைக்கதையை எழுதி முடிக்கும்போது, ‘இது பரவாயில்லையே… சுலபமாகத்தானே இருக்கு’னு நினைத்தாலோ, திரைக்கதை எழுதுவதற்கெல்லாம் எந்த சிதம்பர ரகசியமும் கிடையாதுனு சொன்னாலோ, அந்தக் கதை மயிருக்குத்தான் சமானம். நீங்கள் அல்லாட வேண்டும். சுவற்றில் மண்டையை முட்டிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் எந்த எழவுக்கும் பிரயோஜனம் இல்லையோ என்று நெருநெருக்க வேண்டும். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து அந்த முகத்தின் மூடத்தனத்தை உணரவேண்டும்; ஏனென்றால் எல்லோருக்கும் முழுமூட முகங்களே உள்ளன – அவ்வளவு ஏன் மூடத்தனமான கண்களைக் கொண்டுள்ளோம். வாரத்திலொரு முறையாவது பைத்தியம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும். நீங்கள் அழவேண்டும். எழுதியதைப் படித்தவுடன் அழவேண்டும் – காட்சிகள் சோகமாக இருப்பதால் அல்ல; அவை படுமோசமாக இருப்பதால். மணிக்கணக்கில், நாள்கணக்கில், மற்ற தொழில்கள் செய்வதை கற்பனை செய்து பார்க்கவேண்டும். மணிக்கணக்காக பெருஞ்சாமங்கள் செலவழித்து தகுதியான சால்ஜாப்புகளை பொய்யாகவேனும் தோற்றுவித்து தோல்விகளை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.