சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.
ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:
- 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்
அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.
- இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்
இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு
- ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்
இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!
- Femino 16: சப்னாஸ் ஹாசிம்
இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.
நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்
- சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்
கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam
- ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்
தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.
- பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்
தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!
தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.
உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?