SAMACHAR — The Bookmark for the Global Indian:
தெய்வத்தின் லௌகீகப் பயன்பாடு
இந்தியர்களைப் பற்றி ஒரு தவறான கருத்து மேல் நாடுகளில் பரவியிருக்கிறது. நமக்கு ‘இந்த’ உலகத்தைக் காட்டிலும், மேலேவுள்ள ‘அந்த’ உலகத்தைப்பற்றித்தான் எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறோமென்று. அமரர் ஏ.எஸ்.பி அய்யர், இதைப் பற்றிக் கூறியதொன்று நினைவுக்கு வருகிறது. ‘நமக்கு எப்பொழுதுமே கைலாஸமோ அல்லது வைகுண்டத்தைப் பற்றித்தான் அக்கறை என்றால், இந்தியாவின் ஜனத்தொகை அதிகரித்துக்கொண்டே போகிறதே, இதற்கு என்ன சொல்லுகிற¦ர்கள்?’
நியாயமான கேள்வி.
இந்தியாவை மேல்நாட்டினருக்கும், இந்தியருக்குமே விளக்கிக்கொண்டிருந்த காலனி ஆட்சிக் காலத்து மேல்நாட்டு இந்தியவியல் விற்பன்னர்கள், இந்தியர்களுக்கு லௌக¦கத்தைக்காட்டிலும் ஆன்ம¦கத்தில்தான் அதிக ஈடுபாடு என்ற அபிப்பிராயத்தை உலகமெங்கும் உருவாக்கி விட்டார்கள். சுதந்திரத்துக்குப் பின் உருவான அரசியல், அதிகார வர்க்கங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏன், இப்பொழுது ஆன்ம¦கத்தையும் சந்தைப் பொருளாக்கிவிட்ட பெருமை நம்முடையது என்பதை யாரால் மறுக்கமுடியும்?
நம் சமய வழிபாட்டு விழாக்கள் அனத்துமே லௌக¦க சௌகர்யங்களுக்காகத்தான்.
மார்கழிமாதத்துப் பாவை நோன்பு எதற்காக? இம்மாதத்தில், குளிர்ப்பருவத்தில், விடியற்காலையில் ந¦ராடிவிட்டு, ஆண்டாளின் ‘திருப்பாவை’ 30 பாசுரங்களையும் பஜித்துக்கொண்டே வ¦திவலம் வருவது மரபு. பன்னிரண்டு ஆழ்வார்களில், ஆண்டாள் ஒருவர்தாம் பெண்பாற்புலவர். கிருஷ்ணனை மணாளனாகப் பெறுவதற்காகப் பாடப்பட்டது ‘திருப்பாவை’ என்கிறார்கள். கண்ணன் வாழ்ந்த காலத்தில் வாழும் ஆயர் குலப் பெண்ணாகத் தம்மை பாவித்துக்கொண்டு, ஆயர்பாடியிலிருக்கும் மற்றைய கன்னியர்களோடு, ஆற்றுக்குச் சென்று ந¦ராடிய பிறகு கண்ணனை வழிபடும் நோன்பு இது.
கிருஷ்ணனாகிய ஸ்ரீமந் நாராயணன் ஒருவன் தான் புருஷோத்தமனாகிய பரமாத்மா, ஆயர்பெண்கள் ஜ¦வாத்மா என்று ‘திருப்பாவை’க்கு ஆன்ம¦க விளக்கம் கூறியுள்ளனர் நம் பெரியோர்கள். ‘கொங்கைகளுக்கும்’ இரகஸ்யார்த்தம் சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.
‘திருப்பாவை’ ஆன்ம¦கத்தை மட்டுந்தானா சொல்கிறது?..
தை மாதத்தில் அறுவடை நடக்கும். மார்கழி மாதம், தையில் நல்ல விளைச்சலை வேண்டிக் காத்துக் கொண்டிருப்பார்கள். நல்லது ஏற்பட வேண்டுமென்றால், தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும் என்பது அக்காலத்து நம்பிக்கை. அதனால்தான், மார்கழிக் குளிரில், விடியற்காலையில், ஆற்றுக்குச் சென்று குளிக்கிறார்கள். நெய்யோ, பாலோ உண்பதில்லை. அணிகலன்கள் பூணுவதில்லை. ‘திருப்பாவை’யை ஊன்றிப் படிக்கும்போதுதான், நல்ல அறுவடையை வேண்டிப் பாடப்பட்ட பாடல்கள் இவை என்பது புலப்படும். ‘ஆழிமழைக்கண்ணா, ஒன்று ந¦ கை கரவேல்’ என்கிற ஆண்டாள் என்ன வேண்டுகிறார்? ‘தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல், வாழ உலகினில் பெய்திடாய்’.
அப்படி மழை பெய்தால் அவர்கள் தைத் திங்களில் அடையப்போகும் சம்மானம் என்ன? சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் போன்ற பல வகையான அணிகலன்களை அவர் அணிவார்கள். நல்ல ஆடை உடுப்பார்கள். இதற்கெல்லாம் மேலாக அவர்கள் விரும்புவதென்ன? ‘பாற்சோறு மூட நெய் முழங்கை வழிவார’ உண்ண இருக்கும் வளமான விருந்து!
இறைவனையே அம்பரமாகவும் (ஆடை) தண்ண¦ராகவும், சோறாகவும் உருவகக்கின்றார் ஆண்டாள். ‘உண்ணும் சோறும், பருகு ந¦ரும், தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணனே’ என்றார் நம்மாழ்வார். இதைவிட யதார்த்தமான, லௌக¦கமான உவமைகள் வேறு என்ன இருக்க முடியும்? ‘உண்ண உணவு, பருக ந¦ர், போகத்துக்கு வெற்றிலை’ என்று ஈடு விளக்கம் கூறுகின்றது. ‘எனக்கு வேண்டியது, ஒரு ரொட்டித் துண்டு, ஒரு வண்ண மலர்; ரொட்டி, வாழ்வதற்கு, மலர், வாழ்வதற்கு அர்த்தம் கற்பிக்க’ என்கிறது ஒரு பர்ஸியக் கவிதை.
பாவை நோன்பின் பயனைத் தெளிவாக மூன்றாவது பாடலிலேயே கூறிவிடுகிறார் ஆண்டாள்.
‘ஓங்கி உலக்களந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி ந¦ராடினால்,
த¦ங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்த ச¦ர்த்த முலைப் பற்றி
வாங்கக் குடல் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
ந¦ங்காத செல்வம். . . .’
நாடு வளம் பெற வேண்டுமானால், நாட்டு மக்கள் அனைவருக்கும் செல்வம் வேண்டும் என்று வெளிப்படையாக இறைவனிடம் லௌக¦கக் கோரிக்கை வைக்கிறார் ஆண்டாள். இதுதான் உண்மையான ஆன்ம¦கம்.
இந்திரனை வழிபடுகின்ற ஆயர்களிடம் கிருஷ்ணன் என்ன கூறுகின்றான்? ‘கண்ணுக்குத் தெரியாத ஒரு தெய்வத்தை வழிப்பட்டு என்ன பயன்? நமக்குப் பயன்படுகின்ற, நமக்கு நிழல் தரும் மரங்களையும், ஆடு, மாடு மேய்பதற்கான புல் வெளிகளையும் உடைய காடுகள் நிறைந்த இம்மலை,கோவர்த்தன கிரியை வணங்குவோம்’ என்கிறான்.
தெய்வத்தின் லௌக¦கப் பயன்பாட்டை நன்கு உணர்ந்தவர்கள் இந்தியர்கள்.
பிலாட்டோவின் சக்கரம்
‘பிலாட்டோவின் சக்கரம்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
முதலில் ‘ஜனநாயக’த்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். ‘டெமோஸ்’ (மக்கள்) என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது ‘டெமொக்ரஸி'(ஜனநாயகம்). பெரிக்லெஸின்(கி.மு. 460-430) மறைவுக்குப் பிறகு, கிர¦ஸில் ஜனநாயகம் தழைக்கத் தொடங்கியது. ஆனால், பிலாட்டோவுக்கு, இது அவ்வளவு உற்சாகத்தைத் தரும் செய்தியாக இல்லை. அவர் கூறினார்: ‘இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது? அராஜகத்தைச் சுதந்திரம் என்கிறார்கள். ஊதாரித்தனத்தைப் பொருளாதர மேம்பாடு என்கிறார்கள். வன்முறையை வ¦ரம் என்கிறார்கள். வயதானவர்கள் கூட இளைஞரைப் பின்பற்றிக் காலத்துக்கேற்ற கோஷம் எழுப்புகிறார்கள். சட்டத்தை அநுசரிப்பது என்பது பிற்போக்கானக் கருத்தாக மாறிவிட்டது. எதுவும் அளவுக்கு ம¦றினால், எதிர் விளைவு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனநாயகத்தின் எதிர்விளைவு சர்வாதிகாரம். இதை மக்கள் உணர வேண்டும்’.
தற்காலத்திய நம் இந்தியாவைப் பற்றி பிலாட்டோவுக்கு எப்படித் தெரிந்திருக்கக்கூடும் என்பது நியாயமான கேள்வி! ஏதென்ஸைப் பொறுத்தவரையில், பிலாட்டோ கூறியது நடந்துவிட்டது. ஏதென்ஸில், பணக்காரர்கள் இன்னும் பெரிய பணக்காரர் ஆனார்கள். ஏழைகள் இன்னும் பெரிய ஏழைகள் ஆனார்கள். ஏதென்ஸில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்தாயிற்று. ஏழைகளுடைய வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன.
வில் டூரன்ட்(Will Durant) கூறுகிறார்: ‘கோடீஸ்வரர்கள், செனட் பிரதிநிதிகளையும், மக்கள் வாக்குகளையும் விலைக்கு வாங்கினார்கள். விலைக்கு வாங்க முடியாவிட்டால் கொலைகள் நடந்தன. நாட்டாண்மைக்காரர்களுக்கு வாக்கு அளிக்காதவர்களுடைய வ¦டுகள் எரிக்கப்பட்டன’.
நம் அரசியல்வாதிகள் பிலாட்டோவையோ, வில் டூரன்டையோ படித்திருக்கக்கூடிய வாய்ப்பில்லை. கிரேக்க, ரோமானிய வரலாறுகளை அவர்கள் அறிந்து வைந்திருப்பார்கள் என்றும் அவர்கள் ம¦து குற்றம் சாட்ட முடியாது. ஆனால் சரித்திரம் அலுப்பு, சலிப்பு இல்லாமல் எப்படித் திரும்ப நடக்கிறது?
ரோம வரலாற்றில், தொல்குடிச் செல்வந்தர்கள் (Aristocrats), பாம்ப்யியை அழைத்து சட்டத்தை நிலைநாட்டச் சொன்னார்கள். சாதாரண மக்கள் இதற்கு ஜூலியஸ் ஸ¦ஸரை நாடினார்கள். ஸ¦ஸரால்தான் ஜனநாயகம் பிழைக்கும் என்று ஒரு சாதாரணக் குடிமகன் நம்பினான். ஜனநாயகத்தின் பேரில் பதவிக்கு வந்த ஸ¦ஸர் விரைவில் சர்வாதிகாரியானான்! அவன் முடியை நாடுகிறானென்று குற்றம் சாட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான். பிறகு என்ன நடந்தது? அவன் சகோதரியின் மகன் அகஸ்டஸ், மக்களின் ஒப்புதலுடன் மாமன்னனாக முடிசூட்டிக் கொண்டான்! பிலாட்டோவின் சக்கரம், வட்டமாகச் சுற்றி பழைய நிலையிலேயே வந்து நின்றது!
பிஜு பட்நாய்க்யை ஞாபகம் இருக்கிறதா? அவர் ஒரு சமயம் கூறினார்: ‘ஜெயின் டயரியில் (ஹாவாலா புகழ் ஜெயின்) மன்மோகன்சிங் பெயர் இடம் பெறவில்லை. ஆகவே அவர்தான் இந்தியாவின் பிரதமராக இருக்கத் தகுதியானவர்’ என்று. (மேற்குவங்க கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி சம¦பத்தில் இதைத்தான் சொன்னாரென்று பத்திரிகைகளில் செய்தி வந்தது. அதாவது மன்மோகன்சிங் பிரதமராவதைப் பற்றி அவர் கட்சிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்ற செய்தி. ஆனால் தாம் அவ்வாறு சொல்லவில்லை என்பதை அவர் பலக¦னமாக மறுத்துவிட்டார்.)
ஜெயின் டயரியில் பெயர் இடம் பெறவில்லை என்பதுதான் தகுதி என்றால், இந்தியாவின் அரசியல்வாதிகளைத் தவிர இந்தியக் குடிமக்கள் அனைவருமே பிரதமராவதற்குத் தகுதி பெற்றவர்கள் என்று இதற்கு விளக்கம் கூறப்பட்டது! இப்பொழுது ஜெயினுக்குப் பதிலாக டெல்கி! டெல்கியினால் ஆதாயம் பெறாதவர்களென்று பட்டியலிட்டால், அந்த லிஸ்ட் மிகக் குறுகியதாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
ரோமுக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றில் மட்டுமல்ல, இப்பொழுதும் உறவு வகையில் ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயந்தான்! நடக்க இருக்கும் தேர்தலில், இந்தப் பிணைப்பு இன்னும் இறுகப் போகின்றதா என்பதுதான் கேள்வி!
முரண்பாடுகள்
அண்மையில் ஒரு சிறு பத்திரிகையில், எதிர்க் கலாசாரத்தை வற்புறுத்துவதாக நினைத்துக்கொண்டு, ‘டால்ஸ்டாய் போன்ற அறநிலைவாதிகளும்.. ‘என்று எழுதியிருந்தார் அக்கட்டுரை ஆசிரியர். டால்ஸ்டாய் நூல்களை அவர் படித்திருக்கமாட்டார், அல்லது, படித்திருந்தாலும் டால்ஸ்டாயைப் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றியது. டால்ஸ்டாய் என்ற மனிதருக்கும், அவர் எழுத்துக்கும் முரண்பாடுகள் உண்டு என்பது உண்மைதான்.
‘அறநிலைக் கோட்பாடு எதுவுமற்ற படைப்பாளி’ என்று அவர் சித்திரித்த ஷேக்ஸ்பியரை அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், இவர்கள் இருவருடைய படைப்புக்கள் மட்டிலுந்தான், கலையும் இயற்கையும் வெவ்வேறானவை அல்ல என்ற ஒரு மகத்தான உண்மையை நம்மால் உணர முடியும். ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியரை’யும், டால்ஸ்டாயின் ”The Kreutzer Sonata’ வையும் ஒருங்குசேர படித்தால் இது விளங்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், டால்ஸ்டாயிக்கு ‘கிங் லியர்’, அறவே பிடிக்கவில்லை. அவர் இந்த நாடகத்தைப் பலமாகத் தாக்கி எழுதியிருக்கிறார்.
ஆனால் ஷேக்ஸ்பியரின் Falstaff அவருக்கு மிகவும் பிடித்தமான கதாபாத்திரம். உலகில் புனிதமானது என்று எதுவுமே இல்லை என்பதைத் தவிர வேறு எதுவுமே அறியாத Falstaff யைக் கொண்டாடும் டால்ஸ்டாய்க்கு ‘கிங் லியர்’ ஏன் பிடிக்கவில்லை என்பது ஒரு பெரிய இலக்கியப் புதிராக இருக்கிறது.
தம்மை ஓர் அறநிலைக் கோட்பாட்டுவாதியாக அறிவித்துக்கொண்ட டால்ஸ்டாயை, அவர் படைத்த இலக்கியங்களில், அவர் தம்மை அறிவித்துக்கொண்டபடி, ஒற்றைப் பரிமாண அறநிலைக் கோட்பாட்டுவாதியாகக் காண முடியாது. டால்ஸ்டாயை மேலெழுந்தவாரியாகப் படிக்கின்றவர்கள் அவர் தம்மைப் பற்றிச் செய்துகொண்ட சுயவிமர்சனத்தின் அடிப்படையில் அவர் இலக்கியத்தை மதிப்ப¦டு செய்வதுதான் தவறு.
ஒற்றைப் பரிமாண அறநிலைக் கோட்பாட்டு வாதியால் ‘அன்ன கர¦னா’ எழுதியிருக்க முடியுமா? ‘The Kreutzer Sonata’ படைத்திருக்க முடியுமா? ”Hadji Murad”யைத்தான் அவரால் நினைத்துப் பார்த்திருக்க முடியுமா? ‘போரும் சமாதானமும்’ என்ற நாவலில், ‘போர்’தான் வில்லன், ‘சமாதானம்’தான் கதாநாயகன் என்று சொல்லமுடியுமே தவிர, கதாபாத்திரங்களைப் பொருத்தவரையில், இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று மதிப்ப¦டு செய்வது பொருந்துமா?
‘Hadji Murad’ ஓர் அற்புதமான நாவல். தேசபக்தி, நட்பு, நல்லொழுக்கம் போன்ற பல அறநிலைக் கோட்பாட்டு விஷயங்கள், விவாதத்துக்கு உள்ளாகின்றன. Murad, நம்மூர் ‘மருதநாயகம்’ போல் ஓர் துன்பவியல் கதாபாத்திரம். ஏமாற்றப்பட்டும், காட்டிக்கொடுக்கப்பட்டும் அவன் பல தடவை கட்சி மாறுகின்றான். இறுதியில், மரணம் அவனைப் புனிதப்படுத்துகிறது. ”The Kreutzer Sonata’வின் கதாநாயகன் -பேர் நினைவில்லை- தன் மனைவியைக் கொல்கின்றான். அவன் கதையைக் கேட்டபிறகு அவன் ம¦து நமக்கு அநுதாபம் ஏற்படச் செய்கிறது, டால்ஸ்டாயின் கலை. இதைப் படிக்கும்போது, எது தப்பு, எது சரி என்ற பிரச்னையே நம் மனத்தில் எழவில்லை.
டால்ஸ்டாய் என்ற கலைஞன் தான் அவர் படைப்புகள் அனைத்திலும் வெற்றிப் பெறுகின்றான். ‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் வேண்டும்?’ என்ற அவருடைய சிறுகதைதான், உலகில் எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகளில் மிகச் சிறந்தது என்கிறார் ஜேம்ஸ் ஜாய்ஸ். ஆக்ரோஷமான தார்ம¦கக் குரலைக் காட்டிலும், ‘irony’தான் இக்கதையின் அடிநாதம். இதுதான் ஓர் உயர்ந்த அழகுணர்வு மிகுந்த படைப்பாளியின் அடையாளம்.
‘தேச பக்தி’ என்ன விலை?
அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி சானலில் ஒரு குறிப்பிட்ட கட்சி உள்ளூர்த் தலைவர் உணர்ச்சிகரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்: ‘பாரத நாட்டு மக்களுக்கு தேசபக்தி வேண்டாமா? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்மை அந்நியர் சுரண்டியது போதாதா? அப்படியிருக்கும்போது, அவர்களால் வேற்று நாட்டுப்பெண்ணை (இதில் சிலேடை ஏதுமில்லை) எப்படிப் பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியும்? அந்நியர் சுரண்டியது போதும்.’ அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்குப் புரியவில்லை. ‘அந்நியர் சுரண்டியது போதும்’ என்றால் என்ன அர்த்தம்? தேசபக்தியோடு, நாம் சுரண்டுவோம் என்கிறாரா?
‘தேச பக்தி’ என்றால் என்ன? ”Patriotism’ ‘ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் ஆக்கம் ‘தேசபக்தி’. ”’Patriotism’ ” என்ற சொல், கிரேக்க வேர்ச்சொல் ”patria”, அதாவது, ‘ ஒரு குழுவின் தலைவன்’ (ஆண்பால்) என்பதிலிருந்து வந்தது. வால்டர் ஸ்க¦ட் கூறுகிறார்: ‘ தந்தை நாட்டின் ம¦து ஒருவனுக்கு இருக்கும் பாசம்’, என்று. ஆகவே, ‘தேச பக்தி’ என்பது, ஒரு த¦விர ஆண்பால் உணர்வு. இது பா.ஜா.க வின், ‘பாரத் மாதா’ உணர்வோடு எப்படி ஒத்துவரும் என்று தெரியவில்லை. குழுவினப் போராட்டங்களில், தலைவனுக்காகப் போராடி, அவனை வெற்றிப் பெறச் செய்தல்தான் அந்தக் காலத்தில் ”Patriotism’ ‘ ஆகக் கருதப்பட்டது. இது தேசத்தோடு பிணைக்கப்பட்டது பிற்காலத்தில்தான்.
சோழன் கரிகாலன் வெற்றிப் பெறவேண்டுமென்று, பூம்புகார் போர்வ¦ரர்கள் தங்கள் தலைகளைத் தாமே கொய்து பலிப¦டத்தில் சமர்ப்பணம் செய்வதாகச், ‘சிலப்பதிகார’த்தில் ஒரு குறிப்பு வருகிறது. (நாம் தற்காலத்தில், அந்தக் காலத்திலிருந்து வெகு தூரம் தள்ளி வந்துவிட்டோம் என்று சொல்லிவிட முடியாது.) முடியாட்சி துவங்கிய பிறகு, நாட்டரசனின் ‘புனிதம்’, நாட்டுக்கும் ஏற்றப்பட்டு, ‘தேசபக்தி’ என்ற கருத்து உருவாகியது. ‘அரசனின் புனிதம்’ (The Divinity of the Ruler) என்பது, மத்திய ஐரோப்பாவில் மட்டுமன்று, நம் நாட்டிலும் இருந்திருக்கிறது. தொல்காப்பியர், இதை ‘பூவை நிலை’ என்கிறார். ‘திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்கிறார் நம்மாழ்வார். தேசியமும், தேசபக்தியும், ஆக்ரோஷமாக ஒன்றுகூடும்போது பிறப்பதுதான், ‘நாஸிஸம்’ (Nazism).
செப்டெம்பர் 11 க்குப் பிறகு, அமெரிக்காவில், யார் யாருக்கு தேசபக்தி இருக்கின்றது, யார் யாருக்கு இல்லை என்ற கேள்வி எழுந்தது. வ¦திகளில் சென்ற எல்லா கார்களிலும், அமெரிக்க தேசியக் கொடி! ”I LOVE AMERICA’ ‘ என்ற வாசகம் எல்லா வ¦டுகளையும் அலங்கரித்தது. ஒருவருடைய தேசபக்தி இதன் அடிப்படையில்தான் கணிக்கப்பட்டது. அரசாங்கம் ‘தேசபக்திச் சட்டம்’ என்று ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்தது.
‘மாக்கார்த்தியிஸம்’ திரும்பி வந்துவிட்டது என்று சொன்னார் Edward Said. ஆனால் புஷ் இதைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், சம¦பத்தில், ஓர் அமரிக்க ந¦தி மன்றம் இச்சட்டத்தின் பல விதிகள் அரசியல் சாஸனத்துக்கு முரணானவை என்று த¦ர்ப்பு அளித்துவிட்டது!.
அரசியலிலும், விளையாட்டுத் துறைகளிலும், ‘தேச பக்தி’ என்பது, சமய பக்தியைப் போல் ஒரு லாபகரமான விஷயம். தொலைக்காட்சி சானலில் பேசிய அரசியல் தலைவர், ‘அந்நியர் சுரண்டியது இனிப் போதும்’ என்று தெளிவாக இதை விளக்கிக் கூறிவிட்டார். இதைத்தான் ஆங்கிலத்தில் ”Freudian slip’ ‘ என்பார்கள்.
போன நூற்றாண்டிறுதியில், பூகோள வரைபடமே மாறிவிட்ட போது, ‘தேசபக்தி’ என்பதற்கு என்ன அர்த்தம் சொல்லிவிடமுடியும்? போலந்துகாரர்கள், ‘எங்கள் தேசியக் கவிஞர்’ என்று கொண்டாடிய மிட்ச்கேவிச் இன்று லிதுவேனிய நாட்டவராகிவிட்டார்! ஜான்ஸன் சொன்னது போல, ‘தேச பக்தி என்பது அயோக்கியர்களின் இறுதிப் புகலிடம்’. ஜான்ஸனுக்கு அவ்வாறு சொல்ல உரிமையும் இருந்தது. அவர் வறுமையுற்றிருந்த நிலையிலும், ஆங்கில அகராதி உருவாக்கியவர்களில் முதல்வர் என்பதற்காக, அரசாங்கம் தருவதாகவிருந்த நிதி உதவியை ஏற்க மறுத்துவிட்டார்! ‘தேச பக்தியை’ப் பற்றிப் பாடிய முதல் கவிஞர் வால்டர் ஸ்காட்டுக்கு, ‘சர்’ பட்டம் கிடைத்தது!
நம் விளையாட்டு வ¦ரர்கள், ‘நாட்டுக்காக விளையாடும்போது என்ன பெருமையாக இருக்கிறது, தெரியுமா?’ என்று கூறுவதின் போலித்தனம், போன ஆண்டு, உலகக் கிரிக்கட் போட்டியின் போது, தங்கள்’ தேசபக்தி’யின் விலையை கிரிக்கெட் போர்டிடம் நிர்ணயித்த சமயம், நமக்கு விளங்கிவிட்டது! இன்று எத்தனை ஆப்பிரிக்க இனத்தவர், ஐரோப்பிய நாடுகளின் சார்பில் விளையாட்டுக்களில் பங்குப் பெற்றிருக்கிறார்கள் தெரியுமா?
உலகம் இன்று ஒரு கிராமமாகிவிட்டது. ‘தேசபக்தி’, ‘தேசிய உணர்வு’ போன்ற கோஷங்களைக் கண்டு சாதாரண மக்கள் ஏமாறிவிடக்கூடாது.
‘சத்யம் என்றால் என்ன?’
இக்கேள்வியை எழுப்பியவன் ரோமானிய ஆளுனன், ஜெஸ்டிங் பைலெட். ஏசுநாதர் அவன் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டபோது, அவன் இந்தக் கேள்வியை எழுப்பினான். ஆனால், அவன் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கு எது சௌகர்யமோ அதுதான் ‘சத்யம்’ என்று அவனுக்குத் தெரியும். தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இச்சமயத்தில், பத்திரிகைகளில், அரசியல்வாதிகளின் அறிக்கைகளில் அடிக்கடி நாம் காணும் வாசகம், ‘உண்மையைக் கூற வேண்டுமென்றால்’.
‘Alice in the wondeland’ என்ற நூலில் வரும் பிரஸித்தி பெற்ற வாசகம், ‘வார்த்தைகளுக்கு நான் சொல்வதுதான் பொருள். அவைகளுக்கென்று வேறு பொருள் எதுவும் இல்லை.’ இதுபோல், அரசியல்வாதிகள் கூறக்கூடும், ‘சத்யம் என்பது நாங்கள் எந்தச் சமயத்தில் எது சத்யம் என்கிறோமோ அதுதான் சத்யம்’.
ராஜிவ் காந்தி கொலையில் தி.மு.க வுக்குப் பங்கில்லை என்று கூறிவிடமுடியாது என்று ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை அன்று கூறியதும் சத்யம். தி.மு,க அமைச்சர்களை வெளியேற்றினால்தான் அரசாங்கத்துக்கு ஆதரவு தருவோம் என்று சோனியாஜி சொன்னதும் சத்யம். அரசாங்கம் கவிழ்ந்ததும் சத்யம். இப்பொழுது, ஜெயின் கமிஷன் அவ்வாறு தி.மு.க வைக் குற்றம் சாட்டவில்லை என்று சோனியாஜி, புகைப்படத்துக்கென்று பிரத்யேகப் புன்னகைப் பூத்து, ஒரு பெரிய மலர்க் கூடையைத் தி.மு.க தலைவருக்குப் பரிசாகக் கொடுத்து, சத்யம் செய்வதும் சத்யம். சோனியாஜியைப் பாசம் பொங்கிட கருணாநிதி புகைப்படத்தில் பார்த்துப் புன்னகை செய்வதும் சத்யம்.
வாஜ்பாய் அரசாங்கம் அன்று கவிழ்வதற்கு செல்வி. ஜெயலலிதா காரணமாக இருந்தார் என்பதும் சத்யம். செல்வியின் நட்புதான் இன்று எங்களுக்கு பலத்த அஸ்திவாரம் என்று தமிழ்நாட்டு பா.ஜ.க இப்பொழுது சொல்லிவருவதும் சத்யம். வகுப்புவாதக் கட்சிக்குத் துணை போன தி.மு.க வுடன் நாங்கள் என்றுமே கூட்டு சேரமாட்டோம் என்று இடதுசாரிக் கட்சிகள் சத்யம் செய்ததும் சத்யம். இன்று சுயநலக் காரணங்களினால், பா.ஜ.க விடமிருந்து விலகிவிட்ட காரணத்தினால், சோரம் போன தி.மு. க. ம¦ண்டும் புனிதத்தன்மை அடைந்துவிட்டது என்று இடது சாரி கட்சிகள் தி.மு.க வுடன் கைகோத்து, ச¦ட்டுப் பிச்சைக்குக் கையேந்தி நிற்பதும் சத்யம்.
முற்போக்கு, முற்போக்கு என்று மூச்சுக்கு மூச்சு முனகும் இவ்விடதுசாரிக் கட்சிகள், ஒடுக்கப்பட்ட இனத்தை அடியோடு புறக்கணித்துவிட்டு, மேல்சாதி இன நலன்களுக்கும், குடும்ப நலன்களுக்காக மட்டுமே போராடும் ஒரு கட்சியின் மேலாண்மையை ஏற்றுக்கோண்டிருப்பதும் சத்யம்.
இந்திய ஏழை, எளிய மக்களுக்காகப் போராடும் வகையில் , ரூடி என்ற அமைச்சர், கோவாவில், மூன்று நாட்கள், அரசாங்கச் செலவில், மக்கள் வரிப் பணத்தில், மூன்று லட்ச ரூபாய் செலவில் குடும்பத்துடன் தங்கியதும் சத்யம். சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இது தொடர்ந்து நடந்துவருகிறது, தம் ம¦து மட்டுந்தான் ஏன் இந்தக் குற்றச்சாட்டு என்று அவர் அங்கலாய்ப்பதும் சத்யம். ‘தேர்தல் சமயத்தில் அவர் இவ்வாறு செய்திருக்க வேண்டாம். இது தெரியாமல் செய்துவிட்ட தவறு’ என்று வெங்கையா நாயுடு கூறி இருப்பதும் சத்யம்.
‘இந்தியா ஒளிர்கிறது’. இது சத்யம்.
‘சரித்திரம் என்கிற களிமண்’
‘சரித்திரம் ஒரு குப்பைத்தொட்டி’ என்றார் ஹென்றி ஃபோர்ட். ‘குப்பைத்தொட்டி’ என்பதைக் காட்டிலும் ‘களிமண்’ என்று சொல்வது சரியாக இருக்கக்கூடும். களிமண்ணைக் கொண்டு பிள்ளையார் உருவமோ அல்லது அநுமன் உருவமோ எது வேண்டுமானாலும் செய்யலாம். ‘பாரதத்தின் வரலாறு, இதுவரை, தேசபக்தி இல்லாதவர்களால்தான் எழுதப்பட்டு வந்திருக்கின்றது’ என்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி. இப்பொழுது, தேசிய புத்தக நிறுவனம், அவர் ஆணையில், பாரதத்தின் ‘சரித்திரத்தை’ தேசபக்தி உணர்வுடன் திருத்தி எழுதி வருகிறது.
லூசியன் என்கிற கிரேக்க ஆசிரியர் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) அங்கதம் எழுதுவதில் பேர் போனவர். அவர் கூறுகிறார்: ‘இப்பொழுது நம் நம்நாட்டில் (கிர¦ஸில்) ஒரு புதிய தொற்றுநோய் பரவிவருகிறது. ஆள்பவர்கள் விரும்புகின்றபடி, சரித்திரம் எழுதுதல் என்கிற வியாதி. இவர்கள் (நவ¦ன சரித்திர ஆசிரியர்கள்) ‘சரித்திரம்’ என்றால் ஆள்கின்றவர்களுடைய கைத்தட்டலைப் பெறுதல் என்று நினைக்கின்றார்கள்.
சரித்திரம் என்றால், வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்று யாருமே கிடையாது. ‘History has no favourites’.) சரித்திரம் எழுத நடுவுநிலைமை உணர்வு வேண்டுமே தவிர, பக்தி உணர்வோ அல்லது பரவச உணர்வோ கூடாது ‘. அந்தக் காலத்தில் வாழ்ந்த லூசியன், ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்குப் பின்பு முரளி மனோகர் ஜோஷிகள் வரப்போகிறார்கள் என்று த¦ர்கதரிசனத்துடன் உணர்ந்து, எச்சரிக்கைச் செய்வது ஆச்சர்யந்தான்!
சரித்திரத்தை திருத்தி எழுத அரசாங்கத்துக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்திரா காந்தி, அவர் பிரதம மந்திரியாக இருந்தபோது, சமகாலத்து வரலாற்றை அவர் நினைத்தபடி, கூலிக்கு மாரடிக்கும் அறிவுஜ¦விகளைக் கொண்டு எழுதவைத்து, அதை மைக்ரோஃபில்ம் சுருள்களாகக் ”kapsule ‘களில் வைத்து, பூமிக்கடியில் ஆழமாகப் புதைத்துவிட்டார். பின்னால் வரப்போகின்ற சந்ததியினர், அதுதான் பாரதத்தின் இருபதாம் நூற்றாண்டு வரலாறு என்று நினைக்க வேண்டுமென்பது அவர் திட்டம்.
இவ்வரலாற்றின்படி, நேரு குடும்பததைத் தவிர, வேறு யாரும் சுதந்திரத்துக்காகப் போராடவில்லை! இந்த வரலாற்றில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் பற்றி எந்தத் தகவலுமில்லை!. ஆனால், என்ன நடந்தது? 1977ல் பதவிக்கு வந்த ஜனதா கட்சியினர் (முரளி மனோகர் ஜோஷி உள்பட) பூமியைத் திரும்பத் தோண்டி, அந்த ‘ளீணீஜீsuறீமீ’களை எடுத்து அழித்துவிட்டனர். ஜோஷி சரித்திரத்தை மறந்துவிட்டார் என்பதுதான் வருந்தத்தக்கது!
இந்த நாட்டின் பெரும்பான்மையான அறிவுஜ¦விகளுக்கு எப்பொழுதும் ஒரு விலை உண்டு. அந்த விலை தெரிந்து கொடுத்துவிட்டால் போதும். அவர்கள் தேசபக்தி விளையாட்டு விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். ‘கூழாட்பட்டு உள்ள¦ரேல், எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்’ என்று பெரியாழ்வார் பாடியிருப்பது இவர்களுக்காகத்தான்.
ஷேக்ஸ்பியர் பல சரித்திர நாடகங்கள் எழுதியிருக்கிறார். அவர் காலத்திய எலிஸபெத் ராணியின் தந்தையாகிய எட்டாம் ஹென்றியைப் பற்றியும் ஒரு நாடகம் ஆக்கியுள்ளார். அவனுடைய தவறுகளையும், பலஹ¦னங்களையும் அவர் சுட்டிக் காட்டத் தயங்கவில்லை.
இது நம்நாட்டில் சாத்தியமா? ராஜராஜனை அப்பழுக்கற்ற ஆணழகனாகக் காட்டினால்தான், சரித்திர நாவல் விலை போகும். அவன் காலத்தில், கோயில் தேவதாஸிகள் ஒரு ஊர்க் கோயிலிருந்து இன்னோர் ஊர் கோயிலுக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டார்கள் என்ற காரணத்தினால், பலர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற தகவல் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
நம் அண்மைக் காலத்து அரசியல் கதாநாயகர்களைப் பற்றியே பல கட்டுக்கதைகள் நாம் உருவாக்கியிருக்கும்போது, இதுதான் நம் வரலாறு என்று எதை நாம் அறுதியிட்டுச் சொல்வது? களிமண்னைக் கொண்டு எதை நாம் பிடிக்கிறோமோ அதுதான் நம் சரித்திரம்!
ஆபாசம், அல்லது தெய்விகம்
பெயரில் நட்புரிமை தெரிகிறதே தவிர, பேச்சில் அது தெரியவில்லை, ‘சிநேகன்’ என்ற பெயரைக் கொண்ட திரைப்படப் பாடலாசிரியருக்கு. ஆபாசமாகக் கவிதை எழுதுகிற பெண்களை மௌன்ட் ரோடில் நிற்க வைத்து, அவர்கள் ம¦து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த வேண்டுமென்று, அவர் ஆசையையோ, கோபத்தையோ ஒரு தனியார் தொலைக்காட்சி சானலில் வெளியிட்டிருக்கிறார்.
‘ஆபாசம்’ என்றால் என்ன? மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, ல¦னா மணிமேகலை, சுகிர்தராணி, சல்மா, உமா மகேஸ்வரி போன்ற கவிஞர்கள் ம¦து கொஞ்ச நாட்களாக – இந்த ‘ஆபாச’ குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள் சில மூத்தக் கவிஞர்களும், திரைப்படப் பாடலாசிரியர்களும். பெண்களின் சொல்லப்படத்தகாத உறுப்புக்களையும், பாலியல் விவகாரங்களையும், பெண் கவிஞர்களே சொல்வதுதான், இவர்களுக்கு ‘ஆபாசமாக’ப்படுகிறது. ஆண்கவிஞர்கள் விவரித்துச் சொல்லவேண்டிய விஷயங்களைப் பெண்கள் சொல்லிவிட்டால், ஆண்களின் copyright உரிமை பறிபோய்விடுமே என்ற அச்சமாகவுமிருக்கலாம்.
ஆபாசமாக எழுதப்பட்ட நூல்கள், ஆசாரமாக எழுதப்பட்ட நூல்கள் என்று எதுவுமில்லை, நன்றாக எழுதப்பட்டவை, மோசமாக எழுதப்பட்டவை என்ற இரண்டு வகைதான் உண்டு என்று ஆஸ்கார் வொய்ல்ட் கூற்றைச் சற்று மாற்றிச் சொல்வதில் தவறு ஏதுமில்லை. ரவி சுப்ரமணியன் சொல்வது போல், காலங்காலமாக அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக, சொல்லக்கூடாதவற்றைச் சொல்வோம் என்ற கோபத்தில், இப்பெண்கள் இவ்வாறு எழுதுகிறார்கள் என்பது, இவ்வாறு எழுதுவது ஆபாசந்தான் என்பதை ஒப்புக்கொள்வதுபோல் ஆகிவிடும். ஆண்கவிஞர்கள், பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை விவரித்துச் சொல்லும்போது அது அழகியல் உணர்வில் விளைந்த பரவசம், பெண்கள் தங்கள் உறுப்புக்களைத் தாங்களே சொல்லும்போது, அது ஆபாசம் அல்லது எதிர்ப்பு உணர்வின் அடையாளம் என்று ஆகிவிடுமா?
கி.பி. எட்டாம் நூற்றாண்டில், ஒரு பெண்கவிஞர் எழுதிய கவிதை இது:
‘வெற்றிக் கருளக் கொடியான்தன் ம¦ம¦து ஆடா உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே!
குற்றம் அற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றம் அவை த¦ர அணைய அமுக்கிக் கட்டிரே!’
இந்தப் பெண்கவிஞர், சம காலத்திய ஆண் வர்க்கத்திடம் அசாத்திய கோபப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்களை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. தாமே கற்பித்துக் கொண்ட மானஸ¦க புருஷன் ஒருவன்தான் அக்காலப் பெண்களின் சமுதாயக் கனவு. ஆசைகளுக்கும், கனவுகளுக்கும் அவன்தான் வடிகால்.
சமகாலத்திய ஆண்களைத் துச்சமாகக் கருதுவதற்கேற்ற ஒரு பெண்மைச் செருக்கு இவருக்கு இருக்கிறது. அவர் பாடலைப் பாருங்கள்:
‘அங்கைத் தலத்தில் ஆழிகொண்டான் அவன் முகத்து அன்றி விழிப்பேன் என்று,
செங்கச்சுக் கொண்டு கண் ஆடை ஆர்த்துச் சிறு மானிடரைக் காணில் நாணும்
கொங்கைத்தலம், இவை நோக்கிக், காண¦ர்! கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா;
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்.’
அந்தக் காலத்துச் ‘சிநேகர்களும், பழனிபாரதிகளும்’, இந்த மாதிரிப் பெண்கள் ம¦து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட முடியாத காரணத்தினால், சமயத்தளைப் பூட்டி, தெய்வங்களாக ஆக்கிவிட்டார்கள்.
ஆண்டாள், பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவர்!