Monthly Archives: ஜூலை 2008

A for Apple – Tag by Ravishankar

ரவிசங்கரின் பதிவைப் பின் தொடர்ந்து:

ஃபயர்பாக்சில் ‘ஏ’ விசையைத் தட்டியவுடன் என்ன வலையகம் வந்து நிற்கிறது?

(‘எஸ்’ தட்டியவுடன் சவீதா பாபி வந்து நிற்கிறாள் என்று அரிச்சந்திரனாக சொல்லவேண்டாம் 🙂

A for அமேசான்
B for வலைப்பூ தேடல்
C for க்ளிப்மார்க்ஸ்
D for தினத்தந்தி (டிக் வந்திருக்கலாம்)
E for !

F for ஃபேஸ்புக் (ஃப்ளிக்கர் இல்லை!)
G for கூகிள் ரீடர்
H for !
I for ஐ எம் டி பி (இட்லி – வடை வந்தது; அப்புறம் விளம்பரம் என்று அபாண்டம் எழும் என்பதால் 😉
J for ‘பொங்குதமிழ்’ எழுத்துரு மாற்றி

K for குமுதம்
L for லைஃப்ஹாக்கர்
M for மைக்ரோசாஃப்ட் (மாற்று வந்தது; அப்புறம் பிரச்சாரப்பதிவு ஆகும் என்பதால் 😉
N for நெட்ஃப்ளிக்ஸ் & கூகிள் செய்தி
O for ஆர்குட்

P for பாப் யூ ஆர் எல்ஸ் (இதுவரை இந்தப் பதிவை உங்களுக்குக் கொண்டுவந்தவர்: போஸ்டெரஸ்)
Q for !
R for ரவி மன்றம்
S for சம்மைஸ் (சே… இன்னும் நிறைய ஸ்லேட் பக்கமும் சலோனுக்கும் ஒதுங்கணும்)
T for தமிழ்மணம் (ஒங்கொப்புரான் சத்தியமா ட்விட்டர் அல்ல)

U for உளறல்
V for விக்கி
W for ரைட்டர்பாரா
X for !
Y for யூ ட்யுப்

Z for !

தொடரப் போகும் மூவர்:
1. சர்வேசன்
2. ரவி ஸ்ரீனிவாஸ்
3. மாதவன்

Rule:

  1. The Tag name is A for Apple
  2. Give preference for regular sites
  3. Ignore your own blogs, sites.
  4. Tag 3 People.

வழிநெறி:

  1. தலைப்பு :: ‘அ’ என்றால் அம்மா (அல்லது) ‘ஏ ஃபார் ஆப்பிள்
  2. அன்றாடம் புழங்கும் தளங்களுக்கு முன்னுரிமை கொடுங்க
  3. உங்க பதிவுக்குள் அடிக்கடி போவதால், அதை விட்டுடுங்க
  4. மூவரைத் வடம் பிடிக்க கூவுங்க

உங்ககிட்ட இருந்து வித்தியாசமான, அதே சமயம் அடிக்கடி புழக்கத்தில் உள்ள வலையகங்களை அறிவதன் மூலம், என்னுடைய ஞானவேட்கைக்கும் தீனி போடும் முயற்சி.

நன்றி.

தமிழோவியம்.காம் வாக்கு

இந்த வார தமிழோவியத்தில் இருந்து

பாபா வாக்கு

அருள்வாக்கு

பெயரில் என்ன இருக்கிறது? ஜோசியரைக் கேட்டால் விஜய்காந்த்தின் ‘பெரியண்ணா’வை Periannaha என்று மாற்றியது போல் ஏதாவது நியுமராலஜிப்படி திருகிவிடுவார்.

உளவியல் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால் இனிஷியலில்தான் எல்லாமும் இருக்கிறது என்று முதலெழுத்தை கைகாட்டுகிறார்கள்.

நேரு ஏன் நியு டில்லியை ஆண்டார்? காந்திக்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு? சென்னைக்கு செயலலிதாவுக்கும் எப்படி பொருத்தம்?தன்னையறியாமல் அன்னி பெசன்ட் பாரதம் நோக்கி வந்தார் என்று நிலைநிறுத்தாத குறை.

நம் முதலெழுத்தைப் பொறுத்து, அதே எழுத்துடைய ஊர், உறவினர், உடைமை எல்லாமே நாடிச் செல்கிறோம்.

பாலாஜி பாஸ்டனில் தங்குவதும், பாலாம்பிகா பெயரில் மயங்குவதும், பார்ன்ஸ் அன்ட் நோபிளில் புத்தகம் வாங்குவதும் சகஜம். லைஞர் ருணாநிதிக்கு எந்த மகவு பேல் பாசம் அதிகம் என்பது உங்களுடைய வீட்டுப்பாடம்.

எம்.பி.ஏ மாணாக்கர்களிந் பெயர்கள் ‘C’ அல்லது ‘D’யில் ஆரம்பித்தால் கம்மி மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள். வழக்கறிஞர்களில் ‘A’ அல்லது ‘B’யில் பெயர் துவங்குபவர்கள் ஜோராகப் படித்து சி/டி இனிஷியல்காரர்களை விட நல்ல கிரேடு வாங்கியிருக்கிறார்கள். அப்பா இனிமேல் ‘ஏண்டா ஃபெயிலானே?’ என்று பிரம்பை தூக்கினால், ‘என் பெயரை ஒழுங்கா வைப்பா!’ என்று சொல்லலாம்.

ஆதாரம்: Moniker Maladies: When Names Sabotage Success. Leif D. Nelson & Joseph P. Simmons

சுட்ட வாக்கு

வகுப்புவாதத்தைத் தீனியாகக் கொண்டுதான் அந்த இயக்கம் இந்த அளவு வளர்ந்தது.

“உயிரும் மயிருமில்லா
உருவச் சிலைகளுக்கு
வயிர முடிகள் ஏனடா?”

“வாயும் வயிறுமில்லா
சாமிக்கு மானியமாகவே
வயலும் வாய்க்காலும் ஏன்டா?”

— என்றும்,

“சீரங்கநாதரையும்
தில்லை நடராசரையும்
பீரங்கி வைத்துப்
பிளப்பதுவும் எக்காலம்?”

— என்றும் அவர்கள் பாட்டுப் பாடினார்கள்.

“ஏரோட்டும் மக்களெல்லாம்
ஏங்கித் தவிக்கையிலே
தேரோட்டம் எனுனக்கு
தியாகராசா?”

— என்று கருணாநிதி பாட்டெழுதினார்.

அதற்குப் பதிலாக காங்கிரஸ்காரர்,

“ஏரோட்டும் மக்களெல்லாம்
ஏங்கித் தவிக்கையினிலே
காரோட்டம் ஏனுனக்குக்
கருணாநிதி”

— என்று பதில் பாட்டெழுதினார்

நன்றி: கண்ணதாசனின் வனவாசம்

பட வாக்கு

New Yorker Cover Cartoon - Images, Comics, satire

New Yorker Cover Cartoon - Images, Comics, satire

‘தி நியூ யார்க்கர்’ இதழிந் அட்டைப்படத்தை மேற்படி படம் அலங்கரித்திருப்பதை ஒபாமாவிடம் கண்டித்து இருக்கிறார்.

  • பராக் ஒபாமாவிற்கு முஸ்லீம் முண்டாசு,
  • மனைவி மிஷேல் ஒபாமாவிற்கு ருசிய துப்பாக்கி;
  • குளிர் காய எரியும் நெருப்பில் அமெரிக்கக் கொடி;
  • வெள்ளை மாளிகையில் ஒசாமா பின் லாடன் உருவப்படம்;
  • ஆப்பிரிக்க – அமெரிக்கர்களின் சிகையலங்காரத்தையும்
  • இஸ்லாமியச் சின்னங்களையும்

வைத்து கிண்டலடிப்பவர்களை கிண்டலடிப்பதுதான் நியு யார்க்கரின் குறிக்கோள். ஆனால், ஒபாமாவோ, ‘வெறும் வாயை மெல்பவர்களுக்கு’, சூயிங் கம் கொடுத்திருக்கிறது ‘நியு யார்க்கர்’ என்கிறார்.

பண வாக்கு

விலையுயர்ந்த வலையக முகவரிகளின் பட்டியல்

  1. Sex.com $12 million
  2. Porn.com $9.5 million
  3. Business.com $7.5 million
  4. Diamond.com $7.5 million
  5. Beer.com $7 million

நன்றி: ஃபோர்ப்ஸ்

ட்விட்டர் உரை வாக்கு

முதலாளி கூலிக்காரனை நடத்துவது போல் மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் அமெரிக்கா, தொழிலாளியிடம் வரி போடும்போது சோஷலிசம் பேசும். – லேக்னி & ஃப்ரெட் வில்சன்

பாடல் வாக்கு

ப்ரம்மம் ஒக்கடே பரப்பிரம்மமொக்கடே

அரசனா இருக்கட்டும்; ஆண்டியா இருக்கட்டும்; தூக்கம் ரென்டு பேருக்கும் ஒண்ணுதான்!
பிராமனணா இருக்கட்டும்; தலித்தா இருக்கட்டும்; நடக்கிறது இந்த பூமி மேலத்தான்!

அறுநூறு வருஷம் முன்பு தாழ்த்தப்பட்டவர்கள் திருமலைக்குள் நுழைய வைத்த அன்னம்மாச்சார்யாவில் பாடலை ஜனரஞ்சகமாக இயக்கியிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் பராக் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமா ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ஹமீது கர்சாய் மற்றும் இராணுவ அதிகாரிகள் சந்திக்கவுள்ளார்.

தலிபான்களின் கிளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கூட்டுப்படைகள் தடுமாறி கொண்டிருக்கும் நிலையில் பராக் ஒபாமாவின் முதல் விஜயம் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானின் சீர்கெட்டு வரும் நிலையினால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பராக் ஒபாமா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராக்கில் இருக்கின்ற துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அனுப்படவேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

நன்றி: பிபிசி

மின்வண்டி நிலையத்தில் மரணித்த எலியும் மனம் பதறிய மங்கையும்

My ‘Shallow Hal‘ moments

எலி பாஷாணத்தை உண்ட மயக்கமோ? வாழ்வின் இறுதி நிமிடங்களோ? நட்டநடுவில் அனாதையாக எலி. நானும் இன்ன பிறரும் ட்ரெயினைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருந்தோம்.

அந்தப் பெண்மணிக்கும் இரவு தாமதமாகிய எட்டு மணி காண்பிக்கும் கடிகாரம் இருந்தது. சக பயணி குப்பையாகப் போட்ட பேப்பர் கவரை எடுத்தார். கையால் மிக லாவகமாக எலியை எடுத்து அதனுள் நகற்றினார்.

இறக்கும் நிமிடங்களில் எலிக்கு கௌரவம். கையறு நிலையில் இருந்து அடக்கமான உறக்கம்.

பக்கி, நிக்கி, ஜெ.கி.

ஜெயகிருஷ்ணனுக்கு வெறுப்பாக வந்தது.

ஒவ்வொரு ராத்திரியும், அர்த்த ராத்திரியில் அழும் குழந்தைக்கு நிப்பிள், இளஞ்சூட்டில் பால், டயாபர் மாற்றுதல் என்று சகல சிஷ்ருஷைகளும் செய்துவிடுவது போல் ஒவ்வொருவரும் எழுதியிருந்தார்கள். எல்லாக் கதைகளிலும் அன்னிய புருஷர்கள் ஏவுகணை வேகத்தில் பறந்தார்கள்.

ஏதேதோ மொழி பேசி, நிலவுக்கும் திருநள்ளாறுக்கும் நடுவில் திரிசங்குவாகி, நிமிஷ நேரத்தில் ஐஐடி+ஐஐஎம் குழந்தை பெற்று, தண்ணியில்லாக் காட்டில் மாமி மெஸ் மாத்திரை முழுங்கி, குப்பை நகரங்களில் உலவி வந்த மனிதர்களின் கதைதான் வலைப்பதிவுகளில் கிடைத்தது.

பக்கத்தில் இருந்த பறவை மானிட்டர் அலறியது. படித்துக் கொன்டிருந்த அறிபுனைவுக் கதையை அப்படியே விட்டுவிட்டு பறவை பக்கம் சென்றார்.

“பாஸ் இல்லாவிட்டால் லன்ச்சுக்கு காணாமப் போகிற மாதிரி இரண்டு மணி நேரமாக என்னைப் பார்க்கவே வரவேயில்லையே?” – இது பச்சைக்கிளி.

“அப்படியில்லடா பக்கி. ‘மனுசங்களுக்குப் புரியற மாதிரி எழுதுவதில் எந்த கிரகவாசி சிறந்தவர்?’ போட்டிக்கு வந்திருந்த மேட்டர் எல்லாம் படிச்சிண்டிருந்தேனா! அப்படியே தூங்கிட்டேன். குழந்தை அழற மாதிரி கனவு. ரொம்ப நாளா வளராம அப்படியே இருக்கிற குழந்தை. அழுதுண்டே இருக்கு. யார் எடுத்து டான்ஸ் ஆடினாலும் அழறத நிறுத்த மாட்டேங்குது. ‘வரந்தந்த சாமீக்கு பதமான லாலி’ பாட்டை மட்டும் பதினெட்டாயிரம் மொழியில் பாடறோம். எதற்கும் அடங்கல. மூஞ்சியெல்லாம் செவந்து போச்சு. அப்படி ரத்தக் கண்ணீர். நரகத்தில் பிண்டம் துடிக்கிற மாதிரி இருக்கு. கருட புராணத்தில் வருமே? அந்த மாதிரி குட்டிக் கைவிரல் சைஸில் முகம்.”

“உன்னை விட்டால் அந்தக் காலத்தில் வெண்பா பாடத் தெரிஞ்சவன் எல்லாம் நாலடியில் டயலாக் விட்ட மாதிரி இருநூறு பக்கத்துக்கு குழந்தைப் புராணம் எழுதுவே!” – இது நீலக்கிளி.

“அந்த மாதிரி எழுத இப்ப யாரு இருக்கா நிக்கி? ஒவ்வொண்ணுத்தையும் இக்கினியூண்டு இக்கிணியூன்டா ஆராஞ்சு, ருசிச்சு, சக்கைய கொடுத்து, வாசகனத் திளைக்க வைக்கணும். அதானே மனுசனுக்குப் பிடிச்ச கத? நம்ம தாத்தன், பாட்டன் வாழ்ந்த கலாச்சாரம்! அன்னனின்னிக்கு நடக்கிற வாழ்க்கையின் சுவாரசியம்; உன்னிப்பா கவனிச்சு, உறவுக்குள்ள நடக்குற கலவரங்கள சொல்லணும். எத்தன மக்கள் இருந்திருக்காங்க! சுயநலம், பச்சாதாபம், பேராச பிடிச்ச பொருளாதார பித்து முதல் அடுத்தவ வீட்டுக்குள்ள நுழையற மோகம் என்று ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்!”

“ரி-நாய்-சென்ஸ் மாதிரி இவங்க எல்லாம் புது ட்ரெண்ட் உருவக்கறாங்கன்னு நீ ஏன் நெனைக்கக் கூடாது?”

“பெட்ரோல் தீர்ந்துபோச்சுன்னு கைவிரிச்ச காலத்தில் வண்டியோட்னவனுக்குத்தான் பெட்ரோலோட அருமை தெரியும். நீயே படிச்சுப் பாத்து நொந்தாத்தான் உனக்கு வெளங்கும்.”

“எங்களுக்கும் கொடுத்தா நாங்களும் படிப்பம்ல?”

“அதுதான் பெஸ்ட் நிக்கி. இதுவரைக்கும் வந்த இருபது கதைகள்ல பகல் பத்தை பக்கி படிக்கட்டும். இராப்பத்தை நீ படி நிக்கி”.

“அப்படீன்னா… உனக்கு யாரு தாலாட்டுப் பாடறது?”

நிக்கியைப் பார்த்து ஜெய கிருஷ்ணன் கண்ணை சுழற்றினார். ஒலி 96.8 ஆக தமிழ் பண்பலை போட்டுக் கொண்டார்.கைவிரலை தாளமிட்டவுடன் சத்தம் சரியாக வைக்கப்பட்டது. கண்மூடிய நிலையில் ஓடிய கருவிழிகளில் திரைப்படத்தையும் ஒளிர விட்டுக் கொண்டார்.

ஜெயகிருஷ்ணன்.

சுருக்கமாக ஜெ.கி. அருகிவரும் இலக்கிய உலகில் மீதமிருந்த ஒரே இலக்கியவாதி. தேடல்களினால் ஆய பயன் எதுவும் இல்லை என்று முடிவெடுத்த யுகத்தில் தப்பிப் பிறந்த இவரை சனிக்கிரகம் கண்டுபிடித்து தன் பார்வையில் வைத்து இரஷிப்பதற்குள் ஏழரை நாட்டு உலகத்துக்கே சென்றுவிட்டவர்.

‘கீக்கீக்கீ’ என்று கத்திக் கொண்டிருந்த பச்சைக் கிளியை பக்கி என்று பெயரிட்டு பேசிவருபவர். ‘கூக்கூக்கூ’ என்று கூவிக் கொண்டிருந்த நீலக்கிளியில் பீத்தோவன் தொட்டு பரத்வாஜ் முதற்கொண்டு பீட்டில்ஸ் வரை பாட வைத்து நிக்கியாக்கிக் கொண்டவர்.

இதற்கெல்லாம் மின் சாதனங்கள் இருக்கின்றனவே என்ற மானுட ஜாதியினரிடம் புழு பூச்சிக்கும் முனைவர் அறிவு உண்டு என்பதை உலகறிய ஓதியதால் தூக்கு மேடை வரை சென்று, மீண்டு, நிரூபிப்பதில் வாழ்நாள் ஆராய்ச்சியாளர் ஆனவர்.

பக்கத்தில் இருந்த பறவை மானிட்டர் அலறியது. ஆராய்ந்து கொன்டிருந்த புழு, பூச்சிகளின் ஆறறிவை அப்படியே விட்டுவிட்டு பறவை பக்கம் சென்றார்.

“பன்றியா மறுபிறப்பெடுத்த ரிஷி பழைய பொறப்ப மறந்தே போன மாதிரி இரண்டு மணி நேரமாக என்னைப் பார்க்கவே வரவேயில்லையே?” வரவேற்றது பச்சைக்கிளி.

அறிவியல் சிறுகதைப் போட்டி

ட்விட்டர்: எளிய அறிமுகம்

1. ட்விட்டர் எங்கே இருக்கு? Twitter.com

2. அது என்ன கேள்வி ‘What are you doing?‘ பெட்-காபி குடிக்கறீங்களா, அம்ருதா ராவ் படங்களைத் தேடறீங்களா, டெஹல்காவில் எதைப் படிக்கறீங்க, என்பனவற்றைக் குறிக்கிறது.

3. பார்ப்பது, முகர்வது, தொடுவது, கேட்பது, பேசுவது மட்டும்தான் ட்விட்டலாமா? சுவைப்பது எதுவாயினும் சொல்லலாம். தினசரி கோல்கேட் கொண்டு பல் தேய்ப்பதை சொல்லிக் கொண்டிருந்தால் எவரும் ஃபாலோ செய்யமாட்டார்கள். “காலியான பற்பசையை இரண்டாக அறுத்து, பிதுக்கி, பாக்கி இருக்கும் க்ளோஸ் – அப்பை ‘நீ பாதி… நான் பாதி’யாக மக்கட்செல்வத்துக்கு பகிர்ந்தளித்தேன்” போன்ற பணவீக்கத்திற்கேற்ற துப்புகள் அளிக்கவேண்டும்.

4. அது என்ன ‘ஃபாலோ’ செய்வது? ஒருவரின் கொள்கையை பின்பற்றுவதா? ஆர்குட்டில் ‘நண்பன்’; ஃபேஸ்புக்கில் ‘விசிறி’; ஃப்ரெண்ட்ஃபீட்டில் ‘சந்தாதாரர்’. தளங்கள் தோறும் வாசகராக சேர்த்துக்கொள்வது வித்தியாசப்படும். அதுபோல், இன்னாரை பின் தொடர்ந்து அவரின் செய்கைகளை, தகவல்களை ட்விட்டர் கொண்டு அறிய விரும்பினால் ‘ஃபாலோ’.

5. ட்விட்டரில் தத்துவம், வாழ்க்கை அவதானிப்பு, பொதுமைப் படுத்துதல் செய்யலாமா? செய்யலாம்.

6. அது தவிர வேறு என்ன செய்யலாம்? நான் தொடரும் சிலர் எழுதியதில் இருந்து உதாரணங்கள். வலைப்பதிவுக்கு முன்னோட்டமாக சில குறிப்புகளை ரத்தின சுருக்கமாக எடுத்து வைக்கலாம். கூகிள் அரட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

7. 140 எழுத்துக்களுக்குள் என்ன கருத்து சொல்லிவிட முடியும்? நவீன உலகின் திருக்குறள் எனப் போற்றப்படுவது குறுந்தகவல். மனதில் நினைப்பதை நச்சென்று சுருக்கமாக சொல்லமுடியாவிட்டால், நாகரிக உலக வாசகரின் கவனம் சிதறிப் போகலாம். அப்படி சிதறாது என்றால், இருக்கவே இருக்கிறது வலைப்பதிவு.

8. மௌனமொழியாக புகைப்படங்களை ஏற்றுமதி செய்யலாமா? பத்ரி ஷோஜு (Shozu.com) உபயோகிக்கிறார். ஸ்னாப்ட்வீட் மற்றுமொரு புகழ்பெற்ற சேவை. செல்பேசியில் இருந்தே படங்களை அனுப்ப Twitxr -உம் உண்டு. என்னோட பரிந்துரை: ட்விட்பிக்.

9. இந்தியாவிலும் வேலை செய்யுமா? Vakow உபயோகிக்க பரிந்துரைக்கிறார்கள். நேரடியாகவும் 5566511 அல்லது 5566595 மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றாலும் ‘வாகோவ்‘தான் இந்தியர்களின் இதயத்தை கொள்ளை கொண்டிருக்கிறது.

10. அப்படியானால் ட்விட்டரில் செய்தி அனுப்ப செல்பேசி அவசியம் வேண்டுமா? தேவையே இல்லை. நேரடியாக வலையகத்தில் இருந்தே குறுந்தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கலாம்.

11. பதிவுகளைப் படிக்க கூகிள் ரீடர், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க ட்யூப்தமிழ், என்பது போல் ட்விட்டர் தகவல்களை வேறு வழியில் படிக்க, கோர்க்க இயலுமா? நீங்களே ஒன்றை தயாரித்துக் கொள்ளலாம் என்பதைப் போன்று ட்விட்டர் API கொடுத்திருக்கிறது. அதை உபயோகித்து பல நிரலிகள் புழகத்தில் இருக்கின்றன

  1. ட்வீட் டெக்: புதுசு கண்ணா புதுசு; தமிழ் வராது; வகைப்படுத்தல் வசதி இருக்கிறது
  2. ட்விட்டர் ஃபாக்ஸ்: ஃபயர் ஃபாக்சுடன் ஒட்டி உறவாடும்; நம்பகமானது இல்லை.
  3. ட்விட்டர் பார்: இனிமேல்தான் உபயோகிக்க வேண்டும். ஃபயர் ஃபாக்ஸ் பயனர்களுக்கானது.
  4. ட்வஹிர்ல்: உச்சரிப்பதற்கு கடினமாக இருந்தாலும், உபயோகத்தில் எளிதானது. பல பயனர் கணக்குகளை ஒருங்கே மேய்க்கலாம். என்னுடைய தேர்வு.

இது தவிர:

12. என்னிடம் ஃபேஸ்புக் கணக்கு இருக்கிறது. அங்கே கேட்கும் ‘What are you doing right now?’க்கு பதில் சொல்லித்தான் வழக்கம்! ஒன்றும் பிரச்சினையில்லை. இணைத்துவிடலாம்.

13. என்னிடம் ‘டைப் பேட்’ வலைப்பதிவு இருக்கிறது. இணைக்க முடியுமா? முடியும்.

14. நான் வோர்ட்பிரெஸ், ப்ளாகர் போன்ற செய்தியோடை தரும் இடங்களில் பதிகிறேன். ஆர்.எஸ்.எஸ்ஸை எவ்வாறு சேர்த்து விடுவது? ட்விட்டர் ஃபீட் பயன்படுத்தலாம்.

15. அங்கே இருந்து ட்விட்டருக்கு வந்தாச்சு. இப்போ, ட்விட்டரில் இருந்து, ப்ளாகர், வோர்ட்பிரெஸ் போன்ற வலைப்பதிவுகளுக்கு கொண்டு செல்வது எவ்வாறு? இப்படி.

16. இது வார்ப்புருவில், பக்கவாட்டில் மட்டுமே இடுகிறது. என்னுடைய பதிவே அன்றாட ட்விட்டர்களில் இருந்து தயாராக்க முடியுமா? உங்களுக்குத் தேவை லவுட் ட்விட்டர்.

17. எனக்கு ‘தசாவதாரம்’ குறித்த தகவல் அனைத்தும் தெரிய வேண்டும். எப்படி அறிந்து கொள்வது? ட்ராக்கிங் வசதியைக் கொண்டு செல்பேசியில் ‘தசாவதாரம்’ வார்த்தை வரும் அனைத்து குறுஞ்செய்திகளையும் பெறலாம். எனக்கு சம்மைஸ் கொண்டு தேடி, தேடல் முடிவுகளின் ஓடையைப் பெற்றுக் கொள்ளுதல் தோதுப்படுகிறது.

18. அட… ட்விட்டரில் தேட முடியுமா? சம்மைஸ் கொண்டு இதுவரை கதைத்ததை தெரிந்து கொள்ளலாம். அதுதான் என்னுடைய பெரும்பாலான தேடல்களுக்கு பயனாகிறது என்றாலும், ட்வீட் ஸ்கான் கூட தேவலாம்தான்.

19. என் நண்பர்கள், எதிரிகள், முன்னாள் காதலிகளைக் கண்டு கொள்வது எப்படி? இவர்களை மட்டுமல்ல. அறியவேண்டிய சகாக்களை ட்வெலோ அடையாளம் காட்டுகிறது.

20. இவர்களை எல்லாம் பின்பற்றி என்ன பிரயோசனம். ஏதாவது சுட்டி மாட்டுமா? விஷயம் புகழ்பெறுவதற்கு முன்பே ட்விட்டரில் உரையாடப்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு, ட்விட்டரில் அதிகம் சுட்டப்படும் உரல்களைத் தொகுத்து, தகவல் யுகத்தின் நுனிக்கே செல்லலாம்.

21. இம்புட்டு விஷயமா! எவ்வளவு தகவல் கிட்டுகிறது! ‘பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற, செய்யாமை, செய்யாமை நன்று’ என்னும் குறளை படிக்காதவங்க சிலரும் ட்விட்டரில் சுற்றுவதால் கவனம் தேவை. எளிதில் வதந்தி உலாவும் இடம் இது.

22. நான் எல்கியவாதி. ட்விட்டரின் கட்டுப்பாடுகள் எனக்கு ஒத்துவராது! யாராக இருந்தாலும் டக்கென்று பதில் வாங்குவது முதல் சட்டென்று வாசகரை கவர்ந்திழுக்க செல்பேசி புரட்சிக்கு தயாராக இருக்கோணும்.

23. ட்விட்டர் வியாதியாகும் அபாயம் உண்டா? சோதித்துக் கொள்ளவும்.

24. ரொம்பப் பேசறீங்க. இன்னும் சுருக்கமா ஒரு வார்த்தையில் சொல்ல முடியுமா? ஒரேயொரு வார்த்தையா! உங்களுக்கு எடாகு சரிப்படலாம்.

25. என்னோட கேள்வி ஒன்றுக்குக் கூட விடை கிடைக்கவில்லையே!? இங்கு செல்லவும். மேலும் விலாவாரியான பயனர் புத்தகமும் கிடைக்கிறது.

கொசுறு: இன்னும் நிறைய ட்விட்டர் நிரலிகள் இருக்கிறதாமே? அவற்றில் மெச்சக் கூடியவை எவை? பகுதி #5– இல் இட்டிருக்கும் பட்டியல் பார்க்கவும்.

கருத்துப்படம்: டேவிட்