Daily Archives: ஜூலை 15, 2008

பக்கி, நிக்கி, ஜெ.கி.

ஜெயகிருஷ்ணனுக்கு வெறுப்பாக வந்தது.

ஒவ்வொரு ராத்திரியும், அர்த்த ராத்திரியில் அழும் குழந்தைக்கு நிப்பிள், இளஞ்சூட்டில் பால், டயாபர் மாற்றுதல் என்று சகல சிஷ்ருஷைகளும் செய்துவிடுவது போல் ஒவ்வொருவரும் எழுதியிருந்தார்கள். எல்லாக் கதைகளிலும் அன்னிய புருஷர்கள் ஏவுகணை வேகத்தில் பறந்தார்கள்.

ஏதேதோ மொழி பேசி, நிலவுக்கும் திருநள்ளாறுக்கும் நடுவில் திரிசங்குவாகி, நிமிஷ நேரத்தில் ஐஐடி+ஐஐஎம் குழந்தை பெற்று, தண்ணியில்லாக் காட்டில் மாமி மெஸ் மாத்திரை முழுங்கி, குப்பை நகரங்களில் உலவி வந்த மனிதர்களின் கதைதான் வலைப்பதிவுகளில் கிடைத்தது.

பக்கத்தில் இருந்த பறவை மானிட்டர் அலறியது. படித்துக் கொன்டிருந்த அறிபுனைவுக் கதையை அப்படியே விட்டுவிட்டு பறவை பக்கம் சென்றார்.

“பாஸ் இல்லாவிட்டால் லன்ச்சுக்கு காணாமப் போகிற மாதிரி இரண்டு மணி நேரமாக என்னைப் பார்க்கவே வரவேயில்லையே?” – இது பச்சைக்கிளி.

“அப்படியில்லடா பக்கி. ‘மனுசங்களுக்குப் புரியற மாதிரி எழுதுவதில் எந்த கிரகவாசி சிறந்தவர்?’ போட்டிக்கு வந்திருந்த மேட்டர் எல்லாம் படிச்சிண்டிருந்தேனா! அப்படியே தூங்கிட்டேன். குழந்தை அழற மாதிரி கனவு. ரொம்ப நாளா வளராம அப்படியே இருக்கிற குழந்தை. அழுதுண்டே இருக்கு. யார் எடுத்து டான்ஸ் ஆடினாலும் அழறத நிறுத்த மாட்டேங்குது. ‘வரந்தந்த சாமீக்கு பதமான லாலி’ பாட்டை மட்டும் பதினெட்டாயிரம் மொழியில் பாடறோம். எதற்கும் அடங்கல. மூஞ்சியெல்லாம் செவந்து போச்சு. அப்படி ரத்தக் கண்ணீர். நரகத்தில் பிண்டம் துடிக்கிற மாதிரி இருக்கு. கருட புராணத்தில் வருமே? அந்த மாதிரி குட்டிக் கைவிரல் சைஸில் முகம்.”

“உன்னை விட்டால் அந்தக் காலத்தில் வெண்பா பாடத் தெரிஞ்சவன் எல்லாம் நாலடியில் டயலாக் விட்ட மாதிரி இருநூறு பக்கத்துக்கு குழந்தைப் புராணம் எழுதுவே!” – இது நீலக்கிளி.

“அந்த மாதிரி எழுத இப்ப யாரு இருக்கா நிக்கி? ஒவ்வொண்ணுத்தையும் இக்கினியூண்டு இக்கிணியூன்டா ஆராஞ்சு, ருசிச்சு, சக்கைய கொடுத்து, வாசகனத் திளைக்க வைக்கணும். அதானே மனுசனுக்குப் பிடிச்ச கத? நம்ம தாத்தன், பாட்டன் வாழ்ந்த கலாச்சாரம்! அன்னனின்னிக்கு நடக்கிற வாழ்க்கையின் சுவாரசியம்; உன்னிப்பா கவனிச்சு, உறவுக்குள்ள நடக்குற கலவரங்கள சொல்லணும். எத்தன மக்கள் இருந்திருக்காங்க! சுயநலம், பச்சாதாபம், பேராச பிடிச்ச பொருளாதார பித்து முதல் அடுத்தவ வீட்டுக்குள்ள நுழையற மோகம் என்று ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம்!”

“ரி-நாய்-சென்ஸ் மாதிரி இவங்க எல்லாம் புது ட்ரெண்ட் உருவக்கறாங்கன்னு நீ ஏன் நெனைக்கக் கூடாது?”

“பெட்ரோல் தீர்ந்துபோச்சுன்னு கைவிரிச்ச காலத்தில் வண்டியோட்னவனுக்குத்தான் பெட்ரோலோட அருமை தெரியும். நீயே படிச்சுப் பாத்து நொந்தாத்தான் உனக்கு வெளங்கும்.”

“எங்களுக்கும் கொடுத்தா நாங்களும் படிப்பம்ல?”

“அதுதான் பெஸ்ட் நிக்கி. இதுவரைக்கும் வந்த இருபது கதைகள்ல பகல் பத்தை பக்கி படிக்கட்டும். இராப்பத்தை நீ படி நிக்கி”.

“அப்படீன்னா… உனக்கு யாரு தாலாட்டுப் பாடறது?”

நிக்கியைப் பார்த்து ஜெய கிருஷ்ணன் கண்ணை சுழற்றினார். ஒலி 96.8 ஆக தமிழ் பண்பலை போட்டுக் கொண்டார்.கைவிரலை தாளமிட்டவுடன் சத்தம் சரியாக வைக்கப்பட்டது. கண்மூடிய நிலையில் ஓடிய கருவிழிகளில் திரைப்படத்தையும் ஒளிர விட்டுக் கொண்டார்.

ஜெயகிருஷ்ணன்.

சுருக்கமாக ஜெ.கி. அருகிவரும் இலக்கிய உலகில் மீதமிருந்த ஒரே இலக்கியவாதி. தேடல்களினால் ஆய பயன் எதுவும் இல்லை என்று முடிவெடுத்த யுகத்தில் தப்பிப் பிறந்த இவரை சனிக்கிரகம் கண்டுபிடித்து தன் பார்வையில் வைத்து இரஷிப்பதற்குள் ஏழரை நாட்டு உலகத்துக்கே சென்றுவிட்டவர்.

‘கீக்கீக்கீ’ என்று கத்திக் கொண்டிருந்த பச்சைக் கிளியை பக்கி என்று பெயரிட்டு பேசிவருபவர். ‘கூக்கூக்கூ’ என்று கூவிக் கொண்டிருந்த நீலக்கிளியில் பீத்தோவன் தொட்டு பரத்வாஜ் முதற்கொண்டு பீட்டில்ஸ் வரை பாட வைத்து நிக்கியாக்கிக் கொண்டவர்.

இதற்கெல்லாம் மின் சாதனங்கள் இருக்கின்றனவே என்ற மானுட ஜாதியினரிடம் புழு பூச்சிக்கும் முனைவர் அறிவு உண்டு என்பதை உலகறிய ஓதியதால் தூக்கு மேடை வரை சென்று, மீண்டு, நிரூபிப்பதில் வாழ்நாள் ஆராய்ச்சியாளர் ஆனவர்.

பக்கத்தில் இருந்த பறவை மானிட்டர் அலறியது. ஆராய்ந்து கொன்டிருந்த புழு, பூச்சிகளின் ஆறறிவை அப்படியே விட்டுவிட்டு பறவை பக்கம் சென்றார்.

“பன்றியா மறுபிறப்பெடுத்த ரிஷி பழைய பொறப்ப மறந்தே போன மாதிரி இரண்டு மணி நேரமாக என்னைப் பார்க்கவே வரவேயில்லையே?” வரவேற்றது பச்சைக்கிளி.

அறிவியல் சிறுகதைப் போட்டி