Monthly Archives: ஜூலை 2017

‘Chaos Monkeys’ & The Lobster

உச்சைசிரவஸும் குரங்கும்

Chaos Monkeys_Book_Obscene Fortune and Random Failure in Silicon Valley“வணக்கம்!” என்று வரவேற்பதை கலிஃபோர்னியாவிற்கு குடிவரும் ஒவ்வொரு புதியவரும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? பல்லாண்டு காலமாக சிலிகான் வேலியில் குப்பை கொட்டியவர்கள், அதை “நீ எக்கேடு கெட்டு போனா எனக்கென்னடீ!” என்பதன் சுருக்கம் என அறிவார்கள். அவர்களின் திருமணத்திற்கு அழைப்பு வைத்தும் நீங்கள் போகாவிட்டால் அவர்கள் புரிந்து கொள்வார்கள். தங்களின் புத்தியை உஷார்நிலையில் வைத்திருக்கும் யோகா வகுப்பிற்கு செல்லும் நடைபாதையின் குறுக்கே இருக்கும் வீடற்றவரை கவனிக்காமல் சுலபமாகத் தாண்டிச் செல்வார்கள். இவர்களுக்கு குடும்பம், குட்டி பொருட்டில்லை. மதமோ கடவுளோ நம்பிக்கை இடையூறு செய்வதில்லை. ஆண்களோ, பெண்களோ, பால் பேதமின்றி தங்களைச் சுற்றி தீவு போன்ற குமிழிகளைக் கட்டியிருக்கிறார்கள். வருமான ஏற்றத்தாழ்வு போன்ற சமூகச் சிக்கல்களோ, அண்டை அயலில் நடக்கும் சிரியா நாட்டின் உள்நாட்டு சண்டைகளோ இவர்களை அசைப்பதில்லை. ”எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கப்பு!” என்னும் வாழ்வியல் கோட்பாட்டை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவார்கள். சான் ஃபிரான்சிஸ்கோவில் ஆரம்பித்து சான் ஓஸேவில் முடிவதாக சொன்னாலும் இப்போதைய அமெரிக்க புதுயுக கண்டுபிடிப்பு நிறுவனங்களின் கலாச்சாரம் என்பது இதுதான்: சுயநலத்தில் ஊறிய தருமம்; பொது நீதி எல்லாம் கண்டுகொள்ளாத்தன்மை; அதன் அடிப்படையில் உலகநன்மைக்காகவும் லோகஷேமத்திற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் பாவ்லாத்தனம்; தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதாகச் சொல்லிக்கொண்டு அடுத்த மாதம் ஐந்து மில்லியன் கிடைக்குமா என்று கணக்கு போடும் புத்தி. எப்போது பங்குச் சந்தையில் பில்லியன்கள் அள்ளூவோம், எப்படி கூகுளுக்கும் மைக்ரோசாஃப்டிற்கும் தங்கள் நிறுவனத்தை விற்போம் என்னும் திட்டங்களில் இலயித்து கிடக்கும் சுயமோகம்.

Chaos Monkeys: Obscene Fortune and Random Failure in Silicon Valley By Antonio García Martínez நூலில் இருந்து ஒரு நறுக்

மேற்படி நூலைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது ‘தி லாப்ஸ்டர்’ திரைப்படத்தை பார்த்துத் தொலைத்தேன். புத்தகத்திற்கும் படத்திற்கும் ஸ்னான ப்ராப்தி இல்லைதான். இருந்தாலும், அவை இரண்டிற்கும் நடுவே உள்ள தொடர்புகளைக் கோர்த்துப் பார்ப்போமா?

’தி லாப்ஸ்டர்’ படத்தின் துவக்கத்தில் ஒருத்தி ஆள் அரவமற்ற சாலையில் காரோட்டிச் செல்கிறாள். சாலையோரத்தில் சில கழுதைகள் மேய்ந்து கொண்டிருப்பதை பார்க்கிறாள். காரை நிறுத்தி, சுற்றுமுற்றும் எவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்கிறாள். அதன் பின், காரில் இருந்து இறங்கி, தன் துப்பாக்கியை எடுத்து, ஒரு கழுதையைக் கொல்கிறாள். அதன் பின், மீண்டும் காரில் ஏறி சென்றுவிடுகிறாள்.

அடுத்த காட்சியில் டேவிட் அறிமுகமாகிறான். அவன் மனைவி அவனை காதலிக்கவில்லை. அதனால், அவனை நகரத்தில் இருந்து தள்ளி, ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு விடுதிக்கு அழைத்துப் போகிறார்கள். சற்றே தொப்பை இருக்கிறது. கண்ணாடி அணிந்திருக்கிறான். அந்த விடுதியில் நாற்பத்தைந்து நாள்கள் அவன் இருக்க வேண்டும். அந்த விடுதியில் இருப்போர் எல்லோருமே தனியர்கள். சிலருக்கு கணவன் இறந்துவிட்டார்கள். சிலருக்கு மணமுறிவாகிவிட்டது. எப்படியோ இணையின்றி இருப்பவர்கள். கொடுக்கப்பட்ட ஒரு மண்டலத்திற்குள் தங்களின் துணையைத் தேடிக் கொள்ளவேண்டும். 45 நாள்களுக்குள் காதலில் விழுந்து கல்யாணத்தில் விழாவிட்டால், மிருகமாக்கப்படுவார்கள். ”விலங்காக மாறியாவது உங்களின் துணையைத் தேடிக் கொள்ள இன்னொரு வாய்ப்பு வழங்கப்படுவதை நினைத்து நீங்கள் சந்தோஷப் படவேண்டும்!” என்கிறார் அந்த விடுதியின் நிர்வாகி.

lobster_movie_animal_Films_Second_Chance_Loners

இந்தப் படத்தைப் பார்க்கும்போது சற்றே அசௌகரியம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. படம் பார்க்கும்போது என் குடும்பத்தாரும் இல்லாத சமயம். அதுவும் கொஞ்சம் தொண்டையில் மாட்டிக் கொண்ட தேங்காய் நாராக படத்தின் முகாந்திரத்தோடு ஒன்றச் செய்தது. அலுவலில் இப்போது எல்லாம் எல்லோரும் சேர்ந்து ஒரே இடத்தில் வேலை செய்வதில்லை. என்னோடு பணி புரியும் இருவர் இந்தியாவில் இருந்து கொண்டு, அமெரிக்க பகல் நேரத்தில் வேலை பார்ப்பவர்கள். கிட்டத்தட்ட அவர்களை ஆந்தைகளைப் போல்தான் உணர்வேன். இன்னொருவர் ஒரு வாரம் பாஸ்டனில் இருப்பார். அடுத்த வாரம் சிகாகோவில் இருப்பார். பறந்துகொண்டேயிருக்கும் பருந்து. மற்றொருவரை ஏன் பணியில் வைத்திருக்கிறோம் என்றே எவருக்கும் தெரியாது. எல்லோரையும் மதிய உணவிற்கு செல்லவேண்டும் என்பதை நினைவுறுத்துவார். எங்களுடன் மயில் மாதிரி சிரித்துப் பேசுவார். அவரின் தோகை போன்ற ஆடைகளும் அணிகலன்களும் மினுமினுக்கும். அலுவலகமே மிருகக்காட்சி சாலை. ஒரே இடத்தில் 9 முதல் 5 வரை உழல்வதால், காதல் மலர்ந்தவர்களும் உண்டு.

எனவே, இந்தப் படத்தின் விசித்திரமான கதைப் போக்கும் ‘தாறுமாறான குரங்குகள்: மிகப்பருத்த குருட்டுயோகமும் சிலிகான் வேலியின் சீரற்ற தோல்விகளும்’ புத்தகத்தின் உள்ளடக்கமும் ஒருங்கே மின்னி மின்னி மறைந்தன.

சிலிகான் வேலியில் வெல்வதற்கான எல்லா சாமுத்ரிகா லட்சணங்களும் அண்டோனியோ கார்சியா மார்குவேஸ் (Antonio García Martínez) என்பவரிடம் இருந்தன. அவரின் நிறுவனம் யொய்-காம்பினேட்டர் (Y Combinator) எனப் புகழ்பெற்ற முதலீட்டாளரின் கடைக்கண் பார்வையை அல்ல… தீர்க்கமான நேரடியான அருளாசியைப் பெற்றிருந்தது. அதை ட்விட்டரிடம் விற்கும் வாய்ப்பு கிடைத்தது. ட்விட்டருக்கு தன்னுடைய நிறுவனத்தை விற்ற பிறகு ஃபேஸ்புக்கில் பெரிய முக்கியமான வேலை கிடைத்தது. இந்த மாதிரி ராஜபாட்டை எல்லோருக்கு வாய்ப்பதில்லை. கிடைத்தவர்களும் அதையெல்லாம் பகிர்வதில்லை. சிலிகான் வேலி என்பது மூடுமந்திரம். சாந்திமுகூர்த்தத்தில் என்ன நடக்கிறது என்பது தமிழ் சினிமாவில் காணக்கிடைக்காத மாதிரி கணினி நிறுவனங்களும் எதையும் போட்டு உடைப்பதில்லை. குழந்தை பிறந்தால் மகிழ்வது போல் பொதுப்பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ.) காண்பது மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.

இந்த மாதிரியே யோசித்ததில்…

தி லாப்ஸ்டர் படம் சிலிகான் வேலி புத்தகம் மானிட மையக்கொள்கை (Anthropocentrism) மனிதப்பண்பேற்றல் (Anthropomorphism)
திரைப்படத்தில் உள்ள சமூகச் சித்தரிப்பின் படி, தனியாக வாழ்வது குற்றமாகக் கருதப்படுகிறது. தனியாக வாழ நினைப்பவர்கள் மிருகமாக மாற்றப்படுவார்கள் நூலில் உள்ளபடி பார்த்தால், கணினி நிறுவனங்களில் கோடிகள் சம்பாதிக்காவிட்டால், நீங்கள் சாமர்த்தியசாலி அல்ல. பலிகடா எனக் கருதப்படுகிறீர்கள். குரங்கு சேட்டை – என்பதில் இருந்து Chaos Monkeys பிரயோகம் வந்தது. உங்கள் வீட்டில் தினசரி சமைப்பது இல்லத்தரசிதான் என வைத்துக் கொள்வோம். சடாரென்று ஒரு நாள், இல்லத்தரசி எதுவுமே சமைக்காமல் இருந்தால், சாப்பாட்டு நேரத்தில்தான் அதை உணர்ந்தால், என்ன செய்வோம்? குழம்பித் தத்தளிப்போமா அல்லது எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினையை எதிர்க்கொள்வோமா? தங்களின் காரியங்களை நிறைவேற்ற மனிதர்கள் மட்டும்தான் ஒற்றுமையாகச் செயல்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. சிம்பேன்சி  குரங்குகளும் அவ்வாறே தன்னலத்தோடு ஒற்றுமையாகவும்  கூட்டுறவாகவும் நடந்துகொள்வதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
படம் நெடுக நிறைய பிராணிகள் வருகின்றன. கதாநாயகனின் சகோதரன் நாயாக மாறி இருக்கிறான். வாத்துகள், குதிரைகள் எல்லாம் எப்போதும் பின்னணியில் உண்டு நூலில் உள்ளபடி பார்த்தால், கணினி யுகத்தின் தொழிலாளிகள் எல்லோருமே தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இராணித் தேனீக்கு உழைக்கும் பணித் தேனீகள். வளர்ப்பு பிராணிகள் மட்டுமே சிறிதளவு தன்னலமற்றவை. மற்ற மிருகங்கள் அனைத்துமே சுயநலம் மிக்கவை. நாய் போல் நன்றி; புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என தமிழில் எக்கச்சக்கத்திற்கு அனைத்து மிருகங்களுக்கும் மனிதவுருஅல்லது பண்பு சார்த்துதல் தொடர்கிறது.
தனியாக இருக்க பிரியப்படுபவர்களை வேட்டையாடும் காட்சிகள் படத்தில் உண்டு. தனிமை விரும்பிகளாக விரும்பி சமூகத்தில் இருந்து தப்பித்து ஓடுபவர்களை, – கண்டுபிடித்து, கட்டி இழுத்துக் கொண்டு வந்தால் சில்லறை பரிசுகள் உண்டு. நிறுவனத்திற்காக பரிபூரணமாக உழைப்பவர்களுக்கு எப்போதுமே குட்டி பதவி உயர்வுகள் உண்டு. ஏய்ப்பவர்களைக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களுக்கு அதிகாரத்தின் சாவிகள் தரப்படும். சிங்கத்தின் முகத்தை ஈக்கள் மொய்க்கும். வேட்டையாடி விட்டு களைத்து உறங்கும் சிங்கத்தின் முகத்தில் ஈயாடும். அந்த ஈக்களை எலிகளும் தவளைகளும் உண்டு பசியாறி — பெரிய மிருகமான சிங்கத்தின் நித்திரைக்கு உதவுகின்றன. ஈசாப் நீதிக்கதைகளில் ஆரம்பித்து இன்றைய டிஸ்னி படங்கள் வரை சிங்கமும் எலியும் மனிதரைப் போல் பேசி, உரையாடிக் கொண்டேயிருக்கின்றன.
தனிமைவிரும்பிகளும் சுதந்திரவாதிகள் அல்ல. தனிமையில் வாழ்பவர்களிடமும் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. தொட்டால் தண்டனை; முத்தம் கொடுத்தால் வாயைத் தைத்து விடுவார்கள். உங்கள் அரசாங்கம் உங்களை எப்போதும் கண்காணிக்கிறது; சமூக ஊடகங்களில் நீங்கள் பகிரும் விஷயங்களைக் கொண்டு உங்களை சந்தைப் பொருள் ஆக்குகிறார்கள்; உங்கள் அந்தரங்கத்தை விற்கிறார்கள் மிருகங்களிடத்திலும் எழுதப்படாத விதிகள் உண்டு; வயதைப் பொருத்து அல்லது திறமையைப் பொருத்து சமூக அடுக்கு காணக் கிடைக்கிறது. சிலிக்கான் வேலியில் துவக்க நிலையில் இருக்கும்  குட்டி நிறுவனங்களை கூகுள், ஃபேஸ்புக் போன்ற பெரிய வளர்ந்த நிறுவனங்கள் அடிமையாக்கி கீழ்ப்பணிய வைக்கின்றனர்.
இந்தப் படம் டிண்டர் (Tinder) சமுதாயத்தைக் குறிவைக்கிறது. அவர்களின் காதல்வயப்படலை கிண்டலடிக்காமல், ஆவணப்படம் போல் பதிவு செய்கிறது. இந்தியர்கள் போல் நிச்சயிக்கப்பட்டு அதன் பின் காதலில் விழும் சமூகத்தைக் குறிக்கிறது. உங்களின் நிரலி செம்மையாக எழுதப் பட்டிருக்கிறதா என்பதை யாரும் பொருட்படுத்துவதில்லை. நீங்கள் எவ்வளவு வாக்கு சாதுர்யம் கொண்டவர் என்பது மட்டுமே முக்கியம். ஏற்கனவே, எவ்வளவு நிறுவனங்களைத் தொடங்கியவர் என்பது முக்கியம். அந்த நிறுவனங்கள் வெற்றி அடைந்ததா, பயனற்றதா என்பதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. பெரும்பாலான ஜந்துக்களுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் நம்பிக்கை கிடையாது. அழகான எதிர்ப்பாலார் அல்லது ஒத்த சிந்தனையுள்ள துணை அல்லது ஒரே குறைபாடுகள் கொண்ட தம்பதியினர் என்பது விலங்குகளுக்குக் கிடையாது. நோவா பேழையை எடுத்துக் கொள்வோம். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிருகங்கள் இருந்தன. பல பறவைகள் வாழ்நாள் முழுக்க ஒரேயொரு துணையுடன் காலங்கழிக்கின்றன.

The_Lobster_Couples_Love_Forest_Blind_Similar_Interests_Animal

Chaos Monkeys – குழப்பவாத குரங்குகள் என்பது கணினி நிரலாளர்களுக்கு பழக்கமான பிரயோகம். கணினிகள் எப்போதும் வேலை செய்யும் என்பதை நம்ப முடியாது. கணினியின் நிரலிகள் ஒவ்வொரு நொடியும் சரியாக இயங்கும் என்பதை நம்ப முடியாது. எந்த நிமிஷம் வேண்டுமானாலும் நம் நிரலிகள் செயலிழக்கலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கணினிகள் ஸ்தம்பித்து நிற்கலாம். அப்போதும், உங்களின் வர்த்தக இயக்கம் ஓடவேண்டும். எந்த இடையூறு வந்தாலும், பிறருக்குத் தெரியாதபடி நிறுவனத்தின் எந்திரம் இயங்க வேண்டும்.

கார்சியாவின் நூலில் கணினிகளுக்கு மட்டுமே புகழ்பெற்ற இந்த ”குழப்பவாத குரங்குகள்” தத்துவத்தை நிறுவனங்களுக்குக் கொண்டு செல்கிறார். தொலைபேசி நிறுவனம் இருந்தது. அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பேச வேண்டுமென்றால் நிமிடத்திற்கு இரண்டு டாலர் வசூலித்தது. தடாலென்று ஸ்கைப் முளைத்தது. அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா வரை எங்கே வேண்டுமானாலும் இலவசமாகப் பேச முடிகிறது. இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.

அதே போல் சென்னையின் ஆட்டோ ஒட்டுனர்கள் இருந்தார்கள். ’இந்த இடத்திற்கு வர முடியாது’ என்பார்கள். ‘இங்கே போக வேண்டுமென்றால் டபுள் ரேட்’ என மிரட்டுவார்கள். அவர்களில் சில சந்தேகாஸ்தபமான, சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். ஓலா முளைத்தது. செல்பேசியில் அவர்களை பார்க்கலாம். எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியலாம். ஓலா ஓட்டுனர்களுக்கு, நீங்கள் சாவுகிராக்கியா, நல்ல கிராக்கியா என்பதை அறிய முடியும். இது குழப்பவாத குரங்குகளின் செய்கை.

’தி லாப்ஸ்டர்’ படமும் குழப்பவாத குரங்குகளின் செய்கையை குறிக்கிறது. உங்கள் இல்லறத்தில் மாரத்தான் ஓட்டம் போல் பொறுமையாக ஓடப் பார்க்கிறீர்கள். நடுவில் சுனாமியோ, நிலநடுக்கமோ ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வீர்கள்? மீண்டு எழுவீர்களா? விலங்கு குணங்களைக் கொள்வீர்களா? மனிதர் என்பவருக்கு என்ன பண்பு இருந்தால் மானிடர் ஆகுவீர்கள்?

ஒரே ஒரு கபர்தார்: இந்தப் படத்தை உங்களின் காதலரோடு பார்ப்பதற்கு முன் அவரை திருமணம் செய்துகொள்வது சாலச்சிறந்தது.

இன்னும் ஒரு கபர்தார்: இந்தப் புத்தகத்தை படித்து நீங்களும் வருடத்திற்கு 550 ஆயிரம் டாலர் சம்பாதிக்கலாம் என்று சிலிக்கான் வேலிக்குக் குடி புகாதீர்கள்.

Westworld – Part 1

கோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்

westworld_anthony_hopkins_hbo_tv_shows

 

வெஸ்ட் வோர்ல்ட் என்னும் தொலைக்காட்சித் தொடர்

 

’அவர்கள் மீண்டும் மீண்டும் திரும்ப வருவதற்கான காரணம் என்னவென்று கவனித்தாயா? நுணுக்கமான விஷயங்கள் அவர்களை ஈர்க்கிறது. ஏற்கனவே பார்த்த இடம்தானே என்று அலட்சியமாக பயணியாக வருபவர்கள், சின்னச் சின்னத் தகவல்களிலும் நினைவேக்கங்களிலும் மூழ்குகிறார்கள். முன்பே அனுபவித்திருந்த ரம்மியமும் புதிதாய் தான் மட்டும் கண்டறிந்த பெருமிதமும் சுற்றுலாவாசிகளைச் சொக்க வைக்கிறது. அடுத்த தடவை இங்கே வரும்போது எதை கண்டுபிடிக்கப் போகிறோம் என்னும் ஆர்வமும் தொக்கி நிற்கிறது.

இந்த இடத்திற்கு கேளிக்கைக்காக வருபவர்கள், தாங்கள் யார் என்று அறிந்து கொள்வதற்காக இங்கே வருவதில்லை. அவர்களுக்குத் தான் எப்படிப்பட்டவர் என்பது நன்கு தெரியும். எப்படிப்பட்டவர்களாக முடியும் என்பதை தூரதிருஷ்டி கண்ணாடி மூலம் உணர்வதற்காக இங்கே வருகை புரிகிறார்கள்.’

மேலே காணும் வசனத்தை இயந்திர மனிதர்கள்(ரோபாட்) கொண்ட நகரத்தை உருவாக்கியவர் பேசுவார். ‘வெஸ்ட் வோர்ல்ட்’ (Westworld) என்னும் சாகச சவாரிகள் கொண்ட தீம் பார்க்கிற்கு எப்படி மறுபடியும் பயணிகளை வரவழைப்பது என்பதற்குப் பதிலாகச் சொல்வார். பழனி, திருப்பதி போன்ற ஷேத்ராடனம் ஆகட்டும்; டிஸ்னி, எம்.ஜி.எம்., போன்ற பல வணிக நோக்குடைய பூங்காக்கள் ஆகட்டும்; கொடைக்கானல், மாலத் தீவுகள் போன்ற சுற்றுலாத்தலங்கள் ஆகட்டும்; நம் சஞ்சாரம் – பார்த்த இடத்தையே மீண்டும் ஏன் சென்றடைகிறது? அதற்கான விடையாகச் சொல்கிறார்.

வெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். தடி எடுத்தவன் தண்டல்காரன். உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. சிறிய கிராமங்கள். மாடுகளைப் பராமரிப்பது குதிரையேற்றத்தில் வித்தகராக இருப்பது போன்றவை அவசியமான திறமைகள். காலையில் கொள்ளை, மாலையில் விஸ்கி, இரவில் வெட்டவெளியில் விழவெரி தீ என்பது வாழ்க்கைமுறை. ஒரு புகைவண்டி ஓடும். அது நாளுக்கு ஒரு முறை அந்த நகரத்திற்கு வரும். அதில் இருந்து வெளியூர்க்காரர்கள் வருவார்கள். அவர்கள் நகரமையத்தில் பொருள்களை வாங்கி, தாங்கள் கொண்டு வந்ததைப் பண்டமாற்றம் செய்வார்கள். சீட்டாடுவார்கள். எதிர்பாராததைச் செய்வார்கள் – என்பதெல்லாம் தொன்மமான தேய்வழக்கு.

இன்றும் கூட அமெரிக்காவின் நெவாடா, அரிசோனா, வையோமிங், மாண்ட்டானா போன்ற மாகாணங்களுக்குச் சென்றால் இதையொத்த நகரங்களைப் பார்க்கலாம். அங்கே காட்டு விலங்குகள் எங்கிருந்து எப்போது வரும் என்று தெரியாத சூழலினால் எல்லோர் கையிலும் துப்பாக்கியும் கத்தியும் இருப்பது போன்ற தோற்றம் காணப்படும். கொஞ்சம் அச்சம் கூட எழும். காவல்துறையும் சட்டமும் ஒழுங்கும் நிலவினாலும், அவையில்லாதத் தோற்றத்தை உருவாக்கும் கேளிக்கை விடுதிகளும் இந்த மாநிலங்களில் காணக் கிடைக்கும். அது எல்லாம் சும்மா பேருக்குத்தான். அசல் கிளர்ச்சிக்கு எங்கே போவது?

1850களுக்கு பயணிப்பது எப்படி சாத்தியம்? பழைய நினைப்பில் மூழ்காமல், அங்கேயே சென்று அந்தக் காலத்திலே வாழ்வது எப்படி? கடவுள் வரம் தந்து, அப்படியே அந்த 19ஆம் நூற்றாண்டுக்குச் சென்றுவிட்டாலும் ஒவ்வொரு வினாடியும் சாகலாம் என்னும் கொடுங்காலத்தில் எப்படி உயிர் பிழைப்பது? சுட்டால் செத்து விடுவோம். திருடர்கள், கொலைகாரர்கள் என்றில்லாமல் தவறுதலாக இடித்தால் கூட கொன்றுவிடும் அந்தக் கால ருசியும் வேண்டும். ஆனால், செத்தும் பிழைக்க வேண்டும்.

இதைத்தான் வீடியோ கேம்ஸ் செய்து காட்டுகிறது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ, (Grand Theft Auto) போன்ற விளையாட்டுகளை நீங்கள் ஆடியிருக்கலாம். அந்தத் தெகிடிக்குள் நீங்கள் எவ்வளவு தூரம் அக்கிரம் செய்கிறீர்களோ, எத்தனை அட்டூழியம் செய்கிறீர்களோ அத்தனைக்கு அத்தனை சாமர்த்தியசாலி. பஞ்சமா பாதகங்கள் முதல் சாதாரண பாதகங்களான சாலைவிதிகளைப் பின்பற்றாமல் வண்டியோட்டுவது வரை என்ன வேண்டுமானாலும் செய்து சந்தோஷம் அடையலாம். அது கணினி விளையாட்டு. அசல் போல் தோன்றும். ஆனால், சுற்றிவர உங்கள் வீடு இருக்கும்.

இதன் அடுத்த கட்டமாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு விளையாடும் ஆட்டங்களைச் சொல்லலாம். (தொடர்புள்ள கட்டுரை: வற்றாயிருப்பு சுந்தர் – மெய்நிகர்சனம் (VR) மற்றும் கிஷோர் மஹாதேவன் – மெய்நீட்சி (AR): இல்லை, ஆனால் இருக்கு). இவை ஓரளவு இயல்பு நிலையை மறக்க வைக்கின்றன. நம் தலை திரும்பும் இடமெல்லாம் மாயலோகம் இருக்கிறது. நாம் ஆப்பிரிக்காவில் எங்கோ மூலையில் இருந்தாலும் சுற்றுப்புறம் எங்கு பார்த்தாலும் மதுரை தெரியுமாறு அமைக்கலாம். ஆனால், செல்பேசி சிணுங்கினால் நிஜ வாழ்விற்கு தடலாடியாக வந்துவிடுவோம். திரையில் காணும் கதாபாத்திரத்தைக் கற்பழிக்க நினைத்தாலும் சுயநினைவோடு, நம்முடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டே கற்பனையாட்டம் ஆட வேண்டும்.

இந்த மாதிரி தடைகள் எதுவும் இல்லாமல், அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்வது எப்படி? உள்மன வக்கிரங்களை ஆசை தீர நிறைவேற்றிக் கொள்வது எப்படி? இன்றைய நிலையில் அதைச் செய்தால் ஜெயில் தண்டனை கிடைக்கும். சமூகப் புறக்கணிப்பு அமையப்பெறுவோம். உடம்பில் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது. மானம், மரியாதை எல்லாம் கப்பலேறும்.

westworld_3d_printing_robots

இங்கேதான் வெஸ்ட் வோர்ல்ட் என்னும் மாயாபுரி உதயமாகிறது. இங்கே கொள்கையும் கிடையாது; புண்ணாக்கும் கிடையாது. தரங்கெட்டழிந்த நிலை எங்கும் நிலவும் இடம் இது. சூனியவாதம் அராஜகத்துடன் கைகோர்த்து கோலோச்சும் இடம் இது. உள்ளுக்குள் சகல அழுக்குகளையும் வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாக வேஷம் போட வேண்டாத இடம் இது. வெற்றி என்பதை விட பணம் பண்ணவேண்டும் என்பதை விட மனதிற்கு பிடித்ததை மகிழ்ச்சி தருவதை செய்து பார்க்க அழைக்கும் இடம் இது. உங்களுக்கு இன்று கொலைகாரனாக பாட்ஷாவாக வேஷம் போட வேண்டும் என்றாலும் ரட்சகனாக மாணிக்கமாக மாறவேண்டும் என்றாலும் அதற்கான அவதாரத்தைக் கொடுக்கும் இடம் இது. உங்கள் குறிக்கோள் உங்கள் கையில். எது உங்களுக்கு திருப்தி தருகிறது என்பதைப் புரட்டிப் புரட்டிப் போட்டு பார்த்து பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி, அவற்றுள் சிந்தைக்குக் கிளர்ச்சி தரும் பாதையை கண்டுபிடித்துக் கொள்ளவைக்கும் இடம் இது.

இந்த நகரத்தில் நீங்கள் சுட்டால் மற்ற தானியங்கி ரோபாட்டுகள் சாவார்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகாது. கனவுக்கன்னியும் கிடைப்பாள்; குத்தாட்டக்காரியும் கிடைப்பாள். குழந்தைப் பாசமும் கிடைக்கும். அம்மாவின் அரவணைப்பும் கிடைக்கும். விடிய விடிய ஆடலாம்; பாடலாம்; குடிக்கலாம். பிறன்மனை நோக்கலாம்; கையைப் பிடித்து இழுக்கலாம்; தட்டிக் கேட்போரை கொலை செய்யலாம். சாகசப் பயணங்கள் மேற்கொள்ளலாம். வீரதீரச் செயல்களைச் செய்யலாம். மலையேறலாம். பாம்பாட்டி ஆகலாம். பெரிய நகரங்களை உருவாக்கி மேயர் ஆகலாம்.

இப்படிப்பட்ட விளையாட்டு நகரத்தில் மனிதர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்? இயந்திர மனிதர்களின் மூளையை அழித்துவிட்டாலும் அந்த கணினிகள் எப்படி இயங்கும்? இவ்வளவு நிரலிகளையும் மேய்க்க, அதற்கான அடுத்த மேம்பட்ட மென்கலன் கொண்டு புது விஷயங்களை அடிக்கடி எல்லா நிரலிகளிலும் உருவாக்க, இயந்திர தற்கற்றல் தேவை அல்லவா? (தொடர்புள்ள கட்டுரை: இயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை) இதை நிர்வகிக்க தானியங்கி மேலதிகாரியாக ரோபாட்டுகளையே வைத்திருந்தால் அவை எப்படிப்பட்ட சித்தாந்தச் சிக்கலில் சிக்கும்? (தொடர்புள்ள கட்டுரை: உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?) மனிதனின் வக்கிரங்களுக்காக பிற பொருள்கள் நாசமாகலாமா? இது போன்ற கேள்விகள் எதுவும் நேரடியாகக் கேட்கப்படுவதில்லை. இயந்திர மனிதரின் தனி மனித உரிமை கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இருந்தும் கணிப்பொறிகளையும் அதன் நிரலிகளையும் அவற்றின் இயங்குதன்மையும் அறிந்த நம்மால் வருங்காலத்தை நம் கற்பனையில் ஊகிக்க போதுமான நுட்பமான சிந்தனைகளை உள்ளடக்கிய தொலைக்காட்சித் தொடர் – வெஸ்ட்வோர்ல்ட்.

இரட்டை அறை மூளை

ஆர்வர் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

பொருள் : மிக்க அன்புடையவர் இறைவனை உணர்வர். அன்பினால் உண்டாகும் மனம் நெகிழ்வுடையார் விந்து நாதமாகிய திருவடிகளைச் சிரசில் சூடுவர். சம்சாரமாகிய சுமையைத் தாங்கி வருந்துபவர் பிறவியாகிய சாகரத்தில் உழல்வர். அன்பில்லாத அவர் துன்பமாகிய காட்டகத்தே நெறியறியாது திண்டாடுவர். கொங்கு – காடு.

திருமூலர் | அன்புடைமை – திருமந்திரம் : முதல் தந்திரம் (பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்)

 

ரோபாட்டுகளில் குணாதிசயங்களைக் கீழ்க்கண்டவாறு பிரித்து, அதற்கான பண்புகளை இங்கே உள்ளவற்றின் கலவையாக உருவாக்குகிறார்கள்:

1. நகைச்சுவை உணர்வு
2. பணிவு
3. கிளர்ச்சியுடைமை
4. ஒருங்கிணைத்தல்
5. தன்னடக்கம்
6. குரூரம்
7. வாழ்வூக்கம், தன்னுயிர்க்காப்பு
8. பொறுமை
9. முடிவெடுக்கும் ஆற்றல்
10. கவர்ச்சி
11. அறிவார்வம்
12. ஆக்கிரமிப்பு எழுச்சி
13. பற்றுறுதி, நன்றியுடைமை
14. பச்சாதாபம், புரிந்துணர்வு
15. விடாப்பிடியான சுயநிலை காக்குதன்மை
16. வீரம்
17. கற்பனைத்திறன்
18. காம உணர்வு
19. வெளிப்படையான நடுநிலை, பாரபட்சமின்மை
20. முன்னறிவோடு எண்ணங்களை ஒன்றுகோர்த்து அறிவொடு புணர்தல்

இதில் சில மாண்புகள் ஒன்றோடன்று முரண் ஆனது.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மானுடமே மாபெரும் பேரழிவை எதிர்நோக்கி இருந்தது. எங்கு பார்த்தாலும் பசி, பட்டினி. வறுமையின் கோர தாண்டவம் நிலவியது. பல லட்சம் பேர் உணவின்றி செத்துக் கொண்டிருந்தார்கள். உலகத்தில் உள்ள அறிவியலாளர் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ‘ஏதாவது கண்டுபிடியுங்கள்! அமுதசுரபியைக் கொண்டு வாருங்கள்!’ என்கிறார்கள். ஃப்ரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) என்பவரும் கார்ல் பாஷ் (Carl Bosch) என்பவரும் அந்த காமதேனுவை உண்டாக்குகிறார்கள். காற்றில் இருந்து ரொட்டியை தயாரிக்கிறார்கள். மாநகரத்தைப் போன்ற ஆலைகளைக் கட்டுவதற்கு கால்கோள் இடுகிறார்கள். உலகமெங்கும் உணவுப் புரட்சியை உருவாக்குகிறார்கள். இன்றும் ஹேபர் – பாஷ் செய்முறை இருநூறு கோடிக்கணக்கானோரின் பசிப்பிணியைப் போக்குகிறது.

ஆனால் அதற்கான விலை என்ன? அதே ஹேபர்-பாஷ் செயல்முறையினால் வெடிமருந்து தயாரிக்கிறோம். பெரிய குண்டுகளை உண்டு பண்ணுகிறோம். இவர்களின் கண்டுபிடிப்பினால் உலகப் போரில் மட்டும் லட்சக்கணக்கானோரைக் கொன்றோம். அவர்கள் வாழ்நாளிலேயே தங்களின் அறிவியல் கண்டுபிடிப்பு நாசவேலைக்கும் துணைப்போவதை கண்ணுற்றார்கள். அதனால் விரக்தியும் வெறுமையும் அடைந்தார்கள். கேலிக்குள்ளானார்கள்; கொடூரர்களாக சித்தரிக்கப் பட்டார்கள். பரிதாபமாக இறந்தார்கள். இன்றும் இவர்களின் கண்டுபிடிப்புகள், உப்புவளி (நைட்ரஜன்) மாசுபடுத்தலுக்கான முக்கிய தோற்றுவாயாக இருப்பதை பார்க்கிறோம். உலகில் பருமனானோர் பெருகுவதற்கும் இவர்களை நோக்கி சுட்டுவிரல் நீள்கிறது. அவர்கள் நினைத்தது பசியாற்றல்; ஆனால், மனிதரின் மண்ணாசை எதிலோ கொண்டு போய் முடிந்தது.

நம் உடல் என்பது கரிமம் (கார்பன்), நீர்வளி ஹைட்ரஜன் மற்றும் பிராணவாயு ஆக்சிஜன் ஆகிய வாயுப்பொருள்களின் திடப்பொருளாக உருவமாக அமைந்திருக்கிறது. இவை எல்லாமே காற்றில் மிதக்கிறது; கிடைக்கிறது. கையில் சிக்குவதில்லை. செடி கொடிகளிடமிருந்து கரிவளி வெளியாகிறது. காற்று மண்டலத்தில் இருந்து பிராணவாயு பெறுகிறோம். தண்ணீரில் இருந்து நீர்வளி அடைகிறோம். இதனுடன் மிக முக்கியமான நான்காவது வேதிப்பொருள் – உப்புவளி (நைட்ரஜன்). நம்முடைய டி என் ஏ தீர்மானிக்கப்படுவது முதல் மரபணுவின் கையெழுத்து வரை எங்கும் வியாபித்து இருக்கிறது. உப்புவளி (நைட்ரஜன்) ஒரு பச்சோந்தி. எதனுடன் சேர்கிறதோ அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும்; எவருடனும் பிணையும். ஆனால், அதைப் பிடித்து நிறுத்துவது எப்படி? மூச்சுக்காற்றில் இரண்டறக் கலந்திருக்கும் உப்புவளியை உரமாக்கி நிலத்தில் பாய்ச்சினால்தான் மண்வளம் பெறும். ஆனால், ஆவியாகா உப்புவளியை எப்படி நிலைநிறுத்துவது. இதைத்தான் ஹேபர் – பாஷ் செய்முறை என்கிறோம். அவர்கள் நினைத்தது மண்வளம். ஆனால், ஹிடலருக்கோ அது எரிபொருள் தந்தது; குண்டு போட்டுக் கொல்ல வைத்தது.

இதே போல் நம்மால் இப்படி பயன்படுத்த வேண்டும் என்னும் கருதுகோளில் நான் மென்பொருள் எழுதுகிறேன். நாம் தயாரித்த நிரலி இவ்வாறு இயங்க வேண்டும், இப்படித்தான் உபயோகிக்க வேண்டும் என்றும் பயனர்களிடம் சொல்லிவைக்கிறேன். ஆனால், அதையும் தாண்டி பல்வேறு விஷயங்களுக்கு அதை உபகரணமாக்குவதை நம்மால் தடுக்க முடியாது. (தொடர்புள்ள கட்டுரை: ஒரு கணிதையின் கதை) இன்ன பயனுக்காக வெளியிடும் பயன்பாட்டுச்செயலி பிறிதொன்றுக்காக பிறர் பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

உங்கள் வீட்டின் வரவேற்பறையில் விளையாடுவதற்காக மைக்ராசாஃப்ட் நிறுவனம் எக்ஸ். பாக்ஸ் 360 + கினெக்ட் விற்றார்கள். நான்கு கேமிராக்கள் கொண்டு உங்களின் ஒவ்வொரு அசைவையும் ஆராயும் கருவி அது. உங்களின் கையசைவிற்கேற்ப செய்கைகளைப் புரிந்து கொண்டு, கணினியில் உங்கள் கதாபாத்திரத்தை ஓடவைக்கலாம்; ஆட வைக்கலாம். ஆனால், அதை எடுத்துக் கொண்டு மருத்துவத்துறை பயன்பாடுகளுக்காக பல அறுவை சிகிச்சையாளர்கள் மாற்றி இருக்கிறார்கள். ஒரு மருத்துவரின் கணிப்பிற்கும் இன்னொரு மருத்துவரின் கணிப்பில் இருக்கும் வித்தியாசங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவும், வீட்டிலேயே சோதனைகளைச் செய்யவும், எங்கோ தூரதேசத்தில் இருந்தாலும் அவரவரின் வீட்டிற்குள்ளேயே நவீன உடல்நல சிகிச்சையாளர்களின் உன்னத கவனிப்பைப் பெறுவதற்கும் மைக்ராசாஃப்ட் கினெக்ட் உதவுகிறது.

நம் கையில்தான் கணினி இருக்கிறது. கணினி சொல்படிதான் நாம் நடக்கிறோம். கையில் இருக்கும் செல்பேசியில் இருக்கும் கூகுள் நிரலியிடம் மழை பொழியுமா என்று கேட்கிறோம். அதுவும் ‘குடை எடுத்துக் கொள்!’ என்று செல்லமாகச் சொல்கிறது. வெளியே நல்ல வெயில் அடிக்கிறதே என்று குடையில்லாமல் சென்றுவிட்டு, மழையில் சொட்ட சொட்ட நனைந்து, அதில் ஜலதோஷம் பிடித்துக் கொள்கிறோம். அந்த ஜலதோஷத்தை பஸ்ஸில் கூட வரும் முதியவரின் மீது தும்மி தொற்று நோயாக்கி விடுகிறோம். இதை அந்த முதியவரின் செல்பேசி கவனித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த முதியவர் இறந்து விடுகிறார். இப்போது அந்த செல்பேசி உங்கள் செல்பேசியுடன் பேசி, உங்களைப் பழி வாங்க முடியுமா? உங்களால் உலகிற்கு உபத்திரவம் என்றால், அந்த உயிரை எடுக்கலாமா, வேண்டாமா?

இது வெஸ்ட் வோர்ல்ட்-இல் சொல்லப்படாத கதை. ஆனால் கூடிய சீக்கிரமே நடந்தேறக்கூடிய கதை.
bicameral_brain_1

ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சித் தொடருக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் (Julian Jaynes) எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Journey to the West: ஓம் மணி பத்மே ஹூம்

winter_chinese_poem

நான் கடைசியாக எப்போது அரக்கர்களை சந்தித்தேன்?

நான் சாதாரணமாகப் பிடிக்கும் ரயிலைத் தவறவிட்டிருந்தேன். பெரிதாக ஆளரவமற்ற ஸ்டேஷன். பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு ஒரு கையில் செல்பேசியும் இன்னொரு கையில் நாளிதழும் இருந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்த பிச்சைக்காரன் வந்தான். “சில்லறை இருக்கிறதா?” எனக் கேட்டான். நிறைய அருவறுப்பும் கொஞ்சம் பயமும் வந்தது. அவனிருப்பதாகக் காட்டிக்கொள்ளாமல், நாளிதழைப் புரட்டினேன். அவனை முழுக்க உதாசீனம் செய்தேன்.

என்னுடைய அலட்சியமும் வீடற்றவரின் கையாலாகாத்தனமும் சேர்ந்துகொண்டது. அவன் பெருங்குரலெடுத்து என்னை வைய ஆரம்பித்தான். என்னை மட்டுமல்ல… உலகில் எல்லோரையும் அழைத்தான். கெட்ட வார்த்தைகளை ஸ்பஷ்டமாக, ஜோராக, சத்தமாக ஒவ்வொரு பயணியையும் நோக்கி உச்சரித்தான். கேட்கவே காது கூசியது. காவல்துறையினர் அவனைக் கைது செய்து உள்ளே தள்ள வேண்டுமென்று தோன்றியது. அவன் சொல்லும் மூர்க்க சொற்களைக் கேட்பதற்கு விருப்பமில்லாமல் அங்கிருந்து அகன்று கடுங்குளிரில் வெளியில் சென்று நடுங்குவது கூட பரவாயில்லை என முடிவெடுத்து, வாயிலை நோக்கி நகர்ந்தேன்.

அப்பொழுதுதான் அவன் தோன்றினான். அவன் முதுகில் ஒரு பெரிய சுமை இருந்தது. அவன் ஊர் ஊராக, நாடு நாடாக பயணிக்கும் நாடோடி. அவனின் மொத்த பயண சாமான்களும் அந்தத் தோள்பையில் இருந்தது. அந்த சுமைப்பையை சடாரென்று அவிழ்த்தான். பாசாங்கின்றி அந்தப் பெரியவரை, சாண்டா கிளாஸ் போல் வெண்ணிறமாக இருந்திருக்கக் கூடிய தாடியில் கருப்பு அழுக்குடன் காணப்பட்ட முதிய வீடற்றவரை கட்டியணைத்து ஆட்கொண்டான். “சாப்பிட்டாயா? உண்ண என்ன வேண்டும்?” என வினவினான். அன்றலர்ந்த ஆடை அழுக்கு படிவதையோ, எல்லோரும் அவர்களையே உற்று நோக்குவதையோ அவன் பொருட்படுத்தவயில்லை. அவன் கவனமெல்லாம் ஒன்றில் மட்டுமே இருந்தது. வீடற்றவனை நோக்கி “உனக்கு என்ன வேண்டும்?” என்று ஆதுரமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனை உணவகம் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான்.

பால்ய வயதில் படித்த ”மேற்கே பயணம்” (Journey to the West) நினைவிற்கு வந்தது. இது சீனாவின் புகழ்பெற்ற பதினாறாம் நூற்றாண்டு காப்பிய நாவல். அதிலும் இப்படித்தான் ஒரு புத்த பிட்சு உலகெங்கும் பயணிக்கிறார். என்னைப் போன்ற அசுரர்களிடமிருந்து பலஹீனர்களைக் காக்கிறார்.

journey-to-the-west_monkey_king

இந்தக் கதையில் குரங்குதான் முக்கிய நாயகர். இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் குரங்கின் நினைவு வருகிறது. (தொடர்புள்ள உரையாடல்: குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – மறுவினைகள் & உச்சைசிரவஸும் குரங்கும்). இந்தப் ஜர்னி டு தி வெஸ்ட் புத்தகமும் குரங்கு ராஜாவும் அவரின் எஜமானன் ‘த்ரிபீடக’ (त्रिपिटक) குறித்த பயணமும் பற்றிய கதை.

புத்த மதக் கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்தததைக் கண்டு, அதன் உண்மைகளைக் கண்டறிய இந்தியாவில் 17 வருடங்கள் பயணம் மேற்கொண்ட பின், தான் கற்றவற்றை, சீன மொழியில் பெயர்த்துக் கொடுத்தவரின் பெயர் த்ரிபீடகா. திரிபீடகா என்பது புத்த மதச் சூத்திரங்களைக் கொண்ட ஏடுகளைக் கொண்டு வருவது. த்ரிபீடகா என்றால்
1) சூத்திரங்கள் – மஹாயான சூத்திரங்கள்,
2) சுட்ட பீடிகா, அபிதர்மா – தத்துவ மனோதத்துவ விசாரங்கள்,
3) வினயா- புத்த துறவியருக்கான உடை உணவு உணர்வுக் கட்டுப்பாடு

1942ல் ஆர்தர் வாலி (Arthur Waley) என்பவர் ’குரங்கு’ என்னும் புத்தகத்தை வெளியிடுகிறார். இது இங்கிலாந்தில் அச்சிடப்படுகிறது. ஏற்கனவே நிறைய சீன மற்றும் ஜப்பானிய மொழி இலக்கியங்களை மொழிபெயர்த்தவர் ஆர்த்தர். சீன மொழியில் ’சூ ஜி’ (”Xiyou ji அல்லது Xi You Ji (அ) Hsi Yu Chi‘) என்றழைக்கப்பட்ட கதையை ஆர்த்தர் ஆங்கிலத்திற்கு கொணருகிறார். அந்தக் கதையை ஆயிரத்தியொன்று இரவுகள் போல் ரகசியமாய் சிறு வயதில் படித்திருக்கிறேன். அதனுடன் உறங்கியிருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் அழகிகள் மேல் அழுக்கான கனவுகள் கண்டிருக்கிறேன். அது சாகசங்களும் அறிவின் ரகசியங்களும் வாழ்க்கையின் விளங்கொண்ணா வினாக்களும் அடங்கிய புத்தகம். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் புரியிலி தத்துவம் கொஞ்சம் காமம் என எல்லாமும் கலந்து கட்டி ஊட்டும் புத்தகம். நூறு அத்தியாங்கள் கொண்டது.

இதன் முதல் பகுதி குரங்கு ராஜாவைக் குறித்தது. வாலியும் அனுமனும் கலந்தது போல் ஒரு குரங்கு – சன் வு காங் (Sun Wukong). அது அதிதீவிர காரியவாதி + புத்திசாலி. பிரம்மச்சாரி; மரணமற்ற சிரஞ்சீவி. எல்லாவற்றையும் அடக்கியாளும் தன்மை கொண்ட குரங்கு. ஆனால், செருக்கு தலையேறினால், தன்னால் ஆகக் கூடிய செயல்நுட்பம் மறந்துபோகக் கூடிய மந்தி. இராமரின் அத்தியந்தமான சீடன் ஆஞ்சனேயர். இங்கே புத்தரின் சர்வ ரகசியங்களும் அறிந்த புத்திசாலி சுன் வுகுங்.

சன் வுகாங் வசிக்கும் குகையின் வாயிலில் பிரும்மாண்டமான திரைச்சீலை போல் அருவியொன்று கவிந்திருக்கிறது. அந்தக் குரங்கிற்கு மாயாஜாலாங்களும் மந்திரங்களும் தெரியும். இந்தக் கால கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தக் குரங்கு, பல்வேறு இடங்களுக்குச் சென்று, பல நாட்டவரிடமிருந்து அரிதான பொருள்களை கவர்ந்தோ, அன்பாக மிரட்டியோ, நட்பின் அடையாளமாக தானமாகவோப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறது. இதில் தேவாமிர்தம் போல் இறவாவரம் தரும் அரிய காயகல்பங்களும் உண்டு. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது பழமொழி. டிராகன் தேசத்திற்கு சென்றபோது, அங்கே துரும்பைப் பெற்றுக் கொண்டு வந்தது. அந்தத் துரும்பை தன் காதில் சொருகிக் கொள்ளும் குரங்கு. பகைவருக்கு ஏற்ப, அந்தத் துரும்பு – ஆயுதமாக, கம்பாக மாறும்; அல்லது நீர் பீய்ச்சி அடிக்கும் ஊதுகுழலாகும். எதிராளிக்கு ஏற்றவாறு அவர்களைத் தாக்க அந்தத் துரும்பு வினோத ரூபங்கள் பெறும். இதுவே தான் எதிர்கொள்ளும் பகைவர் அனைவரையும் வீழ்த்த சுன் வுகாங் கைகொள்ளும் போர்க்கருவி.

இந்தக் குரங்கின் குரு – ‘த்ரிபீடக’. இவர் மெத்த படித்தவர். தூய பௌத்த துறவி. சன்சங் என்றழைக்கப்படுபவர். ஆனால், வம்பு தும்பிற்கு போகாமல் ஓரமாக ஒதுங்கிச் செல்பவர். இவருக்கு ஆயிரம் கடல், பல்லாயிரம் மலை தாண்டி மேற்கே இருக்கும் ராஜாளி சிகரத்தை அடைய வேண்டும் என்பது தீரா ஆசை. போகும் வழியில் புனித சூத்திரங்களையும் புத்த சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டு, அவற்றை பிரதியெடுத்து, திரும்ப சீனாவிற்குக் கொண்டெ சேர்க்க வேண்டும் என்பது அரச கட்டளை.

இவரின் பயணத்திற்கு

அ) குரங்கு – சுன் வுகாங்: தன்னுள் இருக்கும் உள்ளீடின்மையை எவ்வாறு போக்குவது என கற்றறிபவர்
ஆ) பன்றி முகம் கொண்ட சூரன்: 猪悟能 – ஜூ வு நங் (Zhu Wuneng): தன்னுள் இருக்கும் சக்தியின் பராக்கிரமத்தை உணர்கிறவர்
இ) காபாலிகன் போல் மண்டையோட்டுகளைத் தரித்த அகோரி சன்னியாசி: 沙悟净 ஷா வு சிங் (Sha Wuching): களிமண் போன்ற அழுக்கில் இருந்து தூய்மைக்கான புனிதப் பாதையைத் தெரிந்து கொள்பவர்

துணை நிற்கிறார்கள்.

அவர்களின் சாகசங்களும் இராட்சஸர்களை விதவிதமாக முடிவிற்கு கொணர்வதும் விசித்திரமான புதிர்களும் சுருக்கமாக முன்னூறு பக்கங்களில் சொல்லப்பட்டிருந்தது சிந்தையை இன்றளவும் ஆக்கிரமித்திருக்கிறது. சமீபத்தில் இந்த நூலின் முழு வடிவமும் நான்கு பாகங்களாக ஆண்டனி சி. யூ (Anthony C. Yu) என்பவரால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்களுக்கு முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 1983-ல் இந்த மொழியாக்கம் வெளியானது.

இந்தப் புத்தகம் விதவிதமாக தொலைக்காட்சிக்காவும் வெள்ளித்திரைக்காகவும் காட்சியாக்கம் பெற்றிருப்பது யூடியுப் மூலமாக தெரியவருகிறது. சீனாவில் நான்கு புதினங்களை அவர்களின் செவ்வியல் இலக்கியமாகக் கருதுகிறார்கள்:

அ) 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நீர்க்கரை (水浒传)
ஆ) 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மூன்று ராஜ்ஜியங்களின் வீரகாவியம் (三国演义)
இ) 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிவப்பு மண்டபத்தின் கனவுகள் (红楼梦)

16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த மேற்கை நோக்கிய பயணம் புத்தகமும் – 西游记 இந்த அரிதான பட்டியலில் மாபெரும் சீனக் காப்பியமாகக் கருதப்படுகிறது. ஏன் என்று அலசுவதற்கு முன் சுருக்கமாக அதன் கதையைப் பார்த்துவிடுவோம்.

journey-to-the-west

இந்த உலகின் துவக்கத்தில் ஒரு பாறாங்கல் இருந்தது. அந்தப் பாறை ஒரு கல்முட்டையை ஈன்றது. அந்த முட்டை, மெதுவாக குரங்கு போன்ற தோற்றமெடுத்தது. ஒரு நாள் அந்தக் கல் குரங்கு உயிர் பெற்றது. மற்ற குரங்குகளுடன் விளையாட ஆரம்பித்தது. கிட்கிந்தாபுரி போன்ற அந்தப் பிரதேசத்திற்கு அந்தக் குரங்கு, அரசராக ஆனது.

விளையாட்டாக பொழுதைக் கழித்த அந்தக் குரங்கிற்கு மரணத்தைக் குறித்த சிந்தனை எழுந்தது. அதனால், தன் சக கவி குழாமிடமிருந்து பிரியாவிடைப் பெற்றுக் கொண்டு, சாகாவரம் தேடிய பயணத்தைத் துவங்கியது. இறவாமை குறித்து முற்றும் அறிந்த குலபதி சுபோதி என்னும் மூதாளரின் குருகுலத்தில் மாணவராக சேர்கிறது. சீன ஞானி லா வோ த்ஸு சிந்தாந்தமான தா ஓ எனப்படும் டாவோயிஸத்தை உபதேசிப்பவர் குலபதி சுபோதி. அஷ்ட்மகா சித்திகள் எனப்படும்:

1. அணிமா – அணுவைப் போல் சிறிதாக தேகத்தை மாற்றிக் கொள்ளுதல்
2. மகிமா – மலையைப் போல் பெரிதாக்கிக் கொள்ளுதல்
3. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் ஆக்கிக் கொள்ளுதல்
4. கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாக்கிக் கொள்ளுதல்
5. பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
6. பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்
7. ஈசத்துவம் – தன்னை விட சக்தி வாய்ந்த தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்துதல்
8. வசித்துவம் – அனைத்தையும் ஆட்படுத்தி வசப்படுத்தல்.

உட்பட எழுபத்தி இரண்டு வித்தைகளைக் கற்றுக் கொள்கிறது.

இந்த நூலின் சிறப்பே இவ்வாறு சீனாவின் சித்தாந்தங்களை ஒன்றிணைப்பதுதான். பெளத்தம் உட்பட தாவோயிஸம், கான்பூசியஸம் ஆகிய மதக் கோட்பாடுகளை இந்த நூல் உள்ளடக்கமாக வைத்திருக்கிறது. இறந்தவர்களை நம் வழிகாட்டிகளாக, முன்னோர்களாக, தெய்வங்களாக நினைவில் என்றும் நிறுத்தி வழிபடுமாறு கன்ஃபூசியஸ் உபதேசிக்கிறார். ஆனால், இந்தியாவின் யோக வழிபாட்டையொத்த முறையை பின்பற்றும் தாவோயிசத்தில் கூடு விட்டு கூடு பாயலாம்.

எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய பண்டைய நாகரிகங்கள் நூலில் இருந்து:

கன்ஃப்யூஷியஸ் கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை, 72 ஆண்டுகள் வாழ்ந்தார். பிறரிடம் மரியாதை, பரந்த மனப்பான்மை, மன்னிக்கும் குணம், நன்றி காட்டுதல், விசுவாசம், தன்னம்பிக்கை, முன்னோரை வழிபடுதல் ஆகியவை இவருடைய முக்கிய கருத்துகள். கல்வியால் இந்தக் குணங்களை உருவாக்கலாம் என்று கன்ஃப்யூஷியஸ் நம்பினார். இதற்காக, ஒரு கல்விச் சாலையும் தொடங்கினார்.

லாவோஸி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவர் சித்தாந்தம் டவ் (Taoism) என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உயிர்களும், பொருள்களும் ஒரே இயற்கையின் பல வடிவங்கள். மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும் என்கிறது தாவோயிஸம்.

sun_wukong_patriarch_subodhi_taoism_china_buddha_mokey_king_lao_tse_szu

இந்த மாதிரி குரு சுபோதியிடம் தனிமையில் கற்றுக் கொண்ட வித்தைகளில் ஒன்றான தேவதாரு மரமாக மாறுவதை எல்லோர் முன்னிலையிலும் செய்து காட்டிய அதிகப்பிரசங்கித்தனத்தால், குரங்கை தன் குருகுலத்தில் இருந்து விரட்டி விடுகிறார். அது தன் சொந்த ராஜ்ஜியத்திற்கேத் திரும்புகிறது. ஆனால், வந்தது போல் வருடக்கணக்கில் பயணிப்பதில்லை. நினைத்த க்ஷணத்தில் நினைத்த இடத்திற்கு பறந்து தாவிச் சென்றடைகிறது. 108,000 காத தூரத்தை நொடிப் பொழுதில் கடக்கிறது.

இவ்வளவு கற்றிருந்தாலும் தன்னுடைய 342வது வயதில் அதன் அந்திமக் காலம் நெருங்குவதை குரங்கால் உணரமுடிகிறது.

அதன் கனவில் எமன் ஆளும் மரணவுலகிற்கு, குரங்கு சென்றடைகிறது. சித்ரகுப்தன் யமதர்மராஜன் முன்னிலையில், பூதவுடலைத் துறந்து வரும் உயிர்களின் பாவ புண்ணியங்களைத் தன்னுடைய ஏட்டிலிருந்து படிக்கிறார். அங்கே சித்ரகுப்தன் வைத்திருக்கும் தஸ்தாவேஜில் இருந்து தன்னுடைய விவரங்கள் அடங்கிய பக்கத்தைக் கிழித்துவிடுகிறது. அதனுடன் தன் சக குரங்குகளின் பெயர்களையும் கிழித்து சுக்கு நூறாக்கி விடுகிறது.

இந்த மாதிரி அராஜகங்களுக்கு குரங்கு பதிலளிக்குமாறு பச்சைக்கல் மஹாராஜாவிடமிருந்து சம்மன் அனுப்பப்படுகிறது. குரங்கும் சொர்க்கத்திற்குச் சென்று விசாரணையை எதிர்கொள்கிறது. அங்கே, குதிரை லாயத்தைப் பராமரிக்கும் மிகப்பெரிய பொறுப்பைத் தருவதாக தீர்ப்பளிக்கப்படுகிறது. நாளடைவில் இந்தப் பதவி வெறும் கண்துடைப்பு மட்டுமே என்றும் தன்னை அடக்கியொடுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும் குரங்கு புரிந்துகொள்கிறது.

அதன் எதிர்ப்பை நசுக்க தேவாதி தேவர்களும் அஷ்டலோக அரசர்களும் மும்மூர்த்திகளும் வருகிறார்கள். எவராலும் குரங்கு ராஜாவை தோற்கடிக்கமுடியவில்லை. இப்பொழுது கண், காது, மூக்கு, வாய், மெய் என ஐம்புலன்களை உணர்த்தும் குழிப்பேரி (peach) விருந்திற்குள் குரங்கு ராஜா அத்துமீறி நுழைகிறார். இது ஐந்து வகையான தியான புத்தர்களையும் குறிக்கிறது. பெளத்த தாந்திரீகமான வஜ்ராயனம் இந்த பஞ்ச புத்தர்களை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அவர்கள் வைரோச்சனர், அக்ஷேப்பியர், ரத்ன சம்பவர், அமிதபர், அமோக சித்தி.

வஜ்ர புத்தர் என்பது உருவம்; அடக்கம் சார்ந்த தெளிவு பெற்றால் இந்த நிலையை குரங்கு மனம் அடையும். ரத்தின புத்தர் என்பது உணர்ச்சி; ஆசையை விட்டொழித்தால், குரங்கு இந்த நிலையை அடையும். பத்ம புத்தர் என்பது அவதானித்து உள்ளுணர்தல்; தன்னலத்தை விட்டொழித்தால் இந்நிலையை அடைவோம். கர்ம புத்தர் என்பது நோக்கம்; பொறுமையாக அனுதினமும் எல்லா முந்தைய நிலைகளையும் கடைபிடித்தால் இந்த புத்தர் ஆகிறோம். கடைசியில் புத்தர் என்பது விழிப்புணர்வு (அ) சைதன்யம்.

sambhogakaya-buddhas_jina_ratna_vajra_bodi_sathva_amitabhdhyani_consorts_vairochana

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விரலினை குறிப்பவர்கள் என்றும், முறையே
1. பெருவிரல் வைரோச்சனர், வெண் எழுத்துக்களில் “ஓம்” என்பதையும்;
2. ஆள்காட்டி விரல் – அக்ஷேப்பியர், நீல நிற “ஹம்” என்பதையும்,
3. நடுவிரல் – ரத்ன சம்பவர், மஞ்சள் நிற “திராம்” என்பதையும்,
4. மோதிர விரல் – அமிதபர், சிவப்பு நிற “ஹ்ரீம்” என்பதையும்,
5. சுண்டு விரல் – அமோக சித்தி, பச்சை நிற “அ” என்பதையும் குறிக்கும்.

இந்த ஐந்து விரல்களைக் கொண்டு அந்தக் குரங்கு ராஜாவை புத்தர் அடக்குகிறார். அந்தக் குரங்கை ஐந்து சிகரங்கள் உள்ள மலையின் கீழே தள்ளி அடைக்கிறார். குரங்கு தன் தவத்தை அங்கே அனுஷ்டிக்கிறது.

புத்தருக்கு தன்னுடைய உபதேசங்களை மேற்கில் இருக்கும் இந்தியாவில் இருந்து கிழக்கில் இருக்கும் சீனாவிற்கு எடுத்துச் செல்ல நம்பகமான போதிசத்துவர் தேவைப்படுகிறார். இதற்குத் தகுதியுடைய நபரை கண்டுபிடிக்கும் பொறுப்பை குவான் யின் (Kuan-yin) ஏற்றுக் கொள்கிறார். அந்த குவான் யின் கண்டுபிடிப்பவர்தான் ஹுவான் சுவாங் (Hsüan Tsang). இவருடைய இடர்மிகுந்த பயணங்களில் துணையாக பாதுகாவலனாக இருக்க குரங்கு ராஜாவை மீட்பித்து ஆட்கொள்ளுமாறு, ஹுவான் சுவாங்கிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அவரும் குரங்கை பாதாள லோகத்தில் இருந்து எழுப்பி தன்னுடைய சேவகனாக்கிக் கொள்கிறார்.

இந்தக் கதை நூறு அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் ஏழு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:

1) சராசரி உலகம்: குரங்காக பிறப்பது, வளர்வது
2) எதிர்பாராத சாகசங்களுக்கான அழைப்பு: குரங்கு தன் குருவைத் தேடிச் செல்லுதல்; அங்கே பல சித்துகளைக் கற்றல்
3) சக்கரத்திற்குள் சிக்காமல் சகதிக்குள் உழலுதல்: நியமிக்கப்பட்ட உயர் பதவியை துச்சமென தூக்கி வீசிவிட்டு, தேவர்களுடனான நிரந்தர நல்வாழ்வை விட்டு விலகுதல்
4) உண்மையான புத்தரை கண்டுபிடிக்கும் பயணத்தைத் துவங்குதல்: திரிபீடகாவுடன் ஆன சந்திப்பு
5) புத்தருடன் சிரமம் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளல்: இது இடையூறுகள் நிறைந்த பாதை. சாகாவரம் பெற நினைத்த குரங்கு, இறப்பிற்கு துணிகிறது.
6) வாசற்படியைக் கடத்தல்: எப்போது மந்திரத்தால் மனதைக் கட்டுப்படுத்த முடியாது என்று உணர்கிறோமோ, அப்போது தன்னடக்கமும் செயல்வீரியமும் துவங்கும் என்று அறிதல்
7) மறுபடி இடம் திரும்புதல்: புத்தரை சந்தித்தல், மரணத்தை எதிர்கொள்ளுதல், மீட்சி அடைதல், மீண்டும் சொந்த வீட்டிற்கே சென்று தன் பரிவாரங்களுக்குக் கற்றதை பரப்புதல்

key_characters_monkey_king_buddha_pig_faces_monks_bodisathva_journey-to-the-west

நம்முடைய இராமாயணமும் மஹாபாரதமும் சொல்லும் பல கதைகள் ”மேற்கே பயணம்” (Journey to the West)ல் சொருகப்பட்டிருக்கின்றன:

1. யக்‌ஷ பிரக்ஞம் – விவாதம்: கேள்வியும் பதிலும் – மேற்கே அனுப்பப்பட வேண்டியவரை குவான் யின் சாதாரணமாகத் தேர்ந்தெடுக்கவில்லை. எது சந்தோஷம்? எப்படி வருத்தத்தைப் போக்குவது போன்ற எளிய கேள்விகளுக்கு விடை கோருகிறார்.

2. லக்‌ஷ்மணர் கோடு வரைந்ததும் சீதை கோட்டைத் தாண்டியதும்: இந்த வட்டத்தைத் தாண்டி வெளியே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். தண்ணீர் தளும்பாது; தளும்பினால்?

3. இராமரும் வானர சேனையும்: இங்கே புத்த பிக்குவும் அவருக்கு உறுதுணையாக குரங்கு ராஜவும்

4. பீஷ்மர் என்னும் அரசரின் பெரியப்பா – வஞ்சகத்திற்கும் ஆட்சிக்கும் துணைபோகும் பெரியவர் கதை நூறு அத்தியாயங்களில் ஒன்றாக வருகிறது. அரசின் தன்னலத்திற்காக எதையும் செய்யத் துணியும் மாமாவும் வருகிறார்.

5. மாய மான்: எல்லாமே மாயை என்றால் எது அசல் என்பது போன்ற கேள்விகளை எழுப்பும் சம்பவம் ஒரு அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இந்தக் கதையின் நீட்சியாக புத்தரிடமிருந்து புத்தர் தோன்றுகிறார் என்பதும் சொல்லப்படுகிறது. அதாவது ஆதி கௌதம் புத்தர் – தான் புத்தத்தன்மையை அடைந்து விட்டோம் என்பதை எப்படி உணர்ந்து தெளிந்திருப்பார்?

6. பதினான்கு வருட வனவாசம் அனுபவித்தாலும் நொடி நேரத்தில் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள்

7. எல்லோரும் சகோதரர்கள்: பிறப்பால் குரங்காக, பன்றியாக இருந்தாலும் செய்கையால் உயர்பவர்கள்: கதையின் கடைசியில் குரங்கு ராஜா பிறப்பால் மந்தியாக இருந்தாலும் தன் செய்து முடிக்கும் ஆற்றலாலும் ஏன் செய்கிறோம் என்பதை உணர்ந்ததாலும் புத்தராக உயர்நிலையை அடைகிறார்.

8. கூடு விட்டு கூடு பாய்வது – அஞ்ஞாதவாசம்: பன்றி முகம் கொண்ட ஜூ பைஜே (Zhu Bajie) என்பவரைத் தொண்டராக்க வேண்டும். அதற்கு அந்தப் பன்றியின் மனைவி போன்ற தோற்றத்தை குரங்கு ராஜா எடுக்கிறார்.

9. ஒவ்வொரு நற்செய்கை புரிபவரையும் தன்னுடைய சகோதரராக ராமர் வரிப்பார்; இங்கே அவ்வாறே புத்தநிலையை தங்களின் நற்காரியங்களால் எய்துகின்றனர்

10. ஆற்றில் விடப்பட்ட குழந்தை கர்ணன் போல் புத்தபிக்குவும் அனாதையாக அனுப்பப்படுகிறார்.

11. தன் உடலின் ஒவ்வொரு ரோமத்தையும் ஒரு உயிராகப் படைக்கும் வித்தையையும் சன் வு குங் கற்றிருக்கிறான்: லங்கா தகனத்திற்குப் பிறகு அனுமன் தன் வாலை கடலில் முழ்க வைத்து அணைக்கும் போது சிந்திய வேர்வைத் துளியிலிருந்து பாதாள லோக காப்பாளன் மகர-த்வஜன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது

12. ஒரே ஒரு முறை மட்டும் ஒரு அரசனின் உயிர் காக்க பச்சிலை வைத்திய ஆற்றலைப் சன் வு குங் பயன் படுத்துகிறான்: துரோணகிரியில் இருந்த, லக்ஷ்மணனைக் காத்த பச்சிலை மருத்துவ ஆற்றல்

om-mani-padme-hum

கட்டுரையின் தலைப்பிற்கு வந்துவிடலாம். அந்த மந்திரம் எப்போது, எதற்காக உபதேசிக்கப் படுகிறது?

ஹுவான் சுவாங் என்பவரால் தன் குரங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செல்லும் பாதையோ கொடிய வழிப்பறிக் கொள்ளையர்களும் அரக்கர்களும் நிறைந்த பாதை. அதில் பலசாலியான திடகாத்திரமான துணை நிச்சயம் தேவை. ஆனால், குரங்கோ தேவையின்றி வன்முறையில் இறங்குகிறது. எதற்கெடுத்தாலும் அடி, யாரைப் பார்த்தாலும் கொலை என்று சகலரையும் வெட்டிச் சாய்க்கிறது. இதே போல் தொடர்ந்தால், தொண்டர்களும் சீடர்களும் கூட வில்லன்களாக எதிரிகளாகி விடுவார்கள். அப்போது குவான் யின் – ”ஓம் மணி பத்மே ஹூம்” மந்திரத்தை உச்சாடனம் செய்யச் சொல்கிறார். குரங்கு மனம் புத்தர் வழி செல்கிறது.

குவான் யின் என்பவர் யார்? அவர்தான் அவலோகிதர். புத்தர்களின் கருணையின் வடிவாக கருதப்படுகிறார். மணிபத்ம என்பது இங்கு அனைத்தும் புத்தர்களின் கருணையின் ஒட்டுமொத்த வடிவமாக வணங்கப்படும் போதிசத்துவ அவலோகிதேசுவரரை குறிக்கிறது.அவலோகிதேசுவரர் கையில் தாமரையையும் சிந்தாமணி இரத்தினத்தையும் ஏந்தியவர்.

இது பௌத்தர்களின் தலையாய மிக முக்கியமான மந்திரங்களுள் ஒன்று. இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து மந்திரம் (ஷடாக்ஷர மந்திரம்) அவலோகிதேஷ்வரருடன் தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள் (சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி (ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.

இந்த அவலோகிதேசுவரர் பொதிகை மலையில் வசித்தார் எனவும் தமிழ் போதித்தார் எனவும் தமிழ்ப்பௌத்தர்கள் நம்புகின்றனர். இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக்கரத்தை நாம் சுழற்றும் போது, அது மந்திரத்தை உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.

மணிபத்மே என்றால் “தாமரையில் இருக்கும் சிந்தாமணியே” அல்லது “தாமரையையும் சிந்தாமணி ரத்தினத்தையும் கையில் ஏந்தியவனே” என்று பொருள். இங்கு மணி என குறிப்பிடப்படுவது அனைத்தையும் தர வல்ல சிந்தாமணி ரத்தினம் ஆகும்.

இந்த மந்திரம் முதன் முதலின் நான்காம் நூற்றாண்டு இறுதியில் இயற்றப்பட்ட காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. காரண்டவியூக சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், “இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன்”

எனினும் பௌத்தத்தில் மந்திரங்களின் பொருள் இரண்டாம் பட்சம் தான். மந்திரத்தின் மேலும் மந்திரத்தின் அதிபதியாக உள்ள புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள நம்பிக்கையே முதண்மையானது. குரங்கு மனம் மாறி திருந்தும் என்று திக்கு தெரியாமல் புத்தத் தத்துவங்களை நோக்கி பயணிப்பவர் நம்புகிறார். எவ்வளவு பெரிய அசுரனாக இருந்தாலும் அவரை தன்வழி கொண்டு வரமுடியும் என நம்புபவர் வெற்றியடைகிறார். அப்படி நீங்களும் குரங்கு போன்ற சக்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள: ”ஓம் மணி பத்மே ஹூம்”.

மந்திரம் புரிந்தால் உங்கள் பயணம் துவங்கிவிட்டது என்றே அர்த்தம் என்பார் புத்தர்.

journey_to_the_west_anthony_c_yu
The Journey to the West Translated and Edited by Anthony C. Yu.
Volume One. 530 pp. Cloth, $35. Paper, $8.95.
Volume Two. 438 pp. Cloth, $35. Paper, $12.50.
Volume Three. 454 pp. Cloth, $35.
Volume Four. 45l pp. Cloth, $35.
Chicago: The University of Chicago Press.

The Arrival – Movie Review

உங்கள் வாழ்க்கையின் கதை – வருகை

மக்ஆர்தர் ஜீனியஸ் கிராண்ட்டின் மதிப்பு 6,25,000 டாலர்கள் (இன்றைய நிலவரப்படி ரூ.4,17,28,125.00. காலாண்டுக்கு ஒரு தொகை என்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகள், இருபது தவணைகளில் இந்தக் காசைப் பிய்த்துப் பிய்த்துக் கொடுக்கிறார்கள்- அப்படி பார்த்தால்கூட மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரூ.20,86,406.25 கிடைக்கிறது. இந்த ஐந்து ஆண்டுகளில் இன்னது செய்ய வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் கிடையாது. இந்த ஆண்டு 23 பேருக்கு இப்பெரும் தொகையை நிதியுதவியாக அளித்திருக்கிறார்கள். இவர்களில் டாரில் பால்ட்வின் (Daryl Baldwin) ஒருவர்:

இவர் மயாமி (மியாமியா) இன மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அறிவாற்றலையும் மீண்டும் கண்டுபிடிக்கவும் ஆவணப்படுத்தவும் சொல்லிக் கொடுக்கவும் செய்கிறார். இவரை போன்ற கலாச்சார பாதுகாவலர் ஒருவரைத்தான் தன் கதாநாயகியாக டெட் சியாங் (Ted Chiang) வைத்துக் கொள்கிறார். பேச்சாளரே இல்லாத மொழியை எவ்வாறு அணுகுவது? அதற்கு நிறைய உந்துதலும் ஊக்கசக்தியும் முனைப்பும் எதையும் முயற்சி செய்து பார்க்கும் மனவுறுதியும் வேண்டும்.

முன்னவர் நிஜம். அவரின் ஆராய்ச்சி ஏன் முக்கியம் என்பதை எளிமையாக அறிந்துகொள்ள ’Story of Your Life’ கதையும் அந்தக் கதையை திரைப்படமாக்கிய ‘அரைவல்’ (Arrival) சினிமாவும் முக்கியம்.

hello_hey_black_white_linguistics_language

திரைப்படத்தை எவ்வித கெடுப்பான்களும் இன்றி, அதன் அதிர்ச்சி கலந்த சுவாரசியங்களுடன் பார்க்க நீங்கள் நினைத்தால், இப்போதே இந்த விமர்சனத்தை வாசிப்பதை நிறுத்தவும்.

படம் பார்த்தபிறகே ‘உன் வாழ்க்கையின் கதை’யை வாசித்தேன். முதல் பக்கத்தில் முழுக்கதையும் கடகடவென பெரிய நாவலின் கதைச்ச்ருக்கத்தை விமர்சகர் சொல்வது போல் சொல்லிவிடுகிறார். அதன் பிறகு கதையைத் துவக்குகிறார். திரைப்படமும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு அணுகுமுறையைக் கையாள்கிறது. எடுத்த எடுப்பில் குழந்தைப் பிறப்பில் ஆரம்பித்து அந்தக் குழந்தை வளர்வது, பதின்ம வயதில் சண்டை போடுவது, புற்றுநோய்க்கு உள்ளாவது – என எல்லாமும் நடந்து முடிந்து விடுகிறது.

”தன்னுடைய மயிர்க்கால்களில் ஒட்டியிருக்கும் ஈரத்தை உதறும் நனைந்த நாயின் ஓசை போல் அந்த ஒலிப்பதிவு இருந்தது” என்பார் டெட் சியாங்.

அது என்ன ஒலிப்பதிவு? அதுதான் வேற்றுகிரகவாசிகளின் ஒலிப்பரிமாற்றம். அதைப் பற்றி அவ்வாறு நினைக்கும் நாயகி, அதை எப்படி அரசியலதிகரிக்கு அறிவியல்பூர்வமாக விளக்குகிறார்?

“மனிதனின் செவிப்புலன் கொண்டு ஒலிக்கருவிகளின் எல்லா சாத்தியங்களையும் உள்வாங்க இயலாது. மனிதக்குரலில் பேசுவதைக் கேட்க மட்டுமே நம் காதுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாளடைவில் வேண்டுமானால் அந்நிய ஜந்துக்களின் முதலொலிகளைக் கேட்கப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். நமக்கு நிறமாலைப்பதிகருவி ஒன்று தேவைப்படும்.”

இப்படியெல்லாம் மிரட்டினால் அசரக்கூடிய ஆபீசரா அவர்? வளைந்து கொடுக்க மாட்டேன் என்கிறார். அடுத்த அஸ்திரம் பிரயோகம் ஆகிறது:

“தெரியாத பாஷையைக் கற்றுக் கொள்வதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. அதைத் தாய் மொழியாகக் கொண்டவருடன் பழக வேண்டும். கேள்விகள் கேட்கவேண்டும். உரையாடலைத் துவங்க வேண்டும். அது நானாக இருக்கட்டும்; அல்லது எந்தவொரு மொழியியல் வல்லுநராக இருக்கட்டும். வெறும் ஒலிப்பதிவை வைத்துக் கொண்டு அவர்கள் சொல்ல வருவதை உள்வாங்க முடியாது.”

”அப்படியென்றால் நம் ஒலிபரப்பைக் கேட்டு மட்டும் நம் மனித மொழிகளை வேற்றுகிரகவாசிகள் கற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள் என நினைக்கிறீர்களா?”

“மனித மொழியை மனிதரல்லாதோருக்கு சொல்லித் தருவதற்கு அவர்களுக்கு ஒரு ஆளாவது தேவை. அல்லது எப்படி மனிதனின் பேச்சை அணுகுவது என்று கற்றுத்தரும் சாதனங்களாவது அவர்களிடம் இருக்க வேண்டும். அப்படி ஏதாவதொன்று இருந்தால் டிவியில் இருந்து நிறையப் புரிந்து கொண்டிருப்பார்கள். அப்படி எதுவும் கிடைக்காவிட்டால், எங்கே ஆரம்பிப்பது என்று தெரியாது.”

இது அந்த இராணுவ அதிகாரிக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் சொல்லித்தர எத்தனிக்காவிட்டால், நம் மொழி, அன்னியருக்கு புரியப் போவதில்லை. இதனால் வேற்றுலகவாசிகள் முன் நாம் பேசிக் கொண்டாலும், அவர்களுக்கு தலையும் புரியாது; காலும் விளங்காது.

அச்சிடுவதற்குப் பயன்படும் வகையில் ஒரே பகுதியாக வார்க்கப்பட்ட சொல் (logograph), பட எழுத்து (logogram), சிந்தனை எழுத்து (ideogram), குறியெழுத்து (semagram), கீற்றம் (grapheme), ஒலியன் (phoneme), நிறமாலை வரைவி (spectrograph), கட்டுப் பொருள் (ligature), குரல் ஏற்ற இறக்கம், என மொழியியல் துறையின் அருஞ்சொற்பொருள்களும்; பெயர்ச்சொல், வினைச்சொல், செயப்படுபொருள் குன்றா வினை, என கதை நெடுக இலக்கணமும் கோலோச்சுகிறது. ஆங்கிலம், ஸ்பானிஷ் போன்ற சில மொழிகளில் இடமிருந்து வலம் எழுதுகிறோம். அதுவே அராபிக், யூதர்களின் எபிரேயம் போன்ற மத்திய கிழக்கு வளைகுடாப் பகுதி மொழிகளில் வலமிருந்து இடம் வாசிக்கிறோம். சீனர்களும், கொரியர்களும், ஜப்பானியர்களும் மேலிருந்து கீழ் வாசிக்கக் கூடியவர்கள். இந்தக் கதையில் வரும் பிராணிகளோ, எப்படி புரட்டிப் போட்டாலும் கண்ணாடியில் காண்பித்தால் கூட புரிந்து கொள்ளும் வரிவடிவக்காரர்கள்.

language_heptapods_alien_speak_amy-adams-arrival

எனினும், சந்தேகமே வேண்டாம். இது அறிபுனை. இது பிற கிரகத்தில் இருந்து வருபவர்கள் பற்றிய புனைவு. ஆனால், அதோடு நிற்கவில்லை. அதை பின்னணி இசையாக வைத்துக் கொண்டு ஜுகல்பந்தி செய்கிறது. இது வெறுமனே மொழியும் ஒலியும் சார்ந்த கதை அல்ல; கற்பனை பிராணிகளை வேற்றுக்கிரக வாசிகளை மட்டும் விவரிக்கும் கதை அல்ல; தனியாகக் குழந்தையை வளர்க்கும் தாயின் பரிதவிப்பான முடிவெடுக்கும் தருணங்களைச் சொல்லும் சமூகக் கதையும் கூட; தத்துவார்த்தமாக மனதில் தங்கி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் எப்படி செலுத்தப்படுகிறோம் என்று நிரந்தரமாக நினைவில் நின்று நம்பிக்கைகளை உரசிப்பார்க்கும் கதை.

வேற்றுகிரகவாசிகளின் கருவிகளை ‘பார்க்கும் கண்ணாடிகள்’ என அழைக்கிறார்கள். நம்மை முகம் பார்க்கும் கண்ணாடி, நம்மை பிரதிபலிக்கும். முகத்திற்கு ஒப்பனை இட்டால் அதுவும் முகப்பூச்சு போட்டுக் கொள்ளும். நம் அகத்தை அது காண்பிக்கப் போவதில்லை. வாயில் போலி சிரிப்பு உதிர்ந்தால், ’பார்க்கும் கண்ணாடி’யும் போலியாக நம்மைப் பார்த்து சிரிக்கும்.

ஒவ்வொரு கலாச்சாரமும் வித்தியாசப்படும். அமெரிக்கர்கள் இன்றும் இந்தியர்களை இல்லை என்று சொல்வதற்கு ஆமாம் என்பதற்குத் தலையாட்டுபவர்கள் என கிண்டலடிப்பார்கள். அதை கவனமாக மாற்றிக் கொள்ள முயற்சித்தாலும், இப்பொழுதெல்லாம், அமெரிக்கர்களுக்கு நான் தலையை மட்டும் மையமாக ஆட்டிவைத்தால், ‘ஆமாவா? இல்லையா??’ என மொழிவழியாக வினாக் கேட்பார்கள். ஆனால், உடல்பாஷையில் அந்நியர்களுடன் எப்படி உரையாடுவது? அந்த சிக்கலை பொறுமையாக படமும் கதையும் விளக்குகிறது.

இந்த மாதிரி முக்கியமான விஷயங்களை அறிவியல்பூர்வமாகவும் தகவல்பூர்வமாகவும் விளக்கமாக கணினிமொழி போல் சொல்லும்போது சிலபல சிக்கல்கள் உருவாகும். கதை படிக்கும் வாசகருக்கு அலுத்துவிடும். அதை ஆங்காங்கே காதல், நகைச்சுவை என்று தூவி சுவாரசியமாக்குகிறார் டெட் சியாங். திரையில் பார்த்தால் ஏதோ அடர்த்தியான ஆவணப்படம் போல் அலுத்துவிடும். அதை முழுக்க முழுக்க காட்சிபூர்வமாக்கி, அடுத்து என்ன நடக்கும் என்னும் படபடப்போடு திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குனர் டென்னிஸ் (Dennis Villeneuve).

பூனை மாதிரி ‘மியாவ்’ என்று கத்தியிருப்பீர்கள். நாயிடம் ‘வள்.. வள்’ என்று குரைத்துப் பார்த்திருப்பீர்கள். அதை விட ‘ஏய்!’ என்பதற்கும், ‘ஸ்டே’ என்பதற்கும் அந்தப் பிராணிகள் நன்றாகவேக் கட்டுப்படும். அதற்கு ஓரளவு ஆங்கிலம் புரிகிறது. நமக்கு மிருகபாஷை புரிய மாட்டேன் என்கிறது (தொடர்பான உரையாடல்: குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – சொல்வனம்). அதே போல், வேற்றுலகவாசிகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தருகிறார் நாயகி.

படத்தில் நிறைய குட்டிக் கதைகள் உண்டு.

1770ல் கேப்டம் குக் ஆஸ்திரேலியாவில் வந்து இறங்குகிறார். குவீன்ஸ்லாந்து உள்ளே சென்று என்ன இருக்கிறது எனத் தேடும்போது, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அங்கே இருக்கும் பழங்குடியினர் தென்படுகிறார்கள். அவர்களிடம் அங்கு ஓடியாடிக் கொண்டிருக்கும் விலங்கை சுட்டிக் காண்பித்து, ”அந்தப் பிராணியின் பெயர் என்ன?” என்று கேட்கிறார். அவர்கள் “கங்காரு” என்கிறார்கள். அவர்களின் மொழியில் கங்காரு என்றால் “என்ன சொன்னீங்க?” என்பது அர்த்தம்.

இந்தக் கதை நிஜமா, பொய்யா எனத் தெரியாது. ஆனால், நம்பக்கூடிய நினைவில் வைத்திருக்க வேண்டிய கதை. சினிமாவிலும் நறுக்கென்று சரியான தருணத்தில் உணர்த்தப்படும் கதை.

அமெரிக்காவில் உள்ள உள்ளூர் பள்ளியில் தமிழ் கற்றுத் தரும்போது, இந்த மாதிரி சில விபரீதமான அர்த்தங்கள் வந்து சேரும். உச்சரிக்கும்போது சரியாகத்தான் சொல்வார்கள். கொசு என்று தெளிவாகப் பேசுவார்கள். எழுதும்போது குசு என்று ஆகிவிடும். எனினும், நாளைய தேதியில் கூகுள் போன்ற நிரலியின் துணைகொண்டு, பேச்சினை சரியாக மொழியாக்கும் கருவியில், சமய/சந்தர்ப்பத்திற்கு தக்க வார்த்தையை இட்டு நிரப்பும் கணினி மென்பொருள் கொண்டு, இந்த சிக்கல் சரியாகிவிடும். ஆனால், ஏரி என்றால் தண்ணிர் நிறைந்த தடாகம்; அதுவே ஏறி என்றால், மரத்தின் மேலே செல்வது என்று சின்ன ர, பெரிய ற குழப்பங்களில் அவர்கள் தவிக்கும்போது, தொல்காப்பியர் தமிழுக்குக் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் என்றே தோன்றும்.

டெட் சியாங் கதையில் எழுதாத ஒரு கேள்வியை நாயகி எழுப்புவார்:

“சம்ஸ்கிருதத்தில் போர் என்பதற்கு என்ன வார்த்தை என்று என்னை விட நல்ல மொழியியல் வித்தகர் என்று சொல்கிறீர்களே… அவரிடம் கேட்டுப் பாருங்கள்.”

இந்தத் தூண்டிலைக் கொண்டு நானும் தேடிப் பார்த்தேன். சமஸ்கிருதத்தில் இரு வார்த்தைகள் சொல்கிறார்கள்.

1. समर – சமர் – என்றால் ஒன்றுகூடல்; அது பேச்சுவார்த்தைக்காக இருக்கலாம்; சமாதானத்துக்காக இருக்கலாம்; சிக்கல்களை தீர்த்துக் கொள்வதற்காக எல்லோரும் ஓரிடத்தில் கூடுவது; ஒன்று சேர்வது

2. गविष्टि – கவிஸ்தி – மேலும் மேலும் மாடுகளை விரும்புபவர். பசுக்களுக்காக களத்தில் குதித்து போராடுபவர்.

krishna_cows2

பகவத் கீதையில் கிருஷ்ணர்:

सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || 13||

இந்திரியங்களை வசப்படுத்திய புருஷன் மனத்தால் எல்லாக் கருமங்களையும் துறந்து, சுகமாக — ஒன்பது வாயிலுடைய நகரில் (நவத்வரே புரி) – ஒன்றும் செய்யாமலும், செய்விக்காமலும் இருக்கின்றான். (பகவத் கீதை – 5-13)

துவாரம் என்றால் வழி. இரண்டு காதுகள், இரண்டு கண்கள், மூக்கின் இரண்டு துளைகள், வாய், மல ஜலம் கழிக்கும் இரு உறுப்புகள் ஆக ஒன்பது துளைகள். வேற்றுகிரகவாசிகளுக்கும் பல துவாரங்கள் இருக்கின்றன. அவர்கள் வாய்வழியேதான் கழிவுகளும் வெளியேறுகின்றனவோ என அவள் நினைக்கிறாள். நம் வாய் வழியாக நம்முள்ளே இருக்கும் அசுத்தங்கள் வெளிப்படுகின்றனவே! அதனால் அப்படி யோசித்திருப்பாளோ?

அவர்களின் எழுத்துமுறையைப் பார்த்தால் முற்காலத்திய சைகை முறை போல் இருந்தது. அதாவது எந்த இடத்தில் சொல்கிறோம் என்பதைப் பொருத்து, பொருள் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒரு வாக்கியம் என்றால் எழுவாய் வேண்டும்; பயனிலை வேண்டும்; செயப்படுபொருள் இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாமல் ’ஏறு’ என்று எழுதிவிட்டு அதன் அருகேயும் மேலேயும் கீழேயும் ஆங்காங்கே சில நிறுத்தற்குறிகளைப் போட்டால் ‘மரம் மேல் அவன் ஏறினான்’ என்றோ ‘என் மேலே என் மகள் ஏறி முதுகை மெதுவாக மிதித்தாள்’ என்றோ அர்த்தமாகும் என்றால் எப்படி? அதுதான் அவர்களின் லிபி. Semasiographic முறை. கொஞ்சம் படம்; கொஞ்சம் சைகை; கொஞ்சம் குறிச் சின்னங்கள். அதாவது வாட்ஸாப்பில் ஆப்பிள் என்று சொல்லாமல் ஆப்பிளுக்கான சின்னம் இட்டு செய்தி அனுப்புவோமே… அந்த மாதிரி. பின்னம் என்றும் வர்க்கமூலம் என்றும் கணிதத்தில் குறிகள் இடுவோமே… அந்த மாதிரி. மொத்த மொழியுமே, ஒலிகளுமே இப்படி சின்னங்கள் கொண்டு புரிய வைத்தால் எப்படி இருக்கும்? அதை எழுத்தில் கொணர்ந்தால் இதை நாம் எழுதுமாறு, அச்சடிக்கும் நொடியில், தட்டச்சும் புயல் வேகத்தில் கொணர்வதற்கு பெயர் Glottography.

language_whisper_music

எழுத்தாளர் தாமஸ் வொல்ஃப் பற்றிய ‘ஜீனியஸ்’ படத்தில் ஒரு வசனம் வரும்.

“எப்பா… எவ்வளவு பெரிய பத்தி… இல்லியா அப்பா?” என்பார் மகள்.
அப்பா அதை வெட்டிக் கத்திரி போடும் பதிப்பாளர் + ஆசிரியர். அவரின் பதில், “இந்தப் பத்தி நாலு பக்கம் முன்னமே தொடங்கிருச்சுமா!” என்பதாக இருக்கும்.

அது போல் ஏழுகால் பிராணிகள் எல்லாவற்றிற்கும் வளையம் வளையமாகச் சுற்றுகிறார்கள். ஒரு வார்த்தையா… அதற்கும் ஒரு வளையம். ஒரு வரியா… அதற்கும் ஒரு வளையம். ஒரு பத்தியா… அதற்கும் ஒரு வளையம். வளையத்தில் ஆங்காங்கே வளைசல்கள், நெடிசல்கள் – அவை கொண்டு மொத்த சிந்தனையும் அடுத்தவருக்குக் கடத்துகிறார்கள்.

இசைக்கலைஞர்களுக்கு அவர்களின் மொழி புரியும். வரிவடிவத்திற்கும் அவர்கள் வாத்தியத்தில் எழுப்பும் ஓசைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆனால், இசை வடிவம் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு எது நிறுத்தற்குறி, எது எந்த வாத்தியத்திற்கான குறி என்பது புரியாது. அதே போல், ஏதோவொரு வினோதமொழி இந்த ஏழுகால் (அல்லது ஏழு கை) பிராணிகளுக்குத் தெரிந்திருக்கிறது. அதில் செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

semasiographic_logograms_logography_ideogram_grapheme_linguistics

குழந்தைகளைப் பார்ப்பதில்தான் எத்தனை சந்தோஷம்? அவை சின்னஞ்சிறிய குட்டிப் பாப்பாக்களாக நம்முடன் தத்தித் தவழ்ந்து நடை போடும் பருவம் எத்துணை பாக்கியம் நிறைந்தது! முட்டி மோதி உட்காரும்; பொத்தென்று சரியும்; அதன் பின் நிற்கப் பார்க்கும்; கூடவே வளர்ப்புப் பிராணியைப் பிராண்டும்; மிரண்டு போன நாயை சோகமாக கவனிக்கும். இந்த பச்சிளம் பருவத்தை, மொழி புரியாத, சூட்சுமம் தெரியாத, நம்முடைய சைகைகளை முழுமையாக உணராத பால்யகாலக் குழந்தைகள் போல் அந்த வேற்று கிரக வாசிகளோடு அந்தத் தாய் உறவாடுகிறாள்.

நம்முடைய குழந்தைகளை நாம் எப்போதும் சிறுமிகளாகவே பார்க்கிறோம். நம் அம்மாவிற்கு நாம் எப்போதும் குழந்தைதான். எவ்வளவு வளர்ந்தாலும், முடி கொட்டினாலும், மீசை நரைத்தாலும், இன்னும் சிறுவர்கள்தான். அதே சமயம், நம் குழந்தைகள் நம்மைப் போல் இருப்பதில்லை. நமக்கு பணத்தை விட படிப்பு முக்கியமாகப் படலாம். மகவுகளுக்கோ பணம் அதிக நாட்டத்தைத் தரலாம். நாம் புத்தகத்தைத் தேடித் தேடி வாசிப்பவர்களாக இருக்கலாம். அவர்களுக்கோ செல்பேசி விளையாட்டே பொழுதுபோக்காக இருக்கலாம். நம்மிடம் இருந்துதானே வந்தார்கள்? நம் அணுக்களின் உருவாக்கம்தானே? நம் வளர்ப்புதானே? நம் மொழியில்தானே பேசுகிறார்கள்… பின் எப்படி வித்தியாசப்படுகிறார்கள். விடைகளைத் தேடுகிறார் ஆசிரியர்.

கதை என்பதும் படம் என்பதும் இந்த முரணில்தான் உயிர் கொடுக்கிறது. பிராணவாயு என்றோ அறிவியல் என்றோ தத்துவம் என்றோ உலக ஒற்றுமை என்றோ ஜல்லியடித்திருந்தால் இன்னொரு இண்டெர்ஸ்டெல்லார் ஆக மசாலா ஆகி ஊசிப் போயிருக்கும். இது உயிருள்ள கதை. ஜீவனுள்ள படம். எப்படி? நம் வாழ்வோடு அறிவியலை ஒன்றிணைக்கிறது. நம்முடைய குழந்தைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கிட்டத்தட்ட கட்டளையிடுகிறோம். கோட்பாட்டு இயற்பியல் போல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வளர்க்கப் பார்க்கிறோம். ஆனால், அதற்கு உட்பட்டு வளரும் அவர்களே, சில இடங்களில் காட்டுச்செடியாக விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு செயலூக்கம் கொண்டு பறக்கிறார்கள். தண்ணிரில் பட்ட ஒளி போல் சாய்வுறுகிறார்கள். ஒரே இடத்தில் புறப்படும் ஒளியும் ஒலியும் நம்மை வெவ்வேறு தருணங்களில் மின்னல் ஒளியாகவும் இடி ஒலியாகவும் சென்று தாக்கம் தருவது போல் பல்வேறு பரிமாணங்களில் பரிமளிக்கிறார்கள்.

frederick-carl-frieseke_woman_with_mirror

நீங்கள் ஃபெர்மாட் கொள்கை குறித்து தெரிந்து வைத்திருப்பது நலம்; அப்படியே நுண்கணிதவியலின் அம்ச வேறுபாடுகளைக் குறித்து புலமை பெற்றிருக்க வேண்டும்; கூடவே கொஞ்சம் வடிவவியல், அப்படியே கொஞ்சம் போல் அட்சரக்கணிதம் எல்லாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளுங்கள். தொகையீட்டுக் கணிப்பியல் (இண்டெகிரல் கால்குலஸ்) என்பதை பன்னிரெண்டாம் வகுப்பில் உருப்போட்டிருப்பீர்கள். அதை மீண்டும் மூளைக்குள் கொண்டு வாருங்கள், நீங்கள் நல்ல மொழியியல் வல்லுநராக இருந்தால் இந்தக் கதையை முழுமையாக அனுபவிக்க முடியும் என்றெல்லாம் பயமுறுத்த ஆசைதான். ஆனால், பன்மொழி வித்தகராக இல்லாவிட்டாலும் நம் சொற்களின், மொழிகளின் போதாமைகளை உணர்பவராக இருந்தால் போதுமானது.

கையெழுத்தை வைத்து நம் குணநலன்களையும் மாண்புகளையும் ஜோசியம் போல் தெரிந்து கொள்ள முயன்றோம். இங்கே வட்டத்தின் பருமையைப் பொருத்தும், அந்த வட்டங்களின் வார்த்தை விழுந்த இடங்களின் பகுவல் (fractal) குறித்தும் அறிந்தால் மொழிப்புலமை கிட்டும். அதை வெறும் ஓவியமாகப் பார்த்துக் கொண்டிருந்தால் கலைப்பொருளாக மட்டுமே அர்த்தப்படும். அவர்களின் வரிவடிவங்களைப் பார்த்தால் நம் வாக்கியங்களை எடுத்து சுத்தியலால் உடைத்து, மின்விசிறியால் பறக்கவிட்டு அதன்பின் அவசரகதியில் எதையெதையோ ஒட்டிக் கொடுத்தது போல் இருந்தது என்கிறார் கதையில். படத்தில் இது ஓவியங்களாக, தீற்றல்களாக, கறுப்பு வெள்ளை வளையங்களாக மின்னுகிறது.

இந்தப் படத்தின் முக்கியமான விஷயம் என்னவென்றால் அசல் கதையின் அடிநாதத்தை எவ்வாறு உணர்ச்சியளவில் பிசகாமல் திரைக்கதையாக காட்சிபூர்வமாக உருவாகியிருக்கிறது என்பதுதான். ஒரு அத்தியாயம் பழைய நினைவுகள்; இன்னொரு அத்தியாயம் தற்காலம்; மற்றொரு அத்தியாயம் வருங்காலம் என்று நாவலில் எழுதிவிடலாம். திரைப்படத்தில் அப்படி காட்டினால் பார்வையாளர் கடுப்பாகி விடுவார்; முடிவு தெரிந்து அசுவாரசியமாகி விடுவார்; எப்படி மசாலா சினிமா ஆளை, இலக்கிய ஆக்கத்திற்குள் கட்டிப் போடுவது!? அதைவிட கதையை இன்னும் மேம்படுத்துவது எப்படி முடியும்? தர்க்கபூர்வமாகவும் அறிவியல்மொழியிலும் பிரமிக்க வைக்கும் புனைவை வெள்ளித்திரையில் மேலும் மினுக்குவது எப்படி? சாதித்து இருக்கிறார்கள்.

ஒரு நாட்டிற்குள் அன்னியர்கள் ஏன் உள்ளே நுழைகிறார்கள் என்பது அந்தந்த நாட்டின் ஆட்சியாளர்களின் கவலை. பாரத தேசத்திற்குள் கிழக்கிந்திய கம்பெனி கால் வைத்தது. அதற்கு முன் மதமாற்றத்திற்காக மொகலாயர்கள் உள்ளே நுழைந்தார்கள். அதற்கும் முன் கொள்ளையடிப்பதற்காக கில்ஜி வந்தான். அதற்கும் முன் மானுடவியலாளராக ஃபாஹியான்  என்னும் சீனரும் பௌத்த மார்க்கத்தின் பரப்பை கவனிக்க சுவான் ஸாங் (யுவான் சுவாங்)கும் வந்தார்கள். இந்த அன்னிய கிரகவாசிகள் எதற்காக வந்தேறியிருக்கிறார்கள்? பணத்திற்காகவா? பண்பாட்டிற்காகவா? நிலைத்தை அபகரித்து புதிய இடத்தை தங்களுக்காக உருவாக்கிக் கொள்வதற்காகவா?

நமக்கு நம் வருங்காலம் தெரியுமா? அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அறிவோமா? ஓரளவு அறிந்தே இருக்கிறோம். திருடினால் ஜெயிலில் போடுவார்கள் என்று தெரிந்தும் தவறுகளைச் செய்கிறோம். அடுத்தவரின் மனையை நோக்கி படி தாண்டிய உறவை மேற்கொண்டால், நம் சொந்த வாழ்வு நரகமாகும் என்று தெரிந்தே, பிறன்மனை நாடுகிறோம். அரை வேலை செய்தால் உருப்படாது எனத் தெரிந்தே முழுமையாகப் பணியை முடிக்காமல் அரை வேக்காடில் தந்து, பணிநீக்கம் ஆகிறோம். அப்படியானால் நமக்கு வரப்போவது தெரிந்தே, அதன்படி நடக்கிறோம். சுதந்திரமாகச் செய்கிறோம் என அதற்கு அர்த்தம் கற்பிகிறோமா? படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று அறிந்திருக்கிறோம். பிடித்ததை செய்தால் வாழ்வு இனிக்கும் என்று அறிந்திருக்கிறோம். அறிந்ததைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறோமா? அல்லது அறியாமையில் வாழ்க்கையின் வருங்காலம் தெரியவில்லை என மயங்குகிறோமா?

நம்மை யாரும் நன்றாக படி என்றோ கஷ்டப்பட்டு விளையாடு என்றோ கட்டளையிடுவதில்லை. இது எனக்கு செய்யத் தெரியாது என்பதால் சிலவற்றை செய்து பார்க்கிறேன். அதே சமயம், சிலவற்றை ஏற்கனவே பலமுறை சிறப்பாக செய்திருக்கிறேன் என்பதால் மீண்டும் மீண்டும் விளையாட்டாக சிரத்தையாக செய்து முடிக்கிறேன். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள் என்று எவரும் அறிவுறுத்தாமலேயே அந்த நவீன நுட்பங்களில் ஆர்வம் கொள்கிறேன். தெரியாத மொழி என்று சிலவற்றை ஒதுக்கி புறந்தள்ளி, வாழ்க்கைக்கும் போஜனத்திற்கும் முக்கியத்துவம் என்றால் விளங்கிக் கொள்ளாமல் விலகி நிற்கிறேன். ஏன்? இதுதான் தனிமனித சுதந்திரமா!?

கண்ணன் விஸ்வரூபம் எடுத்து அர்ஜுனனிடம் எல்லாப் பொருள்களையும் உணர்த்தும்போது அர்ஜுனனுக்கு சகலமும் புலப்படுகிறது. அப்பொழுதே போரை கைவிட்டு அபிமன்யுவையும் பால பஞ்ச பாண்டவர்களையும் காப்பாற்றலாமே… ஏன் செய்வதில்லை? நமக்கு வருங்காலம் தெரிந்தாலும் நாம் மாற்றிக் கொள்வதில்லை. சொல்லப்போனால் மகாபாரதம் எப்படி முடியும் என்பது நமக்கெல்லாருக்கும் தெரியும். தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதையின் இராமாயணமோ, கம்பராமாயணமோ எப்படிப்பட்ட காட்சிகள் கொண்டது என்று உங்கள் எல்லோருக்கும் அத்துப்படி. இருந்தாலும், ஏன் அதை மீண்டும் மீண்டும் படிக்கிறோம்? தொலைக்காட்சியில் பார்க்கிறோம்? கல்யாண நாள் அன்று தாலி கட்டுவோம், மாலை மாற்றுவோம், மோதிரம் போட்டு விடுவார்கள் என்பதெல்லாம் தெரிந்த விஷயம்தானே! அப்புறம் ஏன், அதே செய்கைகளை குறிப்பிட்ட முகூர்த்தத்தில் செய்து பார்த்து அரங்கேற்றுகிறோம்? இந்தக் கேள்விகளை எழுப்பவும் அதற்கான விடைகளை உங்கள் மனதில் முட்டிமோத வைக்கும் கதை + படம் இது.

மனிதர்களுக்குள் நட்பு உதித்த போது மொழியும் உதித்ததா? அல்லது நட்பின் வழியாக மொழி உதயமானதா? அடிக்கவும் உதைக்கவும் இல்லாமல் சகாக்களுடன் கேட்கவும் பேசவும் தெரிந்து கொண்டபோது வாழ்வின் உன்னதத்தை அறிந்து கொண்டிருக்கிறோம். வாழ்நாளில் உள்ள மிச்சத்தை அர்த்தப்படுத்த நட்பும், அந்த நட்பின் உரையாடலும் அவசியப்பட்டிருக்கிறது. நம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்த மொழி உருவாகியது. மொழியின் மூலகர்த்தா நட்பு எனலாம். தோழமையிடம் அளவளாவவே மொழி தோன்றியிருக்கும். தோளில் கைபோடுவது தோழமையின் சின்னம். அது முதுகில் குத்த அல்ல என்பதற்கு சைகை பாஷை உருவாகிறது. அது பேச்சாக மாறி, கதைத்தலாக மாறியிருக்கிறது.

இந்தப் படம் அதன் கதை.

மேலும்:
short_story_science_fiction_movies_films_scifi_cinema

harnessed_changizi_mark_how-language-and-music-mimicked-nature-and-transformed-ape-to-man1. மொழியியலின் சமீபத்திய முன்னெடுப்புகள் | எம்.ஐ.டி. செய்திகள்

2. We Need More Sci-Fi Movies That Celebrate Otherness | தி ஹஃபிங்டன் போஸ்ட்

3. மாவோ-வின் சீனா: The Language Game | பெரி லிங்க் | நியு யார்க் ரிவ்யு ஆஃப் புக்ஸ்

4. அத்தியாயம் எட்டு: “Smart Machines” | Edge.org in The Third Culture

5. Thick of Tongue by John McWhorter – குவெர்னிகா:   ”கறுப்பு ஒலி” என்றால் என்ன சொல்ல வருகிறார்கள்?

6. Deep Sounds – குவெர்னிகா: ஹால் வொயிஹெட் (Hal Whitehead) என்பவரிடம் ரேச்சல் ஆலன் (Rachel Allen) திங்கிலத்துடன் உரையாடல் நிகழ்த்துவது எப்படி என்றும் இயற்கையில் கலச்சாரம் எப்படி பரிமளிக்கிறது என்றும் நேர்காண்கிறார்

7. மொழியின் பரிணாம வளர்ச்சியில் நட்பின் பங்கு குறித்து யுடோரா வெல்ட்டி (Eudora Welty) – பிரெயின் பிக்கிங்ஸ்

8. Donald Trump’s strange speaking style, as explained by linguists – Vox

9. The Linguistic Evolution of ‘Like’ – The Atlantic

10. The Running Conversation in Your Head – The Atlantic

உடன்வந்தி அருநிழல்

தெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.
: பிரேம் – ரமேஷ்
16-03-2006

அமெரிக்கக்காரி சிறுகதையை முன்வைத்து

புழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய?!” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.

இந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.

அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.

அமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.

அந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.

~oOo~

காதலில் கூச்சங்கள் கிடையாது

confidence_confession

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

அமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது!’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.

இந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா?’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.

~oOo~

a-shadow-on-the-cloud-is-the-shadow-of-this-very-same-plane-on-the-picture-taken-on-a-flight-from-4

உடன்வந்தி அருநிழல்

இதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:

கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

விமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்?

நிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.

இதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம்? இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி?

அ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.

டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”

~oOo~

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

டேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன? ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது? அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா?’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’

டேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.

உதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.

முத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.

சுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.

roulette-wheel

சூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்?

Hasan Minhaj Homecoming King

இந்திய அமெரிக்கரின் விதூஷக ராஜாங்கம்

ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதியதை நீங்கள் படித்திருக்கலாம்: “கவிதையினால் பணம் கிட்டாது. ஆனால், பணத்திற்குள் கவிதை கிடைக்காது.” நெட்ஃப்ளிக்ஸில் ஹசன் மினாஜ் என்னும் தனி நபர் பேச்சை கேட்டபோது அதுதான் தோன்றியது.

ஹசன் மினாஜ் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த இஸ்லாமியப் பெற்றோருக்கு பிறந்த அமெரிக்கர். அமெரிக்காவில் புகழ் பெற்ற ’டெய்லி ஷோ வித் ஜான் ஸ்டுவர்ட்’ நிகழ்ச்சியின் அங்கத்தினர். சமீபத்திய வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தில் நடுநாயகராகக் கலந்துகொண்டு புத்தம்புதிய ஜனாதிபதியான டானல்டு டிரம்ப்பையும் அமெரிக்க செய்தியாளர்களையும் ’கவண்’ படத்தின் நாயகன் போல் சகஜமாக கலாய்த்து நகைச்சுவையாகப் பேசியவர். அவர் மட்டும் தனியாளாக ஒன்றேகால் மணி நேரம் மேடையில் தோன்றி நகைச்சுவையாக தன் வாழ்வை எடுத்துரைத்து, பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியை நெட்ஃப்ளிக்ஸ் Homecoming King என ஒளிபரப்புகிறது. அதைப் பார்த்தபோது “அமெரிக்கருக்கு தேஸி வாழ்க்கையில் சுவாரசியம் கிட்டாது.” என்னும் என் எண்ணம் உடைந்தது. தேஸி குடும்பத்திலும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை காணவைக்கலாம் என்றுணர்ந்த போதுதான் ராபர்ட் ஃப்ராஸ்ட் நிழலாடினார்.

இந்திய வம்சாவழியினர் அமெரிக்காவில் காமெடி செய்வது ஒன்றும் புதிதான விஷயமல்ல. இருபதாண்டுகளுக்கு முன்பாக ரஸ்ஸல் பீட்டர்ஸ் என்னும் நகைச்சுவையாளரைப் பார்த்த போதே இரு பக்கமும் நெருப்பு உள்ள கட்டையில் மாட்டிக் கொண்ட எறும்பு போல இந்திய-அமெரிக்கரின் மனம் தவிப்பதை இவரைப் போல் தெளிவாக சுய எள்ளலோடு சொல்வாருமுண்டோ என மூக்கின் மேல் விரல் வைத்து அவரின் சீர் வாய்த்திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்தியிருக்கிறேன். ஆனால், தெற்காசியாவில் இருந்து மேடையேறும் எந்த காமெடியரும் சொல்லும் ஜோக்குகளில் சில ஒற்றுமை இருக்கும்.

– இந்தியர்கள் கஞ்சர்கள்.
– இந்தியர்களின் உச்சரிப்பு எப்படி இருக்கும்?
– இந்தியர்கள் எப்படி தலையை ஆட்டுவார்கள்?
– இந்தியர்களின் திருமணம் எவ்வாறு கூட்டமாக இருக்கும்?
– இந்தியர்களின் சமையல்
– இந்தியப் பெயர்களும் அவை அமெரிக்கரிகளின் நாவை சுழற்றியடிப்பதும்

இப்படி குண்டுசட்டியில் குதிரையோட்டிக் கொண்டிருந்தவர்கள் நடுவே வித்தியாசமாக முளைத்தது அமெரிக்க தேஸி புதிய தலைமுறை. இந்த தேஸி காமெடியர்கள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். தங்கள் தந்தை பேசும் விநோத ஆங்கிலத்தையும் தாயின் பாசத்தையும் ஆக்ரோஷமாக ஆகர்ஷிப்பார்கள். அதே சமயம் தங்கள் வாழ்க்கையை சற்றே தூர நின்று ஆராய்ந்து அதில் தெரியும் அவலத்தையும் அவமானத்தில் இருந்து மீண்டெழுந்ததையும் தைரியமாக உங்களுடன் பகிர்பவர்கள். விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்பு தோய் பசுங்கழை என்று குறுந்தொகை சொல்வது போல் (யானை) மூங்கிலை வளைத்துத் தின்றுவிட்டு அதனைக் கைவிட்டால் அது எப்படி விசும்பி நிமிருமோ அதுபோல கடிவாளத்தைக் கைவிட்ட குதிரை போலப் பாய்கிறார்கள்.

சிலிகான் வேலி’ தொடரில் வரும் குமாயில் நாஞ்சியானி, ’மாஸ்டர் ஆஃப் நண்’ எடுக்கும் ஆஸிஸ் அன்சாரி, ஹரி கொண்டபொலு, அபர்ணா நன்சேர்லா என்று இந்தப் பட்டியல் நீளும். இவர்களில் பலரின் பேச்சும் அவர்களின் வாழ்க்கை அனுபவத்தை முன்னிறுத்தி அமைந்திருக்கும். எண்பதுகளிலும் 1990களிலும் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த இந்தியர்களுக்கும் அவர்களுக்குப் பிறந்தவர்களுக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளியாக இதைப் பார்க்கலாம்.

இங்கேயே பிறந்த தெற்காசிய வம்சாவழியினருக்கு தான் ஓர் அமெரிக்கர் என்பதில் இம்மி அரிசி அளவும் சந்தேகமில்லை. வெள்ளயாக இருப்பவரும் அமெரிக்கர்; கருப்பாக இருப்பவரும் அமெரிக்கர்; பழுப்பும் அமெரிக்கர். மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அது உங்களை அமெரிக்கரா இல்லையா என்று அடையாளம் காட்டாது. ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பது சென்ற தலைமுறையின் சித்தாந்தாம். ’நான் இன்ன சமூகம்; என் சமய நம்பிக்கைச் சின்னங்களை வெளிப்படையாக அணிவேன்!’ என்பது இந்தத் தலைமுறையின் பறை. ஹஸன் மினஜ் இந்தத் தலைமுறையின் தேஸி பிரதிநிதி.

இவ்வாறு அமெரிக்க மக்களோடு உரையாடுவதற்கு கிரிஸ் ராக் தன்னுடைய மானசீக குருவாக இருந்ததாக பேட்டியில் சொல்கிறார் ஹஸன். நகைச்சுவையாகவும் பேசி சிரிக்க வைக்க வேண்டும். வெறுமனே கேலியாக இல்லாமல் அந்தப் பேச்சில் வாதத் திறனும் இருக்க வேண்டும். வெறும் வாதமாக இருந்துவிடாமல் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் கோர்க்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; அரசியல் சிக்கல்களாக இருக்கட்டும் – ஏன் இந்த முடிவிற்கு நீங்கள் வர வேண்டும் என்பதை சுயவரலாற்றுடனும் சிரிப்புடனும் சொல்ல ஹஸன் மினாஜிற்கு தெரிந்திருக்கிறது.

9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை ‘ஒசாமா’ என்று அழைப்பது; பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் நடுப்பகுதியில் உள்ள தெற்கு மாகாணங்களில் இன்றைக்கும் நிலவும் வெள்ளையின உயர் பெருமிதத்தின் எச்சங்கள்; பள்ளியில் பெரும்பான்மையினர் இடையே சிறுபான்மையினராக உலா வரும்போது தோன்றும் இருப்பியல் அபிலாஷைகள் – என்று கலந்து கட்டி தன் வரலாற்றைச் சொல்கிறார் ஹஸன். நடுநடுவே இந்தியக் குடும்பங்களின் பண்பு; படிப்பில் காட்டும் சிரத்தை; திறந்த வெளியாக எதைப் பற்றியும் பேசாத இந்தியக் குடும்பங்களின் சூழல்; சமூகமும் சமயமும் சாராமல் திருமணம் செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் என்று பல இடங்களில் கோர்வையாகத் தாவுகிறார்.

அதே சமயம் தன் பின்னணி குறித்த சுய மதிப்பீடும் அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. இந்தியர் என்றால் பெரும்பாலும் கவலை இல்லாத சமூக அந்தஸ்து கிடைத்திருக்கிறது. கருப்பர் என்றால் காவல்துறை சுட்டுவிட்டு கேள்வி எழுப்பும். பழுப்பு நிறத்தவர் என்றால் கூகுள் நிறுவனத்திலோ மைக்ரோசாஃப்ட்டிலோ வேலை பார்ப்பவர் என்று கருத்தில் வைத்திருக்கும் என்பதையும் வெளிப்படையாக நடுத்தெருவில் போட்டுடைக்கிறார். உயிருக்கு எப்போதும் பயம் என்னும் சூழலில் வாழ்வதையும் பள்ளியில் காதலியுடன் விருந்திற்கு போக முடியாததையும் எப்படி சமதட்டில் வைத்துப் பார்க்க இயலும் என்பதையும் வெளிப்படையாக கேள்வி கேட்கிறார்.

இன்றைய மேடை நாடகங்களிலும் பிராட்வே நிகழ்வுகளிலும் ஒலி-ஒளிக் காட்சிகள் பலமூட்டுகின்றன. ஹஸன் மினாஜும் அந்த நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். அவரின் பின்னே அவ்வப்போது பால்யகாலப் புகைப்படங்கள் தோன்றுகின்றன. அவை நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. சடாரென்று ஃபேஸ்புக் உரையாடலும் ட்விட்டர் அரட்டை வசனங்களும் திரைவெட்டுகளாக பின்னணியில் தோன்றுகின்றன. அது அடுத்தவரின் ஜன்னல் வழியாக அவரின் வாழ்க்கையை நம் முன் நிறுத்துகின்றன. அவர் போய் கதவைத் தட்டி, அந்த வீட்டின் வாயில் திறக்கும்போது நிகழும் சம்பவங்கள் அப்படியே நமக்கு நடப்பது போல் உணரவைக்கின்றன. டெட் பேச்சுக்களில் (TED Talk) பின்புலம் மாறுமே… அது போல் கவர்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், இந்த பவர்பாயிண்ட் நிலைப்படங்களும் இந்தியாவை நினைவுறுத்துவதற்காக முகத்தில் அடிக்கும் செம்மஞ்சள் நிறமும் கொஞ்சம் அதிகப்படி. அவற்றை அடக்கி வாசித்திருக்கலாம்.

நாம் நம் நண்பர்களோடு உரையாடும்போது ஒருவிதமாக நடந்து கொள்கிறோம். அதே நாம், நம் உறவினர்களோடு பேசும்போது கருத்துகளிலும் பேச்சிலும் வேறொரு பாவனையைக் கையாள்கிறோம். அதே போல், அலுவல் கூட்டாளிகளோடு அமெரிக்கர்களோடு மதிய உணவின் சம்பாஷணைகளில் பொதுப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தி இன்னொரு முகத்தை முன்வைக்கிறோம். இந்த மூன்று முகத்தையும் கிழித்துத் தொங்கவிடுவது ஹஸன் மினாஜின் வேலை. அதாவது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சமரசங்கள் தேவை என்பது சென்ற தலைமுறையின் வேதவாக்கு. அதை மறுத்து நேர்மையாக உண்மையை எடுத்துரைத்தால், அமெரிக்கருக்குப் புரியும் என்பது ஹஸன் மினஜின் நம்பிக்கை.

ஒரு தலைமுறையின் தோளில் அடுத்த தலைமுறை நின்று புதிய உயரங்களை எட்டுகிறது. ரிச்சர்ட் பிரையர் வெள்ளையர்களும் சிரிக்குமாறு நகைக்க வைத்தார். அவரின் வழித்தடத்தில் கிறிஸ் ராக், டேவ் சப்பெல் உதித்தார்கள். அவர்களின் தோளில் இன்றைய தலைமுறையின் சாடர்டே நைட் லைவ் நட்சத்திரம் மைக்கேல் சே போன்ற நகைச்சுவையாளர்கள் வெளிப்படையாக அரசியல் கலந்த நகைச்சுவையில் முன்னிற்கிறார்கள். ரஸல் பீட்டர்ஸ் முதல் தலைமுறை அமெரிக்க-இந்தியர்களைக் குறிவைத்து பேசினார். மிண்டி கலிங் அடுத்த தலைமுறை இந்தியர். இப்பொழுது மூன்றாம் தலைமுறையின் அடையாளமாக ஹஸன் மினஜ் மின்னுகிறார். இனி அவரைப் பின் தொடர்ந்து அமெரிக்க-இந்தியக் குடும்பத்தை படம் பிடிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரலாம். தேய்வழக்குகளாக, தெற்காசியர் என்றால் டாக்ஸி ஓட்டுபவர். தெருமுக்கு 7-11 பலசரக்கு கடை நடத்துபவர், கணினி நிரல் எழுதுபவர், டாக்டர் என்னும் கதாபாத்திர அடைசல்கள் உடையலாம்.

இந்தியர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சொற்றொடர்: “மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” ஹஸன் இதைக் குறித்து சற்றும் கவலைப்படவில்லை. ஒரு சாதாரண அமெரிக்கர் ’உலகம் தன்னை எப்படி மதிப்பிடும்” என்பதற்காக வாழ்வதில்லை. தனக்கு இந்த விஷயம் முக்கியமானது என்று நினைத்தால் அதற்காக சோறு தண்ணீர் இல்லாமல் உழைப்பார். நடுவில் கொஞ்சம் காசு வந்தால் அதை வாங்கிக் கொள்வார். அப்படித்தான் அமெரிக்கா இயங்குவதாக பள்ளியில் சொல்லித் தருகிறார்கள். ஹஸன் அதை நம்புபவர். அதற்காக நகைச்சுவையை நம்பி வக்கீல் தொழிலுக்கான பாதையை கைவிட்டவர். இந்திய வம்சாவழியினர் என்றால் மருத்துவம் அல்லது ஆராய்ச்சி அல்லது கணினி நிரலாளர் என்னும் வார்ப்புரு கலயத்தைப் போட்டுடைத்தவர்.

’என் வழி… தனி வழி!’ என்பதை எல்லா விஷயத்திலும் ஹஸன் முழுமையாக நம்புகிறார். டானல்டு டிரம்ப் என்பவர் இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வரக்கூடாது என்னும் தடையை அவசர அவசரமாக சட்டமாக்கியவர். அவரின் வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தியாளர் விருந்திற்கு முக்கிய ஒருங்கிணைப்பாளராக ஹஸன் செல்கிறார். தான் ஒரு முஸ்லீம் என்பதைக் கொண்டு நகைச்சுவைப் பேச்சைத் துவக்குகிறார். தான் சிறுபான்மையாக உணர்ந்ததைப் போல் உண்மை உணர்த்தவிரும்பும் செய்தியாளர்களும் சிறுபான்மையாளர்களாக மாறிப் போனதை, பேச்சில் சுட்டி எள்ளலுடன் நகைச்சுவையாக்குகிறார். சாதாரண பிரஜையாக இருந்தால் வெள்ளை மாளிகைக்குச் செல்வதால் டானல்ட் டிரம்ப்பிடம் ஹஸன் விலை போய்விட்டதாக ‘உலகம்’ பேசுமே என யோசித்து வாய்ப்பை நழுவ விட்டிருப்பார். இன்னொரு நகைச்சுவையாளராக இருந்தால் விருந்திற்கே வராத டானல்ட் டிரம்ப்பை ஏன் நக்கலடிக்க வேண்டும் என்று பாதுகாப்பாக பேசியிருப்பார்.

அதை நினைத்தபோது பாலைத் திணை பாடல் நினைவிற்கு வந்தது.

சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர்உற்று
உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே

நாட்டின் தலைவர் பிரிந்துவிட்டார். நிலம் வறண்டு இருக்கிறது. பாதைகள் பொலிவற்று காணப்படுகின்றன. இது அமெரிக்காவின் இன்றைய நிலை. அப்படிப்பட்ட வறட்சியிலும் முருங்கை மரம் மட்டும் பூத்திருக்கிறது. இது மக்களின் தனித்துவத்தைக் குறிக்கிறது. அந்த நாரற்ற முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள் சூறாவளியால் அங்குமிங்கும் எங்கும் சுழற்றி அடிக்கப்பட்டு அலைக்கழிகின்றன. எந்த வறட்சியான சூழலிலும் காய்ந்துபோகாமல் பசுமையாக இருக்கக்கூடியது நவிரல் என்னும் முருங்கை மரம். எல்லாம் வற்றிப் போன காலத்தில் வெள்ளை நிற முருங்கைப் பூக்கள் தரைக்காற்றில் சிதறுண்டு கடல் நுரை போல் தோற்றமளிக்கின்றன. பாலை நிலத்தில் கடற்கரை உதயமாகிறது. ஹஸன் மினஜ் என்பவர் இது போல் நம்பிக்கையின்மையின் காலத்தில் பசுமையாக முளைத்திருக்கிறார்.