இந்திய அமெரிக்கரின் விதூஷக ராஜாங்கம்
ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதியதை நீங்கள் படித்திருக்கலாம்: “கவிதையினால் பணம் கிட்டாது. ஆனால், பணத்திற்குள் கவிதை கிடைக்காது.” நெட்ஃப்ளிக்ஸில் ஹசன் மினாஜ் என்னும் தனி நபர் பேச்சை கேட்டபோது அதுதான் தோன்றியது.
ஹசன் மினாஜ் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த இஸ்லாமியப் பெற்றோருக்கு பிறந்த அமெரிக்கர். அமெரிக்காவில் புகழ் பெற்ற ’டெய்லி ஷோ வித் ஜான் ஸ்டுவர்ட்’ நிகழ்ச்சியின் அங்கத்தினர். சமீபத்திய வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தில் நடுநாயகராகக் கலந்துகொண்டு புத்தம்புதிய ஜனாதிபதியான டானல்டு டிரம்ப்பையும் அமெரிக்க செய்தியாளர்களையும் ’கவண்’ படத்தின் நாயகன் போல் சகஜமாக கலாய்த்து நகைச்சுவையாகப் பேசியவர். அவர் மட்டும் தனியாளாக ஒன்றேகால் மணி நேரம் மேடையில் தோன்றி நகைச்சுவையாக தன் வாழ்வை எடுத்துரைத்து, பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியை நெட்ஃப்ளிக்ஸ் Homecoming King என ஒளிபரப்புகிறது. அதைப் பார்த்தபோது “அமெரிக்கருக்கு தேஸி வாழ்க்கையில் சுவாரசியம் கிட்டாது.” என்னும் என் எண்ணம் உடைந்தது. தேஸி குடும்பத்திலும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை காணவைக்கலாம் என்றுணர்ந்த போதுதான் ராபர்ட் ஃப்ராஸ்ட் நிழலாடினார்.
இந்திய வம்சாவழியினர் அமெரிக்காவில் காமெடி செய்வது ஒன்றும் புதிதான விஷயமல்ல. இருபதாண்டுகளுக்கு முன்பாக ரஸ்ஸல் பீட்டர்ஸ் என்னும் நகைச்சுவையாளரைப் பார்த்த போதே இரு பக்கமும் நெருப்பு உள்ள கட்டையில் மாட்டிக் கொண்ட எறும்பு போல இந்திய-அமெரிக்கரின் மனம் தவிப்பதை இவரைப் போல் தெளிவாக சுய எள்ளலோடு சொல்வாருமுண்டோ என மூக்கின் மேல் விரல் வைத்து அவரின் சீர் வாய்த்திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்தியிருக்கிறேன். ஆனால், தெற்காசியாவில் இருந்து மேடையேறும் எந்த காமெடியரும் சொல்லும் ஜோக்குகளில் சில ஒற்றுமை இருக்கும்.
– இந்தியர்கள் கஞ்சர்கள்.
– இந்தியர்களின் உச்சரிப்பு எப்படி இருக்கும்?
– இந்தியர்கள் எப்படி தலையை ஆட்டுவார்கள்?
– இந்தியர்களின் திருமணம் எவ்வாறு கூட்டமாக இருக்கும்?
– இந்தியர்களின் சமையல்
– இந்தியப் பெயர்களும் அவை அமெரிக்கரிகளின் நாவை சுழற்றியடிப்பதும்
இப்படி குண்டுசட்டியில் குதிரையோட்டிக் கொண்டிருந்தவர்கள் நடுவே வித்தியாசமாக முளைத்தது அமெரிக்க தேஸி புதிய தலைமுறை. இந்த தேஸி காமெடியர்கள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். தங்கள் தந்தை பேசும் விநோத ஆங்கிலத்தையும் தாயின் பாசத்தையும் ஆக்ரோஷமாக ஆகர்ஷிப்பார்கள். அதே சமயம் தங்கள் வாழ்க்கையை சற்றே தூர நின்று ஆராய்ந்து அதில் தெரியும் அவலத்தையும் அவமானத்தில் இருந்து மீண்டெழுந்ததையும் தைரியமாக உங்களுடன் பகிர்பவர்கள். விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்பு தோய் பசுங்கழை என்று குறுந்தொகை சொல்வது போல் (யானை) மூங்கிலை வளைத்துத் தின்றுவிட்டு அதனைக் கைவிட்டால் அது எப்படி விசும்பி நிமிருமோ அதுபோல கடிவாளத்தைக் கைவிட்ட குதிரை போலப் பாய்கிறார்கள்.
’சிலிகான் வேலி’ தொடரில் வரும் குமாயில் நாஞ்சியானி, ’மாஸ்டர் ஆஃப் நண்’ எடுக்கும் ஆஸிஸ் அன்சாரி, ஹரி கொண்டபொலு, அபர்ணா நன்சேர்லா என்று இந்தப் பட்டியல் நீளும். இவர்களில் பலரின் பேச்சும் அவர்களின் வாழ்க்கை அனுபவத்தை முன்னிறுத்தி அமைந்திருக்கும். எண்பதுகளிலும் 1990களிலும் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த இந்தியர்களுக்கும் அவர்களுக்குப் பிறந்தவர்களுக்கும் இடையே உள்ள தலைமுறை இடைவெளியாக இதைப் பார்க்கலாம்.
இங்கேயே பிறந்த தெற்காசிய வம்சாவழியினருக்கு தான் ஓர் அமெரிக்கர் என்பதில் இம்மி அரிசி அளவும் சந்தேகமில்லை. வெள்ளயாக இருப்பவரும் அமெரிக்கர்; கருப்பாக இருப்பவரும் அமெரிக்கர்; பழுப்பும் அமெரிக்கர். மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. அது உங்களை அமெரிக்கரா இல்லையா என்று அடையாளம் காட்டாது. ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்பது சென்ற தலைமுறையின் சித்தாந்தாம். ’நான் இன்ன சமூகம்; என் சமய நம்பிக்கைச் சின்னங்களை வெளிப்படையாக அணிவேன்!’ என்பது இந்தத் தலைமுறையின் பறை. ஹஸன் மினஜ் இந்தத் தலைமுறையின் தேஸி பிரதிநிதி.
இவ்வாறு அமெரிக்க மக்களோடு உரையாடுவதற்கு கிரிஸ் ராக் தன்னுடைய மானசீக குருவாக இருந்ததாக பேட்டியில் சொல்கிறார் ஹஸன். நகைச்சுவையாகவும் பேசி சிரிக்க வைக்க வேண்டும். வெறுமனே கேலியாக இல்லாமல் அந்தப் பேச்சில் வாதத் திறனும் இருக்க வேண்டும். வெறும் வாதமாக இருந்துவிடாமல் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களையும் கோர்க்க வேண்டும். சமூகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; அரசியல் சிக்கல்களாக இருக்கட்டும் – ஏன் இந்த முடிவிற்கு நீங்கள் வர வேண்டும் என்பதை சுயவரலாற்றுடனும் சிரிப்புடனும் சொல்ல ஹஸன் மினாஜிற்கு தெரிந்திருக்கிறது.
9/11க்குப் பிறகு இஸ்லாமியர்களை ‘ஒசாமா’ என்று அழைப்பது; பைபிள் பெல்ட் என்று அழைக்கப்படும் நடுப்பகுதியில் உள்ள தெற்கு மாகாணங்களில் இன்றைக்கும் நிலவும் வெள்ளையின உயர் பெருமிதத்தின் எச்சங்கள்; பள்ளியில் பெரும்பான்மையினர் இடையே சிறுபான்மையினராக உலா வரும்போது தோன்றும் இருப்பியல் அபிலாஷைகள் – என்று கலந்து கட்டி தன் வரலாற்றைச் சொல்கிறார் ஹஸன். நடுநடுவே இந்தியக் குடும்பங்களின் பண்பு; படிப்பில் காட்டும் சிரத்தை; திறந்த வெளியாக எதைப் பற்றியும் பேசாத இந்தியக் குடும்பங்களின் சூழல்; சமூகமும் சமயமும் சாராமல் திருமணம் செய்து கொள்வதில் இந்தியர்களுக்கு நிலவும் சிக்கல்கள் என்று பல இடங்களில் கோர்வையாகத் தாவுகிறார்.
அதே சமயம் தன் பின்னணி குறித்த சுய மதிப்பீடும் அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. இந்தியர் என்றால் பெரும்பாலும் கவலை இல்லாத சமூக அந்தஸ்து கிடைத்திருக்கிறது. கருப்பர் என்றால் காவல்துறை சுட்டுவிட்டு கேள்வி எழுப்பும். பழுப்பு நிறத்தவர் என்றால் கூகுள் நிறுவனத்திலோ மைக்ரோசாஃப்ட்டிலோ வேலை பார்ப்பவர் என்று கருத்தில் வைத்திருக்கும் என்பதையும் வெளிப்படையாக நடுத்தெருவில் போட்டுடைக்கிறார். உயிருக்கு எப்போதும் பயம் என்னும் சூழலில் வாழ்வதையும் பள்ளியில் காதலியுடன் விருந்திற்கு போக முடியாததையும் எப்படி சமதட்டில் வைத்துப் பார்க்க இயலும் என்பதையும் வெளிப்படையாக கேள்வி கேட்கிறார்.
இன்றைய மேடை நாடகங்களிலும் பிராட்வே நிகழ்வுகளிலும் ஒலி-ஒளிக் காட்சிகள் பலமூட்டுகின்றன. ஹஸன் மினாஜும் அந்த நுட்பத்தைப் பயன்படுத்துகிறார். அவரின் பின்னே அவ்வப்போது பால்யகாலப் புகைப்படங்கள் தோன்றுகின்றன. அவை நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. சடாரென்று ஃபேஸ்புக் உரையாடலும் ட்விட்டர் அரட்டை வசனங்களும் திரைவெட்டுகளாக பின்னணியில் தோன்றுகின்றன. அது அடுத்தவரின் ஜன்னல் வழியாக அவரின் வாழ்க்கையை நம் முன் நிறுத்துகின்றன. அவர் போய் கதவைத் தட்டி, அந்த வீட்டின் வாயில் திறக்கும்போது நிகழும் சம்பவங்கள் அப்படியே நமக்கு நடப்பது போல் உணரவைக்கின்றன. டெட் பேச்சுக்களில் (TED Talk) பின்புலம் மாறுமே… அது போல் கவர்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், இந்த பவர்பாயிண்ட் நிலைப்படங்களும் இந்தியாவை நினைவுறுத்துவதற்காக முகத்தில் அடிக்கும் செம்மஞ்சள் நிறமும் கொஞ்சம் அதிகப்படி. அவற்றை அடக்கி வாசித்திருக்கலாம்.
நாம் நம் நண்பர்களோடு உரையாடும்போது ஒருவிதமாக நடந்து கொள்கிறோம். அதே நாம், நம் உறவினர்களோடு பேசும்போது கருத்துகளிலும் பேச்சிலும் வேறொரு பாவனையைக் கையாள்கிறோம். அதே போல், அலுவல் கூட்டாளிகளோடு அமெரிக்கர்களோடு மதிய உணவின் சம்பாஷணைகளில் பொதுப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தி இன்னொரு முகத்தை முன்வைக்கிறோம். இந்த மூன்று முகத்தையும் கிழித்துத் தொங்கவிடுவது ஹஸன் மினாஜின் வேலை. அதாவது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு சமரசங்கள் தேவை என்பது சென்ற தலைமுறையின் வேதவாக்கு. அதை மறுத்து நேர்மையாக உண்மையை எடுத்துரைத்தால், அமெரிக்கருக்குப் புரியும் என்பது ஹஸன் மினஜின் நம்பிக்கை.
ஒரு தலைமுறையின் தோளில் அடுத்த தலைமுறை நின்று புதிய உயரங்களை எட்டுகிறது. ரிச்சர்ட் பிரையர் வெள்ளையர்களும் சிரிக்குமாறு நகைக்க வைத்தார். அவரின் வழித்தடத்தில் கிறிஸ் ராக், டேவ் சப்பெல் உதித்தார்கள். அவர்களின் தோளில் இன்றைய தலைமுறையின் சாடர்டே நைட் லைவ் நட்சத்திரம் மைக்கேல் சே போன்ற நகைச்சுவையாளர்கள் வெளிப்படையாக அரசியல் கலந்த நகைச்சுவையில் முன்னிற்கிறார்கள். ரஸல் பீட்டர்ஸ் முதல் தலைமுறை அமெரிக்க-இந்தியர்களைக் குறிவைத்து பேசினார். மிண்டி கலிங் அடுத்த தலைமுறை இந்தியர். இப்பொழுது மூன்றாம் தலைமுறையின் அடையாளமாக ஹஸன் மினஜ் மின்னுகிறார். இனி அவரைப் பின் தொடர்ந்து அமெரிக்க-இந்தியக் குடும்பத்தை படம் பிடிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரலாம். தேய்வழக்குகளாக, தெற்காசியர் என்றால் டாக்ஸி ஓட்டுபவர். தெருமுக்கு 7-11 பலசரக்கு கடை நடத்துபவர், கணினி நிரல் எழுதுபவர், டாக்டர் என்னும் கதாபாத்திர அடைசல்கள் உடையலாம்.
இந்தியர்கள் அடிக்கடி உபயோகிக்கும் சொற்றொடர்: “மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?” ஹஸன் இதைக் குறித்து சற்றும் கவலைப்படவில்லை. ஒரு சாதாரண அமெரிக்கர் ’உலகம் தன்னை எப்படி மதிப்பிடும்” என்பதற்காக வாழ்வதில்லை. தனக்கு இந்த விஷயம் முக்கியமானது என்று நினைத்தால் அதற்காக சோறு தண்ணீர் இல்லாமல் உழைப்பார். நடுவில் கொஞ்சம் காசு வந்தால் அதை வாங்கிக் கொள்வார். அப்படித்தான் அமெரிக்கா இயங்குவதாக பள்ளியில் சொல்லித் தருகிறார்கள். ஹஸன் அதை நம்புபவர். அதற்காக நகைச்சுவையை நம்பி வக்கீல் தொழிலுக்கான பாதையை கைவிட்டவர். இந்திய வம்சாவழியினர் என்றால் மருத்துவம் அல்லது ஆராய்ச்சி அல்லது கணினி நிரலாளர் என்னும் வார்ப்புரு கலயத்தைப் போட்டுடைத்தவர்.
’என் வழி… தனி வழி!’ என்பதை எல்லா விஷயத்திலும் ஹஸன் முழுமையாக நம்புகிறார். டானல்டு டிரம்ப் என்பவர் இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வரக்கூடாது என்னும் தடையை அவசர அவசரமாக சட்டமாக்கியவர். அவரின் வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தியாளர் விருந்திற்கு முக்கிய ஒருங்கிணைப்பாளராக ஹஸன் செல்கிறார். தான் ஒரு முஸ்லீம் என்பதைக் கொண்டு நகைச்சுவைப் பேச்சைத் துவக்குகிறார். தான் சிறுபான்மையாக உணர்ந்ததைப் போல் உண்மை உணர்த்தவிரும்பும் செய்தியாளர்களும் சிறுபான்மையாளர்களாக மாறிப் போனதை, பேச்சில் சுட்டி எள்ளலுடன் நகைச்சுவையாக்குகிறார். சாதாரண பிரஜையாக இருந்தால் வெள்ளை மாளிகைக்குச் செல்வதால் டானல்ட் டிரம்ப்பிடம் ஹஸன் விலை போய்விட்டதாக ‘உலகம்’ பேசுமே என யோசித்து வாய்ப்பை நழுவ விட்டிருப்பார். இன்னொரு நகைச்சுவையாளராக இருந்தால் விருந்திற்கே வராத டானல்ட் டிரம்ப்பை ஏன் நக்கலடிக்க வேண்டும் என்று பாதுகாப்பாக பேசியிருப்பார்.
அதை நினைத்தபோது பாலைத் திணை பாடல் நினைவிற்கு வந்தது.
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை
நார் இல் முருங்கை நவிரல் வான் பூ
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர்உற்று
உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன்
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே
நாட்டின் தலைவர் பிரிந்துவிட்டார். நிலம் வறண்டு இருக்கிறது. பாதைகள் பொலிவற்று காணப்படுகின்றன. இது அமெரிக்காவின் இன்றைய நிலை. அப்படிப்பட்ட வறட்சியிலும் முருங்கை மரம் மட்டும் பூத்திருக்கிறது. இது மக்களின் தனித்துவத்தைக் குறிக்கிறது. அந்த நாரற்ற முருங்கையான நவிரலின் வெண்மையான பூக்கள் சூறாவளியால் அங்குமிங்கும் எங்கும் சுழற்றி அடிக்கப்பட்டு அலைக்கழிகின்றன. எந்த வறட்சியான சூழலிலும் காய்ந்துபோகாமல் பசுமையாக இருக்கக்கூடியது நவிரல் என்னும் முருங்கை மரம். எல்லாம் வற்றிப் போன காலத்தில் வெள்ளை நிற முருங்கைப் பூக்கள் தரைக்காற்றில் சிதறுண்டு கடல் நுரை போல் தோற்றமளிக்கின்றன. பாலை நிலத்தில் கடற்கரை உதயமாகிறது. ஹஸன் மினஜ் என்பவர் இது போல் நம்பிக்கையின்மையின் காலத்தில் பசுமையாக முளைத்திருக்கிறார்.