Westworld – Part 1


கோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்

westworld_anthony_hopkins_hbo_tv_shows

 

வெஸ்ட் வோர்ல்ட் என்னும் தொலைக்காட்சித் தொடர்

 

’அவர்கள் மீண்டும் மீண்டும் திரும்ப வருவதற்கான காரணம் என்னவென்று கவனித்தாயா? நுணுக்கமான விஷயங்கள் அவர்களை ஈர்க்கிறது. ஏற்கனவே பார்த்த இடம்தானே என்று அலட்சியமாக பயணியாக வருபவர்கள், சின்னச் சின்னத் தகவல்களிலும் நினைவேக்கங்களிலும் மூழ்குகிறார்கள். முன்பே அனுபவித்திருந்த ரம்மியமும் புதிதாய் தான் மட்டும் கண்டறிந்த பெருமிதமும் சுற்றுலாவாசிகளைச் சொக்க வைக்கிறது. அடுத்த தடவை இங்கே வரும்போது எதை கண்டுபிடிக்கப் போகிறோம் என்னும் ஆர்வமும் தொக்கி நிற்கிறது.

இந்த இடத்திற்கு கேளிக்கைக்காக வருபவர்கள், தாங்கள் யார் என்று அறிந்து கொள்வதற்காக இங்கே வருவதில்லை. அவர்களுக்குத் தான் எப்படிப்பட்டவர் என்பது நன்கு தெரியும். எப்படிப்பட்டவர்களாக முடியும் என்பதை தூரதிருஷ்டி கண்ணாடி மூலம் உணர்வதற்காக இங்கே வருகை புரிகிறார்கள்.’

மேலே காணும் வசனத்தை இயந்திர மனிதர்கள்(ரோபாட்) கொண்ட நகரத்தை உருவாக்கியவர் பேசுவார். ‘வெஸ்ட் வோர்ல்ட்’ (Westworld) என்னும் சாகச சவாரிகள் கொண்ட தீம் பார்க்கிற்கு எப்படி மறுபடியும் பயணிகளை வரவழைப்பது என்பதற்குப் பதிலாகச் சொல்வார். பழனி, திருப்பதி போன்ற ஷேத்ராடனம் ஆகட்டும்; டிஸ்னி, எம்.ஜி.எம்., போன்ற பல வணிக நோக்குடைய பூங்காக்கள் ஆகட்டும்; கொடைக்கானல், மாலத் தீவுகள் போன்ற சுற்றுலாத்தலங்கள் ஆகட்டும்; நம் சஞ்சாரம் – பார்த்த இடத்தையே மீண்டும் ஏன் சென்றடைகிறது? அதற்கான விடையாகச் சொல்கிறார்.

வெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். தடி எடுத்தவன் தண்டல்காரன். உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. சிறிய கிராமங்கள். மாடுகளைப் பராமரிப்பது குதிரையேற்றத்தில் வித்தகராக இருப்பது போன்றவை அவசியமான திறமைகள். காலையில் கொள்ளை, மாலையில் விஸ்கி, இரவில் வெட்டவெளியில் விழவெரி தீ என்பது வாழ்க்கைமுறை. ஒரு புகைவண்டி ஓடும். அது நாளுக்கு ஒரு முறை அந்த நகரத்திற்கு வரும். அதில் இருந்து வெளியூர்க்காரர்கள் வருவார்கள். அவர்கள் நகரமையத்தில் பொருள்களை வாங்கி, தாங்கள் கொண்டு வந்ததைப் பண்டமாற்றம் செய்வார்கள். சீட்டாடுவார்கள். எதிர்பாராததைச் செய்வார்கள் – என்பதெல்லாம் தொன்மமான தேய்வழக்கு.

இன்றும் கூட அமெரிக்காவின் நெவாடா, அரிசோனா, வையோமிங், மாண்ட்டானா போன்ற மாகாணங்களுக்குச் சென்றால் இதையொத்த நகரங்களைப் பார்க்கலாம். அங்கே காட்டு விலங்குகள் எங்கிருந்து எப்போது வரும் என்று தெரியாத சூழலினால் எல்லோர் கையிலும் துப்பாக்கியும் கத்தியும் இருப்பது போன்ற தோற்றம் காணப்படும். கொஞ்சம் அச்சம் கூட எழும். காவல்துறையும் சட்டமும் ஒழுங்கும் நிலவினாலும், அவையில்லாதத் தோற்றத்தை உருவாக்கும் கேளிக்கை விடுதிகளும் இந்த மாநிலங்களில் காணக் கிடைக்கும். அது எல்லாம் சும்மா பேருக்குத்தான். அசல் கிளர்ச்சிக்கு எங்கே போவது?

1850களுக்கு பயணிப்பது எப்படி சாத்தியம்? பழைய நினைப்பில் மூழ்காமல், அங்கேயே சென்று அந்தக் காலத்திலே வாழ்வது எப்படி? கடவுள் வரம் தந்து, அப்படியே அந்த 19ஆம் நூற்றாண்டுக்குச் சென்றுவிட்டாலும் ஒவ்வொரு வினாடியும் சாகலாம் என்னும் கொடுங்காலத்தில் எப்படி உயிர் பிழைப்பது? சுட்டால் செத்து விடுவோம். திருடர்கள், கொலைகாரர்கள் என்றில்லாமல் தவறுதலாக இடித்தால் கூட கொன்றுவிடும் அந்தக் கால ருசியும் வேண்டும். ஆனால், செத்தும் பிழைக்க வேண்டும்.

இதைத்தான் வீடியோ கேம்ஸ் செய்து காட்டுகிறது. கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ, (Grand Theft Auto) போன்ற விளையாட்டுகளை நீங்கள் ஆடியிருக்கலாம். அந்தத் தெகிடிக்குள் நீங்கள் எவ்வளவு தூரம் அக்கிரம் செய்கிறீர்களோ, எத்தனை அட்டூழியம் செய்கிறீர்களோ அத்தனைக்கு அத்தனை சாமர்த்தியசாலி. பஞ்சமா பாதகங்கள் முதல் சாதாரண பாதகங்களான சாலைவிதிகளைப் பின்பற்றாமல் வண்டியோட்டுவது வரை என்ன வேண்டுமானாலும் செய்து சந்தோஷம் அடையலாம். அது கணினி விளையாட்டு. அசல் போல் தோன்றும். ஆனால், சுற்றிவர உங்கள் வீடு இருக்கும்.

இதன் அடுத்த கட்டமாகக் கண்ணைக் கட்டிக் கொண்டு விளையாடும் ஆட்டங்களைச் சொல்லலாம். (தொடர்புள்ள கட்டுரை: வற்றாயிருப்பு சுந்தர் – மெய்நிகர்சனம் (VR) மற்றும் கிஷோர் மஹாதேவன் – மெய்நீட்சி (AR): இல்லை, ஆனால் இருக்கு). இவை ஓரளவு இயல்பு நிலையை மறக்க வைக்கின்றன. நம் தலை திரும்பும் இடமெல்லாம் மாயலோகம் இருக்கிறது. நாம் ஆப்பிரிக்காவில் எங்கோ மூலையில் இருந்தாலும் சுற்றுப்புறம் எங்கு பார்த்தாலும் மதுரை தெரியுமாறு அமைக்கலாம். ஆனால், செல்பேசி சிணுங்கினால் நிஜ வாழ்விற்கு தடலாடியாக வந்துவிடுவோம். திரையில் காணும் கதாபாத்திரத்தைக் கற்பழிக்க நினைத்தாலும் சுயநினைவோடு, நம்முடைய வீட்டில் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டே கற்பனையாட்டம் ஆட வேண்டும்.

இந்த மாதிரி தடைகள் எதுவும் இல்லாமல், அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்வது எப்படி? உள்மன வக்கிரங்களை ஆசை தீர நிறைவேற்றிக் கொள்வது எப்படி? இன்றைய நிலையில் அதைச் செய்தால் ஜெயில் தண்டனை கிடைக்கும். சமூகப் புறக்கணிப்பு அமையப்பெறுவோம். உடம்பில் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது. மானம், மரியாதை எல்லாம் கப்பலேறும்.

westworld_3d_printing_robots

இங்கேதான் வெஸ்ட் வோர்ல்ட் என்னும் மாயாபுரி உதயமாகிறது. இங்கே கொள்கையும் கிடையாது; புண்ணாக்கும் கிடையாது. தரங்கெட்டழிந்த நிலை எங்கும் நிலவும் இடம் இது. சூனியவாதம் அராஜகத்துடன் கைகோர்த்து கோலோச்சும் இடம் இது. உள்ளுக்குள் சகல அழுக்குகளையும் வைத்துக் கொண்டு வெளியே நல்லவனாக வேஷம் போட வேண்டாத இடம் இது. வெற்றி என்பதை விட பணம் பண்ணவேண்டும் என்பதை விட மனதிற்கு பிடித்ததை மகிழ்ச்சி தருவதை செய்து பார்க்க அழைக்கும் இடம் இது. உங்களுக்கு இன்று கொலைகாரனாக பாட்ஷாவாக வேஷம் போட வேண்டும் என்றாலும் ரட்சகனாக மாணிக்கமாக மாறவேண்டும் என்றாலும் அதற்கான அவதாரத்தைக் கொடுக்கும் இடம் இது. உங்கள் குறிக்கோள் உங்கள் கையில். எது உங்களுக்கு திருப்தி தருகிறது என்பதைப் புரட்டிப் புரட்டிப் போட்டு பார்த்து பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி, அவற்றுள் சிந்தைக்குக் கிளர்ச்சி தரும் பாதையை கண்டுபிடித்துக் கொள்ளவைக்கும் இடம் இது.

இந்த நகரத்தில் நீங்கள் சுட்டால் மற்ற தானியங்கி ரோபாட்டுகள் சாவார்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகாது. கனவுக்கன்னியும் கிடைப்பாள்; குத்தாட்டக்காரியும் கிடைப்பாள். குழந்தைப் பாசமும் கிடைக்கும். அம்மாவின் அரவணைப்பும் கிடைக்கும். விடிய விடிய ஆடலாம்; பாடலாம்; குடிக்கலாம். பிறன்மனை நோக்கலாம்; கையைப் பிடித்து இழுக்கலாம்; தட்டிக் கேட்போரை கொலை செய்யலாம். சாகசப் பயணங்கள் மேற்கொள்ளலாம். வீரதீரச் செயல்களைச் செய்யலாம். மலையேறலாம். பாம்பாட்டி ஆகலாம். பெரிய நகரங்களை உருவாக்கி மேயர் ஆகலாம்.

இப்படிப்பட்ட விளையாட்டு நகரத்தில் மனிதர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்? இயந்திர மனிதர்களின் மூளையை அழித்துவிட்டாலும் அந்த கணினிகள் எப்படி இயங்கும்? இவ்வளவு நிரலிகளையும் மேய்க்க, அதற்கான அடுத்த மேம்பட்ட மென்கலன் கொண்டு புது விஷயங்களை அடிக்கடி எல்லா நிரலிகளிலும் உருவாக்க, இயந்திர தற்கற்றல் தேவை அல்லவா? (தொடர்புள்ள கட்டுரை: இயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை) இதை நிர்வகிக்க தானியங்கி மேலதிகாரியாக ரோபாட்டுகளையே வைத்திருந்தால் அவை எப்படிப்பட்ட சித்தாந்தச் சிக்கலில் சிக்கும்? (தொடர்புள்ள கட்டுரை: உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?) மனிதனின் வக்கிரங்களுக்காக பிற பொருள்கள் நாசமாகலாமா? இது போன்ற கேள்விகள் எதுவும் நேரடியாகக் கேட்கப்படுவதில்லை. இயந்திர மனிதரின் தனி மனித உரிமை கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இருந்தும் கணிப்பொறிகளையும் அதன் நிரலிகளையும் அவற்றின் இயங்குதன்மையும் அறிந்த நம்மால் வருங்காலத்தை நம் கற்பனையில் ஊகிக்க போதுமான நுட்பமான சிந்தனைகளை உள்ளடக்கிய தொலைக்காட்சித் தொடர் – வெஸ்ட்வோர்ல்ட்.

இரட்டை அறை மூளை

ஆர்வர் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.

பொருள் : மிக்க அன்புடையவர் இறைவனை உணர்வர். அன்பினால் உண்டாகும் மனம் நெகிழ்வுடையார் விந்து நாதமாகிய திருவடிகளைச் சிரசில் சூடுவர். சம்சாரமாகிய சுமையைத் தாங்கி வருந்துபவர் பிறவியாகிய சாகரத்தில் உழல்வர். அன்பில்லாத அவர் துன்பமாகிய காட்டகத்தே நெறியறியாது திண்டாடுவர். கொங்கு – காடு.

திருமூலர் | அன்புடைமை – திருமந்திரம் : முதல் தந்திரம் (பத்தாம் திருமுறையில் பாடிய பாடல்)

 

ரோபாட்டுகளில் குணாதிசயங்களைக் கீழ்க்கண்டவாறு பிரித்து, அதற்கான பண்புகளை இங்கே உள்ளவற்றின் கலவையாக உருவாக்குகிறார்கள்:

1. நகைச்சுவை உணர்வு
2. பணிவு
3. கிளர்ச்சியுடைமை
4. ஒருங்கிணைத்தல்
5. தன்னடக்கம்
6. குரூரம்
7. வாழ்வூக்கம், தன்னுயிர்க்காப்பு
8. பொறுமை
9. முடிவெடுக்கும் ஆற்றல்
10. கவர்ச்சி
11. அறிவார்வம்
12. ஆக்கிரமிப்பு எழுச்சி
13. பற்றுறுதி, நன்றியுடைமை
14. பச்சாதாபம், புரிந்துணர்வு
15. விடாப்பிடியான சுயநிலை காக்குதன்மை
16. வீரம்
17. கற்பனைத்திறன்
18. காம உணர்வு
19. வெளிப்படையான நடுநிலை, பாரபட்சமின்மை
20. முன்னறிவோடு எண்ணங்களை ஒன்றுகோர்த்து அறிவொடு புணர்தல்

இதில் சில மாண்புகள் ஒன்றோடன்று முரண் ஆனது.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மானுடமே மாபெரும் பேரழிவை எதிர்நோக்கி இருந்தது. எங்கு பார்த்தாலும் பசி, பட்டினி. வறுமையின் கோர தாண்டவம் நிலவியது. பல லட்சம் பேர் உணவின்றி செத்துக் கொண்டிருந்தார்கள். உலகத்தில் உள்ள அறிவியலாளர் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ‘ஏதாவது கண்டுபிடியுங்கள்! அமுதசுரபியைக் கொண்டு வாருங்கள்!’ என்கிறார்கள். ஃப்ரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) என்பவரும் கார்ல் பாஷ் (Carl Bosch) என்பவரும் அந்த காமதேனுவை உண்டாக்குகிறார்கள். காற்றில் இருந்து ரொட்டியை தயாரிக்கிறார்கள். மாநகரத்தைப் போன்ற ஆலைகளைக் கட்டுவதற்கு கால்கோள் இடுகிறார்கள். உலகமெங்கும் உணவுப் புரட்சியை உருவாக்குகிறார்கள். இன்றும் ஹேபர் – பாஷ் செய்முறை இருநூறு கோடிக்கணக்கானோரின் பசிப்பிணியைப் போக்குகிறது.

ஆனால் அதற்கான விலை என்ன? அதே ஹேபர்-பாஷ் செயல்முறையினால் வெடிமருந்து தயாரிக்கிறோம். பெரிய குண்டுகளை உண்டு பண்ணுகிறோம். இவர்களின் கண்டுபிடிப்பினால் உலகப் போரில் மட்டும் லட்சக்கணக்கானோரைக் கொன்றோம். அவர்கள் வாழ்நாளிலேயே தங்களின் அறிவியல் கண்டுபிடிப்பு நாசவேலைக்கும் துணைப்போவதை கண்ணுற்றார்கள். அதனால் விரக்தியும் வெறுமையும் அடைந்தார்கள். கேலிக்குள்ளானார்கள்; கொடூரர்களாக சித்தரிக்கப் பட்டார்கள். பரிதாபமாக இறந்தார்கள். இன்றும் இவர்களின் கண்டுபிடிப்புகள், உப்புவளி (நைட்ரஜன்) மாசுபடுத்தலுக்கான முக்கிய தோற்றுவாயாக இருப்பதை பார்க்கிறோம். உலகில் பருமனானோர் பெருகுவதற்கும் இவர்களை நோக்கி சுட்டுவிரல் நீள்கிறது. அவர்கள் நினைத்தது பசியாற்றல்; ஆனால், மனிதரின் மண்ணாசை எதிலோ கொண்டு போய் முடிந்தது.

நம் உடல் என்பது கரிமம் (கார்பன்), நீர்வளி ஹைட்ரஜன் மற்றும் பிராணவாயு ஆக்சிஜன் ஆகிய வாயுப்பொருள்களின் திடப்பொருளாக உருவமாக அமைந்திருக்கிறது. இவை எல்லாமே காற்றில் மிதக்கிறது; கிடைக்கிறது. கையில் சிக்குவதில்லை. செடி கொடிகளிடமிருந்து கரிவளி வெளியாகிறது. காற்று மண்டலத்தில் இருந்து பிராணவாயு பெறுகிறோம். தண்ணீரில் இருந்து நீர்வளி அடைகிறோம். இதனுடன் மிக முக்கியமான நான்காவது வேதிப்பொருள் – உப்புவளி (நைட்ரஜன்). நம்முடைய டி என் ஏ தீர்மானிக்கப்படுவது முதல் மரபணுவின் கையெழுத்து வரை எங்கும் வியாபித்து இருக்கிறது. உப்புவளி (நைட்ரஜன்) ஒரு பச்சோந்தி. எதனுடன் சேர்கிறதோ அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும்; எவருடனும் பிணையும். ஆனால், அதைப் பிடித்து நிறுத்துவது எப்படி? மூச்சுக்காற்றில் இரண்டறக் கலந்திருக்கும் உப்புவளியை உரமாக்கி நிலத்தில் பாய்ச்சினால்தான் மண்வளம் பெறும். ஆனால், ஆவியாகா உப்புவளியை எப்படி நிலைநிறுத்துவது. இதைத்தான் ஹேபர் – பாஷ் செய்முறை என்கிறோம். அவர்கள் நினைத்தது மண்வளம். ஆனால், ஹிடலருக்கோ அது எரிபொருள் தந்தது; குண்டு போட்டுக் கொல்ல வைத்தது.

இதே போல் நம்மால் இப்படி பயன்படுத்த வேண்டும் என்னும் கருதுகோளில் நான் மென்பொருள் எழுதுகிறேன். நாம் தயாரித்த நிரலி இவ்வாறு இயங்க வேண்டும், இப்படித்தான் உபயோகிக்க வேண்டும் என்றும் பயனர்களிடம் சொல்லிவைக்கிறேன். ஆனால், அதையும் தாண்டி பல்வேறு விஷயங்களுக்கு அதை உபகரணமாக்குவதை நம்மால் தடுக்க முடியாது. (தொடர்புள்ள கட்டுரை: ஒரு கணிதையின் கதை) இன்ன பயனுக்காக வெளியிடும் பயன்பாட்டுச்செயலி பிறிதொன்றுக்காக பிறர் பயன்படுத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

உங்கள் வீட்டின் வரவேற்பறையில் விளையாடுவதற்காக மைக்ராசாஃப்ட் நிறுவனம் எக்ஸ். பாக்ஸ் 360 + கினெக்ட் விற்றார்கள். நான்கு கேமிராக்கள் கொண்டு உங்களின் ஒவ்வொரு அசைவையும் ஆராயும் கருவி அது. உங்களின் கையசைவிற்கேற்ப செய்கைகளைப் புரிந்து கொண்டு, கணினியில் உங்கள் கதாபாத்திரத்தை ஓடவைக்கலாம்; ஆட வைக்கலாம். ஆனால், அதை எடுத்துக் கொண்டு மருத்துவத்துறை பயன்பாடுகளுக்காக பல அறுவை சிகிச்சையாளர்கள் மாற்றி இருக்கிறார்கள். ஒரு மருத்துவரின் கணிப்பிற்கும் இன்னொரு மருத்துவரின் கணிப்பில் இருக்கும் வித்தியாசங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவும், வீட்டிலேயே சோதனைகளைச் செய்யவும், எங்கோ தூரதேசத்தில் இருந்தாலும் அவரவரின் வீட்டிற்குள்ளேயே நவீன உடல்நல சிகிச்சையாளர்களின் உன்னத கவனிப்பைப் பெறுவதற்கும் மைக்ராசாஃப்ட் கினெக்ட் உதவுகிறது.

நம் கையில்தான் கணினி இருக்கிறது. கணினி சொல்படிதான் நாம் நடக்கிறோம். கையில் இருக்கும் செல்பேசியில் இருக்கும் கூகுள் நிரலியிடம் மழை பொழியுமா என்று கேட்கிறோம். அதுவும் ‘குடை எடுத்துக் கொள்!’ என்று செல்லமாகச் சொல்கிறது. வெளியே நல்ல வெயில் அடிக்கிறதே என்று குடையில்லாமல் சென்றுவிட்டு, மழையில் சொட்ட சொட்ட நனைந்து, அதில் ஜலதோஷம் பிடித்துக் கொள்கிறோம். அந்த ஜலதோஷத்தை பஸ்ஸில் கூட வரும் முதியவரின் மீது தும்மி தொற்று நோயாக்கி விடுகிறோம். இதை அந்த முதியவரின் செல்பேசி கவனித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த முதியவர் இறந்து விடுகிறார். இப்போது அந்த செல்பேசி உங்கள் செல்பேசியுடன் பேசி, உங்களைப் பழி வாங்க முடியுமா? உங்களால் உலகிற்கு உபத்திரவம் என்றால், அந்த உயிரை எடுக்கலாமா, வேண்டாமா?

இது வெஸ்ட் வோர்ல்ட்-இல் சொல்லப்படாத கதை. ஆனால் கூடிய சீக்கிரமே நடந்தேறக்கூடிய கதை.
bicameral_brain_1

ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சித் தொடருக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் (Julian Jaynes) எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.