மேற்கத்திய உலகில் இருக்கும் அனேக இந்தியர்கள் கணினித்துறையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிரலி எழுதுகிறார்கள். ஐ-போன் வைத்திருக்கிறார்கள். பி.எம்.டபிள்யூ போன்ற கார் ஓட்டுகிறார்கள். கூகுள் தொலைக்காட்சிப் பெட்டி உபயோகிக்கிறார்கள். முதல் நாள், முதல் காட்சியில், நெடிய வரிசையில் கால்கடுக்க நின்று எக்ஸ் மென், அயர்ன் மென், போன்ற ஹாலிவுட் படங்கள் பார்க்கிறார்கள். சாதாரணமாக கீக் (geek) என்று சொல்ல இவை போதுமானது.
ஆனால், உண்மையான கீக் என்பதற்கு சில சாமுத்ரிகா லட்சணங்கள் இருக்கின்றன.
அறிவியல் புனைவுகளை அதிகம் படிப்பது முதல் தகுதி. எச்.பி.ஓ.வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) வருவதற்கு பன்னெடுங்காலம் முன்பே அவற்றை வாசிப்பது கீக் பட்டத்திற்கான எல்.கே.ஜி. படிக்கட்டு. ஸ்டார் வார்ஸ், ஸ்டார் ட்ரெக், டாக்டர் ஹூ எல்லாம் பார்ப்பது யூகேஜி. ஜப்பானிய மாங்கா படங்கள், நெட்ஃப்ளிக்ஸின் இண்டு இடுக்கில் ஒளிந்திருக்கும் மேட்ரிக்ஸ் கார்ட்டூன் என மூன்னேறலாம். எக்ஸ் பாக்ஸ், ப்ளேஸ்டேஷன் எல்லாம் வைத்துக் கொண்டு, அதன் புகழ்பெற்ற, பெறாத கணி விளையாட்டுகளில் சாதனையாளர் பட்டம் பெறுவது கீக் பள்ளிக்கூடத்தைத் தாண்ட வைக்கும். நேரப்பயணத்தை (time travel) திட்டமிடுதல்; டஞ்சன்களும் டிராகன்களும் விளையாட்டை ஒருங்கிணைத்தல் ; Tor உபயோகித்து இணையத்தின் உள்ளரங்குகளில் உலவுதல்; காமிக் கான் (Comic-Con) கூட்டத்திற்கு தவறாமl செல்லுதல்; எப்பொழுதும் ஹவாய் செப்பலுடன் (சாலையில் தண்ணீர் ஊற்றினால் பனிக்கட்டி ஆகிவிடுமே, அந்தக் கடுங்குளிரில் கூட) முண்டா பனியனில் தலை சொறிய வைக்கும் சொற்றொடருடன் எவரொருவர் உலா வருகிறாரோ – அவரே முழுமையான கீக்.
இதன் ஒரு அங்கமாகத்தான் மைன்கிராஃப்ட் (Minecraft) எனக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இது எந்த மாதிரியான விளையாட்டு?
சதுரம் சதுரமாக பொட்டிகளை உடைத்து, அதை சேமித்துக் கட்டும் கலை. உங்களால் பிரும்மாண்டமான கோட்டை எழுப்ப முடியும். கோவில் கட்டலாம். மாபெரும் மலைகளை உருவாக்கலாம். தோண்டத் தோண்ட வளரும் ஆழ்துளைகளில் பூதங்களை உலவ விடலாம். திடீரென்று சாத்தான்கள் எட்டிப் பார்க்கும். வெள்ளம் வரலாம். எரிமலைக்குள் விழுந்து விடலாம். தப்பித்து ஓட வேண்டும். இருட்டிய பிறகு, பாதுகாப்பாக இருக்க, அரண்கள் ஏற்படுத்த வேண்டும். மற்றபடிக்கு, மற்றவர்கள் என்னவெல்லாம் கட்டியிருக்கிறார்கள், எப்படியெல்லாம் கற்பனைகளை கணித்திரையில் மிரட்டியிருக்கிறார்கள் என பராக்கு மட்டுமே கூட பார்த்து காலம் கழிக்கலாம்.
எல்லா விளையாட்டுகள் போலவே கற்றுக் கொள்ளுதல் மிக எளிது. கற்றுக் கொண்ட பின், இன்னொருவரைப் போல், அந்தக் கட்டிடத்தைப் போல் நாமே நமக்குத் தோற்றுவிக்க வேண்டும் என எண்ணுவதும் எளிது. அதை உருவாக்குவது, உருவாக்கியதைப் பாதுகாப்பது, நண்பர்களை அழைப்பது, என் ஒன்றன் பின் ஒன்றாக பதினாறு மில்லியன் மக்களைக் கணினியில் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது மைன்கிராஃப்ட். ஒரே ஒரு விளையாட்டைக் கொண்டு நூறு மில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டி இருக்கிறார்கள்.
மார்கஸ் பெர்ஸ்ஸ்ன் (Markus Persson) என்பவரால் 2009ஆம் ஆண்டு அறிமுகம் ஆனது. ”இதென்ன, வெட்டுவதும், தோண்டுவதும்?!” என வந்த புதிதில் வெகு சிலரே உபயோகித்தார்கள். 2011 வாக்கில் அரசல் புரசலாக அலுவலில் பேசிக் கொண்டார்கள். ”சிவந்த கண்களுக்கு என்ன காரணம்? ஃபைட் கிளப் மாதிரி எங்காவது சென்றாயா?” என சகாக்களைக் கேட்டபோது குசுகுசுவென ‘மைன் கிராஃப்ட்’ விடை கிடைக்கப் பெற்றேன்.
துவக்கத்தில் கணினி வல்லுநர்களுக்கு மட்டுமே மொழுதுபோக்காக இருந்த விளையாட்டு, இப்போது, மெதுவாக, பல்வேறு புனைவுலக கலைஞர்களின் முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. பதின்ம வயதில் எவரைக் கேட்டாலும் ஒரு நாளில் பத்து மணி நேரமாவது உலகை சிருஷ்டிப்பதில் செலவழிக்கிறார்கள்.
வெட்டிய சதுக்கங்களையும் மரக்குச்சிகளையும் கொண்டு விதவிதமாக கருவிகளை உருவாக்குவதில்தான் மைன்கிராப்ட் விளையாட்டின் சூட்சுமம் இருக்கிறது. உங்களுக்குத் தரப்பட்ட 3×3 தளத்தில், நீங்கள் சேமித்த பொருள்களை கலந்து கட்டி, புதுமையான ஆயுதங்களை வடிவமைக்க வேண்டும். சமையற்குறிப்புகள் மாதிரி இந்த இரகசியங்களை சொல்லிக் கொடுக்கவே சில வலையகங்கள் இருக்கின்றன. அவையும் கை கொடுக்கும்.
இதற்கெல்லாம் எது ஆரம்பம்? தமிழில் ஒரு திரைப்படம் வெளிவந்தால், அதன் மூலம் எங்கே என தேடுவோமே… அந்த மாதிரி மைன்கிராஃப்டின் ஆதி மூலம் எங்கே இருக்கிறது?
அதன் பெயர் டிவார்ஃப் ஃபோர்ட்ரெஸ் (Dwarf Fortress). உங்களின் கணித்திரையெங்கும் வண்ண வண்ணமாக எண்ணும் எழுத்தும் இருக்கும். இது ஓவியங்களும் படங்களும் அறவே இல்லாத பத்திர பூமி. சித்திரக்குள்ளர்கள் இருப்பார்கள். அவர்களைக் கொண்டு மதிற்சுவர்கள் எழுப்ப வேண்டும்; மீன் பிடிக்க வேண்டும்; வேட்டையாட வேண்டும்; சமைக்க வேண்டும்; அரிய கனிமங்களை சேமிக்க வேண்டும். நாச சக்திகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கில் கூட என்னை அடிக்கடி ‘ஃபார்ம்வில்’ (FarmVille) விலையாட வா… வா… என அழைக்கிறார்கள். அந்த விளையாட்டும், கிட்டத்தட்ட இதே தாத்பர்யம்தான்.
ஆனால், சில வித்தியாசங்கள் உண்டு!
சாதாரணமாக கணினி விளையாட்டு என்றால் அதில் வரும் மிருகங்களின் நகம் கூட ஜொலிக்கும். மேற்படி குள்ளர்களின் கோட்டையில் வைரமும் வைடூரியமும் கூட வெறும் “£” குறி காட்டி முடித்து விடுகிறார்கள். பயமுறுத்தும் நட்டுவாக்கலிகளுக்கு பழுப்பு நிறத்தில் “S”. படுக்கையைக் குறிக்க வெளிறிய மஞ்சள் நிற “+”. மரங்களுக்கும் செடி கொடிகளுக்கும் பச்சை நிற புள்ளிகளும் முக்கோணங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். சிரிப்பான்களைக் கொண்டு குள்ளர்களை அடையாளம் காண்கிறோம். ‘கற்பனையை விட எது பெரிய பயமுறுத்தும் சக்தி’ என்பதுதான் இதை உருவாக்கியவரின் வாதம்.
கற்பனையில் எதை வேண்டுமானாலும் உண்டாக்கலாம் என்பதற்கு இந்த விளையாட்டு முன்னோடியாக இருந்தது. இங்கிருக்கும் நாலைந்து மூலப் பொருள்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான பாதைகளும் வழிகளும் குழப்பங்களும் உருவாக்கலாம் என்பதை இந்த ஆட்டம் நடைமுறையில் விளக்கியது.
இன்னொரு முக்கிய வித்தியாசம்: பெரும்பாலான கணினி விளையாட்டுக்களில் முடிவு என்று ஒன்று இருக்கும். கடைசி குகை, இறுதி கதவு என்று ஒன்று கண்டுபிடித்தால்… அவ்வளவுதான். ஆட்டம் முடிந்தது. பள்ளிக்காலத்தில் ப்ரின்ஸ் ஆஃப் பெர்சியா அடும்போது, பன்னிரெண்டாம் கட்டத்தை முடித்தவுடன் வெறுமையாக இருந்தது. “இதற்குத்தானே ஏமாற்றி விளையாடினாய் பாலாஜி!” என சோகம் கலந்த கோபம் வந்தது. அதெல்லாம் இந்த இந்த மைன்கிராஃப்ட் போன்ற விளையாட்டுகளில் ஏற்படாது. கட்டுங்கள். கட்டியதை சீரமையுங்கள். பிறர் கட்டுவதைப் பாருங்கள். பயணித்துக் கொண்டே இருங்கள் என்பதுதான் இதன் இலட்சியம்.
மார்க்க்ஸ் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் போது அவருடைய பள்ளி ஆலோசகரிடம் செல்கிறார். அவருடைய ஆலோசகரும், “கல்லூரியில் என்ன படிக்கப் போகிறாய்? என்னவாகப் போகிறாய்?” என வினவுகிறார். இவரோ, “எனக்கு கணினி விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்! எனவே அவற்றை எழுதப் போகிறேன்!” என சொல்கிறார். பள்ளி ஆச்சாரியரும் அவருக்குத் தெரிந்த நல்ல வார்த்தையெல்லாம் சொல்லி அந்த வழியில் சென்றால் உருப்பட மாட்டாய் என உபதேசித்து அனுப்பியிருக்கிறார்.
இவருடைய வழிகாட்டுனர் சொன்னதையும் மீறி காலை 9 முதல் ஐந்து வரை அலுவலில் வேலை பார்த்துவிட்டு, குளிரான ஸ்வீடனின் இரவு நேரங்களில் மைன்கிராஃப்ட் உருவாக்குகிறார் மார்க்கஸ். அதன் வெற்றியின் வாசனையை சற்றே முகர்ந்தவுடன் வேலையை விட்டு விட்டு முழுக்க இறங்குகிறார். அவருடன் பணிபுரிபவர்கள், இந்த மாதிரி ஸ்திரமான உத்தியோகத்தை விட வேண்டாம் என அறிவுறுத்தலை புறக்கணித்து களத்தில் முழுமூச்சாக இறங்குகிறார்.
இன்று மைன்கிராஃப்ட் அலுவலகத்தில் மொத்தம் பதின்மூன்றே பேர்கள்தான் வேலை செய்கிறார்கள். இத்தனைக்கும் ஆண்டிராய்ட், ஐ போன், ஐ பேட், எக்ஸ் பாக்ஸ், என எல்லாக் கருவிகளுக்கும் மைன்கிராஃப்ட் கிடைக்கிறது.
ஆனால், மைன்கிராஃப்ட் என்றால் மார்க்கஸ் மட்டும்தான் தெரிகிறார். விளையாட்டு குழுமங்களில் இவருடைய புனைப்பெயர் நாட்ச் (Notch). நாட்ச் என்றால் நவீன மொழியில் ’யேசுவிற்கு இன்னொரு பெயர்’ என்று அர்த்தமாகிறது. திரைப்படங்களில் யாருடைய இயக்கம் என பார்க்கிறோம், கிறிஸ்டொபர் நோலன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் என்றால் தனி மரியாதை. ஃபாக்ஸ் வெளியிடுகிறதா, சோனி தயாரித்ததா என கவனிப்பதில்லை. ஒலிக்கோப்பு வாங்கும்போது, இளையராஜாவா, ஏ. ஆர். ரெஹ்மானா எனப் பார்க்கிறோம். எச்.எம்.வி. வெளியிட்டிருக்கிறதா, எக்கோ போட்டிருக்கிறதா என்பது முக்கியமேயல்ல. ஆனால், கணினி விளையாட்டில் அப்படி கிடையாது. எந்த நிறுவனம் வெளியிடுகிறதோ, அவர்களின் பெயரே பிரதானமாக இருக்கும். EA என்கிறார்கள்; ஜிங்கா என்பார்கள்; ஆக்டிவிஷன் என்பார்கள். மார்க்கஸ் வந்த பிறகுதான் ‘இது மார்க்கஸ் உருவாக்கம்’ என்கிறார்கள்.
மைன்கிராஃப்டில் இருக்கும்போது, ‘உலகம் ரொமப் பெருசு மாமே!’ என எண்ணவைக்கிறது. இத்தனை பேர் நிறைந்த பொம்மை ஜகம் கண் முன்னே விரியும் போது, ‘என்னத்தப் பார்த்து, எதக் கட்டி, எப்படி எல்லாத்தையும் முடிக்கப் போறே!’ என மலைப்பு வரும். கூடவே இரவு முழுக்க, விடிய விடிய நாமும் ஏதாவது புத்தம்புதியதாக உருவாக்கும் உந்துதல் அடைகிறோம்.
மகாபாரதம் மாதிரி மைன்கிராஃப்ட் உருவாகியிருக்கிறது. ஆங்காங்கே கிளைக் கதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தாத்பர்யம் இருக்கிறது. போர் உண்டு. வரைபடங்கள் உண்டு. வில்லன்கள் உண்டு. கண்ணக் கட்டிய மன்னனாக கதை எங்கே ஆரம்பிக்கிறது, எப்பொழுது முடியும் என்றும் தெரியவில்லை. ஆபத்துகளும் இரகசிய பாதைகளும் வரங்களும் சாபங்களும் நிறைந்திருக்கின்றன. மொத்தத்தில் பொழுது போவதே தெரிவதில்லை.
மைன்கிராஃப்ட் குறித்த ஆவணப்படம்: https://www.youtube.com/watch?v=wxrrKkfRHvs
http://www.wired.co.uk/magazine/archive/2012/07/features/changing-the-game/viewall
http://www.wired.co.uk/magazine/archive/2012/07/features/changing-the-game
http://www.wired.com/2013/11/minecraft-book/all/
http://www.polygon.com/2014/4/29/5665834/minecraft-sales-15m-copies-pc