Daily Archives: ஜனவரி 3, 2015

bruce sterling interview

http://www.40kbooks.com/?p=13726

கோரி டாக்டொரொவ்: தொழில்நுட்பத்தினால் உலகம் மெருகேறியுள்ளதாக உணர்கிறீர்களா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போல் மனிதர் அல்லாத எந்த ஜீவனிடமும் இந்தக் கேள்வியை கேட்டால், அதன் கோணத்தில் பார்த்தால், சர்வ நிச்சயமாய் ’முன்னேறவில்லை’ என்பதுதான் பதில். நிறமிழந்த முயல்களும் மரபணு ஒட்டு போட்ட புகையிலைச் செடிகளும் ‘ஆமாம்’ வாக்கு போடலாம். தொழில்நுட்பம் என்னும் வார்த்தையை புழங்க ஆரம்பித்த கிரேக்கர்கள் காலம் துவங்கி வாழ்ந்து வரும் பவளப் பாறைகளிடமோ கற்பகத்தரு மரங்களையோ கேளுங்கள். நிறைய சோகக் கதைகளை கேட்பீர்கள்.

மாத்யூ பாட்டில்ஸ்: நாளைக்கு என்ன நடக்கும் என்று எண்ணுவதே மனிதனின் நித்திய கலக்கம். வருங்காலம் இப்படி சொக்குப்பிடி போட்டு வைத்திருப்பதில் பிரத்தியேகமாக எதாவது உண்டா?

புரூஸ் ஸ்டெர்லிங்: நம்மைப் போன்ற புதிய தலைமுறையிnar, சரித்திர காலத்தில் இருந்து வரும் ஜோசியர் கையில் எதிர்கால ஆருடங்களை ஒப்படைக்க மாட்டோம். சமீபகாலமாக, வருங்கால ஆருடம் என்று பார்த்தால் நிறைய விஷயம் இருக்கிறது. முதலாவதாக, “வளர்ச்சி” என்றால் என்ன என்றே இப்பொழுது தெரியவில்லை. நம் பழமைவாதிகள் எல்லோரும் புரட்சியாளராகி விட்டார்கள். முற்போக்காளர்கள் எல்லோரும் பழமைவாதிகளாகி விட்டார்கள்.

நம்முடைய எல்லா வகையான சமூகப் போக்கு குறித்தும் அனைவரின் பழக்கவழக்கங்கள் குறித்தும் சேதி சேகரிக்க விரும்புகிறோம். முன்னெப்போதும் இருந்ததை விட அதி பிரும்மாண்டமாக, ஒவ்வொருத்தருடைய அந்தரங்க வாழ்க்கையையும் சமூகச்சங்கிலித் தொடர்புகளையும் கோர்த்து விஷயங்களை பெரிய அளவில் சேமிக்கிறோம். புதுக்கருக்கு இன்னும் போகாமல் இருப்பதால் இப்பொழுது இதில் நிறைய ஆர்வம்; இதெல்லாம் பயனுள்ளதாக மாற்றும்வரை இதில் நமக்கு ஆச்சரியம் இருக்கும்.

ஜியுஸெப்பி கிரானியெரி: உங்களுடைய ‘காதல் விநோதாமானது’ புத்தகத்தில் காவின்ஸ் சொல்வார்: ‘நான் கணினி கிறுக்கன் போல் ஆடை அணிவதில் கவனம் செலுத்தாதவனாக இருக்கலாம்; ஆனால், என்னால் மக்களின் போக்குகளை கணிக்க முடியும்.’ உங்களால் அடுத்த ஐந்தாண்டுகளில் கவனிக்கப்பட வேண்டிய ஐந்து போக்குகளை பொறுக்க முடியுமா?

புரூஸ்: உங்களுடைய கற்பனையை எப்படியாவது குதிரையாக்கினால்தான் என்னுடைய வருங்கால போக்குகளை பொறுக்கமுடியும்.

எதிர்கால கணிப்புகளிலேயே மிக மிக முக்கியானதென்றால், அது வானிலை மாற்றம். மனிதருக்கு அதைப் பார்ப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. குற்றவுணர்ச்சியால் குமைகிறார்கள்; அல்லது தோள் குலுக்கி கண்டுங்காணாமல் ஒதுக்குகிறார்கள். ஆனால், நாளைய தேதியில் பெரிய வித்தியாசத்தை, வேறு எந்த சமகால நிகழ்வை விட வெகு ஆழமான பாதிப்பை உருவாக்குவதென்றால், அது இதுதான்.

தனிப்பட்ட முறையில் பார்த்தால், எனக்கு பல விஷயங்களில் நாட்டம் உண்டு. அமெரிக்காவில் தோன்றாத ஆனால் உலகத்தின் பிற நாடுகளின் புகழ் பெற்ற இசை பிடிக்கும். அருகிப் போன ஊடக சாதனங்களை நோட்டமிடுவேன். எண்வய மிடையத்தில் தோன்றும் புதுப் புது கணிமொழிகள் கற்பேன். ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் கணிப்பொறிகளை விரும்புகிறேன். இணையத்தின் பொருளாக ஒவ்வொரு பொருளிலும் நீக்கமற இணையம் நிறைந்திருக்கும் சாத்தியத்தினை ஆராய்கிறேன்.

உலகத்தில் இதெல்லாம் முக்கியமான போக்குகள் அல்ல. ஆனால், எனக்கு முக்கியமாகப் படுபவை. புரிந்து கொண்டு, ஆழமாகப் படித்து அறிந்து கொள்ள விரும்புபவை. இவை எல்லாமே என்னுடைய வலைப்பதிவில் முக்கியமானதாகவும் அடிக்கடி எழுதப்படுவதாகவும் இருக்கிறது.

இந்த உலகம் முழுக்க பல்வேறு போக்குகாளால் ஆனவை. ஆயிரக்கணக்கில் புத்தம்புது பாதைகள் இருக்கின்றன. ஆனால், ஒன்றே ஒன்றை எடுத்து அதனுள் சென்றால்தான், அந்த நுட்பத்தின் சூட்சுமத்தை நம்மால் பயன்படுத்திக்க முடியும்.

உதாரணத்திற்கு புகை பிடித்தால் உடல்நலம் கெடலாம் என்பதை எடுத்துக்கலாம். அனைவரும் அதை சொல்கிறார்கள். இவ்வளவு ஏன்… அந்த சிகரெட் பாக்கெட்டிலேயே புற்றுநோய் படம் எல்லாம் போட்டிருக்கு. எனவே, விளைவுகளில் எந்த ரகசியமும் இல்லை. ஆனால், முழிப்பு வருகிற வரைக்கும் விடப்போவதில்லை. நமக்குனு வந்துச்சுனாத்தான் வெளங்கும். இது ஒரு பாதிப்பு. அது நம்மைத் தாக்கி உணரவைக்கிற வரைக்கும் தெரியப் போவதில்லை. இப்படித்தான் ஒவ்வொரு ‘போக்கு’ம். நமக்கு அந்தப் போக்கின் விளைவுகள் சொந்தமாவதற்கு நாம் அது கூட உறவாடணும்.

கோரி டாக்டொரொவ்: கணினியில் உருவாக்கும் ஓவியத்திற்கும் பேப்பரில் வரைவதற்கும் நடுவே உள்ளே பிரிவினை என்றாவது இல்லாமல் ஆகுமா? அல்லது ஏற்கனவே மின்னணுவியல் கலைக்கும் துணியில் தீட்டும் கலைக்குமான வித்தியாசங்கள் நீங்கிவிட்டதா?

புரூஸ்: இந்த பாகுபாடு எல்லாம் பாம்பு இரப்பை மாதிரி. மோனே, வான் கோ மாதிரி புகழ்பெற்ற ஓவியர்களின் வேலையை வாங்குவதற்கு ஏலப் போட்டி எதை வைத்து நடக்கிறது? அந்த ஓவியத்தின் கணினி பிரதியை வைத்துதானே.

மின்னணுவியல் கலைகளில் ஒரு வகையை மட்டும் சர்வ நிச்சயமாய் “மின்னணுவியல்” என்று பொதுமைப்படுத்தலாம் — அந்த கலை வடிவத்தில் கம்பிகள் காணக் கிடைக்கும்; மின்சக்தி பாயும்; நிஜமாகவே ஷாக் அடிக்கலாம். அந்த மாதிரி கலைப் படைப்பு நீடித்த தாக்கத்தை உண்டாக்காது.

ஆனால், எப்பொழுது இது துவங்குகிறது? எங்கே முடிகிறது? இந்த அனுபவத்தை சொல்லால் அளந்து விடுவது மிகவும் சிரமமான காரியம். விழியங்கள் எப்பொழுது கலை உன்னதத்தைத் தொடுகிறது? படம் பார்த்த பின்பு அந்த படத்தின் பாதிப்பு எப்பொழுது தீர்ந்து போகிறது?

ஐ-போனில் கிடைத்த அனுபவத்தையும் கம்பிப் பின்னல்களின் நடுவே குவிந்து கிடக்கும் கம்ப்யூட்டர் கலைத் தோற்றங்களையும் கணிமொழியில் நிரலியாளர் நிகழ்த்திய அற்புத சாத்தியங்களையும் எப்படி அந்த விஷயங்களின் நுட்பங்களை தோற்றமும் மறைவும் என்று அறுதியிட்டு பகிர முடியும்?

முன்பு நாடகம் இருந்தது. அது மட்டுமே கலை. இப்பொழுது சினிமாவும் அதற்கு நிகரான கலை. நாளைக்கு மின்னணுவியலில் உருவானவை மட்டுமே கலாவடிவமாகுமா என்பதை மேடையில் கூத்து கட்டின காலத்தில் திரைப்படம் கலையாக ஆகுமா என்று வினவுவதற்கு ஒப்பிடலாம்.

எனக்கு அப்படி மின்கல கலைக் காலத்தை கற்பனை செய்ய இயலுகிறது. ஆனால், நிஜத்தில் நிகழுமா என்றால் மாட்டேன் என்று மனசு சொல்கிறது. ரத்தமும் சதையுமான வடிவத்தை விட்டு விலகும் சமுதாயம் எனக்கு அன்னியமாகப் படுகிறது.

பால் டி ஃபிலிப்போ: எண்பதுகளிலே நீங்கள் அறிவியல் புனைவுகளை எழுத ஆரம்பித்ததற்கு பதிலாக, இன்றைக்கு நீங்கள் அறிபுனை எழுத்தாளராக எழுதத் துவங்கினால், என்ன உத்தியை உபயோகிப்பீர்கள்? புதிய அறிபுனை எழுத்தாளர்களுக்கு தங்கள் பெயரை பரவலாக்க, புகழ்பெற எந்த வியூகம் சரியானது? சுருக்கமாக சொன்னால், 2013ன் நிதர்சனங்கள் என்ன?

புரூஸ்: இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி. ஒரு விஷயத்தை மட்டும் சிருஷ்டிகர்த்தாவாக பிடித்துக் கொண்டு காலந்தள்ளுவதென்பது இப்பொழுது இயலாதது. இன்றைக்கு அறிபுனை படைப்பாளியாக கலக்க வேண்டுமானால் உங்களுக்கு வலைப்பதிய தெரிய வேண்டும்; கருத்தரங்குகளில் பேச வேண்டும்; காமிக்ஸ் உலகிலும் வளைய வர வேண்டும்; கொஞ்சம் தொலைக்காட்சி; கொஞ்சம் சினிமா…

அறிபுனை எழுத்தாளராக இருந்து கொண்டு புத்தகங்கள் போட்டு, பத்திரிகைகளில் மட்டும் எழுதிக் கொண்டிருந்ததெல்லாம் இறந்த காலமாகிப் போயாச்சு.

எழுத்தாளராவதற்கான முதல் அடி என்பது உங்களுக்கு என்ன வாசிக்க பிடித்திருக்கிறதோ, அதைப் பற்றி எழுதுவது. அதற்கு அடுத்ததாக, நீங்கள் எழுதுவதை எவர் கவனமூன்றி வாசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஏன் நீங்கள் எழுதுவதை விரும்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய அதிமுக்கியமான, மிகப் பெரிய அலைகளை உருவாக்கக்கூடிய படைப்புகளுக்கு, எந்த வெளியீட்டாள்ரும் பணம் தரவோ, எவரும் புத்தகமாக வெளியிடவோ வராவிட்டால் ஆச்சரியமே பட வேண்டாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: உங்களுடைய எழுத்து நடையையோ, கதைகளின் கருவையோ, தற்கால கணினி உலகிற்காக மாற்றிக் கொண்டீர்களா? வைய விரிவு வலை காலத்தின் புத்தகத் தயாரிப்பும் விநியோகமும் வாசகரோடு தொடர்பு கொள்ளும் முறையும் மாறினதால் எழுத்தாளருக்கு என்ன பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன?

புரூஸ்: இந்தப் பிரச்சினையால், எண்பதுகளில் இருந்தே என்னுடைய எழுத்துலகம் மிகவும் சிரமதசையில் இருக்கிறது. இணையத்திற்காக நிறைய எழுதுகிறேன்; அதற்கும் என்னுடைய புத்தகங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இந்த கஷ்டத்தின் பின்விளைவுகளை சொல்வது சிரமம். ஆனால், அனுமானித்து வைக்கிறேன்.

என்னுடைய நடை கெட்டுப் போயிருக்கிறது. என்னால் எப்படி எல்லாம் பலவிதமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியும் என்று நான் முழுக்க முழுக்க முனைப்பு எடுத்து பயிலவே இயலவில்லை. ஆனால், அதுவே என்னை விழிப்பாகவும் நெகிழ்வாகவும் வைத்திருந்திருக்கிறது. இதற்கு, தற்கால இசைக் கலைஞரிடம் உள்ள டிஜிட்டல் இசையின் பாதிப்பை ஒப்பிடலாம். நிறைய புதுமையான சத்தங்களை உண்டாக்குகிறார்கள். அவற்றை அவசரமாக உருவாக்குகிறார்கள். ஆனால், அதனால் மட்டும் இசையில் லயிக்க முடிவதில்லை.

என்னுடைய எழுத்தின் மூலம் உலகத்தின் மூலை முடுக்கில் உள்ள அனைவரிடமும் பேச முடிகிறது என்று உணர்ந்தபோது மிகவும் கடமை கொண்ட படைப்பை கொடுக்க முடிந்தது. ஆனால், தேசிய பதிப்பாளரின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் கொண்டு போய்விட்டது. உலக மக்களுக்காக சர்வதேச சந்தையில் புத்தகம் போடும் பதிப்பாளர்கள் கிடைக்காத காரணத்தால் நூல் எழுதி வெளியிடும் ஆர்வம் குறைந்து போனது.

நடுவண் குடிமக்களுக்கு விற்பவர்கள் என்னை மறைத்து ஒதுக்குகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதும் எந்த மேற்கத்திய படைப்பாளிக்கு இந்த மாதிரி புறந்தள்ளல் சகஜமானது. உலகமயமாக்கலின் பொதுப் பிரச்சினை இது.

டெட் ஸ்ட்ரிஃபாஸ், ஜான் சண்ட்மான்: பெருங்கதைகளின் அந்திமக் காலம் நெருங்கி விட்டதாகவும், இனி வரும் காலம் சின்னச் சின்ன கதைகளிலும் குட்டிக் கதைகளை கோர்த்ததாகவும் விளங்கும் என்று சிலர் சொல்கிறார்களே. அதைப் பற்றிய தங்கள் கருத்து என்ன?

புரூஸ்: கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 2062ல் எவராவது ‘2012ஆம் ஆண்டின் மிகச் சிறந்த ட்வீட்கள்’ என்னும் நூலை வாங்கிப் படிப்பாரா? ‘தலை சிறந்த லைக் பட்டியல்’ என்று கற்பனை செய்ய முடியுமா? நான் வலையில் பதிபவன். கலைத்துப் போட்டு தொகுக்கும் விவரணை எனக்கு பிடிக்கும்தான். வலைப்பதிவு என்பது குறைந்த காலத்தில் கெட்டுப் போகும் பதார்த்தம் போன்றது. நீங்கள் வடிவேலுவின் அவ்வ்வ்வ் காமெடியை ரசிக்கலாம்; பகிரலாம்.

டெட் ஸ்ட்ரிஃபாஸ்: நல்ல அறிபுனை எழுத்தாளர்களைப் போல் நீங்களும் புதிய சொல்லாட்சிகளை ஆங்கிலத்தில் உலவ விட்டிருக்கிறீர்கள். தெரிந்த வார்த்தைகளை வித்தியாசமாகக் கலைத்துப் போட்டு புதிய மொழியை உருவாக்குவது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருந்தாலும், தேவைதானா?

புரூஸ்: சமூக மாற்றம் மொழியில் உள்ள போதாமையை உணர்த்துகிறது. அதனால், நான் மொழியை அடுத்த கட்டத்திற்கு தள்ளுவதாக தோன்றுகிறது. உதாரணமாக, ’பொருட்களின் இணையம்’ என்னும் உபயோகத்தை எடுத்துக்கலாம். ’பொருள்’ என்றால் எதைக் குறிக்கிறது? எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் கார், ஃப்ரிட்ஜ், செல்பேசி… இப்படி… எந்தப் பொருளாக வேண்டுமானாலும் இணையத்தின் முழு சாத்தியத்தை உள்ளடக்கி இருக்கலாம்.

அடுத்ததாக ‘ஸ்பைம்’ – விண்வெளிகளில் கால வர்த்த பரிமானங்களை அளப்பதற்கான எளிய சொல். மறு சுழற்சி, முப்பரிமாண உருவாக்கம், பொய்த் தோற்றங்களுக்கான மெய்நிகர் என்றெல்லாம் விலாவாரியாக விளக்குவதற்கு பதிலாக ஸ்பைம் என்று சொல்லிப் போய்விடலாம். வேணுங்கிறவங்களுக்கு இருக்கு.

ஒரு பிரச்சினை இருக்கு; அதைக் குறித்து பேசணும்; பொது வெளியில் பரவலாக விவாதிக்கணும்; அதைக் குறித்து முன் கதை சுருக்கம் எல்லாம் சொல்லாமல் சுலபமாக எல்லோரையும் சென்றடைய வார்த்தை உபயோகங்களை உருவாக்குவதில் என்ன போச்சு? ஆங்கிலத்தில் கொச்சை மொழியில் ஆயிரக்கணக்கான புது கிளைமொழிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

‘பக்கிஜங்க்’ என்று நான் புது வார்த்தை உருவாக்குவதால் ஆங்கிலம் அழிந்துவிடப் போவதில்லை. மறு சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கரிம நுண்குழாய்கள் குப்பை போடுகின்றன என்பதற்கு வட்டார வழக்கு உருவாக்குகிறேன்.

‘குப்பைவெளி’ (junkspace) என்றும் உருவருபெருவுரு (blobject) என்றும் கவித்துவமாக நான் பேசுவதாக சிலர் நினைக்கிறார்கள். அது நான் இல்லை. இந்த சொல்லாட்சிகளை கண்டுபிடித்து புழக்கத்தில் விட்டது மட்டுமே நான். அதனால் என்ன போச்சு? நான் அறிபுனை எழுத்தாளன். புது வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக நான் கைதாகப் போவதில்லை.

மாத்யூ பேட்டில்ஸ்: நாம் எதிர்பாரா வகையில் எது நம் காலங்கடந்து நிற்கும்?

புரூஸ்: பெரும்பாலும், பழங்கால சமாச்சாரங்கள்தான் நம் காலங்கடந்து தாக்குப் பிடிக்கிறது. பிரமிடுகளை எடுத்துக் கொள்ளலாம். மனிதனின் மற்ற எல்லா விஷயங்களை விட நீண்டகாலமாக இருக்கிறது. நாம் சேமிக்கும் இணையக் கோப்புகளை விட பேப்பர் நிலைத்து நீடிக்கும் என்று சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், வன்தட்டுகள் எளிதில் அழியக் கூடியவை; பிட்டு பிட்டாக பிட்டுகள் உதிர்ந்து போகும்.

மற்ற நாகரிகத்தைப் போல் நாமும் இருந்தால், நம்முடைய குப்பை கூளங்களில்தான் சிறப்பான துப்புகளை விட்டுச் செல்வோம். குப்பை நம்மிடம் நிறையவே இருக்கிறது. பிரமிடு கோபுரம் மாதிரி நிலம் நிரப்பி, குப்பை மலை கொண்டிருக்கிறோம்.

ரிச்சர்ட் நாஷ்: நீங்க முன்பொரு முறை பேசும்பொழுது ’என்னிடம் வருங்காலத்தைப் பற்றி அறுதியிட்டு சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டால், நமக்கு வயதாவது மட்டுமே’ என்று குறிப்பிட்டீர்கள். அனைவரின் ஆயுளும் அதிகரித்து வரும் இந்தச் சூழலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று சொல்வீர்கள்?

புரூஸ்: இன்றைய முதியோர் பாதுகாப்பங்களில் நம்முடைய வருங்காலத்தை உணரலாம். ஐரோப்பாவில் மூத்த நகரமாக ஜெனீவாவை சொல்கிறார்கள். அதிக அளவில் வயதானோர் வாழ்வதால் அந்த அடைமொழி கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் நின்று நிதானித்து, தடுமாறி ஏறி இறங்கும் முதியோர் நிறைந்த பயணங்களினால் பேருந்துகள் தாமதமாக ஓடுகின்றன. தாத்தா, பாட்டி நிறைந்த காபி கடைகளில் அவசரம் இல்லை; சத்தம் இல்லை. தங்கள் வயதொத்த குழந்தைகள் தனியாக சேர்ந்து அவர்கள் இடங்களில் சுற்றுகிறார்கள். ஜெனீவா கிழவிகளானால் நிறைந்த இடமாக இருக்கிறது. மருத்துவ முன்னேற்றத்தினால் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க, ஆண் – பெண் பால் சமநிலை சரிகிறது.

இது ஒன்றும் ஆச்சரியமான மாற்றம் அல்ல. ஆனால், மாஸ்கோவுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அங்கே ஆயுள் எதிர்பார்ப்பு ஜெனீவா போல் நீண்ட நாள் அல்ல. இரைச்சலும் கவர்ச்சியும் கூச்சலும் நிறைந்திருக்கும் மாஸ்கோவில் வாழ்வதும் கடினமே.

ரிச்சர்ட் நாஷ்: ஆயுள் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் கூடி வரும் காலகட்டத்தில் கலாச்சார மாற்றங்களாக என்ன நடக்கும்? ஒரு பக்கமோ அபரிமிதமான வளம்; இன்னொரு பக்கத்திலோ கடுமையான கருவுறுதிறன் பஞ்சம். வயதாகிப் போன முதியோரும் இந்த செழுமை ஏற்றத்தாழ்வும் எவ்வாறு ஒன்றை ஒன்று தொடுகிறது?

புரூஸ்:

மரியான் டி பியர்ஸ்: நெடுங்காலம் வாழ்வதைப் பற்றி பேசும் இந்த சமயத்தில் மனித குலத்தின் வாழும் குணாதிசயமாக எதை சொல்வீர்கள்? வருங்காலத்தில் உங்களுக்கு எந்த விஷயம் பெருத்த நம்பிக்கையைத் தருகிறது?

புரூஸ்:

நீல்ஸ் கில்மேன்: இலக்கியங்களில் இருந்து காலமறிந்து தரிசனமும் ஞானதிருஷ்டியும் கொண்ட பார்வை தந்ததில் முக்கியமானது எவை என்று பட்டியலிடுங்களேன்?

புரூஸ்:

ஜியூலியானா க்வாஜரோனி: ஊட்டம் சேர்த்த எதார்த்தம் கொண்டு இயங்கும் பொறிகள், நம் வருங்கால தொழில்நுட்பத்திற்கும் இணையத்திற்கும் புனைவுகளுக்கும் எவ்வளவு முக்கியம்?

புரூஸ்:

Boston Blasts – Puthiya Thalaimurai

பாஸ்டன் மாரத்தான் ஓட்டத்தை முதல் முறை பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. இருபத்தாறு மைல் மாரத்தான் ஓட்டத்தின் நடுவே என்னுடைய அலுவல் கட்டிடமும் இருந்ததால் அதைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. விதவிதமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். கால் முடியாதவர்களில் சிலர் கையில் ஊன்றுகோலும் முகத்தில் புன்னகையும் வைத்து ஓடினர். சிலர் சக்கர நாற்காலி துணையுடன் ஓடினர். கண் பார்வையற்றவர் நாயின் துணையுடன் ஓடினர். சிலருக்கு என்னுடைய பாட்டியை விட வயது அதிகமாக இருக்கும். சிலர் உசேன் போல்ட் போல் பறந்தனர். இருபத்து மூன்றாயிரம் விதங்களாக ஒவ்வொரு போட்டியாளரும் வெற்றியை விட எல்லைக் கோட்டைத் தொட்டு விடும் உற்சாகத்தை என்னுள்ளே தொற்றிக்கொள்ள வைத்துவிட்டு ஓடிக் கொண்டிருந்தனர்.

வருடந்தோறும் ஏப்ரல் பதினந்தாம் தேதி என்றால் அமெரிக்காவில் வசிப்போரருக்கு இரண்டு விஷயம் ஞாபகத்திற்கு வரும். ஒன்று வருமான வரி கட்ட கடைசி நாள். இன்னொன்று நாட்டுப்பற்றாளர் தினம் (Patriots day). இனிமேல், பாஸ்டன் நெடுந்தொலை ஓட்ட குண்டு வெடிப்பும் நினைவின் ஓரத்தில் ஒட்டி நிற்கும்.

இந்தப் பதினைந்தாம் தேதியும் வழக்கம் போலவே விடிந்தது. விடிகாலையில் அதி வேகமாக ஓடுபவர்களைக் கொண்டு களப்போட்டியாக பாஸ்டன் மாரத்தான் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து பொதுமக்களும் சாதாரண பிரஜைகளும் கொண்ட சாதனைகள் அல்லாத மாரத்தான் பகுதி துவங்கியது. அவர்களில் பெரும்பான்மையோர் எல்லைக்கோட்டை நெருங்கும் சமயம் பார்த்து ஒரு குண்டு வெடித்தது. பத்து விநாடிக்குள் எதிர் பகுதியில் இன்னொரு குண்டு. நூறு மீட்டர் சதுர அடிக்குள் மக்கள் சிதறுண்டு ஓடுகிறார்கள். இன்னும் எத்தனை குண்டு எங்கிருந்து வெடிக்குமோ என்னும் அச்சம் கொண்ட லட்சக்கணக்கான பார்வையாளர்கள் எங்கே பதுங்குவது என்று அலைபாய்கிறார்கள். அறுபத்து மூவர் போல் கூட்டம். அந்த கூட்டத்தில் நெரிசல் அசம்பாவிதம் நிகழாதபடி பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் காவலாளர்களுக்கு சேர்ந்து கொள்கிறது.

கள்ளன் பெருசா? காப்பான் பெருசா என்பார்கள். இருபத்தாறு மைல் பாதையை எப்படி பாதுகாப்பது? மில்லியன் மக்களின் கைப்பைகளை எப்படி சோதிப்பது? அரங்கத்தில் கூடும் மக்கள் என்றால், வாயிலில் நிற்க வைத்து பரிசோதிக்கலாம். இதுவோ, ஓட்டப்பாதை.

கடைசி நிலவரப்படி மூன்று பேர் இறந்து விட்டார்கள். இவர்களில் எட்டு வயது சிறுவனும் அடக்கம். பதினேழு பேர் உயிருக்கு ஊசலாடுகிறார்கள். ஏறத்தாழ நூற்றுஎழுபது பேர் கை கால் இழந்து காயமடைந்து இருக்கிறார்கள். அந்தப் பகுதியை பார்க்கவே போர்க்களம் போல் இருக்கிறது.

அது பாஸ்டனின் மிக முக்கியமான வார்த்தகப் பகுதி. ஐம்பது மாடி கட்டிடங்களும் ஆறேழு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் நிறைந்திருந்தாலும் பாஸ்டன் பொது நூலகமும், நார்த் ஈஸ்டர்ன் எனப்படும் வடகிழக்கு பல்கலைக்கழகமும் நிறைந்த எல்லா மக்களும் புழங்கும் பகுதி. அந்த வளாகம் முழுக்க யாரும் நுழைய தடை விதிக்கப் பட்டிருக்கிறது. இன்ச் இன்ச்சாக எஃப்.பி.ஐ. சோதித்து வருகிறது. ஒவ்வொரு குப்பைத் தொட்டியும், ஒவ்வொரு பொருளும் சேமிக்கப்பட்டு ஆராயப்படுகிறது.

இதற்கு முன்பும் மாரத்தான் போட்டியில் குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு கொழும்புவில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் பதினான்கு பேர் இறந்தனர். எண்பத்திமூன்று பேர்கள் படுகாயம் அடைந்தனர். ஓட்டப் போட்டி துவங்கும்போது குண்டு வெடித்தது.

பாஸ்டனுக்கு இந்த மாதிரி தீவிரவாதம் ரொம்பவே புதுசு. பாஸ்டனை தலைநகராகக் கொண்ட மாஸசூஸட்ஸ் மாநிலத்தை ‘அமைதிப் பூங்கா’ என்றே சொல்லலாம். துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதில் கொஞ்சம் கெடுபிடியான சட்டதிட்டங்கள் வைத்திருப்பார்கள். அதனால், கனெக்டிகட் மாநிலத்தின் நியுட்டவுன் பள்ளிக்கூடத்தில் நடந்தது போல் பாடசாலை துப்பாக்கி சூடுகளை பார்க்க முடியாது. அதே சமயம், தற்பாலருக்கு திருமண உரிமை வழங்குவதில் முன்னோடியாக விளங்குபவர்கள். சட்டமன்றத்திற்கு பெண் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, கறுப்பின கவர்னர் என்று தாராளமாக இருக்கும் பாஸ்டன் என்பதால் ‘பைபிள் பெல்ட்’ என்றழைக்கப்படும் டெக்சாஸ்காரர்களுக்கு எட்டிக்காயாக கசக்கும் மாகாணம்.

அதைவிட மிகப் பெரிய கௌரவம் என்பது பாஸ்டன் பக்கத்தில் இருக்கும் கல்லூரிகள். சார்லஸ் நதிக்கு இந்தப் பக்கம் பத்தாயிரம் மாணவர்கள். அந்தப் பக்கத்தில் உள்ள கேம்ப்ரிட்ஜில், உலகப் புகழ் பெற்ற எம்.ஐ.டி, ஹார்வார்டு போன்ற உயர்தரமான பல்கலைக்கழகங்களில் இன்னொரு பத்தாயிரம் பதின்ம வயது உலகம்.

இவ்வளவு இளைய தலைமுறையினரையும் அச்சுறுத்துவது எளிய காரியம் அல்ல. ஆனால், இந்த குண்டுவெடிப்பு அதை நிறைவேற்றி இருக்கிறது. சீனாவில் இருந்து அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவரும் இந்த குண்டுவெடிப்பில் இறந்திருக்கிறார்.

யார் இந்த கொடூர செயலை நிறைவேற்றியிருக்கக் கூடும்?

2001ல் உலக வர்த்தக மைய தகர்ப்பிற்கு பின் அமெரிக்காவில் நடந்த அனைத்து தீவிரவாதத்திற்கும் அல்-க்வெய்தாவும் தாலிபானும் முழு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த முறை இரண்டு நிறுவனங்களுமே பாஸ்டன் வெடிப்பை வரவேற்க மட்டுமே செய்திருக்கின்றன. உரிமை கோரவில்லை.

அப்படியானால், குண்டு எப்படி செய்தார்கள் என்பதை வைத்து யார் செய்திருக்கக் கூடும் என்று கண்டுபிடிக்கலாம். அந்த முறையை இப்போது உளவுத்துறை கையாள்கிறது. பிரெஷர் குக்கரில் வெடிகுண்டு வைத்திருக்கிறான். எந்தக் கடையிலும் எளிதில் கிடைக்கக் கூடிய கூரிய பொருள்களை அதனுள்ளே போட்டிருக்கிறான். பறவையை சுடும் துப்பாக்கி ரவை கொஞ்சம், குத்திக் கிழித்தெடுக்கும் ஆணிகள் கொஞ்சம் போட்டு குண்டு வெடிப்பில் சிதறுமாறு அமைத்திருக்கிறான். சமையலறையில் உபயோகிக்கும் காலமுடுக்கியைக் கொண்டு இயக்குகிறான்.

இதெல்லாம் ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் காலங்காலமாக தீவிரவாதிகள் செய்து கொன்று வரும் நுட்பம். மூன்றாண்டுகள் முன்பு நியு யார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் ஃபைசல் ஷசாத் செய்து காட்டி, கிட்டத்தட்ட வெடித்த நுட்பம். எனினும், இந்த முறை உளவுத்துறை வேவு பார்த்ததில் அரட்டைக் கச்சேரிகளில் அந்த மாதிரி சங்கேத மொழியோ, தொலைபேசியில் திட்டத்திற்கான பேச்சோ எதுவுமே வரவில்லை. எனவே, உள்ளூர் கைங்கரியமாகத்தான் இருக்குமோ என அனுமானித்திருக்கிறார்கள்.

கடைசியாக 1970களில் இந்த மாதிரி லோக்கல் தீவிரவாதம் கோலோச்சியது. வியட்நாம் போர், கருப்பின அடிமை அடக்குமுறை, பெண்களுக்கு வாக்குரிமை இல்லாமை போன்றவற்றால் அன்றைய காலகட்டம் பதற்றம் நிரம்பியதாக இருந்தது.

இன்று ஒபாமாவைக் கண்டு குடியரசுக் கட்சியின் தீவிர வலதுசாரியினர் பதறுகிறார்கள்.

என்ன துப்பாக்கிகளையும், யார் வேண்டுமானாலும் எங்கு சென்ராலும் எடுத்து செல்லும் உரிமையை நிலைநட்டக் கோரு 1995ல் ஒக்லஹோமா நகரத்தில் அமெரிக்க வெள்ளை இனம் சார்ந்த டிமொத்தி மெக்வெய் குண்டுவெடித்தார். 168 பேர் இறந்தார்கள். பல மாதம் கழித்துதான் டிமொத்தியை பிடிக்க முடிந்தது.

“கைத்துப்பாக்கி இருக்க உங்களுக்கு எதற்கு ஏகே-47 அடிதடி வகை? மானும் வாத்தும் வேட்டையாட வசதியான சின்னத் துப்பாக்கிகள் போதாதா? இந்த மாதிரி அனைவரின் கையிலும் இராணுவத்திற்கு மட்டுமே உரிய ஆயுதங்கள் தவழுவதால்தான் பள்ளிக்கூடங்களில் சிறார்களைக் கொன்று குவிக்கும் சம்பவங்கள் பெருகுகிறது” என்று உருக்கமான கோரிக்கையை முன்வைக்கிறார். இந்த மாதிரி எண்ணங்கள் டீ கட்சியை (Tea Party) பதற வைத்திருக்கிறது.

முன்னொரு நாளில் பிரிட்டிஷ் அரசாங்க விதித்த வரியை எதிர்த்து பாஸ்டன் துறைமுகத்தில் தேயிலையை கடலுக்குள் தள்ளி ஒத்துழையாமை இயக்கம் நடத்தினார்கள். அந்தப் போராட்டம், அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு வழி வகுத்தது. அதே போல், இன்றைய நாளில் ஒபாமாவின் சேமநலத் திட்டமும் குடிபுகல்வோருக்கான வரைவும் பெரும்பணக்காரர்களுக்கான வரிச்சுமையும் இன்றைய தேயிலைக் கட்சியைத் தோற்றுவித்திருக்கிறது. அவர்களில் ஒருவர் இந்தச் செயலை வித்தாக நினைத்து செய்திருக்கிறலாம்.

தற்போதைய ஆளுங்கட்சியும் ஒபாமாவும் தற்பால் விரும்பிகள் கல்யாணம் செய்து கொள்ள அனுமதி கொடுத்து விடுவார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களை இராணுவத்தில் வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள ஒபாமா சட்டம் இயற்றினார். இந்த மாதிரி செயல்களினால் கோபமுண்ட பல தேவாலயங்கள் ஒபாமாவின் கட்சியை கண்டித்தது. கடவுள் விரோதக் கொள்கை கொண்டு ஒபாமா இயங்குவதால் அதற்கு பதிலடி கொடுக்க அதி தீவிர கிறித்துவம் தலை தூக்கி இருக்கலாம் என்னும் நோக்கிலும் இந்த விசாரணை நடந்து வருகிறது.

இன்னும் சிலர் ஒபாமா அரசே இந்த கொலையை செய்திருப்பார் என்று நம்புகிறார்கள். தொலைபேசி ஒட்டுக்கேட்டலையும் உங்களின் வலை நடவடிக்கைகளை வேவு பார்ப்பதை பரவலாக்குவதற்கும் இந்த செயல் துணை நிற்கும். பாகிஸ்தானில் மட்டுமல்லாது, உள்ளூரிலும் டிரோன் ஏவுகணைகள் கொண்டு மக்களைக் கொல்வதற்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த மாதிரி பக்கத்து வீட்டு பயங்கரவாதங்கள், ஒபாமாவின் விமானியில்லாத விமானத் தாக்குதல்களை நியாயப்படுத்தும்.

கடந்த நான்கு வருடங்களில் உள்ளூர் பயங்கரவாதம் 813% உயர்ந்துள்ளதாக அமெரிக்க அரசாங்க 2012ல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அதில் மூன்றில் ஒரு பாகத்தை செய்தவர்(கள்) யார் என்பது அமெரிக்கா உளவுத்துறைக் கூட கண்டுபிடிக்க முடியாத ரகசியம்.

இப்போதைக்கு எல்லோரும் சேர்ந்து இறந்தவர்கர்களுக்காக பிரார்த்திப்போம்.

Machine learning – Big Data

இருபதாண்டுகளுக்கு முன்பு நான் கல்லூரியில் படிக்கும்போது artificial intelligence என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவும் ரோபாட்டிக்சும் புத்தம்புதிய நுட்பங்களாக இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு AI திரைப்படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெக் எடுத்தார். ஐந்தாண்டு முன்பு ரஜினியை வைத்து எந்திரனை ஷங்கர் எடுத்தார். ஆனால், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகும் இரண்டு நுட்பங்களுமே என்னால் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு தொழில்நுட்பத்திலும் அன்றாட வாழ்விலும் புரட்சியை உருவாக்கவில்லை என்றுதான் நினைத்து வந்தேன்.

இப்பொழுது பொறிகள் பூடகமாக தங்கள் சாமர்த்தியத்தை வெளிப்படுத்துவதால், இந்த நுட்பங்கள் வெளியே இளிப்பதில்லை.

எந்திரங்கள் நிறைந்த சூழலில் வாழ்கிறோம். அந்தக் காலத்தில் வெந்நீர் போட வேண்டுமானால், குடத்தை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரை வரை செல்ல வேண்டும். அங்கிருந்து, வீட்டிற்கு வருவதற்குள்ளேயே வெயிலிலும் தளும்பலிலும் பாதி தண்ணீர் ஆவியாகி விடும். அதன் பின் விறகு அடுப்பை மூட்டி, நெருப்பு பற்ற வைக்க கொஞ்ச நேரம் செலவாகும். தண்ணீர் சுடுவதற்குள் தேவை பறந்து விடும். இன்றோ, நுண்ணலை அடுப்பில் ஒரு நிமிடத்திற்குள் வெந்நீர் தயார்.

ஆப்பிள் ஐ-போன் ’சிரி’ (siri) வந்த பிறகு தட்டச்சு கூட செய்ய வேண்டாம். பேசினால் மட்டுமே போதும். நமக்குத் தேவையான விடைகளை மனைவி தருகிறாரோ… இல்லையோ… எந்த நேரத்திலும், எவ்வளவு முறை கேட்டாலும், ‘சிரி’ தந்து விடுகிறது.

பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்த அன்னப்பறவை போல் கூகுள் மின்னஞ்சலுக்கு எது முக்கியமான மடல், எது என்னால் படிக்க விரும்பாத மடல் என்று பிரித்துக் கொடுக்க தெரிந்திருக்கிறது. மின்னஞ்சல் வந்தவுடன் நான் திறக்கும் அஞ்சலின் அனுப்புநர், வார்த்தைகள் போன்றவற்றை வைத்து தானியங்கியாக அவசியமானவை, அவசியமில்லாதவை என இரண்டாக வகுத்து விடுகிறது.

இதற்கெல்லாம் பொதுவான பிரிவாக இயந்திர தற்கற்றல் (Machine Learning) உருவாகி இருக்கிறது. கணிப்பொறியே சுயமாக கற்றுக் கொள்வதுதான் முக்கிய கரு.

சாதாரணமாக கணிப்பொறியில் ஓடும் நிரலி முழுக்க முழுக்க நாம் சொல்வது படி மட்டுமே நடக்கும். முதலில் காரைத் துவக்கு; அதற்கு அடுத்ததாக கியர் மாற்று; அதற்கு அடுத்து வண்டியை ஓட்டு; முன்னாடி ஏதாவது தடை இருந்தால், வண்டியை நிறுத்து இப்படிச் சொல்வது பழங்கால நிரலி.

எத்தனை மணிக்கு காலையில் எழுந்தான் என்பதை வைத்தும் எத்தனை மணிக்கு அலுவல் சந்திப்புக்கு செல்ல வேண்டும் என்பதையும் சாலையில் போக்குவரத்து எவ்வாறு இருக்கிறது என்பதை கணித்தும், தானியங்கியாக காரைத் துவக்குவது ‘இயந்திர தற்கற்றல்’. துவக்கிய காரை பின்னாடி செலுத்த வேண்டுமா, முன்னாடி கொஞ்சம் செலுத்தியபின், பக்கவாட்டில் திருப்ப வேண்டுமா என்றெல்லாம் அறிந்து வைத்திருப்பது ‘இயந்திர தற்கற்றல்’. காலையில் வண்டியோட்டும் போது எம்.எஸ். சுப்ரபாதமும் மாலையில் ஏ. ஆர். ரெஹ்மானும் இசைக்க வைப்பது ’இயந்திர தற்கற்றல்’.

முன்பெல்லாம் கணினியிடம் ஒவ்வொரு விஷயத்தையும் ஒவ்வொரு சாத்தியக்கூறுகளையும் சொல்லி வைக்க வேண்டும். இப்பொழுது குத்துமதிப்பாக சொன்னால் போதும். அதுவே அனுமாணித்து, ஒன்றைக் கண்டுபிடித்து, ‘சரியா?’ என்று கேட்கும். சரியில்லை என்றால், போகப் போக திருத்தி, ஏன் சரியில்லை என்பதற்கான காரண காரியங்களை தானே கண்டுபிடித்துக் கொண்டுவிடும்.

அப்படியானால் என் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை கணிப்பொறி கண்டுபிடித்து விடுமா?

அதற்கு உங்கள் உதவி தேவை.

முதலில் சில விஷயங்களை கணி நிரலிக்கு சொல்லித் தரவேண்டும். எது உங்களுக்குப் பிடிக்கும்? எந்தச் செயலை முடித்தால் நிரலிக்கு வெற்றி? எதை நிறைவேற்றினால் உவப்பில்லை? எந்த நேரத்தில் உங்களுக்கு எவ்விதமான மனநிலை இருக்கும்? அந்த மனநிலையை அறிவது எப்படி? குறிப்பிட்ட மனநிலை ஏற்பட்டால், எது செய்தால் அந்த குணாதிசயம் மகிழ்ச்சியாக மாறும்?

திங்கள் காலை மன அழுத்தம் நிறைந்த நேரத்தில் பீத்தோவன் போடு. சீக்கிரமே கிளம்பினால் போக்குவரத்து நிலவரத்தைச் சொல். இப்படி எல்லாம் சுயமாக அறிவதற்கு, கணினிக்கு உங்களின் தரவுகள் தேவை. ஆதியும் அந்தரங்கமும் நிறைந்த வாழ்வின் ஒவ்வொரு நுண்ணிய குறிப்புகளும் குறிப்பீடுகளும் தேவை.

கணினிக்கு மூளை இல்லையே தவிர, சேமிக்கும் சக்தி எக்கச்சக்கமாக இருக்கிறது. எல்லாவற்றையும் சேகரித்து வைத்துக் கொள்கிறது. அவற்றை அலசுகிறது. விளைவுகளை வைத்து மூலக்காரணங்களை கண்டுபிடிக்கிறது. தானாகவே உங்களைப் பற்றிக் கற்றுக் கொள்கிறது. அறிவூட்டம் அடைகிறது. உங்களுக்கு உகந்த முடிவுகளை எடுக்கிறது.

அப்படியானால், பங்குச்சந்தையில் எக்கச்சக்க பணம் பண்ணலாமா?

அதைத்தான் பெரு நிதிநிறுவனங்கள் முயல்கின்றன.சென்செக்ஸ் இத்தனை தூரம் இறங்கி விட்டதா பார்… டௌ ஜோன்ஸ் எவ்வளவு ஏறி இருக்கிறது என்று பார்… எந்த மணி நேரத்தில் இதெல்லாம் நடக்கிறது என்று பார்… மார்க்கெட் ஆரம்பித்து எவ்வளவு நாழி கடந்தது என்று பார்… என்றெல்லாம் பன்னிரெண்டு கட்டம் போட்டு, எது உச்சம், எது நீசம், யாரை யார் பார்க்கிறார்கள் என்றெல்லாம் கணித்து, அல்காரிதம் எனப்படும் வினைச்சரம் கொண்டு அத்தனை வணிகத்தையும் தீர்மானிக்கிறார்கள்.

இதனால் பில்லியன் கணக்கில் இழந்தவர்கள் பட்டியலில் மிக மிகப் பெரிய வங்கிகளும் வியாபார முதலைகளும் அடக்கம். ஐந்து விநாடிக்குள் கோடிகளில் பங்குகளை வாங்கி, லட்சங்களுக்கு விற்று நஷ்டமடைந்தவர்கள் விழித்துக் கொண்டு, எல்லா பங்கு வர்த்தகமும் மனிதரின் பார்வைக்கும் மேலிடத்தின் ஒப்புதலுக்கும் பின்பே நடக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் அமேசான்.காம் தளத்தில் நாற்பது டாலருக்குக் கிடைத்து வந்த புத்தகம் தடாலென்று $1,730,045க்கும் $2,198,177க்கும் பட்டியலிடப் பட்டிருந்தது. அதற்கு அடுத்த நாள், இரண்டு காப்பிகளும் மளமளவென்று தலா ஐநூறு ஆயிரம் அதிகரித்தது. அதற்கு அடுத்த தினத்தில் இன்னொரு ஐநூறாயிரம் ஏறி மூன்று மில்லியன் டாலரைத் தாண்டிச் சென்றது. பழைய புத்தகத்திற்கு எப்படி இவ்வளவு விலை கேட்கிறார்கள்? எவர் வாங்குவார்?

இது வெறுமனே வினைச்சரம் (Algorithm) இயங்குவதனால் கிடைத்த பயன். இரண்டே இரண்டு பிரதிகள் மட்டும் இருக்கும் பட்சத்தில், ஒரு பிரதியை விட இன்னொரு பிரதியின் விலையை 0.01 பைசா ஏற்றி விற்பாயாக என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அவரின் பிரதி ஒரு பைசா ஏற, இன்னொருவரின் பிரதி அதைவிட ஒன்று ஏற, அதைப் பார்த்து அசல் பிரதி இன்னொன்று ஏற்ற… ஏட்டிக்குப் போட்டியாக மூன்றரை மில்லியன்

ஆனால், கணினிக் கற்றுக் கொண்டேதான் இருக்கிறது. தன் தவறுகளில் இருந்து மேலும் புத்திசாலித்தனத்தை அடைகிறது.

கார் விபத்துகளுக்கான தரவுகளைக் கொண்டு எந்த ஓட்டுனர் நிறைய பிழை செய்வார், எந்த வகை கார் அதிக விபத்துகளைத் தரும் என்று கண்டுபிடித்துக் கொடுக்கிறது. இணையத்தில் எவ்வித விளம்பரங்களை நீங்கள் க்ளிக்குகிறீர்கள் என்று அறிந்துகொண்டு, அதையொத்த சாதுர்யமான விளம்பரங்களை இடுகிறது. ஃபேஸ்புக்கில் உங்களுக்கு உவப்பான செய்திகள் தானாகவே முன்னிலை அடைந்து கவனத்தைக் கோருகிறது.

ஓட்ஸ் கஞ்சி மட்டும் உண்ட வியாழக்கிழமை பின்னிரவு ஒண்றரை மணிக்கு எனக்கு சாக்லேட் ஐஸ்க்ரீம் பிடிக்கும் என்று என்னுடைய ஃப்ரிட்ஜ் கட்டளையிட்டாலும், வெண்ணிலாவிற்கு மாறும் விநோதத்தைக் கண்டு கம்ப்யூட்டர் தலையிலடித்துக் குழம்பி பைத்தியமாகாமால், அதை விதிவிலக்கு என விட்டுவிடும் என்றே நம்புகிறேன்.

ரெட் காமிரா

ரெட் கேமிரா மீது ஆர்வம் வர இரண்டு பேர்கள் காரணம். முதலாமவர் ”கல்யாண சமையல் சாதம்” எடுத்த அருண் வைத்யநாதன். “அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை ரெட் காமிரா படப்பெட்டி கொண்டு எடுத்தார். அது வரை தமிழ் சினிமாவில் கையடக்கமாக ஒளிப்பதிவு செய்வது வழக்கமில்லை. ஆனால், அதன் பிறகு ரெட் கேமிராவை அக்குளில் சொருகிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக சினிமாவும் கைப்பழக்கம்… செந்தமிழும் டப்பிங் பழக்கம் என வழக்கமாக்க அ.அ. கால்கோள் போட்டது.

இரண்டாமவர் ”ஓக்லி” குளிராடியைக் கண்டுபிடித்த ஜிம் ஜனார்ட். எலான் மஸ்க் போல் ஸ்டீவ் ஜாப்ஸ் போல் தனக்கென தொண்டர் கூட்டமும் ரசிகர் பட்டாளமும் கொண்டவர். அறுபதுகளைக் கடந்துவிட்டாலும் துடிப்பான தோற்றம் அதை மறைக்கும். அவர் சுற்றுலா செல்வதற்காக மட்டும் சில பல தீவுகளின் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர் பயணிப்பதற்காக மட்டும் நான்கு விமானங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கிறார். எழுபதுகளில் பைக்களுக்கு கைப்பிடி விற்கத் துவங்கினார். அப்பொழுது துவங்கிய வடிவமைக்கும் சிரத்தை குளிர் கண்ணாடிகளுக்கும் கைப்பைகளுக்கும் காலணிகளுக்கும் தாவித் தாவி ”ஒக்லி” வளர்ந்தது. தமிழ் சினிமாவில் ஸ்டைலுக்கு ரஜினி என்றால், மேற்கத்திய ஒயிலின் அடையாளமாக ஓக்லி ஆனது.

அவர் சினிமா கேமிரா தயாரிக்கப் போனார். அதுதான் ”ரெட்”.

Red_one_Digital_Camera

ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரெட் டிஜிட்டல் சினிமா கேமரா வெளியானபோது சினிமாவுலகைப் புரட்டிப் போட்டது. அதுவரை ஒத்திசை (analog)யில் மட்டுமே சாத்தியமான துல்லியத்தை எண்ணியலுக்கு (digital) கொண்டு வந்த தருணம் அது. என் வீட்டில் இருக்கும் உயர்தர எச்.டி.டி.வி.யில் இடமிருந்து வலமாக 1,920 கோடுகள் போகின்றன. மேலிருந்து கீழாக 1,080 கோடுகள் ஓடுகின்றன. அவற்றைக் கொண்டுதான் நயன்தாராவின் இமைகள் சிணுங்கும்போது வலக்கண் மேல்புருவம் ஒழுங்காக அமையாததும் சச்சின் டெண்டுல்கரின் இடது தாடை அசைவதும் துல்லியமாக அறியமுடிகிறது.

இந்த ரெட் ஒன் (Red One) படப்பெட்டியில் பக்கவாட்டில் 4,096 கோடுகளில் விஷயங்களை சேகரிக்கலாம். செங்குத்தாக 2,304 கோடுகள் மூலம் வெகு கச்சிதமாக விஷயங்களைப் போட்டுவைக்கலாம். அதுவரை இவ்வளவு துல்லியம் ஒத்திசை கொண்டு பதிவு செய்யும் பூதாகரமானப் பெட்டிகளில் மட்டுமே சாத்தியமாக இருந்தது. முப்பத்தைந்து எம்.எம். எனப்படும் படங்கள் எல்லாம் இந்த 4கே நுணுக்கத்தில்தான் சேமித்து வந்தன.

ஆனால், 35எம்எம் பதிவாக்கத் தேவைப்படும் படச்சுருள்கள், ரெட் கருவிக்குத் தேவையில்லை. அதன் அளவு விலையும் இல்லை.

ஒளிப்பதிவை நேரடியாக படமாகப் பிடித்து வன்தட்டில் சேமித்து விடலாம். ரெட் வருவதற்கு முன்பு இருந்தப் படக்கருவிகள் எல்லாமே ஃபிலிம் சாப்பிடுபவை. படச்சுருளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும். புதியதாக இருக்க வேண்டும். அதிகம் வாங்கி மீந்து போனால் யாருக்கும் பயனில்லாது கெட்டுப் போய்விடும். கம்மியாக வாங்கி கால்ஷீட் இருக்கும்போது சுருள் தீர்ந்துபோனாலும் தர்மசங்கடம். படத்தொகுப்பிலும் நல்ல வேலை வைக்கும்.

நாம் வைத்திருக்கும் கேம்கார்டர்கள் போல், செல்பேசி கேமிராக்கள் போல் வசதியான வடிவம். உடனடியாகப் பார்க்கலாம். பிடிக்காவிட்டால், அப்படியே நீக்கிவிட்டு, புதியதாக படம் பிடிக்கலாம். என்ன… நம்முடைய விழியக் கருவிகள் எல்லாம் நிறையவே கம்மி நுணுக்கத்தில் படம் பிடிக்கும். ரெட் ஒன் கொஞ்சம் அதிக கவனத்துடன் சிரத்தையாக ஒவ்வொரு மைக்ரோ விஷயத்தையும் உள்ளடக்கி சேமிக்கும்.

சாதாரணமாகப் படக்கருவிகளைக் கையாள ரத கஜ துராதிபதிகள் தேவை. ஒளிப்பதிவு இயக்குநர் கோணங்களை கவனிப்பார். அவருக்கு உதவியாக கேமிராவை இயக்க இருவர் இருப்பார்கள். கூடவே டிராலி தள்ள நாலைந்து பேர் வேண்டும். இவ்வளவு பெரிய படை எல்லாம் ரெட் கருவிக்கு தேவையில்லை. ஒருவர் போதுமானது. அஷ்டே!

நான்காண்டுகளுக்கு முந்தைய அன்றைய விலையில் கிட்டத்தட்ட இருபதாயிரம் டாலர். ஆனால் அளவில் வாமனனாகவும், வீரியத்தில் விஸ்வரூபமாகவும், செலவில் குசேலனாகவும், சௌகரியங்களில் கர்ணனாகவும் இருந்ததால் அது பெரிய வரவேற்பை பெற்று அனேகரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அந்த அனேகர் யார்… யார்?

2006ஆம் ஆண்டு வாக்கில் ஒரு அலுமினிய டப்பாவைக் கொணர்ந்திருந்தார் ஜிம் ஜனார்ட். அதன் கூடவே, அந்தப் பெட்டி என்ன என்ன மாயாஜாலம் எல்லாம் செய்யும் என்னும் விவரங்களையும் வெள்ளைத்தாளில் அச்சிட்டு விநியோகித்தார். பொரைப் பொட்டலம் போல் காணப்பட்டதை தரிசனம் மட்டுமே செய்துவிட்டு ஆயிரம் டாலர் முன்பணம் செலுத்திச் சென்றார்கள். ஒன்றல்ல… இரண்டல்ல… ஜனார்ட் தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு சாத்தியப்படுத்துவார் என ஆயிரக்கணக்கானோர் பெரு நம்பிக்கை வைத்தனர்.

இருந்தாலும் குவெண்டின் டாரெண்டினோவும் மெமண்டோ எடுத்த கிறிஸ்டோபர் நோலனும் இன்னும் ஒத்திசை வசமே வாசம் செய்கிறார்கள். அவர்களுக்கு ரெட் ஒண்ணும் பிடிக்கவில்லை. தற்போதைய வரவான ரெட் டிராகனும் கவரவில்லை. மேலும் துள்ளலான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” போன்ற படங்களுக்கு ரெட் சரிப்படாது என்கிறார்கள். ”நடுநிசி நாய்கள்” போல் நகர்ப்புற களங்களுக்கும் ”யுத்தம் செய்” போல் சோகரசம் ததும்பும் ஆழ்மனப் படங்களுக்கும் ரெட் படக்கருவி பொருத்தம்.

நம்பிக்கை வைத்தோர்களில் “லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்” எடுத்த பீட்டர் ஜாக்சன் அடக்கம். “சே குவேரா” குறித்து திரைப்படங்கள் உருவாக்கிய ஸ்டீவன் சாடர்பெர்க் உண்டு. இப்பொழுது சூர்யாவை வைத்து “ரவுடி” எடுக்கும் லிங்குசாமியும் ஆட்டத்தில் சேர்த்தி. சமீபத்தில் வெளியான “தி கிரேட் காட்ஸ்பி” கூட முழுக்க முழுக்க ரெட் கருவியால் மட்டுமே படம் பிடிக்கப்பட்டது.

surya-lingusamy-Red_dragon_santosh_Sivan

குளிராடிகளைத் தயாரித்துக் கொண்டிருந்தவருக்கு எப்படி படப்பிடிப்பில் ஆர்வம் வந்தது?

தன்னுடைய ஒக்லி கண்ணாடி நிறுவனத்தை “ரே பான்” நிறுவனத்திடம் இரண்டு பில்லியன் டாலர்களுக்கு விற்றுவிட்டார். அதில் இருந்து ஏழே முக்கால் மில்லியன் டாலரை “ரெட்” கருவிக்காக முதலீடு செய்கிறார். அரசியல்வாதிகளுக்கு கட்சி விட்டு கட்சி தாவுவது கை வந்த கலை என்றால், வணிகர்களுக்கு அரையணா கொடுத்து அரை பில்லியன் செய்வது கை வந்த கலை. புத்திக்கும் புதுமைக்கும் ஏதாவது தொடர்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும். “முடியாது!” என்று எல்லோரும் சொல்வதை சாதித்துக் காட்டவேண்டும்.

அது தவிர ஜிம் ஜனார்ட் ஒரு சரியான படக்கருவி பைத்தியம். கைவசம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படக் கருவிகள் வைத்திருக்கிறார். எல்லாவற்றிலும் படம் எடுத்துப் பார்த்திருக்கிறார். ஒவ்வொன்றின் சிறப்பையும் அந்தந்தக் கருவிகளின் கஷ்டங்களையும் நேரடியாக அனுபவித்துப் பார்த்திருக்கிறார்.

சோனி காமிராவின் எடுத்த படத்தை ஆப்பிள் மெகிண்டாஷில் போட்டுப் பார்க்க முடியாமல் தவித்திருக்கிறார். ஆர்ரிஃப்ளெக்ஸில் க்ளிக்கிய புகைப்படங்களை எளிதாக தரவிறக்க முடியாமல் திண்டாடியிருக்கிறார். நீங்களும், நானும் அன்றாடம் படும் கஷ்டங்கள்தான். ஆனால், பிரச்சினை இருக்கும் இடம் மகாலஷ்மியின் வாசஸ்தலம் என்பதை வர்த்தர்கள் அறிவார்கள்.

Jim_jannard_Oakley_Camera_Red_one_4K_Inventors_Enrepreneurs

இவ்வளவு எளிமையாக இருந்தால் இந்த நுட்பத்தை ஏன் பிற நிறுவனங்கள் முன்பே கண்டுபிடித்து காப்புரிமை பெறவில்லை?

ரெட் கேமிராவின் ஒவ்வொரு அங்கமும் இமாலயப் பிரச்சினைகளை எதிர்கொண்டது. ஏற்கனவே இருக்கும் பல்வேறு கணினிகளோடு பேச வேண்டும். பல்லாண்டு காலமாகப் புழக்கத்தில் இருக்கும் கோப்புகளாக மாற்ற முடிய வேண்டும். இதுவெல்லாம் மென்கலன். கொஞ்சம் தம் கட்டினால் செய்துவிடலாம்.

ஒளிப்படம் எடுக்கும்போது துல்லியத்தை விட வெளிச்சத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும் லாவகம் அத்தியாவசியம். ஒத்திசையில் படம் எடுப்பது போல் துல்லியம் கிட்டலாம். ஆனால், ஒத்திசைப் படங்களில் அலம்பி விட்டது போல் கதிர்களைக் கொணரலாம். கண்கூசவைக்கும் விளக்குகளையும் இருட்டின் கிரணங்களையும் உணரவைக்கலாம். எண்ணியலுக்கு இதே அளவு வீரியத்தை உணரிகளில் (sensor) கொணர்வதற்கு மூன்றாண்டுகள் பிடித்தன.

ஒத்திசைப் படங்கள் ஒரு வினாடிக்கு இருபத்தி நான்கு புகைப்படங்களை எடுத்துத் தள்ளும். படச்சுருள் இந்த வேகத்தை எளிதாக சமாளிக்கும். எண்ணியலில் இந்த வேகத்தில் படம் எடுத்துக் கொண்டே இருந்தால் மென்பொருள் படுத்துவிடும். ஒரு ஒளிப்படத்ட்தில் எத்தனை நுணுக்கங்கள் உள்ளனவோ அத்தனை துல்லியமாகப் பதியப்படவேண்டும். இந்த சிரமத்தைப் போக்க குறுகிய வில்லை (லென்ஸ்)களை பயன்படுத்துவார்கள். ஆனால், குவியாடியின் சுற்றளவுக் குறைய குறைய ஒளிப் பற்றாக்குறை பல்லிளிக்கும். அனைத்து வண்ணங்களின் ரசங்களும் மக்கிப் போய் பதிவாகும். முகப்பில் ஒருவரை பிரதானமாகவும் பின்னே போவோர் வருவோரை துர்லபமாகவும் ஒளிப்பதிவது சிலாக்கியமாக வராது.

மென்பொருள் ஈடு கொடுத்தாலும், சேமிக்கும் வன்தட்டு மக்கர் செய்யும். மென்பொருளும் வன்பொருளும் கர்மசிரத்தையாக சுழன்றாலும், கணினி முட்டுக்கட்டைப் போடும்.

ரெட் வரும் வரை பத்து படங்களை ஒரு வினாடியில் அடக்கும் கருவிகள்தான் புழக்கத்தில் இருந்தன. அந்தக் கருவிகளும் சாதாரண படப்பெட்டியை விட பத்து மடங்கு விலைக்கு விற்கப்பட்டன. இயற்பியலாளர்களையும் கணித ஆராய்ச்சியாளர்களையும் ஒருங்கிணைத்து வேலை வாங்கி முதல் முதலாக அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்க வைக்கும் துல்லியத்துடன் ரெட் ஒன் மூலம் ஆச்சரியப்படுத்தியது ஜனார்டின் சாதனை.

Great_Gatsby_Wizard_of_oz_Red_Movies_Dragon_one_Camera_Resolution_Precision_Hi_fi

இப்பொழுது ரெட் கேமிராவிற்கு நிறைய போட்டியாளர்கள் பெருகிவிட்டார்கள். பழம் தின்று கொட்டை போட்ட நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் பங்கிற்கு எண்ணியல் படக்கருவிகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான “லைஃப் அஃப் பை”யும் ஜேம்ஸ் பாண்ட் வந்த ”ஸ்கைஃபால்”ம் கூட போட்டியாளரின் ஒளிப்படக்கருவியில் உருவானவை.

மூவாயிரம் டாலருக்கு கருவியைத் தருவோம் என்று சொல்லப்பட்ட ரெட் ஸ்கார்லெட், இன்று பத்தாயிரம் டாலருக்கு விற்கப்படுகிறது. அரசியல்வாதி போல் வாக்குறுதிகளை நிறைய அள்ளிவீசுகிறார் ஜனார்ட். நிஜத்தில் அவற்றை நிறைவேற்ற முடிவதில்லை.

இவற்றை எப்படி ஜனார்ட் எதிர்கொள்கிறார்?

முதல் அஸ்திரமாக படப்பிடிப்பு வளாகத்தைக் கையகப் படுத்தி இருக்கிறார். அவருடைய படமனையில் திரைப்படம் எடுப்போருக்கு இலவசமாக ரெட் கருவியைக் கற்றுத் தருகிறார்கள். ரெட் டிராகனின் நுட்பங்களை சொல்லித் தந்து உறுதுணையாக வழிநடத்துகிறார்கள். ரெட் பயன்படுத்தினால் படத்தள வாடகையும் சல்லிசாக தள்ளுபடி செய்கிறார்கள்.

இரண்டாவது அஸ்திரமாக இணையத்தின் சந்து பொந்துகளில் கூட கொள்கைப் பரப்பு செயலாளராக ஜனார்ட் சொற்பொழிவாற்றுகிறார். அப்படி சொன்னதில் இருந்து:

“எனக்கு கானன் சி300 புரியவில்லை. எந்த நம்பிக்கையில் அவர்கள் இதை சந்தைக்கு கொணர்ந்திருக்கிறார்கள்?!”

”உங்களால் இந்தக் கேமிராவில் ஒளிப்படம் எடுக்க முடியுமா? நிச்சயமாக… அது உங்களுக்கு அசமஞ்சம் பட்டம் தருமா? சர்வ நிச்சயமாக!”

”சொன்ன நேரத்திற்கு வந்து சேர்வதை விட… உங்களின் விழைவுகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதை விட… பிழைகளே இல்லாத நுட்பத்தை உருவாக்குவதை விட… யாருமே நம்பவியலாத எவருமே நினைத்துப் பார்க்காத சாதனையை உருவாக்குகிறோம். அந்த உச்சத்தை அடைவதில் சில தாமதங்களை மன்னியுங்கள்!”
Red_comparison_Charts_35_MM_HD_TV_Cameras_Digital_Technology_Infographics

Vice – New Media

இது தேர்தல் காலம். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வேட்பாளர்களளைப் பார்க்க கூட்டத்திற்கு செல்ல வேண்டும். அங்கே விடிய விடிய எல்லோர் பேசுவதையும் கேட்பார்கள். துண்டு சீட்டில் விளம்பரம் அடித்து ஒட்டுவார்கள். சுவரெங்கும் ஓவியம் வரைந்தார்கள். இணையம் வந்த பிறகு இந்த முறை மாறுகிறது. வேட்பாளரை ட்விட்டரில் சந்திக்கலாம். ஃபேஸ்புக் மூலமாக வினா எழுப்பலாம். ஷங்கரின் ‘முதல்வன்’ திரைப்படத்தில் ஒரே ஒரு பேட்டியில், அதுவும் சில மணித்துளிகளே நீடிக்கக் கூடிய நேர்காணலில், நிருபர் ஒருவர், தமிழக முதல்வரை கேள்விகளால் துளைப்பார். இன்றோ, நமது சட்டமன்ற உறுப்பினர் முதல் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் வரை யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். இதைத்தான் “மக்கள் ஊடகம்” என்கிறார்கள். ’முதல்வன்’ படத்தின் நிருபர் புகழேந்தி போல் சாதாரண மக்களை சாதனமாகக் கொண்டு மக்களின் ஊடகமாக ‘வைஸ்’ (vice) உருவாகி இருக்கிறது.

‘வைஸ்’ என்பது என்ன?

சுருக்கமாக சொன்னால் இணையத்தளம். துளிர்பருவத்தினரை குறிவைக்கும் ஊடகம். நிறைய குறும்படங்கள் எடுக்கிறார்கள். ஆங்காங்கே மசாலா தூவுகிறார்கள். அச்சிலும் இலவசமாக விநியோகிக்கிறார்கள். வலையின் அனைத்து சாத்தியங்களையும் பயன்படுத்துகிறார்கள்.

vice1

ஒரு விஷயத்தை எப்படி நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்?

ஆதி வழி என்பது செய்தித்தாள் மூலமாக, நேற்றைய நிகழ்வுகளைப் படிக்கலாம். மாலை நேர செய்திகள் மூலமாக, தொலைக்காட்சியில் கேட்கலாம்.

இதன் தொடர்ச்சியான காலகட்டத்தில் நமக்குப் பிடித்த செய்தி விமர்சகர் மூலமாக தலையங்கங்களை ஆராய வேண்டும். பட்டிமன்றம் போல் விவாத அரங்குகளில் பங்குபெற்று சாய்வுகளைத் தெரிந்து கொள்ளலாம். அனுபவசாலிகளிடம் சென்று அரட்டை அடித்து தெளிவு பெறலாம்.

இன்றைய காலகட்டத்தில் செய்தியின் மூலகர்த்தாவே சமூக ஊடகங்களில் தென்படுவார். அவரிடமே நேரடியாக சென்று ’என்ன விஷயம்?’ எனக் கேட்கலாம். ஆதாரம் கோரலாம். அதை எதிர் சாராரிடம் உடனடியாகக் கொண்டு சென்று இரு பக்க உண்மைகளையும் அறியலாம்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் புரட்சி வெடித்த போது இப்படித்தான் டிம் பூல் (Tim Pool) கண்ணும் கேமிராவுமாக இயங்கினார். கலகக்காரர்களோ, காவல்துறையோ துரத்தும்போது, கையில் படப்பதிவு கருவியை இடுக்கிக் கொண்டு, இன்னொரு புறம் செல்பேசி, ஐபேட் சமாச்சாரங்களை பையில் திணித்துக் கொண்டு நின்று, நிதானமாக 1…2…3… சொல்லிவிட்டு ஓட ஆரம்பிக்க முடியாது அல்லவா! அதனால் கூகுள் கண்ணாடி அணிந்து நிகழ்வுகளைப் பதிகிறார். அவற்றை காற்றலை மூலமாக தன்னுடைய யூடியுப் கன்னலுக்கும், ‘வைஸ்’ சந்தாதாரர்களுக்கும் அனுப்பி வைக்கிறார்.

இந்த மாதிரி ஒவ்வொரு இரத்த பூமியிலும் ஓரிரண்டு டிம் பூல்களை ‘வைஸ்’ உலவ விட்டிருக்கிறது. இந்த மாதிரி ஆள்களை எப்படி பிடிக்கிறார்கள்?

அமெரிக்காவின் “ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட்” (Occupy Wall Street) போராட்டத்தின் போதுதான் டிம் பூல் தெரிய வந்தார். மந்தை ஊடகங்களான சி.என்.என்னும் பாக்ஸ் (ஸ்டார் டிவி)களும் களத்தில் கலந்து கொள்வதற்கு முன்பே, அந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பினார். விமானியில்லாமல் ஓடும் விமானத்தை (drone) வாங்கினார். அதன் அடியில் ஒளிக்கருவியை பொருத்தினார். தொலைவில் இருந்து கூட்டத்தை படம் பிடித்தார். முதல் நாள் அன்று பதினேழு பார்வையாளர்கள். இரு நாள் கழித்து எழுநூறாகியது. முதல் மாதம் முடிந்த பிறகு அவரின் விழியங்களை இரண்டரை இலட்சம் பேர் உலகெங்கும் பார்த்திருந்தார்கள். 36,000 சந்தாதாரர்கள்; 700,000 பார்வையாளர்கள் எனப் பெருகிக் கொண்டே வர டிம் பூல்-கள் ‘வைஸ்’ கண்ணில்பட்டார்கள்.

இந்த மாதிரி “மாற்றம் வேண்டும்!” எனத் துடிக்கும் இளைஞர் பட்டாளத்தை ‘வைஸ்’ அமுக்கிப் போடுகிறது. அவர்களுக்குக் கொஞ்சம் விழியத் தயாரிப்பு நுட்பங்களையும் போலீஸ்காரர்கள் கண்ணீர் புகை போட்டால் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்து உலகெங்கும் அனுப்புகிறது. மற்ற செய்தி நிறுவனங்கள் கடனேயென்று வெளிநாட்டிற்கும் போர்பூமிக்கும் நிருபர்களைத் தள்ளிவிட்டால், ‘வைஸ்’காரர்களின் படப்பதிவு நிருபர்கள் வெகு விருப்பத்துடன் கலவரங்களுக்குள் கலக்கிறார்கள். அன்றைய ஆப்கானிஸ்தானில் துவங்கி நேற்றைய சிரியா முதற்கொண்டு, இன்றைய உக்ரைன் வரை நாலாயிரம் நிருபர்களை தன்னகத்தே வைத்திருக்கிறது.

ஆள் கிடைப்பது இருக்கட்டும். இதற்கெல்லாம் மூலதனம் எங்கே சுரக்கிறது? விழியத்தை வழங்குவதற்கு அகலபாட்டை வேண்டும். அதற்கான விட்டமின் சி எப்படி பாய்கிறது?

எண்பதுகளின் இளைஞர்களுக்கு எம்.டிவி. ஆதர்சம். அந்த எம்டிவி.யில் இருந்து 2006ல் டாம் ஃப்ரெஸ்டன் (Tom Freston) கல்தா கொடுக்கப்பட்டார். அவருக்கு அந்தக் கால எம்டிவி போல் இந்தக்காலத் தலைமுறைக்கு ஏதாவது இளமையாக உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எம்டிவி.யை விட்டு நீங்குவதற்காக தரப்பட்டிருந்த, எண்பது மில்லியன் அமெரிக்க டாலர்களும் தூங்கிக் கொண்டிருந்தது. 1994ல் துவங்கித் தவழ்ந்து, நீஞ்சி, நின்று தட்டுத் தடுமாறி நடக்கத் துவங்கியிருந்த ‘வைஸ்’ பக்கம் பார்வை திரும்பியது.

இப்போதைய சிறுசுகளுக்கு கலப்படம் இல்லாத சரக்கு வேண்டும். செய்தியை வாசிக்காமல், கண் முன்னே அப்படியே அப்பட்டமாக நிறுத்த வேண்டும். கொஞ்சம் போல் தொட்டுக் கொள்ள பிற கேளிக்கைகளும் முகத்திலடித்தது போன்ற பாவனையுடன் வெளிப்படையாக காண்பிக்க வேண்டும். இதையெல்லாம் ‘வைஸ்’ திறம்பட செய்து வந்தது.

வயிற்றில் துப்பாக்கி குறி பார்க்கிறது. துப்பாக்கி முனைக்கும் குடலின் துவக்கத்திற்கும் ஆறு அங்குலம்தான் இடைவெளி.

இடம் – பொகோட்டா, கொலம்பியா.

பொருள் – குண்டு துளைக்காத மேலணி.

தையற்கலைஞர் கற்பூரம் அடித்து சொல்கிறார். ”இந்தக் கோட்டைப் போட்டுக் கொண்டிருக்கும்போது உன்னை துப்பாக்கியால் சுட்டால், உனக்கு ஒரு சிராய்ப்பு கூட வராது”.

“சோதனை செஞ்சிரலாமா?”

“நான் சுடறேன்!”

பார்க்கும் நமக்கோ பதைபதைக்கிறது. டப்… டப்… இரண்டு முறை சுடுகிறார். தள்ளி நின்றால் குறி தவறும் என்று கிட்ட இருந்தே சுடுகிறார். கண்ணை மூடிக் கொண்டுவிட்டேன். திறந்து பார்த்தால், சட்டையைத் தூக்கி அப்பழுக்கற்ற தொப்பையை காட்டுகிறார் சுடப்பட்டவர். போலி குண்டுகள் அல்ல என்பதற்கு சாட்சியமாய் தட்டையான குண்டுகளையும் நினைவுச் சின்னமாக எடுத்துக் கொள்கிறார். இந்த மாதிரி அசல் வாழ்க்கையின் அபத்தங்களை இருக்கை நுனி ஊசலாட்டத்துடன் மீண்டும் மீண்டும், விதவிதமாக ‘வைஸ்’ படமாக்கிக் காட்டுகிறது. அதைப் பார்க்க யூடியுபில் மட்டும் நாலரை மில்லியன் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.

செய்திப்படங்கள் தவிர அச்சு ஊடகத்திலும் ‘வைஸ்’ காலூன்றி இருக்கிறது. முப்பத்தி நான்கு நாடுகளில் ஒன்றரை மில்லியன் வாசகர்களைக் கொண்டிருக்கிறார்கள். துவக்கத்தில் பதினைந்து நிமிடத் துணுக்குகளாக ‘வைஸ்’ மூலமாக வெளிவந்த படங்கள் பலவும், முழுநீள ஆவணப்படங்களாக மாறி இருக்கிறது. வெறுமனே இளைஞர் சமுதாயத்தின் அபிலாஷைகளுக்குத் தீனியாக மட்டும் இல்லாமல், அதன் மேற்சென்று, விவகாரங்களின் ஆழத்தை முழுமையாக அலசும் விதத்தில் அமைந்திருப்பதாலும், எங்கிருந்தோ உட்கார்ந்து கொண்டு வாய் மெல்லும் அலசல்கள் மட்டும் இல்லாமல், களத்திற்கு சென்று வந்தவர்களின் உண்மை அனுபவங்களாக இருப்பதாலும், இந்த ஆவணப்படங்கள் நேர்மையாகவும் செழுமையாகவும் இருக்கிறது. எனவே, அவை ஸ்ண்டான்ஸ் போன்ற விழாக்களில் விருதுகளும் பெறுகிறது.

vice_Video_Coverage_HBO_Manila_Afghan_Pak_Reports_Documentsசென்ற ஆண்டில் அவர்கள் செய்த தலைப்புகளில் சில… சுடான் நாடின் டார்ஃபர் நகரத்தில் நடந்த உள்நாட்டு கலகம் குறித்த தொடர்; கத்ரீனா சூறாவளிக்குப் பின் பாதிக்கப்பட்டோரின் அனாதரவான நிலை குறித்த அலசல்; ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் கழிவுக் கொட்டிடம் குறித்த துப்புதுலக்கல்; கனடாவின் ஆல்பெர்ட்டாவில் இருந்து எண்ணெய் எவ்வாறு சுற்றுச்சூழலை சீரழிக்கிறது என்பது குறித்த ஆய்வு. அதே சமயம் நிர்வாண அழகிகளின் பேட்டி என்றும், பூனைகளின் புணர்ச்சி வாழ்க்கை என்றும், கவர்ச்சிகரமான விஷயங்களுக்கும் எந்தக் குறையுமில்லை. இந்தக் கலவைதான் இளைஞர்களை இழுக்கிறது.

அதை விட முக்கியமாக இணையத்தில் வருவதை நம்ப முடியாது. ”போர்க்களத்தில் இருந்து நேரடியாக” என்று சொல்லிவிட்டு, கூடுவாஞ்சேரியில் உட்கார்ந்து கொண்டு வரைகலை வல்லுநர் உதவி கொண்டு மாயாஜாலம் நிகழ்த்துவோர் எக்கச்சக்கம். கொடுக்கப்பட்ட விழியம் நிஜமாகவே சம்பந்தப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்டதா என்பதை சோதிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக இந்த விழியம் இட்டுக்கட்டியதா என்று ஆராய வேண்டும். அதற்கான அத்தாட்சிகளைக் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் ‘வைஸ்’ செய்து, நம்பகத்தன்மையைக் கொடுக்கிறது. இது அந்தக்கால நியு யார்க் டைம்ஸ் போல் குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடும் பழங்கால பாரம்பரியம். அதற்காகவும் ‘வைஸ்’ கொண்டாடப்படுகிறது.

இன்றைய சூழலில் எல்லோரும், எப்போதும் இணையத் தொடர்பிலேயே இருக்கிறோம். கையில் ஒரு செல்பேசி. அப்படியே அந்தக் கையில் ஐ-பேட். நம் முன்னே கணினி. அறையின் ஈசானிய மூலையில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கும். அதன் மீதும் ஒரு கண் இருக்கும். அந்தத் தொலைக்காட்சியோ, நவநாகரிக புத்திசாலித் தொலைக்காட்சி. ஒரு பக்கம் செய்தி வாசிப்பு. அதே திரையின் பாதி பக்கத்தில், அந்தச் செய்தி குறித்த சமூக ஓடை கிடைக்கும். இதைத்தான் ‘புதிய ஊடகம்’ என்கிறோம்.

ஒருவர் மட்டுமே சொல்லி பலருக்குத் தெரிய வந்தால் அது பழைய ஊடகம். டிவியில் வரும் செய்திகள் மூலமாக அனைவரும் அறியத் தருவது பழைய ஊடகம். பலர் சொல்லி அதன் மூலம் பலர் பயனடைந்தால், அது ‘புதிய ஊடகம்’. அங்காடியில் துப்பாக்கிச் சூடு நடக்கிறது எனத் தெரிய வருகிறது. ட்விட்டரில் அதை செய்தியாக அங்காடியினுள் சிக்கி இருக்கும் பெண்மணி தன் தோழர்களுக்கு நிலைத்தகவல் இடுகிறார். அந்த நிலைத் தகவலைத் தொடர்ந்து இன்னொருவர் நேரடி ஒளிபரப்பாக விழியத்தைக் கொடுக்கிறார். பலர் மூலமாக பலருக்கு உடனடியாக செய்திகள் சென்றடைகிறது. இது ‘புது ஊடகம்’.

‘புது ஊடக’த்திற்கும் பழைய பிரசுரங்களுக்குரிய எல்லாப் பிரச்சினைகளும் உண்டு. அரசு சிலவற்றை தணிக்கை செய்யக் கோரும். சில நாடுகளில் தடை செய்யப்படுவீர்கள். ஆவணப்படத்தை ஆட்சியாளர்களுக்குப் பிடித்த மாதிரி கத்தரிக்க கட்டளை பிறக்கும்.

‘வைஸ்’ விழியத்தை விநியோகிக்க உள்ளுர் கேபிள் நிறுவங்கள் 144 ஊரடங்கு போடும். அவர்களுக்கு காசு கொடுத்துப் பார்க்கும் அவர்களின் ஒளிபரப்புகள் முக்கியம். அவர்களுக்கு எந்த வருமானமும் தராத ‘வைஸ்’ கன்னல் மூலம் எந்த லாபமும் இல்லை. இது நெட் நியுட்ராலிடி.

வடவழித் தொலைக்காட்சி (கேபிள் டிவி) பரவலாக வந்தவுடன் இளைஞர்களிடம் எம்டிவி புகழ்பெற்றது. இணையம் பரவலாக வந்தவுடன் இளைஞர்களிடம் ‘வைஸ்’ புகழ்பெறுகிறது. இளைஞர்களின் ரசனையோ தொழில்நுட்பத்தை விட வேகமாக மாறும் தன்மை கொண்டவை. நேற்று உவப்பாக இருந்தது நாளை உவர்ப்பாகிவிடும்.

vice_cover_Magazine_Free_Media_TV_Videos

இந்தப் பிரச்சினைகளினால் ‘வைஸ்’தாக்குப்பிடிக்காமல் காணாமல் போகலாம். ஆனால், ‘வைஸ்’ கட்டமைத்திருக்கும் மூன்று விஷயங்கள் சாஸ்வதமாக நிலைத்திருக்கப் போகின்றன.

முதலாவது “மக்கள் ஊடகம்”. நீங்களும் நானும் பக்கத்துவீட்டுக்காரியும் இனி நிருபர்கள். அவர்கள் படம் பிடிப்பதே வேத வாக்கு. கேமிரா வந்த பிறகு உண்ணாவிரதங்கள் துவங்கப் போவதில்லை. நாம் புதிய ஊடகங்களில் சொல்வதை பழைய ஊடகங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்.

இரண்டாவது வானொலியை தொலைக்காட்சி மறைத்தது. தொலைக்காட்சியை இணையம் மறக்கடித்தது. இணையத்தை எது மூழ்கடிக்கும்? அது தெரியாது. ஆனால், கன்றுகளும் கருக்குகளும் விளம்பரதாரர்களின் செல்லங்களாக என்றென்றும் நீடிப்பார்கள்.

கடைசியாக “புதிய ஊடக”த்தில் நீங்கள் உரையாடினாலும், உங்களை கோடிக்கணக்கானோர் பின் தொடர்ந்தாலும், உங்களின் உயிருக்கோ, பேச்சு சுதந்திரத்திற்கோ எந்த உத்தரவாதமும் கிடையாது. நீங்கள் வித்தாக மாறி, புரட்சியை வளர்க்கலாம்; பலருக்கு சென்றடையலாம். அயல்நாட்டு இளைஞர்கள் அதைக் கண்டு களிக்கலாம். ஆனால், உள்ளூர் அதிகாரவர்க்கம் பார்த்துக் கொண்டிருக்காது. கபர்தார்.

ஆண்களுக்கு பேன் வருவதில்லை

நீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன்.

நானும் உங்களைப் போல் சில்லறை விஷயங்களுக்காகத்தான் இதில் இறங்கினேன். முந்தாநாள் இரவு பத்து மணி இருக்கும். கிம் கர்டாஷியனும் மோனிகா பெலூச்சியும் போட்டி போட்டுக் கொண்டு கணித்திரையை ஆக்கிரமித்திருந்தார்கள். அப்போதுதான் ராம் அழைத்தான். “வாடா… பௌலிங் போகலாம்!”

இருபத்து நான்கு மணி நேரமும் திறந்திருக்கும் பௌலிங் மையம். மூன்று மாதத்தில் வெள்ளைப் பனி காலம் போய் வெஞ்சிவப்பு கோடை வந்து மூன்று மாதம் கழித்து வண்ணமயமான இலையுதிர் காலம் வருவது போல் மூன்று வினாடிக்கொரு முறை சடசடவென்று விளக்குகள் மாறி மாறி பாய்ந்து கொண்டிருந்தது. விளக்குகள் அங்கேயேதான் ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஆனால், அணைந்து அணைந்து எரிந்ததில் ஒளிவிளக்குகள் பாய்ந்து பாய்ந்து ஓடியது போல் கண்ணிற்கு தெரிந்தது. புத்திக்கு எல்லோரும் கொண்டாடுவதாகத் தெரிந்தது.

அரை டிரவுசர் கல்லூரி மாணவிகள் அதிகம் புழக்கத்தில் இருந்த தலமாக பாஸ்டன் அறியப்பட்டது. பௌலிங் மையத்திலோ கல்லூரி மாணவிகளை விட கல்லூரி மாணவர்கள் அதிகமாகக் காணக் கிடைத்தார்கள். பெண்களுக்கு விளையாட்டுகளில் இஷ்டமில்லை. வினைகளில் மட்டுமே இஷ்டமா என்பதைக் காணக் கிடைத்தவர்களிடம் கேட்டறியவில்லை. யூ டியூபில் படம் பார்க்கும்போது அதன் மேலே வந்து விழும் விளம்பரங்கள் போல் யுவன்களை தவிர்த்த பின் யுவதிகள் கிடைத்தார்கள். பந்தயம் கட்டி விளையாட்டு ஆடலாம். ஆடினோம். எனக்கு, இந்த மாதிரி இடங்களில் எதிர்பாலாரை சந்திப்பதிலும் பெண்களோடு பேசுவதிலும் பிரச்சினை இருப்பதில்லை. நாம் சிறுபேச்சு எதுவும் உளற வேண்டாம். பந்தைத் தட்டி விட்டால் போதும். அது போகும் பாதையைப் பொறுத்து கெக்கலிப்போ கைத்தட்டலோ கிடைக்கும். அப்படியே தொடரலாம்.

நான் பெண்களை சந்திப்பதற்காக பௌலிங் செல்லவில்லை. தத்துவம் பேச பௌலிங் மையம் சிறந்த இடம். ஒருவர் குறி வைத்துக் கொண்டிருப்பார். மெதுவாக ஓட ஆரம்பிப்பார். சடாரென்று நிற்பார். மீண்டும் மையத்தை ஒன்றேகால் கண்ணால் கைக்கு கொணர்ந்து பந்தை மெதுவாக விடுவிப்பார். எதிர்பார்ப்போடு பெருமூச்சால் பந்தின் பாதையை மாற்ற எத்தனித்துக் கொண்டிருப்பார். அந்த சமயத்தில், “தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது பந்தத்தை விட பந்தைத்தான் குறிக்க வேண்டும்!” என சொல்லிவிடலாம். பழமொழி ஆராய்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்ப அதிகாலை ஆகி விட்டது.

அப்பொழுதுதான் முதல் போணி. பெங்களூரில் இருந்தவரை தாத்தாவும் பாட்டியும் இருந்தார்கள். அவர்களுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் ஆக்கிக் கொண்டிருந்தேன். அவர்களைக் காரணம் காட்டி விடுப்பு எடுக்க முடிந்தது. எனக்கு நல்ல காரணங்கள் வேண்டும். புற்றுநோய் அபாரமான காரணம். இன்று கீமோதெரபி. இன்னொரு நாள் ஆபரேஷன். நாளைக்கு மாற்று சிகிச்சை. அப்புறம் மாந்திரீகம். இப்படியே கான்சரைப் பற்றி நிறையக் கற்றுக் கொண்டேன். சவரம் செய்யாத முகத்தோடு அலுவலுக்கு சென்று வரவும் புற்றுநோயாளிகளின் உறவினர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

பாஸ்டன் வந்தபோது கூகுள் வந்து விட்டிருந்தது. கூகிளுக்கு முன்பே வெப்.எம்.டி. வேறு ஆக்கிரமித்திருந்தார். இந்தியர்களுக்கு நோய் என்றால் ஆலோசனை வழங்க மட்டுமே தெரியும்.

“இதற்கு சான் ஃபிரான்சிஸ்கோவில் அற்புதமான மருந்து இருக்கிறதாம். தருவித்து கொடுத்துப் பார். நிச்சயம் குணமாயிடும்!”
“இப்பொழுது புற்று நோயை காந்த சக்தி மூலம் குணப்படுத்தி விடுகிறார்கள். இந்தத் தொலைபேசியில் தொடர்பு கொள்:…”
“யாராவது செய்வினை வைத்திருப்பார்கள். சோட்டாணிக்கரை போனால் எடுத்துரலாம்.”

பாஸ்டன்வாசிகள் விபரம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். “எந்த மருத்துவமனை? மாஸ் ஜெனரல் நன்றாக இருக்கும்.” என்பதோடு நில்லாமல் படு நுட்பமாக கேள்விகள் போட்டார்கள். புதியவர்களின் சிறுகதை வேண்டும் என்று ஜெயமோகன் கேட்டவுடன் ”எத்தனை வார்த்தைகளில் எழுதணும்? புதியவர் என்றால் வயது வரம்பு உண்டா? எவ்வளவு வார்த்தை இதுவரை எழுதியிருந்தால் அனுமதி? சன்மானம் கிடைக்குமா?” என்று உள்மாந்தரங்கள் கேட்பது போல் துளைத்தார்கள். கேன்சர் குணமாகிவிட்டது.

ஆனால், அதிகாலையும் ஆகி இருந்தது. ஏன் அலுவலுக்கு வரவில்லை என்பதற்கு நல்ல காரணம் வேண்டும். அப்போதுதான் காதலிக்கு கர்ப்பம் ஆகி இருப்பதாக தெரிவித்தேன். அவர்களும் உனக்கு எப்போது திருமணம் என்று கேட்கவில்லை. அமெரிக்கர்கள் நாசூக்கானவர்கள். நீச்சலுடையின் மீது நீர் போல் பட்டும் படாமலும் இருப்பார்கள். மருத்துவரை பார்ப்பதற்காக அடுத்த நாள் விடுமுறை எடுத்துக் கொள்வதாக சொன்னேன்.

எழுத்தாளர் சாடூ வந்தபோது அந்தப் குழந்தை பிறந்துவிட்டது.

சாடூ எழுதிய காலத்தில் புனைப்பெயர்களுக்கு பஞ்சம் தலைவிரித்தாடியது. 1950களில் கண்ணன் என்பவர் தன் அடையாளத்தை மறைக்க ”சாது” என்று பெயரிட்டுக் கொண்டார். பெயருக்கேற்ற மாதிரியே சாதுவாக செயல்பட்டார். கைலி கட்டிக் கொண்டவரெல்லாம் ஆம்பிளை என நம்புவது போல் புனைப்பெயரினால் நிஜ அடையாளங்களை தொலைக்க முடியும் என எழுத்தாளர் “சாது” திடமாக நம்பினார். அவரைக் கிண்டல் செய்வதாக நினைத்து புகழின் உச்சியில் இருந்த ஆறுமுகம், “சாடு” என்று நாமகரணமிட்டுக் கொண்டார். அந்தப் பெயரில் மற்றவர்களை சாடி நிறைய எழுதியதால், “சாடு” பரவலாகப் பேசப்பட்டார். டவிசர் தெரிய கைலி கட்டுவது போல் தூக்கி கட்டினால் மட்டும் ரவுடியாக முடியாது என்பதை “சாடு” நிரூபிப்பதாக நம்பிய கார்த்திகேயன் “சாடூ” ஆகிக் கொண்டார்.

இவர்களைப் பற்றி நகுலன் கூட கவிதை எழுதியிருக்கிறார்:
சாத்தமுதில் பசி
தெரிந்தது
சாதுர்மாஸ்யத்தில் பாண்டித்யம்
கிடைத்தது
சாதுவில் தூ

ஆனால், என்ன சாது/டு/டூ என்று கேட்டதற்கு சாதுர்யமாக பதில் சொல்ல மறுத்து விட்டார். குவார்ட்டர் வாங்கித் தந்த பிறகு என்னிடம் மட்டும் சொன்னார். “அது பதிப்பாளர் பிழை. நான் அசலாக எழுதியது என்னன்னா…
சாண்டால் பவுடர்
தெரிந்தது
சாம்பிராணியில் பாக்கியம்
நினைத்தது
சாதியில் தா

இதை சாது/டு/டூ மாற்றி அச்சிட்டு விட்டு, என்னைப் பற்றி நகுலன் பாட்ட்டெழுதியிருக்கார்னு ஊர் முழுக்க தம்பட்டம் அடிச்சுட்டு திரியறான்.”

சாடூ அமெரிக்கா வந்தபோது இது குறித்து கேட்டேன். “எட்டாம் வகுப்பு படிக்கிறப்ப ஆல்ஜீப்ரா தெரியலேன்னா அது பிரச்சினையில்ல… எட்டாவது வகுப்பு நடத்துறவருக்கே அல்ஜீப்ரா தெரியலேன்னாலும் அது பிரச்சினையில்லே! ஏன்னா… அவரு சரித்திரமோ பூகோளமோ சொல்லிக் கொடுத்துரலாம். அது மாதிரிதான் நாம நகுலனோட கவிதைய அணுகணும். நீங்க எல்லாரும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதிரி. உங்களுக்கு அவரோட கவிதை தெரியாது. அச்சகத்தார் எல்லாரும் ஆசிரியர் மாதிரி. எழுத்தாளர் சொல்லுறத பிரதி மறு உருவாக்கம் செய்வாங்க! உண்மையான மாணவன் மனப்பாடத்தைத்தான் நம்பினான். அது மாதிரி ஆதர்சமான வாசகன் என்னோட படைப்பை தலைகீழா ஒப்பிப்பான். உங்கள்ள யாரு அந்த மாதிரி தீவிர இலக்கியவாதி?”

எனக்கு எதுவுமே எழவில்லை. ஃபேஸ்புக் முழுக்க பெரியார் கொள்கை பரப்பியவரை பிரதோஷத்தில் பார்த்தால் கண்டும் காணாமல் போவது போல் அடுத்த சப்பாத்தியை எடுப்பதில் வாயை மும்முரமாக்கினேன். ஆனால், அந்த ஷணம் எனக்கு முகம் பிரகாசமானது. நிறைய கார் நெரிசலாக நின்று உருமிக் கொண்டிருக்கும் வேளையில் உங்களின் காருக்கு மட்டும் குறுக்கு சந்து கிடைத்து பூந்து புறப்பட வழி கிடைத்தால் மனம் குதூகலிக்குமே… அந்த மாதிரி.

இவர் செய்வதைத்தான் நான் அனுதினமும் அலுவலில் செய்கிறேன்.

“பிரோகிராம் ஏன் வேலை செய்யலை?”
“நீங்க என்ன செஞ்சீங்க?”

“திடீர்னு தளம் திறக்கவே மாட்டேங்குது?”
“பிரவுசர மாத்திப் பாருங்க”

“நான் கேட்டது இதில்லையே…”
“ஆனா, நீங்க சொன்னது இதானே!”

எனக்கு சால்ஜாப்பு சொல்லத் தெரியும். சாது/டு/டூ-வை விட விலாவாரியாக கதை விடத் தெரியும். இரண்டு நிமிடமே பொறுமை உள்ள மேனஜருக்கு ஏற்ற குட்டிக் கதையும் சொல்கிறேன். இரண்டாண்டுகளாக காசு கொடுத்து விட்டு ’ஆச்சா’ என்று பவ்யமாக வினவும் வாடிக்கையாளருக்கும் முடிச்சுகள் நிறைந்த உச்சகட்டம் பல போட்டு தொடரும் கொண்ட நாவல் கொடுக்கிறேன். கோடை விருந்துகளிலும் நத்தார் உபசரிப்புகளிலும் சுவாரசியமாக சம்பவங்களைக் கோர்த்து ஒரு மணி நேர குறுநாவலாக்குகிறேன். ஆனால், எது என்னை எழுத்தாளனாக விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது?

எழுதிய கதை இதுதான்: தலைப்பு – ஈஷுதல்

ரேடியோவில் காலையில் இருந்து அதே செய்தியைத்தான் அலசிக் கொண்டிருந்தார்கள். விண்வெளியில் ஸ்புட்னிக் பறந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவை ருஷியா முந்திக் கொண்டு விட்டது. பூமியைத் தொடாமல் பார்க்கும் வான்கோள் ஏவியிருக்கிறார்கள். வான்வெளியில் முதல் விண்கலமாக ஏவப்படிருந்த ஸ்புட்னிக் பற்றிக் கேட்டு கேட்டு ஜெனிஃபருக்கு அலுத்து விட்டது.

பக்கத்தில் இருந்தும் தொடக்கூடாத நீக்ரோக்கள் நிறைந்த நாடு அமெரிக்கா. அது பறக்கும் போட்டியில் தோற்கடிக்கப் பட்டுவிட்டதாக அப்பா பொருமினார். தொழில்நுட்பத்தில் பின் தங்கி விட்டதாக வருந்தினார். இனி கூடிய சீக்கிரமே நியு யார்க்கில் செங்கொடி பறக்கும் என்றார். நன்றாக உழைப்பவருக்கும் வெறுமனே சோம்பித் திரிபவருக்கும் வித்தியாசம் இல்லாத நாடாகி விடுமோ என்று கவலையில் மூழ்கி இருந்தார்.

ஜெனிஃபர் தலையில் பேன் ஊறிக் கொண்டிருந்தது. அக்காவிடமிருந்து வந்திருக்கலாம். அக்கா பயன்படுத்தும் சீப்பில் இருந்து தாவி இருக்கலாம். ஒருவருக்கொருவர் பின்னிக் கொள்வதில் தொற்றிக் கொண்டிருக்கலாம். பேன்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் என்பது ஜெனிஃபர் அப்பாவின் வாதம். ஒட்டுண்ணிகளாக பிறரை அண்டிப் பிழைக்கிறார்கள் என்பார்.

ஆனால், நல்ல வேளையாக நாள் முழுக்க இந்த ஸ்புட்னிக் மகாத்மியத்தையும் பேன் பிரலாபத்தையும் ஜெனிஃபர் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டாம். இன்றுதான் ஜெனிஃபருக்கு முதல் நாள். பதினாறு வயதானபின் வேலைக்குப் போகலாம் என்று அப்பா வாக்குறுதி கொடுத்திருந்தார். இன்று அது நிறைவேறுகிறது. வேலைக்கு செல்லும் முதல் நாள். சுதந்திரமாக உணரும் முதல் நாள். தன்னுடைய உழைப்பை மதிக்கும் இடத்திற்கு செல்லும் நாள். பணிக்கு பாராட்டு மட்டும் இல்லாமல் பணமும் கிடைக்கத் துவங்கும் நாள்.

ஜெனிஃபரால் சைக்கிளிலேயே அங்கு சென்றுவிட முடியும். இருபது நிமிடம் ஆகும். காய்கறிகளை அடுக்குவது, தரம் பிரிப்பது, விலை ஒட்டுவது என்று சின்னச் சின்ன வேலையில் ஜெனிஃபர் துவங்கினாள். எடை போடுவது, கல்லாவை பார்த்துக் கொள்வது என்று ஒவ்வொரு மாதமும் பொறுப்பும் ஊதியமும் ஊக்கப்பட்டுக் கொண்டே வந்தது பெருமிதமடையச் செய்தது.

அப்போதுதான் முதலாளியின் காரை தன் வீட்டின் வாசலில் பார்த்தாள். தன்னோடு கடையைப் பூட்டிக் கொண்டு கிளம்பியவர், தனக்கு முன்னே வந்து சேர்ந்திருந்தார்.

“உங்க மகள் இனிமே என்னுடைய மளிகைக் கடையில் வேலை பார்க்க முடியாது. இது உள்ளூர்க்காரங்க வந்து போற இடம். இங்கே தன்மானம்தான் எல்லாம். உங்க மகள் அங்கே இருப்பதை பார்த்தால் நான் சேரக் கூடாதவங்களோட ஈஷிக்கறதா எல்லோரும் நினைப்பாங்க. உங்க பெரிய மக கருப்பனோட கல்யாணம் கட்டிக்கிட்டிருக்காள். அவளோட செய்கைக்கு நான் ஆதரவு கொடுக்கிறதா இவங்க எல்லோரும் நினைச்சா என்னோட வியாபாரம் கெட்டுடும். இவ வேலை செய்யறதால நம்ம இனத்த பகைச்சுப்பேன். தப்பா நெனச்சுக்காதீங்க…”

எழுத்தாளர் சாடூவிற்கு கதை ரசிக்கவில்லை. “இதில் சம்பவம் மட்டுமே சொல்லப் பட்டிருக்கு. அது கூட தவளை நடையில் தாவியோடுது. இதில் அனுபவம் இல்லை. உங்களுடைய முதல் வேலையை கொஞ்சம் போல் கொணர்ந்திருக்கிறீங்க. ஆனால், நீங்க பலசரக்கு கடையிலோ, அமெரிக்க கசாப்புக் கடையிலோ ஊழியம் செஞ்சதில்ல. அதனால, அந்த விவரிப்புகள் எல்லாம் நேர்மையில்லாம அமைஞ்சிருக்கு. மேலும், இது நடந்ததை நடந்தது போலவே சொல்லிச் செல்கிறது. கொஞ்சம் போல் அந்த அக்கா கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கணும். சமூக மாற்றமும் அறிவியல் வளர்ச்சியும் எவ்வாறு இணைந்திருக்கிறது என்பதை விவரிக்கணும். அந்தக் கால ஐம்பதுகளின் காலகட்டத்தை கண்முன்னே நிறுத்தணும்…”

வருடாவருடம் கேட்டுப் புளித்துப் போன வார்த்தைகள். ஒவ்வொரு சம்பள உயர்வுக்கான உள்ளாய்வின் போது மேலாளர் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் போல் சுட்டுவிரல் ஏவுகணை போதனைகள். அங்கே ஒண்ணாம் தேதி தோறும் சம்பளம். என்னுடைய “ஈஷுதல்” கதையை விமர்சிக்கும் எழுத்தாளர் சாடூ என்ன தந்து கிழிக்கப் போகிறார்?

பொங்கி விட்டேன். “ஸ்புட்னிக் என்பதற்கு பதிலாக சந்திராயன் வைத்துக் கொள்ளுங்கள். ஜெனிஃபரின் அக்கா பெயரை சோனியா எனலாம். ராஜீவை மணந்த போது சோனியாவின் சகோதரிகளின் நிலை என்னவாக இருந்திருக்கும். இது அரசியல் சமூக அறிவியல் மாந்திரீகப் புனைவு! இலக்கிய விமர்சகனாக பச்சாதாபம் இல்லாதவர்கள் தேவைப்படுகிறார்கள். இலக்கியவாதியாக பச்சை தாகம் தேவை. படிப்பவனோட கற்பனையைப் பொறுத்துதான் வறட்சி வெளிப்படும். நீங்கள் எல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால் தாத்தாவையும் பாட்டியும்தான் சாகடித்திருப்பீர்கள். நான் பத்து மாதக் குழந்தையைக் கொன்றவன். அதனால்தான் எழுத வந்திருக்கேன். எழுத்தைப் போலவே இயக்கத்திலும் துடிப்பானவன். சொல்லப் போனால் ‘பல்லாயிரம் பொய் சொல்ல பத்திரமான வழிகள்’ என்னும் வலையகம் வேறு நடத்துகிறேன்.”

உங்களுக்காக அதில் இருந்து ஒரு தகவல்: தலையில் பேன் வந்திருப்பதால் எல்லாத் துணிமணிகளையும் எரித்துவிட்டேன். அதனால், ஆடையின்றி இருப்பதால் இன்று நான் அலுவலுக்கு வர இயலாது.

குட நைட்.

Snowden – NSA Secrets

ஸ்னோடென் அறியாத ரகசியம்
– பாலாஜி

ஹவாய் தீவுகளின் எரிமலைகளுக்கு நடுவில் அந்தக் கட்டிடம் இருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ) இருக்கும் இடத்திலிருந்து நாற்பதே நிமிடத்தில் வைகிகி கடற்கரைக்கு சென்றுவிடலாம். பூமிக்கு அடியே பதுங்குகுழி மட்டுமே முன்பு ஒயாஹு தீவில் வைத்திருந்தார்கள். வளர்ந்து வரும் ஆசிய புலிகளையும் வளர்ந்து விட்ட சீனப்புலியையும் வேவு பார்ப்பதற்கு அத்தனை சிறிய நிலவறை போதாது என்பதால் 358 மில்லியன் டாலர் செலவில் சென்ற ஆண்டுதான் விஸ்தரித்து திறக்கப்பட்டது. அமெரிக்கா உளவு பார்ப்பதைப் போட்டுக் கொடுத்த எட்டப்பன் எட்வர்டு ஸ்னோடென் இங்கேதான் வேலை பார்த்தார்.

எட்வர்டு ஸ்னோடென் நேரடியாக என்.எஸ்.ஏ.விற்கு வேலை பார்த்தவர் இல்லை. அந்த நிறுவனத்தில் குத்தகைக்கு விடப்பட்டிருந்தர். பூஸ் அலன் ஹாமில்டன் (Booz Allen Hamilton) மூலமாக என்.எஸ்.ஏ. அலுவலகத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். என்.எஸ்.ஏ. ஊழியர்கள் போல் இல்லாமல் முப்பது வயதாகியும் முக்கிய வேலைகளில் இடம் கிடைக்காததால் மனம் வெந்து வெளியேறியவர். கணினியில் நிரலி எழுதுபவர் எவருமே தங்களுடைய சுயவிவரங்களை ஊட்டமாகவே சொல்லித் திரிவோம். நாலு நாள் ப்ராஜெக்ட் என்றால் நாற்பது மாதம். எட்டு வரி பி.எச்.பி. வினைச்சரம் என்றால் எட்டாயிரம் அடி சி++ ஆக்கம் என்போம். அது போல் ஸ்னேடென் தகவல்கள் இன்னும் மாயமானாகவே உறைந்திருக்கிறது.

புதிய ஊழியர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் நிறுவனத்தின் கழிப்பறை எங்கே இருக்கும், எங்கே காபி கிடைக்கும், எப்பொழுது மதிய உணவிற்கு செல்லலாம் போன்ற தகவல்களை பவர்பாயிண்ட் கோப்பாக போட்டு சொல்லித் தருவார்கள். அந்த மாதிரி என்.எஸ்.ஏ. இயக்கும் ப்ரிஸம் (PRISM) குறித்து அறிமுகம் செய்யும் கோப்பை ஸ்னோடென் வெளியிட்டிருக்கிறார். அது தவிர நேம் டிராப்பிங் போல் ஒரு சில அதிரடி விஷயங்களையும் இணைய நிறுவனங்களையும் கார்டியன் நாளிதழ் மூலமாக சொல்லியிருக்கிறார். இதனால் வீரப்பனை பேட்டி எடுத்த நக்கீரன் கோபால் போல் பேரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் மாட்டிக் கொண்ட ஆட்டக்காரர் போல் புகழும் கிடைக்கப் பெற்றிருக்கிறார்.

இந்த ப்ரிஸம் என்றால் என்ன?

இணையத்தில் கிடைக்கும் அத்தனை தகவலையும் தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்வதற்கு பெயர் ப்ரிஸம். ஃபேஸ்புக்கில் போடும் நிலைத்தகவல்களை நீங்கள் நீக்கிவிட்டாலும், ஃபேஸ்புக்கே நீங்கிவிட்டாலும் கூட ப்ரிசம் தனக்கென்று ஒரு பிரதி வைத்திருக்கும். மைரோசாஃப்ட் ஹாட்மெயில் எல்லாம் அழித்துவிட்டாலும் கூட ப்ரிஸம் தங்களுக்கென்று ஒரு ஜெராக்ஸ் போட்டு பாதுகாத்திருக்கும். வைய விரிவு வலையில் ஒவ்வொருவரும் பரிமாறும் ஒவ்வொரு தளத்தில் இருந்தும் விஷயங்களை அமெரிக்கா எடுத்து பதுக்கி வைத்திருப்பதற்கு பெயர் ப்ரிஸம்.

இதனால் அமெரிக்காவிற்கு என்ன பயன்?

ஒற்றரை அனுப்பி வைத்துவிட்டு, அதற்குப் பிறகு அந்த ஒற்றனையே வேவு பார்க்க இன்னொரு ஒற்றனை அனுப்பி, அவனையும் நம்பாமல் இராஜாவே பின் தொடர்ந்து சென்று உளவு பார்ப்பது அக்பர் காலத்து முறை. தொலைபேசியை ஒட்டுக் கேட்பது இந்திரா காந்தி காலத்து ஒற்றர் முறை. இன்றோ போராளிகளும் ஸ்கைப் மூலம் அரட்டை அடிக்கிறார்கள். தீவிரவாதிகளும் மின்னஞ்சல் மூலம் திட்டங்களைப் பரிமாறுகிறார்கள். இவர்களின் நண்பர்கள் யார், எப்படி இவர்களின் உண்மையான அடையாளத்தைக் காணலாம் போன்றவற்றுக்கு ட்விட்டர், கூகிள் கை கொடுக்கிறார்கள். எத்தனை முகமூடிகள் போட்டாலும், பெயரில்லாதவர்களாக அனாமதேயங்களாக உலவினாலும், எங்காவது இணையத்தை தொட்டிருப்பார். அதில் பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை அறியவும் குண்டுவெடிப்புகளைத் தடுக்கவும் கணினியே கற்று கொள்வதற்கு ப்ரிசம் தகவல்களைத் தந்து உதவுகிறது. (தொடர்புள்ள பதிவு: இயந்திர தற்கற்றல்: சொல்லித் தெரிவதில்லை பிழைக்கும் கலை – http://solvanam.com/?p=28216)

ஏன் என்னுடைய தகவல்களையும் எட்டி பார்க்கிறார்கள்?

ஒவ்வொருவராகப் போய், ‘நீங்கள் தீவிரவாதியா? உங்களுக்கு பயங்கரவாதியோடு தொடர்பு இருந்ததுண்டா?’ என்று அன்னியோன்யமாக வம்பு பேச முடியாது. எனவே, எல்லோருடைய விஷயங்களையும் எடு. அவற்றில் எது புகையுதோ அதை மட்டும் விலாவாரியாக ஆராய்வாய். தேவையில்லாததை குப்பையில் போட வேண்டாம். என்றாவது, எதற்காகவாவது, எப்படியாவது உபயோகப்படலாம். இப்பொழுது வன்பொறி வட்டுக்கள் மிக சல்லிசாகக் கிடைக்கிறது. அதுவும் இல்லாவிட்டால், மேகத்தில் சேமித்து வைத்துக் கொள். வேண்டுமென்னும்போது சஞ்சீவி மலையாக இறக்கிக் கொள்ளலாம்.

அப்படியானால் கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் எல்லோருமே கூட்டுக் களவாணிகளா?

இந்த உளவு வேலை எல்லாம் ஏற்கனவே அறிந்திருந்த சட்டசபையும் சரி… உள்விஷயமறிந்த வல்லுநர்களும் சரி… வலைவணிக நிறுவனங்களுக்கு இந்த உளவில் நேரடித் தொடர்பு இல்லை என்கிறார்கள். கம்பியில் போகும் தகவலை அமெரிக்கா உருவிக் கொள்கிறது. கூகிள் போன்ற பெருநிறுவனங்களிடம் நேரடியாகக் கேட்டுப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ‘முடியாது’ என்று விட்டார்கள். கூகிளுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை. அவர்களிடம் அறிவு சொத்தைப் பகிர்வதில் பிரச்சினையில்லை. ஆனால், அது ‘அனானிமஸ்’ போன்ற கொந்தர்களாலும் ஆப்பிள் போன்ற போட்டி நிறுவனங்களாலும் திருடு போகும் என்பது மைக்ரோசாஃப்ட்களின் அத்தியாவசியமான கவலை. மேலும், சீராக ஒழுங்குமுறை செய்யப்பட்ட தரவுகளை ஒவ்வொரு வலைஞருக்கும் எல்லா நிறுவனங்களிடமிருந்தும் வாங்கிக் கொண்டால் இந்த அண்ட சராசரமும் சில்லு வைத்தாலும் தாங்காது. எனவே, தங்களுக்கு மிக மிக முக்கியமான நபராகப் படுபவர்களின் தரவுகளை மட்டுமே கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்கள்.

குழம்புதே! சற்று முன் எல்லாத் தகவலையும் சுருட்டுவதாக சொன்னீரே?

இளையராஜாவின் பாட்டில் மானே, மயிலே இருப்பது போல் தியாகராஜரின் பாடலில் குருகுக வருவது போல், பயங்கரவாதிகளின் உரையாடலில் முத்திரை அம்சம் இருக்கும். அதை கவனிக்கிறார்கள். ”வானம் நீலமா இருக்கு இல்ல…” என்பது போன்ற சங்கேத மொழிகளினால் இதை கூட நிவர்த்தி செய்து விடுவார்கள் புத்திசாலி காரியஸ்தர்கள். ஆனால், அதே புத்திசாலி காரியஸ்தர்கள், எத்தனை பேருடன் அதே பிரயோகத்தை உடனுக்குடன் சொல்லிக் கொள்கிறார்கள் என்பதை ஆராய்கிறார்கள். சாதாரணமாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் உரையாடிக் கொண்டிருக்கிறார்களா என்னும் சரித்திரத்தை ஆராய்கிறார்கள். என்ன சொன்னோம் என்பதை விட, எப்பொழுது சொன்னோம் என்பதையும், எப்படி சொன்னோம் என்பதையும், எவ்வளவு பேரிடம் சொன்னோம், எங்கிருந்து சொல்கிறோம் என்பதையும் சேமிக்கிறார்கள். நேற்று வரை தகவலை சும்மா அனுப்பிக் கொண்டிருந்தவர் திடீரென்று தகவலுக்கு கடவு முத்திரை இட்டு மறைச்சொல்லிட்டு அனுப்பித்தால் விழித்துக்கொள்கிறார்கள்.

அப்படியானால் இனி யாதொரு பயமும் கிடையாதா? தீவிரவாதத் தாக்குதல் என்னும் பேச்சுக்கே இடமில்லையா?

அப்படி அறுதியிட்டு நம்பிக்கை கொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களை இன்னும் கொஞ்சம் முன்கூட்டியே அறியலாம். அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்கர்களை வேவு பார்க்க இன்னும் ஏக கெடுபிடி இருக்கிறது. நீதிமன்றத்தை அணுக வேண்டும். அமெரிக்க காங்கிரஸிடம் சொல்லி வைக்க வேண்டும். நீதிபதியின் ஒப்புதல் வேண்டும். அதற்குப் பிறகு அவுட்லுக், யாஹூ போன்ற நிறுவனங்களிடம் இருந்து இரகசியத் தரவுகளை வாங்க வேண்டும். வந்த தரவுக்குறிப்புகளை அலச வேண்டும். இவை எல்லாம் செய்த பின் உள்ளூர் காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கு புரியவைத்து, பின்னணியை விளக்கி, காரியத்தை தடுத்தாட்கொள்ள வேண்டும்.

தகவலை எல்லாம் தானே எடுத்துக் கொண்டபின், எதற்கு ஜிமெயில் துணை வேண்டும்?

உங்களின் கடவுச் சொல் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாஹுவிடம் அந்தக் கடவுச்சொல் 84bd1c27b26f7be85b2742817bb8d43b என்பது போல் விநோதமாக உறைந்திருக்கும். அந்த மந்திரச் சொல்லும், மந்திரச் சொல்லை மறைத்து வைத்திருக்கும் வினைச்சரத்தின் மூலமும் யாஹூ-வோ, ஜிமெயில்.காம்-ஓ தெரிவிக்காவிட்டால், உங்கள் அடையாளத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து உள்ளே நுழைய முடியாது. உங்கள் அடையாளத்தில் நீங்களாக நுழைந்து, நீங்கள் சொன்னது போலவே, உங்கள் தோழர்களிடம் பொய்த்தகவலை அனுப்பி, நிஜ விஷயங்களைக் கறக்க மைரோசாஃப்ட் ஹாட்மெயில், ஸ்கைப் உதவ வேண்டும்.

ஸ்னோடென் சொல்லித்தான் இதெல்லாம் நமக்குத் தெரியுமா?

நியூ யார்க் நகரின் மையப்பகுதி. நல்ல கோடை காலம். 1920ஆம் ஆண்டு. ஜூலை முதலாம் தேதி. முப்பதுகளை இப்பொழுதுதான் தொட்டிருந்தாலும் வழுக்கையாகும் ஹெர்பெர்ட் யார்ட்லீ மான்ஹட்டனுக்கு குடிபுகுகிறார். பழுவேட்டையரின் சதியாலோசனை நடந்தது போன்ற நான்கு மாடி பங்களா வீடு. ‘கறுப்பு மண்டபம்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். ஒவ்வொரு தந்தியையும் படிக்க வேண்டும். சட்டபூர்வமாக முடியாது. தந்தியை அனுப்பிய வெஸ்டர்ன் யூனியன் திட்டத்திற்கு தலையாட்டுகிறது. ஜனாதிபது உட்ரோ வில்சனும் ஆசி நல்குகிறார். ஒவ்வொரு தலைமுறையிலும் இது மறைமுகமாக, ஆனால் அதிகாரபூர்வமாக தொடர்ந்திருக்கிறது. ஆள் மாறுகிறார்கள். நிறுவனங்கள் தகவல் தருகின்றன.

ஆனாலும், ஸ்னோடென் தானே இதை வெளிக் கொணர்ந்திருக்கிறார்?

ஏழாண்டுகளுக்கு முன்பே மார்க் க்ளீன் இதையெல்லாம் சொல்லிவிட்டார். ஏடி அண்ட் டி நிறுவனத்தில் வேலை பார்த்தவர். சாதாரணமாக வேலை பார்த்தவர் வீட்டில் திடீரென்று உளவுத்துறை வந்தது. முக்கியமான வேலைக்குப் பொருத்தமானவர்தானா என்று சோதித்த பின் சேர்த்துக் கொண்டது. இருந்தாலும், மார்க் பொறுக்க மாட்டாமல், அவர் செய்த உளவு வேலைகளின் இரகசியங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டுவிட்டார். ஒரு கம்பி நிறுவனத்திற்கு… அதே கம்பியின் ஜோடி அரசாங்கத்திற்கு. ஏடி அண்ட் டி எதையெல்லாம் கம்பி வழி கொண்டு செல்கிறதோ அதெல்லாம் அரசிற்கும் ஒரு காப்பி. இதற்கான தொழில்நுட்பத்தை செய்தவரே பேட்டி கொடுத்து, ஒளிக்க வேண்டியதை வெளிச்சத்திற்கு எடுத்து வந்துவிட்டார்.

அப்படியானால், ஸ்னோடென் என்னதான் செய்தார்?

மார்க் முன்மொழிந்ததை வழிமொழிந்திருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமாவின் வெளிப்படையான செயல்பாட்டை கேள்விக்குறியாக்கி இருக்கிறார். ஊரெங்கும் மூடுமந்திரப் பேச்சுக்களை உரையாடலில் தோற்றுவித்திருக்கிறார். உயிருக்கு உத்தரவாதமில்லாத துரோக செய்கையை தைரியமாக முன்னெடுத்திருக்கிறார். இன்னும் அவரிடம் எந்த பிணையத்தில் எந்தளவு கசிவு இருக்கிறது என்பது போன்ற தகவல்கள் இருக்கிறதோ என்ன அச்சத்தை விதைத்திருக்கிறார். Tailored Access Operations (TAO) எனப்படும் வலையமைப்பின் முகவரிகளை வெளியிட்டால் இரான், சீனா, சிரியா போன்ற நாடுகள் விழித்துக் கொண்டு தங்கள் இணையத்தின் ஓட்டைகளை அடைத்துக் கொள்ள வசதியாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேல் அமெரிக்காவின் உளவாளிதான் ஸ்னொடெனோ என்று ரஷியாவையே சந்தேகக் கண்ணோடு பார்க்க வைக்கும் திறமை வைத்திருக்கிறார்.

ஸ்னோடெனுக்கு நன்றி!!! ஏன்?

’இனிமேல் யாருமே என்னைப் படிக்க மாட்டேங்கிறாங்க’ என்று வருத்தம் கொள்ள வேண்டாம். நீங்கள் மர்மமாக கிறுக்குவதைக் கூட நிச்சயம் அமெரிக்காவும் சீனாவும் திருட்டுவாசல் வழியாக வாசித்துக் கொண்டேதான் இருக்கிறது.

வாழ்க ஸ்னோடென்!

Obamacare

1945ஆம் வருடம். முதன் முதலாக கணினிகளுக்கும் பூச்சிகளுக்குமான தொடர்பு அப்பொழுதுதான் ஆரம்பித்தது. இப்பொழுது ஒபாமா நலத் திட்டத்திற்கான வலையகப் வழுக்கள் போல் இல்லாமல் அசல் பூச்சி. ஹார்வார்ட் மார்க் IIக்குள் விட்டில் பூச்சி விழுந்துவிட்டது. அடித்துத் தூக்கிப் போட்டார்கள். அந்தக் கணினியில் வெறும் கூட்டலும் கழித்தலும் மட்டும் நடந்தது.

இன்றைய கணினிகளும் அதனுள் இயங்கும் மென்பொருள்களும் காரையே ஓட்டுகின்றன. இரண்டு இலட்சம் டொயோட்டா பிரையஸ் கார்களை 2005ஆம் வருடம் திரும்ப அழைத்தார்கள். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் வண்டி திடீரென்று சாலை நடுவில் நின்றுவிடும். அபாய விளக்கு தடாலடியாக அலறும். ஏனென்று ஆராய்ந்து பார்த்ததில் சொவ்வறை மூலக்கூறில் ஏதோ பிழை எனக் கண்டுபிடித்தார்கள்.

அது நடந்து பத்தாண்டு ஆகி விட்டதே… இன்றாவது கார்களில் மென்பொருள் பிரச்சினை தீர்க்கப்பட்டு பிடித்த பீடைகள் விட்டிருக்கும் என்று நினைப்போம். ஆனால், 2014 ஜீப் கிராண்ட் செரோக்கீ கூட இதே அபாய விளக்கு மென்பொருள் பிரச்சினையால் பிரேக் பிடிக்காமல் ஓடுகிறது என ஒரு லட்சம் கார்களை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி கார் நிறுவனங்களுக்கு எல்லாம் கழுத்தில் கத்தி என ஒன்றும் கிடையாது. இத்தனாம் தேதிக்குள் வேலையை முடித்து மொத்தமாக மென்பொருளை முழுமையாகத் தந்துவிடவேண்டும் என நிர்ப்பந்தம் கிடையாது. இந்த மாதம் முடிக்காவிட்டால், அடுத்த மாதம். அடுத்த மாதமும் இயலாவிட்டால், அடுத்த வருடம் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே போகலாம். கெடு விதிக்காமல், அட்டவணை போட்டு, தேதிவாரியாக மென்பொருள் வெளியிடாமல் இருப்பது ரொம்ப வசதியான விஷயம்.

என்னைப் போன்ற சோம்பேறிகளும் கணினித்துறையில் பொட்டி தட்டுவது இந்த மாதிரி கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால்தான். கெடு வைப்பதால்தான் மென்பொருள் கெடுகிறது எனலாம். எனவே, தவணை முறையில் வாய்தா வாங்கி மென்பொருள் வெளியிடுவது பரவலான வழக்கம்.

ஆனால், ஒபாமா நலத்திட்ட வெளியீட்டில் இலக்கு தெள்ளத்தெளிவாக இருந்தது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எல்லோரும் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். டிசம்பர் பதினந்து முதல் இன்னும் பல வசதிகள் வேண்டும். மார்ச்சில் மொத்தமும் முடித்திருக்க வேண்டும். கால தேச வர்த்தமானப்படி சொவ்வறை செயலாளர்கள் சௌகரியத்திற்காகத் திருத்தியமைக்கக் கூடிய உரிமையில்லா கெடு வைக்கப்பட்ட திட்டம். கழுத்திற்கு மேல் கத்தி தொங்கும் கம்பி மேல் நடக்கும் திட்டம்.

கொஞ்சமாய் சறுக்கியிருக்கிறது. ஆனால், மிடையத்தால் ஊதிப் பெருக்கியிருக்கிறது.

இந்த மாதிரி சறுக்கல்களால் மட்டும், ஆண்டொன்றுக்கு அறுபது பில்லியன் டாலர்களை அமெரிக்கா இழப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று சொல்வதற்கு ஒரு வினாடிக்கு பதிலாக ஒன்றரைக்கால் வினாடி எடுத்துக் கொண்டால் ஒரு மில்லியன் கோவிந்தா ஆகியிருக்கும். அந்த மாதிரிப் பிழைகளும் இதில் அடக்கம்.

ஒழுங்காக சோதனை செய்தாலே இந்த சேதத்தைப் பாதியாகக் குறைத்து விடலாம் என்கிறார்கள். ஒரே சமயத்தில் பலரும் சொவ்வறையை உபயோகிப்பது, பலவிதமானவர்கள் பல்வேறு கோணங்களில் சொவ்வறையை அணுகுவது, கணினி மென்பொருளாளர்களே சொவ்வறையை சோதிப்பது… இந்த மாதிரி விதவிதமான ஆழம் பார்த்தல்களில் பலதையும் ஒபாமா நலத்திட்ட வலையகம் செயல்படுத்தவில்லை.

செயல்படுத்தாதற்கு முக்கிய காரணம்… ரவி நடராஜனைக் கேட்டால் “எல்லாம் நேரம்தான்!” (http://solvanam.com/?p=29369) என்பார்.

கணினியில் முக்கோணம் ரொம்பப் புகழ்பெற்றது. நேரமா? பொருளா? தரமா? (சரஸ்வதி சபதத்தின் “கல்வியா செல்வமா வீரமா” மெட்டில் சிவாஜி போல் பாடிக் கொள்ளவும்.)

தரமான மென்பொருள் வேண்டும். குறைந்த பொருட்செலவில் தயாராக வேண்டும். சீக்கிரமே உபயோகத்திற்கு வரவேண்டும். மூன்றும் உங்களால் பெற முடியாது.

தரமும் நேரமும் முக்கியம் என்றால் பெரும் பணம் வேண்டும். அமெரிக்க அரசாங்கமோ அஞ்சுக்கும் பத்துக்கும் பொக்கீடு பற்றாக்குறையால் திவாலாகும் அபாயத்துடன் இழுபறியாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களால் கோடி கோடியாக அள்ளிவீச முடியாது.

எனவே, குறைந்த டாலரைக் கொண்டு, அதைவிடக் குறைந்த நேரத்தில் மென்பொருளைத் தயார் சொல்லக் கேட்கிறார்கள். தரம் அடிவாங்குகிறது.

அப்படி என்னதான் ஒபாமா சேமநலத்திட்ட தளத்தின் தரப் பிரச்சினைகள்?

ஆப்பிள்.காம் சென்று ஐபாட் வாங்குகிறீர்கள் என்றால், மொத்தக் கட்டுப்பாடும் ஆப்பிள்.காம் தளத்திடமே கைவசம் இருக்கிறது. அமேசான்.காம் சென்று மேய்கிறீர்கள், மொத்த அமேசான்.காம் வலையகமும் ஒரு நிறுவனத்தின் குடையின் கீழ் இயங்குகிறது. ஆனால், ஒபாமா நலத்திட்டம் அப்படிப்பட்டதல்ல. பல்வேறு சேமநலத் திட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள். ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் விதவிதமான மென்பொருள் கொண்டு இயங்கும். அவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து கொடுக்கிறார்கள்.

உங்களின் சமூக நல அட்டை எண் கொடுத்தால் அந்தத் துறையுடன் கைகொடுத்து சரி பார்க்க வேண்டும். ஒழுங்காக வரி கட்டுகிறீர்களா என்று நிதித்துறையோடு பின்னணியில் பேச வேண்டும். இதனுடன் அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களுக்கு ஏற்ற உள்ளூர் சட்டதிட்டங்களின்படியும் சில நெளிவு சுளிவுகளை வைக்கிறார்கள். இவ்வளவு இணைவுகளை ஒரே இடத்தில் தொகுத்து வைப்பதால் தளம் மெதுவாக இயங்குகிறது.

இரண்டாவதாக இத்தனை பேர் வந்து சேருவார்கள் என்று அரசாங்கமே எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஆயிரம் பேர் வேடிக்கை பார்க்க வருவார்கள். நூறு பேர் இணைவார்கள் என கணித்திருந்தது. ஆனால், கோடிக்கணக்கில் வருகையாளர்கள். இலட்சக்கணக்கில் பதிகிறவர்கள் என்று திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள்.

ஏன்?

பல தனியார் நிறுவனங்கள் தங்களின் சேமநலத் திட்டத்தைக் கைவிடுகின்றன. ஒபாமா நலத்திட்டத்தை நோக்கி கை காட்டத் துவங்கியுள்ளன. இதை அரசு எதிர்பார்க்கவில்லை. இந்த நிறுவனங்கள் தங்களின் பழைய காப்பீட்டையேத் தொடரும் என எண்ணியிருந்தார்கள். ஆனால், அதை விட அரசுத்திட்டம் மலிவாக இருப்பதால், அடுத்த வருடம் முதல் ஒபாமா காப்பீடு என மாற்றிக் கொண்டதால் எதிர்பாராத தள்ளுமுள்ளு கூட்டம் எகிறியது.

கடைசியாக ஒபாமா நலத்திட்டத்தின் தேவைகள் மாறிக் கொண்டேயிருந்தன. அமெரிக்க காங்கிரஸ் தன்னிச்சையாக சில ஷரத்துகளை மாற்றின. மாகாணங்கள் புதிய விதிகளை நுழைத்தன. ஒபாமா அரசும் அவர்களின் அபிலாஷைப்படி புதிது புதிதாக வழிமுறைகளை நுழைத்தன. கணினி மென்பொருள் எழுதுபவனாக இருக்கும் எனக்கு பிடிக்கவே பிடிக்காத வார்த்தை; “நீ எழுதினது நேற்று சரி. ஆனால், இன்றைக்கு எங்களின் தேவை இப்படி இருக்கிறது”, என முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது. ‘ஒரு தடவை ஸ்திரமாகச் சொல்லு… அதற்கப்புறம் பேச்சை மாற்றாதே’ என்போம்.

இதெல்லாம் ஒபாமா நலத்திட்ட வலையகத்திற்கே உரிய பிரத்தியேகமான பிரச்சினைகளா என்றால், ”சர்வ நிச்சயமாக இல்லை” என்பதுதான் பதில்.

மாற்றங்களுக்குத் தக்கபடி மென்பொருளை வடிவமைக்க வேண்டும் என்பது பாலபாடம். சொல்லப்போனால், வாடிக்கையாளரிடம் மென்பொருளைக் கொடுத்தபின் மட்டுமே முழு தேவைப் பட்டியலும் நமக்குப் புரியும். அதை மனதில் வைத்தே ஒவ்வொரு அடுக்குகளையும் எளிதில் விலக்கி புதியதை சொருகும்படி அமைக்கிறோம்.

வலையகத்தை முழுக்க முழுக்க நிறுவனத்திற்குள் பூட்டி வைக்காமல், அமேசான் மேகத்திலும் மைக்ரோசாஃப்ட் அஸ்யூர் தளங்களிலும் உலவவிடுவதன் மூலம் அதிரடியாக வாடிக்கையாளர் பெருகுவதை சமாளிக்கிறோம்.

ஒபாமா நலத்திட்ட வடிவமைப்பாளர்கள் இந்தப் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார்கள்?

புதிய மென்பொருள் நிரலாளர்களை சேர்த்திருக்கிறார்கள். வேறு வடிவமைப்பாளர்களையும் கணினிக் கட்டுமான வல்லுநர்களையும் திட்டத்தில் போடுகிறார்கள். கணித்துறையில் புகழ்பெற்ற மொழி:

“ஒன்பதரைப் பெண்களைக் கொண்டு வந்தால் ஒரு மாதத்தில் குழந்தையைப் பெற்றுவிட முடியாது. ஒரு பெண் ஒன்பரை மாதம் சுமந்தால் மட்டுமே குழந்தை பிரசவிக்கும்.”

ஜனவரி மாதம் சிஸேரியனா, சுகப்பிரசவமா எனத் தெரிந்துவிடும்.

 

 

 

 
http://www.cse.lehigh.edu/~gtan/bug/softwarebug.html

http://www.wired.com/software/coolapps/news/2005/11/69355?currentPage=all

Tesla

எந்தக் காரிலும் இல்லாத ஒன்று…

உங்களின் மாருதி கார் விபத்திற்குள்ளாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். போனால் போகிறது என்று மாருதியின் சல்லிசான விலைக்காகவாவது அதே காரை மறுபடி வாங்குவீர்கள். அதே மாருதி ஒரு மிகச் சிறிய சாலை உரசலுக்குப் பின் எரிந்து போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே காரை மறுபடி வாங்குவீர்களா?

ஹுண்டாய்க்கோ ஹோண்டாவிற்கோ மாறிவிடுவது மனித குணம்.

ஆனால், எண்பதாயிரம் டாலர் (கிட்டத்தட்ட ஐம்பத்தி ஒன்று இலட்சம் ரூபாய்) பெறுமானமுள்ள கார் எரிந்து போனாலும், அதையே மறுபடி வாங்குவேன் என்கிறார் மேரிலாந்து டாக்டர். இது ‘டெஸ்லா’ நிறுவனத்தின் மின்சாரக் கார். உலகின் விலையுயர்ந்த கார் ஓடினாலும் செய்தி… எரிந்தாலும் செய்தி என்பதாக இந்த விபத்து நிகழ்ச்சி யூட்யூபில் விழியமாகப் பகிரப்பட்டு பரவலாக பேசப்பட்டு பார்க்கப்பட்டது. (http://www.youtube.com/watch?v=q0kjI08n4fg) இந்த மாதத்தில் மட்டும் மூன்று கார்கள் எரிந்துபோனது. எல்லாமே எங்கோ இடிபட்டு, மரத்தில் மோதி, சுவற்றில் சிராய்த்து ஏற்பட்டதால் உண்டான பூர்ணாஹுதிகள்.

விமானங்கள் அடிபட்டு மக்கள் இறந்தால் முக்கிய செய்தி. இந்த மாதிரி சின்னச் சின்ன சில்லறைக் காயங்கள் எல்லாம் எப்படி முக்கியத்துவம் ஆகிறது?

“ஆதாரமற்ற பொருளாதாரம்” (http://solvanam.com/?series=economy_finance_debt_gdp_budget_loans_interest) என்பார் விக்கி. இந்த செய்திகளால் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 17 சதவிகிதம் சரிந்திருக்கிறது. சந்தைமுதலில் (market capitalization) நான்கு பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த வருட ஆரம்பத்தில் டெஸ்லாவின் மொத்த சந்தைமுதலே நான்கு பில்லியனாகத்தான் இருந்தது.

நான்கு பில்லியனில் வருடத்தைத் துவக்கிய நிறுவனம் எப்படி ஆறு மடங்காக (600% !!!) வளர்ச்சி கண்டு 24 பில்லியனைத் தொட்டது?

மாயம் ஒன்றுமில்லை. அதன் முதலாளி இன்னொரு ஸ்டீவ் ஜாப்ஸ். அவர் எலொன் மஸ்க். இவர் பேபால் (PayPal) ஆரம்பித்தவர். அதை ஒன்றரை பில்லியன் டாலருக்கு விற்றவர். விற்ற கையோடு மண்ணிலிருந்து வான்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்லும் ஸ்பேஸ்-எக்ஸ் (SpaceX) துவங்கினார். கூடவே டெஸ்லாவும் தொடங்கினார். வேகமாக காரை ஓட்டுபவர்களும் இளமையான காரை வேண்டுபவர்களும் விரும்பும் ரோட்ஸ்டர் (Roadster) காரை உருவாக்கினார். அதன் அடுத்த தலைமுறையாக மாடல் எஸ் (Model S) உருவாகி இருக்கிறது.

மற்ற புதுக்கார்களுக்கும் இந்த டெஸ்லா காருக்கும் என்ன வித்தியாசம்?

ஒவ்வொரு வருடமும் புது ரக கார்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்கிறார்கள். ஆனால், அவை எல்லாமே சென்ற வருடத்தின் பழுதுகளை நீக்கி கொஞ்சம் புது கணினி உள்ளே போட்ட கார்கள். அடியில் இருந்து முடி வரை புத்தம்புதிதாக கார் கண்டுபிடித்து கல்ப காலம் ஆகி விட்டது. டெஸ்லா இவற்றில் இருந்து மாறுபடுகிறது. 93% புத்துருக்கோடு உருவானது.

புதுசு கண்ணா புதுசு இருக்கட்டும்… ஐம்பது இலட்சம் செலவழிக்க வெகுமதியானதுதானா?

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணினி இருநூறு டாலருக்கு கிடைக்கிறது. ஆனால், ஆப்பிள் மெகிண்டாஷை எந்த மடையராவது இரண்டாயிரத்து ஐநூறு டாலர் செலவழித்து வாங்குவாரா!? அந்த மாதிரிதான் டெஸ்லா கார்.

காரின் முகப்பில் இருக்கும் மூடியைத் திறந்து பார்த்திருக்கிறீர்களா? உள்ளே மகிழுந்தின் இரண்டாயிரத்தி முன்னூற்றி எழுபத்தி நான்கு உதிரி பாகங்கள் இருக்கும். அவை எல்லாம் எங்கெங்கோ இணைக்கப்பட்டிருக்கும். எல்லாவற்றையும் பொறி இயக்கும். புகை வரும். ஆங்காங்கே சுடும். எப்படி இதை ஓட்டுகிறோம் என்று கலக்கம் தோன்றி குதிரை காலம் மீது ஏக்கம் கலந்த பாசம் உதிக்கும். டெஸ்லாவின் முன்பக்கத்தை திறந்தால் உங்கள் பெட்டி படுக்கைகளை வைத்துக் கொள்ளலாம். நாய்க்குட்டியையோ கள்ளக்கடத்தலையோ ஒளிக்கலாம். நிஜமாகவே விஸ்தீரமான மேல்விதானம். பின்புறத்திலும் பொதி சுமக்கும் கீழ்விதானம்.

இவை எல்லாவற்றையும் விட வண்டிக்கு பெட்ரோல் போட வேண்டாம். வண்டியைக் கொண்டு வந்து வீட்டில் நிறுத்திவிட்டால் போதுமானது. அதுவே போய் சொருகிக் கொண்டு மின்சாரத்தை வேண்டிய மட்டுமே இழுத்துக் கொண்டு தன்னுடைய மின்கலங்களை ரொப்பிக் கொண்டுவிடும். ஒரு தடவை நிரம்பிய மின்கலம் கொண்டு முன்னூறு மைல் (ஐநூறு கிலோமீட்டர்) செல்லலாம். அதன் பிறகு மாற்று மின்கலம் போட ஒன்றரை நிமிடங்களே எடுக்கும். அல்லது ஓய்விடத்தில் மறுபடியும் மின்கலத்திற்கு மின்சாரம் காட்டலாம்.

மின்விசையில் செல்லும் கார் ஒன்றும் அமெரிக்காவிற்கு புதிது இல்லை. இதற்கு முன்பே நிஸ்ஸான், செவ்ரொலே போன்ற பல நிறுவனங்கள் மின்னூட்டத்தில் உயிர் பெற்று ஓடும் கார்களை உற்பத்தி செய்கின்றன. மற்ற நிறுவனங்கள் எல்லாம் ஒரு பெரிய மின்கலனை வைத்துக் கொண்டு அதில் சக்தி பெற்று ஓடுகின்றன. ஆனால், டெஸ்லா கார், ஏழாயிரம் லித்தியம் மின்கலஅடுக்குகளைக் (lithium-ion batteries) கொண்டு காரை நகர்த்துகிறது.

புதிய மின்கலன் கண்டுபிடிப்பது சிரமம் ஆனது. அதிலும் கார் போன்ற பெரிய யானையை நகர்த்துவதற்கான சக்தி கிடைக்க செய்வது அதனினும் சிரமம் ஆனது. அவ்வளவு பெரிய மின்கலனிற்கு சிறிய காரில் இடம் கண்டுபிடித்து அடக்குவது அதனினும் சிரமமோ சிரமம். இங்குதான் பெரிய நிறுவனங்களான ஃபோர்டும் டொயோட்டாவும் சறுக்குகிறது.

மின்கலன் கண்டுபிடிக்க டெஸ்லா ரொம்ப சிரமப்படவில்லை. ஏற்கனவே பரவலாக இருந்த லித்தியம் அயனியை கையில் எடுக்கிறது. “நான் ஒரு தடவ சொன்னா…” மாதிரி ஏழாயிரம் லித்தியம் மின்கலங்களை ஒரே இடத்தில் எந்திரமயமாக இணைக்கிறது. காசு அதிகம் இல்லாத லித்தியம். எளிதில் புழங்கும் லித்தியம். ஏற்கனவே புகழ்பெற்ற லித்தியம். எல்லோருடைய மடிக்கணினியிலும் இருக்கும் லித்தியம். ஆனால், ஒரே ஒரு பிரச்சினை. அருகருகே லித்தியம் மின்கலங்களை அடுக்கும்போது தீப்பிடிக்கும் ஆபத்து வருகிறது.

இதனால்தான் இந்த மாதத்தின் மூன்று விபத்துகளும் பங்குச்சந்தையை அச்சமுற வைத்திருக்கிறது. எப்படி இந்த நெருப்புகள் உருவாகின என்று அமெரிக்க அரசும் விசாரணையை மேற்கொண்டிருக்கிறது. டெஸ்லா நிறுவனம் இவற்றை ஊதிப் பெரிதாக்க வேண்டாம் என்கிறது. அதனால், விலாவாரியான தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், காரின் அடிப்பாகத்தில் ஏழாயிரம் லித்தியம் அடுக்குகள் இருக்கின்றன. அதில் கீறல் விழுகிறது. பேட்டரியின்மீது சாலையின் கீழே இருந்த குப்பை உலோகத் துண்டு ஓட்டை போட, அதன்மூலம் ஜ்வாலை ஏற்படுகிறது.

இதை டெஸ்லா சோதிக்கவில்லையா?

ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு அடியிலும் கடுமையான பாதுகாப்பு பரீட்சார்த்தங்கள் செய்கிறார்கள். இந்த விபத்துகளில் கூட எந்தவிதமான உயிர் இழப்பும் ஏற்படவில்லை. பேட்டரியில் ஓட்டை விழுந்த உடனேயே கம்ப்யூட்டர் திரையில் அபாய விளக்கு எரிந்திருக்கிறது. ஓட்டுநரை ஓரங்கட்ட சொல்லி இருக்கிறது. அவரும் காரை ஒதுக்குப் புறமாக நிறுத்தி, அதனுள்ளே இருந்த தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு தள்ளி நின்றபின்பே புகைய ஆரம்பித்து இருக்கிறது.

என் வீட்டு வாசலில் சும்மா நிறுத்தியிருந்த ஃபோர்ட் கார் சில ஆண்டுகள் முன்பு தானே தீப்பற்றி எரிந்து போனது. ஃபோர்ட் கார் நிறுவனத்தை அழைத்தபோது, ரொம்ப சகஜமாக, “ஆமாம்… அந்த வருடத்து மாடலில் ஒரு பிரச்சினை இருக்கிறது. உங்கள் இன்ஷூரன்ஸிடம் பேசிக் கொள்ளுங்கள்” என கத்தரித்து விட்டார்கள். ஆனால், டெஸ்லாவில் எரிந்து போன காருக்கு பதில் புதிய காரையும் கொடுத்துவிடுகிறார்கள்.

இந்த மாதிரி இராஜ உபசாரம் டெஸ்லா வாடிக்கையாளர்களை மகிழ்விக்கிறது. நமது கைபேசிக்கும் ஸ்லேட்டு கணினிக்கும் புதிது புதிதாக நிரலிகளை தரவிறக்குவது போல் டெஸ்லா காருக்கும் நாளொரு அப்ளிகேஷனும் பொழுதொரு நிரல்துண்டும் (widgets) போடலாம்.

மற்ற கார்களைப் போல் டெஸ்லாவில் எந்தவிதமான திருகல்களும் ரேடியோ பொத்தான்களும் குளிரூட்டுவதற்கான விசைகளும் கிடையாது. உங்கள் கணித்திரை போல் பதினேழு இன்ச்சில் பெரிய வெள்ளித்திரை. அதோடு ஐபோன் சிரி போல் பேசலாம். “தேவா இசையில் ஹரிஹரன் பாடிய பாடல்களைப் போடு” எனலாம். ”எழுபத்திரண்டு டிகிரி வை” என கட்டளை இடலாம். “போலீஸ் மாமா ரேடாரில் வேவு பார்க்கிறார்” என்பதை அறிந்து பம்மலாம். சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைத் தவிர்க்கலாம். அப்படி தவிர்க்க இயலாமல் மாட்டிக் கொண்டால் தி ஹிந்து பேப்பரை வாசிக்கலாம். தானியங்கியாக வாசிக்க சொல்லி கேட்கலாம்.

இந்த வருடம் மட்டும் இருபதாயிரம் டெஸ்லா கார்கள் விற்கும். ஒரு ஒப்புமைக்கு மாஸ்டா (Mazda) நிறுவனம், ஒன்றேகால் மில்லியன் கார்களை ஆண்டுதோறும் விற்கிறது. ஆனால், பங்குச்சந்தையில் டெஸ்லா நிறுவனத்தை மாஸ்டா-வை விட அதிகமாக மதிப்பிடுகிறார்கள்.

ஏன்?

டெஸ்லா என்பது கார் நிறுவனம் மட்டுமல்ல. இந்தியன் ஆயில், எக்ஸான் மோபில், பிரிட்டிஷ் பெட்ரோலியம் மாதிரி அது எரிசக்தி நிறுவனமும் கூட. இவர்களின் மின்கலன் வடிவமைப்பை தங்கள் கார்களில் பயன்படுத்திக் கொள்ள பலரும் போட்டி போடுகிறார்கள். பென்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற அனைத்து மகிழுந்து நிறுவனங்களும் டெஸ்லாவின் மின்கலன் நுட்பத்தை உபயோகிப்பார்கள்.

மற்ற மின்கல வடிவமைப்பாளர்கள் எல்லோருமே மண்ணைக் கவ்விவிட்டார்கள். ஏப்ரலில் ஃபிஸ்கர் (Fisker) நிறுவனம் மஞ்சக் கடுதாசி தந்தது. டெஸ்லாவைப் போலே நஷ்டத்திற்கு காரை விற்ற நிறுவனம். ஆனால், டெஸ்லாவைப் போல் சரியான சமயத்தில் இலாபம் காட்டாமல், திவாலாகிப் போனது.

டெஸ்லா நிறுவனத்தைப் போலவே பெட்டர் ப்ளேஸ் (Better Place)ம் மின்கலன் மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. நெடுந்தூரம் செல்லும்போது ஓரிரு மணித்தியாலங்கள் காத்திருந்து மின்கலங்களை உயிரூட்டிக் கொண்டிருக்க முடியாது. எனவே, மின்னூட்டம் இல்லாத மின்கலத்தை அகற்றி விட்டு, மின்னேற்றப்பட்ட மின்கலத்தை அந்த இடத்தில் போட்டு, ஓட்டுநரை அனுப்பி வைப்போம். அதன் பின் வேறொருவருக்கு உங்கள் மின்கலத்தை பொருத்துவது. மின்கலம் எதுவாக இருந்தால் என்ன… நமக்குத் தேவை மின்னேற்றம் நிறைந்த பயணம். இதையேதான் டெஸ்லா இப்பொழுது அறிமுகம் செய்கிறது.

அவர்களிடம் எல்லாம் இல்லாத எது டெஸ்லாவிடம் இருக்கிறது?

முதலில் செய்து முடிக்கும் திறனை முடுக்கி விடும் எலொன் மஸ்க். அடுத்ததாக அவர் கொடுக்கும் விட்டமின் சி – பணம். கடைசியாக கார் பந்தாவாக தோற்றமளிப்பது மட்டுமல்லாமல் அமெரிக்க பிரபலங்களான ஜே லீனோ முதல் வில் ஸ்மித் வரை வாங்கித் தள்ளும் மோக வேகம்.

எல்லோரும் டெஸ்லா வைத்திருக்கிறார்களே… நமக்கென்று தனித்துவம் வேண்டும் என ஏங்கும் ஆசாமியா நீங்கள்? உங்களுக்கு 1963ஆம் வருடத்தின் ஃபெராரி ஜி.டி.ஓ.வை பரிந்துரைக்கிறேன். விலை அதிகமில்லை. வெறும் 52 மில்லியன் மட்டுமே! (http://www.bloomberg.com/news/2013-10-02/ferrari-gto-becomes-most-expensive-car-at-52-million.html)

Google vs Oracle – Java x Darvik

உங்களிடம் சிகை அலங்காரம் செய்யும் பணியை திட்டமிடச் சொல்கிறார்கள். எப்படி அடியெடுத்து வைப்பீர்கள்? குறைவான தலைமுடி கொண்டோருக்கு சீப்பு மட்டும் போதுமானது என்பீர்கள்; நீண்ட முடி விரும்புவோருக்கு சவுரி பொருத்துதலை பரிந்துரைப்பீர்கள்; ஆங்காங்கே அலங்காரமாக நிற்க வைக்க க்ளிப்புகள் கொடுப்பீர்கள்; சிடுக்கெடுக்க இன்னொரு விதமான சீப்பு; கோர்வையாக வார இன்னொரு சீப்பு என பலவிதமாகத் திட்டமீடுவீர்கள்.

கூகுளும் (Google) இப்படித்தான் திட்டம் தீட்டியது. ஆனால், சீப்பைக் கண்டுபிடித்ததே நானாக்கும், டோப்பா மயிரை உருவாக்கியதே நாங்களாக்கும் என நீதிமன்றத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் மல்லுக்கட்டியது.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக கீழ் நீதிமன்றத்தில் கூகுளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்திருந்தது. இரு வாரம் முன்பு மேல் முறையீட்டில் ஆரக்கிளுக்கு சார்பாக தீர்ப்புக் கிடைத்துள்ளது.

கார்ல் சாகன் சொன்ன மேற்கோளை முன்வைத்து இந்தப் பிரச்சினையை ஆராயத் துவங்கலாம்: “If you wish to make an apple pie from scratch, you must first invent the universe.” (ஆப்பிள் அல்வாவை ஆதியில் இருந்து செய்ய வேண்டுமானால், முதலில் நீங்கள் அகிலத்தைக் கண்டுபிடிப்பதில்தான் ஆரம்பிக்க வேண்டும்.)

ஜாவா என்னும் நுட்பம் இருபதாண்டு காலமாக இருக்கிறது. ஜாவா என்பது கணிமொழி. என்ன மாதிரி கட்டளைகள் சொன்னால், கணினி எப்படி இயங்கும் என்று சங்கேதமாக கணினியோடு உரையாடும் மொழி. அதே ஜாவா கொண்டு, தொலைக்காட்சியை இயக்கலாம். அதற்கு தனியாகக் கட்டளைகள் உண்டு. இந்த மாதிரி உபரி கட்டளைகளும் ஜாவா மொழியில் உள்ளடங்கியே இருக்கின்றன. துவக்கத்தில் அ,ஆ,இ,ஈ எனப் பயில ஆரம்பிக்கலாம். நாளடைவில் விருத்தம் பாடுமாறு வளர்ச்சி அடைந்துவிட்டால், செல்பேசியோடு பேசும் ஜாவா, இரகசியமாக சங்கேதமொழியில் பேசும் ஜாவா எனப் புலவராகலாம். வெண்பா இயற்றும் வல்லுநராகிவிட்டால், திரைப்படம் எடுக்கும் அனிமேஷன் மாயாஜால ஜாவா கொண்டு வித்தகராகிவிடலாம்.

கடந்த இருபதாண்டு காலத்தில் கணித்துறை எங்கெல்லாம் கால் பதித்ததோ, அங்கெல்லாம் ஜாவா மொழியும் சென்றிருக்கிறது. ஃப்ரிட்ஜ்ஜில் துவங்கி இசைக்கருவிகளின் நுட்பம் தொட்டு விண்கலன் வரை எங்கும் வியாபித்திருக்கிரது ஜாவா மொழி. அவை எல்லாவற்றையும் திறமூலமாக்கி, எல்லோருக்கும் பயன்படுமாறு இலவசமாக விநியோகிக்கப்படும் மொழியாக ஜாவா இருக்கிறது.

அதெல்லாம் 2006-07 காலகட்டம். பன்னெடுங்காலமாக திறவூற்றுப் பயனாளர்களுக்கும், இலவசமாக மென்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கும் ஜாவாவும், ஜாவா சார்ந்த நிரலிகளும் வரப்பிரசாதமாக இருந்தது. மைக்ரோசாஃப்டுக்கு எதிராக மல்லுக்கட்டுவோர் எவராக இருந்தாலும் ஜாவா பக்கம் சாய்ந்தனர். எவருக்கெல்லாம் விண்டோஸின் கெடுபிடியான உரிமங்களும் ஆப்பிள் மெக்கிண்டாஷ் கேட்கும் அடாவடி விலைகளும் ரசிக்கவில்லையோ, அவர்கள் எல்லோரும் ஜாவா பக்கம் நின்றனர்.

ஜாவா எப்படி எழுதப்பட்டது என்பதும் ஜாவா எப்படி உருவாக்குவது என்பதும் திறந்த ரகசியமாக, எல்லோரும் அணுகும் விதத்தில் இணையத்தில் கட்டுப்பாடற்றுக் கிடந்தது.

அதைப் பயன்படுத்துவோருக்கு இரண்டு நிபந்தனை மட்டும் வைக்கப்பட்டது.

1. ஜாவா-வின் மூலத்தை அப்படியே லபக்கி, இன்னொரு பெயரில் விற்கக்கூடாது.
2. ஜாவா என்று சொல்லி எதையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்து போங்காட்டம் கூடாது. அதன்கூட லாகிரி வஸ்துக்கள் சேர்த்தீர்கள் என்றால் தீட்டு; ஜாவா மூலத்தில் இருந்து சிலதை நீக்கினாலும் அபச்சாரம்.

இந்த இரண்டு நிபந்தனைகளுமே முக்கியமானது.

இலவசியமாக இணையத்தில் கிடைப்பதை, தனி நிறுவன லாபத்திற்காக மறுசுழற்சி செய்யக் கூடாது என்பது முதல் விதி. அதாவாது, ஜாவா உடன் இணைந்து உங்கள் மென்பொருள் இயங்கலாம். தமிழில் தட்டச்ச ஜாவா உதவியுடன் நீங்கள் நிரலி எழுதி விற்கலாம். தப்பே கிடையாது. ஆனால், வெறுமனே ஜாவா நிரலியை எடுத்து “பாவ்லா” எனப் பெயர் மாற்றி விற்கக் கூடாது.

இரண்டாவது தற்காப்புக் கவசம் போல் ஜாவா மொழியைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. அதாவது, ரஜினி பெயரை வைத்து, அவரின் முகமொழியை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் மட்டுமே “கோச்சடையான்” எடுக்க முடியும். அது எவ்வளவு கேவலமாக இருந்தாலும், அந்த உரிமையை ரஜினி மட்டுமே தன்னுடையப் பிரியப்பட்டோருக்குத் தர இயலும். நானோ, அல்லது கமல்ஹாசனோ ரஜினியை வில்லனாக சித்தரித்து காமெடியனாக்க உரிமை கிடையாது. இதன் மூலம், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாவா நசுக்கல் சக்திகளிடமிருந்து மொழியைக் காப்பாற்ற இயலும்.

செல்பேசிகளை இயக்க தன்னுடைய ஆண்ட்ராய்ட் நிரலிக்கு ஜாவா போன்ற மொழியை கூகுள் தேர்ந்தெடுத்தது. பார்ப்பதற்கு ஜாவா போலவேத் தோற்றமளிக்கும். இயங்குவதற்கு ஜாவா போலவே இருக்கும். ஜாவா பயன்படுத்தினோருக்கு ஆண்டிராயிடின் டால்விக் (Dalvik) புழங்குவதில் சிரமமே இருக்காது. ஆனால், அதன் பெயர் ஜாவா இல்லை. டால்விக்; ஆண்டிராய்ட் (Android) வழங்கும் டால்விக்.

2006ல் இதை கூகுள் அறிமுகம் செய்கிறது. ஜாவா-வின் அன்றைய எஜமானரான “சன் (Sun) மைக்ரோசிஸ்ட”மும் இதை இரு கை தட்டி கரகோஷம் எழுப்பி வரவேற்கிறது. ‘இத…. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்! ஜாவா மொழி போல் ஆயிரம் மொழிகள் பூக்க வேண்டும். அவற்றில் எது வேகமாக இயங்குகிறதோ, எது பரவலாகக் கிடைக்கிறதோ, எது எளிதாக உபயோகமாகிறதோ… தொழிலுக்கேற்ற மாதிரி வித்தியாசப்படுத்திக்கணும்!’ என்கிறார் ஜாவா முதலாளி ஜொனாதன் ஷ்வார்ஸ்.

இரண்டாண்டுகள் செல்கின்றன. ஜாவா கைமாறுகிறது. இப்பொழுது ஆரக்கிள் நிறுவனம் வசம் ஜாவா இருக்கிறது.

திறமூலம் மெல்ல மெல்ல நிர்மூலமாகிறது. புதிய ஷரத்துகளின்படி ஜாவா மொழியை யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது மாறுகிறது. சும்மா வேடிக்கை பார்த்தால்… சரி. ஆனால், ஜாவா போல் எதுனாச்சும் இயங்கினால், எங்களின் ஆசி உங்களுக்குத் தேவை என செல்லமாக மிரட்டும் மொழி.

மேலும் வக்கீல் படையே ஆரக்கிள் வைத்திருக்கிறது. எங்கே, எவன் கிடைப்பான் என நாளொரு வழக்கும் பொழுதொரு கேஸுமாக ஜெயிப்பது ஆரக்கிளுக்கு கை வந்த கலை.

இதுவரை ஆண்டிராய்ட் டால்விக்-கிற்கும் ஜாவா-விற்கும் ஆறு வித்தியாசம் கூட கிடையாது என கற்பூரம் அடித்து பொதுவில் சத்தியம் செய்த கூகுள் மேலாளர்களின் தொனியும் மாறுகிறது. ஆரக்கிளுடைய ஜாவா மாதிரி எங்களுடைய டால்விக் இருப்பது ரொம்ப அகஸ்மாத்தானது. ஜாவா-வைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதனால், அதன் தோற்றமும் இன்ன பிறவும் டால்விக் நிரலியில் வெளிப்படலாம் என பூசி மெழுக ஆரம்பிக்கிறது கூகுள்.

இப்பொழுது அமெரிக்க வரலாறையும் கொஞ்சம் பார்த்துவிடலாம்.

அது 1946ஆம் வருடம். ஒன்றுக்கிருக்கும் கைக்குழந்தையின் அபிஷேகம் தன் மீது சிந்தாமலிருக்க பிளாஸ்டிக் திரைச்சீலையை எடுத்து அவசரத்திற்கு அரைக்கச்சை ஆக்குகிறார். புத்தாடையும் பாதுகாக்கப்படுகிறது. டயாப்பர் (Diaper) காப்புரிமையும் கிடைத்துவிடுகிறது. ஐந்தே ஆண்டுகளில் நியு யார்க்கின் நவநாகரிக வீதிகளிலும் வலம் வருகிறது. நூறு ரூபாய்க்கு பவுன் விற்ற அந்தக் காலத்து மதிப்பீட்டில் ஒரு மில்லியன் டாலருக்கு அந்த உரிமைக்காப்பை விற்றும் இருக்கிறார். தோய்க்கும் முறையாகட்டும்; உண்ணும் விதமாகட்டும்… அமெரிக்காவில் எதுவாக இருந்தாலும் உங்களுக்கென் ஒரு பாணி இருந்தால் அதை தனியுரிமைச் சான்றிதழ் வாங்கி காப்புரிமை பெற்றுவிட வேண்டும் என்பது மூலமந்திரம்.

”இந்தி – சீனி பாய் பாய்’” ஆக இருந்த மாதிரி ஜாவா-வை ஆரத் தழுவி ஆண்டிராட் டார்விக் உருவானது. ஜாவா மொழியில் எழுதிய எந்த நிரலியும் டார்விக் சூழலில் இயங்குமாறு கூகுள் செய்திருக்கிறது. நியாயப்படி பார்த்தால் இதற்கு ஜாவா உரிமையாளரான சன் மைக்ரோசிஸ்டத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஆனால், அண்ணன் – தம்பியாக இருந்த அந்தக் காலத்தில் ‘பொது எதிரி மைரோசாஃப்ட்டும் விண்டோஸும் ஒழிந்தால் சரி… கூகுள் சின்னப் பயல்’ என விட்டுவிட்டார்கள்.

இப்பொழுது ஆரக்கிள் வழக்குத் தொடுத்துவிட்டது. இதுதான் ஆரக்கிளின் வாதம்: “எங்களின் ஜாவா இடைமுகம் (API) ஓவியம் போன்றது. ஒரே ஒரு பிக்காஸோதான் இருக்க முடியும். அவர் உருவாக்கியதுதான் அசல் குவர்னிகா. மற்றதெல்லாம் டூப்பு.”

கூகுளும் உவமையில் பதிலடி கொடுத்தது: “ஜாவா என்பது நூலகம். அந்த நூலகம் பாரிஸில் இருக்கலாம். லண்டனில் இருக்கலாம். கன்னிமாராவாக இருக்கலாம். எந்தப் புத்தகம் எப்படி எடுக்க வேண்டும் என்பது நூல் நிலையம் சென்ற எவருக்கும் அத்துப்படி. ஒரு துறை சம்பந்தப்பட்டப் புத்தகங்கள் ஒருங்கேக் கிடைக்கும். புனைவுகள் இன்னொரு பக்கம் இருக்கும். அகரவரிசைப்படி இருக்கும். இதெல்லாம் எல்லா நூலகத்திலும் ஒரே மாதிரிதான். சில நூலகத்தில் மாடியில் அபுனைவுகளும், தரைத்தளத்தில் கதைப்புத்தகங்களும் வைத்திருப்பார்கள். அப்படித்தான் நாங்கள் கொஞ்சம் மாற்றி அடுக்கி இருக்கிறோம்.”

புத்தகங்களைக் காப்புரிமை ஆக்கலாம். அதை கூகுள் மதிக்கிறது. ஆனால், புத்தகங்களை எப்படி வைத்திருக்கிறோம் என அறிவிப்பதை காப்புரிமை ஆக்க இயலாது என்கிறது கூகிள்.

அதாவது, புத்தகத்தினுள் இருக்கும் விஷயங்கள் தொழில் இரகசியங்கள். நிரலி எப்படி இயங்கும் என்பதை உணர்த்தும் சூட்சுமங்கள். அவற்றை கூகுள் சுடவில்லை. ஆனால், லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் போடும் அட்டவணை என்பது ரகசியமே அல்ல. இன்ன இன்ன களங்கள் இருக்கின்றன என்று பட்டியல் போடுவதை காப்புரிமை ஆக்க முடியாது என்கிறது.

இது இப்போதைக்கு முடியாத பில்லியன் டாலர் கணக்கு வழக்கு. இதே போல் ஆப்பிள் கம்ப்யூட்டருக்கும் மைக்ரோசாஃப்டிற்கும் கூட போராட்டம் நெடுங்காலமாக நீடித்து இருந்தது. அதன் முடிவில் சொன்ன தீர்ப்பு, “பிரச்சினையைத் தீர்க்க ஓரிரு பாதைகளே இருக்கும்போது, காப்புரிமையெல்லாம் செல்லுபடி ஆகாது.”

அதைவிட ஆரக்கிள் தோன்றிய கதையோடு இந்த வழக்கை முடிக்கலாம். ஆரக்கிள் என்பது உங்கள் விஷயங்களை கணினியில் நம்பகமான முறையில் சேமிக்க வைக்க உதவும் மென்பொருள். இந்த மாதிரி “தரவுதளங்கள்” இப்படித்தான் இருக்க வேண்டும்… இவ்வாறுதான் இயங்க வேண்டும்… இந்த மாதிரிதான் செயல்பட வேண்டும் என ஒவ்வொரு நுண்விவரங்களையும் பொதுவில் எழுதி வைத்தவர் “ஐ.பி.எம்.” (IBM) நிறுவனமும் அதன் டெட் காட் (Ted Codd) என்பவரும். அவர்கள் சொன்னதையும் வெளியிட்டதையும் வைத்து உருவான ஆரக்கிளே இன்று ’நான் சொன்னதை நீ எப்படி செய்யலாச்சு’ என்பது கூகுளை சாடுவதே நிரலியின் விதி.