Tag Archives: Stories

சிறார் கதைகளும் ஆன்மிகமும் சற்றே ஜோதிடமும் – ஆர். பொன்னம்மாள்

ஆசானின் தளத்தில் அம்மாவைப் பற்றி பார்த்தபொழுதில் பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதிலும் எங்கோ சிம்மாசனத்தில் காந்தியைப் போல், ராமானுஜரைப் போல், ரஜினியைப் போல் அமர்த்தி வைத்து பின்பற்றுவோனை “நண்பர்” என்று வேறு சொல்லியிருந்தது ஊக்கமும் பெருமிதமும் கொள்ள வைத்தது.

ஜெயமோகன் எப்பொழுதுமே செயல்வேகமும் தண்மையான பரிந்துணர்வும் கொண்டவர். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெ.மோ. எப்பொழுது கடிந்து கொள்வார், எவ்வாறு அறச்சீற்றம் என்னை இடித்துரைக்கும் என்று புயல் கடந்த பிறகே உணர முடியும். அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.
ஜெயம் என்றால் எழுத்துப் பிசாசு, கதைசொல்லி. அம்மாவும் ஒரு வகையில் அவ்வாறே.

ஆர்.பொன்னம்மாள் – Tamil Wiki

விக்கி பக்கத்தைக் குறித்து அம்மாவிடம் காண்பித்தேன்; சொன்னேன்.

“நீயும் விக்கிப்பீடியா பக்கம் செய்யறேன்னு சொன்னே… என்னிக்காவது நேரம் கிடைக்கும்போது, ரிடையர் ஆனபிறகு செஞ்சுடுவே! நம்பிக்கை இருக்கு… ஒண்ணும் அவசரமில்ல!” என்றார்.

வாழும் போது கிடைக்கும் மரியாதை அட்சர லட்சம்!

ஆர்.பொன்னம்மாள் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

”கறுப்பர்களைச் சொல்லாமல் கதை சொல்லுங்களேன்”

மேற்குலகின் இலக்கிய வட்டத்தில் சிறுகதைகள் ஆழமான வாசிப்புக்கு போதுமானவை அல்ல என்பது பெரும்பான்மை வாதம். அந்தக் கருத்திற்கு சவால் விட்டு நிராகரிக்கும் ஆக்கங்கள் பரிசு பெறுகின்றன.

அந்த மாதிரியான படைப்பு – டீஷா ஃபில்யா எழுதிய “ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி? ”

இது எச்.பி.ஓ. தொலைக்காட்சியில் டிவி தொடராக வரப்போகிறது. பென் + ஃபாக்னர் விருது வாங்கியிருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் புகழைப் பெற்றிருக்கிறது.

இந்த மாதிரி பரிசுகள் பெறுவதற்கு முன், முதலில் ஒரு வெளியீட்டாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர் கொள்கின்றன. நிராகரிப்புக்குப் பிறகு நிராகரிப்பை எதிர்கொண்ட டீஷா, “ஒவ்வொரு புத்தக வெளியீட்டாளரும் அது “நல்ல பொருத்தம்” அல்ல என்று வலியுறுத்துகின்றனர். ஏன் இவ்வளவு பிரசுரகர்த்தாக்கள் என் தொகுப்பை திரும்ப அனுப்பினார்கள் என்று யோசிக்காமல் இருப்பது கடினம் என நினைத்தேன். அவர்கள் எல்லோரும் கறுப்பு (குணம்) என்னும் அடையாளத்தை அழித்து கருப்பினத்தவர்களின் கதைகளை எழுதச் சொன்னார்கள். அந்த மாதிரி கட்டுப்பாடுகள் இல்லாத பதிப்பகத்தார் கடைசியில்தான் கிடைத்தார்.” என்கிறார்.

கதைசொல்லி நாற்பதுகளில் இருக்கும் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி. பள்ளியில் ஓவியம் கற்றுக் கொடுப்பவர். அவளை ஒரு பொதுக்கூட்டத்தில் சந்திக்கிறோம். கலையையும் அறிவியலையும் ஒருங்கிணைத்து எவ்வாறு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் என்பதற்காக அந்தக் கல்வி மாநாடு நடக்கிறது. அவளுக்கு கருப்பின ஆண்கள் எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்பதன் மீது ஒரு கண். அந்த ஆடவனை அவளின் அம்மா ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவள் திறமையான இயற்பியலாளரை சந்திக்கிறாள். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால் அவசரப்படாமல் எச்சரிக்கையாக இருக்கிறார். முதல் சந்திப்பில் மணிக்கூறாக பேசுகிறார்கள். அவளின் வேலையைப் பற்றிப் பகிர்கிறாள். அவனும் தன் வேலையைப் பற்றிச் சொல்கிறான். இருவரும் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்கிறார்கள். இருப்பினும் முதலில் அவனுக்கு காதல் ஆர்வம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.

உறவின் வளர்ச்சியைப் பார்ப்பதுதான் கதையின் உற்சாகம்.

இந்த அற்புதமான கதையை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கதையை திற்ம்பட மொழியாக்கம் செய்த ஷ்யாமா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

புதிய புதினங்கள்: தமிழ் நாவல்கள்: வண்ணநிலவன் எழுத்துகள்

சித்திரா நதி = அழகிய நதி என்பது வடமொழிப் பெயர்; சிற்றாறு என்பது இதன் தமிழ்ப் பெயர்,

சிற்றாறென்பது பெற்றாலும் ஒரு
சிறியவர் மனப் பெருமைபோல்
சித்ரா நன்னதி பெருகி வாற
சித்ரம் பாரும்…

(முக்கூடற் பள்ளு – ருக)

கோதண்டராம நதி என்பது, கழுகுமலைப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் சிறு வாய்க்கால். இதன் நீர் சிறிது உப்பாயிருப்பதால் உப்போடையென்றும் வழங்கப் பெறும்.

இந்த நதியைப் பற்றி கதையொன்று உண்டு. மானைத் தேடி வந்த இராமபிரான், தாக மிகுதியினால் பக்கத்திலிருந்த ஆனைமலையில் இருந்து ஆனைநதி (கஜநதி – கயத்தாறு) வருமாறு பணித்தார். இதில் வந்த நீர் உப்பாயிருக்கவே, தம் கோதண்டத்தைப் பூமியில் ஊன்றிக் கங்கையை வரவழைத்துத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டார்.

முக்கூடல் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் தாமிரவருணி நதியின் வடகரையிலுள்ள சிறு கிராமம், மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் இருப்பதால் முக்கூடலாயிற்று. முன் காலத்தில் சித்திரா நதியும் கோதண்டராம நதியும் இவ்வூரில் வந்து பொருநையில் கலந்தமையால், இவ்வூருக்கு இப்பெயர் வந்தது.

இந்த மாதிரி மூவுலகின் சங்கமமாக வண்ணநிலவன் எழுதும் அடுத்த நாவலின் முதல் அத்தியாயம் வெளியாகி இருக்கிறது.

வாக்குமூலம் – வண்ணநிலவன்

நடுத்தர வர்க்கம். சென்னைக்கு இடப்பெயர்வு. வானொலிப் பாடல் என அந்த நாள் நினைவும் நெல்லையும் கலந்துகட்டி வந்திருக்கிறது.

திருநெல்வேலி அல்வாவை விழுங்குவது போல எளிதாக எழுதுகிறார் வ.நி. அது வாசிப்பிற்கு நல்ல சௌகரியம்.

என் அம்மாவிற்கு சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி. அது எழில் மிக்க சிற்றுார். கனடியன் வாய்க்கால் பற்றி கதை கதையாகச் சொல்வார். அதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். இங்கே வண்ணநிலவன் அமர்க்களமாகத் துவங்கியிருக்கிறார்.

சொல்வனம் ஒளிவனம் மற்றும் ஒலிவனம்

வீடியோ என்பது டிக்டாக் பார்வையாளர்க்கானதாக மாறிப் போய் கொஞ்ச காலம் ஆகி விட்டது. இணையத்து நேரத்துப் படி கணக்கிட்டால், பல்லாயிரம் ஆண்டுகள் என்றுகூட சொல்லலாம்.

முப்பது நொடிகளுக்கு மேல் எதையும் ஒருமித்துப் பார்க்க மாட்டார்கள். ஒரு நிமிடத்திற்கு மேல் எதையும் கவனமாகக் கேட்க மாட்டார்கள். நித்தியானந்தா, டப்ஸ்மாஷ், ஸ்ம்யூல் என்றால் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருப்பார்கள்.

இந்த காலகட்டத்தில் சொல்வனம் யூடியுப் கன்னலும் #solvanam ஸ்பாடிஃபை ஒலிப்பதிவுகளும் நவம்பர் 28, 2020 அன்று துவங்கப்பட்டன. சரஸ்வதி தியாகராஜன், அனுராதா கிருஷ்ணஸ்வாமி, வித்யா சுபாஷ், விஜயலஷ்மி, ஸ்ரீரஞ்சனி என்று பலரும் தோள் கொடுத்து முன்னெடுத்தனர்.

விளம்பரங்கள் இல்லாமல், கூகுள் ஆட்சென்ஸ் முன்னெடுப்புகள் இல்லாமல், சமூக ஊடகத்தின் தொடர்ச்சியான கவர்ச்சிகள் இல்லாமல், இன்றைய புள்ளி விவரங்கள்:

  • சந்தாதாரர்கள் – 105
  • பார்வையாளர்கள் – 4,381
  • மொத்த பார்வை நேரம் – 148.1 மணி நேரம்
  • அதிகம் பேர் பார்த்த விழியம் – எழுத்தாளர் தி.ஜானகிராமன்
  • பாட்காஸ்டிங்: ஸ்பாடிஃபை / ஆன்கர் எஃப்.எம் கேட்டவர்கள்: 4,449
  • அதிகம் பேர் கேட்ட கதை: கமல தேவியின் “அமுதம்” சிறுகதை – 3,467
  • பெரும்பாலானோர் ஒலிப்பதிவை கேட்டதில் அடுத்த இடம் பிடித்தது: கிருத்திகாவின்“மணப்பு” – 509
  • மொத்த பதிவுகள் – 195

தொடர்புள்ள பதிவு:

நவம்பர் 28, 2020ல் துவங்கினாலும் ஜூலை 18, 2021 அன்று இந்த வேகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அதற்கு ஒரே காரணம் Saraswathi Thiagarajan.

கிட்டத்தட்ட ஒரு எந்திரம் போன்ற தயாரிப்பு நேர்த்தி. ஒரு அன்னையைப் போன்ற பாசத்துடன் எழுதியவர்களுடன் உரையாடல். ஒரு தேர்ந்த தொழில்நுட்ப ஜாலகர் போல் உருவாக்க நேர்த்தி. ஒரு சம்பளத்தை எதிர்நோக்கி நம்பியிருக்கும் ஊழியர் போன்ற தினசரி தயாரிப்பு. ஒரு குழந்தையைப் போன்ற ஆர்வம். ஒரு வித்தகர் போன்ற சிரத்தையும் உருவாக்கமும் ஒருங்கிணைப்பும் #சொல்வனம் வழங்கும் ஒளிவனம் படைப்புகளை கொண்டு வந்திருக்கின்றன.

அவருக்கு என்னுடைய சிரம் கூப்பிய நன்றிகளும் வாழ்த்துகளும்.

இந்த ஒலிப்பதிவுகளில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

  1. – பவா செல்லத்துரை போல் எளிமையான கதை சொல்லல்
  2. – நேர்காணல்கள், பேட்டிகள், சந்திப்புகள், உரையாடல்கள்
  3. – அன்றாட சம்பவங்களை ஒட்டிய பேச்சுகள், விளக்கங்கள்
  4. – சுருக்கமான, கவர்ச்சியான ஒளிவடிவங்கள்: கதைக்கான முன்னோட்டங்கள்; நாவல் சுருக்கங்கள்; இலக்கிய விமர்சனங்க்ள்
  5. – அதெல்லாம் வேஸ்ட்: இலக்கிய வம்புகள், பத்திரிகையாளரின் கிசுகிசுக்கள், அரட்டை
  6. – வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போன்ற வடிவங்கள்
  7. – என்.எஃப்.டி. கொடுத்து உரிமம் வாங்குதல்

அது சரி…

தமிழில் ஒளிப்பதிவுகள், வெப்3, மெடாவேர்ஸ் எல்லாம் எப்படி இருக்கிறது?

இசையை, ஓவியத்தை, படைப்பை உருவாக்குவோர் இடைத்தரகர் இல்லாமல் டிஜிட்டல் சேகரிப்புகளை விற்று கல்லா கட்ட ஆரம்பித்து விட்டார்களா?

தொடர்புள்ள செய்திகள்

Spotify draws up plans to join NFT digital collectibles craze: Job ads fuel excitement in crypto and music industries over potential of NFTs to boost artists’ earnings

https://www.ft.com/content/9e77bf41-5814-4c18-96f6-f800f6b41216

Spotify is drawing up plans to add blockchain technology and non-fungible tokens to its streaming service, fuelling excitement in the crypto and music industries about the potential of NFTs to boost artists’ earnings.

Facebook founder Mark Zuckerberg confirmed a Financial Times report earlier this year that Instagram would soon start to support NFTs. Other social media companies, including Twitter and Reddit, are also working to build new features for displaying or trading NFTs. Highlight text NFTs use blockchain technology to certify ownership of digital assets. The vast majority of the $17.7bn worth of NFTs traded last year were for visual artworks, games and collectibles,

Chennai and Crypto art

https://www.thehindu.com/sci-tech/technology/internet/nft-madras-week-madras-musings-event-krish-ashok-twobadour-laya-mathikshara/article36135468.ece

“We are amidst a renaissance — the crypto space is a convergence of technology, financial instruments that is driven by culture for the first time,” said Venkateswaran. “The Bitcoin, Altcoin, ICO boom and bust, etc, were driven by financial instruments, whereas NFTs are fed by culture. Now, there is a place for artists and musicians like us, which is why the work created here becomes valuable. You don’t see a lot of traditional art buyers – people who buy crypto art get the concept and are bankrolling the renaissance,” he added at the event organised by Madras Musings .

Mathikshara, who sold her first NFT in May for 0.39 ETH (approximately ₹90,500) on the platform Foundation, sees art as something you collect without any financial benefit. The conversation that explored everything from bitcoins and crypto art to digital tools and the ever expanding metaverse, also addressed the future of art galleries. “An NFT is a digital certificate of ownership of an asset — art, virtual land, wearable, etc. Unlike any other certificate, it cannot be destroyed and it completely does away with the middleman. We don’t need to depend on art galleries or curators now,” explained Twobadour, adding how NFTs are the most useful way to get into crypto space.

குக்குரன்

அரூ: கனவுருப்புனைவு காலாண்டிதழ் – அறிவியல் சிறுகதைப் போட்டி முடிவுகளை முன்வைத்து சில அறிமுகக் குறிப்புகள்

ஒவ்வொரு கதையும் ஒரு நாயைப் போல. சில வளர்ப்பு நாய்கள் தங்களின் எசமானர்கள் சொன்னபடி கேட்டு நடக்கும். பெரும்பாலான ஜாதி நாய்கள் தங்கள் பெருமைக்கேற்ப நடந்து கொள்ளும். தெருவில் சுயம்புவாக விடப்பட்ட அனாதரவான நாய்கள் விதவிதமாக தங்கள் சுயரூபத்தை சமயத்திற்கேற்ப காட்டும்.

இந்தப் போட்டில் வெற்றிபெற்ற கதைகளும் அந்த நாய்களைப் போன்றவை. சில கதைகள் தங்கள் புனைவாளரின் நடைக்கும் பாவனைக்கும் கட்டுப்பட்டவை. அனேக கதைகள், ஜாதி நாய்களைப் போல், தமிழில் வரும் அறிவியல் புனைவுகளுக்கே உரிய வகையில் அமைக்கப்பட்டவை. தெரு நாய்கள் போல் சுதந்திரமான போக்கில் தான்தோன்றித்தனமான கதைகளும் இருக்கிறது.

போட்டி முடிவுகளை இங்கே பார்க்கலாம்.

அரூ போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் - தமிழ் எழுத்தாளர்கள்

ஒவ்வொரு கதைக்கும் ஒரு குறியீட்டை வைத்து அறிமுகம் செய்து வைக்கலாம். இன்று எடுத்துக் கொண்டிருக்கும் படைப்பு: பல்கலனும் யாம் அணிவோம்ரா.கிரிதரன்.

அப்பாவுடன் புராதனமான கோயில் வளாகத்துக்குச் சென்றபோது, “மயக்கும் கண்களைப் பாருடா. எப்படிச் செருகிக்கிடக்கு பார். தூங்கறான்னு நினைச்சியா? மனசு அப்படியொரு விழிப்போடு இருக்கு.” என்பார். “மனசா?”. “ஆமாம்,” எனச் சொன்னவர் என் கண்களை நேராகப் பார்க்கவில்லை. மனசு என்பது புராணப்பொருள். இன்றைக்கு மனசுக்குள் இருக்கும் பல அடுக்குகளுக்கு இடையே செய்தி பகிர்ந்துகொள்ளும் விதம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அப்பாவிடம் கேட்டால், அந்தச் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொண்டால்கூட மனதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பார். மனசு எனப் பேசுவதுகூடப் பழைய பாணி ஆகிவிட்டது. பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த மூத்தக்கிறுக்கர் வரிசையில் உங்களைச் சேர்த்துவிடுவார்கள்.

நாய்க்குட்டியை வளர்ப்பதற்கென்று விதிமுறைகள் இருக்கின்றன. அதனுடன் நிறைய நேரம் செலவிட வேண்டும். அது பீ பெய்வதற்கு, அந்த நாய்க்குட்டி எங்கெல்லாம் இழுக்கிறதோ அங்கெல்லாம் செல்ல வேண்டும். அந்த நாய்க்குட்டி திடீரென்று பின்னிரவு இரண்டரை மணிக்கு உங்களை எழுப்பும். அப்பொழுதும் கவனமாக விழிக்க வேண்டும். நாய்க்குட்டிகள் அச்சுபிச்சென்று வெறி கொண்டு துள்ளியோடும். அப்பொழுது அதைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு, கொஞ்சினால், உறவாடினால்… உங்களிடம் பெட்டிப் பாம்பாக உள்ளடங்கி வசப்படும். அதற்கு பதிலாக, அந்த மாதிரியான வெறியாட்டா நேரங்களில், அதனுடன் முரண் கொண்டு விளையாடினால், கவனமாக நம் உடம்பை ரணமாக்காமல் பாதுகாப்பாக ஓட வேண்டும். நாய்க்குட்டிகள் வளர்ந்து முதிர்ச்சியடைய இருநூறு நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டும். நன்றியுள்ள நாயை அடைய எருமைப் பொறுமை அவசியம்.

இந்தக் கதையும் நாய்க்குட்டி போல் தறிகெட்டு ஓடுகிறது. எதற்காக எந்த வாயிலைப் பிராண்டுகிறது என்பது புலப்படுவதற்குள் அடுத்த ஏவுகணையை நோக்கி ஓடுகிறது. நிறைய நேரமும் சிரத்தையும் கவனத்தையும் கோருகிறது. மீண்டும் மீண்டும் சொன்னதையேத் திரும்பச் சொல்லி நாய்க்குட்டிக்கு புரிய வைப்பது போல், சில பத்திகளை மீண்டும் மீண்டும் வாசித்து புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. முக்கியமான திறப்புகளை இந்தக் கதை மூலம் அடைய எருமைப் பொறுமை அவசியம்.

கதையின் பலங்கள்

  • அக்காவிற்கும் தம்பிக்குமான பாசம்
  • அப்பா மேல் உள்ள ஆதர்சம்
  • வேதாந்த மேற்கோள்கள்
  • கனவு விவரிப்புகள்

கதையின் சவால்கள்

  • தற்கால சிறு பத்திரிகை வாசிக்கும் தமிழ் வாசகர்களை குறிவைத்த அசுவாரசிய நடை
  • கதாமாந்தர்கள் மீது ஈர்ப்போ இரக்கமோ ஏற்படாத தன்மை
  • நிறைய பொறுக்கு தகவல்கள் ஏற்படுத்தும் குவியமின்மை

இங்கே வாசிக்கவும். உங்கள் வாசிப்பின் முடிவில் என்ன தோன்றுகிறது என்பதைப் பகிருங்கள்.

உடன்வந்தி அருநிழல்

தெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.
: பிரேம் – ரமேஷ்
16-03-2006

அமெரிக்கக்காரி சிறுகதையை முன்வைத்து

புழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய?!” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.

இந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.

அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.

அமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.

அந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.

~oOo~

காதலில் கூச்சங்கள் கிடையாது

confidence_confession

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

அமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது!’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.

இந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா?’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.

~oOo~

a-shadow-on-the-cloud-is-the-shadow-of-this-very-same-plane-on-the-picture-taken-on-a-flight-from-4

உடன்வந்தி அருநிழல்

இதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:

கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

விமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்?

நிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.

இதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம்? இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி?

அ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.

டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”

~oOo~

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

டேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன? ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது? அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா?’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’

டேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.

உதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.

முத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.

சுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.

roulette-wheel

சூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்?

நல்ல சுவாரசியமான அறிபுனை கதைக்கு ஒரு உதாரணம்

2013ல் புலிட்சர் பரிசு பெற்ற ஆடம் ஜான்சன் இந்த மாத Esquireல் கதை எழுதியிருக்கிறார். தற்கால காலச்சுவடு, சொல்வனம்.காம் போன்ற இதழ்களில் வரும் எந்தப் புனைவும் இதற்கு நிகரானவையே.

கதை ஏன் என்னை கவர்ந்திழுத்தது? சிறுகதையின் தலைப்பு ‘நிர்வானா’. அது எனக்கு ரொமபவேப் பிடித்த இசைக்குழு.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ரக ஆரம்பம். திடீரென்று வாயில் நுழையாத வியாதி வந்த மனைவி. கை, கால் இழுத்துக் கொண்டுவிடுகிறது. அவளை மிகவும் அனுசரித்துப் பார்த்துக் கொள்ளும் கண்கண்ட கணவன் என்று பீம்சீங் காலத்து உருகல். ஆனால், அதை கவுதம் வாசுதேவ் மேனன் நடையில் சொல்லியிருக்கிறார். செயலிழந்த உறுப்பு கொண்ட அவர்களுக்கிடையேயான உடலுறவு சொல்லும்போது கூட நன்றாகவே உரு ஏற்றுகிறார்.

இலக்கியத்தில் அடிக்கடி கேட்கப்படும் வாசகம் ‘தட்டை’. இந்தக் கதையில் அதைக் காணோம். களன் சிலிக்கான் பள்ளத்தாக்கு. நாயகனும் கண்டுபிடிக்கிறான். அதுவும் எந்த சமயத்தில்? மனைவியை கண்ணும் கருத்துமாக விழித்திருந்து கவனித்துக் கொண்ட பதினைந்தே நாள்களில் ’ஹாலோகிராம்’ மனிதர்களை உருவாக்குகிறான். சாதாரண hologram அல்ல. சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியின் உருவத்திற்கு உயிர் தருகிறான். இணையம் மூலமாக அவரின் விழியப்படங்களையும் ஒளிப்படங்களையும் நடை உடை பாவனைகளையும் இணைத்து உலவ விடுகிறான்.

இந்த மாதிரி ஹோலொகிராம் உருவாக்குவதால் என்ன பிரச்சினைகள் எப்படி எல்லாம் எழும் என்பதையும் அறிபுனைவாக அலசுகிறது சமூகப் புனைவு. எல்லோரும் பொய் உருவங்களைக் கோரி அவனிடம் வருகிறார்கள். அவனே அந்த மாதிரி ஒரு தோற்றத்தை சரி செய்யும் reputation management பணியாளன். இப்பொழுது இறந்து போன நிர்வாணா குழுவின் கர்ட் கோபேனுக்கு நிகர் உருவாக்குவது சரி… வாழ்ந்து கொண்டிருந்தாலும் அசைவற்ற மனைவிக்கு நிகர் உருவாக்குவது கூட சரி… ஆனால், ஃபேஸ்புக்கில் எக்குத்தப்பான படம் போட்டுவிட்டு அதை அகற்ற போலி நிகர் உருவாக்குவது எப்படி சரி?

இது எதிர்கால உருவகம். கூடவே, சமகால கூகிள் கண்ணாடியும் ஆளில்லாமல் பறக்கும் விமானங்களும் வருகிறது. அவனே இயந்திரகதியில் இயங்குவதை இந்த இரண்டு வன்பொறிகளும் உணர்த்துகின்றன. எவரோ இயக்க, எங்கோ பறந்து, எவற்றையோ பார்க்க வைக்கும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் drone, மனைவிக்கு புது உலகத்தைக் காட்டுகிறது. கட்டிலிலும் நரம்புகள் எங்கும் ஊசித் துளைப்பாக முடங்கியவரை, தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

இருபது பக்க சிறுகதை எழுதுவது பெரிய விஷயமல்ல… நாலு அறிவியல் கண்டுபிடிப்புகளை புனைவில் தூவுவது பெரிய விஷயமேயல்ல… நேற்று தோன்றிய வியாதிகளை விவரிப்பது புதிய சரக்கேயல்ல… கவித்துவமாக உருவகங்களை உலவ விடுவது சங்கத்தமிழ் சங்கதி… ஆனால், எல்லாவற்றையும் சுவாரசியமாக, பக்கங்களை ஆர்வமுடன் புரட்டுமாறு ஒரே கதையில் புழங்க விடுவது மிகப் பெரிய விஷயம்.

தமிழில் நான் எழுதினால் மட்டுமே சாத்தியம்.

Haruki Murakami’s After the Quake: Short Story Collection: Book Intro

ஹரூகி முரகாமி எழுதிய சிறுகதை தொகுப்பை வாசித்தேன். ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்திற்கு பின் நிகழ்ந்த சம்பவ மாந்தர்களை அறிமுகம் செய்கிறது. கூடவே கொஞ்சமாய் தொட்டுக்க பயங்கரவாத செயலான நச்சுப்புகை கொலைகளையும் வைத்துக் கொள்கிறது.

திருமணமான பிறகு நிலவும் வெறுமை; பதின்ம வயது வெறுமை; எல்லா கதைகளிலும் ‘எதற்காக ஓடுகிறோம்? என்ன வாழ்க்கை இது? என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி…’ என்று திடீரென்று விட்டேத்தியானவர்களின் நிலையை விவரிக்கிறது. ஏன் அவர்கள் இப்படி ஆகிப் போனார்கள் என்பதை கொஞ்சம் தொட்டுக் காட்டி, வாசகனுக்கே பாக்கியை விட்டுவிடுகிறார்.

அமைதியான ஆரம்பம்; நேர்க்கோட்டில் கதை பயணித்தாலும், எல்லாவற்றையும் விளம்பாத விவரிப்பு. சூட்சுமமாக முடிக்க வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்காத முடிவுகள்.

பூகம்பமும் தீவிரவாதமும் நம்முடைய இயலாமையை உணரவைத்தாலும், உதவுவதும் தெனாவட்டும் நம்மை மீட்டெடுப்பது கதைகளின் அடிநாதம்.

தொகுப்பின் பெயர் ‘ஆஃப்டர் தி க்வேக்’