Tag Archives: Shyama

”கறுப்பர்களைச் சொல்லாமல் கதை சொல்லுங்களேன்”

மேற்குலகின் இலக்கிய வட்டத்தில் சிறுகதைகள் ஆழமான வாசிப்புக்கு போதுமானவை அல்ல என்பது பெரும்பான்மை வாதம். அந்தக் கருத்திற்கு சவால் விட்டு நிராகரிக்கும் ஆக்கங்கள் பரிசு பெறுகின்றன.

அந்த மாதிரியான படைப்பு – டீஷா ஃபில்யா எழுதிய “ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி? ”

இது எச்.பி.ஓ. தொலைக்காட்சியில் டிவி தொடராக வரப்போகிறது. பென் + ஃபாக்னர் விருது வாங்கியிருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் புகழைப் பெற்றிருக்கிறது.

இந்த மாதிரி பரிசுகள் பெறுவதற்கு முன், முதலில் ஒரு வெளியீட்டாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர் கொள்கின்றன. நிராகரிப்புக்குப் பிறகு நிராகரிப்பை எதிர்கொண்ட டீஷா, “ஒவ்வொரு புத்தக வெளியீட்டாளரும் அது “நல்ல பொருத்தம்” அல்ல என்று வலியுறுத்துகின்றனர். ஏன் இவ்வளவு பிரசுரகர்த்தாக்கள் என் தொகுப்பை திரும்ப அனுப்பினார்கள் என்று யோசிக்காமல் இருப்பது கடினம் என நினைத்தேன். அவர்கள் எல்லோரும் கறுப்பு (குணம்) என்னும் அடையாளத்தை அழித்து கருப்பினத்தவர்களின் கதைகளை எழுதச் சொன்னார்கள். அந்த மாதிரி கட்டுப்பாடுகள் இல்லாத பதிப்பகத்தார் கடைசியில்தான் கிடைத்தார்.” என்கிறார்.

கதைசொல்லி நாற்பதுகளில் இருக்கும் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி. பள்ளியில் ஓவியம் கற்றுக் கொடுப்பவர். அவளை ஒரு பொதுக்கூட்டத்தில் சந்திக்கிறோம். கலையையும் அறிவியலையும் ஒருங்கிணைத்து எவ்வாறு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் என்பதற்காக அந்தக் கல்வி மாநாடு நடக்கிறது. அவளுக்கு கருப்பின ஆண்கள் எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்பதன் மீது ஒரு கண். அந்த ஆடவனை அவளின் அம்மா ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவள் திறமையான இயற்பியலாளரை சந்திக்கிறாள். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால் அவசரப்படாமல் எச்சரிக்கையாக இருக்கிறார். முதல் சந்திப்பில் மணிக்கூறாக பேசுகிறார்கள். அவளின் வேலையைப் பற்றிப் பகிர்கிறாள். அவனும் தன் வேலையைப் பற்றிச் சொல்கிறான். இருவரும் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்கிறார்கள். இருப்பினும் முதலில் அவனுக்கு காதல் ஆர்வம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.

உறவின் வளர்ச்சியைப் பார்ப்பதுதான் கதையின் உற்சாகம்.

இந்த அற்புதமான கதையை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கதையை திற்ம்பட மொழியாக்கம் செய்த ஷ்யாமா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!