சமீபத்தில் இரு நல்ல புனைவு வாசிக்க கிடைத்தது. அவை:
1. சத்யராஜ்குமார் :: மைய விலக்கு « இன்று – Today
2. ரா. கிரிதரன் :: வார்த்தைகளின் விளிம்பில்: தேவதைகள் காணாமல் போயின – சிறுகதை
அவற்றை முடித்து விட்டு இந்தப் பதிவைப் படிப்பது கதைகளுக்கு நீங்கள் செய்யும் ஷேமம்.
மேற்கோள் மூலை
ச.ரா.குமார் கதையில் இருந்து கவர்ந்த இரு இடங்கள்:
அ) இன்பாக்சில் நிஷா அனுப்பிய மின்னஞ்சல். ரொம்பவும் கோபமாகி விட்டால் நிஷா இமெயிலில்தான் பேசுவாள். பத்து கிலோ பைட்களுக்கு திரையில் தெரிந்தது அவள் கோபம்.
ஆ) ‘நீயும், நிஷாவும் ஏன் இப்படி கஷ்டப்படணும்? பார்த்துக்க ஆயிரம் பேர் இருக்காங்க. இங்கே நிறைய சொகுசு இருக்கு. ஆனா லைஃப் இல்லை. நாலு சுவத்துக்குள்ள நாம நாலு பேருமே முகத்தைப் பார்த்துக்கிட்டு… மெட்ராசுக்குப் போயிரலாம்டா.’
ரா.கி.யில் கவர்ந்தவற்றிற்கு சாம்பிள்:
அ) ஜீரணமாகாத உணவை தள்ள முயற்சிப்பதுபோன்ற கடலின் முயற்சி ஒவ்வொறு முறையும் அலையென தோற்கும் காட்சி வியப்பானதே. எதைஎதையோ விழுங்குவதும், பின்னர் எதுவுமே தெரியாதுபோல் கிடப்பதும் இதற்கு வாடிக்கையாகிவிட்டது.
ஆ) ஜப்பான் நாட்டவர்களின் முகவடிவம், எங்கு ஆரம்பித்தாலும் கூர்மையான தாடையிலேயே விழும்.
ஆறு வித்தியாசங்கள்
இரு கதைகளுமே அதிர்ச்சி அல்லது வித்தியாசமான முடிவில் நம்பிக்கை கொண்டவை. இரு கதைகளுக்குமே அது தேவையில்லை என்பது வேறு விஷயம்.
ஒன்று போட்டிக்காக எழுதப்பட்டது. மற்றொன்று அந்தவித நிர்ப்பந்தங்களுக்குட்பட்டு உருவாகாவிட்டாலும், போட்டியில் கலந்துகொள்வதற்கான முஸ்தீபுகளும் முகாந்திரங்களும் நிறைந்தது.
வார்த்தைகளின் விளிம்பில் நிற்பவரிடம் கதை ஜாஸ்தி. இன்று – டுடேவிடம் மூக்கு மேல் வரவைக்கும் விவாதப்புள்ளிகள் ஜாஸ்தி.
விமர்சனம்
சத்யராஜ் கதையில் விமர்சிக்க விஷயம் ஏதுமில்லை. பட்டிமன்றம் மாதிரி இன்னும் கொஞ்சம் எண்ணவோட்டமோ, உரையாடல் மன்றமோ கட்டி, மெரீனா பீச் மணல் அளவு வியாபிக்க கூடிய சமாச்சாரத்தை சுண்டல் மாதிரி பொட்டலம் கட்டி இருக்கிறார்.
குறைந்த பட்சம் அந்த மின்னஞ்சலையாவது அனுபந்தம் ஆக்கி இருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கிறது.
oOo
காதலியின் நினைவுகள் என்று இன்னொரு கதை எவராவது எழுதினால் அலுவலை நோக்கி(யே) வடக்கிருக்கலாம் என்று எண்ணுமளவு அலுத்துப் போன டாபிக்கில் பூந்து விளையாடியிருக்கிறார் கிரி. சம்பிரதாயமான ஆரம்பம்.
இத்தினியூண்டு கதையில் உலாவும் அத்தனை பாத்திரங்களுக்கும் மனதில் நிற்கும் அறிமுகங்கள். தண்ணீரில் மிதக்கும் ப்ளாஸ்டிக் ஆக, கவிஞர்களே உவமைகளுக்கு பஞ்சம் பாடும் இந்தக் காலத்தில் சக்கையான தக்கை கொண்ட மிதவையான உறுத்தாத பயன்பாடு அமர்க்களம்.
அப்படியே, ‘நான் அந்தக் காலத்தில் லால் கிலாவில் இப்படித்தான்…’ என்று காதலி காலடி தேட வைப்பதே கதையின் வெற்றி.
இருவருக்கும் என் நன்றி.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Accidents, America, Authors, கதை, சிறுகதை, பிடித்தவை, புனைவு, வாசிப்பு, விமர்சனம், Contests, Cool, Father, Fiction, Giri, Guilt, Kids, KSRK, Life, Love, Net, Parents, Pondy, Quick, Raa Giridharan, Read, Refer, Satyarajkumar, Story, Suggestions, Tamil, Thinnai, Traffic, US, USA, Web, Writers