Tag Archives: தலைமை

எழுத்தாளர் + சிந்தனையாளர் + குரு = இயக்கம்?

எந்தவொரு எழுத்தாளருக்கும் இல்லாத தலைமைப் பண்பு ஜெயமோகனிடம் இருக்கிறது. வெறுமனே ஃபேஸ்புக் குழு, மின்னஞ்சல் அரட்டை என்று இல்லாமல் செறிவான விவாதம், பண்பட்ட மாற்றுக்கருத்துகளுக்கு இடம், பரஸ்பர அறிமுகம், செல்ல சீண்டல், கடுமையான எதிர்வினை எல்லாவற்றுக்கும் தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். மடல்கள் தொய்யும்போது தானே நுழைந்து உரையாடலை மேம்படுத்துகிறார்.

அந்தக் குழுவில் அங்கத்தினராக இருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. மனநிறைவை மட்டுமல்லாது, சுற்றுலா செல்லும்போது அவர்களை நேரடியாகப் பார்த்து உரையாடும் வாய்ப்பையும் தருகிறது.

ஜெயமோகனின் சொல்புதிது குழும நண்பர்களை லண்டனில் சந்தித்தேன். விமான நிலையத்திற்கே வந்து பெட்டி படுக்கைகளை எடுக்க உதவிய கிரி, காடு நாவலுடன் காணக் கிடைத்த எஸ்ஸெக்ஸ் சிவா, படு பாந்தமாக பேசிக் கொண்டிருந்த பிரபு என்று சுவாரசியமான பேச்சு. சிறில் அலெக்ஸும் வந்திருந்தால் இன்னும் கனஜோராக இருந்திருக்கும் என்பது தவிர வேறெந்த குறையும் இல்லாத மாலைப்பொழுது.

தமிழில் எழுதும் எல்லாரையும் தெரியும்னு சொல்லலாம்தான்… ஆனால், அவர்களுக்கு என்னைத் தெரியுமா : )

மேலும், இங்கே நான் சொல்வது தலைமை தாங்கி வழிநடத்தும் குணாதிசயத்தைக் குறித்தது…

ஒருவர் நல்ல சுவாரசியமான/முக்கியமான படைப்பு எழுத்தாளராக இருப்பது வேறு விஷயம். அந்த நல்ல எழுத்தாளரே வழிகாட்டியாக இருந்து, பலரை ஒருங்கிணைத்து, மக்களிடம் செல்வாக்கும் நிறைந்து, அவர்களிடம் செயலாற்றலையும் தோற்றுவித்து, தன்னுடைய வாசிப்பாளர்களுக்கு தன்னிறைவையும் தந்து, அவர்களின் கிரியாஊக்கியாகவும் விளங்குவதை குறிப்பிட நினைக்கிறேன்.

நன்றி ஜெயமோகன்.