அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது நவம்பர் ஆறாம் தேதி தெரிந்து விடும். ஜனாதிபதி ஆனவுடன் முதல் விருந்தை இந்தியாவிற்கு தந்து கௌரவித்த ஒபாமாவா? அல்லது பால்ய வயதிலேயே, இருபதாண்டுகளுக்கு முன்பே அவுட்சோர்சிங் செய்து இந்தியர்களின் கணக்குப்பிள்ளை சூட்டிகையை உலகுக்கு அறிவித்த மிட் ராம்னியா?
மிட் ராம்னியை அறிமுகம் செய்யுமுன் புகழ்பெற்ற மகாபாரதக் கதையை பார்த்து விடலாம்.
பாண்டவர்களில் மூத்தவர் தருமபுத்திரர் வீட்டில் விருந்து. ஏக தடபுடலாக ஆயிரக்கணக்கானோர் விதவிதமான உணவுகளை ருசித்து மகிழ்கிறார்கள். கை கழுவும் இடத்தில் அணில் ஒன்று புரண்டு புரண்டு குளிக்கிறது. முதுகுப்புறம் மட்டும் தங்கமாக ஜொலிக்கிறது. இந்த விநோதத்தை கிருஷ்ணர் சுட்டுகிறார். அணிலை அழைத்து எவ்வாறு அது தங்க நிறம் அடைந்தது என்று விசாரிக்கிறார்.
அது தன் பூர்வ கதை சொல்கிறது. ‘பக்கத்து குக்கிராமத்தில் ஏழை விவசாயி இருக்கிறார். தன் மனைவியுடனும் மகனுடனும் வசிக்கிறார். அன்றாடங்காய்ச்சி. தினசரி உணவை மூன்று பங்காக்கி உண்பார்கள். சாப்புடறப்ப கதவு தட்டற சத்தம். வாசலில் பிச்சை கேட்டு வந்தவனை உள்ளே அழைக்கிறார்கள். தங்கள் கஞ்சியை நான்காகப் பிரித்து ஒரு பகுதியை அவனுக்குக் கொடுத்தார்கள். போதாது என்றான். குடும்பத் தலைவன் தன் பங்கைக் கொடுத்தான். போதாது… இன்னும் வேண்டும் என்கிறான். மனைவியும் மகனும் தங்கள் சோறைக் கொடுக்கும் வரை விடாமல் கேட்டு சாப்பிட்டு விடுகிறான். அவன் கை கழுவிய தண்ணீர் என் மேல் பட்டதால் என் பின்புறம் தங்கமானது’ என்கிறது.
பராக் ஒபாமாவை எதிர்க்கும் மிட் ராம்னிக்கு இந்தக் கதை நிச்சயம் ரொம்ப பிடிக்கும்.
ஏழைகளின் வருவாயில் இருந்து கொஞ்சம் பங்கு போட்டு பணக்கார பிச்சைக்காரர்களுக்கு தர வேண்டும். அதன் மூலம் அவர்கள் கை கழுவி செலவழிப்பார்கள். அதனால் தளர்ந்த அமெரிக்கா முழுக்க தங்கம் மிளிறும் என்கிறார்.
கடந்த நான்காண்டுகளில் ஒபாமாவினால் அமெரிக்காவை பொருளாதாரத்தில் தலை நிமிர வைக்க முடியவில்லை என்பதே நிஜமான நிதர்சனம். படித்தவர்களுக்கு நல்ல வேலை எளிதில் கிட்டுகிறது. ஆனால், சராசரி அமெரிக்கருக்கு, பள்ளிப்படிப்பு முடிக்காதவருக்கு நிதிநிலைமையும் வாய்ப்புகளும் படு மோசம்.
சென்ற ஆட்சிக் காலத்தில் ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். அதனால், ஆவரேஜ் அமெரிக்கர்களுக்கு ஏதோ ஊழியம் கிடைத்தது. அதற்கும் முந்திய பில் கிளிண்டன் காலத்தில் இண்டெர்நெட் ஜாக்பாட் அடித்தது. எல்லோரும் கொழித்தார்கள். ஆனால், ஒபாமாவிற்கு பச்சை சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு சீரமைப்பிற்காக கோடானுகோடி வாரியிறைப்பு எதுவுமே கை கொடுக்கவில்லை. வேலையில்லா திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிறது.
அமெரிக்கா முன்னேறுவது இருக்கட்டும். இந்தியாவிற்கு யார் வந்தால் நல்லது? தெற்காசியாவில் என்ன விதமான மாற்றங்கள் நிகழும்?
வங்காளம் கற்றுக் கொடுக்கும் இந்த ஊர் பல்கலைக்கழக பேராசிரியரை சந்தித்தபோது சொன்ன விஷயம் தோன்றியது. ‘சண்டை போட்டாத்தான் மதிப்பு. விடுதலைப் புலிகள் இருந்தவரைக்கும் எங்க டிபார்ட்மெண்டுக்கு நல்ல கவனிப்பு. அங்கே இருப்பவர்களை ஆராயணும்னு சொன்னால் போதும். டூர் அடிக்கலாம். தீவுகளில் சுற்றலாம். செம ஜாலியாக இருக்கும். இப்போ, அராபி கத்துக்கோ… தூய உருது பேசு என்று மாறிட்டாங்க’ என்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரை சமர்த்து நாடு. நாலு நாள் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் சமாளிக்கிறார்கள். ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையே உள்ள வருவாய் ஏற்றத்தாழ்வு அதிரடியாக வளர்ந்தாலும் அழுக்காறு கொண்டு வன்முறை பெருகுவதில்லை. அன்னா அசாரே உதித்தாலும் எகிப்து மாதிரியோ, சிரியா மாதிரியோ ஊதிப் பெரிதாக்க முடியவில்லை. ஷியா, சன்னி, குர்து, சூஃபி என்று இஸ்லாமை பிரித்தாளும் சூழ்ச்சியும் தேறவில்லை. சீனா ஆக்கிரமித்தாலும் விட்டுக் கொடுக்கிறார்கள். ஊர் புகுந்து பாகிஸ்தான் சுட்டுத் தள்ளினாலும் பொறுமை காக்கிறார்கள்.
இந்த மாதிரி தேமேயென்று அமைதி காக்கும் பூமி குறித்து அமெரிக்க அதிபர்கள் கவலை கொள்ள வேண்டாம். ஒன்று பிரச்சினையை உருவாக்கத் தெரிய வேண்டும். அது இஸ்ரேல் வழி. இன்னொன்று பிரச்சினையை வளர்க்கத் தெரிய வேண்டும். இது இரான் வழி. இரண்டிலும் பாரதம் செல்ல மாட்டேன் என்பதனால் இந்தியாவை இன்னொரு ஐரோப்பிய நாடாக, ஆஸ்திரேலியாவாக அமெரிக்கா கருதுகிறது.
ஸ்திரமான நண்பன். நம்பிக்கையான அடியாள். காலாகாலத்திற்கும் சேவகம். தலைமுறை விசுவாசம். சொன்னதெல்லாம் கேட்பவர்.
ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இந்திய நிறுவனங்களின் அமெரிக்க வளர்ச்சியை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்தியர்களை விசா தில்லுமுல்லு செய்ததாக இன்ஃபோசிஸ் குற்றஞ்சாட்டப்பட்டு அதன் மீது அபராதம் விதித்தார்கள். வெளிநாடுகளில் வேலைக்காரர்கள் வைத்திருந்தார்கள் நிதிச்சுமையை கூட்டினார்கள். இந்த மாதிரி நெருக்கடிகளை கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் எதிர்த்தார்கள்.
இன்னொரு முறை பதவிக்கு வந்தால் ‘அமெரிக்கா அமெரிக்கருக்கே’ என்னும் சுதேசிக் கொள்கையை இன்னும் தீவிரமாக ஒபாமா அமலாக்குவார். மிட் ராம்னி தாராள சிந்தனை கொண்டவர். உலகெங்கும் வேலை வாய்ப்பு பெருகினாலும், அமெரிக்கா சுபிட்சமாகும் என்று நம்புபவர். மேலும், வர்த்தக பின்னணியில் இருந்து வருவதால், இந்த மாதிரி சின்ன விஷயங்களில் ஆர்வம் காட்டாமல், பெரிய பிரச்சினைகளில் கவனம் தருவார்.
சரி… யார் ஜெயிப்பார்கள்?
சென்ற முறை ஒபாமா வென்றதற்கு மிக முக்கிய காரணம், அவரின் பணம் திரட்டும் லாவகம். நின்றால் ஆயிரம் டாலர், பேசினால் லட்சம் டாலர் என்று கறந்து, அதை விளம்பரங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் செலவழித்து ஜெயித்தார்.
இந்த முறை அவ்ரின் எதிரி மிட் ராம்னியோ கோடானு கோடிக்கு சொந்தக்காரர். தன்னுடைய கைக்காசு, அவருடைய கோடீஸ்வர நண்பர்களின் மறைமுக காணிக்கை மூலமாக பராக் ஒபாமாவை விட பத்து மடங்கு முதல் போட்டு தலைவலியாக போட்டியிடுகிறார்.
எனினும், பணம் மட்டுமே வாக்குப்பெட்டிகளை நிரப்புமா என்ன!