பள்ளிக் குழந்தைகளுக்கான போட்டியில் நடுவர் வேலை கிடைத்த்திருந்தது. முடி நரைப்பதில் இப்படியும் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரண்டு, மூன்று குழுக்கள். ஒவ்வொரு குழுவிலும் ஆறேழு மாணவர்கள். அனைத்துக் குழுவும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதியோ பொருளோ சேகரிக்க வேண்டும்; அல்லது தன்னார்வலர்களாக களத்தில் இறங்கி பணி புரிந்திருக்க வேண்டும்; அல்லது தங்கள் நோக்கங்களை பரவலாக சென்றடையுமாறு பிரச்சாரம் செய்து சமூகத்தில் மாற்றம் கொணர்ந்திருக்க வேண்டும்.
இப்பொழுது என்னை செய்யச் சொன்னால் கூட தயங்குகிறேன். இந்த வயதில் இத்துணை நண்பர்களையும் தொடர்புகளையும் வைத்திருந்தாலும் அனைவரையும் திரட்டி ஒரு கொள்கைக்காக ஒருங்கிணைத்து களப்பணி செய்ய இயலுவதில்லை. ‘அவன் என்ன நினைப்பானோ’, ‘வாரயிறுதியில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்’ என்று தட்டிக் கழிக்கிறேன்.
நூற்றுக்கணக்கான பாடசாலையில் இருந்து பல்வேறு நலத் திட்டங்கள்; பரப்புரைகள்; செயலாக்கம் செய்து முடித்தவர்களின் பெருமிதமான பங்களிப்புப் பட்டியல்கள். ரொம்ப நிறைவாக இருந்தது.
யார் வென்றார் என்பதை எப்படி கணக்கிடச் சொன்னார்கள்?
நிறைய காசு திரட்டுவதால் வெற்றியாளரை தீர்மானிக்கக் கூடாது. அதிக பேரை மனம் மாற்றியதாலோ, மிகப் பெரிய அளவில் கொண்டு சென்றதாலோ வாகை காணமுடியாது. ஃபேஸ்புக்கில் பெரும்பாலான லைக்குகள் கிடைப்பதாலோ, ட்விட்டரில் அதிக நபர்கள் பின் தொடர்வதாலோ முதல் பரிசு கொடுக்கக் கூடாது.
செய்த காரியத்தை எப்படி படிப்படியாக நகர்த்தினார்கள் என்று விளக்குவதிலும், அதில் ஏற்பட்ட தடங்கல்களையும், அவற்றை எதிர்கொண்ட விதத்தை முன்வைப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு தீர்மானித்தோம்.