பிரபாகரன் பையன் படம் வெளியான பிறகுதான் தமிழ் போராட்டங்களுக்கு எழுச்சி கிடைத்தது என்கிறார்கள். அந்த மாதிரி அந்தக் காலத்தில் எந்த நிழற்படம் அறியாமை நிறைந்தவர்களின் உணர்ச்சியை தட்டி எழுப்பியது என்று யோசித்தவுடன் இந்தப் புகைப்படம் நினைவிற்கு வந்தது
அறுவடை பொய்த்துவிட்டது. விவசாயத்தை நம்புவது ஆபத்தானது. தொழில் நுட்பமும் போர்களும் மட்டுமே நிலைத்து நீடிக்கக் கூடிய சுபிட்சத்தைக் கொடுக்கும். இந்த இரண்டையும் இரு கண்களாக அமெரிக்கா வைத்துக்கொள்ள தொடக்கப்புள்ளி எப்பொழுதோ ஆரம்பித்திருக்கும். இரண்டாம் உலகப் போரில் இணைந்து கொள்ள பல காரணங்கள். இந்தப் படத்தை காட்டியும் உள்ளூரில் அனுதாபம் சேர்க்கலாம். பிரபாகரன் பையன் படத்தைக் காட்டி அனுதாப அலை அடிப்பது போல்…
ஒரு புகைப்படம் சரித்திரத்தின் பாதையை மாற்றியமைக்குமா?
டொரொதியா லாஞ்ச் அப்படித்தான் நினைத்திருக்கிறார். அமெரிக்காவில் வறுமையும் பசியும் பஞ்சமும் தாண்டவமாடிய 1930களின் முகங்களை படம் பிடித்தவர். தன்னுடைய ஃபோட்டோ ஸ்டூடியோவிற்கு எதிரே இருந்த தான சத்திரத்தின் முன் நின்ற யாசக வரிசையை படம் பிடிக்க ஆரம்பித்தார்.
பிச்சை எடுப்பதற்கு கூட்டமாக நிற்பவர்களைப் பார்த்தால், ‘இத்தனை பேர் கஷ்டத்தில் இருக்கிறார்களே!’ என்ற பரிதாப நினைப்பிற்கு பதில், ‘நிறைய பேர் வேலை செய்யாமல் சுணங்குகிறார்கள்!’ என்னும் அலட்சியப் போக்குதான் தலைதூக்குகிறது. இதைப் புரிந்து கொண்ட லாஞ்சே ஒவ்வொருவரின் முகத்தையும் அவர்களின் சுருக்கம் நிறைந்த கவலை பாவத்தையும் வெளிக்கொணர்ந்தார்.
உலகின் மிகப் பெரிய சக்தியாக ஜெர்மனி விளங்கிய காலம். மும்மாரி மழை பொய்த்த அமெரிக்காவிலோ ’Dust Bowl’ என்றழைக்கப்பட்ட வறட்சி காலம். ஹிட்லருக்கோ ஏற்றுமதியும் தொழில் நுட்பமும் பொங்குகிறது. ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கோ கருகிப் போன கதிர்களும் வீழ்ச்சியும் மட்டுமே காணக்கிடைக்கிறது.
இரண்டாம் உலகப் போரில் சேர்கிறார். குண்டு போடுகிறார். வீழ்ந்த தேசத்தின் புகைப்படம் கொண்டு அமெரிக்கா வீறு கொண்டு எழுகிறது.
வரலாற்றை மட்டும் புகைப்படம் மாற்றுவதில்லை. போர்களையும் மூட்டுகிறது.
Dorothea Lange – “The camera is an instrument that teaches people how to see without a camera.”