
நான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.
சின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.
பாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.
இரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.
குழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.
கீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்?
முதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.
’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீடும் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.
கல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.
இளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.
சுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.
அராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
எகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.
அமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்!
இதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.
ஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.
முக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.
சரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.
வேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.
வலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.
குறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.
எதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.
இதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.
இவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.
இதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.
’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு? மிட் ராம்னி வந்தால் என்ன குறை?’
ராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.
ஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.
வந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.
ஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.
கூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.
What I fear is genuinely worthy falling into the abyss; What I hate is ignorantly hopeful pushing them!