Tag Archives: Boston

India Discovery Center: இந்திய புராதன புலப்பாட்டு மையம்

நேற்று இந்தியா டிஸ்கவரி செண்டர் (இந்திய புராதன புலப்பாட்டு மையம்) நடத்திய விழாவிற்கு சென்றிருந்தோம். அந்த நிகழ்வில் இருந்து சில காட்சிகள்:

ஒளிப்படத் தொகுப்பு

பேட்டி

இந்த மையம் ஆரம்பிப்பது குறித்த நேர்காணலை இங்கேக் கேட்கலாம்:

நிகழ்வுகள்

செய்திக் குறிப்பை இங்கே வாசிக்கலாம்: Launch Of “India Discovery Center” (IDC) In Greater Boston

அவர்களின் வலையகம் இங்கே இருக்கிறது: India Discovery Center – Home

ஏன் துவங்குகிறார்கள்?

  1. அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்தில் யூதர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு கலாச்சார நடுவகங்கள் இருக்கின்றன. அது போல் இந்தியருக்கும் உருவாக்குகிறார்கள்.
  2. அடுத்த தலைமுறையினருக்கு நம்முடைய மூதாதையர் குறித்த விழிப்புணர்வையும் பண்டைய பெருமையையும் எடுத்துரைக்கப் போகிறார்கள்.
  3. இந்து மதத்தினர், இஸ்லாமியர், கிறித்துவர், என நம்பிக்கை சாராமல் அனைவரும் ஒன்றுகூட ஒரு இடம் தேவை.

எப்படி அமைக்கப் போகிறார்கள்?

  • கோவில்களை நிறைய கட்டி இருக்கிறோம். ஆனால், இது மதம் அல்லாத, சமயம் சாராத முயற்சி.
  • வட இந்தியர்கள் கூடும் இடம், தமிழர்கள் ஒன்று சேரும் சங்கம் என்றெல்லாம் இருக்கும். இது தெற்காசியருக்கான பொது மையம்.
  • சிந்து சமவெளி நாகரிகம், சரித்திரம், பண்பாடு, கல்விமுறை, தொழில்நுட்ப வளர்ச்சி, என பன்முகங்களை 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் துவங்கி, இந்தக் கால இன்ஃபோசிஸ் வரை பதிவு செய்து அனைவருக்கும் அறிமுகம் செய்யப் போகிறார்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • இங்கே சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் நண்பர்களிடமும் நெருங்கியவர்களிடமும் அறிமுகம் செய்யுங்கள்.
  • உங்கள் அலுவலில் பேசி, பொருளோ, பணமோ, நிரலியோ மற்ற உதவியோ பெற்றுத் தாருங்கள்.
  • உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாதிரி இடங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்

பாஸ்டன்: பெயர்க் காரணம்

நான் இருக்கும் ஊரின் பெயர் பாஸ்டன். இங்கிலாந்தில் இருந்து இந்தப் பெயர் வந்திருக்கிறது.

அமெரிக்காவில் பரங்கியர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ, அந்த இடத்திற்கெல்லாம், தங்களின் சொந்த ஊரின் பெயரையே நாமகரணமிட்டார்கள். இங்கிலாந்தில் உள்ள லண்டன், யார்க், க்ளூஸ்டர், வூர்ஸ்டர் போல், இந்தப் பகுதியிலும் நியு லண்டன், நியு யார்க் என குக்கிராமங்களை அழைத்துக் கொண்டார்கள். இவற்றில் சில ஊர்கள் மூலகர்த்தாவை விட அதிகப் பெயரும் புகழும் பெற்றது. லண்டனில் இருந்து இரண்டரை மணி நேரம் வடக்கில் இருக்கும் அசலை விட அதிகம் பேர் புழங்கும் இடமாக பாஸ்டன் ஆகி இருக்கிறது.

அந்த அசல் பாஸ்டன் பெயர் எப்படி வந்தது?

செயிண்ட் போடாஃல்ப் நகரம் என்பதுதான் மருவி பாஸ்டன் ஆகி இருக்கிறது. பால்டாஃப் டவுன் (அ) பால்டாஃப் ஸ்டோன் என்பது நாக்கை சுளுக்கெடுக்க, பால் ஸ்டோன் என சுருண்டு, அதுவே… நாளடைவில் பாஸ்தன் என பெயர் பெற்றது.

“ஒரு கல்; ஒரு கண்ணாடி” என்னும் பிரயோகம் கூட இந்த நகரத்தில் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் துறவி பால்டாஃப் வைத்தது ஒரு கல். அதைச் சுற்றி வசித்தவர்களால் பாஸ்டன் நகரம் உருவானது. நடுநடுவே போர்ச்சுகீசியர்கள் குடிபுகுந்தார்கள். அப்படி வந்தேறியவர்களை 21ஆம் நூற்றாண்டில் கால்பந்தில் இங்கிலாந்து தோற்றவுடன் பால்டாஃப் stone (கல்) கொண்டு மண்ணின் மைந்தர்கள் விரட்டினார்கள்.

அமெரிக்காவின் பாஸ்டனில் இருந்த ஆதிகுடி என்ன பெயர் கொண்டு அழைத்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

Conspiracy Theory: பாஸ்டன் ப்ரூயின்ஸ் & தீவிரவாதிகள்

புருயின்ஸ் கெலிப்பார்கள் என்று கணித்தேன். சறுக்கிவிட்டது.

பாஸ்டன் ப்ரூயின்ஸ் அருமையான அணி. பனிச்சறுக்கு ஹாக்கியில் முக்கியமான அணி. இரண்டாண்டுகள் முன்பு கூட உலகக் கோப்பையை வென்ற அணி. இந்த முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கும் அணி.

அவர்கள் ஏன் வெல்வார்கள்?

சாதாரணமாக மிக மிக அற்புதமாக ஆடும் வர்க்கத்தார் கூட நேர் போட்டிகளில் வென்றதாக சரித்திரம் இல்லை. உதாரணத்திற்கு மியாமி ஹீட்ஸ் குழுவை எடுத்துக் கொள்ளலாம். ஏழு போட்டிகள் நடக்கும். மியாமியால் நான்கே போட்டிகளில் எதிரணியை வீழ்த்திவிட முடியும். எனினும், யாருக்காவது அடிபடும்; நடுவர் தீர்ப்பு சாதகமாக அமையாது; குழுத்தலைவர் formல் இருக்கமாட்டார்…

இப்படி ஏதாவது காரணம் சொல்லி கடைசி பந்து வரை டி20 போட்டியை இழுத்தடிப்பது போல் நான்கு மேட்ச்களில் முடிக்க வேண்டியதை ஏழாக்கி முடிப்பார்கள். ஆனால், பாஸ்டன் புரூயின்ஸ் நான்கே போட்டிகளில் ரணகளம் செய்து முன்னேறுகிறார்கள்.

இந்த முறை பாஸ்டன் புருயின்ஸ் வெல்வதற்கு மிக முக்கிய காரணம் பாஸ்டன் குண்டுவெடிப்புகள். ஜார்னேவ் சகோதரர்கள் கைங்கர்யத்தால் சோகமும் இருளும் கவ்விய பிரதேசத்திற்கு இந்த வெற்றி புத்துணர்ச்சி கொடுக்கும்.

கூடைப்பந்தாட்டத்தில் விளையாடும் பாஸ்டன் செல்டிக்ஸ் இப்போதைக்கு வாகை சூட முடியாது. பேஸ்பால் ஆடும் பாஸ்டன் ரெட் சாக்ஸும் அவ்வாறே. பேட்ரியாட்ஸ் போட்டி துவங்க நெடுநாள் உள்ளது. இந்த நிலையில் உள்ளூர் அணிக்கு கொற்றம் கிடைத்தால் நகரத்தில் மாற்றம் கிடைக்கும்.

மாஸசூஸட்ஸ் மீண்டும் ஊட்டம் கண்டு தலையெடுத்து மீட்சி அடையும் அடையாளமாக புரூயின்ஸ் வெல்வார்கள்.

Microsoft Code Camp at Boston: Sharing at an unconference

இன்று மைக்ரோசாஃப்ட் நிரலிகளில் வல்லுநர்களுக்கான அ-கலந்துரையாடலுக்கு சென்றிருந்தேன். நிறைய கற்றுக் கொடுத்தார்கள். முழுக்க முழுக்க தன்னார்வலர்களின் சொற்பொழிவு.

அம்சமான சனிக்கிழமையன்று காலை ஐந்தரைக்கே எழுந்து ஒண்ணரை மணி நேரம் வண்டியோட்டி வந்து, தொண்டை கிழிய சொல்லிக் கொடுப்பதற்கு கோடி கூலி கேட்டிருக்கலாம். ஆனால், இவர்கள் எல்லோரும் தானாக முன் வந்து நுட்பத்தின் நுட்பம் எல்லாம் செய்முறை விளக்குகிறார்கள்.

ஏன்?

முதல் பிரிவில் மைரோசாப்டிற்காக வேலை பார்ப்பவர்கள். தங்கள் நிறுவனத்தின் புதிய மென்பொருள்களை மார்க்கெடிங் செய்பவர்கள்.

இரண்டாமவர் கன்சல்டிங் துறைக்காரர்கள். தங்களுக்கு கணினித் துறையில் எவ்வளவு தெரியும் என்பதை நாசூக்காக முன்வைக்கிறார்கள். அவர்களின் அனுபவத்தையும் திறமையும் பலருக்கு வெளிப்படுத்த இதை விட சிறந்த அரங்கு கிடைக்காது.

கடைசியாக என்னைப் போன்றோரும் உண்டு. சிலரின் பேச்சைக் கேட்டதும், இவர்களுக்கு, ‘நானே இவரை விட நன்றாக கற்பிப்பேனே’ என்று நம்பிக்கை பிறந்திருக்கும். அல்லது, புத்தம்புதிய விஷயங்களை அறிவதற்கு, அதைக் குறித்து பிரசண்டேஷன் கொடுப்பதுதான் சிறந்த வழியாக கருதுபவர்கள்.

நீச்சலைக் குறித்து கற்றுக் கொடுக்கப்படுவதை விட, கிணற்றுக்குள் குதித்து தத்தளித்து எழுவதை விரும்புபவர்கள்.

Sahitya Academy winner & Noted Tamil writer Nanjil Nadan at Boston – Quick Notes

முந்தைய பதிவு: அமெரிக்காவில் எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் வாசகர் சந்திப்புகள்

பொத்தான் நீக்காத முழுக்கை நீளும் வெளிர் நீல சட்டை. இஸ்திரி கலையாத கருநீல முழுக்கால் சட்டை. அமெரிக்க பொறியியலாளர்களுக்கு போட்டியாக விப்ரோ ஏற்றுமதி செய்யும் நாற்பதாயிர வெள்ளி சமபளத்திற்கு நிறைவான வேலை நல்கும் குந்துரத்தர் போல் தெரியும் நாஞ்சில் நாடன் வந்தார்.

முதல் முறை அமெரிக்க பயணம். ஆனாலும், வரும் வழியில் இரு குடும்பத்தாருக்கு அவர்களுக்கு உரிய விமானத்தை வழி காட்டி, ஆங்கிலம் தெரியாத மூன்று முதல் விஜயத்தாருக்கு படிவங்களை நிரப்பி உதவி வழியனுப்பி, இன்னும் சில சந்தேகப் பேர்வழிகளின் ஐயங்களை நீக்கி வழிநடத்தி தானும் வந்து சேர்ந்தார்.

கம்ப ராமாயணத்தில் குகனுடன் ஐவரானோம் மாதிரி அவர்கள் எல்லோரும் நாஞ்சிலுடன் இணைந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், அவர்களுக்கு தமிழ் தெரிந்திருந்தால், கம்பனின் சுவையை அவர்களின் நுனி நாக்கில் ஏற்றி இருந்திருப்பார்.

நாஞ்சில் நாடனுக்கு நேம் டிராப்பிங் என்றால் பொய்கையாழ்வார், குமரகுருபரர், தேம்பாவணிக்கு உரை எழுதிய புனித *%$#&@+>, சீறாப்புராணத்திற்கு பதம் பிரித்த புண்ணியவான் ஆகியோர்.

இந்த மாதிரி சிறப்பு விருந்தினர்களை வருவித்து விருந்தினராக்குவதற்காக ராஜனுக்கு சிறப்பு நன்றி.

வாசர்களையும் தமிழ் சிந்தனையாளர்களையும் கோர்க்கும் பெருமை திருமலை ராஜனையே சாரும். முன்னதாக ஜெயமோகன் வந்தார். இப்பொழுது நாஞ்சிலார். கிழக்கு கடற்கரை நண்பர்களை ஒருங்கிணைப்பதில் ஆகட்டும்; புதிதாக அணுக நினைப்பவர்களை இயல்பாக்குவதில் ஆகட்டும்; எல்லோரிடமும் நிதி வசூலிப்பது ஆகட்டும்; வாரயிறுதி மட்டுமே கோறுபவர்களிடம் கறாராக பேசுவதில் ஆகட்டும்; விசா நடைமுறைகளை சிக்கலின்றி பெற்றுத் தருவதில் ஆகட்டும்.

ராஜன் இல்லாவிடில் இந்த மாதிரி இயல்பான அன்னியோன்யமான சந்திப்புகள் சாத்தியப்படாது.

என்னை மாதிரி எழுதுவோரை நாஞ்சில் நாடன் அம்பறாத் துணியில் சில்லறையைப் போட்டு வில்லேந்துபவராக வருணிப்பார்.

அதாவது எதிர்த்தாப்பில் இராவணன். ஒரு கணம் தாமதித்தாலும் மோதி பஸ்மமாக்கி விடுவான். அப்பேர்ப்பட்ட அவசரத்தில் விநாடி நேரம் கூட வீணாக்காத இராமன். அம்பறாத்துணியில் அம்பு நிறைந்திருக்க வேண்டும். சரியான அஸ்திரமாக இருக்க வேண்டும். உடனடியாக கையில் வர வேண்டும். விரல்களை பதம் பார்க்காமல், வில்லில் வகையாக ஏறி, வில்லனை வீழ்த்த வேண்டும்.

எழுத்தாளனுக்கு வார்த்தையும் இப்படி சுழல வேண்டும். அவனுடைய அம்பறாத்துணியாகிய மூளையில் சிந்தனை வில்லுக்கேற்ற சொற்கள் சிக்க வேண்டும். எல்லா இடத்திலும் பற்றி, என்று, ஆகவே போன்று தேய்வழக்கு கூடாது.

இது எப்படி சாத்தியம்?

எவர் கர்ம சிரத்தையாக சங்க இலக்கியமும் காப்பியங்களும் கீழ்க்கணக்கையும் வில்லியையும் வாசிக்கிறோம்?

நாஞ்சில் நாடனைப் போல் வாத்தி கிடைத்தால் எவரும் வாசிப்போம்.

நிறுத்தி நிதானமாக கம்பனின் வெண்பாக்களை நினைவு கூர்கிறார். சீதையைத் தேடி வரும் மாயமானைப் போல் கம்பரின் செய்யுளை சொல்லும்போது பளபளப்பாக இருக்கிறது; ஆனால் கைவசம் சிக்காமல், நழுவுகிறது; எனினும் ஆசையாக மனம் உத்வேகம் கொள்ள வைக்கிறது.

நண்பர் பாஸ்டன் வேல்முருகன் ஜென் கதையை அடிக்கடி சொல்வார்:

ஜென் துறவி மாதிரி நானும் மையமாக தலையாட்டி வைத்தேன். இதை யாரும் அவருக்கு சொல்லி விடாதீர்கள்.

2012 Boston Events: Film Music Performance by New England Thamil Sangam for Pongal

நாள்: சனி, ஜனவரி 14
நேரம்: மதியம் 4:30
இடம்: ஆஷ்லாண்ட் உயர்நிலைப் பள்ளி

Boston Events - Thamil Pongal special: 2012 Happy New Year to USA

தமிழ் ஆர்வலரும் நானும் – பாஸ்டனில் மு இளங்கோவன்

 A glance leaves an imprint on anything it’s dwelt on.
Joseph Brodsky 

[Russian poet(1940-1966) – “A Part of Speech” in Collected Poems in English]

துவக்கப் பாடமாக வீடியோ பார்த்துவிடலாம்

அமெரிக்க வந்த காரணம் என்ன? தமிழ் இணைய மாநாடு என்ன செய்தது?

சந்தித்த கதை

மீன் தொட்டிக்குள் நீந்துவது போல் வலை வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. எல்லா மீன்களும் இடமிருந்து வலமாக சுற்றியது. குழாம் அமைத்தது. தொகுதிப் பங்கீடு செய்தது. நானும் நடுவில் இருந்தேன். ஆங்காங்கே சுறா தென்படும். சிலரை கபளீகரம் செய்து கொண்டிருக்கும். நானும் குட்டி மீன்களைக் கவ்வி பசியாறினேன்.

அப்போதுதான் கூர்மாவதாரமாக முனைவர் மு இளங்கோவன் எதிர்கொண்டார்.

அனுபவத்தில் ஆமை என்றால், வயதில் பட்டாம்பூச்சியாக இருக்கிறார். நெடுநெடு உயரம். கருகரு முடி. துடிதுடி கண். பதட்டமில்லாத நடை. தெளிவான உச்சரிப்பு. பாவனையற்ற கனிவு. ஜாக்கிரதையானப் பேச்சு. வம்புகளற்ற உரையாடல்.

சலபதியை சந்தித்தபொழுதும் சரி; ஜெயமோகனோடு இருந்த சில நிமிடங்களிளும் சரி… ஞாநியும் ஆகட்டும்.

சளைக்காமல் கதைக்கக் கூடியவர்கள்.

அ. முத்துலிங்கம் போன்றோர் வேறு இனம்.

கேள்விக்கு சீரியமாக எதிர்வினையாற்றுவார்கள். விவாதங்களை இறுதிவரை கவனித்து முத்தாய்ப்பாக முழுமையாக்குவார்கள். சீரியமாக கவனிப்புடன், ட்விட்டரில் 140 எழுத்துக்குள் சிந்தனையை அடக்குவதற்கொப்ப, எண்ணி, எண்ணியதை சரியான வார்த்தையைக் கொண்டு கோர்த்து, முத்து சிந்தக் கூடியவர்கள்.

மு. இளங்கோவனாரும் அதே ரகம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்

தமிழ் இணைய மாநாட்டுக்காக பிலடெல்பியா வந்தவர் பாஸ்டன் பக்கமும் எட்டிப் பார்த்தார். எட்டிப் பார்த்தது, ஹார்வர்ட், எம்.ஐ.டி போன்ற தலை பத்து கல்லூரிகளைப் பார்வையிட.

நான் பலமுறை இந்த இடங்களுக்கு சென்றிருந்தாலும், சென்றபோதெல்லாம் சுற்றுலாவாசியாகவே பராக்கு பார்த்திருக்கிறேன். வளாகத்தின் முக்கிய கட்டிடங்கள், வகுப்பறைகளின் அமைப்பு, மாணவர்களின் வாழ்க்கைமுறை, ஆசிரியர்களின் அலுவலகம், இருப்பிடங்களுக்கும் கல்விக்கூடத்திற்குமான தூரம் போன்றவற்றை கவனித்ததில்லை.

எனவே, ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களே நெறிப்படுத்திய சுற்றுலாக்களை தேர்ந்தெடுக்கு, அவர்களைப் பின் தொடரும் விதமாக, பார்க்கச் சென்றோம்.

அலுவலில் இருந்து வீட்டுக்கு சேணம் கட்டிவிட்ட குதிரையாக ஒரே பாதை. அதே திருப்பம். பழக்கமான பயணமாக இருப்பதை, கூகிள் வரைபடம் (மேப்) வந்தவுடன், சோதித்து பார்த்ததில் புத்தம்புது குறுக்குவழி கிடைப்பது போல், இந்த வழிகாட்டி சுற்றுலாக்கள் பல புதிய விஷயங்களை அடையாளம் காட்டி வழி திறந்தது.

எம்.ஐ.டி.யின் சுயம் சார்ந்த மதிப்பீடுகளும், மாணவ வயதின் பரிசோதனை கலந்த முயற்சிகளும் விளங்கின என்றால், யேல் பல்களையின் பணமும், பிரும்மாண்டமும், உள்ளே நுழைந்த புகழ் பெற்றவர்களின் பேரும் மிரட்டின.

நடுவாந்தரமாக ஹார்வார்டு. கொஞ்சம் அலட்சியம்; கொஞ்சம் திமிர்; கொஞ்சம் பந்தா எல்லாம் யேல் பல்கலையை நினைவூட்டினாலும், பாஸ்டன் நகரத்தின் அண்மை மாணவர்களைத் தரையையும் சுட்டிக் காண்பிப்பதாகத் தெரிகிறது.

  • முதல் வருடம் கழித்தபிறகு முதுநிலையோ, இளநிலையோ… பட்டம் வாங்க விரும்பும் படிப்பை தேர்வு செய்வது;
  • ஐந்தாவது வகுப்பிலேயே கல்லூரிக்கு முதற்படி எடுக்கும் பால்ய காலப் படிக்கட்டுகள்;
  • படிப்பைத் தவிர மக்கட்பண்பு, குணநலன், சகாக்களோடு பழகும்விதம், வெற்றி பெறுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பது;
  • யேல், ஹார்வார்ட் போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இன்றளவிலும் மதம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் செலுத்தி, இறை சார்ந்து இட்டுச் செல்வது;
போன்ற தகவல்களை அறிந்து கொண்டோம்.

தமிழும் தமிழ் சார்ந்த கணினியும்

இளங்கோவனுக்கு பல்வழி அடையாளம். தமிழ்ப் பேராசிரியர்; கணினியில் தமிழ்ப் பயன்பாடுகளை அடையாளம் கண்டு, புதியவர்களுக்கு எளிதாக்கி, கிராமப்புறங்களுக்கும் பரவலாக்குபவர்; நாட்டுப்புற பாடல் தொகுப்பவர்; சிலம்பு சொற்பொழிவாளர்.

ஆனால், நேர்ப்பேச்சில் நம்மிடம் இருந்து விஷயம் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார். தன் பெருமைகளை, தன் அறிவை, தன் சாதனைகளை மூச்சு விடாமல் பேசியே திணறடிப்பவர் மத்தியில் பிறரின் திறனை தூண்டிலிட்டு, திரியேற்றி, சம்பாஷணைகளை சுவாரசியமாக்குகிறார்.

ஒருங்குறி ஆகட்டும்; வாழ்க்கையின் அடுத்த அடிகள் ஆகட்டும்; தமிழைக் கணினி கொண்டு, பரவலாக்கி அன்றாட பயன்பாட்டுக்கு அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஆகட்டும் – தீர்மானமான கொள்கைகள் வைத்திருக்கிறார்.

நம் மீது அதை திணிப்பதில்லை; ஆனால், அதன் நலன்களை சுருக்கமாக விளக்குகிறார். அடுத்தகட்ட செயல்பாடுகளை சொல்கிறார். பயனுள்ள முடிவை நோக்கிய திட்டங்களை வைத்திருக்கிறார்.

இனி அவர்…

தமிழ்க் கல்வி முறை

தமிழை இணையம் மூலமாக கற்பிக்க அடுத்த நடவடிக்கை என்ன?

வலை வழியாக தமிழ்ப் பாடங்களை எப்படி கற்றுக் கொடுக்கலாம்?

பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
தமிழிணைய மாநாடு – பார்வையாளரில் ஒரு பகுதி
யேல் பல்கலை – பார்னி பேட், சுதீர்
ஃபெட்னா – சார்ல்ஸ்டன் – 2011 துவக்க விழா
கோடை மழை வித்யா, நாசர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடலாசிரியர் நா முத்துக் குமார் – பெட்னா 2011
விழா மலர் வெளியீடு – பெட்னா 2011
பாஸ்டன் (நியு இங்கிலாந்து) வலைப்பதிவர், தமிழ் ட்விட்டர் சந்திப்பு
மேரிலாந்து, பால்டிமோர், வர்ஜீனியா, வாஷிங்டன் டிசி – மும்மாநில தமிழ்ச்சங்கம்
பிலடெல்பியா தமிழ் இணைய மாநாடு – தமிழ் யூனிகோட், ஒருங்குறி, எழுத்து சீர Continue reading

ஞாநி: சந்திப்பும் பேச்சும்

ஞாநி எனக்கு தற்செயலாகத்தான் அறிமுகமானார். ‘கண்டதை சொல்கிறேன்‘ என்னும் ஜெயகாந்தனின் பாடலில் மயங்கி அதன் இரு அர்த்தங்களுக்காகவும் என் தலைப்பாக வைத்து 2003ஆம் ஆண்டில் வலைப்பதிவுக்கு தலைப்பாக்கினேன். கொஞ்ச நாள் கழித்து பழைய ‘இந்தியா டுடே’க்களை தமிழகம் சென்றபோது புரட்டினால் அதே தலைப்பில் ‘ச்’ கூட்டி ஞாநியும் பத்தி எழுதியிருந்தார்; எழுதி வந்தார்.

அட… அபாரம்! சேம் ப்ளட்!! என்று கிள்ள வைத்தார்.

கொஞ்சம் படித்த பிறகு அவர் நம்மைப் போல் அல்ல, ‘நேர்மையான கொம்பன்’ என்று விளங்கியது. குருதிப்புனல் திரைப்படத்தில் கமல் சொல்வார்; இவர் எழுத்தில், செயலில், எண்ணத்தில் வாழ்ந்து காட்டுபவர். நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை தூங்க விடாமல் குடைச்சல் கொடுப்பவர்.

கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் டாக்டர் மாத்ருபூதம் ஜூனியர் ஆகியிருந்தார். ‘அறிந்தும் அறியாமலும்’ தொடர் பலருக்கு ‘புதிரா; புனிதமா’ பார்ட் டூ. கைமைதுனம், சொப்பன ஸ்கலிதம் முதல் குட்டிப் பாப்பாவுக்கு மலம் அலம்பி விடுவதின் சூட்சுமம் வரை படம் போட்டு வெளிச்சமாக்கி புரிய வைத்தவர். மருத்துவர் மாத்ரு பூதம் போல் காமெடி லபக்குதாஸாகவோ, வில்லன் அப்பாவாகவோ மாறும் வாய்ப்புகளும் மணி ரத்னத்தின் ‘இராவணன்’ மூலம் நிறைவேறும் சாத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன.

இனி… அவருடைய குறிப்புகளில் இருந்து…

பத்திரிகை, நாடகம், வீடியோ ஆகிய துறைகளில் முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் ஞாநியை பல தடைகளை மீறித் தொடர்ந்து இயக்குவது, மனித வாழ்வைத் தொழும் அனைத்தின் மீதும் உள்ள அக்கறையே.

வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பில் நிலவும் போலி நம்பிக்கைகளை இனம் கண்டு களைய முற்படுவதே ஞாநியின் நாடகக் கொள்கையாகும்.

எப்போதும் யாருடனாவது உரையாடிக் கொண்டிருப்பதில் எனக்கு சிறு வயது முதலே விருப்பம் அதிகம். ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவனாகவே நான் என் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அறியப்படிருக்கிறேன். எனக்கு சிலை வைத்தால், ஒரு பெரிய வாயின் உருவமும், அதன் கீழே அறுந்து விழுந்து கிடக்கிற பல காதுகளையும் தான் சிலையாக வடிவமைக்க வேண்டும் என்பது நண்பன் வைத்தியின் பிரபலமான கிண்டல்.


தமிழ் படைப்பாளிகளில் மகாஸ்வேத தேவிகள் இன்று வரை இல்லை. வெகுஜன அளவில் 1965 & 1967 காலகட்டத்தில் நிகழ்ந்த மொழிப்போர் பற்றியே தமிழ்ப் படைப்பாளிகள் இதுவரை எழுதத் தூண்டப்படவில்லை என்கிற நிலையில் எண்பதுகளின் நக்சல்பாரிகள் மீதான ஒடுக்குமுறை போன்ற விளிம்பு நிலைப் போராட்டங்கள் பற்றி எழுதும் வாய்ப்பேது…

வன்முறையை துளியும் விரும்பாத எனக்கு, நக்சல்பாரிகளின் வழிமுறைகளுடனோ, அரசியல் பார்வைகள் பலவற்றுடனோ உடன்பாடு இல்லைதான். எத்தனைதான் சீரழிந்திருந்தாலும், தேர்தல் ஜனநாயகத்தின் மீது சராசரி குடிமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் எனக்கும் பங்குண்டு.


தீம்தரிகிட போன்ற சமூகத்துக்கு தேவையான கறாரான ஒரு இதழ் நின்று போவதற்குக் காரணம் நமது சமூகத்தில் அயோக்கியர்களும் முட்டாள்களும் இருப்பதாகும். அயோக்கியர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அவர்கள் கையில் பண பலமும் அதிகார பலமும் இருக்கிறது. நல்லவர்கள் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தாலும் அவர்களில் கணிசமானவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

அரசியல் விமர்சனம் என்ற முத்திரை என் விருப்பத்தை மீறி என் மீது பலமாக விழுந்துவிட்ட காரணத்தால், நான் அக்கறை காட்டும் இதர பல விஷயங்கள் பற்றிய என் பார்வைகள் போதிய கவனம் பெறாமல் போயிருக்கின்றன:

  • நாடகம்
  • திரைப்படம்
  • ஆண் – பெண் உறவுகள்
  • பாலியல் கல்வி
  • திருமண முறை
  • இளைஞர்
  • மகளிர் நலன்
  • சூழல் பாதுகாப்பு

‘ஏன் உருப்படாத அரசியல்வாதிகள் பற்றி எழுதி உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதுவரை வீணாக்கிக் கொண்டிருந்தீர்கள்? இது போன்ற துறைகளில் இன்னும் அதிகம் எழுதியிருக்கலாமே’, என்று செல்லமாகக் கடிந்துகொண்ட வாசகர்கள் பலர்.

வாழ்க்கைத் திறன்கள் என்பதை நான் தனி நபர் முன்னேற்றம் சார்ந்ததாக மட்டும் பார்க்கவில்லை. அரசியல்வாதி, சினிமா படைப்பாளி, மருத்துவர், ஆடிட்டர், ஆசிரியர், எழுத்தாளர், அலுவலக ஊழியர் என்று சமூகத்தை பாதிக்கும் அனைத்துத் துறையிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் வருவதற்கு, நல்ல மதிப்பீடுகள் தழைப்பதற்கு நமக்குத் தேவைப்படும் பல்வேறு ஆயுதங்களில் வாழ்க்கைத் திறன்கள் முக்கியமானவை என்பது என் கருத்து.

நாடகத்தின் மீது அவருக்கு தீவிர காதலை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்கள் எம்.ஈ. ஸ்ரீரங்கன், ஜி. வேணுகோபால், கே.வீ. ஸ்ரீனிவாசன், முத்துகிருஷ்ணன், கல்லூரி ஆசிரியர் கிருஷ்ணசாமி (எ) கலைமணி ஆகியோருக்கு தன் நாடக வெளியீடுகளை சமர்ப்பிக்கும், அவரின் கனவுகளில் ஒன்று வருடம் முழுவதும் நாடகப் பயிற்சியும் நிகழ்ச்சிகளும் நிகழும் நாடக அரங்கம் ஒன்றைக் கட்டுவதாகும்.

முந்தைய பதிவுகள்:
1. ஞாநி: பயோடேட்டா « Snap Judgment
2. Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி « Snap Judgment
3. Gnani in Boston – 10 Pics « 10 Hot
4. Writer, Filmmaker & the Argumentative Tamilan Gnani in New York/NJ « 10 Hot

மார்தா கோக்லி x ஸ்காட் ப்ரௌன் – மாஸசூஸெட்ஸ் செனேட் தேர்தல்

சென்னையை திமுக-வின் கோட்டை எனலாம். பாஸ்டனை தலைநகரமாகக் கொண்ட மாஸசூஸட்ஸ் டெமோக்ரட்ஸின் கோட்டை.

ஒரேயொரு விதிவிலக்கு உண்டு.

பெண் வேட்பாளர் நிற்கும்போது கட்சி மாறும்.

சுதந்திரம் வாங்கி 222 ஆண்டு கழித்து முதன்முதலாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தனர். அதுவும் மாநிலத்தின் முக்கிய பதவிக்கு அல்ல. பொருளாளர்.

அதன் பிறகு முன்னேறியவர் மார்த்தா கோக்லி. அட்டர்னி ஜெனரலுக்கு போட்டியிட்டு வென்றார்.

இவர் தவிர துணை கவர்னராக இரண்டு பேர் தொற்றிக் கொண்டு வென்றுள்ளனர். அவர்கள், அடுத்த கட்டமாக கவர்னருக்கு நின்றபோது மண்ணைக் கவ்வினர்.

கட்சி பாகுபாடின்றி பெண்களை நிராகரிக்கின்றனர். ரிபப்ளிகன் ஆகட்டும்; சுதந்திரக் கட்சி ஆகட்டும். பெண் வேட்பாளரா? தோற்கடித்து விடு!

‘கோக்லியை கற்பழி!’

‘கோக்லியின் சூத்தில் ஏத்து!’ (“shove a curling iron up her butt”)

இதெல்லாம் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி அரங்குகளின் வெளியான கோபம்.

உள்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு அலை இருந்ததாக யூனியன் தலைவர் சொல்கிறார்: “I’m not voting for the broad” – Teamster leader Robert Cullinane

சரி… மார்த்தா தோற்றதற்கு பெண்ணாகப் பிறந்தது மட்டுமா காரணம்?

1. வாக்காளர்களுக்கு இரத்தமும் சதையுமான தலைவர் வேண்டும். பற்றற்ற, விஷயம் மட்டும் பேசுகிற வழக்கறிஞர் தேவையில்லை. கொஞ்சம் நகைச்சுவை, நிறைய கோஷம், குடும்பஸ்தர் தோற்றம்: எல்லாம் ப்ரவுனிடம் இருந்தது.

2. தீவிர வலதுசாரி முழக்கங்களை பிரவுன் தவிர்த்தார். ரஷ் லிம்பா, சாரா பேலின் போன்ற துருவங்களை விட்டுவிட்டு, முன்னாள் நியு யார்க் மேயர் ரூடி ஜியூலியானி போன்ற அனைவருக்கும் கவர்ச்சியான ஆதர்சங்களை அழைத்தார்.

3. ஒபாமாவின் மோகம் முப்பது நாள் முடிந்தது. ஒரு வருடம் முடிந்தவுடன் ஜனாதிபதிக்கு மண்டகப்படி துவங்கும். அது இப்போது ஸ்டார்டிங்.

4. பொருளாதாரம்: முதலீட்டாளர்களுக்கு செம வருவாய். வங்கி முதலைகளுக்கு இரட்டிப்பு போனஸ். பங்குச்சந்தைக்காரர்களுக்கு கொண்டாட்டம். அன்றாடங்காய்ச்சிக்கு பஞ்சப்படி கூட கொடுப்பது நிறுத்தம். இப்படிப்பட்ட வேலையே இல்லாத சூழலில், வேலை தேடி சலித்தவர்களை வோட்டு போட சொன்னால்…

5. பணங்காய்ச்சி மரம்: மிட் ராம்னி கொணர்ந்தார். தலைநகரத்தில் லீபர்மனின் அழிச்சாட்டியத்தை விரும்பாதவர்கள் தந்தனர். குடியரசுக் கட்சி கொட்டியது. கையில காசு… பெட்டியில வாக்கு.

6. படுத்துக் கொண்டே ஜெயிப்போம்: ஆண்டிப்பட்டிக்கு வேட்பாளர் வராமலே ஜெயிக்கக் கூடிய கட்சி அ.இ.அதிமுக. அது மாதிரி கால் நகம் தேயாமல் வெல்லக்கூடிய இடம். இருந்தாலும், சுகவனங்கள் தோன்றிக் கொண்டேதானே இருக்கின்றனர்?

7. மாயை: ‘அவர்கள்தான் எல்லாம் செய்கிறார்கள். அறுபது போக்கிரிகளின் அழிச்சாட்டியம்! தங்களுக்கு என்ன வேண்டுமோ நிறைவேற்றிக் கொள்கிறார்கள்’ – இது குடியரசு கட்சியின் பிரச்சாரம். நாற்பது பேரை வைத்துக் கொண்டு எந்தவித மசோதாவையும் இம்மியளவு கூட நகரவிடாத கட்சியின் கூக்குரல்.

‘ஜட்ஜை நியமிக்க வேண்டுமா?’

‘முடியாது! போடுவோம் ஃபிலிபஸ்டர்.’

‘எங்க தல ஒபாமா நியமிப்பவர் என்றாலும்… ஜட்ஜ் உங்களுடைய குடியரசுக் கட்சிய சேர்ந்தவரப்பா… உங்காளுதான் என்பது தெரியுமில்லையா?’

‘இருந்தாலும் தர்ணா செய்வோம்! சட்டசபையை நடக்க விடமாட்டோம்! எங்க கட்சித் தல மெகயின் தோத்துட்டார்…’

இப்படியாக அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டையிட்டு, அந்தப் பழியை ஒபாமா தலையிலும், டெமோக்ரட்ஸ் மெஜாரிட்டி என்றும் தள்ளிவிடும் தந்திரம். (GOP Opposition Slows Obama’s Judicial Nominees : NPR)

8. விட்டுக்கொடுக்கும் மந்திரம்: சென்றதுடன் தொடர்புடையது. என் வீட்டில் ‘மதுரை’ ஆட்சிதான். இருந்தாலும், மீனாட்சி என்னவோ, ‘சிதம்பரம்’ என்று நடராஜனையே சொல்லவைக்கும் மேனேஜரின் சூட்சுமத்துடன் செயல்படுவார். ஒபாமாவிற்கு இந்த மாதிரி ராஜதந்திரம் போதவில்லை. போதிய பெரும்பான்மை இல்லாமலேயே காரியத்தை சாதித்துக் கொண்ட ஜார்ஜ் புஷ்ஷின் சாமர்த்தியத்தைப் பார்த்தால் கடுப்பு கலந்த ஆச்சரியம் வரவே செய்கிறது.

9. கோஷ உச்சாடனம்: ஆள்குறைப்பை முடித்தவுடன், ‘இதுதான் கடைசி வேலைநீக்கம். இனிமேல் சென்மாந்திரத்திற்கும் எவரையும் வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்!’ என்று வாய்கூசாமல் பொய் சொல்லும் மேலாளரின் திறமைக்கொப்ப, தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைப் பற்றி பேசாமல், வாக்காளரின் கவலையை பேசுவது நல்ல வேட்பாளரின் லட்சணம். குழந்தைகளுக்கும் ஏகே 47; அதே குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குழந்தை பெறும் திட்டம் என்பதெல்லாம் மனதோடு வைத்துக் கொண்டு, புறத்தே பிறிதொன்று பகர்வது வெற்றிக்கனியை சித்திக்கும்.

10. அதுதான் இந்தப் பதிவில் துவக்கத்தில் சொல்லியாகி விட்டதே. ‘ஏன் பெண்ணென்று பிறந்தாய்?’


அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை: 307,006,550

மிகக் குறைந்த வாக்காளர் கொண்ட 20 மாகாணங்களின் மக்கள் தொகை: 31,434,822

அதாவது 10%

ஓரு மாகாணத்திற்கு இரு செனேட்டர்கள்.

20 * 2 = 40 செனேட்டர்.

அமெரிக்காவில் மொத்த மாநிலங்கள்: 50; எனவே, மொத்த செனேட்டர்கள் எண்ணிக்கை: 50 * 2 = 100

அதாவது, வெறும் 10 சதவிகிதம், 40 சதவீதத்திற்கு வழிவகுத்தது.

இப்பொழுது நடுநிலையான தேர்தலில் அமெரிக்காவின் குறுக்குவெட்டு சித்திரமான மாநிலத்தில் இருந்து உண்மையாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட செனேட்டர் – ஸ்காட் ப்ரௌன்.

வாழ்த்துகள்.

David Sipress Cartoons: Life Everywhere

Source: The Phoenix > Reality Check