Tag Archives: England

வனபோசனம்

சென்ற மாதம் லண்டன் சென்ற வர நேரம் வாய்த்தது.
போன சமயத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக #சொல்வனம் பதிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் பிரபுவையும் கிரியையும் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது.
அலுவல் நெருக்கடியினாலும் கடைசி நிமிட திட்டமிடலினாலும் சிவாவினால் தலை காட்ட இயலவில்லை.
அவருக்காக இன்னொரு தடவை இங்கிலாந்து போக வேண்டும்.

வழக்கம் போல் சுவாரசியப் பேச்சு.
நிறைய இலக்கிய அரட்டை.
கொஞ்சம் போல் சொந்தக் கதை.

ஒரு தசாப்தம் முன்று சென்றிருந்தபோது ரதசாரதியாக கையில் குழலுக்கு பதில் ஸ்டியரிங் வளையத்தைப் பிடித்து விமானதளத்தில் இருந்து அழைத்துச் சென்ற கிரியின் வீட்டிற்கு சென்று சுவையான தமிழக சிற்றுண்டிகளை வெட்ட முடிந்தது.
இந்த தடவை பிரபுவின் வீட்டிற்கு செல்ல முடிந்தது. இரு வால் பெண்கள். படு சுட்டி. இங்கிலீஷ் டீ. வாயில் கரையும் இனிப்புகள்.

Jeyamohan’s Stories of the True : Translated from the Tamil கொண்டு வந்திருந்தார் கிரி.

Solvanam முன்னூறாவது இதழ் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனையை முன்வைத்தார்.

நாள் முழுதும் உழைத்து, பேசிக் களைத்த சோர்வு தெரியாமல் உற்சாகமாக விவாதித்து, ஆரோக்கியமான விஷயங்களை முன்னெடுத்து, நான்கு மணி நேரத்திற்கும் மேல் என் தர்க்கங்களுக்கு செவி மடுத்த பிரபுவிற்கும் கிரிக்கும் நன்றி!

பூன் கேம்பிற்கு உள்ளாவது ஆங்கிலக் கதைகளை வாசித்து விட வேண்டும்.

அனாதைக் கரடி

எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தால் எனச்செவியில் புகுத லோடும்
உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த ஆருயிர்நின் நூசலாடக்
கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம் கால வேலான்.
(கம்ப.328)

 

லண்டன் ரயில் நிலையத்தில் அந்தக் குட்டிக் கரடி வந்து இறங்கும். அதனுடைய கழுத்தில் “இந்தக் கரடியை கவனித்துக் கொள்ளுங்களேன்!” என்று எழுதியிருக்கும். இந்தக் காட்சியை சரியாகப் புரிந்து கொள்வதற்கு செப்டம்பர் மாதம் 1939க்கு பின் செல்ல வேண்டி இருந்தது. லண்டன் மாநகரத்தை குண்டு போட்டுத் தாக்குவார்களோ என அஞ்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஜெர்மனியுடன் போரிடுவதற்காக தந்தையர் எல்லாம் போர்முனைக்குச் சென்றுவிட, அன்னையர் எல்லாம் செவிலியர் ஆகிவிட, அனாதைகளாக ஆனக் குழந்தைகளை சித்திகளும் மாமிகளும் ரயில் ஏற்றி கிரமாப்புறமாக அனுப்பி விடுகின்றனர்.

evacuees-station

போர் முடிந்து சொந்த வீடு இருக்கும் லண்டன் நகரம் திரும்ப பல்லாண்டு காலம் ஆகலாம். ’பேடிங்டன்’ படத்தில் வரும் அழகுக் கரடியும் பெரு நாட்டில் இருந்து கள்ளத்தோணி ஏறி விசா இல்லாமல் இங்கிலாந்து நாட்டிற்குள் குடிபுகுகிறது. அங்கே நட்ட நடுவில் அது அமர்ந்திருந்தாலும், எந்தப் பயணியரும் அதை கவனிப்பதில்லை. அவரவருக்கு அவரவரின் அவசரம் + வேலை. ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பிரவுனின் குடும்பம் வந்து சேர்கிறது. எப்போதும் உற்சாகமாக இருக்கும் கரடியும், “எப்படி இருக்கிறீர்கள்? நலமா? நான் வசிப்பதற்கு இல்லம் தருவீர்களா!?” எனக் கேட்கிறது.

paddington_bear_Movie_Trains_Station_Railways_Rails_Wait_Adoption_Kids_WWII_World_War_Two

அதே மாதிரி அனாதரவான நிலையில் இருந்தாலும், ‘தி கிரேட் மேன்’ (பெரிய மனிதன் – The Great Man – ஃபிரென்ச் “Le grand homme”) படத்தின் பத்து வயது பாலகன் கட்ஜி (Khadji) பாரிஸ் ரயில் நிலையத்தில் பரிதாபமாக முகம் காட்டி, எவரிடமும் இறைஞ்சவில்லை. இது போரைக் குறித்த படம் எனலாம். அப்படியே, நாடு விட்டு நாடு தாவும் வந்தேறிகளின் குடிபுகலை சுட்டும் படம் எனலாம். நட்பின் நேசத்தின் கண்ணியத்தை உணர்த்தும் படம் எனலாம். அன்னியக் கலாச்சாரத்தைக் கண்டு அஞ்சும் மரபுவாத நாட்டின், புதிய தலைமுறை அனாதைக்கு — மகனின் பாசத்தை உணர்த்தி, வாழ்வை அர்த்தப்படுத்தும் சிறுவனின் கதை எனலாம்.

French_Film_Cinema_Sarah_Movie_Director_Immigrant_Alien_Russia_Chechen_Muslim-Islam_the-great-man

படத்தை பல்வேறு அத்தியாயங்களாக, அதன் இயக்குநர் சாரா லியானோர் (Sarah Leonor) பிரித்திருக்கிறார். முதல் அத்தியாயம் ஆஃப்கானிஸ்தானில் துவங்குகிறது. மார்கோவ் (நடிகர் சுர்ஹோ சுகாய்போவ்) என்பவரும் ஹாமில்டன் (நடிகர் ஜெரமி ரேனியர்) என்பரும் அங்கே காவல் காக்கிறார்கள். இருவரும் அத்யந்த நண்பர்கள். ஒருவருக்கு தாகம் எடுத்தால், இன்னொருத்தர் தண்ணீர் குடித்தால் அந்த தாகம் அடங்கும் என்று பின்னணியில் சிறுவனினின் குரல் ஒலிக்கிறது. அவர்களுடைய கனவில் சிறுத்தைப்புலி வருகிறது. அந்தக் கானல் புலியைத் தேடி அலைகிறார்கள். அப்போது ஹாமில்டன் சுடப்படுகிறான். அவனை பிரம்மப்பிரயத்தனப்பட்டு, அவனின் தோழன் மார்க்கோவ் காப்பாற்றுகிறான். ஆனால், அவனைத் தூக்கி வரும் வழியில் தன் கைத்துப்பாக்கியை இழக்கிறான. அதற்கான தண்டனையாக, அவனுக்கு இராணுவத்தில் பணியாற்றிய காலகட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிகிறான்.

இராணுவத்தில் மார்கோவ் சேர்ந்ததற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. செசன்யாவில் இருந்து பஞ்சம் பிழைக்க பிரான்ஸிற்கு அடைக்கலம் புகுகிறான் மார்க்கோவ். அவனுடைய மனைவி ருஷியாவின் தாக்குதல் போரில் இறந்துவிட்டாள். அவனுக்கு இருப்பதோ ஒரேயொரு மகன். மகனுக்கோ, தந்தையற்ற வாழ்க்கையை நினைத்து கழிவிறக்கம் கலந்த அச்சம் உடன் சேர்ந்த பதின்ம வயது ஆற்றாமை கோபம். இப்பொழுது மகனுடன் நேரம் கழிக்காவிடில், மீண்டும் மகனை, நல்லதொரு குடிமகனாக்க இயலாது என்பதை உணர்ந்த மார்க்கோவ், அதிகாரபூர்வ குடியுரிமையைக் கானல் நீராகக் கண்ணில் தண்ணி காட்டும் பிரெஞ்சு இராணுவ வாழ்க்கையைத் துறந்து, அதிகாரபூர்வமற்ற வந்தேறியாக மாறுகிறான்.

குடிமகர்களுக்கே வேலை கிடைப்பது பிரான்ஸில் யூனிகார்ன் குதிரைக்கொம்பாக, பெரும்பாடாக இருக்கிறது. இந்த நிலையில், அத்துமீறி உள்நுழைந்து, படைப்பிரிவில் இருந்தும் விலக்கப்பட்ட மார்க்கோவ் என்பவனுக்கு எப்படி ஊதியம் கிடைக்கும்? பல்லாண்டு காலமாக பிரிந்திருந்த மகனுடன் எவ்வாறு பாந்தமாக, பாசமான தந்தையாக உறவாட முடியும்?

அமெரிக்காவை விட பிரான்சு போன்ற நாடுகளில் குடியுரிமை பெறாதவர்கள், எவ்வாறு வேட்டையாடப்பட்டு, நாடு கடத்தப்படுகிறார்கள் என்பது இந்தப் படத்தில் காட்சிகளால், வசனங்களால், குறிப்பால் உணர்த்தப்படுகிறது. படத்தில் பல காட்சிகளில் நெடிய வசனங்கள் கிடையாது. குறிப்பாகச் சொன்னால். மகனும் தந்தையும் ஒன்றுசேரும் இடத்தைச் சொல்லலாம். மகனின் நல்வாழ்க்கைகாகத்தான் போருக்குச் சென்றேன் என்பதை பெரிய உரையாடல் மூலம் சொல்வதற்கு தந்தை மார்க்கோவ் முயல்கிறான். அந்த நெடிய சொற்பொழிவைக் கேட்க விரும்பாத மகன் கட்ஜி, எதிர்ப்புறமாகச் சென்று ஈஃபில் டவரின் ஒய்யாரத்தையும் பூட்டுகளால காதலைச் சொல்லும் பாலங்களையும் பார்ப்பது போல் ஓடி விடுகிறான். அந்த புதிய பூமியின் ஈர்ப்பும், மாபெரும் பாரிஸ் பிரும்மாண்டங்களும், இரவின் குளுமையும் அவனைத் தந்தையை நோக்கி இட்டுச் செல்கிறது. பாலம் மறைக்கும்போது வெளிச்சம் தடுக்கப்படுகிறது. பாலத்தின் அடியில் இருந்து வெட்டவெளியில் படகில் பயணிக்கும்போது நிலவின் வெளிச்சம் அப்பாவை அரவணைக்க வைக்கிறது. இருவரும் நெருங்குகிறார்கள்.

இந்த மாதிரி காட்சிகளைக் காதலில் பார்த்து இருப்போம். இரவின் நீல நிறத்தில் நண்பர்களின் கொண்டாட்டத்தைப் பார்த்து இருப்போம். ஆனால், தாய்மண்ணற்ற பிரதேசத்தில், வீடற்ற நாட்டில், தந்தையைக் கண்ணால் நாள்பட பார்த்தே இராத பாலகனின் பாசத்தை, நெருக்கத்தை அடையப் பாடுபடும் தந்தையையும், தூரதேசத்தில் நெருங்கிக் கொள்ளும் அன்னிய நாட்டவரின் ஈடுபாடும் மனித நேசத்தை வெளிச்சம் போடுகின்றன.

ஃபிரெஞ்சு புரட்சியின்போது அரசியல் கொள்கைகளைப் பரவலாக்க கலைப்படைப்புக்களின் உதவியது. பிரஞ்சுப் பேரரசை நெப்போலியன் உருவாக்கியபோது செய்தி என்பது தேசிய உணர்வைப் பொங்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்று நெப்போலியன் நினைத்தார். மற்ற நாடுகளும் நெப்போலியனை பின்பற்றி, அவனைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்க ஆரம்பித்தன. கீழே ஜெர்மனிய அரசின் பிரச்சார போஸ்டரைப் பார்க்கலாம். இதில் ‘தி கிரேட் மேன்’ என்று பிரான்ஸில் சொல்பவரை, ‘வெறும் எலி’ என்று சித்தரிக்கிறார்கள்.

Napolean_Mice_The-Great-Man1

பிரெஞ்சு நாட்டின் அடிநாதமாக Liberté, égalité, fraternité (விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம்) என்பதைச் சொல்கிறார்கள். அதைத்தான் இந்தப் படம் தேடுகிறது. ஒரு தேசத்தில் அன்னிய மக்கள், அதிகமாக உள் நுழைய நுழைய, அந்த தேசத்தின் கொள்கைகள் எவ்வாறு மாறுகின்றன? புதிதாக குடிபுகுந்தவர்கள், அந்த தேசத்தின் மையச்சரடோடு ஒத்துப் போவார்களா? அன்னியநாட்டில் இருந்து நுழைபவர்களுக்கு அந்த மண்ணின் மைந்தர்கள் எவ்வாறு, தங்கள் விழுமியங்களை விதைப்பார்கள்?

சிரியா வேண்டாம். தற்போதைய சிரியாவில் இருந்து தப்பிக்க முயலும் ஆசிய நாட்டினரைக் கூட ஐரோப்பியருடன் ஒப்பிட வேண்டாம். சில மாதம் முந்தைய கிரேக்கப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம். எத்தனை ஜெர்மானியர், தங்களின் சொந்தச் சகோதரர்களுக்காக, தங்கள் கைக்காசைக் கொடுக்க முன்வந்தார்கள்?

கில்கமேஷ் காதை உங்களுக்கு நினைவிருக்கலாம். அது இரு நண்பர்களின் கதை. கில்கமேஷும் அவனுடைய தோழர் என்கிடு என்பவரும் தோழர்களாகவே தங்கள் பயணத்தைத் துவங்கவில்லை. இந்தப் படத்திலும் அவ்வாறே, மார்க்கோவும் ஹாமில்டனும் சிறுசிறு பிணக்குகளுக்குப் பின் தங்கள் திறமைகளை அறிந்து, உற்ற பந்தங்கள் ஆகின்றனர். ஹம்பாபா என்னும் கோர விலங்கைத் தேடி, அந்த மாபெரும் இராட்சத மிருகத்தை வேட்டையாடுவதற்காக, பெரியோரின் சொல்லைக் கேளாமல், கில்கமேஷ் மற்றும் என்கிடு, தங்களின் பயணத்தை மேற்கோள்கின்றனர். இந்தப் படத்தில் சிறுத்தைப்புலியை துரத்த வேண்டாம் என்னும் தங்களின் மேல் அதிகாரியில் சொல்லைக் கேளாமல், இரு நண்பர்களும் அந்த வீரப் பயணத்தை எடுக்கின்றனர். கிலகமேஷுக்கு பயமுறுத்தும் கனாக்கள் வருகின்றன. என்கிடு அவனின் கனவுகளை நல்லெண்ணங்களாக உணர்த்தி, சாகசத்தைத் தொடர்கிறான். நண்பன் என்கிடுவின் மரணத்திற்குப் பிறகு, மரணமற்றப் பெருவாழ்வை நோக்கிய தேடலை கிலகமேஷ் மேற்கொள்கிறான். இதுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.

தீவிரவாதம் என்னும் சிறுத்தைப்புலியைத் தேடி அடக்க நினைத்த மார்க்கோவ் என்னும் என்கிடு இறந்துவிடுகிறான். அவனின் உற்ற தோழனாலும் அதை சட்டென்று அடக்க முடியாது. ஒரு தந்தையாக, அனாதையானக் குழந்தையை இரட்சிப்பதில், தன்னுடைய இறவாத்தன்மையை உணர்வதாக ஹாமில்டன் என்னும் கில்கமேஷைப் பார்க்கிறோம். அப்படியானால், தாய்மைக்கு, இங்கே என்ன இடம் என்பதை பெண் இயக்குநர் சாரா சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால், பெண்ணாக இருப்பதினாலேயே, ஒரு ஆணிற்குள் அடக்குண்டு இருக்கும் பொறுப்பையும், குழந்தைமையைப் பேணும் தாய்மை குணத்தையும் அவரால் பூடகமாக உணர்த்தமுடிகிறது. ஆண் இயக்குநர்கள் எடுக்கும் படங்களின் ஆண் கதாபாத்திரங்கள் ஆவேசமாக இயங்குவார்கள். துப்பாக்கியும் கையுமாக, இரத்தம் படிந்த கறைகளுடன் போர்களில் உலா வருவார்கள். அது ஆடவர்களின் ஆண்மையை நிலைநிறுத்துவதற்காக ஆடவர் எடுக்கும் படம். இது மனிதரின் குணத்தை உணர்த்துவதற்காக, பெண்கள் அதிகம் உலாவராதத் திரைக்கதையில், ஆண்களின் பராக்கிரமத்தை உணர்த்தும் பெண் எடுத்த படம். திரைப்படத்தின் தலைப்பையேப் பாருங்களேன். தி கிரேட் மான் – மாபெரும் ஆண்மகன்: ஆண்மகனுக்கு என்ன இலட்சணம்?

இந்தப் படத்தில் பெரிய கதாபத்திரங்களில் பெண்கள் கிடையாது. ஆண் என்பவன் வாள் ஏந்துவான்; சுட்டுத் தள்ளுவான்; சாப்பட்டைக் கொண்டு வருவான்; அதெலாம் இங்கே காண்பிக்கப்படுகிறது. ஆனால், நல்ல மனிதர் என்பவர், சக மனிதருக்கு மரியாதை தருவார். அவரின் நிலை, நாடு, அரசியல், இனம், மொழி, மதம், போன்ற சின்னங்களை ஒதுக்கி, சக நேசனாக நடத்துவார். இந்த உலகமோ, சொந்த நாடோ, அதைச் செய்யாவிட்டாலும் கூட… தன்னுடைய அண்டை அயலாரை அவ்வாறு நடத்துபவரே ‘தி கிரேட் மேன்’.

இந்த சமூகத்தில் நல்ல மனிதனாக வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? போரில் அடிமைகளாக ஆனவர்களை வெற்றி கொண்டவர்கள் எவ்வாறு நடத்த வேண்டும்? வேண்டாத சண்டையின் நடுவே அகப்பட்டு கொண்டவர்களை எவ்வாறு மீட்க வேண்டும்? இதற்கெல்லாம் சரியான பதில் எவரிடமும் கிடையாது. ஆனால், ‘தி கிரேட் மேன்’ அதற்கான விடைகளை நோக்கி நம்மை செலுத்துகிறது.

https://curious.com/curios/2015-09-28/french-love-affair-over

Eater: “Is Paris Facing a Summer Bread Shortage?
The Washington Post: “Mass holiday by bakers has Paris fearing the unthinkable: A baguette shortage
Quartz: “For the first summer in 200 years, Parisian bakers can go on vacation whenever they please
NPR: “Parisians On Hunt For Baguettes As Bakers Get Nod To Take Vacation

The Unlikely Pilgrimage of Harold Fry by Rachel Joyce

The Unlikely Pilgrimage of Harold Fry_harolds-walk

The Unlikely Pilgrimage of Harold Fry சமீபத்தில் வெளியான நாவல். புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புத்தகம்.

ரொம்ப வருட காலம் சந்திக்காத இளமைக்காலத் தோழிக்கான கடிதத்தை தபாலில் போடாமல் நேரில் கொடுப்பதுதான் கதை. நேரில் சென்று கடிதத்தைக் கொடுக்கும்வரை நோய்வாய்ப்பட்ட நாயகி பிழைத்திருக்க வேண்டும். அதற்கு நிறைய நம்பிக்கை தேவை. அன்றாட அல்லாட்ட வாழ்வில் இருந்து விடுதலை அடையும் மனநிலை தேவை. போகும் வழியில் தொலைந்து போகாமல் பயணிக்கும் லட்சியம் தேவை.

திடீரென்று ”அமூர்” திரைப்படம் நினைவிற்கு வந்தது. வயதான தம்பதிகளின் கதையை பிரென்சு படம் சொன்னால், இந்த நாவல் கைக்கூடாத காதலை வயதானவர்கள் நினைத்துப் பார்ப்பதை சொல்கிறது.

ஓடிக் கொண்டே இருக்கும் ஃபாரஸ்ட் கம்ப் கூட நினைவிற்கு வருகிறார். அதே மாதிரி The Unlikely Pilgrimage of Harold Fry கதையிலும் வழிப்போக்கர்கள் வருகிறார்கள்.

க்வீனியைக் காப்பாற்ற ஹாரோல்ட் நடப்பது உலகளாவிய கவனம் பெறுகிறது. ஃபேஸ்புக் பக்கம் எல்லாம் துவங்கி பலர் சேர்கிறார்கள். ஹாரொல்ட் போகிற வழியில் நாயகனையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து, நாயகன் ஹாரோல்டையே கழற்றியும் விடுகிறார்கள்.

கணவனைக் காணாத மனைவியும் காரை எடுத்துக் கொண்டு பயணத்தில் இணைகிறார். தான் ஆரம்பித்த குறிக்கோளில் இருந்து, தன்னையே விலக்குவது, ஹாரொல்டுக்கு பெரிய மகிழ்ச்சி தருகிறது.

லண்டன் சுற்றுலா

victoria-railway-station-london-david-french
லண்டன் அசப்பில் பார்த்தால் தேர்ந்த அமெரிக்க நகரம் போல் இருக்கிறது. சொல்லப் போனால் நியு யார்க்கின் ஒன்று விட்ட தம்பி போல் தெரிந்தது. ஆங்காங்கே சூதாட்ட மையங்கள்; இரயில்வே ஸ்டேஷனிலேயே ’வை ராஜா வை’ விளையாடலாம் எல்லாம் பார்த்தால் கோட் சூட் போட்ட லாஸ் வேகாஸ் வந்துவிட்டோமோ என்னும் சந்தேகத்தைக் கொடுக்கும்.

காய்கறி மார்க்கெட்டுக்கு செல்வோர் கையில் பை இருக்கும். அது மாதிரி லண்டனில் வேலை முடிந்து வீடு திரும்புபவர் கையில் பியர் இருக்கும். பொதுவில் பியர்சாந்தி செய்வதை லாஸ் வேகாஸ் மட்டுமே தரிசனம் செய்திருக்கிறேன். லண்டனில் குடி கொண்டாட்டமாக இல்லாமல் உதிரமாக இணைந்திருக்கிறது.

கண்காணிப்பு கேமிராக்களின் அணிவரிசை, நிஜமாகவே ’The Truman Show’ படப்பிடிப்பில் அங்கம் வகிக்கிறோமோ என சினிமாவை வாழ்க்கையோடு இணைத்தது. நட்ட நடு பாரிஸ் நாட்டர்டாம் தேவாலயத்தின் எதிரேயே ஒன்றுக்கிருப்பவர்கள் போல் எல்லாம் இல்லாமல் லண்டனில் சந்து பொந்துகளில் எங்காவது எச்சில் துப்பினால் கூட தபாலிலே சம்மன் அனுப்புவார்கள் என இங்கிலாந்துக்காரர்களை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள்.

மதிய உணவிற்கான இடைவேளையை கர்ம சிரத்தையாக பின்பற்றுகிறார்கள். அமெரிக்க நகரங்களின் அலுவல் வாழ்க்கையில் பெரும்பாலானோர் ஓடிக்கொண்டேதான் சாப்பிடுவார்கள். ஒரு கவளம் சாப்பாடு; நாலு வரி நிரலி. அல்லது ஒரு கடி சாண்ட்விச்; எட்டு வரி பதிவு… இப்படி வேலையும் கையுமாக உண்ணாமல் ஆற அமர புல்தரையில் ஜோடி ஜோடியாக அமர்ந்து போஜனம் புசிப்பதையும் இங்கேக் கொட்டிக் கொள்வதையும் பார்த்தாலே டம்ஸ் கேட்டது என்னுடைய அமெரிக்க வயிறு.

குப்பை போல் ஒதுக்கித்தள்ளும் குடிசைவாசிகளின் ஒதுக்குப்புறங்களும், காடுகளுக்குள் வீடு அமைக்கும் புறநகர் கலாச்சாரங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும், அவற்றில் கோடானு கோடிகளை அள்ளும் வங்கிக்கூலிகளும், அறிமுகமில்லாதவர்களுக்கு உள்ளீடற்ற ஷோ கேஸ் சிரிப்பு முகமும், தவறுதலாக இடித்தால் கண்டிப்பு நிறைந்த போலி மன்னிப்புகளும், மேற்கத்திய நாகரிகமாகக் கருதும் புறப்பூச்சு நாசூக்குகளும், இன்னொரு அமெரிக்காவையே எனக்கு இங்கிலாந்தில் காட்டிக் கொண்டிருந்தது.
TrainView_Slums_Ghetto_London_England_UK_Victoria_Station-Railways_Poor

லண்டன் விக்டோரியா நிலையம்

கடல் மீன் எப்படி எங்கெங்கோ சென்று அலைந்து விட்டு தன் பவளப்பாறைக்குத் திரும்புகிறதோ… குளிர்காலத்திற்காக பறவை எப்படி பலகாத தூரம் பறந்து வேடந்தாங்கலுக்குச் வந்துவிட்டு, தாய் ஏரிக்குத் திரும்ப குடிபெயர்கிறதோ… தெரியாது. எனக்கு கூகுள் வழிகாட்டியும் வேஸ் (waze) கைகாட்டியும் இயக்காவிட்டால், அடுத்த தெருவில் இருந்து கூட சொந்த வீட்டிற்கு வந்து சேரும் திசை தெரியாது.

இப்படிப்பட்டவனுக்கு மொழிப் பிரச்சினையும் சேர்ந்து கொண்டால்?

எல்லாக் காக்கைகளும் கா…கா… என்றுதான் கூவினாலும், அண்டங்காக்கையும் ஆனைச்சாத்தனும் கரையும் வித்தியாத்தை பறவையியல் வல்லுநர் சொல்லுவார். அதே போல் லண்டன்காரர்கள் ஆங்கிலத்திற்கும் என்னுடைய ஆங்கிலத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க வல்லுனர் வேண்டாமென்றாலும், “கா…கா…” என்று இரைந்தால், காக்கா வந்து சாதத்தைக் கொத்தித் தின்பது போல், நம் ஆங்கிலமும் எல்லாக் காக்கைகளுக்கும் புரியும் என்னும் மதர்ப்போடு இங்கிலாந்தில் இறங்கினேன்.

நான் செல்ல வேண்டிய இடத்தின் பெயர் “விக்டோரியா கோச் ஸ்டேஷன்”. ரயில்வே நிலையத்தில் இறங்கியவுடன் அகப்பட்ட முதலாமவரிடம் “விக்டோரியா ஸ்டேஷன் எப்படிங்க போகணும்?” என்றேன்.

அவரோ “அங்கேதான் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கே போகணும்? முகவரி என்ன?” என ஆதுரமாக விசாரித்தார். இந்த மாதிரி மொழிப் பிரச்சினை வருமென்றுதான், பேப்பரும் கையுமாக அச்செடுத்து வந்திருந்தேன். அதைக் காண்பித்தேன். தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம், அண்ணா தெரு, அண்ணா நகர், அண்ணா பஸ் ஸ்டாண்டு, அண்ணா விமான நிலையம் இருப்பது போல், இங்கிலாந்திலும் பெயர் பிரச்சினை. ஒரே ஒருவர்தான். அறிஞர் அண்ணா கட்சிக் கொடிகளில் கை காண்பித்திருக்கிறார். இங்கே அன்னை விக்டோரியா அந்த மாதிரி வழி காண்பிப்பதற்கு பதில், நாஞ்சில் மனோகரன் மாதிரி கையில் மந்திரக்கோலோடு காட்சியளித்தார்.

டெல்லியில் ”பஸ்ஸடா” என்று செல்லமாக அழைப்பது போல், மரூஊ இருந்திருக்கலாம். அல்லது எலிசபெத்தாவது தனி வழி சென்றிருக்கலாம். ஒரு வழியாக அந்தக் கால குதிரை வண்டி நிலையமான இந்தக் கால பேருந்து நிலையத்தை வருவதற்குள் ஆங்கிலத்தை விட ஹிந்தி மட்டும் பேசினால் மகாராணியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா என அறிந்தேன்.

பாஸ்டன்: பெயர்க் காரணம்

நான் இருக்கும் ஊரின் பெயர் பாஸ்டன். இங்கிலாந்தில் இருந்து இந்தப் பெயர் வந்திருக்கிறது.

அமெரிக்காவில் பரங்கியர்கள் எங்கெல்லாம் குடியேறினார்களோ, அந்த இடத்திற்கெல்லாம், தங்களின் சொந்த ஊரின் பெயரையே நாமகரணமிட்டார்கள். இங்கிலாந்தில் உள்ள லண்டன், யார்க், க்ளூஸ்டர், வூர்ஸ்டர் போல், இந்தப் பகுதியிலும் நியு லண்டன், நியு யார்க் என குக்கிராமங்களை அழைத்துக் கொண்டார்கள். இவற்றில் சில ஊர்கள் மூலகர்த்தாவை விட அதிகப் பெயரும் புகழும் பெற்றது. லண்டனில் இருந்து இரண்டரை மணி நேரம் வடக்கில் இருக்கும் அசலை விட அதிகம் பேர் புழங்கும் இடமாக பாஸ்டன் ஆகி இருக்கிறது.

அந்த அசல் பாஸ்டன் பெயர் எப்படி வந்தது?

செயிண்ட் போடாஃல்ப் நகரம் என்பதுதான் மருவி பாஸ்டன் ஆகி இருக்கிறது. பால்டாஃப் டவுன் (அ) பால்டாஃப் ஸ்டோன் என்பது நாக்கை சுளுக்கெடுக்க, பால் ஸ்டோன் என சுருண்டு, அதுவே… நாளடைவில் பாஸ்தன் என பெயர் பெற்றது.

“ஒரு கல்; ஒரு கண்ணாடி” என்னும் பிரயோகம் கூட இந்த நகரத்தில் இருந்து வந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் துறவி பால்டாஃப் வைத்தது ஒரு கல். அதைச் சுற்றி வசித்தவர்களால் பாஸ்டன் நகரம் உருவானது. நடுநடுவே போர்ச்சுகீசியர்கள் குடிபுகுந்தார்கள். அப்படி வந்தேறியவர்களை 21ஆம் நூற்றாண்டில் கால்பந்தில் இங்கிலாந்து தோற்றவுடன் பால்டாஃப் stone (கல்) கொண்டு மண்ணின் மைந்தர்கள் விரட்டினார்கள்.

அமெரிக்காவின் பாஸ்டனில் இருந்த ஆதிகுடி என்ன பெயர் கொண்டு அழைத்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

மேரி என்றால் மன்னிப்பு; மேற்கு என்றால் ஆக்கிரமிப்பு

பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை பிரித்தானியர் இன்றளவும் விடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் வடக்கு அயர்லாந்து.

பெல்ஃபாஸ்ட் நகரின் கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டண்டுகளுக்கும் நடுவே சுவர் எழுப்புவதை சரித்திர பின்னணியில் விவரிக்கிறது: The American Scholar: Belfast: City of Walls – Robin Kirk

இங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

எல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.

1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.