Tag Archives: சீனா

ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே

அமெரிக்கா அசல் நாட்டாமை. உலகெங்கும் அதன் ஊடகம். அதன் சந்தையாக்கம். அதன் கேளிக்கை. அதன் இன்ஸ்டாகிராம். அதன் டிவிட்டர். அதன் ஃபேஸ்புக்.

மேற்குலகம் சொல்வதை வேதவாக்காக பிரச்சாரம் செய்து பரப்ப தேவதூதர்கள் நிறைய உண்டு. பிபிசி ஒரு பக்கம் ஓதும். இன்னொரு புறம் சி.என்.என்.

கத்தார் நாட்டிற்கு என்று அல்ஜஸீரா. ருஷியா தேசத்திற்கு ஆர்.டி. எல்லாம் கொஞ்சம் போல் ஆங்கிலத்தில் பரப்புரைத்தாலும், ஆப்பிளும், ஆண்டிராயிடும் டைம்ஸ் நாளிதழையும் என்.பி.ஆர். வானொலியையும் மட்டுமே உங்கள் செய்தியோடையில் காட்டும்.

இந்த வித்தையை சைனா சிறப்பாக கற்றுத் தேர்ந்திருக்கிறது. டிக் டாக் துவங்கி கண்ணுக்குத் தெரியாத பிக்ஸல் வரை வியாபித்தது.

சீனா வானொலி தமிழ்ப் பிரிவு நாள்தோறும் ஒலிபரப்புச் சேவையை வழங்குகிறது.
தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற முக்கிய ஊடகமானது, சீன அரசு ஊடகத்திடமிருந்து அவர்களின் செய்தியை விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது.
மலேசியாவில் கம்யூனிசம் தழைத்தோங்க சீன மொழியில் செய்திகளை வழங்க அந்த நாட்டின் நான்கில் ஒரு குடிமகனைக் கவர சீனா இன்னொரு ஒப்பந்தம் கையெழுத்திட்டிக்கிறது.

கடைசியாக, அமெரிக்க கல்வி ஸ்தாபனங்களைக் குறி வைத்திருக்கிறது. தங்களின் தாய்நாட்டையோ பீஜிங் அரசையோ சற்றேனும் மாற்றுப் பார்வை பார்க்கும் ஆசிரியரோ, பாடத்திட்டமோ இருந்தால் அரிவாளையும் சுத்தியலையும் கையில் எடுத்து அவர்களை பதவி விலக்கி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விடுகிறார்கள்.

ஹாங்காங் குறித்தும் சிஞ்சியாங் உய்குர் முஸ்லிம்கள் குறித்தும் சீன நாட்டின் அதிகாரபூர்வ அடக்குமுறையை விதந்தோத இவை உதவும்.

தென் கிழக்கு ஆசியாவில் நிரம்பி வழியும் இந்த கண்கட்டி அந்தகராக்கும் நிலையை அகற்றி பரந்துபட்ட பன்முகப் பார்வையைப் போக்க #சொல்வனம் துவங்கிய காலத்தில் இருந்து முயல்கிறது.

அந்த வகையில் இரு கட்டுரைகள் இந்த இதழில் #solvanam இதழில் வெளியாகி இருக்கின்றன. அவற்றை வாசித்து செய்திகளையும் கொள்கைகளையும் பொதுவுடைமை ஆக்குங்கள்.

கட்டுரை 1 – நேபாளமும் சீனாவும் இந்தியாவை எவ்வாறு அச்சுறுத்துகின்றன?

கட்டுரை 2 – தாய்வானை நோக்கி தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதால் போர் பயத்தில் எவ்வாறு இந்த பிரதேசத்தை பதற்றத்தில் வைத்து பொருளாதார வளர்ச்சியை முடக்குகிறார்கள்?

தாயில்  தூவாக்   குழவி   போல –
தாயில்லாத உண்ணாக் குழவி போல;  ஓவாது  கூஉம் ஒழியாது
கூப்பிடும்;  நின்    உடற்றியோர்    நாடு    –    நின்னைச்
சினப்பித்தவருடைய நாடு

புறநானூறு – 4: சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி

Cultural identity, family relationships & the complexities of Intergenerational Communication

கதைசொல்லி சீனத்து பாட்டி. அவளுக்கு பிழையற்ற ஆங்கிலம் வாராது. எனவே, அவளின் கொச்சை மொழியிலேயே சம்பவங்களைச் சொல்கிறாள். அவளின் அமெரிக்க மகளின் பார்வையில், அந்தப் பாட்டி மோசமான குழந்தை காப்பகர். பாட்டிக்கு மாப்பிள்ளை புருஷ லட்சணமாக வேலைக்குப் போகவில்லையே என்னும் அங்கலாய்ப்பு. பொண்ணாக பொட்டி பாம்பாக பேத்தியை வளர்க்க எண்ணும் இறுமாப்பு.

முழுக்கதையும் சொல்லப் போவதில்லை. #சொல்வனம் இதழில் வாசியுங்கள்.

அன்னிய தேசத்திற்கு ஆயா வேலை பார்க்க போகும் எந்த இந்திய தாத்தா, பாட்டிக்கும் நடக்கக் கூடிய விஷயம் இது.

இதைப் போல் பல கதைகள் ஏற்கனவே வந்திருக்கின்றன:

  1. “Everyday Use” by Alice Walker: ஆப்பிரிக்க அமெரிக்க சூழல்
  2. “The Third and Final Continent” by Jhumpa Lahiri: இந்தியச் சூழல்
  3. “The Joy Luck Club” by Amy Tan: சீன குடியேறிகளும், இரண்டாம் தலைமுறை அமெரிக்க மகள்களும்

எனினும் Gish Jen எழுதிய Who’s Irish? அதன் தமிழ் மொழிபெயர்ப்பால் மிளிர்கிறது. திறமையான மொழியாக்கம். எளிமையான, அணுகலான, சிக்கலற்ற நடை.

#Solvanam தளத்தில் படிக்கலாம்

Culture is the values, beliefs, thinking patterns and behavior that are learned and shared and that is characteristic of a group of people.Identities are constructed by an integral connection of language, social structures, gender orientation and cultural patterns.

இரு கோடுகள் – அமெரிக்க ஒற்றர் பராக் ஒபாமா

ஒபாமாவிற்கு சனியும் சரியில்லை. குருவும் சரியில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிரமதசை நடப்பது போல் தோன்றுகிறது.

அசோசியேடட் பிரெஸ் என்ன செய்கிறது, யாரை அழைக்கிறார்கள், எவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் என்று வேவு பார்த்திருக்கிறார். ஒன்றிரண்டு நாள்கள் அல்ல… அறுபது நாள்களுக்கு மேல் ஏ.பி. நடவடிக்கைகளை கண்காணித்திருக்கிறார்கள்.

இப்படி நீண்ட காலம் ஒருவரை ஒற்றறிய வேண்டுமானால் வாரண்ட் வாங்கி இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கிற்கு உட்பட்டு இந்த மாதிரி விஷயங்களை செய்திருக்க வேண்டும். அதெல்லாம் கடைபிடிக்கவில்லை. இத்தனைக்கும் AP நிறுவனம் முஸ்லீம் இல்லை. தீவிரவாதி இல்லை. அமெரிக்காவில் பன்னெடுங்காலமாக இயங்கி வரும் செய்தி ஸ்தாபனம். புகழ்பெற்ற ரிப்போர்ட்டர்களை உள்ளடக்கிய நான்காவது தூண்.

அவர்களைப் போய்… ஏன்?

ஒசாமா பின் லாடன் செத்த முதலாம் நினைவு நாளை அல்-க்வெய்தா பெரிதாகக் கொண்டாட விரும்பியது. ஏதாவது மிகப் பெரிய தீவிரவாதச் செயலை செய்து முடிக்க விரும்பியது. ஏமனில் இருந்து விமானத்தைக் கடத்தி இஸ்ரேல் போன்ற அணுசக்தி நிறைந்த தேசத்தில் நாசம் விளைவிக்க திட்டம் தீட்டியது. இந்த விமானத்தை ஓட்ட தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமெரிக்க உளவாளி. அவர் இந்த சதித் திட்டத்தை முறியடித்துவிட்டார். விமானத்தை ஹை ஜாக் செய்து சமர்த்தாக அமெரிக்க நண்பர் நாட்டிடம் ஒப்படைத்துவிட்டார்.

இவ்வளவு பெரிய திட்டம்! அமெரிக்க உளவாளி அல் குவெய்தாவிற்குள் இருக்கிறார். அவரும் இன்னொரு நிஜ தாலிபான் போராளியும் சேர்ந்து ஒஸாமா அஞ்சலி அழிப்புத் திட்டத்திற்கு செல்கிறார்கள். கூட வந்த தீவிரவாதிகளை வீழ்த்தி, இன்னொரு 9/11 தகர்ப்பு நடக்காமல் காப்பாற்ற வேண்டும்.

இத்தனையும் வெளியில் கசியாமல் இருக்க வேண்டும். கசிந்தால், இன்னொரு உலகப் போர் துவங்கும் அபாயம். இதற்காக சொல்லாமல் கொள்ளாமல் நிருபர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாமா?

Argo படம் பார்ப்பது போல் இருக்கிறது. உயிர்களைக் காப்பதற்காக அன்னிய நாட்டிற்குள் அத்துமீறி நுழைகிறோம். விஷயத்தை அறிந்த முந்திரிக்கொட்டை இந்தத் திட்டத்தை நிருபரின் காதில் கிசுகிசுக்கிறது.

அப்பொழுது செய்தியாக வெளியிட்டு, அப்பாவி உயிர்களை சாகடிக்க வேண்டுமா? அல்லது ஆறிய கஞ்சியான பிறகு நாளிதழில் மெதுவாக எழுத வேண்டுமா?

அனைத்து உண்மைகளையும் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதால் என்ன பயன்? எல்லா விஷயங்களையும் பதுக்கி, ரகசியமாக டீல் போடுவதால் வரிப்பணம் கட்டும் குடிமகன்களின் அடிப்படை உரிமை பறிக்கப்படுகிறதா?

பிறரின் தொலைபேசிகளை காலவரையின்றி ஒட்டுக் கேட்கும் சட்டம் கடந்த ஜனாதிபதி புஷ் காலத்தில் இயற்றப்பட்டது. இராக்குடனும் ஆஃப்கானிஸ்தானுடனும் போர் நடத்திய காலத்தில் ஒற்றர்களைப் பாதுகாக்க இந்த சட்டத்தை பயன்படுத்தினார்கள். சண்டை முடிந்தபிறகு சட்டம் காலாவதி ஆகி இருக்க வேண்டும். ஆனால், நீட்டித்துக் கொண்டே வந்தார்கள், அதன் பின் அவ்வப்போது எதிர்க்குரலாக டெமோகிராட் குரல் ஒலித்தாலும் அரசியல் காரணங்களுக்காக ஒபாமாவும் இதை ஆதரித்து கிட்டத்தட்ட நிரந்தர சட்டமாகவே ஆக்கிவிட்டார்.

இப்பொழுது அசோசியேடட் பிரெஸ் மேட்டருக்கு பிறகு இரு கட்சிகளிடம் இருந்தும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பத்திரிகைகளை வேவு பார்க்க வேண்டுமானால், நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக ஒருங்கிணைந்த குரல் கேட்கத் துவங்கியுள்ளது. யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் கண்காணிக்கலாம் என்பதில் கொஞ்சம் லிமிடெட் மீல்ஸ் ஆக்கலாம் என்பதை ரிபப்ளிகன் கட்சியே ஒத்துக்கொண்டுள்ளது.

இவ்வளவும் ஒசாமா பின் லாடன் நினைவாஞ்சலி மேட்டரில் சி.ஐ.ஏ ரகசியமாக செயல்பட்டதை அசோசியேடட் பிரஸ் அம்பலப்படுத்தியதால் கிடைத்த ஆய பயன்.

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் உணரப்படும் என்பது போல் ரிபப்ளிகன் புஷ் காலத்தில் பயன்பட்ட சட்டம், டெமோகிராட் ஒபாமா காலத்தில் பிரச்சினையாக மாறியிருக்கிறது.

இதன் உச்சகட்டமாக எல்லாவற்றையும் மறைக்கவும் மறக்கவும் ஸ்னோடென் வந்து துப்பு துலக்கி ஃபேஸ்புக்கும், மைக்ரோசாஃப்ட் ஸ்கைப்பும், யாஹூவும் சீனாவின் ருஷியாவின் தகவல்களை வேவு பார்க்கின்றன என்றார்.

உன் ஐடியாவை சீனா தான் நனவாக்கும்

இன்றைக்கு நாள்காட்டி தத்துவமாக ‘செத்த எறும்பை நீ சர்க்கரையில் தான் பார்ப்பாய்’ போட்டு இருந்தார்கள். இதற்கு முன்பு கேட்டிராத பழமொழி.

முதல் அர்த்தமாக, எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு இடத்தை காலி செய்தால் பிழைக்கலாம். சாரி சாரியாக செல்லும் எறும்புக் கூட்டம். இந்த மொழியின் படி தனித்து நின்றால் சாகும். அனைத்து பெண் நடிகைகளும் தமிழ் கலாச்சாரப்படி நடிக்கும் போது குஷ்பு மாதிரி கற்பு கருத்தோ, த்ரிஷா மாதிரி குடி கருத்தோ சொன்னால் கல்லடி படுவார்கள்.

இரண்டாவது பொருளாக, கறுப்பு நிறமான எறும்பை வெள்ளை நிறத் துகள் நிறைந்த சர்க்கரையில் எளிதில் பார்க்கலாம். எல்லோரும் செக்கு மாடு வாழ்க்கையில் ஓட, ஒருவர் மட்டும் எதிர் திசையில் வித்தியாசமாக யோசித்தால் ஒன்று நிம்மதியாக வாழலாம்; அல்லது மொத்தமாக இறக்கலாம். தப்பித்துச் செல்ல முடியாது.

கடைசி அர்த்தமாக, தமிழகத்தில் எப்பொழுதுமே குளிர் காலம் கடுமையாக இருந்ததில்லை என்று அந்தக் காலத்தில் நிலவிய தட்ப வெட்ப சீதோஷ்ண நிலையை அறியலாம்.

போதையில் அமிழும் சீனாவும் வேலையில்லா திண்டாட்டம் நிறை கியூபாவும்

1. Self-immolation as protest

உடன்கட்டை ஏறின ‘சதி’ காலம் முதல் தீக்குளிப்பது இந்திய கலாச்சாரம். ஈழத் தமிழருக்காக முத்துக்குமாரின் அர்ப்பணிப்பு வீணாகியது. ஆனால், டுனீசியாவில் ஜனாதிபதி போய், பிரதம மந்திரி ஆட்சி பிடித்துள்ளார்.

இந்தக் கட்டுரை ஹங்கேரி, தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலும் நடக்கும் தீக்குளிப்பை கேள்வி கேட்கிறது. நியாயமான கோரிக்கைக்காக தற்கொலை செய்து கொள்வது அறமா?


2. Cuba Issues Thousands Of Self-Employment Licenses

தமிழ்நாட்டில் ஆட்சி மாறி அதிமுக அரியணை ஏறினால், அரசு ஊழியருக்கு கெடுபிடி அதிகமாகும். ஆனால், காஸ்ட்ரோ ஆட்சி மாறாவிட்டாலும் கியூபாவில் ஐந்து லட்சம் அரசு ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறது சோஷலிஸம்.

கவர்ன்மென்ட் பணிநீக்கத்தை ஈடுகட்டுவதற்காக 75,000 புதிய தொழில் முனைவர்களுக்கான உரிமங்களைக் கொடுக்கிறது கம்யூனிச க்யூபா. ஏற்கனவே, கள்ளச்சந்தையில் அதிகாரபூர்வமற்று செயல்பட்டவருக்கே, அத்தனை லைசன்சும் சென்று விட்டது. அதனால், அரசுக்கு வரி கட்டவேண்டும் என்பது தவிர, புதிதாய் பிசினஸ் முளைக்காது.

திடீரென்று பத்து சதவிகித பாட்டாளிகள் ரோடுக்கு அனுப்பப்பட்டால் என்னவித விளைவுகள் நேரும்?


3. Trash hotel

குப்பையை வைத்து உருவாக்கிய பொருட்களை ‘பாய்ஸ்’ படப் பாடல் ‘பூம் பூம்’ போல் உதவாக்கரை விஷயங்களை வகித்தே உருவான ஹோட்டல்.


4. Cameroon battles brain drain

80களில் படித்த இந்தியாவின் பெருங்கவலைகளில், ‘ப்ரெயின் ட்ரெயின்’ முக்கிய இடம் பிடித்தது. இன்று அமெரிக்காவே அவுட்சோர்சிங் பேதியும் கணினி ஏற்றுமதி பீதியிலும் அல்லலுறுகிறது. ஆனால், கேமரூனின் பதினைந்து சாலர் சம்பளத்தை விட்டுவிட்டு, மருத்துவர் கப்பலேறிப் போய்விடுகிறார்களாம்.


5. Drug use growing in China

வளர்ந்த நாட்டுக்கான அறிகுறி என்ன?
அ) 1.76 லட்சம் கோடி ஊழல்
ஆ) போதை ஏற்றுமதி பிரச்சினையை விட இறக்குமதி விசுவரூபம் எடுப்பது
இ) அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதை விரும்பாதது


6. A 2000-year-old business

நாடி ஜோசியம், ஏடு பார்த்தல் வரிசையில் தாயாதி முறை, செட்டியார் ஒன்பது வீடு தொடர்ச்சியாக தங்களின் 72 குடும்பத்தினரின் கிளைகளை யேசு கிறிஸ்து பிறந்த காலத்தில் இருந்து பாதுகாத்து, மெயின்டெயின் செய்து வருபவர்களின் கதையை சொன்னார்கள்.


ரத்த சரித்திரம் – How it narrates the Story of BJP vs Congress?

இந்தப் பதிவுக்கு இகாரஸ் பிரகாஷ் எழுதிய ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் ஊக்கம் தந்தது.

படத்தின் துவக்கத்தில் வரும் உரிமைதுறப்பு: ‘இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே’
பிறகு துவங்கும் படத்தின் சற்றே பெரிய எழுத்தில் வரும் டைட்டில் கார்டு: ”நிஜத்தில் நடந்த கதை”

என்ன கதை?

காந்தி சிலையுடன் காட்சித் துவக்கம். ஏன்?

ஆனந்தபுரத்தைத் திருப்பி போட்டால் தண்டி. அஹிம்ஸையின் மறுபக்கமாக அரசியல் செய்கிறார் நாகேந்திர மூர்த்தி (ஜின்னா & பிரிட்டிஷார்).

இவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை (பாரதம்) பெரிதும் நம்புகிறார். விவசாய பாட்டாளிகளுக்காக (பாரதியவாசிகள்) உண்மையாக பாடுபடும் மக்கள் பிரதிநிதி.

இந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி (ஜவகர்லால் நேரு) இந்தியாவைக் கலைத்து இரண்டாகப் பிரிக்கிறார். மக்களின் ஆதரவு ஒருங்கிணைந்த பாரதத்திற்கு ஏற்படுகிறது. இதனால் ஜின்னாவும் நேருவும் ஆங்கிலேயரும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை (ஹிந்து – ஆர்.எஸ்.எஸ்.) வைத்தே தீர்த்து கட்டுகின்றனர்.

தவறான ஆட்களின் கோள்மூட்டுதலால் அதுவரை காத்து வந்தவரையும் (இந்தியா) அவரது முதல் மகனையும் (காந்தி) கொலைசெய்கிறார்கள்.

கொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (இந்து முஸ்லீம் பிரிவினையை சொல்வதற்காக இரண்டாவது என்னும் குறியீடு) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் (எமர்ஜென்சி) செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான்.

அரசியல் அவனை (காங்கிரஸ்) அரவணைக்கிறது.

எதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது.

நடுவில் பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே ராஜீவ காந்தியை அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கவைக்கும் சோனியா.

சூப்பர் ஸ்டாராக அரசியலில் குதித்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா – அமெரிக்கா) கோகோ கொலாவாக தண்டிபுரத்தில் நுழையும் அவரை வன்முறை வரிகள் கொண்டு, சட்ட வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன.

இவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் மன்மோகன் சிங் + நரசிம்மராவ். உலகமயமாக்கி, பொருளாதார வல்லுநராக்குகிறது.

திருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (பாரதீய ஜனதா கட்சி) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி (அயோத்தியா ராமர் கோவில் + பாப்ரி மசூதி இடிப்பு) நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போராட்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation
2. சந்திரமுகி க(வ)லையா?

விமர்சனம்:
1. பிச்சைப் பாத்திரம் – சுரேஷ் கண்ணன்
2.
ஆதிமூலகிருஷ்ணன்

பாஸ்போர்ட் – சீனப் புரட்சி

உரிமைதுறப்பு: நான் சீனா சென்றதில்லை. சீனாவில் என்னுடன் கல்லூரியில் படித்த இரு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கட்டுரையைக் காட்டியபோது, கருத்து சொன்னால் தலை கொய்யப்படும் என்று சொல்லி, மாற்றங்களைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்கள். எனவே, இந்த செய்திக் கோர்வை முழுக்க முழுக்க ஊடகத் தகவலை அடிப்படையாகக் கொண்டது.

அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.

சீனா ஒரு குடியரசாக மலர வேண்டும்.

புத்தக அறிமுகத்தில் இருந்து.

தொடர்பான சமீபத்திய செய்தி இரண்டு

1. மக்கள் எழுச்சி, வேலையில்லாத் திண்டாட்டம், சோசலிசம்

China warned to expect greater public unrest as job prospects worsen – Times
Online
:

முதற்கண் சீனப் புத்தாண்டு வாழ்த்து.

சீன அரசு வெளியீடு (The Outlook Magazine, published by the Government’s Xinhua news agency) புத்தாண்டு வாழ்த்து சொன்ன கையோடு வன்முறை கலந்த போராட்டங்கள் நிறைந்த வருடமாக அடுத்த வருடம் அமையும் என்றும் கணித்திருக்கிறது.

புதிதாக பட்டம் பெறும் கோடிக்கணக்கான மாணவர்களும் ஏற்கனவே வேலையில்லாமல் இருக்கும் பத்து மில்லியன் கூலியாள்களும் கோபப்பட்டு இந்த எழுச்சி நிகழும் என்று அரசே ஒத்துக் கொண்டிருக்கிறது.

சீன கம்யூனிசக் கட்சிக்கு இது மணி விழா ஆண்டு. வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி அறுபதாம் கல்யாணம் கட்டிக் கொள்ளும் தருணத்தில் ஒலிம்பிக்சின் போது செய்த மோடி மஸ்தான் வேலையை மீண்டும் அரங்கேற்றும் கணத்தில், இந்தப் போராட்டம் எழலாம்.

சென்ற ஆண்டில் மட்டும் எண்பத்தி மூன்று லட்ச தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனதையும் அரசாங்க ஆய்வு குறிப்பிட்டிருக்கிறது.

இதைப் போன்ற ஆயிரக்கணக்கான (அரசுக் கணக்குப் படி ஆயிரம் என்றால், பத்தாயிரம் எழுச்சிகளாவது இருக்கும்) கொடி தூக்கல்களை நசுக்கி எறிவது போல் இந்த உரிமைக்கோறலையும் துச்சமாக தூக்கி எறிய கபர்தார் போட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.


2. கம்யூனிசமும் ஊழலும் – பிரிக்கமுடியாத இரத்த உறவு!

*Corruption taints every facet of life in China – Los Angeles Times:

லியாவ் (Liao Mengjun) பள்ளிக் கல்வியை முடித்து விட்டான். ‘ஸ்கூலில் இருந்து டிசி வாங்கப் போறேம்மா’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பியவனை பிணவறையில்தான் அடுத்துப் பார்ப்போம் என்பதை பெற்றோர் அறிந்திருக்கவில்லை.

பதினைந்து வயது பாலகனின் நெற்றியைப் பிளந்திருந்தார்கள். வலது முட்டி எலும்புக்கூடாக காட்சியளித்தது. கைகள் இரன்டும் உடைந்து தனியாக இருந்தது.

அனாதரவாக இருந்த கையிலிருந்த சுட்டு விரலை கோரமாக சிதைத்திருந்தார்கள்.

எதையோ ஒப்புதல் வாக்குமூலம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். யார்?

அவனுடைய வாத்தியார்தான்.

ஏன்?

பள்ளிக்கூடங்களில் நடைபெறும் ஊழலையும் அநியாயமாகப் பறிக்கப்படும் பணத்தையும் கல்விச்சாலையில் பிடுங்கப்படும் முறைகேடான லஞ்சமும் காரணம்.

சீனாவில் ஊழல் செய்து எவராவது பெருந்தலை மாட்டிக் கொண்டால் பேரளவிற்கு உடனடியாக தூக்கில் போட்டுவிடுவார்கள். அவரை விசாரித்தால், தாங்களும் மாட்டிக் கொண்டு விடுவோம் என்னும் அச்சம் முதல் காரணம். ஆக்சன் கிங் போல் செயலில் உத்வேகம் கொண்டிருப்பதாய் காட்டுவது இரண்டாம் காரணம்.

ஆனால், சைனாவில் ஊழலும் லஞ்சமும் புரையோடி வளர்ந்து சர்வ அடுக்குகளிலும் வியாபித்து கோலோச்சி வருகிறது.

இப்படி ஊழல் இராச்சியமாக இருப்பது அறிந்திருந்தால் சீன கம்யூனிசக் கட்சி என்ன செய்கிறது? தங்கள் நலனிற்கும் ஆட்சிக்கும் பங்கம் விளையாத வரை ‘நீ பிறரை எவ்வளவு அடித்தாலும் பிரச்சினை இல்லை’ என்று தாராள சிந்தனையோடு நீருற்றி வளர்த்து வருகிறது.

சுதந்திரம் இருந்தால்தானே இதை காவல் நிலையத்திலோ, நீதிமன்றங்களிலோ, சட்டமன்றத்திலோ முறையிட முடியும்?

சுதந்திரம் இருந்தால் பேச்சுரிமை பெற்று கொத்தடிமை முறையும் ஒழிந்துவிடுமே?

எதுக்கு சுதந்திரம் தந்து, ஊழலை அம்பலமாக்கி, தங்கள் பதவியை, அதிகார போதையை, பணந்தரும் கல்பதருவை இழக்க வேண்டும் என்கிறது சீன கம்யூனிசம்.

அவர்கள் நிலையில் நீங்கள் இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுப்பீர்கள்.

சீனப் பொருளாதாரம் ஏழு ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இதில் ஒரு டிரிலியன் லஞ்ச வர்த்தகம்.

‘ஊழலை எல்லோரும் வெறுக்கிறார்கள். குறிப்பாக பொதுசனத்துக்கு கடுங்கோபம் வருது. அதற்கு காரணம் அவர்களுக்கு லஞ்சம் வராததுதான்!’ என்று கூலாக சொற்பொழிவாற்றுகிறார் இரயில்வே துறை மீது வழக்கு தொடுக்க முயற்சித்த ஜியாவ் (Qiao Zhanxiang).

Foshan, or “Buddha Mountain” :: ஃபோஷான் (அ) புத்தமலை

  • குருவி படத்தில் கொத்தடிமையாக இருந்தது போல் உழைப்பாளிக் கூட்டம் இங்கே நிஜத்தில் நடத்தப்படுகிறது.
  • உடம்பு சரியில்லையா? அவசரமாக கவனிக்கணுமா? சோசலிச நாட்டில் பணம் அதிகம் கொடுத்தால் உடனடி மருத்துவ சேவை உத்தரவாதம்.
  • வண்டி ஓட்டத் தெரியாமல் உரிமம் வேண்டுமா? அப்படி ஓட்டிய வண்டு எவரையாவது கொன்றால் வழக்கு தள்ளுபடி ஆக வேண்டுமா? வெட்டுங்க பணத்தை!

“போசான் மட்டுமல்ல; ஒட்டு மொத்த சீன அரிசிக்கு ஃபோசான் ஒரு பருக்கை பதம்,” என்கிறார் ரென் (Ren Jianming, vice director of the Clean Government Research Center at Beijing’s Qinghua University)

திபெத் விடுதலை அடைய தலாய் லாமா எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று யாராவது சீன ஜனாதிபதியிடம் கேட்டு சொல்லுங்களேன்.

சீனா காப்பாற்றுமா: ஆய்வறிக்கை

Circulating in Asia, a view of how the Chinese stimulus package fits in history:

  • 1949 (Chinese Revolution): Only socialism can save China.
  • 1979 (Deng Xiaoping reforms): Only capitalism can save China.
  • 1989 (fall of Berlin Wall): Only China can save Socialism.
  • 2008 (Global Financial Crisis): Only China can save Capitalism.

சாதனைச் செம்மல் சீனா & தியாக ஜோதி ஒலிம்பிக்ஸ்

Beijing Olympics 2008 Graphics

Tiananmen Square Logo - China: Beijing Olympics 2008 Graphics

2008 ஆம் வருட ஒலிம்பிக்ஸில் சீனா பல வித்தியாசங்களை முயற்சித்து, விளையாட்டுப் போட்டிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. அவை:

  • ஆஸ்திரேலியாவிற்காக: நூறு மீட்டர் நீச்சலின் முதல் சுற்று. சீனாவின் பாங் (Pang Jiayang) முதலிடம் பிடிக்கிறார். பெயர் தெரியாத அவர் நுழைவதால், விளம்பரதாரர்களுக்கு எந்தப் பயனுமில்லை. அவர் தேர்வு பெற்றால் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் லிபி ட்ரிக்கெட் (Libby Trickett) நுழைய முடியாது.

‘முதல் மரியாதை’யில் ராதா கால்பட்டவுடன் தசையாட்டும் சிவாஜியாக அசைந்து கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு சீனா தன் முதலிடத்தை விட்டுக் கொடுத்தது. ஆஸ்திரேலிய தொலைக்காட்சிகளுக்கும் மகிழ்ச்சி. நேரடி ஒளிபரப்பாளர்களும் மானசீக நன்றி செலுத்துகிறார்கள்.

  • சீன மக்களுக்காக: சீனாவில் 57 மில்லியன் (5.7 கோடி) மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். வருடத்திற்கு நூறு அமெரிக்க டாலர் கூட சம்பாதிக்க முடியாத இவர்களால் ஐம்பதாயிரம் ரூபாய் எல்லாம் கொடுத்து, விளையாட்டை கண்டுகளிக்க முடியுமா? அதனால்தான், அரசே அரங்கு மொத்தத்திற்குமான இருக்கைகளை வாங்கி, சொந்த செலவில் சிலரை அமர்த்துகிறது.

எனினும், தமிழ்நாட்டில் கரண் படத்தை காசு கொடுத்து பார்க்க இயலாத நிலையில் இருந்தாலும், தானே சொந்த செலவில் ‘நிறை அரங்கை’ ஏற்படுத்திக் கொள்வதை பார்த்து இந்த வித்தையைக் கற்றுக் கொண்டதை ஒப்புக் கொள்ளாதது கண்டிக்கத்தக்கதே.

  • குழந்தைகளுக்காக: ‘படிக்கிற வயசில் என்னடா விளையாட்டு’ என்று வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க. அந்த மாதிரி பெற்றோரிடம் தவிக்க விடாமல் மூன்று வயதிலேயே சின்னஞ்சிறார்களைப் பிரித்து விடுகிறார்கள். அதன் பிறகு அனுதினமும் பதினாறு மணி நேரமும் உடற்பயிற்சி மட்டும்தான் பொழுதுபோக்கு. ஒரு நாடென்பது, தன்னுடைய சிறுவர்களை பாலிக்க இதைவிட என்ன செய்துவிட முடியும்?

பல்கூட விழுந்து முளைக்காத பன்னிரெண்டு வயதில் உலக அரங்கில் தோன்ற வைக்க வேறு எந்த நாட்டால் இயலும்?

‘எல்லோரும் ஒரு குலம்’ என்று பறைசாற்றுவது எவ்வாறு? இத்தனை எண்ணிக்கை இருந்தால் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்றெல்லாம் பாடத்திட்டம் கொடுக்க வேண்டுமே?? ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று நினைத்தாலே இனிக்கும் வேறு திரைப்பாடல் போடணுமே!

ஐம்பத்தியாறையும் ஒன்றாக்கி, பெரும்பான்மையை மட்டுமே பிரதிநிதியாகி விட்டார்கள். சிறுபான்மையினரை இல்லாமல் ஆக்கும் அற்புதத் திட்டம்.

  • இந்தியர்களுக்காக (அல்லது) அறிவியல் புனைவாளர்களுக்காக: Wiiஐ வைத்துக் கொண்டு டென்னிஸ் ஆடுகிறோம். ஊக்க மருந்தை உட்கொண்டு சாதனைகளைப் படைக்கிறோம். இதெல்லாம் பழங்கதை. வீடீயோ கேம்ஸ் போல் ஒலிம்பிக்ஸை வீட்டில் இருந்தே விளையாடலாம் என்பதற்கான முதற்கட்ட ஒத்திகைதான் வாணவேடிக்கை கிராஃபிக்ஸ். இதன் தொடர்ச்சியாக, நமது தொலைக்காட்சியில் இருந்தே படைப்புத் திறனும், கலையார்வமும் கலந்த Synchronized Swimming முதல் குத்துச்சண்டை வரை எல்லாம் செய்யமுடியும்; வெல்லமுடியும்.

இந்தியர்களாலும் இதனால் பதக்கம் பல வெல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஆப்பிரிக்காவிற்காக: தற்போதைக்கு சுடானில் மட்டுமே பெரிய அளவில் உதவி செய்யமுடிகிறது. அந்த மாதிரி செய்கைகளை ஆப்பிரிக்க கண்டம் முழுக்க பரப்ப…
  • கிளர்ச்சியாளர்களுக்காக: தன்னுடைய பூங்காக்களை திபெத், தியான்மென், தாய்வான், பர்மா என்று எல்லா பிரிவினைவாதிகளுக்கும் திறந்து வைத்திருக்கிறது சீனா. இருந்தாலும் சிறையில் தஞ்சம் புகுந்ததால், பெய்ஜிங் நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு கடும் பஞ்சம்.

அப்படியும் பாக்கி இருக்கும் மிச்சத்தையும் எங்கே என்று விசாரித்து, கொஞ்ச நஞ்ச சொச்சத்தவர்களையும் உள்ளே தள்ளும்படி செயல்படும் பிபிசி செய்தியாளர்களை விரட்டி, நாடு கடத்துவதன் மூலம் கூட்டம் போடுபவர்களைக் காப்பாற்றுகிறது.

  • சுவர் எழுப்புவர்களுக்காக: சீனப் பெருஞ்சுவருக்கு போட்டியாக எட்டடி சுவர் எழுப்பி இருக்கிறார்கள். சிறு/குறு வியாபாரிகளின் கடை முகப்பு தெரியக்கூடாது என்று இவ்வாறு திரை போட்டு மறைத்திருக்கும் சுவர், கட்டுமானத்துறையில் இருப்பவர்களுக்க்கான அர்ப்பணிப்பு.
  • பின்னணிக் குரல் கொடுப்பவர்களுக்காக: ஷ்ரேயாவுக்கு குரல் கொடுத்தவர் யார் தெரியுமா? ஷாலினி, ஷாமிலி என்று பாடலில் வாயசைத்தது பார்த்திருப்போம். அவர்களுக்கும் இன்னும் ‘டாடி… டாடி’ என்று சாஸ்வதமாய் ஜானகி ஒலித்த்தை உலகறியச் செய்யும் வகையும் எதிர்மறையாக உதாரணம் காட்டியிருக்கிறார்கள்.

உதட்டசவை ஒலிம்பிக்ஸ் அரங்குக்குக் கொண்டு வந்து திரைக்குப் பின்னால் உதிரும் சவீதாக்களுக்கு வெளிச்சம் தேவையில்லை என்பதை மறைமுகமாக உணர்த்தியதற்காக!

  • அமெரிக்காவிற்காக: ஒன்றா? இரண்டா??
    • பெண்களுக்கான உடற்பயிற்சியில் பத்து மாதக் குழந்தைகளை அனுப்பி, ‘பாரு! எப்படி பல்டி அடிக்கிறா?’ என்று பறைசாற்றி பதக்கங்களை தட்டிச்செல்லவில்லை.
    • மைக்கேல் ஃபெல்ப்ஸ் (Michael Phelps) தொட்டாரா/இல்லையா என்பதை தன் கிராபிக்ஸ் நுட்பத்தைக் கொண்டு நிரூபித்து மானத்தைக் கப்பலேற்றவில்லை.
    • சீதாப்பிராட்டிக்கு கணையாழி கொடுத்த அனுமனாய், கடற்கரை மணலில் கெரி வால்ஷ் (Kerri Walsh)ஷின் தவறிய மோதிரத்தை சுய ஆர்வலர்களின் தேடுதல் வேட்டையால் தொலைக்கவில்லை.

தொடர்புடைய பதிவுகள் :

  1. ஒலிம்பிக்ஸ் – பிம்பங்களும் சிதைவும் :: வெங்கட்
  2. பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் – சீனா செய்யாத மோசடிகள் :: நாடோடி – noMAD, China
  3. பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் – சீனாவுக்கு வரவு , நமக்கோ தாறு மாறு செலவு – 1 :: நாடோடி – noMAD, China
  4. சீன ஒலிம்பிக்கிஸ் : தங்கப் பதக்கங்களுக்கிடையில் நசுங்கிய இரு குழந்தைகள் :: ஆர் செல்வகுமார்
  5. சீனாவின் மீதான பிபிசியின் போர் தொடர்கிறது :: மு மாலிக்
  6. மனிதம்..? :: வாசன்
  7. தீப விளையாட்டும் திபெத்தும் :: திருவடியான்
  8. Darfur and Steven Spielberg – A political Olympics :: திருவடியான்
  9. ஒலிம்பிக்ஸில் கலைஞரும் ரஜினியும் :: அதிஷா
  10. பெய்ஜிங் ஒலிம்பிக்கில் சீனா செய்த மோசடிகள் :: மை ஃபிரண்ட்
  11. ஒலிம்பிக் போட்டிக்காக வீடுகளில் இருந்து துரத்தப்பட்ட மக்கள் :: தமிழ் சசி / Tamil SASI
  12. பீஜிங்க் ஒலிம்பிக் போட்டி – ஐந்து குறும்படங்கள் :: மதி கந்தசாமி
  13. ஸ்பீல்பர்க் ஏன் ஒலிம்பிக்ஸிலிருந்து விலகினாரு? :: PPattian : புபட்டியன்
  14. சீனாவிலும் தனிநாடு கேட்கிறார்கள் :: Orukanani
  15. திபெத் : மதம், விளையாட்டு, அரசியல் :: கலையரசன்
  16. திபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா? :: புதிய ஜனநாயகம் – பாலன்

திபெத் விடுதலைப் போராட்ட ஆதரவுக் குரல் – சீன ஒலிம்பிக்ஸ்

USA