ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – முதலாமாண்டு விழா


வெர்னர் ஹெர்சாக் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் 11வது பிராயத்தில் தான் தன் முதன் முதல் சினிமாவைப் பார்க்கிறார். அதன் பிறகு பின் வரும் காலத்தில் உலகம் மெச்சும் இயக்குநர் ஆகிறார். குட்டிப் பயலாக இருக்கும்போதே மண்டைக்குள் விதைகளை ஊன்றிவிட வேண்டும்.

அந்த மாதிரி சொர்ணம் சங்கரபாண்டி Sornam Valavan Sankar சின்னஞ்சிறிய வயதிலேயே பள்ளிகளில் திருக்குறளின் முழுப் பதிப்பையும் குறள்நெறிக் கதைகளையும் அந்தந்த வகுப்பிற்கேற்ப அறிமுகம் செய்யும் நூல்களை இல்லந்தோறும், கிராமமெங்கும் ஊராட்சி ஊராட்சியாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் விலையில்லாமல் கொடுக்கிறார். தருவதுடன் நிற்காமல், முற்றோதல் போட்டிகளை முன்னெடுக்கிறார். குழந்தைகளின் வாழ்வில் மந்திரமாக, நினைவில் ஊறி நிற்கும் அறநெறிச்சாரமாக வள்ளுவரின் குறள்களை ஊன்றுகிறார்.

இந்த சந்திப்பு அதற்கானதல்ல. இது ஹார்வார்டு தமிழ் இருக்கையை உருவாக்கியதற்கான விழா. அதன் பின் பல்வேறு அமெரிக்க, கனடா பல்கலைக்கழகங்களில் வெறுமனே தமிழ்மொழியை மட்டும் பயிற்றுவிக்கும் தமிழ்த்துறையாக மட்டும் இயங்காமல், நாற்காலி போட்டு தீவிரமாக தமிழாக்கங்களை புதினங்களை உலகெங்கும் உள்ள அயநாடுகளில் பல்வேறு பாஷைகளுக்கும் ”தமிழ் இருக்கை” முயற்சிகளைத் தொடரும் விழா.

அமெரிக்க பல்கலை எங்கும், பேராசிரியர்கள் மூலம் பல ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆய்வுகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகளும் நடத்தப்படும் தமிழ் இருக்கைகள் உருவாகிக் கொண்டே வருகின்றன (“துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறையாகும்” – எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.)

ஹார்வார்டில் வெற்றிகரமாக தமிழுக்கு சிம்மாசனத்தை உருவாக்கி ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் எளிய விழா. மார்த்தா செல்பி (Martha Ann Selby) சிறப்புரை ஆற்றினார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் இன்ன பிற மொழிகளுக்கும் தற்காலப் படைப்புகளையும் செவ்வியல் இலக்கியங்களையும் மொழிமாற்றம் செய்யும் முன்னெடுப்புகளைக் குறிப்பிட்டார். இரு மொழியிலும் ஆற்றல் பெற்றவர்களை மூன்று நான்கு மாதம் தங்கவைத்து மொழியாக்கம் செய்வது, ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு தமிழ் எழுத்தாளர்களை விருந்தினராக அழைத்து அவரின் நாவல்களைக் குவிமையமாக பார்வைக்கு உள்ளாக்கி விமர்சன விழாக்களை நடத்துவது, இலக்கியப் பயிற்சி முகாம் வழியாக மொழியாக்கங்களைப் பரவலாக பல எழுத்தாளர்களிடம் கொண்டு செல்வது, படைப்பாளிகள் பட்டறைகள் – என பல எண்ணங்களையும் திட்டங்களையும் அதற்கான வழிமுறைகளையும் தொலைநோக்கு பார்வையையும் பகிர்ந்தார்.

இந்த விழாவில் பழைய நண்பர்களான ஃபெட்னா சிவா, சொர்ணம். சங்கர் போன்றவர்களை மீண்டும் பார்க்க முடிந்தது. இது வரை வாசித்து மட்டுமே அறிந்திருந்த சிவகாமி ஐ.ஏ.எஸ். போன்றவர்களை சந்தித்து மனம் விட்டு பேச முடிந்தது. அடிக்கடி பார்க்கும் ப்ராவிடென்ஸ், ரோட் ஐலண்ட், கனெக்டிகட், மாஸாசூஸெட்ஸ் தமிழ் மக்கள் மன்றம், நியு இங்கிலாந்து தமிழ் சங்கம் போன்ற பாஸ்டன் வட்டார உறவுகளை புதுப்பிக்க முடிந்தது.

ஹார்வர்டு இருக்கைக்கு அஸ்திவாரம் போட்டு நடத்தி முடித்து அதன் பின்னும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மருத்துவர் ஜானகிராமன் அவர்களையும், மருத்துவர் சம்பந்தம் அவர்களையும், நேரில் வாழ்த்த முடிந்தது.

இனிய மாலைப் பொழுதில் விருந்தில் பங்கெடுக்க அழைப்பு விடுத்த பமீலாவிற்கு Saroj Bamiela Sankaran நன்றி!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.