Writer Nakulan – Works, Collections, Poems, Memoirs, Blog Anjali


தனிமையின் இசை: மனதின் பைத்திய நிழல் – நகுலனின் சுசீலாஅய்யனார்

நகுலனை முன்வைத்து கவிதையை அறிவது – எஸ்.ராமகிருஷ்ணன்

கட்டுரை: தனிமையின் உபாக்கியானம் – ஞானக்கூத்தன்
கட்டுரை: நகுலன் என்ற இலக்கியச் சித்தர் – கி. நாச்சிமுத்து
கட்டுரை: நகுலனுக்கு இன்னொரு இரங்கல் – அசோகமித்திரன்

நகுலன் கவிதைகள்

ஒரு குரல்

பல
சமயங்களில்
அகஸ்மாத்தாகவே
குறளிலிருந்து
இந்த
அல்லது
அந்த
அல்லது
வேறு ஏதோ
ஒரு வரி
பிரக்ஞையின்
மேல் தளத்தில்
அடியிலிருந்து
வருகிறது
ஒரு உதாரணம்
திருவுடையராதல்
வேறு
தெள்ளியராதல்
வேறு
இது பற்றி
அதிகமாகவே
யோசிக்கிறேன்
அனுபவம் அப்படி.

அங்கு

“இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?”
என்று
கேட்டார்
“எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்”
என்றேன்.

– நகுலன் கவிதைகள்
காவ்யா வெளியீடு

Nagulanநாகூர் ரூமி:

கண்ணம்மாவைக் கண்டதுண்டா?
நான் – என் அம்மாவைத்தான்
கண்டுள்ளேன்
அவளும் இப்போது இல்லை

நகுலனின் “நவீனன் டயரி“ என்ற நாவல் இவ்வகையில் மிக முக்கியமானதாகிறது. “நண்பா பாரதியைப் படித்திருக்கிறாயா, பாரதியை நண்பா, படித்திருக்கிறாயா, படித்திருக்கிறாயா நண்பா பாரதியை“(26) போன்ற வாக்கியங்கள் அழுத்த மாற்றத்தின் மூலம் (intonation shift) அர்த்த மாற்றத்தை ஒரே வாக்கியத்திற்கு தர முயல்கின்றன.

அவன் எல்லைகளைக் கடந்து
கொண்டிருந்தான்

நகுலனின் “கோட்ஸ்டாண்ட் கவிதைகள்“ தொகுதியிலே வரும் “எல்லைகள்“ என்ற கவிதை இது. இக்கவிதையில், கருத்தளவில், பாரம்பரிய எல்லைகளைக் கடந்து செல்லுகின்ற யாரும் தனக்கும் பாரம்பரியத்திற்கும் உள்ள தொடர்பை முறிப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எனவே இங்கே தொடர்காலத்தை (continuous tense) குறிக்கும் ‘கொண்டிருந்தான்‘ என்ற சொல்லின் சப்த முறிவின் மூலம் அது உணர்த்தப்படுகிறது. அதே சொல் இரண்டாம் முறை வரும்போது, ‘கொண்டிருந்தான்’ என்பது தொடர்காலத்தைக் குறிக்கும் ‘கடந்து கொண்டிருந்தான்’ என்பதன் பகுதியாக நிற்காமல் எல்லைகளைக் கடப்பதன் மூலம் ஏற்படும் கலாச்சார லாபத்தைக் கொண்டிருத்தல், பெற்றிருத்தல் என்ற அர்த்தத்தில் செயல்படுகிறது. கவிதையில், வடிவத்தை, வார்த்தையை, மொழியை சிறிது மாற்றினாலும் நாம் சிறிய இழப்புக்காகவேனும் உள்ளாவோம் என்பதை இக்கவிதை தெளிவு படுத்துகிறது.

 • Thinnai: நகுலன் படைப்புலகம் – சங்கர ராம சுப்ரமணியன்
 • Thinnai: நிழல் பரப்பும் வெளி – நகுலனின் கவிதைகள் பற்றி – எச். பீர்முஹம்மது
 • Thinnai: ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘) – பாவண்ணன்

டி.கே.துரைசாமி என்னும் இயற்பெயருடைய நகுலனின் படைப்புகள் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை உடையவை. நினைவுப்பாதை என்னும் நாவல் மிக முக்கியமான படைப்பு. நவீனன் டயரி, நாய்கள், வாக்கு மூலம் ஆகியவை பிற படைப்புகள். கவிதைத்துறையிலும் இவரது சாதனை மிகுதி. 1998 ஆம் ஆண்டில் நகுலன் கதைகளையும் 2001 ஆம் ஆண்டில் நகுலன் கவிதைகளையும் காவ்யா பதிப்பகம் தொகுத்து நுால்வடிவம் கொடுத்துள்ளது. ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘ என்னும் கதை கணையாழி இதழில் 1967ல் வந்தது. ‘நகுலன் கதைகள் ‘ தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.

நகுலன் கவிதைகள், நாய்கள், ரோகிகள், வாக்குமூலம், மஞ்சள்நிறப் பூனை போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள். இவர் தொகுத்த “குருஷேத்திரம்” இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும்.

Nagulan:நகுலன் :: தெ. மதுசூதனன்

நவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்பவும் சுனதியுடன் இயங்கி வருபவர் நகுலன். இவரது படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள உறவு கொள்வது என்பதைவிட தீவிர வாசகராகவும், படைப்பாளியாகவும் இருக்கும் சிலர் உறவு கொள்வது தான் அதிகமாக உள்ளது. அவர்கள் நகுலன் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம், கருத்துக்கள் நகுலனின் படைப்புக்கள் சார்ந்த தேடலைத் நோக்கி முன்னகர்த்தும்.

நகுலன் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம் மொழி பெயர்ப்பு எனத் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். டி.கே. துரைசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட நகுலன் 1921 இல் கும்பகோணத்தில் பிறந்தவர். ஆனால் வளர்ந்ததும் வாழ்ந்ததும் திருவனந்தபுரம். அங்கே இவானிவல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை பார்த்து விட்டு தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளார்.

தமிழ் சிறு பத்திரிகை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இதழ்களில் அவ்வப்போது எழுதி வந்தார். நவீனன், நாயர் போன்ற புனைப்பெயர்களில் எழுதி வந்தார்.

 1. நிழல்கள் (1965),
 2. நினைவுப் பாதை (1962),
 3. நாய்கள் (1974),
 4. நவீனன் டைரி (1978)
 5. இவர்கள் (1983),
 6. சில அத்தியாயங்கள் (1983)
 7. வாக்குமூலம் (1992)

உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 1999 இல் ‘நகுலன் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்தது. மேலும் அவ்வப்பொழுது சிறுசிறு தொகுப்புகளாக வெளிவந்த கவிதைகள் மற்றும் ஏனைய கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ‘நகுலன் கவிதைகள்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்திலும் சில கவிதைத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளார்.பெரும்பாலும் நகுலன் ஒரு கவிஞராகவே அறியப்பட்டுள்ளார். அவர் தமிழ் நவீனத்துவ கவிதை மரபின் முன்னோர்களின் ஒருவர். தனி மனித அகச்சார்பான அதன் வீச்சு எல்லைக்குள் இயக்கம் கொண்ட கவிதைகள் இவரது ஆங்கில இலக்கிய பரிட்சயம், அதன் தத்வார்த்த சிந்தனைகளின் தாக்கம் யாவும் தமிழ் சார்ந்த வாழ்புலத்தின் தuhனிமனிதக் குரலாக வெளிப்பட்டன. இவை கவிதைத் தளத்திலிருந்து புனைகதைத் தளத்துக்கு பாயும் பொழுது கவிதை சார்ந்த புனைவுத் தன்மை தான் மேலோங்கி நிற்கிறது.

நகுலனால் புதுஉலகச் சித்தரிப்பை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அவரது வாழ்வும் ‘இருப்பும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய வட்டத்துக்குட்பட்டவை. இதனால் சுய அனுபவக் குறிப்பு மட்டுமே மிகச் சாதாரணமாக பதிவு செய்யப்பட்டவை. இவரது கதைகள் பெரும்பாலும் சிந்தனைவயப்பட்ட தனிமனிதத் தேடல் சார்ந்தவை. இருப்பினும் நவீனத்துவசாயல் கொண்ட படைப்புலகமாக அவை வாசிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது. இவரது மொழிநடை இவருக்கேயுரிய தனித்தன்மை கொண்டது. இதனால் சாதாரண வாசகர்கள் இவரது படைப்புலகுடன் அதிகம் நெருங்கிவிட முடியாது. நவீனத்துவத்தின் தாக்கத்துக்கு உட்பட்டு புதிது புடிதான தளங்கள் நோக்கி பயணிக்க எத்தனிக்கும் மனங்கள் தான் நகுலன் படைப்புகளுடன் அதிகமாக உறவாட முடியும். இன்னொரு விதமாகக் கூறுவதாயின் நகுலனின் எழுத்து எப்போதுமே தொல்லை தருவதுதான். இதனையே சிலர் உயர்ந்த கலையின் அம்சமாகவும் கருதுகின்றனர். வாழ்க்கையை வெறுமனே மனம் சார்ந்து மட்டும் பதிவு செய்யத் துடிக்கும் ஒருவித சித்தர் மரபு சார்ந்து வரும் குரலாகவும் நகுலன் படைப்புகளைக் காணலாம். இருப்பினும், இப்பார்வை கூட முழுமையானதல்ல. ஆனால் அத்தகைய ஒரு தோற்றப்பாடு உண்டு.

நகுலனின் அனுபவமும் எழுத்தாக்கமும் கனவும் நனவும் கலந்து வைக்கும் கற்பனை கடந்த நிலையில் உயிர்தெழும் அனுபவங்கள் மொழிவழியாக எழுத்துருவம் பெறுகின்ற இரசவாதம் என்று இவரது எழுத்தின் இன்னொரு சிறப்பை டாக்டர் கி. நாச்சிமுத்து குறிப்பிடுவார். எவ்வாறாயினும் இருத்தலியல் அத்வைதம் போன்ற தத்துவ மரபு சார்ந்த அனுபவத்திரட்சிகளின் பதிவுகளாக நகுலன் படைப்புகள் அமைந்துள்ளன.

கவிதை, சிறுகதை, நாவல் எதுவானாலும் அவற்றின் மையச்சரடு பழமையும் புதுமையும், கிழக்கும் மேற்கும் இணைகின்ற புள்ளியில் விரிகின்றவையாகவே உள்ளன. அவை தத்துவவிசாரம் செய்யும் தோற்றப்பாட்டையும் வழங்குகின்றன.

தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் நகுலன் கதைகள் வேறுபட்ட பரிசோதனைப் பண்புகளுக்கு எடுத்துக்காட்டு, வித்தியாசம் வித்தியாசமான பன்மைத்துவமிக்க கதையாடல் மரபு சாத்தியம் என்று வந்துவிட்டால் நகுலன் படைப்புகளுடன் பரிச்சயம் கொள்ள முற்படுவது இயல்பானது தவிர்க்க முடியாது.

Varaidhal – special:
”அங்கீகாரமா? அப்படீன்னா, என்ன?” – நகுலன்

திருவனந்தபுரத்தில் ரோட்டோரத்தில் இருக்கும் புதர் ஒன்றில் இறங்கிப் போனால் பி.கே.துரைசாமியார் வீடு. அந்த பகுதி மக்களுக்கு டி.கே.துரைசாமி, ஆங்கிலப் பேராசிரியர். தமிழ் மக்களுக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த நகுலன் – எழுத்தாளர். நனவோடை உத்தியில் நாவல்கள், சிறுகதை, கவிதை என்று படைப்புலகில் வரிந்து கட்டி வாழ்ந்தவர். 80 வயதில் கோணங்கி கொடுத்த ”பாழி” நாவலை படித்துக் கொண்டிருக்கும் நகுலன், அம்பலம் இணைய இதழுக்காக அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து……

திருவனந்தபுரத்தில் எவ்வளவு காலமாக வசித்து வருகிறீர்கள்?

என்னோட சிறு வயதில் கும்பகோணத்திலிருந்து திருவனந்தபுரம் வந்தேன். அப்பாவுக்கு திருவனந்தபுரம் சொந்த ஊர் என்பதால் அம்மா, அவருடைய கும்பகோணத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. நான் சிறுவயதில் கும்பகோணத்தில் பயின்ற தமிழை மறக்காமல் என் எழுத்தில் கொண்டு வந்தேன். இன்றுவரை எனக்கு மலையாளம் எழுதத் தெரியாது. ஆங்கிலம் தனியாகக் கற்றுக் கொண்டேன். எனக்குத் தெரிந்த தமிழில்தான் எழுதினேன். இன்று எனக்கு 80 வயது.

என் 15 வயதில் அறிமுகமானது திருவனந்தபுரம். அதற்கப்புறம் எனக்கும், திருவனந்தபுரத்திற்கும் நெருக்கம் அதிகமாகி விட்டது. அதனால்தான் இந்த வீட்டில் அடைந்து கிடக்கிறேன்.

ஏன் வெளியில் போவதில்லையா?

நான் கொஞ்சம் உற்சாகப் பேர்வழி. இலேசாக தண்ணி போட்டவுடன், இலக்கியம் பேச யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு, சைக்கிளில் ஊர் சுற்றுவேன். கா.நா.சு. இங்கு வந்தபோதெல்லாம் நானும், அவரும் சேர்ந்து ஊர் சுற்றியிருக்கிறோம். இப்போது வயதாகிவிட்டது. ஆனால் அது உடம்புக்குத்தான் என்று தெரிகிறது. மனது எப்பவும் கும்பகோணத்தை விட்டு வந்த 15 வயதில்தான் இருக்கிறது. ஒரு நாள் வாக்கிங் போனபோது விழுந்து விட்டேன். ரோட்டில் விழுந்து கிடந்த என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. அன்றிலிருந்து வெளியில் போவதை நிறுத்திக் கொண்டேன்.

நீங்கள் 65 வருடமாக வாழ்ந்து வரும் இந்த பகுதி மக்கள் கண்டு கொள்ளவில்லையா?

இங்குள்ள மக்கள் இப்போது ரொம்பவும் வேகமாக இருக்கிறார்கள். ஊர்தான் கிராமம் போல இருக்கிறது. மக்கள் வேலையை நோக்கி பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நகுலனைத் தெரியாது. டி.கே.துரைசாமி என்ற ஆங்கிலப் பேராசிரியரைத்தான் தெரியும். நீங்கள் வரும்போது நகுலன் என்று கேட்டிருந்தால், விலாசம் தெரிந்திருக்காது. துரைசாமிதான் தெரியும். அதனால் என்னை இப்பகுதி மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. தமிழ் நாட்டு (மக்களே) இலக்கியவாதிகளுக்கே நகுலன் இருக்¢கிறானா? என்று தெரியாது. படைப்பாளி இறக்கும்வரை இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மனதில் இருக்க முடியும்.

இப்போது தமிழ் இலக்கிய உலகிற்கு பொற்காலம் எனலாம். நிறைய படைப்புகள் வருகின்றன. உங்கள் படைப்புகள் எதுவும் மறுபதிப்பாக வரவில்லையே?

பலர் இதே கேள்வியைக் கேட்கிறார்கள். அதற்கு நான் காரணம் இல்லை. அந்நாளிலேயே என் எழுத்துக்களை நான் பணம் கொடுத்துத்தான் புத்தகமாக வெளியிட்டேன். ஆனாலும் என் படைப்புகளின் பதிப்புரிமை இப்போது என்னிடம் இல்லை. காவ்யா சண்முகசுந்தரம் என் நாவல்களை மறுபதிப்பு செய்வதற்காக கேட்டார். அவைகள் என்னிடம் இல்லாததனால், என் கவிதைகளை வெளியிட்டுள்ளார். முன்பு புத்தகம் வெளியிட்டவர்கள் சரியாக ராயல்டி கூடத் தருவதில்லை. எழுத்தாளன், எழுத்தை நம்பி வாழ்க்கையை நடத்துவது முடியாததாக இருக்கிறது.

உங்கள் எழுத்துக்கள் தமிழ் இலக்கியத்திற்குள் வரையறுக்க முடியாமல், – நனவோடை உத்தி என்ற புதியபாணியை எடுத்துக் கொண்டது ஏன்?

கதை இப்படியான பாணியை எடுத்துக் கொள்ளவில்லை. நான்தான் அப்படி எழுதினேன்.

இலக்கியத்திற்குள் வரையறுக்க முடியாமல் என்றால் என்ன…? யார் இலக்கியத்தை வரையறுப்பது?

எனக்கு இரவில் தூக்கம் வருவது குறைவு. அப்போதெல்லாம் நான் Valium மாத்திரை பாவிப்பேன். அப்போது எனக்கு வித்தியாசமான கதைகளும், எதார்த்தமும் கலந்த உணர்வு நிலைப்பாடுகள் வெளிப்படும். ஆனாலும் அதிலிருந்து நான் அறிவை உணரக் கூடிய உணர்வுகளை மட்டும் எடுத்துக் கொள்வேன். உணர்ச்சிகளும், சென்டிமெண்டுகளும் நிறைந்த தமிழ் நாவல் இலக்கியம் எனக்குத் தேவையில்லை. நான் படித்த ஆங்கில நாவல்கள் எனக்கு அதைச் சொல்லவில்லை.

நீங்கள் ஆங்கில நாவல் வழியாக தமிழ் சமூகத்தைப் பார்ப்பதாக சொல்லலாமா?

என்னங்க ஆங்கில சமூகம்? தமிழ் சமூகம்? எதில் நல்லது இருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே! நான் கும்பகோணத்துக்காரன். எனக்குத் தெரியாத சாஸ்திரம், சம்பிரதாயம் இல்லை. ஆனால் எது நமக்குத் தேவை என்பதை நாம் தேர்ந்தெடுக்க உரிமை கொடுக்க வேண்டும். அத்தகைய உரிமை பெற்ற சமூகம்தான் வளரும்.

இப்போது சமபந்தி போஜனம் என்கிறார்கள். நான் பிராமணன். என்னால் மாமிசம் சாப்பிடுபவன் பக்கத்தில் இருந்து சாப்பிட முடியாது. இது வெறுப்பினால் வந்தது இல்லை. உடல் ரீதியாகவே என்னால் முடியாதது. அதே போல் நமக்கு எது தேவை என்பதை நாமே தேர்வு செய்ய வேண்டும். சமூகம் நமக்கு என்ன செய்தது? திருவனந்தபுரத்தில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என் காலத்திற்கு பின்னால் இந்த சமூகம் என்ன செய்யப் போகிறது?

உங்கள் நாவல்களில் ‘சுசீலா’ என்ற பெயர் தொடர்ந்து வருகிறதே?

‘தென்பாண்டிச்சிங்கம்’ என்றதும் யார் ஞாபகம் வருகிறது உங்களுக்கு? (என்னைத் திரும்பக் கேட்டார்) ”கருணாநிதி…?” என்றதும், ”அதைப்போலத்தான், என் நாவல்களில் ‘சுசீலா’. தென்பாண்டிச் சிங்கம் நாவல் கருணாநிதியால் எழுதப்பட்டது என்று எனக்கு எப்பவோ பதிவான விஷயம். இப்போதும் மனதில் இருக்கிறது. பேசும்போது வெளிவருகிறது. ‘சுசீலா’ என் வாழ்வில் எப்போதோ வந்துவிட்டுப் போன பெண்ணாக இருக்கலாம். அசோகமித்திரன், ஆ.மாதவன் கூட என் சுசீலாவைப் பற்றி அதிகம் பேசி இருக்கிறார்கள். இந்த 80 வயதில் நீங்களும் சுசீலாவைப் பற்றி கேட்கிறீர்கள். (இதைச் சொன்னபிறகு நகுலன் பேசாமல், அவர் எழுத்துப் போலவே ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி விட்டார்.)

திரும்பவும் ஆரம்பிக்கும்போது, ‘நீங்கள் Madras (சென்னை)- ல் இருந்து வந்திருக்கிற பத்திரிகையாளர். எந்தப் பத்திரிகைக்கு பேட்டி?’ என்று தொடங்கினார். ‘ambalam.com’ என்ற இணைய இதழுக்காக!’ என்று திரும்பவும் அவரை ரீ-சார்ஜ் செய்து கொண்டு வரவேண்டிய நிலை வந்தது.

உங்களது கவிதைகளை அவை வெளிவந்த நேரத்தில் ஏற்றுக் கொண்டார்களா?

ஒரு எழுத்தாளன் முதலில் பெயர் எடுத்துவிட்டால், தொடர்ந்து அவன் எழுதுவதெல்லாம் எழுத்துதான். நம்ம ஊரில் கதை எழுதுபவன் கவிதை எழுத முடியாது. கவிதை எழுதுபவன் கதை எழுத முடியாது. நான் இரண்டிலும் முயற்சி செய்து பார்த்தேன். விமர்சனம் வந்தாலும்கூட இரண்டிலும் நான் செயல்படுவதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தாஸ்தோவஸ்கி புத்தகம் படித்து விட்டுக் கூட கவிதை எழுதி இருக்கிறேன். ‘கோட் ஸ்டாண்ட் கவிதைகள்’ எனக்குப் பிடித்தமான கவிதைத் தொகுதி. என் கவிதை, கதைகளை மலையாளத்தில் ஒரு மாணவன் ஆராய்ச்சி செய்துள்ளார். என் கவிதைகள் பற்றி எனக்கே புரிய வைத்தது அவன்¢தான். எல்லாவற்றையும் இப்போது காவ்யா சண்முகசுந்தரம் தொகுப்பாகக் கொண்டு வந்துள்ளார்.

உங்கள் தங்கை திரிசடை நல்ல கவிஞராக அறியப்பட்டவர்தானே?

என் தங்கை திரிசடை இறந்து போய் விட்டார். இன்னொரு சகோதரன் பெங்களூரில் இருக்கிறார். நான் அம்மாவின் பிள்ளை… லா.சா.ரா. கதைகளில் வருவது போல், எனக்கு தாய்தான் தெய்வம், அம்மா, நட்பு எல்லாமாக இருந்தாள். நான் அப்போது நிறையப் படிப்பேன். அவைகளை திரிசடையும் படிப்பாள். அந்த ஆர்வத்தில் M.A. ஆங்கில இலக்கியம் படித்தாள். அவள் எழுதி உருவாக்கிய ”பனியால் பட்ட பத்து மரங்கள்” தொகுப்பை பார்த்தவுடன் வியந்து போய் விட்டேன். ஆச்சரியம். திரிசடை எழுதி உதிரியாக இருக்கும் கவிதைகளை அவளின் கணவன் கலெக்ட் பண்ணினார். அப்புறம் எனக்கு விவரம் எதுவும் தெரியாது.

இப்போது வெளிவரும் இலக்கியங்களைப் படிப்பதுண்டா?

என்ன அப்படி கேட்டு விட்டீர்கள். நான் தொடர்ந்த வாசகன். (அப்படிச் சொல்லி அவர் படுத்திருக்கும் கட்டிலுக்கடியில் காட்டினார். ஏராளமான புத்தகங்கள்) கோணங்கி இங்கு வந்திருந்தபோது பாழி நாவல் கொடுத்திருந்தார். முதல் அத்தியாயத்துடன் அப்படியே நிற்கிறது. நீங்கள் பாழி படித்திருக்கிறீர்களா… அதை எப்படிப் படிப்பதென்று சொல்லுங்கள் என்று கேட்டார். நாஞ்சில் நாடன் இங்கு வருவார். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறார். அவரின் நாவல்கள் நன்றாக இருக்கிறது. ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரையும் எனக்குத் தெரியும். இதில் ராமகிருஷ்ணன் விஷயமுள்ளவராகத் தெரிகிறார். அவரின் உபபாண்டவம் படித்தேன்.

”குரு«க்ஷத்திரம்” தொகுப்பு கொண்டு வருவதற்கு முன்நின்றவர்களில் நீங்களும் ஒருவர். அதைப்பற்றி?

அந்தத் தொகுப்பு வந்தபோது பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்தத் தொகுப்பை படித்தபின் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டார்கள். தாமு சிவராம், ஹெப்சிபா ஜேசுதாசன், சார்வாகன், சுஜாதா மேலும் மலையாள எழுத்தாளர்கள் பி.கே.பாலகிருஷ்ணன், ஐயப்பபணிக்கர், விஜயன்கரோடு என்று திருவனந்தபுரத்து இலக்கியவாதிகள் ரசித்த இலக்கியங்களை, எழுத்துக்களை தொகுத்து வெளியிட்டோம். அதை ரசிகனாக இருந்துதான் வெளியிட்டோம். இப்போது வெளிவரும் தொகுப்புகளுக்கெல்லாம் அதை முன்னோடி எனச் சொல்லலாம்.

உங்களுக்கும், க.நா.சு.விற்கும் இருந்த நட்பைப்பற்றி சொல்ல முடியுமா?

க.நா.சு. என்னைவிட சீனியர். ஆனால் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ‘ஜாலி’யாய் மனம் விட்டு பேசிப் பழகுவோம். கா.நா.சு. நல்ல சாப்பாடு, காப்பி இவையிரண்டிலும் அற்புதமாக சுவை பார்ப்பவர். அதனால் நாங்கள் நல்ல இலக்கியம், நல்ல சாப்பாடு இவையிரண்டிலும் ஆர்வமாக இருப்போம். கா.நா.சு.வின் பாத்திரம் போல் என் நாவலில் நான் படைத்ததுண்டு. அவர் ‘அனுபவத்திலிருந்து தொடங்கப்படுவதே தரமான எழுத்து’ என்பார். நான் ‘அனுபவமும், கற்பனையும் கலைப்படைப்புக்கு முக்கியம்’ என்பேன். அதைத்தான் நனவோடை உத்தியாக நான் கொடுப்பது. மௌனி இரங்கல் கூட்டத்தில் க.நா.சு.விற்கும் எனக்கும் சின்ன மனத்தாங்கல் ஏற்பட்டது. அது பின்னர் சரியாகி விட்டது.

விருதுகளைப் பற்றி உங்கள் கருத்து?

தமிழ்நாட்டில் விருதுகள் படும் பாட்டை நினைத்தால் கவலையளிக்கிறது. ஒரு எழுத்தாளர் அவருக்கு பரிசு கிடைக்கவில்லை என்பதனால், அவர்தான் பரிசுக்குரியவர் என்று பத்திரிகையில் எழுதுகிறார். ஏற்கெனவே பரிசு வாங்கியவர்களெல்லாம் – அவர்களுக்கு தெரிந்தவர்கள் தேர்வுக் குழுவில் இருந்ததினால்தான் வாங்கினார்கள். அல்லது பணம் கொடுத்து வாங்கினார்கள்.

இந்த வருடம் எழுத்து பத்திரிகை நடத்திய சி.சு.செல்லப்பாவிற்கு கிடைத்து இருக்கிறது. இதில் யாருக்கும் விமர்சனம் இருக்க முடியாது. என் எழுத்தை யாரும் வெளியிடாதபோது என் எழுத்தை அங்கீகரித்து ‘எழுத்து’ பத்திரிகையில் வெளியிட்டவர் சி.சு.செல்லப்பா. அவர் பத்திரிகை தமிழ் இலக்கியத்திற்கு பெரிய ஊன்றுகோலாக இருந்தது.

‘நகுலன்’ – ‘எழுத்து’, ‘இலக்கியவட்டம்’ போன்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார். ஆனந்தவிகடன், குமுதம் போன்ற வணிகப் பத்திரிகைகளில் எழுதவில்லையா?

எனக்கென்று எந்த வட்டமும் இல்லை. கதையை எந்தப் பத்திரிகை பிரசுரம் பண்ணினாலும் அனுப்பி இருப்பேன். ஆனால் ஆனந்தவிகடன் என் கதையைப் போடவே இல்லை. சி.சு.செல்லப்பா எழுத்தில் பிரசுரம் பண்ணினார். க.நா.சு.வால் இலக்கியவட்டத்தில் எழுதினேன். எழுத்து பத்திரிகைகளைப் பொறுத்தவரையில் எல்லாம் சி.சு.செல்லப்பாதான். எதைப் போடுவது எப்படி எழுதுவது என்பதையெல்லாம் எங்களுக்கு சொல்லி விடுவார். க.நா.சு. கொஞ்சம் விட்டேத்தியாக இருப்பார். கதையைக் கொடுத்தால் வெளியிடுவார்.

தமிழ் இலக்கியத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக நினைக்கிறீர்களா?

எனக்கு தமிழ் இலக்கிய உலகில் நியாயமான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்னொன்று அங்கீகாரம் என்பது என்ன.. நான் எழுதுகிறேன் வாசகர்கள் படிக்கிறார்கள். படித்தல் நல்லது இல்லையென்றால் நகுலன் என்ன செய்வது? துரைசாமிக்கு வரும் பென்சன் பணத்தை வைத்து வாழ்ந்து வருகிறேன். போனவர்களை வழியனுப்பி விட்டு போகப் போவதற்கு நானும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

எதையும் நான் திட்டம் போட்டுச் செய்வதில்லை. அம்மாவுடன் இருந்தவரைக்கும் அம்மாதான் எனக்கு வேண்டி இருந்தது. அப்படி இருந்தும் ஒரு பொண்ணைப் போய்ப் பார்த்தேன். என் வாத்தியார் வேலையும், எழுத்தும் அவளுக்கு சம்பாதித்துக் கொட்டும் வழிகள் இல்லை என்று தெரிந்தபடியால் மறுத்து விட்டாள். கல்யாணத்துக்கு பேசி அத்துடனே முடிந்து போன பெண்கள் நிறைய இருந்தார்கள். பிறகு ‘கல்யாணம் வேண்டாம்’ என்று ஒதுங்கிக் கொண்டேன். 80 வயதிலும் நான் ‘பேச்சலர்’தான்.

-ஆர்.டி.பாஸ்கர்

————————————————————————————

“நினைவுப் பாதை’யின் முடிவில்…

இருப்பதற்கென்றுதான் வருகிறோம் இல்லாமல் போகிறோம்.

தனது எண்பத்தைந்தாவது வயதில் மே 17 ஆம் தேதி மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளர் நகுலன் எழுதிய கவிதை இது.

1921 இல் கும்பகோணத்தில் பிறந்த நகுலன் திருவனந்தபுரம் மார் இவானியஸ் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இயற்பெயர் டி.கே. துரைசாமி. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் முதுகலை பயின்றவர். கடைசிவரை பிரம்மச்சாரியாக வாழ்ந்த நகுலனுக்கு இலக்கியம்தான் உற்ற துணை. நகுலன் எட்டு நாவல்கள் எழுதியுள்ளார். “நினைவுப் பாதை’, “வாக்குமூலம்’, “நவீனன் டைரி’ போன்றவை குறிப்பிடத் தக்கவை. நாவலாசிரியராக மட்டுமல்லாமல் கவிதையிலும் அவர் சாதனை புரிந்துள்ளார்.

“கோட் ஸ்டான்ட் கவிதைகள்’ அவரின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்பு. இரு நீண்ட கவிதைகள், மூன்று கவிதைகள், ஐந்து கவிதைகள், சுருதி போன்றவை பிற கவிதைத் தொகுப்புகள்.

நகுலனுக்கு கனடாவின் “விளக்கு’ விருது வழங்கப்பட்டுள்ளது. 1981 ஆம் ஆண்டு சிறந்த தமிழ்க் கவிஞருக்கான ஆசான் விருது அவருக்குத் திருவனந்தபுரத்தில் வழங்கப்பட்டது. 1991-ல் சாந்தோம் கலைத் தொடர்பு நிலையம் அந்த ஆண்டுக்கான சிறந்த தமிழ் எழுத்தாளருக்கான விருதை அளித்தது.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவரான நகுலன் ஆங்கிலத்தில் ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டு இருக்கிறார்.

மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலப் பத்திரிகைகளில் தமிழ் நூல்களைப் பற்றிய மதிப்புரைகள் எழுதியிருக்கிறார். மறைந்த இலக்கிய விமர்சகர் க.நா.சு.விடம் நெருக்கமும் மதிப்பும் கொண்டிருந்தார். நவீன தமிழ் இலக்கியத்திற்குப் புதிய பாதை வகுத்துக் கொடுத்தவர்களில் முக்கியமானவர் நகுலன்.

நீல. பத்மநாபன், ஆ. மாதவன், ஷண்முகசுப்பையா போன்ற எழுத்தாளர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். நகுலனின் சகோதரி திரிசடையும்கூட ஒரு கவிஞர்.

நகுலைனைப் பற்றிக் கவிஞர் வைத்தீஸ்வரன் நினைவுகூர்கிறார்:

“”நகுலனை 50 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும். நகுலனைப் பொருத்தவரை அவரிடம் ஆத்மீக விசாரணை நிறைய இருக்கும். புறவாழ்க்கையை அவர் கவிதைகளில் தேட முடியாது. அவருடைய கவிதையைப் படிப்பது ஒவ்வொருவரும் கண்ணாடியைப் பார்ப்பது போல இருக்கும். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் அவரைப் பார்த்தேன். என்னுடைய “நகரச்சுவர்கள்’ கவிதைத் தொகுப்பு மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்.

யதார்த்த வாழ்க்கை பற்றிய எந்த அக்கறையும் கொள்ளாதவர் அவர். சைக்கிளில் கோழியைத் தலைகீழாகக் கட்டிச் செல்லும் போது அந்தக் கோழிக்கு உலகம் தலைகீழாகத் தெரியும் என்று நான் எழுதிய அந்தக் கவிதையைப் படித்துவிட்டு, “இப்படியெல்லாம் சைக்கிளிலில் கோழியைக் கட்டிட்டுப் போவாங்களா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ஆனால் திருவனந்தபுரத்தில் சர்வசாதாரணமாகக் காணப்படும் காட்சி இது. அங்கே அவ்வளவு நாள்கள் வாழ்ந்தும் அதைக் கவனிக்காமல் இருந்திருக்கிறார். அந்த அளவுக்குப் புறவாழ்க்கை பற்றிய கவனிப்பு இல்லாதவர் அவர்.

பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடின்றி எல்லாரிடமும் சமமாகப் பழகக் கூடிய அவர். எதிரே இருப்பவர் யாராயினும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் விகற்பமில்லாமல் சிரிப்பார். அதை என்னால் மறக்கவே முடியாது.”

நகுலனுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் அசோகமித்திரன் கூறுகிறார்:

“”நகுலனை நினைக்கிறபோது அவர் 1968 இல் தொகுத்து வெளியிட்ட “குருúக்ஷத்திரம்’ என்ற தொகுப்பை மறக்க முடியாது. அந்தத் தொகுப்பு வேலைகளை நான்தான் அவருக்குச் செய்து கொடுத்தேன். அவர் கையெழுத்து புரியவே புரியாது. கிட்டத்தட்ட 500 – 600 பக்கங்களை நான் திரும்பவும் எழுத வேண்டியதாகிவிட்டது. அந்த அளவுக்கு அவர் கையெழுத்து மோசம். கதை, கவிதை, கட்டுரை என்று அனைத்தும் அடங்கியிருந்த அந்தத் தொகுப்பில் சுஜாதாகூட எழுதியுள்ளார்.

நகுலனை மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தில் உள்ள எல்லாரையும் சந்தித்திருக்கிறேன். என்னையும் அவருடைய சகோதரர்களில் ஒருவராகவே அவர் நடத்தினார். எனது படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காக திருவனந்தபுரத்துக்கு என்னை அழைத்தார். சம்பந்தப்பட்ட நபர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்க்க முக்கியத்துவம் கொடுக்காமல் என்னுடைய படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பிய அவர் நல்லெண்ணம் சில சூழ்நிலைகளால் நிறைவேறாமலே போய்விட்டது.

தனக்குள் முரண்பாடான எண்ணங்களைக் கொண்டிருந்த மனிதர் அவர்.”

நகுலனின் படைப்புகளில் மனவெளி மனிதர்களே அதிகம். மனிதமனம், மனதின் குழப்பம், இருண்மை போன்றவையே அவரின் படைப்புலகம். தனது இறுதிக் காலத்தில் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்த நகுலன் “காலத்தால் மறக்கப்படாத படைப்புகளைத்’ தந்துவிட்டு மறைந்துவிட்டார் என்பதே உண்மை.

– ந. ஜீவா

————————————————————————————

நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்
ஆ மாதவன்
நினைவோடை
குமுதம் தீராநதி

இம்மாதம் 18_ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 85 வயதில்_இடையே ஏறத்தாழ ஒரு பத்தாண்டு காலம். அவர் இந்த நிஷ உலகில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட நினைவில்லாத தடுமாற்ற உணர்வு நிலை. ‘‘நீங்கள் தானே மாதவன்? நான் நாஞ்சில் நாடனுடன்தான் பேசிக் கொண்டிருந்ததாக நினைத்தேன்… சுந்தரராமசாமி இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை… பார்த்து நாளாயிற்று…’’ இப்படியாக

கவிதா சண்முக சுப்பையா, நீல.பத்மநாபன், இருவரும் இங்கே அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்திலுள்ளவர்கள். இதில் அவருக்கு நெருக்கமான சுப்பையா காலமாகிவிட்டார். மரணம் பற்றி, திருமணம் பற்றி, இல்லறம் பற்றி, தாயன்பு பற்றி, சகோதர பந்தங்கள் பற்றியெல்லாம், அதீதமான_அழுத்தமான, அற்புதமான தத்துவ தீர்மானங்களை வகுத்திருந்தார், இந்த பிரம்மசாரி!

தமிழில் கவிதைகள் எழுதினார். ஆங்கிலத்திலும் அந்த அளவில் வீச்சோடு தீட்சணமாக கவிதை நூற்கள் படைத்த இவர், கதைகளிலும் நாவல்களிலும்தான் பெரும்பான்மை பெற்றிருந்தார் எனலாம். க.நா.சு., கு.ப.ராஷகோபாலன், ந. முத்துசாமி என்றெல்லாம் பழகிய வட்டமும், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் என்றிவ்வாறு நட்பு தொடர்பும் பெற்றிருந்தாலும் யாரையும் முன் மாதிரியாகவோ, ஏற்றி வைத்து ஒப்புக் காட்டவோ செய்யாத பண்பு நலம் நகுலனுடையது!

‘நினைவுப்பாதை’ தொட்டு ஆறேழு முழு நாவல்களும், ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ என்ற வேறு நான்கு கவிதைத் தொகுதிகளுமாக தமிழுக்கு படையல் தந்துள்ள நகுலன், தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் அறியாத தத்துவமுறுக்கின் பிரம்மஞானி. பெரிய எழுத்துச் சிற்பிகளின் தலைமை பீடக்காரர். தேர்ந்த விமர்சகர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நுட்பமான வாசிப்புச் செறிவு கொண்டவர். நான் எனது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலை முன்னுரைக்காக அவர் முன் வைத்தபோது_ எழுதிய நானே அறியாத ஒருவித நீரோட்ட உணர்வைச் சுட்டிக் காட்டி எனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்துக் காட்டி… ‘அஹ்ஹா…’ என்று, அவருக்கே உரித்தான அந்த ‘மாஸ்டர் பீஸ்’ சிரிப்பைக் காணிக்கை ஆக்கினார்.

கதைகள் வடித்திடும் அவரது விதேக விசித்திரங்களில், சுசீலா, நவீனன், கேசவமாதவன், எஸ்.நாயர் போன்ற ‘கோட்டுப் பாத்திரங்கள்’ அதிகமாக உலவினர். அனேகமாக, அவரது படைப்புகள், சுய சிந்தனைகளின் திரட்சிப் பாதை வழியாகவே பயணம் செய்தன. இந்த வறட்சி, ‘பைங்கிளி’ கதை பழகிய தமிழ் வாசகனுக்கு எட்டாத, புரியாத அறியாமையாகப்பட்டது.

இனி அவரது விசித்திரமான கதைத் தலைப்போடு (ஒரு ராத்தல் இறைச்சு.) ஆரம்பமாகும் ஒரு கதையின் துவக்கம், அவரது உண்மை உலகைக் காட்டுவதாக, தத்ரூபமாக அமைந்திருப்பதைப் பார்ப்போம்: ‘‘என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகிறேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வதுகூட பிசகு. சுமார் 15 கதை, குறுநாவல், கவிதை, பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13_க்கு ஒரு வித சன்மானமும் கிடைக்கவில்லை. 14_ஆவது கதைக்கு வந்த செக்கை கமிஷன் கழித்து கையில் கிடைத்தது 4ரூ.25.பைசா… நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவர் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் என் தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை… நான் கடந்த ஐந்து வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன். அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை உயரமுமில்லை. நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜி என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டி விட்டது. இருந்தாலும், அது என்னிடம் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்…’’ …நகுலனின் ஒட்டுமொத்தமான _ அவரே குறிப்பிடுவது போல பத்துப் பதினைந்து படைப்புகளின் உள்படிமான உணர்த்தல்களுக்கு எடுத்துக் காட்டு …. இவை. நகுலன், உரக்க மந்திர உச்சாடனம் செய்யாத வால்மீகம் மூடி வளர்ந்த தத்துவஞானி. வாய்வீரம் பேசாத வாள் வீச்சுக்காரன். மணம் உள்பொதிந்த விடிகாலையின் பாதிவிரிந்த மலர். அவரது அந்தரங்கமே அவரது கவிதைகள், கதைகள், நிஜவாழ்வின் ஈரவிறகுகள் போன்ற குமைவுகளை படிமங்களாகக் கொண்டு அவர் இலக்கியம் படைத்தார்.

‘இன்னார் போல் அவர்…’ என்று எடுத்துக் காட்டிட முடியாத அந்தத் தத்துவப் பேழை. இங்கே 85 ஆவது வயதின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்து மலையாள மயானத்தில் அடங்கிப் போய் விட்டது. வருங்கால அறிவு உலகம் நகுலனின் உத்வேக உணர்வுகளை மனதிலேற்றிக் கொண்டால், தமிழ் இலக்கிய உலகம் விழிப்பில் பார்வைத் தெளிவு கொள்ளும் என்பது உண்மை! றீ
————————————————————————————————
பின் தொடர முடியாத முன் நிழல்
சுகுமாரன்

சீரிய இலக்கியச் சூழலில் ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று சிறப்பிக்கப்பட்டவர் நகுலன்.இந்த அடைமொழி ஒரு தேய்ந்த சொற்சேர்க்கை (க்ளீஷே). எனினும் இது நகுலனுக்குப் பொருந்திப் போவது ஒரேசமயத்தில் இயல்பானதாகவும் முரண்பாடானதாகவும் படுகிறது. பொதுவான வாசிப்புத்தளத்தில் நகுலனுக்கு வாசகர்கள் அதிகமில்லை.சீரிய எழுத்தில் ஆர்வம் கொண்டவர்களே அவரது வாசகர்கள்.

அவர்களே நகுலனை அப்படிக் கருதுகிறார்கள்; அல்லது அப்படிக் கருதுவதற்கான சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அர்த்தத்தில் முன் சொன்ன அடைமொழி நகுலனுக்கு இயல்பாகப் பொருந்துகிறது. தமிழில் இன்றுள்ள பிற எந்த எழுத்தாளரையும் விட அதிகமாகப் போற்றப்படுபவர் அவர்தான். எண்பதுகளுக்குப் பின் வந்த இளம் இலக்கியவாதிகளிடையே அவர்தான் அதிக செல்வாக்குச் செலுத்தியுள்ள எழுத்தாளர்.நகுலனின் படைப்புகளால் தூண்டப்பெற்றவர்களை விட, இலக்கிய உலகில் உருவாகியிருந்த படிமத்தைச் சார்ந்து அவர்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம் என்று தோன்றுகிறது.படைப்பு, வாழ்க்கை இரண்டுக்கும் அதிக வேற்றுமையில்லாத எழுத்தாளர் என்ற உண்மையும் நகுலனை ஓர் ஆராதனைப் பாத்திரமாக்கியிருக்கிறது.தீவிர இலக்கிய வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் ஓர் ஆர்வலனுக்கு அவர் முன்னுதாரணமாகத் தென்பட்டது இயல்பானது. அதே சமயம் நகுலனின் எழுத்தும் வாழ்க்கையும் பின் தொடர அரிதானவை என்பதால், இந்த மனநிலை முரண்பாடானதாகவும் தோன்றுகிறது. நகுலன் கல்லூரி ஆசிரியராக ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியிருக்கிறார்.அதை விடவும் கூடுதலான ஆண்டுகளாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். இந்த இரண்டு செயல்பாடுகள்தாம் அவரது வாழ்க்கையை உருவாக்கியிருக்கின்றன. மொழியையும் இலக்கியங்களையும் பயிற்றுவிக்கும் ஆசிரியர் என்ற நிலையில் அவரது வாழ்வனுபவங்கள் அனைத்தும் இலக்கியம் சார்ந்தவையாகவே இருந்திருக்கின்றன. இலக்கியம் சார்ந்து உருவான நட்புகள்,பாதிப்புகள்,செல்வாக்குகள்,ஆற்றாமை இவைதாம் அவரது வாழ்வின் அனுபவங்கள். இந்த அர்த்தத்தில் நகுலன் உருவாக்கியது அவருக்கு மட்டுமேயான உலகம். அவரது அனுபவங்கள் புற உலகின் தாக்கமில்லாதவை. எனவே வெளியில் விரிவதற்குப் பதிலாக உள் நோக்கி ஆழமாகச் செல்லும் குணம் கொண்டது அவர் உலகம். மனதின் தோற்றங்களுக்கு இசைய அந்த உலகம் வடிவம் கொள்ளுகிறது. தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் இப்படி ஓர் உலகை உருவாக்கிக் கொண்டவர் அவர் மட்டுமே. நகுலனை அணுகும் வாசகனுக்கு அவரது படைப்புலகம் வியப்பூட்டக் கூடியதாகவும் அமைகிறது. பூடகங்களும் மௌனங்களும் நிறைந்து தீவிர மனநிலை கொண்டதாகத் தோன்றுகிறது. உண்மையில் நகுலனின் படைப்பு மனநிலை தீவிரமானது. சிக்கலானது. மறைமுகமான அர்த்தங்கள் கொண்டது. நடப்புக்கும் கனவுக்கும் வேறுபாடில்லாத படைப்பு நிலையே அதன் மையம். இந்த இயல்பு அவரது தனி வாழ்க்கையிலிருந்து உருவானது. ஒரு நேர்காணலில் அவர் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்யவில்லையா? என்று கேட்கப்பட்டிருந்தது.அதற்கான வயதில் பெண் பார்க்கப் போனதையும் கல்லூரி விரிவுரையாளர் பணியிலிருப்பவருக்கு சம்பந்தம் பேச விருப்பமில்லை என்று பெண்வீட்டார் மறுத்ததையும் குறிப்பிடுகிறார். சாதாரணமான ஒருவரிடம் இந்த சம்பவம் லௌகீகமான சலனங்களை உருவாக்கும். நகுலனிடம் இது வாழ்வையே நிர்ணயிக்கும் முடிவுக்கு வந்து நின்றிருக்கிறது. அது அவருடைய படைப்பின் கூறாகிறது. சுசீலா என்ற நிரந்தரமான பிரதிபிம்பத்தை உருவாக்குகிறது. இது ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே. புற வாழ்வின் நிகழ்ச்சிகள் எல்லாம் உளவியல் விசாரணைகளாக ஆவது நகுலன் படைப்புகளின் இன்னொரு அம்சம். வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டாலும் மனவுணர்வுகளின் உச்ச நிலைதான் அவரது படைப்பின் மையம். அவையும் சக மனிதர்களால் தொடர்ந்து ஏமாற்றப்படும் ஒருவனின் கழிவிரக்கமாகவும் ஏமாற்றப்பட்டாலும் நன்மையையட்டி இருக்க வேண்டும் என்ற தார்மீக இச்சை கொள்வதாகவும் இருக்கிறது. எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து ஏமாற்றப்படுபவர்களாகவே பலரும் உணரும் வாழ்நிலையில் நகுலன் வாசகனுக்கு நெருக்கமானவராகிறார். அவரது உலகத்தில் விலகி நின்று பார்க்கும் இயல்புக்கு இடமில்லை. எனவே வாசகன் நகுலனிடமும் தன்னையே பார்க்கிறான். இந்த நோக்கில்தான் வாசகனுக்கு நகுலன் ஈர்ப்புக்குரியவராகிறார். இந்த ஈர்ப்பை நகுலன் தன் வாழ்வின் நடவடிக்கைகளிலிருந்து எடுக்கிறார். அதையே வாழ்வின் இயல்பாகவும் மாற்றுகிறார். புற உலகம் நகுலனைப் பொறுத்தவரை பொருட்படுத்தப்படக் கூடியதல்ல; அதன் மதிப்பீடுகளுக்கு அவரிடம் கிஞ்சித்தும் மதிப்பில்லை. முன்முடிவுகள் அவருக்கு உவப்பில்லை. எனவே அவரது தனிவாழ்க்கை அந்நியமான ஒன்றாகவே இருந்தது. தனக்கு நேர்ந்த ஏமாற்றங்கள்,தோல்விகள்,என்றும் அவரைத் தொடர்ந்திருந்த மனிதர்கள் பற்றிய பயம் இவற்றின் மொத்தம் அவரது தனி வாழ்க்கை. இவற்றை எதிர்த்து தன்னுடைய வாழ்க்கைக்கு ஓர் அராஜகச் சாயலை வரித்துக்கொண்டிருந்தார். அதுதான் எழுத்தைத் தீவிரமானதாகக் கருதுபவர்கள் அவரை தமது ஆதர்சமாகக் கருதக் காரணமாக இருக்கலாம். வாழ்க்கை சமரசங்களின் தொடரல்ல என்று நம்புகிறவர்களுக்கு நகுலனின் வாழ்க்கை முன் உதாரணமாகத் தென்படுகிறது. அவரைச் சுற்றி ஒரு சாகசப் படிமம் உருவாக்கப்படுகிறது. இந்தப் படிமம்தான் நகுலனின் இலக்கிய ஆளுமையாகவும் மாறியிருக்கிறது. நகுலனை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் இந்தப் படிமத்தையட்டியே அவரை வாசிக்கிறான். பொருள் கொள்ளுகிறான். நகுலனின் படைப்புகள் இரண்டு கோணங்களில் பொருள் கொள்ளுகின்றன. ஒன்று அவரது வாழ்க்கை உருவாக்கியிருக்கும் படிமம் சார்ந்தது. இரண்டு அவரைப் பற்றி இலக்கியச் சூழலில் உருவாகியுள்ள கருத்துநிலை சார்ந்தது. பிற எழுத்தாளர்கள் தமது படைப்பால் இந்தக் கருத்து நிலையை எட்ட முயலும்போது நகுலன் தனது வாழ்க்கையால் இதை அடைந்திருக்கிறார் என்று கருதலாம். அவரை நேரில் சந்தித்துப் பேசக் கிடைத்த குறைவான சந்திப்புகள் ஒன்றில் இந்த அபிப்பிராயத்தை முன்வைத்திருக்கிறேன்.’ எனக்கு யாருமில்லை, நான் கூட’ என்பது அவருடைய ஒரு கவிதை. இதை நீங்கள் எழுதாமல் நான் எழுதியிருந்தால் கவிதையாகக் கருதப்படுமா? என்று கேட்டேன்.இல்லை. நகுலனின் மொழி,நகுலனின் படைப்பு இயல்பு என்று ஒன்றிருக்கிறதே. அதுதான் இதைக் கவிதையாக்குகிறது என்பது அவருடைய பதில். நகுலன் என்ற கவிஞரை ஒதுக்கிவிட்டு அவருடைய ‘மழை மரம் காற்று’ கவிதையைப் படித்தால் அது கவிதையாக அனுபவப்படுவது சிரமம். அதில் கவித்துவமானது என்று மேற்கோள் காட்டக் கூடிய வரிகள் பெரும்பாலும் இல்லை.ஆனால் மொத்த வரிகளும் இணைந்து ஒரு உணர்வுநிலையை முன்வைக்கும். அந்த நிலையை உருவாக்குவதில் நகுலனின் படைப்பு முறைக்கும், அது இயங்கும் சூழலுக்கும் பங்கிருக்கிறது. கவிதைகள் மட்டுமல்ல. அவரது படைப்புகள் அனைத்தும் இந்தத் தன்மை கொண்டவைதாம். எழுத்தின் இந்தத் தன்மையைப் பின்வருமாறு பகுக்கலாம். நகுலனின் எழுத்துக்கு தன்னிச்சையான இருப்பு இல்லை என்ற குறையாக; அல்லது எழுத்தாளனும் வாசகனும் நெருங்கும் ஒருமை என்ற மேனமையாக.இவை இரண்டுக்கும் நகுலனின் படைப்பில் வாய்ப்பிருக்கிறது. இலக்கிய வாசகர்கள் நகுலன்பால் ஈர்க்கப்பட இன்னொரு அம்சமும் காரணம். அது அவரது சுதந்திரமான படைப்பாக்கம். எழுதி வந்த அரை நூற்றாண்டுக் காலமும் தன்னை ஒரு சுதந்திரமான படைப்பாளியாகவே நிலை நிறுத்திக்கொண்டிருந்திருக்கிறார். தமிழில் ஆர்வம் கொண்டு முறையாகப் படித்தவர்.பின்னர் ஆங்கில இலக்கியத்தைப் பயின்று புலமை பெற்றவர். இவ்விரு மொழிகளின் இலக்கியங்களிலிருந்து பெற்ற வாசிப்பு அவரது படைப்பை செழுமைப்படுத்தியுள்ளது. திருமூலரிலிருந்து ஒரு வரி, எமிலி டிக்கின்சனின் ஒருவரி. போதும் நகுலனின் படைப்பைத் தூண்டிவிட. அதை நேர்மையாக வெளிப்படுத்தும் அவரது சிரத்தை அந்த எழுத்துக்களுக்கு மதிப்பளிக்கிறது. இத்தனை பாதிப்புகளையும் செரித்துகொண்டு அவரது படைப்புகள் தொடர்ந்து சுதந்திரமானவையாக இருக்க முயல்கின்றன என்பதை நகுலனின் படைப்பாக்க வெற்றியாகச் சொல்லலாம். நகுலனை ஓர் இலக்கிய ஆர்வலனாக நான் எப்படி அணுகுகிறேன் என்பதன் வரைபடம் இது. அவருடைய அராஜகமான வாழ்க்கை முறையும் (Anarchic life) எந்தக் கோட்பாடுகளுடனும் உறவு கொள்ளாத சுதந்திரமான படைப்பாக்கமும் (Avant garde) என்னையும் ஈர்க்கிறது. அது ஒரு வசீகரமான நிழல். அதைப் பின் தொடர்வது சற்றுக் கடினம். எனக்கு மட்டுமல்ல; நகுலனை வழிபடுகிறவர்களுக்கும். ஏனெனில், நகுலன் கவிதையில் சொல்வது போல, ஓவ்வொருவருக்கும் ‘நான் சரி,நான் மாத்திரம் சரியே சரி’.

————————————————————————————————
நகுலன் என்கிற டி கெ துரைசாமி
நீல பத்மநாபன்

‘‘ஒரு கட்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு புகையிலை வாய் கழுவ நீர் / ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ் / ஒரு புட்டி பிராந்தி / வத்திப்பெட்டி / சிகரெட் / சாம்பல்தட்டு பேசுவதற்கு நீ நண்பா இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு.’’

_நகுலன்

சென்ற ஞாயிறு (13.05.2007), ஏகதேசம் இந்த குறிப்பு எழுதும் இந்நேரம் இன்றும் ஞாயிறுதான். தேதி 20, ஒரு வாரம் கடந்து விட்டது, குருவாயூரிலிருந்து நான் வீடு திரும்பியதும் கிடைத்த செய்தி நகுலனை அவர் வீட்டுப் பக்கம் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருப்பதாக. சென்ற மாதம், ஏப்ரல் 27_ல் டில்லி நண்பர்கள் ஏ.ஆர். ராஜாமணி, ராமலிங்கம் கூட அவரைப் பார்க்க வீட்டுக்குச் சென்றிருந்தபோது கட்டிலில் படுத்திருந்தார். பக்கத்தில் பங்களூரிலிருந்து வந்திருந்த அவர் தம்பியும், தம்பி மனைவியும் இருந்தார்கள். சற்று நேரத்தில் எழுந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாலும், அவர் முகத்திலும் பேச்சிலும் சோர்வும் களைப்பும் முன்பைவிட அதிகமாக இருந்ததைக் கவனித்தேன். இரண்டொரு நாட்களில் அவர் தம்பியும், மனைவியும் பங்களூர் சென்று விட்டார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் மறுபடியும் அவர்கள் திரும்ப வந்து நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியிருப்பதாக தெரிய வந்தது. எப்படியோ, ஆஸ்பத்திரியைக் கண்டுபிடித்து அவர் அறைக்கு வந்தபோது, படுக்கையில், ஒருக்களித்து படுத்திருக்கிறார். அந்த முகத்தைப் பார்த்ததும், மனதில் வந்து சூழும் பல்வேறு நினைவுகள். வீட்டிலிருக்கும்போதும் நீங்க வந்துட்டீங்களான்னு திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்… அவர் தம்பி மனைவிதான் சொன்னாள். பக்கத்தில் அவர் தம்பி மணி, நகுலனை இந்நாள் வரை கவனித்து பணிவிடை செய்து கொண்டிருந்த ‘புறுந்தை’ என்று அழைக்கும் கோமதி அம்மாள். சற்று சென்று அவர் கண் விழித்ததும், கொஞ்சம் கூட அவர் பக்கம் நெருங்கி, சார் என்னைத் தெரியுதா? என்று கேட்கிறேன். ஒரு கணம் உற்றுப் பார்க்கிறார். புரிந்தது என்பதற்கு அடையாளமாக தலையாட்டுகிறார்.

தலை சற்று உயரமாக வைப்பதற்கான பலகையுடன் வந்த ஆஸ்பத்திரி சிப்பந்தி இருவர் _ ஒரு நர்ஸ், இன்னொரு இளைஞர், அதைச் செய்யும் போது, உதவிக்காக நாங்கள் அவரைப் பிடித்து சற்று மேலே நீக்குவதற்கிடையில் ஓவென்று கத்தினார். இங்கே வரும் முந்தியே சொல்லியிருக்கிறார் மூக்கில் குழாயன்றும் நுழைக்கக் கூடாது என்றெல்லாம். நல்லவேளை, அதைச் செய்ய வேண்டிவரவில்லை. க்ளூக்கோஸ் நரம்பு வழி கொடுத்திருக்கிறார்கள். பிறகு யூரின் போக இந்த டியூப் போட்டிருக்கிறார்கள். சற்று நேரம் கூட கண்ணயரும் அவரையே பார்த்துக் கொண்டு அங்கே உட்கார்ந்திருந்தேன். இதற்கு முன், இரண்டொரு தடவை அவரை இன்பேஷன்டாக மருத்துவமனையில் வந்து பார்த்துச் சென்ற நினைவுப் பொறிகள்.

பல வருடங்களுக்கு முன் மூத்திரப்பை ஆபரேஷன் பண்ணி, நகர் மத்தியிலிருந்த ஒரு பிரபல ஐந்து நட்சத்திர தனியார் ஆஸ்பத்திரியில் …

பல ஆண்டுகளுக்கு முன் (1965), நகரின் புறப் பகுதியில் அமைதியான இடத்தில் அமைந்திருந்த ராமகிருஷ்ண ஆஸ்பத்திரியில் கடுமையான வயிற்று வலிக்காக அட்மிட்டாகி அவர் இருந்த சில நாட்கள்..

அவரது ‘ரோகிகள்’ நாவல் அந்த அனுபவத்திலிருந்து விளைந்ததுதான். (1966_ல் நான்கு நாட்களில் எழுதப்பட்டது)

ஆனால்,

இப்போதைய இந்தக் கிடப்பு

இவர் ஸ்டூடண்ட்தான் டாக்டர். அவர் சொன்னார் : வயது எண்பத்து அஞ்சாகி விட்டதல்லவா, ஒன்றும் சொல்ல முடியாது. அப்படீன்னு!

அவர் தம்பி சொன்னார் :

உள் மனதில் பலவிதமான அசுபமான நினைவுகள்

ஒரு வேளை.

ஒரு வேளை

இவரை ‘இவராக’ நான் ஊனக் கண்களால் பார்ப்பது இதுதான் கடைசியாக இருக்குமோ…

கடவுளே.. அப்படி இல்லாமல் இருக்கட்டும். மேலும் அங்கே இருக்க இயலாமல், விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் வீடு திரும்புகையிலும் முணுக் முணுக்கென்று அந்த பயம்

ஒரு வேளை, இதனால்தானோ என்னவோ, குருவாயூரிலிருந்து வீடு திரும்பியதும், போக வர இருநாட்கள் இரவு ரயில் பயணக் களைப்பு, உடல் உபாதைகளை மீறி, ‘போ போய் பார்த்து விடு’ என்று உள்ளிருந்து ஒரு குரல் என்னை விரட்டியடித்து. பஸ்ஸில் ஏற வைத்து இதுநாள்வரை தெரிந்திராத இந்த ஆஸ்பத்திரிக்கு இழுத்து வந்ததோ? இரண்டு மூன்று நாட்கள் ஒரு வித உள்ள, உடல் உபாதைகளுடன் மல்லிட்டவாறு கழித்தேன். வியாழக்கிழமை, 17_ம் தேதி மாலை போனில் மணியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘சார் கொஞ்சம் சீரியஸ் தான். நேற்று லூஸ் மோஷன்_பேதி போனவாறு இருந்தது. இப்போ ரொம்ப சோர்ந்து போனார். வேண்டியவங்களுக்குத் தெரிவித்து விட டாக்டர் சொல்லிவிட்டார்.

டில்லியிலிருக்கும் எங்க சிஸ்டர் கிட்டேயும் ஸ்டேட்ஸிலிருக்கும் என் மகன் பிரசாத்திடமும் தெரிவித்து விட்டோம் என்று சொன்னார். நெஞ்சில் ஒரு பதற்றம். இப்போதெல்லாம், எந்த அதிர்வையும் தாங்க முடியாத இதயம். நெடுநேரம் உள்ளுக்குள் தடுமாற்றம்.

உடனையே போய்ப் பார்ப்பதா? வேண்டாமா? ஞாயிறன்று பார்த்த காட்சி அப்படியே நெஞ்சில் இருக்கட்டும். இந்த ராத்திரிப்பொழுதில் அவ்வளவு தூரம் படபடத்து ஓடிச் சென்று என்ன பார்ப்பது.

உள்ளூரிலேயே இருந்த அவருக்கு நெருக்கமான ஓரிருவரைத் தவிர வேறு யாரிடமும் போன் பண்ணிச் சொல்லும் வலு கூட என்னிடம் அப்போது இருக்கவில்லை. கடைசியில் வெள்ளி 18.05.07 அதிகாலையில் மணியிடமிருந்து செய்தி _

நேற்று இரவு 11.30 மணி சுமாருக்கு அண்ணா காலமாகிவிட்டார். பிரசாத் அமெரிக்காவிலிருந்து கிளம்பிவிட்டான், டில்லியிலிருந்து சிஸ்டரும் ப்ளைனில் வருகிறாள். பாடியை மெடிக்கல் காலேஜ் மார்ச்சுவரியில் வைத்திருக்கிறோம். நாளைக் காலை 9 மணிக்கு வீட்டுக்குக் கொண்டு வருவோம். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழிலக்கியத்தில் நிறைந்து நின்று செயல்பட்டு அமரரான நகுலனுக்கு நேற்று 19.05.07 சனிக்கிழமை காலையில் இறுதி மரியாதை செய்ய வந்தவர்களில், அவர் உறவினர்கள், மாணவர்கள், அண்டைவாசிகள், நண்பர்கள் போக இலக்கியவாதிகள் என்று கைவிரல்களை எல்லாம் மடக்கி எண்ணும் அளவுக்கில்லை

பாரதி, இதே திருவனந்தபுரத்தில் இறுதி நாட்களைக் கழித்து காலமான புதுமைப்பித்தன்… தமிழைச் சேவித்த இவர்களுக்கெல்லாம் நடந்த அதே இறுதி மரியாதைதான்..

தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அதற்கொரு குணமுண்டு.

«««

என் இலக்கியவாழ்வின் ஆரம்ப திசையிலிருந்து ஆங்கிலம் கற்பித்த ஆசான்களாக, நெருக்கமான நண்பர்களாக என்னை வழிநடத்திய இருவர் நகுலனும், ஐயப்பப் பணிக்கரும். பணிக்கர் காலமாகி ஒரு ஆண்டு திகையும் முன் (ஆகஸ்ட் 23, 2006) அவரைப் பற்றி எழுதியதைப்போல், நகுலனைப் பற்றியும் இப்படியரு குறிப்பு எழுதவேண்டிவரும் என்று நான் கனவில் கூட எண்ணவில்லை.

நகுலனைப் பொறுத்தவரையில், நான் 1953_ல் பள்ளி இறுதி வகுப்பிலிருந்து இடைநிலை வகுப்புக்காக (இன்டர்மீடியட்) கல்லூரியில் சேர்ந்த நாளிலிருந்து ஆரம்பமான பழக்கம், நெருக்கம். இந்த 55 ஆண்டுகால அற்றுப்போகாத நெருக்கத்தின் நினைவுகளையெல்லாம் இந்த நினைவஞ்சலியில் வடித்தெடுக்கும் மானசீகமான தயார் நிலைமையில் நான் தற்போது இல்லை..

கதை, கவிதை, நாவல், கட்டுரை என்று தொட்டதையெல்லாம் தனக்கே உரித்த தனிபாணியில் துலங்க வைத்தவாறு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் நிறைந்து நின்றவர் நகுலன் (1922_2007) ‘நிழல்களில்’ (1965) துவங்கி, ரோகிகள் (1966) நினைவுப்பாதை (1972) நாய்கள் (1974), நவீனன் டயரி (1978) இவர்கள் (1983), சில அத்தியாயங்கள் (1983) வாக்குமூலம் (1992) என்று நாவல்கள், மூன்று (1979), ஐந்து (1981), கோட் ஸ்டான்ட் (1981), இரு நீண்ட கவிதைகள் (1991) என்று கவிதைகள், ஆங்கிலத்தில் words to the listening air (1968), poems by nakulan (1981), a tamil writers journal vol 1 (1984), vol II (1989). selections from bharathi that little sparrow (1982), non being (1986), words for the wind noval (1983) முதலிய படைப்புக்கள் வழி தொடர்ந்த நகுலனின் இலக்கியப் பயணத்தின் பாதையும் பார்வையும் முற்றிலும் நவீனமானது, தன்னிகரற்றது.

மொழிபெயர்ப்பிலும் அவருடைய பங்களிப்பு அலாதியானது, குறிப்பாக ஆங்கில, மலையாள இலக்கியப் படைப்புக்களை தமிழில் கொணர்ந்து பரஸ்பர பரிவர்த்தனைக்கும், புரிந்து கொள்ளலுக்கும் அவர் அளித்த பங்கும் கணிசமானது. பிரபல மலையாளக் கவிஞர் ஐயப்பப் பணிக்கரின் நெடுங்கவிதை ‘குரு«க்ஷத்திரம்’ மூலமொழி மலையாளத்தில் வெளிவந்த அறுபதுகளிலேயே தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்ததுடன் நின்று விடுவதல்ல இது. நகுலனின் படைப்புக்களில் குன்றாத உயிர்ப்புடன் உலவும் எஸ்.நாயர், சுசீலா போன்ற கதை மாந்தர்களாலும் செழுமை பெறுகிறது, இந்த பரிவர்த்தனையும் பரஸ்பர புரிந்துகொள்ளலும்.

««««
————————————————————————————————

நகுலனின் எழுத்தாற்றலைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு தனி அம்சம் அவர் படைப்புக்களின் ஆழம் அவற்றின் வாசிக்கும் தன்மைக்கு (readability) குந்தகம் விளைவிப்பதில்லை என்பதுதான். எந்தத் தடையோ சலிப்போ இன்றி வாசித்துச் செல்லலாம். ஆனால் முதல் வாசிப்பில் புலனாகாத உட்பொருட்களுக்கு மீண்டும் மீண்டும் நம்மை வாசிக்கத் தூண்டுவதும் அவற்றின் சிறப்பம்சம் என்றே தோன்றுகிறது. அவருடைய படைப்பின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி எத்தனை சொன்னாலும் முழுமையை எட்டுமென்று தோன்றவில்லை. ஆனால் அதற்கெல்லாம் மேலே புதியவர்களை, புதிய எழுத்துக்களை அவர் திறந்த மனதுடன் ஆதரித்து, அங்கீகரித்து வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்ததை எடுத்துச் சொல்ல வேண்டும்.

அறுபதுகள், எழுபதுகளில் நகுலனும் ஷண்முக சுப்பய்யாவும் அவரவர் சைக்கிள்களை உருட்டிக்கொண்டு வர, அவர்கள் கூட நான் நடந்தவாறு தீராத இலக்கிய விவாதங்களில் ஈடுபட்டு திருவனந்தபுரம் நகர வீதிகளில், சந்து பொந்துகளில் உலா வந்திருக்கிறோம். ஷண்முக சுப்பய்யா மிகவும் சங்கோஜ சுபாவமுடையவர்.. ஆனால் நிறைய வாசிப்பவர். சூரநாடு குஞ்ஞன் பிள்ளை என்ற பிரபல மலையாள அறிஞர் தலைமை வகித்த லெக்ஸிக்கன் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அப்போதைக்கப்போது எழுதிக்கொண்டு வந்து காட்டும் சிறு கவிதைகளை வாசித்து அதன் கலைநயத்தில் எந்தத் தணிக்கையுமின்றி வியந்து போற்றுவார் நகுலன். நகுலனின் இந்தத் தூண்டுகோல் ஒரு தொகுப்புக்கான கவிதைகளைப் படைக்க சுப்பய்யாவுக்கு மிகவும் பயன்பட்டது.

இது சுப்பய்யா விஷயத்தில் மட்டுமல்ல.. என் ‘தலைமுறைகள்’ நாவலில் இருந்து ‘கூண்டிவள் பட்சிகள்’ நாவல் வரை அவருடைய இந்தப் படிப்பும் பாராட்டும் சலிப்பின்றித் தொடர்ந்திருக்கின்றன. இங்கே திருவனந்தபுரத்திலேயே இருக்கும் நண்பர் ஆ.மாதவன், இருந்த காசியபன், தவிர, தமிழ்நாட்டில் இருக்கும் எத்தனையெத்தனையோ, எழுத்தாளர்கள் நேரடியாக அனுபவித்து அறிந்த உண்மை இது.

பல ஆண்டுகளுக்கு முன், நகுலனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பை என்னிடமிருந்து கேட்டு வாங்கி அவர் புகைப்படத்துடன் ‘குமுதம்’ வெளியிட்டிருந்தது. அதற்கு இடப்பட்டிருந்த தலைப்பு ‘எழுத்தை மணந்த எழுத்தாளர்’ என்று ஒரு ஞாபகம். கல்யாணம், குடும்பம் இவைபற்றி அவரிடம் பேச்சு எடுக்கும் போது, ‘எனக்கு எப்போதும் வாசித்துக் கொண்டிருக்க வேணும், எழுதிக் கொண்டிருக்க வேணும். அதுக்கு பெண்டாட்டி, குடும்பம் எல்லாம் தடைதானே…’ அவர் சொல்வது, ஒரு கோணத்தில், எழுத்தின் மீதுள்ள அவருடைய அபாரமான நெருக்கத்தைப் புலப்படுத்தும். ஆனால், கடைசிக் காலகட்டத்தில் எழுதுவதை அவர் அடியோடு நிறுத்தி விட்டார் என்பதுதான் பரிதாபம். அடிக்கடி அவரைச் சந்திக்கும் போதெல்லாம், ‘நீங்கள் எழுதவேண்டாம்; சொல்லுங்கள், நான் எழுதுகிறேன்..’ என கட்டாயப்படுத்தி அவரை மீண்டும் ஈடுபடுத்த முயன்றும், அதையும் தொடர அவரால் இயலவில்லை.

வயது ஏற ஏற, ஷண்முக சுப்பய்யாவுடன் இருக்கையில் யார் முந்தியோ’ என்று சுப்பய்யாவோ, நானோ சொன்னால் கூட அவர் பேச்சை திருப்பி விடுவார். ‘சாவிலும் சுகமுண்டு’ என்ற ரீதியில் கவிதை, கதை, நாவல்களில் கையாண்டிருந்தாலும் அதை எதிர்கொள்ளும் ‘தீரம்’ ஒன்றும் அவர் வெளிக்காட்டியதில்லை. ஷண்முக சுப்பய்யா காலமானபின், பேசிக்கொண்டிருக்கும்போது, ‘அவர் போயிட்டார்’ என்று குறிப்பிடுவதோடு சரி, சில நேரங்களில் அவர் கவிதைகளில் சில அப்படியே சொல்லும் நினைவு சக்தியும் அவரிடம் இருந்தது. சென்ற ஆண்டு ஐயப்பப் பணிக்கரின் மறைவும் அவரை பாதித்தது. அடிக்கடி, பேச்சுவாக்கில் ஐயப்பப்பணிக்கரைப் பற்றி திடீரென்று ஏதாவது கேட்பார். கடந்த சில ஆண்டுகளாக மறதி வியாதி அவரை அலட்டியதேயானாலும், முன்பு நடந்த பல நிகழ்ச்சிகள், மனிதர்கள் அவர் நினைவுப் பாதையில் அழியாமல் வந்து போய்க் கொண்டிருப்பதை அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தெரிய வரும். நானும், சுப்பய்யாவும் அவரிடம் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், அவர் ஒரு குழந்தையைப் போல் அடியோடு மறந்துவிடுவார் என்று சொல்ல முடியாது, அடிக்கடி சீண்டி வேடிக்கை பார்ப்பார்… ஆனால் குடும்பத்தில் நெருக்கமான ஒருவராக உரிமையுடன் அவர் காட்டும் பாசமும், நலம் நாட்டமும் அவரை வெறுக்க நம்மை அனுமதிக்காது. அதுதான் அவர் தனித்தன்மை என்று தோன்றுகிறது.

நகுலன் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் இல்லைதான். ஆனால் வாசிக்கும் யாரையும், அவருடைய வித்தியாசமான தன்மையை இனம் காட்டும் ஒரு எளிமையும் இனிமையும் ஆழமான அவர் எழுத்தில் இருந்தன. யாப்புத் தெரியாததால் யாப்பு மீறிய கவிதை எழுதுகிறார்கள் என்ற பழியை பரிகசிப்பவை நகுலன் கவிதைகள். இந்நோக்கில் அவருக்கு சமதையாகச் சொல்ல முடியும் இன்னொரு பெயர் மா. இளையபெருமாள். இருவரும் யாப்பு உட்பட்ட தமிழ் இலக்கணத்தை நன்கு கற்றுத் தேறியவர்கள், கவிதையில் பிரயோகித்து வெற்றி அடைந்தவர்கள். பெயர்கள், முகங்கள் மறந்து போகும் வியாதிக்கு ஆட்பட்டு, வீட்டுக்குள் ஒரு கனவுலகில் சில ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்த நகுலன் ஆர்.ஆர். சீனிவாசன் தேர்வு செய்த, புகைப்படங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘‘நகுலனின் கண்ணாடியாகும் கண்கள்’’ நூலை (காவ்யா வெளியீடு, சென்னை_டிசம்பர் 2006) புரட்டி அவர் படங்களுடன் வெளியாகியுள்ள சிறுகவிதைகளை ஒருவித சூன்யமான முகபாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது (நகுலன் உயிர் வாழும் போதே, இங்கு வந்து மிகவும் சிரமப்பட்டு மிக அற்புதமாக கறுப்பு வெள்ளை புகைப்படங்களைத் தயாரித்து, சென்னையில் புகைப்பட கண்காட்சியும், அந்தப் படங்களைப் பொருத்தமான கவிதைகளுடன் நூலாகவும் தொகுத்து வெளியிட்ட சீனிவாசனையும் காவ்யா ஷண்முக சுந்தரத்தையும் எத்தனைக்கு பாராட்டினாலும் தகும்)…

நூலின் 44_வது பக்கம் (புகைப்படங்கள் நிரம்பி நிற்கும் இந்நூலில் பக்க எண் இல்லை) வந்ததும்…

காலம் கடந்தாலும் அழியாது படைப்புக்களைச் செய்த அவர் கரத்தின் படத்தின் கீழ் ஒரு சிறுகவிதை

அணைக்க ஒரு / அன்பில்லா மனைவி/வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்/ வசிக்க சற்றும் / வசதியில்லா வீடு / உண்ண என்றும் / ருசியில்லா உணவு/பிழைக்க ஒரு/பிடிப்பில்லா தொழில்/எல்லாமாகியும்/ஏனோ உலகம் கசக்கவில்லை.’’

‘‘இந்தக் கவிதை யாருடையது? நீங்க எழுதியது தானா?’’ நான் கேட்கிறேன். மீண்டும் மீண்டும் கவிதையையும் என்னையும் பார்க்கிறார்..

முகத்தில் கேள்விக்குறி…

அது அவர் எழுதியதல்ல என்பதை அவர் புரிந்து கொண்டதைப் போல்..

‘‘இது ஷண்முக சுப்பய்யா எழுதிய கவிதை…’’ நான் விளக்கினேன்.

இதை இங்கே நான் எடுத்துச் சொல்லக் காரணம், ‘‘குழந்தைகளின் கவிஞர், குழந்தைகளுக்குப் பிடிக்கும்’’ என்று கவிதையிலிருக்கும் எளிமை காரணமாய் கேலிக்குள்ளான ஷண்முக சுப்பய்யாவின் எளிமையான ஆனால் ஆழமும் அர்த்த புஷ்டியுமுள்ள ஒரு கவிதை, யாப்பு சரிவரத் தெரிந்தும் அதை பேதமுடன் உடைத்து சாதனை படைத்த நகுலன் கவிதைககளின் கூட வைத்தபோது, உண்மை தெரியாதவர்களால் எளிதில் கண்டுபிடிக்க இயலாத ஒருவித தர ஒற்றுமை இனிமையாய், எளிமையாய் அதில் ஒளிர்கிறது என்பதைச் சுட்டிக் காட்டத்தான். 1968_ல் நகுலன் தொகுத்து வெளியிட்ட ‘குரு«க்ஷத்திரம்’ இலக்கியத் தொகுப்பில் பின்னட்டையில் அவர் பொறித்திருந்த வாசகங்களை எடுத்தாண்டு இக்கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

‘‘இலக்கியத்தில், வாழ்க்கையில் போல், ஒவ்வொரு புதுக்குரலும் ஒரு எதிர்க் குரலாகவே தொடக்கம் எய்தி. இலக்கியத்தை வளப்படுத்தியிருக்கிறது. ஒரு புதுக்குரல் வெறும் ஒரு எதிரொலியாக மாறுகிற பொழுது அதன் அடிப்படை ஆற்றல் வீழ்ச்சி ஆரம்பமாகிறது. பாரதி கூறிய மாதிரி, ‘சிறுமை கண்டு சீறு, ‘ரௌத்திரம் பழகு’, ‘ரஸனையில் தேர்ச்சி கொள்’, ‘நூலினை பகுத்துணர்’ என்பவை இலக்கிய சிருஷ்டியிலும் தாரக மந்திரங்களாகக் கருதப்படலாம்.’’றீ

————————————————————————————————

From Vadakku Vaasal:

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன்
என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவில்லை
அவர் சொல்லவில்லை.
*************************************************

அறையில் நாற்காலி
சுவரில் எட்டுக்காலி
தெருவில் விட்டவழி
அறையுள்
தட்டுமுட்டுச் சாமான்கள்
பயணத்தின் முடிவில் ஒருவன்
பயண வழிநெடுக
ஒருவன்
கடலின் இக்கரையில்
மணல் வெளி
அக்கரையில் அலைகளின்
அடங்காத வெளி
கரையிரண்டும்
மணலென்று கண்டால்
எல்லாம் வெட்ட வெளி.

*************************************************

திருவனந்தபுரத்தில் வாழும் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளில் டி.கே.துரைஸ்வாமி என்கிற நகுலனுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவர் அடிப்படையில் கல்லூரிப் பேராசிரியர். க.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா போன்ற தீவிர இலக்கிய விமர்சகர்களால் அங்கீகரிக்கப்பட்ட கவிஞர். விமர்சனம், நாவல், சிறுகதை போன்ற பல இலக்கிய வடிவங்களில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்.

கடந்த ஏப்ரல் இறுதி வாரத்தில் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு நாவலாசிரியர் நண்பர் நீல பத்மநாபன் அவர்களின் அழைப்பின் பேரில் திருவனந்தபுரம் சென்றிருந்தேன். நிகழ்ச்சிகள் முடிந்ததும் மறுநாள் பெரியவர் நகுலனை சந்திப்பதற்காக நீலபத்மநாபன் என்னை அழைத்துச் சென்றார். நகர சாலையிலிருந்து சற்றுத் தள்ளி ஒரு பள்ளத்தில் நகுலனின் வீடு அமைந்திருந்தது. கிராமியச் சூழலில் அமைந்த புராதனமான வீடு அது. நகுலனின் குடும்பச்சொத்து. வாசலில் நகுலனின் தகப்பனார் பெயர் தாங்கிய பெயர்ப்பலகை. நகுலன் படுத்த படுக்கையாக இருந்தார். அவருடைய தம்பி மற்றும் தம்பியின் துணைவியார் – அவரைக் கவனித்துக் கொள்வதற்கு உடன் இருந்தனர்.

சுமார் இரண்டு மணி நேரங்கள் நாங்கள் அவருடன் இருந்தோம். அவ்வப்போது எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். பேச்சு முழுக்க இலக்கியம் பற்றியே இருந்தது. க.நா.சு., செல்லப்பா பற்றிப் பேசும்போது மிகவும் உற்சாகமாகப் பேசினார். சில நேரங்களில் மிகவும் அதிகமாகக் கோபப்பட்டார். நீலபத்மநாபனுடன் மிக அழுத்தமான பிடிப்பு கொண்டிருந்ததைக் காண முடிந்தது. அவரும் நீலபத்மநாபனும் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் வீட்டில் பார்த்தேன். நாங்கள் கிளம்பிய போது தள்ளாடிக்கொண்டே நீலபத்மநாபனைத் தாங்கிக்கொண்டே வாசல் வரை வந்தார்.

தில்லி திரும்பி வந்ததும் நகுலனின் மறைவு குறித்து செய்தி கிடைத்தது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஏ.ஆர். ராஜாமணி

————————————————————————————————

14 responses to “Writer Nakulan – Works, Collections, Poems, Memoirs, Blog Anjali

 1. பிங்குபாக்: Tribute to Nakulan « கில்லி - Gilli

 2. i have met nakulan more times he has come to my house. nakulan ask me to write an introduction to his collection of short stories send to me in a bound form. i dont know what happened to that collection. he use to mention a french women by name simone weil no other downloading writer in tamil as mention that name.
  swaminathan,
  west mambalam,
  chennai 33.

 3. http://dhalavaisundaram.blogspot.com/2007/06/blog-post_02.html

  தூக்க கலக்கம் பாலா. முன்னமே இதை போட்டிருந்தால் மன்னிக்கவும்

 4. நன்றி நிர்மல்…

  ஒரு சுட்டி கொடுத்தாலே (இந்த்ப் பதிவின் கர்த்தா நான் தந்தாலே) எரிதம் என்று ஒதுக்கி மூலையில் போட்டு வைத்து விடுகிறது.

  கன்னாபின்னா கெடுபிடி 🙂

 5. Sir,
  As a writer I read these pages with keen interest and keeping respect on Sri. Nakulan. I am satisfied about his wonderful writings. I can say frankly that I am very proud for I am living in his life period. The young writers in these days must learn more from Nakulan’s writings.
  – GIRIJAMANAALAN, Tiruchirappalli-620021, India.

 6. பிங்குபாக்: நகுலனின் வீட்டுப் புத்தகங்களைக் கரையான்கள் வாசிக்கின்றன - சூத்ரதாரி « மரவண்டின் ரீங்காரம்

 7. பிங்குபாக்: Ingmar Bergman = இயக்குநர் பாலச்சந்தர் « Snap Judgment

 8. யப்பா என்ன தொகப்பு, அசத்தல்.

 9. இறந்துபோன
  பின்புதான்
  தெரிகிறது
  மறைந்து போனவரின்
  இழப்பு

 10. Nakulan was my professor in Mar Ivanios College (T K Doraiswamy) and he was my closest friend with whom I spent almost 5 years of my life almost every evening in his beautiful house opposite the Golf Club in Trivandrum. He is a person I respect most and he mentored me and nurtured me in my love for literature and the arts and especially empowered me as a writer. He has not been respected by Tamil society although he was a Brahmin who broke his ‘sacred thread’ because he could not be bound by casteism and Brahminism. His house was always a haven for many young people who aspired to be writers and enjoyed literature. He was universal and unconditional in his love and a writer par excellence. Many writers have become famous but Nakulan could not become famous because he did not lick anybody’s boots or manipulate people to get to the top. He lived a simple, quiet life as almost an ascetic and yet as a doyen among writers, even though he has not been given his due by Tamil literature.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.